Published:Updated:

பிக் பாஸ் 100: இப்போதும் அமீர் இப்படி செய்வது சரியா! இறுதி வாரத்தில் நடப்பதென்ன?

பாவனி

‘ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரி டைட்டில் ஜெயித்தார்’-ன்ற வித்தியாசத்தைப் படைக்க நீங்கள் உதவணும்” என்று முடித்துக் கொண்டார் அமீர்.

பிக் பாஸ் 100: இப்போதும் அமீர் இப்படி செய்வது சரியா! இறுதி வாரத்தில் நடப்பதென்ன?

‘ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரி டைட்டில் ஜெயித்தார்’-ன்ற வித்தியாசத்தைப் படைக்க நீங்கள் உதவணும்” என்று முடித்துக் கொண்டார் அமீர்.

Published:Updated:
பாவனி

‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்கிற பழமொழிக்கு ஏற்ப, இத்தனை நாள் குடுமிப்பிடிச்சண்டைகளை போட்டியாளர்களுக்குள் நிகழ்த்திய பிக்பாஸ், ‘கடைசி வாரம்’ என்பதால் ‘என்சாய்’ என்று அறிவித்து விட்டார். சிறப்பு காலையுணவு, சிகையலங்காரம் என்று மக்களுக்கு ஒரே உற்சாகம்தான்.

குடுமியில்லாத, நார்மல் ஹேர்கட்டில் நிரூப்பைக் காண வேண்டும் என்கிற ஆசையை முந்தைய கட்டுரை ஒன்றில் சொல்லியிருந்தேன். பிக்பாஸின் வழியாக அது நேற்றைய எபிசோடில் நிறைவேறியது. ‘என்… செல்லம்.. எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கான்.. பாரேன்’ என்று பிரியங்கா கொஞ்சியதைப் போல, பார்ப்பதற்கு நிரூப் ஸ்மார்ட்டாகவே இருந்தார்.

 பிக்பாஸ்
பிக்பாஸ்

‘டைட்டிலுக்கு நான் எப்படி தகுதியானவன்?’ என்று பேச வேண்டிய டாஸ்க்கில் ஐவருமே தங்களின் தரப்பை சிறப்பாக முன்வைத்திருந்தாலும் ராஜூ பேசியது கூடுதல் சிறப்பாக இருந்தது. போட்டியாளர்களின் மீதான தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள், ஆசாபாசங்கள், ஆர்மிக்களின் எதிர்தாக்குதல், தற்காப்பு சண்டைகள் போன்ற அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு ‘இந்த சீசனில், பிக்பாஸ் விளையாட்டை சிறப்பாக கையாண்டவர் யார்?’ என்று ரீவைண்ட் மோடில் சென்று பறவைப் பார்வையில் பரிசீலித்து முடிவெடுப்பதுதான் பார்வையாளர்கள் செய்ய வேண்டிய விஷயம்.

“இவர் நல்லா காமெடி பண்ணுவாருங்க. அதனால பிடிக்கும்”.. என்றோ.. “இவரைப் பார்த்தாலே பிடிக்காதுங்க” என்றோ குறுகிய பார்வையில் முடிவெடுக்கக்கூடாது. இந்த இறுதி வாரத்தின் வாக்குகள்தான் வெற்றியாளரை தீர்மானிக்கப் போகிறது. அது உண்மையிலேயே தகுதியானவருக்குச் சென்று சேர வேண்டும்.

எபிசோட் 100-ல் என்ன நடந்தது?

‘கூகுள். கூகுள்.. பண்ணிப் பார்த்தேன்..” என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. ‘இது இறுதி வாரம்.. இனிமேல் கொண்டாட்டம்தான்’ என்று அறிவித்த பிக்பாஸ், சிறப்பு காலையுணவை உபசரித்து மக்களை உற்சாகம் அடைய வைத்தார். ஒரு வீட்டிற்கு திருடச் சென்ற வடிவேலு, அங்குள்ள பொருட்களைப் பார்த்து ‘ஹய்.. பீரோலு.. அதுக்குள்ள புடவை.. பாத்திரமெல்லாம் கிடக்கு.. அப்பா. உன் மகன் சம்பாதிக்கறதைப் பார்க்க உங்களுக்கு கொடுத்து வைக்கலையே” என்று கதறியழும் நகைச்சுவைக் காட்சியைப் போல, ஒவ்வொரு தின்பண்டத்தையும் பார்த்து “ஹய்.. பொங்கல்.. கேக்கு.. தேங்கா சட்னில்லாம் இருக்கு”.. என்று கூவிக் கொண்டிருந்தார் பிரியங்கா. “சேர்ந்து சாப்பிடலாம்” என்கிற நல்ல யோசனையை சொன்னார் ராஜூ. “தாமரை இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்” என்று மறக்காமல் நினைவுகூர்ந்தார் பிரியங்கா.

