Published:Updated:

பிக் பாஸ் 101: நிரூப் பிரியங்காவுக்குக் கொடுத்த காஸ்ட்லி பரிசு; அமீரிடம் நெகிழ்ந்த பாவனி!

பாவனி - அமீர்

“இந்த பிக்பாஸ்.. ரொம்ப நல்ல பிக் பாஸ் ” என்று செல்லம் கொஞ்சிய ராஜூ உட்பட மற்றவர்கள் படுக்கையில் சென்று ஜாலியாக சாய்ந்தார்கள்.

Published:Updated:

பிக் பாஸ் 101: நிரூப் பிரியங்காவுக்குக் கொடுத்த காஸ்ட்லி பரிசு; அமீரிடம் நெகிழ்ந்த பாவனி!

“இந்த பிக்பாஸ்.. ரொம்ப நல்ல பிக் பாஸ் ” என்று செல்லம் கொஞ்சிய ராஜூ உட்பட மற்றவர்கள் படுக்கையில் சென்று ஜாலியாக சாய்ந்தார்கள்.

பாவனி - அமீர்

‘சீசன் முடியற வரைக்கும் ஏதாச்சும் ஜாலியா பேசிட்டு இருப்போம்’ என்கிற மாதிரியே நாட்கள் கழிகின்றன. ‘ஒரு நாள் முதல்வர்’ மாதிரி ‘ஒரு நாள் பிக்பாஸ்’, பரிசுப் பரிமாற்றம் என்று ஏதேதோ செய்து பொழுதைப் போக்குகிறார்கள். ‘ஒரு சீசனின் இறுதிக்கட்டம், இத்தனை சுமாராகவா அமையும்?!’ என்று நாம்தான் நொந்து போக வேண்டியிருக்கிறது. பரிசு தரும் டாஸ்க்கில் பாவனிக்கு யாரும் தரவில்லை. அவரிடம் உருகி உருகிப் பேசும் அமீர் கூட ராஜூவிற்குத்தான் பரிசு தந்தார். ராஜூவின் நகைச்சுவை, பிரியங்காவின் சிரிப்பு போன்றவை இல்லையென்றால், இந்த வாரம் வெறும் சூன்யமாகத்தான் மாறி விடும் போல.

பழைய போட்டியாளர்களை விருந்தினர்களாக அழைத்தாலாவது சற்று சுவாரசியமாக பொழுது போகும். இன்றைய எபிசோடிலாவது அதைச் செய்கிறார்களா என்று பார்ப்போம்.

எபிசோட் 101-ல் என்ன நடந்தது?

‘எத்தனை சந்தோஷம்’.. என்கிற அட்டகாசமான, பாசிட்டிவ்வான மனநிலையை ஏற்படுத்தும் பாடல் ஒலித்தது. “இதுவரை பிக்பாஸின் குரலை மட்டுமே கேட்டிருக்கிறீர்கள், அவரை யாரும் பார்த்தததில்லை. பார்க்க ஆர்வம் இருக்கும். அந்த வாய்ப்பு உங்களுக்கு தரப்படுகிறது. ‘ஒரு நாள் பிக்பாஸாக நீங்கள் மாறலாம்’. இந்த வீட்டில் நீண்ட நாட்கள் இருந்தவர்கள் என்கிற முறையில் பிக்பாஸ் எப்படி செயல்படுவார் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று தன் பதவியைத் தற்காலிகமாக ராஜினாமா செய்து போட்டியாளர்களுக்குத் துண்டு துண்டாக பிய்த்துத் தந்தார் பிக்பாஸ்.

‘ஒரு நாள் பிக்பாஸ்’

இடி, மின்னல் சத்தத்திற்குப் பிறகு யார் பெயர் அழைக்கப்படுகிறதோ, அவர் சில மணி நேரங்களுக்கு ‘பிக்பாஸாக’ இருக்கலாம். இந்த அரிய வாய்ப்பை மக்கள் கன்னாபின்னாவென்று வீணாகச் செலவழித்தார்கள். அதிலும் பிரியங்கா அடித்த லூட்டியெல்லாம் வேற வெவல். பிக்பாஸின் இமேஜை தரைமட்ட அளவிற்கு கீழே இறக்கினார். முதலில் அழைக்கப்பட்டவர் பிரியங்கா. அவர் ராஜாவிற்குரிய கிரீடம், ஆடை, செங்கோல் போன்றவற்றை அணிந்து கம்பீரமான சிரிப்புடன் வந்து நின்ற போது ‘குஞ்சாயி’ என்று அழைத்து அடுத்த நொடியே பங்கப்படுத்தினார் ராஜூ.

