Published:Updated:

பிக் பாஸ் 102: நாடியா, ஸ்ருதி; `இறங்கிய பஸ்ஸில் மீண்டும் ஏறிய' நேற்றைய எபிஸோடில் நடந்த சம்பவங்கள்!

நாடியா, ஸ்ருதி, பாவனி

ஐந்து ஃபைனலிஸ்ட்டுகளுக்கும் மாலை, மரியாதை செய்யப்பட்டது. புதிய ஆடைகள் பரிசாக வழங்கப்பட்டன. ‘அந்த ஆடு.. இந்த மாலை.. ரெண்டுமே மேட்ச் ஆகுதே’ என்று வடிவேலு ஒரு நகைச்சுவைக்காட்சியில் சொல்வதுதான் நினைவிற்கு வந்தது.

பிக் பாஸ் 102: நாடியா, ஸ்ருதி; `இறங்கிய பஸ்ஸில் மீண்டும் ஏறிய' நேற்றைய எபிஸோடில் நடந்த சம்பவங்கள்!

ஐந்து ஃபைனலிஸ்ட்டுகளுக்கும் மாலை, மரியாதை செய்யப்பட்டது. புதிய ஆடைகள் பரிசாக வழங்கப்பட்டன. ‘அந்த ஆடு.. இந்த மாலை.. ரெண்டுமே மேட்ச் ஆகுதே’ என்று வடிவேலு ஒரு நகைச்சுவைக்காட்சியில் சொல்வதுதான் நினைவிற்கு வந்தது.

Published:Updated:
நாடியா, ஸ்ருதி, பாவனி

முன்னுரை எழுதுமளவிற்கு நேற்றைய எபிசோடில் எதுவும் நடக்கவில்லை. இனி வரும் சொச்ச நாட்களில், போட்டியாளர்கள் பக்கெட்டில் தண்ணீர் பிடிப்பது, பல் துலக்குவது போன்ற காட்சிகளை இட்டு நிரப்புவார்கள் போலிருக்கிறது. அடக்கடவுளே! எப்படி இருந்த நிகழ்ச்சி இது?! கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆகி விட்டது’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. ஆனால் சீசன் 5, கட்டெறும்பும் தேய்ந்து கடுகாகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நேற்று சின்னச் சின்ன சுவாரசியங்கள் மட்டுமே பளிச்சிட்டன. அவை…

எபிசோட் 102-ல் என்ன நடந்தது?

‘வர்றியா..’ என்கிற ரகளையான பாடல் ஒலித்தது. எல்லோரையும் விட அதிகமாக ராஜூ இறங்கி குத்தி ஆட, நிரூப் வழக்கம் போல் வேடிக்கை மட்டும் பார்த்தார். பூ, பழம், புடவை என்று யாரோ பெண் பார்க்க வருவதைப் போல் வெளியே பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. எந்தவொரு புது விஷயம் நடந்தாலும் பிரியங்கா உடனே அதிஉற்சாகமாகி ‘வீச்.. வீச்..’ என்று கத்தத் துவங்கி விடுகிறார். பார்க்க சிரிப்பாகவும் கூடவே கவலையாகவும் இருக்கிறது. “ஆமாம்.. நான் அப்படித்தான் அதிகமாக எக்ஸைட் ஆயிடுவேன்” என்று பிறகு சொல்லிக் கொண்டிருந்தார். தனக்குள் இருக்கிற குழந்தைத்தன்மையை ஒருவர் இழக்காமல் இருக்க வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக நாளுக்கொரு முறை உண்மையாகவே ஃபீடிங் பாட்டிலில் பால் குடிப்பேன் என்பது சற்று விநோதமான விஷயமாக மாறி விடும்.

நாடியா, ஸ்ருதி
நாடியா, ஸ்ருதி


“வர்றப்ப வில்லன் மாதிரி இருந்தே.. போறப்ப ஹீரோ மாதிரி மாறிட்டே”

நாடியா, ஸ்ருதி ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்கள். “வெளியே வாங்க. உங்களுக்கெல்லாம் பெரிய.. பெரிய விஷயம் நடக்கும்..” என்று போட்டியாளர்களை இவர்களும் நன்றாக உசுப்பி விட்டார்கள். முந்தைய சீசன் போட்டியாளர்களில் அரிதான ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் எங்கே என்றுதான் தேட வேண்டியிருக்கிறது. இந்த லட்சணத்தில் “ஆடி போய் ஆவணி வந்தா டாப்’ என்கிற பில்டப் மட்டும் இன்னமும் குறையவில்லை. “நம்ம சீசன்தான் பெஸ்ட்டு இல்ல?” என்று ஸ்ருதியிடம் மிரட்டுவது போலவே கேட்டு ஸ்டேட்மெண்ட் வாங்கினார் பிரியங்கா.

