Published:Updated:

பிக்பாஸ் 51: பிரியங்கா – தாமரையின் நட்பில் விரிசல்; தலைவரான அபினய்!

பிக்பாஸ்

‘தாமரையக்கா சில குழப்பங்களில் இருக்கிறார். அவர் தலைவரானால் சரியாக இருக்காது” என்று நிராகரிப்பு காரணங்களை பிரியங்கா சொன்ன போது தாமரைக்கு ‘பொல்லா கோபம்’ வந்தது.

பிக்பாஸ் 51: பிரியங்கா – தாமரையின் நட்பில் விரிசல்; தலைவரான அபினய்!

‘தாமரையக்கா சில குழப்பங்களில் இருக்கிறார். அவர் தலைவரானால் சரியாக இருக்காது” என்று நிராகரிப்பு காரணங்களை பிரியங்கா சொன்ன போது தாமரைக்கு ‘பொல்லா கோபம்’ வந்தது.

Published:Updated:
பிக்பாஸ்

(நேற்றைய எபிசோட் தொடர்பான கட்டுரைக்குள் நுழைவதற்கு முன்பு ஒரு முன்குறிப்பு: கோவிட் தொற்று காரணமாக கமல்ஹாசன் மருத்துவமனை சிகிச்சையில் இருக்கிறார் என்கிற தகவல் வந்திருக்கிறது. ‘இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று மக்களுக்கான எச்சரிக்கையை அக்கறையுடன் தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் கமல். ‘ஒரு எபிசோடாக’ இருந்தாலும் பிக்பாஸை இனி யார் தொகுத்து வழங்குவார் என்கிற கேள்வியெல்லாம் இரண்டாம்பட்சம். முழு ஆரோக்கியம் திரும்பி கமல்ஹாசன் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு பிரதானம். சமகாலத்தின் முக்கியமான கலைஞன் என்கிற முறையில் அவர் தமிழ் சமூகத்தின் சொத்து என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.)

எபிசோட் 51-ல் என்ன நடந்தது?

‘பருத்தி வீரன்’ என்கிற தலைப்பில் இந்த வார தலைவர் போட்டி நடந்தது. கடந்த வாரத்தில் நடந்த லக்ஸரி பட்ஜெட்டில் வெற்றி பெற்ற அணியில் இருந்தவர்கள், தலைவர் போட்டிக்குத் தகுதியானவர்களாக இருந்தார்கள். பஸ்ஸர் ஒலித்ததும் ஒவ்வொரு போட்டியாளரும், கார்டன் ஏரியாவில் கொட்டப்பட்டிருக்கும் பஞ்சை ஒரு பெட்டியில் சேர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் சேர்த்த பஞ்சு, எடை போட்டுப் பார்க்கப்படும். இதில் கடைசி இரண்டு நபர்களாக வருபவர்களில் ஒருவரை இதர போட்டியாளர்கள் வாக்கெடுப்பின் மூலம் வெளியே அனுப்புவார்கள். நிரூப் எடை பரிசோதகராம்.

பருத்தி வீரன் டாஸ்க்
பருத்தி வீரன் டாஸ்க்

மொத்தம் ஐந்து சுற்றுகள் நடந்த இந்தப் போட்டியில் தலைவருக்கான அதிர்ஷ்ட காற்று மாறி மாறி அடித்தது. ‘தலைவர் பதவி என்பது நிரந்திரமில்லாதது, பஞ்சு மாதிரி எப்போது வேண்டுமானாலும் காற்றில் பறந்து விடும்’ என்கிற தத்துவத்தை உணர்த்துவதாக எடுத்துக் கொள்ளலாம்.

முதல் சுற்றில் தாமரை மற்றும் அபினய் வரிசையின் கடைசியில் வந்தார்கள். இருவருக்கும் ஏறத்தாழ சமமான வாக்குகள் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த வாக்கெடுப்பின் போது தாமரைக்கும் பிரியங்காவிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ‘தாமரையக்கா சில குழப்பங்களில் இருக்கிறார். அவர் தலைவரானால் சரியாக இருக்காது” என்று நிராகரிப்பு காரணங்களை பிரியங்கா சொன்ன போது தாமரைக்கு ‘பொல்லா கோபம்’ வந்தது.

‘ஏலே.. என்னலே..’ என்று பரஸ்பரம் பிரியத்துடன் பேசிக் கொண்டிருந்த தாமரை – பிரியங்காவிற்கு இடையிலான மோதலின் துவக்கப்புள்ளி, பிரியங்கா தலைவர் போட்டிக்கு நின்ற போது ஆரம்பித்ததாக சொல்லலாம். ‘நிரூப்பிடனான நட்பு உண்மைதானா?” என்று சந்தேகமான கேள்வியை தாமரை வெடுக்கென்று கேட்ட தருணம் முதலே பிரியங்கா அவரை கட்டம் கட்டி விட்டார் என்று தோன்றுகிறது. தனது கோபத்தை உடனே வெளிப்படுத்தி விடுவதுதான் தாமரையின் ஸ்டைல். ஆனால் பிரியங்காவின் கோபம் நீறு பூத்த நெருப்பாக, புகைச்சலாக அவ்வப்போது வெளிப்படும். பின்னதுதான் ஆபத்தானது.

