Published:Updated:

பிக் பாஸ் 104: கண்ணீர் விட்ட பிரியங்கா; கிளம்பிய ஹவுஸ்மேட்ஸ்; முதல் எலிமினேஷன் யாராக இருக்கும்?

பிக் பாஸ் பிரியங்கா

ஏதோவொரு பொருளை எடுத்துக் கொண்டு வரும் போது பாவனி தடுமாறி விழுந்துவிட, அவரது கையில் காயம் பட்டு விட்டது. ‘என்னது.. சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா?' என்கிற ரேஞ்சிற்கு பிக் பாஸ் வீடே அமளிதுமளியானது.

பிக் பாஸ் 104: கண்ணீர் விட்ட பிரியங்கா; கிளம்பிய ஹவுஸ்மேட்ஸ்; முதல் எலிமினேஷன் யாராக இருக்கும்?

ஏதோவொரு பொருளை எடுத்துக் கொண்டு வரும் போது பாவனி தடுமாறி விழுந்துவிட, அவரது கையில் காயம் பட்டு விட்டது. ‘என்னது.. சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா?' என்கிற ரேஞ்சிற்கு பிக் பாஸ் வீடே அமளிதுமளியானது.

Published:Updated:
பிக் பாஸ் பிரியங்கா

‘பொங்கல் பண்டிகையை கொண்டாடலாம், தப்பில்லை. ஆனால் அதை அடுத்த தீபாவளி வருகிற வரைக்கும் நீளமாக கொண்டாடக்கூடாது. பிக்பாஸ் வீட்டில், நேற்றைய பொங்கல் கொண்டாட்டம் அப்படித்தான் இருந்தது. வெண்பொங்கலை ஃபுல்லாக சாப்பிட்ட மப்புடன்தான் முழு நிகழ்ச்சியையும் சாய்ந்தபடி பார்க்க வேண்டியிருந்தது. அப்படியொரு இழுவை.

‘பிக்பாஸ் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் நடந்து முடிந்தது’ என்கிற ஒற்றை வாக்கியத்தோடுதான் இந்தக் கட்டுரையை முடித்திருக்க வேண்டும். சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. Bigg Boss Unseen வீடியோ பார்த்திருக்கிறோம். ஆனால் இத்தனை நீளமான Uncut எபிசோட் எல்லாம் அநியாயம்.

“உங்கள் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் வீட்டை விட்டு வெளியே வேண்டும்” என்பது போல் திடீரென்று (?!) பிக்பாஸ் டீம் பிரியங்காவிடம் சொல்வதின் காரணம் என்னவென்று தெரியவில்லை. கிளைமாக்ஸில் ஏதாவது டிவிஸ்ட் தர வேண்டியிருக்கிற நெருக்கடியா? அல்லது உண்மையிலேயே பிரியங்காவின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றால் ஆழ்ந்த வருத்தம். அவர் அதிவிரைவில் உடல்நலம் தேறி, இறுதி நாளைக்குள் உள்ளே வந்து விட வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.

சீசன் 5 சற்றவாது உயிர்ப்பாக இருந்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒருவராக இருந்தவர் பிரியங்கா. ஜெயிக்கிறாரோ, தோற்கிறாரோ… அவர் இல்லாமல் இந்த நிகழ்ச்சி முழுமையடையாது. “இவ்வளவு பக்கத்துல வந்துட்டு நான் எப்படி போவேன்.. Please… you cant do that’ என்று பிக்பாஸிடம் பிரியங்கா அழுது கெஞ்சிய காட்சி மனதை கலங்கடித்தது.

பிரியங்கா
பிரியங்கா

எபிசோட் 104-ல் என்ன நடந்தது?

‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற ரகளையான பாடலுடன் மக்களை எழுப்பி விட்டார் பிக்பாஸ். ‘சக போட்டியாளர்களுக்குப் பரிசு தரும் டாஸ்க்கில்’ பாவனிக்கு எந்தப் பரிசும் கிடைக்காத சோகத்தைப் பற்றி எழுதியிருந்தேன். இதே விஷயத்தை வருணும் நினைவில் வைத்திருந்து “எங்கள் வீட்டில் உனக்காக கொடுத்தாங்க” என்றொரு பரிசுப்பொருளை பாவனிக்குத் தந்தது ஒரு நல்ல செய்கை. இதுதான் நுண்ணுணர்வு. கூட்டத்தில் ஒருவனை தனியாக ஃபீல் செய்ய விடக்கூடாது என்பதுதான் அடிப்படையான பண்பு.

‘சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா?'

தேநீருக்கும் தமிழ் பாரம்பரியத்திற்கும் என்ன லிங்க் என்று தெரியவில்லை. ஆனால் வணிகர்கள் எப்படியாவது ஒரு தொடர்பைக் கொண்டு வந்து விடுவார்கள். ஒரு டீ பிராண்ட்தான் பொங்கல் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. எனவே அது சார்ந்த பொருட்கள் உள்ளே வந்தன. தாமரை முன்னின்று வழிநடத்த, பானையில் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்தார். “சூடம் எடுத்துட்டு வாடா தம்பி..” என்று தாமரை, நிரூப்பிடம் சொன்ன போது அந்த வார்த்தையின் பொருள் அவருக்குத் தெரியவில்லை. போலவே நிரூப்பிடம் ஒரு வேலையைச் சொன்னால், அவர் அதை ராஜூவிடம் தள்ளி விட்டார். இதெல்லாம் வீடுகளில், ஆண்களிடம் நாம் பார்க்கும் சமாச்சாரம். வெல்லத்தை எப்படி இடிப்பது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார் நிரூப்.

பாவனி
பாவனி

ஏதோவொரு பொருளை எடுத்துக் கொண்டு வரும் போது பாவனி தடுமாறி விழுந்து விட, அவரது கையில் காயம் பட்டு விட்டது. ‘என்னது.. சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா?' என்கிற ரேஞ்சிற்கு பிக்பாஸ் வீடே அமளிதுமளியானது. பொருட்காட்சியில் விநோதமான பொருளை சுற்றிப் பார்க்க வருவது போல் பாவனியைச் சுற்றி ஒரே கூட்டம். ஆளாளுக்கு ஒரு முதலுதவி அபிப்ராயத்தைச் சொன்னார்கள். பாவனி வலியால் துடித்த போது ஆர்மிக்காரர்களின் இதயமும் கூடவே துடித்திருக்கும். வலி சற்று குறைந்தவுடன் “சரி. நீங்க போய். பொங்கல் வேலையைப் பாருங்க” என்று அவர்களை நல்லெண்ணத்துடன் அனுப்பி வைத்தார் பாவனி.

பானையில் பொங்கல் மேலே பொங்கி வராமல் தயங்கிக் கொண்டிருந்த போது ‘Come on.. pot.. you can do it..’ என்று பானையை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார் அக்ஷரா. ஜூனியர் பிரியங்கா என்கிற பட்டத்தை வெல்ல ஆசைப்படுகிறாரோ என்னமோ. மண்மணக்கும் கிராமத்துப் பாடலை வியர்வை வழியும் பணிக்களைப்புடன் தாமரை அற்புதமாக பாட, பொங்கல் பொங்கி வழிய, பெண்கள் குலவையிட்டார்கள். “அடுத்த பொங்கலுக்கு நம்ம படம் நெறைய வரணும். அதை நாம பார்க்கறதோட நிறுத்திக்காம, அதில் நாம் நடிச்சிருக்கணும்” என்று தாமரையோடு சேர்ந்து வேண்டிக்கொண்டார் ராஜூ. தாமரையின் கையால் திருநீறும் குங்குமமும் பூசி அனைவரும் அவரின் காலில் விழுந்து ஆசி வாங்கியது சிறப்பான காட்சி. பிறகு அனைவரும் காமிரா பொஷிஷனில் வந்து நின்று குடும்பத்தாருக்கும் மக்களுக்கும் பொங்கல் வாழ்த்து சொன்னார்கள். அரைமணி நேரமாக தயார் செய்து விட்டு அக்ஷரா வந்து ஒப்பிக்கும் போது பின்னாலேயே வருணும் அபிநய்யும் சத்தமில்லாமல் வந்து நின்றது ஜாலியான குறும்பு.