ஐந்து ஃபைனலிஸ்ட்டுகளுக்கும் மாலை, மரியாதை செய்யப்பட்டது. புதிய ஆடைகள் பரிசாக வழங்கப்பட்டன. ‘அந்த ஆடு.. இந்த மாலை.. ரெண்டுமே மேட்ச் ஆகுதே’ என்று வடிவேலு ஒரு நகைச்சுவைக்காட்சியில் சொல்வதுதான் நினைவிற்கு வந்தது. விருந்தினர்களின் வருகையால் பிரியங்கா அதிஉற்சாகமாக, மற்றவர்கள் உற்சாகமடைந்தது போல் நடித்தார்கள். நிரூப் மட்டுமே ‘என்ன.. இப்ப.. ஏதோ வந்திருக்காங்க..” என்பது போல் இயல்பாக இருந்தார். பாவனி ஏனோ அடிக்கடி கண்ணாடி பக்கம் சென்று தலைமுடியை சரிசெய்து கொண்டிருந்தார். (ஸ்ருதி எபெக்ட்?!).

“என்னடா.. வர்றப்ப வில்லன் மாதிரி இருந்தே.. போறப்ப ஹீரோ மாதிரி மாறிட்டே?!” என்று நிரூப்பின் புது கெட்டப்பை ஜாலியாக வியந்தார் ஸ்ருதி. லேட் என்ட்ரியான அமீர் மட்டும் மற்றவர்களுடன் ஒட்ட முடியாமல் “பிரெண்ட்ஸ்ங்க எல்லாம் ஒண்ணாயிட்டிங்க” என்கிற முகபாவத்துடன் பின்தங்க ராஜூவும் பாவனியும் அவரைக் கிண்டலடித்து இழுத்துச் சென்றார்கள். தன் சோகக் கதையை அமீர் அவ்வப்போது அங்கு சொல்வார் போலிருக்கிறது. ஆனால் அதை வைத்தே ஷெனாய் வாசிக்காமல் தன் சோகம் குறித்தான சுயபகடியும் அமீருக்குள் இருப்பது நல்ல விஷயம்.

நிரூப்
நிரூப்

“ஸ்ருதிதான்.. உன் க்ளோஸ் பிரெண்டா?”

அமீரும் ஸ்ருதியும் தனித்து நின்று பேச வேண்டிய சங்கடமான நிலைமை ஏற்பட்டது. “நோ. ன்னா நோ… சொல்லு..” என்று பாவனிக்கு ஸ்ருதி ஏற்கெனவே போனில் வந்து ஆலோசனை சொல்லியிருந்தார். அது அமீர் குறித்தது என்பது வெளிப்படை. இப்போது அமீரின் மைண்ட் வாய்ஸில் அந்த விஷயம் நிச்சயம் ஓடியிருக்கும். எனவே ‘அப்புறம்.. அப்புறம்..’ என்பது மாதிரியே இருவரும் சம்பிரதாயமாக பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்க “நீங்க.. ஊட்டியா..?” என்று அமீரிடம் ஸ்ருதி ஊர்பாசத்தில் உற்சாகமாக கேட்க “அப்படியே போன் நம்பர் கேட்டுருவான். கொடுத்துராத” என்று பிரியங்கா பங்கம் செய்தார். “அக்கா மாதிரி நடந்துக்கோக்கா” என்று அமீர் வெட்கப்பட “நீ அக்கா கிட்ட நடந்துக்கிட்ட மாதிரியாடா என் கிட்ட நடந்துக்கிட்டே?” என்று பிரியங்கா அமீரின் காலை வாரி விட்டது சுவாரசியமான காட்சி.

ஸ்ருதி,  ராஜூ
ஸ்ருதி, ராஜூ


“ஸ்ருதிதான்.. உன் க்ளோஸ் பிரெண்டா?” என்று அமீர் முன்பு பாவனியிடம் கேட்ட போது “அவ்வளவு க்ளோஸ் இல்ல.. இசை, மதுதான் க்ளோஸ்” என்று பதில் அளித்தார் பாவனி. அவர் ஒருவேளை வெளிப்படையாக உண்மையைச் சொன்னதாகவே இருக்கட்டும். ஆனால் அத்தனை மெனக்கிட்டு போனில் வந்து அட்வைஸ் செய்த நபரை அடுத்த கணமே அப்படிச் சொல்லியிருக்க வேண்டாம். இது நமக்கே உறுத்தும் போது ஸ்ருதிக்கும் உள்ளூற நிச்சயம் உறுத்தியிருக்க வேண்டும். “நான் டிவில பார்க்கலை.. ஆனா சொன்னாங்க.. நான் உன் பெஸ்ட் பிரெண்ட் இல்லைன்னு சொன்னியாமே?” என்பதை பாவனியிடம் கோபமில்லாமல், ஆதங்கமாக கேட்டு விட்டார் ஸ்ருதி. இதை பாவனி சமாளித்த விதம் சுவாரசியம்.