நிரூப்
நிரூப்

நிரூப்பின் தந்தையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார் பிரியங்கா. அதற்கு பதில் சொன்ன நிரூப், “ஏண்டா. எப்பப் பாரு அவ கிட்ட சண்டை போடறே?”-ன்னு அப்பா என்னைக் கண்டித்தார். வெளியே போய் சமாதானப்படுத்திக்கலாம்… கேமிற்குள் எந்த உறவும் இந்த விளையாட்டில் வேணாம்னு நான் நெனச்சேன்” என்று முன்பு சொன்ன அதே காரணத்தை இப்போதும் சொன்னார் நிரூப். எவ்வித சார்பும் இல்லாமல் இந்த ஆட்டத்தை நிரூப் ஆட நினைப்பது நியாயமான விஷயம்தான். ஆனால் அதை ரத்தப் பிறாண்டலுன்தான் நிகழ்த்த வேண்டும் என்று எவ்வித கட்டாயமும் இல்லை. அதிலும் அவரின் சண்டை ஏறத்தாழ 90 சதவீதம் பிரியங்காவுடன் மட்டுமேதான் நிகழ்ந்தது.

கோல்டன் மைக்கில் பேச ஒரு பொன்னான வாய்ப்பு

“தாமரையோட போட்ட சண்டைகளை நினைச்சா.. இப்ப சிரிப்புதான் வருது” என்று ராஜூவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பிரியங்கா. அற்பமான சண்டைகளை உடனே மறந்து விடுவது, எதிராளிக்கு நல்லதோ, இல்லையோ, நம் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மாறாக அதை மாறாத வன்மத்துடன் பத்திரமாக வைத்திருந்தால் பாதிப்பு நமக்குத்தான். “யாருமே எனக்கு தாங்க்ஸ் சொல்லலை” என்று அனத்திய அமீர் “ஸ்ருதிதான் உன்னோட பெஸ்ட் பிரெண்டா?” என்று பாவனியிடம் விசாரித்தார். “அப்படி சொல்ல முடியாது. ஆனா காயின் மேட்டர்னால நாங்க நெருக்கமாயிட்டோம்” என்று பதிலளித்த பாவனியிடம் “நோ..ன்னா. நோ –ன்னு அவங்க சொன்னாங்களே.. யெஸ்னா.. யெஸ்தான்.. அதான் என் பாலிஸி” என்பது போல் சொல்லி மறுபடியும் பாயைப் பிறாண்டினார். (கடைசி வாரத்தில் இதெல்லாம் தேவைதானா அமீர்?!).

‘கோல்டன் மைக்’ என்கிற டாஸ்க்கை தந்தார் பிக்பாஸ். “ஒவ்வொரு போட்டியாளரும் மக்களிடம் நேரடியாக பேசலாமாம். ‘டைட்டில் ஜெயிக்க நான் எப்படி தகுதியானவர்?’ என்று விளக்கிச் சொல்லலாமாம். பிக்பாஸில் கடந்த வந்த அனுபவத்தை மனம் விட்டு பகிர்ந்து கொள்ளலாமாம். “இந்த வாய்ப்பை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேர்மையாகப் பேசுங்கள்” என்று அறிவுறுத்தினார் பிக்பாஸ்.

