Published:Updated:

பிக்பாஸ் 50 : வெளியேற்றப்பட்ட இசை; இமானுடன் கூட்டணி அமைத்த ராஜூ!

ராஜூ

பாவனியின் மங்காத்தா ஆட்டங்களை தனது சர்காஸ்டிக் ஸ்டைலில் சொல்லி முடித்தார் ராஜூ.

பிக்பாஸ் 50 : வெளியேற்றப்பட்ட இசை; இமானுடன் கூட்டணி அமைத்த ராஜூ!

பாவனியின் மங்காத்தா ஆட்டங்களை தனது சர்காஸ்டிக் ஸ்டைலில் சொல்லி முடித்தார் ராஜூ.

Published:Updated:
ராஜூ

`பிக்பாஸ் வீட்டில் இருந்து இசை வெளியேற்றப்பட்டார்’ என்பதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். ஏறத்தாழ ஐம்பது நாட்கள் வரை இசைக்கு வாய்ப்பளித்து அவரை பாதுகாத்து வைத்திருந்த பார்வையாளர்கள், ஒரு கட்டத்தில் சோர்வடைந்து கைவிட, வரிசையின் கடைசி நுனியில் இருந்து இசை சரிந்து விழ வேண்டியதாயிற்று. ‘கானா பாடும் முதல் பெண்’ என்பதுதான் இசையின் தனித்த அடையாளம். இந்த பிரத்யேகமான திறமையை அவர் பிக்பாஸ் வீட்டில் அதிகம் வெளிப்படுத்தினாரா அல்லது அவை எடிட்டிங் டீமால் தூக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. தாமரையுடன் அற்பமான சண்டைகளை போடும் ஆர்வத்தைக்கூட இசை பாடுவதில் காட்டவில்லை.

பிக்பாஸ் வீட்டில் இசையின் செயல்பாடு என்பது இன்றைய சராசரி தலைமுறையினருக்கான பிரதிநிதித்துவ உதாரணம் என்பேன். உயர்ந்த இடத்தை அடைவதற்கான லட்சியமும் வேகமும் இளைஞர்களின் மனங்களில் இருக்கும். ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போது அவர்கள் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா என்பதுதான் கேள்வி. லோக்கல் மொழியில் சொன்னால், ‘வெறுமனே வாயில் வடை சுடுகிறார்களா?’ இளைய தலைமுறையினரை மட்டும் இதற்காக குறைசொல்ல முடியாது. சிறந்த வழிகாட்டிகளாக இருந்திருக்க வேண்டிய மூத்த தலைமுறையினர்தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

இசை
இசை

இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு ‘The Worst Captain’ என்கிற பெயரை இசை ஏன் பெற்றார்? அதிகாரம் என்பது மிகச்சிக்கலான ஆயுதம். அதை சரியானபடி பயன்படுத்தாவிட்டால் கையாண்டவரையே திருப்பித் தாக்கி விடும் அபாயம் உண்டு. கறார்த்தனத்திற்கும் கள்ளமெளனத்திற்கும் இடையே இசை தத்தளித்தார் என்று தோன்றுகிறது. ஆளுமையைப் பயன்படுத்துவதில் இசைக்கும் பாவனிக்கும் கணிசமான வித்தியாசம் இருந்தததை கவனித்திருப்பீர்கள். ஆயிரம் இடையூறுகள் ஏற்பட்டால் அதற்கு இடையில் போராடிக் கொண்டே இருந்தார் பாவனி. “என் பேச்சைக் கேட்கலைன்னா பிக்பாஸ் கிட்ட போய் சொல்லிடுவேன்” என்று இசை அடிக்கடி சொன்னது முதிர்ச்சியின்மை. அதைச் சமாளிப்பதற்காகத்தானே அந்த அதிகாரம் அவருக்குத் தரப்பட்டிருந்தது? இன்னமும் கேட்டால் நாணயத்தின் சக்தியைப் பயன்படுத்தி அவரேதான் அந்த அதிகாரத்தை அபினய்யிடமிருந்து பறித்துக் கொண்டார். தன் பதவிக்காலத்தை அவர் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். எனில் இந்த வெளியேற்றம் நிகழ்ந்திருக்காது. இசையின் பாடல்வரிகளில் இருந்த புரட்சியும் வேகமும், பிக் பாஸ் வீட்டினுள் அவரின் செயல்பாடுகளிலும் இருந்திருக்கலாம் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்.