‘பாவனி.. என் க்ளோஸ் பிரெண்ட்’ – ஸ்ருதியின் நற்பண்பு

இவர்களாக தயார் செய்தார்களா, பிக்பாஸ் செய்து அனுப்பியதா என்று தெரியவில்லை. உணவு தயாராக இருந்தது. டைனிங் டேபிளில் அமராமல், தரையில் வாழை இலையை வரிசையாகப் போட்டு மக்கள் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்ட காட்சி அருமை. இதுதான் நம் பாரம்பரிய பிரதிபலிப்பு. ஆனால் ஆண்கள் முதலில் அமர்ந்து சாப்பிட, பெண்கள் பரிமாறினார்கள். இந்த நெடுங்கால வழக்கத்தை பிக்பாஸ் வீட்டிலாவது ஆண்கள் மாற்றியமைத்து முன்னுதாரணமாக இருந்திருக்கலாம். கையில் அடிபட்டிருந்த பாவனிக்கு உணவு ஊட்டி உதவினார் ஸ்ருதி. உடல் நலம் சரியில்லாத பிரியங்காவும் முதல் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டார்.

‘ஸ்ருதி.. என் க்ளோஸ் பிரெண்ட் இல்ல’ என்று தற்செயலாக பாவனி சொன்னது ஸ்ருதியின் மனதை மிகவும் பாதித்துவிட்டது போல. சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாவனியிடம் பிரியத்தைக் காட்டி “பாவனி என் பெஸ்ட் பிரெண்ட்" என்பதைத் தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருந்தார். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்கிற ஸ்ருதியின் நற்பண்பைக் காண முடிந்தது.

பாவனி - ஸ்ருதி
பாவனி - ஸ்ருதி

உண்ட மயக்கத்துடன் மக்கள் பெட்ரூமில் தூக்கத்தில் ஆழ்ந்து விட “பிரியங்காவைத் தவிர அனைவரும் வெளியே வாங்க” என்று உத்தரவிட்டார் பிக்பாஸ். இறுதிப் போட்டியாளர்களுக்கு மட்டும் ‘உறியடிப் போட்டி’ நடந்தது. இதைப் பற்றிய அறிவிப்பை வாசிக்கும் போது சிபியின் நாக்கு கண்டபடி குழறியதால் சிரித்துக் கொண்டே நிதானமாக வாசித்தார். “என்னை எப்படியெல்லாம் திருக்குறள் படிக்க வெச்சு இம்சை பண்ணே?!” என்பது மாதிரியே நக்கலாகச் சிரித்தார் அக்ஷரா. முதலில் சற்று தடுமாறினாலும் சில நிமிடங்களில் உறிப்பானையை அடித்து விட்டார் ராஜூ. ஆனால் இதற்குப் பிறகு வந்த அமீர், அந்த நேரத்திற்கும் முன்பாக உடைத்து விட்டதால் அமீர் + பாவனி அணி வெற்றி பெற்றது.