முதலில் வந்தவர் பாவனி. “இந்தச் சந்தர்ப்பம் தந்ததற்கு நன்றி. வெளி வாழ்க்கையில் எனக்கு எத்தனை ஏற்ற இறக்கங்கள் இருந்ததோ, அதேயளவிற்கு வீட்டிற்குள்ளும் இருந்தது. இங்க நான் மகிழ்ச்சியாகவே வந்தேன். வெற்றி, தோல்வி என்பது என் சிந்தனையில் இல்லை. மக்களுக்குப் பிடித்ததால்தான் இத்தனை நாள் என்னை இங்கே வைத்திருக்கிறார்கள். வெளியில் எப்படி இருப்பேனோ, அப்படியேதான் இங்கும் இருக்கிறேன். நண்பர்கள் தவறு செய்தாலும்கூட அவர்களை நாமினேட் செய்ய மாட்டேன். யாரிடம் சண்டையிட்டாலும் அவர்களிடம் பேசி உடனே சரி செய்ய முயன்றிருக்கிறேன். நான் இந்த ஆட்டத்தை நேர்மையாக ஆடியிருக்கிறேன். எனக்கு ஆதரவு தாருங்கள்” என்று முடித்துக் கொண்டார்.

 ராஜூ
ராஜூ

அடுத்து வந்தவர் ராஜூ. “நான் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்த காலக்கட்டத்தில் மிக ஆர்வமாக இருப்பேன். ஒரு ஆடிஷனில் கலந்து கொண்டாலே ஜெயித்த மகிழ்ச்சி கிடைத்து விடும். ஊரில் இருக்கும் அம்மாவை அழைத்து அந்த மகிழ்ச்சியை தெரிவிப்பேன். ஆனால் சில வருடங்கள் கடந்த பிறகுதான் தெரிந்தது, “சொல்றோம்..”என்று அவர்கள் சொன்னதற்குப் பொருள் “வாய்ப்பில்லை” என்பதுதான். யாராவது உதவி செஞ்சாதான் முன்னுக்கு வர முடியும்னு அப்புறம்தான் புரிஞ்சது. இந்த ஷோவிற்கும் அப்படித்தான் வந்தேன். இங்க நான் ரொம்பச் சரியா நடந்துக்கிட்டேன்னு சொல்ல மாட்டேன். மனசுல பட்டதை பேசிடுவேன். நீங்க என்னை அடுத்தடுத்த வாரத்திற்கு கூட்டி வந்திருக்கீங்க. உங்கள் வீட்டு பையன் மாதிரி என்னை நினைச்சிருப்பீங்க.. ஆனா ஒவ்வொரு வாரமும் கடக்கும் போது சந்தோஷமா இருக்காது. பயமாதான் இருக்கும். இங்க ஏதாவது நான் தப்பு பண்ணியிருப்பேன். மன்னிச்சுடுங்க.. சின்ன வயசுல இருந்தே எனக்கு தொடர்ந்து தோல்விகள்தான் கிடைக்கும். அதனால் எதிலும் ஜெயிச்ச ஃபீலிங் வராது. ஜெயிச்சா எப்படி இருக்கும்னு நான் பார்த்ததில்லை. எனவே அதை உங்க மூலமா நான் எதிர்பார்த்துட்டே இருப்பேன்” என்று சென்டியாக கூறி முடித்தார் ராஜூ.

‘டிக்கெட் டூ ஃபினாலே’ ஜெயிச்சதுல சந்தோஷம் இல்ல”