“நீங்க ரெண்டு பேரும் ஏன் அப்பப்ப அடிச்சக்கறீங்க?” என்று நிரூப் – பிரியங்கா குறித்த ஆதாரமான சந்தேகத்தை ஸ்ருதி கேட்டார். கயிறு பிடிக்கும் டாஸ்க்கில் நடந்த வாக்குவாதத்தையும் அதன் பின்னணியும் இப்போது நினைவு கூர்ந்து கொண்டிருந்தார்கள்.

"இறங்கின பஸ்லேயே மறுபடியும் ஏத்தி விட்டுட்டாங்களே”

சில நிமிடங்களில் சிபியும் அபிநய்யும் என்ட்ரி. “இறங்கின பஸ்லேயே மறுபடியும் ஏத்தி விட்டுட்டாங்களே” என்று சிபியின் சென்ஸ் ஆஃப் ஹியூமர் சற்று கூடியிருக்கிறது. பிரியங்கா வழக்கம் போல் ஹைப்பர் ஆனார். அபிநய்யும் பாவனியும் நேருக்கு நேர் சந்திக்கும் போது என்ன பேசிக் கொள்வார்கள் என்கிற குறுகுறுப்பு எழுந்தது. ஆனால் அந்த விஷயம் நடக்கவேயில்லை. ஒருவரையொருவர் ஜாக்கிரதையாக தவிர்த்துக் கொண்டதைப் போல்தான் இருந்தது.

ரேடியோ ஜாக்கி போல அமர்ந்திருந்த சிபியும் அபிநய்யும், ஐந்து இறுதிப் போட்டியாளர்களையும் வாழ்த்திய பிறகு கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தார்கள். “டிப்ளமாட்டிக்கா இல்லாம, நேர்மையா பதில் சொல்ல வேண்டும்” என்பது இதன் விதி. ஆனால் நிரூப் தவிர மற்றவர்கள் ஒருமாதிரியாக சமாளித்தார்கள்.

பதில் சொல்ல முதலாக வந்தவர் நிரூப். “நீங்கள் இறுதிவரைக்கும் வந்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? உங்களின் திறமையா அல்லது மற்றவர்களின் முட்டாள்தனமா?” என்கிற முதல் கேள்விக்கு “மற்றவர்களின் முட்டாள்தனம்” என்று பளிச்சென்று பதில் சொன்னார் நிரூப். ‘அடப்பாவி’ என்பது மாதிரி இதர நால்வரும் நிரூப்பை முறைத்தார்கள். ‘மனங்கவர்ந்த போட்டியாளர்?’ என்கிற கேள்விக்கு ‘பிரியங்கா’வை சொன்னார் நிரூப். ‘மற்ற போட்டியாளர்களுக்கு அறிவுரை” என்கிற மூன்றாவது கேள்விக்கு ‘இன்னமும் அழுத்தமா பேசணும்” என்று பாவனிக்கும் ‘ஒரு விஷயத்தில் இரண்டு தரப்பையும் கேட்கணும்’ என்று அமீருக்கும் “முகத்திற்கு நேரா பேசணும்’ என்று ராஜூவிற்கும் ‘எல்லாத்திலயும் மூக்கை நுழைக்கக்கூடாது’ என்று பிரியங்காவிற்கும் அட்வைஸ் செய்தார் நிரூப். கடைசியாக சொல்லப்பட்ட மூன்று பாடல்கள் அனைத்தையும் பிரியங்காவிற்கே டெடிகேட் செய்தார்.