பிக் பாஸாக மாறிய பிரியங்கா “2 மணி நேரம் தூங்குங்க. இது என் உத்தரவு” என்று சொல்லி ஒரிஜினல் பிக்பாஸிற்கு அதிர்ச்சியையும் மற்ற போட்டியாளர்களுக்கு உற்சாகத்தையும் அளித்தார்.

ராஜூ
ராஜூ

“இந்த பிக்பாஸ்.. ரொம்ப நல்ல பிக் பாஸ் ” என்று செல்லம் கொஞ்சிய ராஜூ உட்பட மற்றவர்கள் படுக்கையில் சென்று ஜாலியாக சாய்ந்தார்கள். உலவிக் கொண்டிருந்த நிரூப்பை அழைத்து ‘எனக்கு தலைமசாஜ் பண்ணிவிடு’ என்று பிரியங்கா உத்தரவிட “அந்த பிக்பாஸ் கொஞ்சமாத்தான் பேசுவாரு. ஆனா சரியா பேசுவாரு. இந்த புதுபிக்பாஸ் ரொம்ப மொக்கையா பண்றாரு” என்று நிரூப் கிண்டலடித்து தலையையே பிடுங்கியெடுப்பது போல மசாஜ் செய்ய ஆரம்பித்தார். பிரியங்கா அடுத்து இட்ட உத்தரவுதான் சுவாரசியமானது. அமீரை அழைத்து “நீ பாவனியுடன் இன்று முழுக்க பேசக்கூடாது” என்று அதிர்ச்சியளித்து விட்டு, பாவனியை அழைத்து “நீ சேலை கட்டிட்டு வா” என்று சொல்லி பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தார். “நீ லிவ்வங் ஏரியாவை சுத்தம் செய்” என்று ராஜூவிற்கு அதிர்ச்சி வைத்தியமே அளித்தார் புதிய பிக்பாஸ்.

“நீங்க பேசக்கூடாதுன்னு சொன்னாலும் இந்தப் பையன் என்னைப் பார்த்துட்டே இருக்கான்” என்று அமீர் குறித்து பாவனி ஜாலியாக சிணுங்க, “அந்தச் சமயத்துல நீங்க அவனை அறையலாம்” என்று வன்முறையையும் கையில் எடுக்க புது பிக்பாஸ் தயங்கவில்லை. மேலும் கூடுதல் இம்சைகளுக்கு மக்கள் ஆளாவதற்குள் பிரியங்காவின் பதவிக்காலம் நல்ல வேளையாக முடிந்தது. இதற்கான அறிவிப்பு வந்ததும் பிரியங்காவை கீழே தள்ளி ஆசை தீர கும்மியெடுத்தார்கள்.

‘அமீர்.. இதுதான் உன் அன்றாட வேலையா?’

அடுத்த வாய்ப்பு ராஜூவிற்கு வந்தது. ‘பிக்பாஸ்’ குரல் என்று நினைத்து சிவாஜி கணேசனின் குரலில் பேசிக் கொண்டிருந்தார் ராஜூ. ‘உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா பிக்பாஸ்?' என்று பிரியங்கா தன்னுடைய மேட்ரிமோனியல் சர்வீஸை தூசு தட்டி எடுக்க “நீங்க போய் குளிச்சுட்டு வாங்க” என்று அவரை அதட்டி அனுப்பினார் ராஜூ. “ஹய்யா. ஜாலி. நான் குளிச்சுட்டு வர்றதுக்கு ஒரு மணி நேரம் ஆகும்” என்று பிரியங்கா எஸ்கேப் ஆக முயல, அவரைத் தடுத்தி நிறுத்தி ‘ப்ரீஸ்’ என்று ஆணையிட வேண்டியிருந்தது. அடுத்த உத்தரவு என்ன என்று பிக்பாஸிற்கே தெரியவில்லை. எனவே, “உங்களின் அன்றாட வேலையைப் பாருங்க” என்று அனைவரிடமும் சொல்லி விட்டு, பாவனியிடம் பேசிக் கொண்டிருந்த அமீரைப் பார்த்து “உன் அன்றாட வேலையே இதுதானா?” என்று டைமிங்கில் ராஜூ கிண்டலடித்தது அருமையான காமெடி. பிக்பாஸையே தொடர்ச்சியாக கேள்வி கேட்டு பிரியங்கா கிண்டல் அடித்ததால் ராஜூ திணற, டாஸ்க்கை முடித்து ராஜூவைக் காப்பாற்றினார் ஒரிஜினல் பிக்பாஸ்.