எபிசோட் 50-ல் என்ன நடந்தது?

“நம் கைத்தறி நெசவாளர்களின் திறமையையும் வணிகத்தையும் பரப்புவதற்காக சிகாகோ சென்றிருந்தேன். அவர்களின் கைத்திறமையை உலகச்சந்தையில் எடுத்துரைப்பதற்கான முயற்சி இது. தமிழகத்திலிருந்து இந்தச் சிந்தனை கிளம்பியிருக்கிறது. இதற்கு முன்னுதாரணம் காந்தி. கண்ணெதிர் உதாரணமாக என் தந்தை இருந்தார். அவருடைய வக்கீல் கோட் முதற்கொண்டு முழுவதும் கதராக இருக்கும். பிளாஸ்டிக் பட்டன் கூட இருக்காது” என்கிற கைத்தறி ஆடைக்கான பிரசாரத்துடன் அரங்கில் நுழைந்த கமலின் நல்ல நோக்கம் பாராட்டத்தக்கது. அவர் நேற்று அணிந்திருந்த உடையும் அதன் கலர் காம்பினேஷனும் நன்றாக இருந்தது.

அகம் டிவி வழியாக உள்ளே சென்ற கமல் “கண்ணாடி டாஸ்க்ல சில காம்பினேஷன் முன்னாடி நடக்காமப் போச்சு. அதுக்காக நாம பின்னாடி வருத்தப்படக்கூடாது. இப்ப பண்ணிடலாம்” என்று ராஜூ – பாவனியை முதலில் அழைத்தார். பாவனியின் பிம்பமாக ராஜூ பேச வேண்டும். “நாணயம் பிரச்சினைல சுருதியை மட்டும் கைகாட்டிட்டு நீங்க தப்பிச்சிக்க முயற்சி பண்ணீங்க. ஆளுமை கிடைச்சப்ப தாமரையை கோர்த்து விட்டு அவரை பலி போட்டீங்க. நீங்க மெழுகு பொம்மையா.. இல்ல.. பேய் பொம்மையான்னு எனக்கு சந்தேகமா இருக்கு” என்று பாவனியின் மங்காத்தா ஆட்டங்களை தனது சர்காஸ்டிக் ஸ்டைலில் சொல்லி முடித்தார் ராஜூ.

பிக்பாஸ் போட்டியாளர்கள்
பிக்பாஸ் போட்டியாளர்கள்

“கவனிச்சீங்களா.. இங்கயும் தாமரைதான் பேசுபொருள். சொல்லி முடிச்சிட்டீங்கள்ல. பாவனி கையை விட்டுடுடுங்க..” என்று ராஜூவிடம் கமல் சொல்ல அரங்கில் சிரிப்பு எழுந்தது. (பாவனியின் சதிகள் ஒருபக்கம் இருக்கட்டும். நாளாக நாளாக அம்மணி க்யூட் ஆகிக் கொண்டே போகிறார்… கவனித்தீர்களா?!).

“ராஜூ போட்ட ஊசி வலித்ததா?” என்று பாவனியிடம் கமல் விசாரிக்க “ஆமாம் சார். அதுக்காக பேட்ஜை எல்லாம் கொடுத்துட மாட்டேன். அதைத் தாங்கிக்கற சக்தி எனக்கு இருக்கு. காயின் மேட்டர்ல நான் தப்பு பண்ணலை. அது ஒரு கேம். தாமரையோட ஃபீலிங்க்ஸ் ஹர்ட் ஆயிருந்தா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். என் ஆளுமையாவே இருந்தாலும் பல தண்டனைகளை நானே ஏத்துக்கிட்டு தியாகியா இந்த வீட்ல வாழ்ந்தேன். இது பதிவு பண்ணப்படலை. யார் கிட்டயாவது எனக்கு கோபம் வந்தா அவங்க கிட்ட நான் பேசமாட்டேன். அதுதான் என் பாலிசி. ராஜூ மேல எனக்கு கோபமில்லை.” என்று புன்னகையுடன் தன்னிலை விளக்கத்தை அளித்தார் பாவனி.