மருத்துவ சிகிச்சையில் பிரியங்கா

உறங்கிக் கொண்டிருந்த பிரியங்காவை, மருத்துவ அறைக்கு அவசரமாக அழைத்தார் பிக்பாஸ். பிறகு அவரை வாக்குமூல அறைக்கு அழைத்து “உங்கள் உடல்நலம் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கருதுகிறார்கள். மருத்துவமனையில் உடனே சேர்க்க வேண்டும். நீங்கள் இந்த வீட்டை விட்டு உடனே வெளியேற வேண்டும்” என்று அதிர்ச்சியான அறிவிப்பைத் தர, அதைக் கேட்டு கலங்கி விட்டார் பிரியங்கா. “நான் இவ்வளவு தூரம் கடந்து வந்து விட்டு, இறுதிக்கட்டத்தில் எப்படி வெளியேறுவது?... நிச்சயம் முடியாது” என்று கலங்க “உங்கள் ஆரோக்கியம் மிக முக்கியம் பிரியங்கா” என்று பிக்பாஸ் கட்டாயப்படுத்தினாலும் அவர் ஏற்கவில்லை. “ஃபைனல் டே அன்று நீங்கள் வந்து விடலாம்” என்று சமாதானத்தைச் சொல்லி ஏற்க வைத்தார் பிக்பாஸ். பிறகு ராஜூவை அழைத்து இந்தத் தகவலை வீட்டு மக்களிடம் சொல்லச் சொல்ல, அவரும் அதை மிக பக்குவமான முறையில் சொன்னது சிறப்பு.

நாடியா
நாடியா

நகைக்கடை ஓனர் நாடியா

“ஓகே.. திருவிழாவை ஆரம்பிக்கலாமா?” என்று கேட்ட பிக்பாஸ், முதலில் நாடியா சாங்கை நகைக்கடையின் ஓனராக்கினார். திருவிழா நடக்கும் தெருக்களில் நாம் பார்க்கும் விளையாட்டுதான் இது. ரப்பர் வளையத்தை தூக்கிப்போட்டு, அந்த வளையம் சரியாக விழுந்தால் சம்பந்தப்பட்ட பொருள் நமக்கு பரிசாக கிடைக்கும். ஆனால் இதில் ஜெயிப்பது அத்தனை எளிதில்லை. உருட்டு அப்படி. ரப்பர் வளையம் எளிதில் துள்ளி விழும் என்பதால் பரிசு அதிர்ஷ்டம் மிக அரிதாகவே கிடைக்கும். மட்டுமல்லாமல், விலையுயர்ந்த பொருட்களை தூரமாகவே வைத்திருப்பார்கள். இதில் ‘ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்’ என்கிற அநியாயமான விதியை உருவாக்கினார் பிக்பாஸ். ஆனால் அவர்கள் ஜெயிக்கும் நகைகளை ‘பெண்களுக்கு பரிசளிக்க வேண்டுமாம்’. “வீட்டுல இருக்கறவங்களுக்கா?” என்று அபிநய் கோக்குமாக்காக கேட்க “அதை உங்க செலவுல வாங்கிக் கொடுங்க. இந்தப் பரிசு பிக்பாஸ் வீட்டுப் பெண்களுக்கு தரப்பட வேண்டும்” என்று அபிநய்க்கு நோஸ் கட் கொடுத்தார் பிக்பாஸ்.

இதில் கிடைத்த பரிசுகள் பெரும்பாலும் தாமரைக்குச் சென்றதில் அம்மணிக்கு ஏகப்பட்ட குஷி. ‘பாவனிக்கு பரிசு ஏதும் கிடைக்கவில்லை’ என்று காரணம் சொல்லி தான் சம்பாதித்த பரிசை பாவனிக்கு வழங்கினார் வருண். நெக்லெஸ் போன்ற பெரிய பரிசை மட்டுமே குறிவைத்து தொடர்ந்து தோற்றுப் போனார் அமீர். இதை ‘தத்துவம்’ மூலம் சுட்டிக்காட்டி கிண்டலடித்தார் சிபி. “டிக்கெட் டூ ஃபினாலே-ல எனக்கு சந்தோஷமில்லை. ஃபைனல்தான் இலக்கு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் அமீரின் குணாதிசயம் இந்த விளையாட்டிலும் வெளிப்பட்டது.