அடுத்த புது பிக்பாஸ் வாயப்பு நிரூப்பிற்கு வழங்கப்பட்டது. இதை ஒரளவிற்கு சரியாக செய்தவர் இவர் மட்டும்தான். ‘இத்தனை நாள் அனுபவத்தில் உங்களால் மறக்க முடியாத, இனிமையான நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்கிற டாஸ்க்கை நிரூப் தர. ஒவ்வொருவராக வந்து பேச ஆரம்பித்தார்கள்.

பிக் பாஸ் பிரியங்கா
பிக் பாஸ் பிரியங்கா

முதலில் வந்தவர் ராஜூ. “சினிமா சினிமா டாஸ்க்ல எம்.ஆர்.ராதா மாதிரி பேசி, வேஷமிட்டது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். அதை மறக்க முடியாது. இந்த வீட்டில் யாருமே என்னை நாமினேட் பண்ண மாட்டீங்க. ‘ரொம்ப நல்லவன்டா நீ’ ன்னு சொல்லி விட்டுடுவீங்க. அந்த விஷயம் பிடிக்கும். இத்தனை நாள் இந்த வீட்டுல இருந்ததால “மத்தவங்க என்ன செய்வாங்க. எப்படி ஃபீல் பண்ணுவாங்க’ன்றதையெல்லாம் அவங்க சொல்லாமயே என்னால தெரிஞ்சுக்க முடியுது. இதை ஒரு நல்ல அனுபவமா பார்க்கறேன்” என்று சொல்லி முடித்துக் கொண்டார் ராஜூ.

அடுத்த வந்த அமீர் “பொதுவா.. என்னை நானே சரியா கவனிச்சுக்க மாட்டேன். ஸ்கீரின்ல தெரியற வாய்ப்புல்லாம் எனக்கு கிடைக்குமான்னு சந்தேகம் இருந்தது. ஆனா பிக்பாஸ்ல அது சாத்தியமாச்சு. நான் பொதுவா அழ மாட்டேன். ஆனா இங்க வந்தப்புறம் நாலைஞ்சு முறை அழற மாதிரி ஆயிடுச்சு. எனக்கு நல்லா கனெக்ட் ஆனவங்க கிட்டதான் என் பர்சனல் விஷயங்களை பகிர்ந்துப்பேன். ஆனா என் கதையை இங்க பொதுவுல சொல்ல வேண்டியிருந்தது. இங்க வந்ததால நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க.. இதோ இந்த லூஸோட நட்பு கிடைச்சது. (பாவனியைச் சுட்டிக் காட்டுகிறார்) கயிறு பிடிக்கற டாஸ்க்கை ரொம்ப சிரமப்பட்டு செய்தேன். எனக்குள்ள இத்தனை பொறுமை இருக்கான்னு நானே கண்டுபிடிச்ச தருணம் அது. இந்த அனுபவங்களையெல்லாம் பொக்கிஷமா நெனக்கறேன்” என்று பேசி முடித்தார் அமீர்.