பாவனி
பாவனி

நிரூப்பிற்கு ஆளுமை கிடைக்கும்போது அப்போது அவர் முட்டிக் கொண்டிருந்த அக்ஷராவைத்தான் உதவியாளராக தேர்ந்தெடுத்தார். ‘தரமான சம்பவம் இருக்கு’ என்று நாம் எதிர்பார்த்திருந்த நேரத்தில் இருவரும் புத்திசாலித்தனமாகப் பேசி சமாதானம் ஆனார்கள். ஆனால் தாமரை – பாவனி விவகாரத்தில் இந்தச் சமாதானம் நடக்கவில்லை. எதிரெதிர் பாலினமாக இருந்தால் அங்கு பிரச்சினை அதிகம் வெடிப்பதில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். opposite sex attraction என்பது எப்போதுமே செல்லுபடியாகக்கூடிய ஒரு தியரி.

இசையின் பிம்பமாக இமானை பேச அழைத்த போது “அப்படி ஒண்ணும் பெருசா இதில இருக்காதே?” என்று குத்தலான கமெண்ட்டை தன் வழக்கமான பாணியில் இமான் வீச, இது இசையின் ஈகோவை உசுப்பி விட்டது. “அப்படியென்ன பெரிசா இருக்காது.. நீங்க பேசுங்க. எனக்கு தெரிஞ்சாகணும்” என்று துணிச்சலுடன் சபையில் எழுந்து வந்ததற்காக இசைக்குப் பாராட்டு.

“இங்க இருக்கற ஆளுங்கள்லேயே என் காமெடியை நீதான் ஆரம்பத்துல ரொம்ப ரசிச்சிருக்கே. ஆனா உனக்கு எதிரா ஒரு கருத்து சொல்லப்படும்போது அதை நீ சரியா புரிஞ்சுக்கறியான்னு தெரியல. புரிஞ்ச மாதிரி தலையாட்டறே. அப்புறம் வழக்கமாத்தான் இருக்கே. ஞாயிற்றுக்கிழமை ஒரு மாதிரி இருக்கே. செவ்வாய்க்கிழமை வேற மாதிரி மாறிடறே. அதுக்கு உன்னோட வயது, அனுபவக்குறைவுல்லாம் ஒரு காரணமாக இருக்கலாம். முடிவெடுக்கும் திறமைல நீ தடுமார்றன்னு தோணுது” என்று சொல்லி முடித்துக் கொண்டார் இமான். இதற்கான தன்னிலை விளக்கத்தில் “என்னைப் பேச விட்டாதானே கருத்து வரும். நாங்க சொல்றதையே இங்க கேக்க மாட்டேங்கறாங்க. தடையா இருக்காங்க. சின்னப்பொண்ணு… சின்னப்பொண்ணுன்னு ஒதுக்கி வெச்சிடறாங்க” என்று இசை ஆதங்கப்பட்டார்.

“இமான். இனிமே இசையை சின்னப்பொண்ணுன்னு சொல்லாதீங்க” என்று கமல் சிரித்துக் கொண்டே சொல்ல, இதற்கு அண்ணாச்சி சைலண்ட்டாக அடித்த காமெடி சிக்ஸர் ‘ஓஹோ’ ரகம். “ஓகே. சார்.. சின்னப்பொண்ணுதான் வெளியே போயிட்டாங்களே?” என்று அவர் இயல்பாக சொல்ல, “ஆமாம்ல” என்று கமலே இதற்கு சிரித்து விட்டார். இசை உட்பட சபையும் இதற்கு சிரித்தது.