சிபி , அபிநய்
சிபி , அபிநய்

“நீங்கதான் அந்த வீக் பாயிண்ட்”

அடுத்ததாக கேள்விகளை எதிர்கொள்ள தயாரானார் பிரியங்கா. ‘செஞ்ச ஒரு விஷயத்தை மாத்தியமைக்கறதா இருந்தா, இந்த வீட்டில் எதைச் செய்வீங்க?” என்று கேட்கப்பட்ட போது ‘பெட்டை வ்யூ நல்லா இருக்கற பக்கமா மாத்துவேன்” என்று மொக்கையாக பதில் சொன்னார். “மக்களுடைய அன்பைத் தாண்டி எந்தவொரு விஷயம் உங்களை இந்த வீட்டில் இருக்க வெச்சது?” என்ற கேள்வி ‘Self love.. என்னையே எனக்கு பிடிக்கும்” என்கிற வழக்கமான தத்துவத்தைச் சொன்னார். “திரும்ப நடக்கலாம்னு நினைக்கற ஒரு நாள் எது?” என்கிற கேள்வி “எங்க அம்மா வந்த நாள்” என்று பிரியங்கா பதில் அளித்தாலும் அதைப் பார்ப்பதற்கு நமக்குத்தான் தெம்பில்லை. தரப்பட்ட மூன்று பாடல் தேர்வுகளில் ‘யாரையும் நம்பாதே’ பாடலை பிரியங்கா கோர, அது ஒலிக்கப்பட்டு மக்கள் நடனமாடினார்கள்.

அடுத்து வந்தவர் அமீர். “ஒரு வேளை டிக்கெட் டூ ஃபினாலே’ கிடைக்கலைன்னாலும் நீங்க ஃபைனல் போயிருப்பீங்களா?” என்று கேட்கப்பட்டதற்கு “நிச்சயம் போயிருப்பேன். எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று உறுதியாக சொன்னார். “ஆரம்பத்திலேயே வந்திருந்தா என்ன மாத்தியிருப்பீங்க?” என்ற கேள்விக்கு “காயின் டாஸ்க்கை நான் வேற மாதிரி ஹாண்டில் பண்ணியிருப்பேன்” என்ற அமீர், “பாவனிக்கு அறிவுரை?” என்ற போது “புத்திசாலித்தனமா பேசு. மக்கு மாதிரி பேசாத” என்று கிண்டலடித்தார். இவர் கோரியபடி “என்னம்மா கண்ணு?” பாடல் ஒலித்தது.

பாவனி
பாவனி


கடைசியாக வந்தவர் பாவனி. அபிநய் இவரிடம் கேள்வி கேட்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அபிநய் அதை தவிர்த்து விட்டார். சிபியே அனைத்துக் கேள்விகளையும் கேட்டார். “யாரு எவிக்ட் ஆன போது சந்தோஷப்பட்டீங்க?” என்கிற வில்லங்கமான கேள்வி “யாருக்கும் இல்லை” என்று பாவனி சொன்ன பதில் நிச்சயம் பாசாங்கானது. “மத்த ஃபைனலிஸ்ட் கிட்ட இருக்கற பலவீனமான அம்சங்களைச் சொல்லுங்கள்” என்று கேட்கப்பட்ட போது பிரியங்காவிற்கு ‘Emotional’, ராஜூவிற்கு ‘எல்லோர் கிட்டயும் bonding ஆகறது”, நிரூப்பிற்கு “குழப்பமாக பேசுவது”, என்று தொடர்ந்த பாவனி, அமீருக்கு.. என்று யோசித்த போது “நீங்கதான் அந்த வீக் பாயிண்ட்” என்று ராஜூ டைமிங்கில் குறும்பு செய்தது சுவாரசியம். “பிடித்த ஆண் போட்டியாளர் யார்?” என்ற கேள்விக்கு “ராஜூ” என்று சொல்லி ஆச்சரியமூட்டினார் பாவனி.

“உரக்கச் சொல்’ அணில இருந்த அனைவருமே ஃபைனலுக்கு வந்துட்டாங்க.. அதுக்கு கள்ள ஓட்டு போட்டவன் கூட வந்துட்டான்.. உங்க கட்சில யாருமே இல்லை” என்று ராஜூவை ஜாலியாக சீண்டிக் கொண்டிருந்தார் பிரியங்கா. யோசித்துப் பார்த்தால் இது சுவாரசியமான அப்சர்வேஷன். மக்கள் தாளம் போட்டு ஜாலியாக பாடிக் கொண்டிருந்தார்கள். அபிநய்யை காணோம். சங்கடம் வேண்டாம் என்று கிளம்பி விட்டார் போலிருக்கிறது.

அண்ணாச்சி, தாமரை போன்றவர்கள் வரும் போது வீடு இன்னமும் கலகலப்பாகும் என்று தோன்றுகிறது. பார்ப்போம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மாதிரியே நாமும் ஒரு கேள்வியைப் பற்றி யோசித்துப் பார்ப்போம். இந்த ஐந்து சீசனில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான சீசன் எது? கமெண்ட் பாக்ஸில் வந்து சொல்லுங்களேன்.