அடுத்ததாக வந்தவர் அமீர். “பிக்பாஸ் வாய்ப்பு கிடைச்சதே எனக்கெல்லாம் பெரிய விஷயம். ‘யார் ஜெயிச்சாலும் எனக்கு சந்தோஷம்..”.. அப்படின்னுலாம் சொல்ல மாட்டேன். வைல்ட் கார்ட்ல வந்த ஒருத்தர் ஜெயிக்கக்கூடாதா? எனக்கு நம்பிக்கையிருக்கு. ஒரு போட்டின்னு வந்துட்டா கடைசி வரை போராடி பார்க்கணும். என் மாணவர்களுக்கு அதைத்தான் நான் சொல்லியிருக்கேன். உங்களையெல்லாம் ஆரம்பத்துல கொஞ்சம் ஏமாத்தியிருப்பேன். அதுக்கப்புறம் நல்லா விளையாட ஆரம்பிச்சிட்டேன். ரேங்கிங் டாஸ்க்ல 7-ம் நம்பர்ல நின்னேன். ஆனா எப்படியாவது முன்னாடி வந்துருவேன்னு நம்பிக்கை இருந்தது. ஆட்டத்துல ஃபோகஸ் காட்டியிருக்கேன்னு நம்பறேன். ‘டிக்கெட் டூ ஃபினாலே’ ஜெயிச்சதுல எனக்கு சந்தோஷம் இல்ல. கடைசி இலக்குதான் முக்கியம். ஜெயிக்கணும்ன்ற வெறி இருக்கு. ‘ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரி டைட்டில் ஜெயித்தார்’-ன்ற வித்தியாசத்தைப் படைக்க நீங்கள் உதவணும்” என்று முடித்துக் கொண்டார் அமீர். (‘Ticket to finale ஜெயிச்சதுல சந்தோஷம் இல்லை’ன்னு சொல்லி, பிக்பாஸ் முன்னாடி சொன்ன அட்வைஸை எல்லாம் காத்துல பறக்க விட்டுட்டார் போல).

பாவனி
பாவனி

அடுத்ததாக வந்தவர் பிரியங்கா. “ரொம்ப நாள் கழிச்சு கைல மைக் பிடிச்சிருக்கேன். ஒரு ஆங்கர் ஃ.பீல் வருது. மக்களுக்கு ரொம்ப நன்றி. “நீங்க சேவ் ஆயிட்டிங்க’ன்னு கமல் சார் சொல்ற ஒவ்வொரு முறையும் குதிச்சு டான்ஸ் ஆடணும் போல இருக்கும். என்னதான் ‘பக்கெட் லிஸ்ட்டா’ இருந்தாலும் பிக்பாஸ் வெற்றி எனக்கு முக்கியம். இந்த நிகழ்ச்சி மூலமாக என் எமோஷன்ல மாற்றம் ஏற்பட்டிருக்கு. வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரன் மாதிரி. அதுல ரொம்ப கவனமா இருப்பேன். என்னை உயர்த்திச் சென்றது என் தொழில் மட்டும்தான். ஆங்கரிங் பண்றது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயம். இந்த வீட்ல நான் ரொம்ப லவ் பண்ணி வாழ்ந்திருக்கேன். பிடிக்காத விஷயங்களை திருத்தியிருக்கேன். நான் ஏதாச்சும் வால்தனம் பண்ணியிருந்தா உங்க வீட்டுப் பொண்ணா நினைச்சு மன்னிச்சுடுங்க” என்று உருக்கமாகப் பேசி விடைபெற்றார் பிரியங்கா.

பிரியங்கா
பிரியங்கா

கடைசியாக வந்தவர் நிரூப். “முதல்ல உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுடறேன். போன வாரம் ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது. அது தப்பா, சரியான்னு எனக்குத் தெரியல. ‘சந்தர்ப்பம் கிடைக்கும் போது பயன்படுத்திக்கோ’ன்னு என் அப்பா சொல்லியிருக்காரு. ரேங்கிங் டாஸ்க்ல கடைசில நின்னேன். “எப்படியாவது முதல்ல வந்துருவேன்’ன்னு எனக்குள்ளயே அப்போ சொல்லிக்கிட்டேன். நடுவுல சில வாரம் டல்லாயிட்டேன். ஆனா யார் துணையும் இல்லாம நானே போராடி எழுந்து வந்தேன். ராஜூ, பிரியங்கா மாதிரி எனக்கு பேச்சுத்திறமை கிடையாது. (எதே?!) நான் பண்ண விஷயங்களுக்கு நான் மட்டும்தான் முழு பொறுப்பு. இவங்கள்லாம் சொல்ற மாதிரி நான் பயந்திருந்தா, பணத்தை எடுத்திருப்பேன். மக்களை சந்திச்சு முடிவை தெரிஞ்சுக்கறதுதான் என் விருப்பம். அதுக்குத்தான் ஆசைப்படறேன். ஃபினிஷிங் லைனை தொடணும்.” என்று சொல்லி முடித்தார் நிரூப்.