பிக்பாஸ் அத்தியாயம் மிக முக்கியமானது

அடுத்த வந்த பிரியங்கா “என்னோட வாழ்க்கையில் ஒரு கடினமான நேரத்தில்தான் பிக்பாஸிற்குள் வர முடிவு செய்தேன். லைஃப்ல அடுத்த நிலைக்கு போறதுக்கான அனுபவத்தை இந்த வீடு தந்திருக்கு. இங்க ஒவ்வொரு தருணமுமே எனக்கு முக்கியம். எமோஷனலா ஸ்ட்ராங்க் ஆகியிருக்கேன். என் வாழ்க்கையில் பிக்பாஸ் சாப்ட்டர் முக்கியமானதா இருக்கும்” என்று பேசி அமர்ந்தார். அடுத்ததாக வந்த பாவனி “நான் அதிகம் பேச மாட்டேன். ஆனா என் இயல்பிலிருந்து மீறி இங்க நிறைய பேச வேண்டியிருந்தது. தாமரை கூட நடந்த ஃபைட் என்னால மறக்க முடியாது. அந்த விஷயம்தான் தாமரை கூட கனெக்ட் ஆவறதுக்கு ஒரு காரணமா இருந்தது. ஒருத்தரை பிடிக்கும்னா கூட நான் இங்க வெளிப்படையா சொன்னதில்லை. ராஜூவை எனக்குப் பிடிக்கும். டாப் 5-ல வந்தது ரொம்ப சந்தோஷம்” என்று முடித்தார்.

சில நாட்கள் அடங்கியிருந்த அமீர், தன் ரொமான்ஸ் குறும்புகளை மறுபடியும் ஆரம்பித்து விட்டார். அவர் பாவனியின் விரலை, வெண்டைக்காய் போல கடிக்க “அய்யோ. விரலைக் கடிக்கறான்” என்று ஜாலியாக சிணுங்கினார் பாவனி. “யார் சிறப்பா ஆம்லேட் போடுவீங்கன்னு பார்க்கலாம்” என்று அமீருக்கும் பிரியங்காவிற்கும் நிரூப் டாஸ்க் தந்து கொண்டிருந்த நேரத்திலேயே அவர் பதவி பறிபோயிற்று.

பாவனி
பாவனி

அடுத்ததாக வந்தவர் பாவனி. எல்கேஜி குழந்தையை தூக்கி பிரின்ஸிபல் நாற்காலியில் அமர்த்தியது போல ‘நான். என்ன செய்யணும்?” என்று சிணுங்கினார். “எனக்கு தமிழ் வார்த்தைகள் தெரியாது.. ராஜூ.. நீங்க பாட்டு பாடுங்க. நிரூப் அதற்கு ஆட வேண்டும்” என்று தடுமாறிக் கொண்டே அவர் உத்தரவிட “உங்களைப் பார்த்து எனக்கு வெட்கம் வெட்கமா வருது பிக்பாஸ்” என்று பாவனியிடம் சொல்லி அமீருக்கு அதிர்ச்சி தந்தார் ராஜூ. “பாவனின்னு இங்க ஒரு பொண்ணு இருக்கே. அது நல்ல பொண்ணு.. ராஜூதான் கொடுமையான பையன்” என்று தானே சொல்லி பாவனியே ‘கபகப’வென்று சிரிக்க ஆரம்பித்தார். “பாவனியை வெளியே அனுப்புங்க பிக்பாஸ்” என்று அமீர் காண்டாக “மக்களுக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கு. அதனாலதான் வெச்சிருக்காங்க” என்று பாவனி சொன்ன போதே அவரின் பதவிக்காலம் முடிந்தது.

பரிமாறப்பட்ட அன்புப் பரிசுகள்

அடுத்த பிக்பாஸ் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அமீர் “டைட்டிலுக்கு மற்றவர்கள் எப்படி தகுதியானவர்கள்’ன்னு ஒவ்வொருத்தரும் சொல்லணும்” என்று புதிய டாஸ்க்கை ஏற்படுத்தினார். அனைவரும் வந்து இதர போட்டியாளர்களின் சிறப்புகளையும் தகுதிகளையும் பற்றி சொன்னார்கள். இறுதிக்கட்டம் என்பதால் அவர்களின் மனங்களில் இருந்த உண்மையும் அன்பும் சிறிது பாசாங்கும் இந்த டாஸ்க்கில் பெருகியோடிற்று. சில அவதானிப்புகளும் பாராட்டுக்களும் துல்லியமாக இருந்தன. சிலர் வஞ்சனையில்லாமல் பாராட்டினார்கள்.