இமான்
இமான்

“பிக்பாஸ் வீட்டில் வயது வித்தியாசமோ, பாலின வித்தியாசமோ கிடையாது. இருக்கவும் கூடாது என்று விரும்புகிறேன்” என்று கமல் தந்த பைனல் டச் சிறப்பு. ‘தமிழ்நாட்டில் ஏழு கோடி பேருக்கு என்னைத் தெரியும்’ என்று இமான் சொன்னது காமெடியா, டிராஜிடியா என்கிற விவகாரத்தையும் கமல் கையில் எடுத்தார். ``அது காமெடிக்காக சொன்னது சார். இசையைப் பற்றி நான் இனிமேத்தான் தெரிஞ்சக்கணும்” என்று விளக்கம் அளித்தார் இமான். விசாரணை இடைவேளையில் “அண்ணாச்சி காமெடிக்காக சொன்னதை இசை தப்பா புரிஞ்சிக்கிட்ட மாதிரி தோணுது” என்று நிரூப்பும் ராஜூவும் பேசிக் கொண்டிருந்தார்கள். “வயசுல பெரியவங்க சொன்னா முதல்ல ஃபுல்லா கேட்டுக்கோ” என்று இசையிடம் பாவனி அட்வைஸ் செய்ய “ரைட்டா இருந்தா கேட்டுப்பேன்” என்று பதில் சொன்னார் இசை. (கரெக்ட்டுதான். ‘பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி’ என்று கண்முடித்தனமாக நம்புவதெல்லாம் பழைய காலம்).

ஓர் இடைவேளைக்குப் பின்பு திரும்பி வந்த கமல் “ஐம்பது நாட்களை கடந்து விட்டோம். இருங்க… இருங்க. கைத்தட்டி சந்தோஷப்படாதீங்க. இன்னமும் ஐம்பது நாட்கள் இருக்கு. அதை நீங்க அடிக்கடி மறந்துடறீங்க. அதை நினைவுப்படுத்தவே இந்த விளையாட்டு” என்று அடுத்த டாஸ்க்கை கையில் எடுத்தார்.

தன்னைத் தவிர, ‘யார் இறுதி போட்டியாளராக வருவதற்கு தகுதியானவர்’ என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும். அதைப் போலவே, ‘இந்தாளு வேஸ்ட்டு.. ஃபைனல் வர்றதுக்கு வாய்ப்பேயில்ல’ என்று இன்னொருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம் போட்டியாளர்களின் மனதுகளில் உறைந்துள்ள ஆசாபாசாங்கள் வெளியே வரும்.

 ராஜூ
ராஜூ

இந்த டாஸ்க் முடிந்த பிறகு ‘இறுதிப்போட்டிக்கு தகுதியானவர்’ என்கிற முறையில் அதிக கோப்பைகளை ராஜூ கைப்பற்றினார். அவருக்கு கிடைத்த கோப்பைகளின் எண்ணிக்கை 4. இதற்கு அடுத்த நிலையில் நிரூப் 3 கோப்பைகளையும் பிரியங்கா 3 கோப்பைகளையும் பெற்றார்கள். “வேஸ்ட்டு’ கேட்டகிரியில் இமான் முன்னிலையில் வந்தார். “ஒண்ணும் பிரச்சினையில்லை. உங்களுக்கு கிடைத்த பூஜ்யங்களுக்கு முன்னாடி நீங்க ஒன்று என்கிற எண்ணிக்கையா நின்னுடுங்க. ஆட்டமே மாறிடும்” என்று அண்ணாச்சிக்கு ஊக்கம் அளித்தார் கமல்.

‘இறுதிப்போட்டிக்கு தகுதியானவர்’ என்கிற கோப்பையை இமானுக்கு தந்த ராஜூ, “அவர் என் கூடயே வரணும்னு ஆசைப்படறேன். அவர் இருந்தாதான் எனக்கு நல்லா இருக்கும்” என்றது கூட ஓகே. “எப்படியாவது அவரை கூட்டிட்டு வந்துடுவேன்” என்ற போது முதலில் நமக்கு நெருடலாகத்தான் இருந்தது. ஆனால் இதற்கு பிறகு அவர் அளித்த விளக்கம் அபாரம். “பிக்பாஸ் டைட்டிலை ஒரு காமெடியன்தான் ஜெயிக்கணும்னு அவர் ஆசைப்பட்டாரு. அது நெஜமாகணும்னு நானும் நெனக்கறேன். அவர் ஜெயிச்சா நான் ஜெயிச்ச மாதிரிதான். அப்புறம் அவர்கிட்ட இருந்து நான் பிடுங்கிப்பேன்” என்று நெகிழ்வும் காமெடியுமாக கலந்து விளக்கம் சொன்னார் ராஜூ.