“நீங்க பிக்பாஸ் பார்க்கறீங்களா?” – ராஜூவின் கேள்வி

GVM படங்களில் வரும் தந்தையின் பாத்திரம் போலவே நிரூப்பின் தந்தை இருக்கிறாராம். இதைச் சொல்லிக் கொண்டிருந்தவர் பிரியங்கா. தன்னுடைய அம்மா வரும் போது எப்படியெல்லாம் கதறினார் என்பதைப் பற்றி அவரே ராஜூவிடம் கேட்க, அந்தச் சம்பவத்தை ராஜூ விவிரித்து கிண்டலடித்தார். “உங்க அம்மா வரும் போது நீ என்னெல்லாம் பண்ணேன்னு நான் செஞ்சிக் காண்பிக்கட்டுமா?” என்று பிரியங்கா பதிலுக்கு கேட்க “ஐயாம்.. யுவர் பெஸ்ட் பிரெண்ட்… வேணாம்” என்கிற மாதிரியான பார்வையைத் தந்தார் ராஜூ.

“உங்களையெல்லாம் குளிப்பாட்டி அலங்கரிக்கப் போகிறோம்” என்று பிக்பாஸ் அறிவித்தவுடன் மக்கள் குஷியானார்கள். “என்னை மனுஷன் மாதிரி ஆக்கி விடுங்க” என்று சிகையலங்காரக் கலைஞர்களிடம் கேட்டுக் கொண்டார் ராஜூ. “நீங்க பிக்பாஸ்… புரோகிராம் பார்க்கறீங்களா.. நல்லாயிருக்கா?” என்று முடிவெட்ட வந்தவரிடம் ராஜூ விசாரிக்க “அதையெல்லாம் பார்க்கிற அளவிற்கு நான் என்ன வெட்டியாவா இருக்கேன்?” என்பது போல் கேட்டு பங்கம் செய்தார் வந்தவர்.

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

தனது தலைமுடியை கேன்சர் நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கத் தீர்மானித்திருக்கும் நிரூப், முடிவெட்டிக் கொள்ள மறுத்து விட்டார் போலிருக்கிறது. பிக்பாஸ் அவரை தனியாக அழைத்து ‘இது இறுதி வாரம்.. உங்கள் தோற்றம் முக்கியம். உங்கள் முடியைப் பத்திரப்படுத்தித் தருகிறோம். பிறகு நன்கொடையாக அளித்து விடுங்கள்” என்று உறுதியளித்தவுடன் நிரூப் சம்மதம் தந்தார். ஆனால் இந்த விஷயத்தை மற்றவர்களிடம் சொல்லாமல் நிரூப் ரகசியம் காக்க அவர்கள் ‘என்னவோ. ஏதோ’ என்று பதறிப் போனார்கள்.

‘நாங்களும் Finlalistதான். எங்களுக்கு மட்டும் தராம அவனுக்கு மட்டும் என்னமோ ஸ்பெஷலா தர்றீங்க.. என்னது அது?” என்று பிரியங்கா பிக்பாஸிடம் கோபத்துடன் அனத்த “நிரூப்… அடிச்சுக் கூட கேப்பாங்க. சொல்லாதீங்க” என்று பிரியங்காவின் ஆர்வத்தில் பெட்ரோலை ஊற்றினார் பிக்பாஸ். பிறகு ராஜூவிடம் “நாம ஏற்கெனவே பேசின விஷயம்தான். மத்தவங்களுக்கு தெரிய வேணாம்” என்று சொல்லி ராஜூவையும் இந்த ஆட்டத்தில் கோர்த்து விட்டார். (இந்த குறும்பான பிக்பாஸை அடுத்த சீசனிலாவது நிறைய பார்க்க வேண்டும்!).

நிரூப்பின் அட்டகாசமான புது லுக்

தான் முடிவெட்டிக் கொள்ளப் போகிற விஷயத்தை ஏதோ பரம ரகசியம் என்பது போல் நிரூப் பில்டப் தர “அவன் பொதுவா அறிவிக்கிற டாஸ்க்கையே போட்டு குழப்புவான். இது அவனுக்கு தரப்பட்ட சீக்ரெட் டாஸ்க் போல இருக்கு. ஆடாம இருப்பானா?” என்று கிண்டலடித்தார் ராஜூ. அந்த சீக்ரெட் டாஸ்க்கிற்காக நிரூப்பை பிக்பாஸ் அழைக்க “என்னா.. இது. இவ்ள நேரம் இவனைக் காணோமே?” என்று பரிதவித்துப் போனார் பிரியங்கா. வருகிற வெறுப்பையெல்லாம் ராஜூவின் மீது ஜாலியான குத்துக்களாக வீசி போக்க முயன்றார்.