‘போட்டோ ஸ்டூடியோ ஓனர் அமீர்’

அடுத்ததாக ஃபோட்டோ ஸ்டூடியோ கடை. இதன் ஓனராக அமீரை நியமித்தார் பிக்பாஸ். ‘தங்களுக்கு பிடித்த போட்டியாளரோடு புகைப்படம் எடுக்கலாம்’… பாவம் அந்த பொலராய்ட் காமிரா!. அதற்கு வாய் இருந்திருந்தால் கதறியழுதிருக்கும். அந்த அளவிற்கு அதை ஆளாளுக்கு போட்டு படுத்தி எடுத்தார்கள். "இன்னும்.. ஒரு போஸ்..” என்று நெடுநேரமாக இவர்கள் அலப்பறை செய்து கொண்டிருக்க “போதும்.. கடையை சாத்துங்க” என்று பிக்பாஸே தடுத்து நிறுத்தி கதறும்படியாக ஆனது நிலைமை. அமீரை அழைத்து பாவனி ஃபோட்டோ எடுத்துக் கொண்டது ஒரு ‘க்யூட்’ மோமெண்ட்.

அடுத்ததாக பிரமிட் கப்களை அடித்து நவுத்தும் விளையாட்டு. ஜெயித்தால் டெடிபேர் பொம்மை பரிசு. இந்தக் கடையின் ஓனர் நிரூப். எவர்சில்வர் தம்ளர்கள் பிரமிட் வடிவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதன் அடிபாகத்தில் பந்தை அடித்தால் அனைத்துமே கீழே விழும் என்பது எளிய விதி. ஆனால் எவராலும் அடிக்க முடியவில்லை. மேல் பக்கத்தையே குறிவைத்தார்கள். எனவே இரண்டு வாய்ப்புகளை, ஐந்து வாய்ப்புகளாக உயர்த்தினார் பிக்பாஸ். அப்போதும் இயலவில்லை. எக்ஸ்ட்ரா வாய்ப்பை தானே எடுத்துக் கொண்டு ஒருமுறை அடித்து வீழ்த்தினார் வருண். “சரி பேப்பர் கப்பை வைக்கறேன். அப்படியாவது அடிப்பீங்களா?” என்று கேட்டு ஆண்களை பங்கம் செய்தார் பிக்பாஸ்.

ராஜூ
ராஜூ

டெடிபேர் பொம்மைகளைக் கைப்பற்றுவதில் பெண்களுக்குள் மறைமுகமான போட்டி நடந்தது. தனக்குப் பிடித்தமான பொம்மையை முன்பே மார்க் செய்து விட்டார் தாமரை. நாடியா பார்த்து வைத்திருந்த பொம்மையை அழுகிணி ஆட்டத்துடன் ஸ்ருதி லவட்டிக் கொண்டு போக, ரகசியமாக சிணுங்கினார் நாடியா. பிறகு நிரூப் தலையிட்டு பிடுங்கித் தந்தார். பிறகு தான் எடுத்து வைத்திருந்த பொம்மைகளை ரகசிய இடத்தில் பதுக்கி வைத்தார் ஸ்ருதி. “அவன் டெய்லி மூணு வேளை டீக்கடைக்குப் போறான். அவனை கடத்தணும்னா நாம டீக்கடை வெச்சா போதும்” என்று ‘சூது கவ்வும்’ திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அதைப் போல பெண்களைக் கவர வேண்டுமென்றால் டெடிபேர் பொம்மை போதும் போல. அந்த அளவிற்கு அதன் மீது உயிரை விடுகிறார்கள்.

பாவனி
பாவனி

ஸ்வீட் ஸ்டால் ஓனர் ராஜூ

அடுத்த கடை ஸ்வீட் ஸ்டால். இதன் ஓனர் ராஜூ. "சார்… லட்டு செஞ்சு தருவாரு” என்று பிக்பாஸ் ராஜூவை ஏற்றி விட, பூந்தி வடிவில் இனிப்பு வந்தது. “நீ உருட்டித் தர்ற வரைக்குமெல்லாம் எங்களால வெயிட் பண்ண முடியாது.” என்று மக்கள் பூந்தியாகவே எடுத்து அள்ளித் தின்றார்கள். இதற்குள் பொழுது போய் விட்டதால் வீட்டின் உள்ளே கொண்டாட்டத்தை தொடர்ந்தார் பிக்பாஸ்.