தாமரை
தாமரை

ஆனால் ‘வேஸ்ட்டு’ தேர்வாக தாமரையை ராஜூ சுட்டிக்காட்டியது ஓவர். ‘எவ்ளேளோ அடித்தாலும் தாங்குவார்” என்று தாமரையை நினைத்து விட்டார் போலிருக்கிறது. “ஓவர் வாய்” என்று ராஜூ காரணம் சொன்ன போது “இப்ப நான் பேசணுமா. பேசக்கூடாதா.. சார்?” என்று கமலிடம் தாமரை ஆதங்கப்பட்டு கேட்க “என்ன வாய்.. ன்ற மாதிரி இல்லாமல் ‘என்னவாய்.. பேசுகிறோம்ன்றது முக்கியம்” என்று வார்த்தை விளையாட்டில் கமல் ஆடிய சிலம்பம் சிறப்பு.

இமான் இறுதிப்போட்டிக்கு வர ராஜூ ஆசைப்படுவது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் ‘அப்பா’ கேரெக்ட்டர் என்பது பாதி பயணத்தில் இறங்கியாக வேண்டும் என்பதுதான் பிக்பாஸ் குடும்பத்தின் வரலாறு. இந்தச் சாதனையை ராஜூ + இமான் கூட்டணி முறியடிக்கிறார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏனெனில் உடல்வலிமை சார்ந்த போட்டிகளில் இமான் செயல்படுவது சிரமம்.

தன்னுடைய முறை வரும் போது ராஜூவிற்கு பதில் மொய் வைத்து மகிழ்ந்தார் இமான். ‘வேஸ்ட்டு’ கேட்டகிரியில் அவர் இசையை தேர்வு செய்வாரோ என்று நாம் நினைத்த போது அவரும் தாமரை மீது சேஃபாக குத்தி விட்டு அமர்ந்தார். ‘இமானுடன்தான் என்னுடைய கூட்டணி” என்று வெளிப்படையாக ராஜூ அறிவித்தது ஒரு துணிச்சலான மூவ். ஆனால் போர் வரும் வரை தன்னுடைய ஆயுதங்களை ரகசியமாக வைத்திருப்பவனே வெற்றி பெற முடியும். ராஜூவின் வியூகம் எப்படியிருக்கும் என்று பார்ப்போம். “இதுக்காக இமானை குறைச்சு எடை போட்ற முடியாது. அவரு வாழைப்பழம்னு நெனச்சிக்கிட்டு கண்ல ஊசியை ஏத்திட்டார்னா கதை காலி” என்று கமல் சொன்ன அடுத்த கணத்தில் தன்னிடமிருந்த கோப்பைகளை ராஜூ பயபக்தியுடன் மேஜையில் வைத்த காமெடி சிறப்பு.

ஓர் இடைவேளைக்குப் பின்பு திரும்பி வந்த கமல் “எட்டு பேர் எலிமினேஷன் லிஸ்ட்ல இருக்கீங்க..இல்லையா?” என்றார். (எனில் அபினய் காப்பாற்றப்பட்டதாக நேற்று புரிந்து கொண்டது தவறு). “அபிஷேக்.. நீங்க வெளில பிக்பாஸ் பார்த்தீங்களான்னு கேட்க மாட்டேன். ஆனா போட்டியாளர்களைப் பற்றிய உங்களின் கணிப்பு என்ன? அதில் ஏதாவது மாற்றம் இருக்கா?” என்று அபிஷேக்கை பேச அழைத்தார் கமல். இப்படி அபிஷேக்கை வம்படியாக அழைத்து பல்பு தருவதில் கமலுக்கு ஏதோவொரு குஷி இருந்ததைப் போல் தெரிந்தது. (அந்த வீடியோ துண்டை நிச்சயம் பார்த்திருப்பார் போல). அபிஷேக் தனது கணிப்புகளை சொல்லி “யார் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்?” என்கிற ஆர்டரை யூகித்த போது ``உக்காருங்க. அது தப்பு” என்று மூக்குடைப்பு செய்வதை கமல் உற்சாகமாக செய்தார்.