‘தன்னுடைய சொந்த உடமை ஒன்றை பிரியமான ஒருவருக்கு பரிசாக அளிக்க வேண்டும்” என்று அடுத்த டாஸ்க்கை அறிவித்தார் பிக்பாஸ். பாவனிக்கு பரிசளிப்பார் என்று எதிர்பார்த்தால், ராஜூவிற்கு அளித்து ஆச்சரியப்படுத்தினார் அமீர். தன்னிடமிருந்த இரண்டு சட்டைகளை அவர் பரிசாக அளித்தது அருமை. “நான் இதுவரைக்கும் மற்றவர்களுக்கு ஏதாவது கொடுத்திருக்கேன். ஆனால் ‘கோப்பாலுக்கு’ எதுவுமே இதுவரை தரலை” என்று ராஜூவைத் தேர்ந்தெடுத்தார் பிரியங்கா. இரண்டு கைகள் நீட்டியிருப்பது போல் ஒட்ட வைத்திருந்த பரிசுப் பெட்டியை அவர் அளித்தது புதுமையான அம்சமாக இருந்தது. “ஆன்ட்டியை கட்டிக்கோ வா’ என்று அழைத்து பிரியத்தைக் காட்டினார். கூடவே தலைப்பாகையும், பொருந்தாத அளவிலான உடையும் பிரியங்கா அளித்த பெட்டிக்குள் இருந்தன.

ராஜூவுக்கு பிரியங்கா கொடுத்த கிஃப்ட்
ராஜூவுக்கு பிரியங்கா கொடுத்த கிஃப்ட்

அமீருக்குப் பிடித்தமான லெதர் ஜாக்கெட்டை பரிசளித்து அவரை மகிழ்ச்சியடைய வைத்தார் ராஜூ. காதுவளையம், சாக்லேட், சட்டை போன்றவை அடங்கிய பரிசுப்பொதியை நிரூப்பிற்கு அளித்து ஆச்சரியப்படுத்தினார் பாவனி. “இந்த சைஸ்ஸை நான் போட முடியாதே” என்று சிணுங்கினார் நிரூப். பிரியங்காவிற்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. நிரூப் தன்னைத் தேர்ந்தெடுத்தது குறித்து பயங்கரமாக உற்சாகமானார். ஆம், கிடைத்தது 2 சவரன் தங்க காப்பு ஆயிற்றே?! “இதை நான் வித்துட்டேன்னா.. என்ன செய்வே.. உங்க அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?” என்றெல்லாம் ஜாலியாக கேட்டு அரைமனதுடன் அதைப் பெற்றுக் கொண்டார் பிரியங்கா. “இது எனக்கு எங்க அம்மா கொடுத்தது. எங்க அம்மா மாதிரி நான் ஃபீல் பண்ற உனக்கு தரேன்” என்று நிரூப் சென்டிமென்ட்டை கன்னாபின்னாவென்று கொட்ட, அவரைப் பாசத்துடன் கட்டியணைத்துக் கொண்டார் பிரியங்கா.

பிரியங்கா - நிரூப்
பிரியங்கா - நிரூப்

“நீ என்னை நிறைய அழ வெச்சிருக்கே.. ஆனா அதையெல்லாம் பண்ணாதான் நீ நிரூப். உண்மையில் அதுதான் என் எமோஷனை பேலன்ஸ் செய்ய வெச்சது. அதெல்லாம் இல்லாட்டி எனக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கும்” என்று பிரியங்கா சொன்னது அருமையான உளவியல் மேட்டர். பாவம், பாவனிக்கு யாரும் பரிசு தரவில்லையென்றாலும் கூட அவர் இயல்பாக அதை எடுத்துக் கொண்டார்.

“நிரூப் மாதிரி எரிச்சல் ஊட்ற ஒரு நண்பன் இருந்தாலும் சுவாரசியமாத்தான் இருக்குமில்ல..” என்று அமீரிடம் பிறகு பேசிய பாவனி “நீ எனக்கு தொந்தரவு தர்ற மாதிரி எப்பவும் நடந்ததில்ல” என்று நெகிழ “அப்படி ஃபீல் பண்றதா உணர்ந்தா அடுத்த நொடியே நான் விலகிப் போயிடுவேன்” என்று அமீர் உருக, இருவரும் முகம் ஒட்டி கட்டிக் கொண்டார்கள். தன் சைஸூக்குப் பொருந்தாத, பிரியங்கா பரிசளித்த ஆடையுடன் ராஜூ ஜாலியாக கவர்ச்சி நடனம் ஆட எபிசோட் நிறைந்தது.