இதற்குப் பிறகு வந்தது ‘புகைப்பட விளையாட்டு’. இந்த சீசனில் நடந்த ஏதாவதொரு சம்பவத்தின் புகைப்படம் ஒன்று டிவியில் காட்டப்படும். அது எந்த தருணம் என்பதை போட்டியாளர்கள் நினைவு கூர வேண்டும். பல சமயங்களில் முதலில் சரியாக நினைவுகூர்ந்தவர் ஸ்ருதிதான். நல்ல நினைவாற்றல் உள்ளவர் போலிருக்கிறது. இதற்கு அடுத்த வரிசையில் அக்ஷரா இருந்தார். ராஜூ கதை சொல்லி தாமரையை பயமுறுத்திய சம்பவம், பிரியங்காவும் அபிநய்யும் ரசகுல்லாவை ஸ்டோர் ரூமில் நைசாக மொக்கியது, ஐக்கி, ராஜூவை வைத்து அண்ணாச்சி நடத்திய ஷுட்டிங், அபிஷேக் என்ட்ரியின் போது இமான் பயந்த தருணம் போன்றவை போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்குமே சுவாரசியமான நாஸ்டால்ஜியாவாக அமைந்தன. இன்று நடந்த அனைத்து டாஸ்க்கின் போதும் பிரியங்கா இல்லாததனின் குறையை இவர்கள் உணர்ந்தார்கள். “கோப்பால் வந்தவுடனே மறுபடியும் போட்டுக் காண்பிங்க பிக்பாஸ்” என்று வேண்டுகோள் வைத்தார் ராஜூ.

துள்ளிக்குதித்த மிஸ்டர் காளையன்

அடுத்து நடந்தது ஒரு சுவாரசியமான விளையாட்டு. சுழலும் பொம்மை காளையின் மீது ஏறி கீழே விழாமல் சமாளிக்க வேண்டும். யார் அதிக நேரம் தாக்குப் பிடிக்கிறாரோ, அவருக்குப் பரிசு. “என்ன.. மிஸ்டர் காளையன் வெட்கப்பட்டு தலையை குனிஞ்சிருக்கார்?” என்று கேட்டு இந்த விளையாட்டில் பங்கேற்க மக்கள் உற்சாகமானார்கள். இதில் பலரும் சட்டென்று கீழே விழ, வருண் மட்டுமே சிறப்பான உத்தியை முதலில் பயன்படுத்தினார். பிறகு வந்தவர்கள் இவரை நகலெடுத்தார்கள். தாமரைக்கு பரிசு கிடைக்கட்டும் என்று பிக்பாஸ் தீர்மானித்தாரோ, என்னமோ, பயந்து கொண்டே வந்த தாமரை வந்த போது மட்டும் மாடு சமர்த்தாக இருந்தது. இந்தச் சுற்றில் அதிக நேரம் இருந்தவர் தாமரைதான். மக்கள் உற்சாகமாக தாமரைக்கு வாழ்த்து சொன்ன போது அதில் கட்டையைப் போட்டார் பிக்பாஸ். “ரெண்டாவது ரவுண்டு ஆரம்பிக்கலாமா?” என்று அவர் கேட்ட போது ஜாலியாக சிணுங்கினார் தாமரை. இரண்டாவது சுற்றில் இன்னொரு சிறப்பான உத்தியைப் பயன்படுத்தினார் வருண். இதில் அதிக நேரம் தாக்குப் பிடித்தவர் அமீர். ஆனால் என்ன பரிசு என்பது அறிவிக்கப்படவில்லை.