அபினய், அபிஷேக்
அபினய், அபிஷேக்

அபிஷேக்கின் அராஜகங்கள் குறித்து நமக்கு ஆயிரம் புகார்கள் இருக்கலாம். ஆனால் இந்தச் சமயத்தில் ஒவ்வொரு போட்டியாளரைப் பற்றியும் அபிஷேக் செய்த வரையறைகள் ஏறத்தாழ துல்லியமாக இருந்தன. அபிஷேக்கிற்குள் நிச்சயம் ஒரு சிறந்த விமர்சகர் இருக்கிறார். ஆனால் அவற்றை அவர் அலட்டல் இல்லாத மொழியில் சொன்னால், நிச்சயம் அதிகம் கவனிக்கப்படுவார். அபினய்யைப் பற்றிய கணிப்பை அபிஷேக் மாற்றிக் கொண்டது சிறப்பு. இதற்கு அபினய் நெகிழ்ந்து நன்றி சொன்னார். ‘உயிருள்ள ரோபோ’ என்று நிரூப்பையும் ‘சஸ்பென்ஸ் திரைப்படம்’ என்று அக்ஷராவையும் ‘சராசரி பெண்களின் பிரதிநிதி’ என்று தாமரையையும் தனது பிரத்யேகமான வார்த்தைப் பிரயோகங்களோடு அபிஷேக் வர்ணித்தது சிறப்பு.

அபிஷேக்கின் கணிப்பின் இடையே காப்பாற்றப்பட்டவர்களின் வரிசையையும் கமல் அறிவித்தார் 1) சிபி, 2) அபினய், 3) அக்ஷரா, 4) இமான், 5) தாமரை 6) நிரூப். மீதமிருந்தவர்கள் ஐக்கி மற்றும் இசை. வலிமையான போட்டியாளர் என்று கருதப்படும் நிரூப் கடைசி வரிசைக்கு தள்ளப்பட்டிருப்பது அவருக்கான எச்சரிக்கை மணி.

ஒருவேளை தான் எலிமினேட் ஆகலாம் என்று யூகித்த இசை, இந்தச் சமயத்தில் செய்த ஒரு காரியம் மிகச்சிறப்பானது. அவர் தன்னுடைய நாணயத்தை அபினய்க்கு தந்தது சிறந்த பிராயச்சித்தம். அபினய்யின் தலைவர் பதவியைப் பறித்துக் கொண்ட குற்றவுணர்வை இப்படியாக சற்று தணித்துக் கொண்டார் இசை. ஆனால் இது பிக்பாஸால் பிறகு நிராகரிக்கப்பட்டு விட்டது. (நாணயத்தை எடுத்துக் கொண்டு வந்துடுங்க இசை!).

“எது நடந்தாலும் பதட்டப்படாம இருப்போம்” என்று இந்தச் சமயத்தில் இசைக்கு ஐக்கி சொன்ன உபதேசம் சிறப்பு. கிளம்பப் போகிறோம் என்று உணர்ந்த சமயத்தில் தாமரையிடம் கனிவாக இசை பேசியதும் நல்ல விஷயம். இது முன்பே நிகழ்ந்திருக்கலாம்.

ஓர் இடைவேளைக்குப் பிறகு திரும்பி வந்த கமல், புத்தகப் பரிந்துரையில் இந்த வாரம் அறிமுகப்படுத்திய புத்தகம், ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உளவியலாளரான Viktor Frankl எழுதிய Man's Search for Meaning. நாஜி வதை முகாமில் இவர் கண்டு அனுபவித்த நேரடியான கொடுமைகளையும் அதன் மீதான ஆய்வுக்கருத்துக்களையும் கொண்டு எழுதப்பட்ட நூல் இது.