தனது கெட்டப்பை மாற்றிக் கொண்டு வந்தாரய்யா நிரூப்!.. கிறுக்குத்தனமான லுக்கிலேயே வரும் ஒரு ஹீரோ, GVM படங்களில் மட்டும் திருத்தமான தோற்றத்துடன் வித்தியாசமாக வருவதைப் போன்ற ஒரு மாற்றத்திற்கு ஆளாகியிருந்தார் நிரூப். மக்கள் வாயடைத்துப் போய் திகைத்துப் பார்த்தார்கள். “எவ்ளோ. க்யூட்டா இருக்கான்.. பாரேன்” என்று செல்லம் கொஞ்சினார் பிரியங்கா. ராஜூ, அமீர், பாவனி என்று அனைவருமே ‘ஹா’வென்று வியப்புடன் நிரூப்பைப் பார்த்தார்கள். சற்று கூச்சத்துடனும் பெருமிதத்துடனும் “இந்த லுக் எப்படி இருக்கு?” என்று கேட்டுக் கொண்டிருந்த நிரூப்பிடம் “ஹாண்ட்சமா இருக்கீங்க” என்று பிக்பாஸூம் பாராட்டி மகிழ்ந்தார்.

பாவனி
பாவனி

நாஸ்டால்ஜியா கிறுக்கல்கள்

‘ஆட்டோகிராஃப்’ என்கிற தலைப்பில் அடுத்த டாஸ்க் தரப்பட்டது. இந்த வீட்டில் தனக்கு பிடித்தமான இடங்களை மக்கள் குறிப்பிடலாம்; அங்கு நினைவுச் செய்திகளை எழுதலாம்; அதைப் பற்றி சொல்லலாம்’ என்று அறிவித்தார் பிக்பாஸ். தனது ‘Calm Spot’ ஆன கிச்சன் மேடையின் பின்புறத்தில் அமர்ந்து கையெழுத்திட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் பிரியங்கா. நடைபாதையை அமீர் தேர்ந்தெடுத்தது தத்துவார்த்தமாக இருந்தது. கார்டன் ஏரியாவில் மக்கள் அமர்வதற்காக இருந்த பகுதியையும் அமீர் குறிப்பிட்டார். அதே ஏரியாவைக் குறிப்பிட்ட ராஜூ “இங்குதான் அண்ணாச்சி உட்பட பலரிடம் கதை சொல்லியிருக்கேன். எனக்குப் பிடித்தமான பகுதி” என்றார். டைனிங் டேபிளில் தாளம் போட்டு தன் உளைச்சலைப் போக்கிக் கொண்டதாகவும் ராஜூ தெரிவித்தார்.

‘I rise here whenever I fail’ என்கிற வாக்கியத்தை தனது படுக்கையின் மீது எழுதினார் நிரூப். அத்தனை அனுபவங்களை அந்தப் படுக்கை தந்திருக்கிறதாம். அதைப் போல சிறையையும் மறக்க முடியாத இடமாக நிரூப் குறிப்பிட்டதில் நியாயமுண்டு. பாவம், அவர்தான் அதிகமுறை அங்கு சென்றவர். 5 என்று அச்சிடப்பட்டிருக்கிற படுக்கை விரிப்பு தன்னுடைய ஸ்பெஷல் என்று பாவனி தெரிவிக்க, மக்கள் அனைவரும் விதம் விதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். வாடகை வீட்டுச் சுவரில் பிள்ளைகள் கண்டபடி கிறுக்கினால், நம் மனது எப்படி தன்னிச்சையாக பதறுமோ, அந்த மாதிரியான சிறுபதட்டம் எழுந்தது. அந்த அளவிற்கு வீடெங்கும் நாஸ்டால்ஜியா கிறுக்கல்களாக எழுதிக் குவித்தார்கள்.