பிக் பாஸ் டாஸ்க்
பிக் பாஸ் டாஸ்க்

சிறப்பு உணவுகள் வந்தன. மக்கள் உண்ட மயக்கத்தில் சாய்ந்தாலும் பிக்பாஸ் விடவில்லை. “இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் உங்களுக்குள் நடந்த மாற்றங்களைச் சொல்ல வேண்டும்" என்று புதிய டாஸ்க்கை தந்தார். மக்கள் சாய்ந்தபடி தூக்கக்கலக்கத்தில் கேட்டார்கள். நிரூப் அடிக்கடி மினி உறக்கத்தில் ஆழ்ந்தார். மூலையில் அமர்ந்தபடி மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தார் அக்ஷரா.

“நான் அதிகம் பேச மாட்டேன்.. இங்க வந்துதான் பேச ஆரம்பிச்சேன். செல்போன் இல்லாம உயிர்வாழ முடியாதுன்ற பழக்கத்தை பிக்பாஸ் வீடு மாத்திச்சு. வீட்டு நபர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்திருக்கிறது. தனிப்பட்ட சில குணாதிசயங்களை பிக்பாஸ் வீடு மாற்றி அமைத்திருக்கிறது. வெளியுலகத்திலும் இனி அதைப் பின்பற்றுவேன்” என்பது போன்ற மாற்றங்களையே ஒவ்வொருவரும் வெவ்வேறு வார்த்தைகளில் சொன்னார்கள்.

பிக் பாஸ் பொங்கல் கொண்டாட்டம்
பிக் பாஸ் பொங்கல் கொண்டாட்டம்

முதல் எலிமினேஷன் யாராக இருக்கும்?

தூக்கக் கலக்கத்துடன் நடந்து முடிந்த இந்த டாஸ்க்கிற்குப் பிறகு “இறுதிப் போட்டியாளர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளியே வரலாம்” என்று பிக்பாஸ் அறிவித்தார். “ஓகே.. இன்னமும் ஒரு நாள்தானே” என்கிற ஆறுதல் வார்த்தைகளுடன் மக்கள் கிளம்ப ஆயுத்தமானார்கள். இறுதிப் போட்டியில் நிற்பவர்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் நிறைய சொல்லப்பட்டன. அவற்றில் பிரியமும் நட்பும் நிறைந்திருந்தது. ஸ்ருதி பலருக்கும் நல்ல ஆலோசனை சொன்னார். நிரூப்பிற்கு சைலண்ட்டான பெண்கள் ஆர்மி நிறைய இருக்கிறது போல. ரகளையான பாடல்கள் தொடர்ச்சியாக ஒலிக்க, மக்கள் நடனமாடி விட்டு கிளம்பினார்கள். பெரும்பாலான தருணங்களில் ஒதுங்கியே இருந்தார் பாவனி. இவரும் அபிநய்யும் கடைசி வரை பேசிக் கொள்ளவேயில்லை. பேசியிருக்கலாம். ‘எதற்கு வம்பு?’ என்று இருவருமே நினைத்தார்களோ, என்னமோ.

இன்று கமல் வரும் நாள். போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட தருணம். ஒரு பக்கம் பண்டிகை கொண்டாட்டம், இன்னொரு பக்கம் பிரியங்கா இல்லாத சோகம் என்று கலவையான உணர்வுகளுடன் கிளைமாக்ஸ் நிகழப் போகிறது. சிறப்பு விருந்தினர்கள் உள்ளே வந்து எலிமினேட் செய்யப்பட்ட ஆட்களை கையோடு அழைத்துச் செல்வார்கள். அவர்களில் மிஞ்சும் இரண்டு நபர்களில் ஒருவரின் கையை கமல் தூக்கிக் காண்பிப்பார். அவர் யார்?

இது ஒருபக்கம் இருக்கட்டும். இந்த ஐவரில் முதன்முதலில் யார் எலிமினேட் ஆவார்? கமெண்ட் பாக்ஸில் வந்து சொல்லுங்களேன்.