 Man's Search for Meaning
Man's Search for Meaning

“ஏன் இந்த வாழ்க்கையை வாழணும்” என்கிற சலிப்பான, ஆதாரமான கேள்வி உள்ளுக்குள் எழாத மனிதரே இருக்க முடியாது. ‘இந்த வாழ்க்கையை வாழ்வதற்கான காரணங்களை நாமே உற்பத்தி கொள்ள வேண்டும்; அதைச் செய்ய முடியும்” என்பதைப் பற்றி இந்த நூல் பேசுகிறது. இதற்காக Logotherapy என்கிற வழிமுறையை நூலாசிரியர் பரிந்துரைக்கிறார். இந்த நூல் தமிழில் ‘வாழ்க்கையின் அர்த்தம் – மனிதனின் தேடல்’ என்கிற தலைப்பில் மொழிபெயர்ப்பாகவும் வெளியாகியுள்ளது. ‘உலகின் மிகச்சிறந்த நூல்களில்’ ஒன்றாக இது மதிப்பிடப்பட்டுள்ளது.

‘வாழ்க்கையின் அர்த்தம் – மனிதனின் தேடல்’
‘வாழ்க்கையின் அர்த்தம் – மனிதனின் தேடல்’

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் ‘எவிக்ஷன் அறிவிப்பு’ கார்டை கையில் ஆட்டியபடி “வேற ஏதாவது நல்லதா பேசலாமா?” என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க “அய்யோ.. நீங்க நிறைய பேசுங்க சார். வெளிமுகத்தை பார்க்கறதே இங்க பெரிய விஷயமா இருக்கு” என்று அதை வரவேற்றார் இமான். “எதுக்குங்க.. வம்பு.. அப்புறம் வந்த வேலையைப் பாருங்க’ன்னு பிக்பாஸ் குத்திக்காட்டுவாரு” என்று பிக்பாஸ் குரலில் கமல் செய்த மிமிக்ரி ஜாலியான ஜாங்கிரி. கமல் கார்டை காட்டுவதற்கு முன்பே இசையால் யூகிக்க முடிந்து விட்டது. ‘அப்பா.. எனக்கு ஐஸ்கிரீம்”.. என்று கேட்கும் குழந்தை போல ‘நானு.. நானு..’ என்று அவர் துள்ளிக்குதிக்க, இசை என்னும் பெயர் பொறிக்கப்பட்ட கார்டை காட்டினார் கமல்.

இசை
இசை

ஒருவர் ஒரு முடிவை அறிவதற்கான டென்ஷனுடன் நீண்ட நேரம் தவித்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த முடிவை அறிய நேரும் போது, அந்தத் தருணத்தில் அவருக்குள் ஏற்படுகிற ஆசுவாசம் இருக்கிறதே? மிக மிக அபாரமான உணர்வாக அது இருக்கும். அந்த முடிவு அவருக்கு எதிரானதாக கூட இருக்கலாம். ஆனால் அதுவரை தான் சுமந்திருந்த மனஇறுக்கத்தை இறக்கி வைக்கும் வடிகாலாக அந்தத் தருணம் அமையும் போது உலகமே புது வெளிச்சத்தில் தெரியும். எல்லோருமே நல்லவர்களாகத் தெரிவார்கள். அனைவரையும் கட்டியணைத்த முத்தமிடத் தோன்றும்.

ஏறத்தாழ இசையும் இந்த உணர்வின்பால் ஆட்பட்டார் என்று தோன்றுகிறது. “எல்லோரும் இப்ப வந்து இதமா பேசறீங்க.. இப்படித் தெரிஞ்சிருந்தா முதல் வாரமே நான் போயிருப்பேன்… நான் தெளிவான பொண்ணுதான். இங்க வந்து கொஞ்சம் குழம்பிட்டேன்…” என்று கலவையான உணர்வுகளில் ஆட்பட்ட இசையிடம் “எதையும் மனசுல வெச்சுக்காத..” என்று வருந்தும் குரலில் தாமரை வந்து சொல்ல

“ஒண்ணும் பிரச்சினையில்ல.. ஐ லவ் யூக்கா” என்று இன்முகத்தைக் காட்டினார் இசை. இதை வீட்டில் இருக்கும்போதே இருவரும் செய்திருக்கலாம்.

ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கு காலம் கடந்த பின்னர்தான் ஞானம் வருகிறது. இதில் நமக்கும் கூட ஒரு படிப்பினை இருக்கிறது. அற்பமான சர்ச்சைகளை ஊதி வளர்க்காமல் உடனேயே அதை அணைத்து நட்பையும் மகிழ்ச்சியையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதுதான் நேர்மறையான சிந்தனை.

கிளம்பும் போது சரி, மேடையிலும் சரி, இசை பாடிய கானா பாட்டு, அந்தச் சூழலுக்கு நச்சென்று பொருந்தியது போல தெரிந்தது. வீட்டை விட்டு இசை வெளியேறிய போது முற்றிலும் ஒரு புதிய மனிதரைப் பார்ப்பது போலவே இருந்தது. இசை என்றல்ல, அனைத்து சீசன்களிலும், பெரும்பாலான நேரங்களில் இப்படித்தான் நிகழும். அப்படியொரு மாயத்தைக் கொண்டது பிக்பாஸ் வீடு. ‘ராஜூ அண்ணா. நிரூப் அண்ணா.. சிபியண்ணா..” என்று அனைவரிடமும் சிரிப்போடு விடைபெற்றார் இசை. கிளம்பும் போது தாமரையுடனான மனஸ்தாபங்களை இருவருமே அழித்துக் கொண்டது சிறப்பு. “நீ சீக்கிரம் யார்கூடயும் கலந்துடாத” என்று பிரியங்காவிற்கு ரகசியமாக உபதேசம் சொன்னார் இசை.

கமல்ஹாசனுடன் இசை
கமல்ஹாசனுடன் இசை

“முதல் ஆளா நீங்கதான் உள்ளே போனீங்க..” என்று இசையை மேடையில் வரவேற்றார் கமல். “இனிமேல் உங்க குரல் ஒலிக்கணும். இது முடிவல்ல, ஆரம்பம்” என்று வழக்கமான ஊக்க வார்த்தைகளால் இசையை வாழ்த்தினார் கமல். தொலைக்காட்சி வழியாக தோன்றிய போட்டியாளர்கள் அனைவருமே, வீட்டின் கடைக்குட்டியைப் போல இசையைக் கொஞ்சி வழியனுப்பிய காட்சி அற்புதம். வீட்டிற்குள் இருந்த போதும் இந்தப் பாசத்தை இவர்கள் சற்று அதிகமாக காட்டியிருக்கலாம். தன்னுடைய பயண வீடியோவை தானே ரசித்துப் பார்த்தார் இசை.

இசையை தான் நாமினேட் செய்ததற்காக தாமதமாக வருந்திக் கொண்டிருந்தார் தாமரை. ``அடுத்த வாரமும் மூணு நாமினேஷன் இருக்கும்” என்று இப்போதே எச்சரிக்க ஆரம்பித்து விட்டார் அக்ஷரா. வருண், தாமரை ஆகியவர்களைப் பற்றி சிபியிடம் பேசிக் கொண்டிருந்தார் இமான். “இங்க எனக்கு இருந்த நான்கு நண்பர்கள் சுருதி, மது, இசை, ஐக்கி” என்று நினைவுகூர்ந்து கொண்டிருந்தார் பாவனி.

ஆக. போட்டியாளர்களில் இன்னுமொரு எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஐம்பது நாட்களைக் கடந்து விட்ட நிலையில் இனி உடல்வலிமை சார்ந்த கடுமையான டாஸ்க்குகள் வரலாம். அதைச் சமாளிக்க முடியாத போட்டியாளர்கள் வெளியேறலாம். பிக்பாஸ் விளையாட்டும் ஒரு ரயில் பயணம்தானே?!