‘கண்ணாடி டாஸ்க்’ நடந்த போதிலும், தாமரையின் மீதான பிரியங்காவின் மென்கோபம் வெளிப்பட்டது. இது போதாது என்று, “ஒருத்தர் கிட்ட அவ்வளவு சீக்கிரத்தில் நெருங்கிடாதீங்க” என்று இசை வெளியேறும் போது பிரியங்காவின் காதில் சொல்லி விட்டுச் சென்றார். அவர் குறிப்பிட்டது தாமரையாக இருக்கலாம். போதாக்குறைக்கு பிரியங்காவின் ஞானகுருவான அபிஷேக்கும் வீட்டிற்குள் திரும்பியிருக்கிறார். அவர் என்ன உபதேசத்தை தந்தார் என தெரியாது. (அபிஷேக் தன் நாமினேஷனில் தாமரையை குறிப்பிட்டார்).

தாமரை
தாமரை

தலைவர் போட்டி நடந்து முடிந்த பிறகும் கூட வீட்டிற்குள் இருவருக்குமான வாக்குவாதம் நீடித்தது. ‘தனக்குத் தகுதியில்லை’ என்கிற பிரியங்காவின் ஸ்டேட்மெண்ட் தாமரையை கோபப்படுத்தியது. ‘அப்ப சமைச்சு, வீட்டைப் பெருக்கி வேலை செய்யறதுக்கு மட்டும்தான் நானா?” என்று தாமரை நினைக்கிறார். நிரூப்பும் அக்ஷராவும் தாமரையை ஏத்தி விடும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். தாமரையின் வழக்கறிஞரான ராஜூ, இந்தச் சமயத்தில் ஏனோ மெளனமாக இருந்தார். ஏனெனில் எதிர்தரப்பில் இருப்பது பிரியங்கா. சாதாரண போட்டியாளராக இருந்தால் அவர் நிச்சயம் களத்தில் குதித்திருப்பார்.

‘ஹப்பாடா!. சாப்பாடு இன்னிக்கு காலியாயிடுச்சு’ என்று வெற்றுப் பானையை பாவனி காட்டினார். சோறு மிகாமல் காலியாவது என்பது பெரும்பாலான குடும்பத்தலைவிகளுக்கு நிம்மதிப்பெருமூச்சை ஏற்படுத்தும் விஷயம். ஏனெனில் பெரும்பாலும் மிகுந்து போன உணவை அவர்கள்தான் சாப்பிட்டாக வேண்டும். பாவனி வெற்றுப்பானையை காட்டிய போது, அக்ஷராவை நோக்கி தாமரை ஒரு ‘ரியாக்ஷன்’ தந்தாராம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் தாமரை’ என்னும் பழமொழிக்கு ஏற்ப, இந்த ரியாக்ஷன் பிரியங்காவிற்குள் பல கற்பனைகளை உற்பத்தி செய்தது போல. இதனாலும் சண்டை நீடித்தது.

ஆனால் ஒன்றை கவனிக்க வேண்டும். தாமரையுடன் பிரியங்கா மோதலில் ஈடுபடுவது போல் மேற்பார்வைக்கு தெரிந்தாலும் “தாமரையே இந்த வீட்டில் அனைத்து வேலையும் செய்கிறாரே, மற்றவர்கள் எல்லாம் தாமரையின் உழைப்பைச் சுரண்டுகிறார்களே’ என்கிற கரிசனம் பிரியங்காவிடம் இருப்பதைப் போல் தெரிகிறது. தாமரையின் முன்கோபமும் தவறான புரிதல்களும் இந்த விளையாட்டில் அவருக்கு எதிராக அமைந்து விடும் என்பதை பிரியங்கா மறைமுகமாக எச்சரிப்பதைப் போல் படுகிறது.

ஓகே…இப்போது தலைவர் போட்டிக்குத் திரும்புவோம். முதல் சுற்றில் அபினய்க்கும் தாமரைக்கும் ஏறத்தாழ சமமான வாக்குகள் கிடைத்தாலும் இந்தச் சச்சரவு காரணமாக நிரூப் தனது வாக்கை மாற்றி அபினய்க்கு அளித்ததால் தாமரை வெளியேற்றப்பட்டார்.

இரண்டாவது சுற்றில் வருணிற்கும் இமானிற்கும் இடையே வாக்கெடுப்பு நடந்தது. துவக்கத்தில் பெரும்பாலான வாக்குகளைப் பெற்று இமான் முன்னணியில் இருந்தார். ஆனால் அபிஷேக் புகுந்து குட்டையைக் குழப்பியதால் நிலைமை அப்படியே தலைகீழானது. “விளையாட்டு சுவாரசியம் முக்கியமா.. தலைவரா வீட்டை நிர்வகிக்கறது முக்கியமா?” என்று அபிஷேக்கிடம் கடுமையான வாக்குவாதம் செய்தார் இமான். இந்தச் சுற்றில் இமான் வெளியேறினார். ‘Rejected’ என்கிற வார்த்தையை ‘Received’ என்று பாசிட்டிவ்வாக மாற்றிக் கொண்டு ‘மக்களே.. நீங்கதான் இதற்கு பதில் சொல்லணும்” என்று காமிராவின் முன் இமான் நீதி கேட்டிருக்கிறார்.

மூன்றாவது சுற்றில் வருணிற்கும் அக்ஷராவிற்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதில் அன்னபோஸ்ட்டாக (unopposed) அக்ஷரா ஜெயித்தார். “அம்மணி தலைவரானா.. என்ன கிழிக்கறாங்கன்னு நானும் பார்க்கறேன்’ என்கிற தொனியுடன் பாவனி வாக்களித்தார். நான்காவது சுற்றில் அதிர்ஷ்டக்காற்று மாறி ராஜூவிற்கு அடித்தது. அபிஷேக்கைத் தவிர அனைவரும் ராஜூவிற்கு முத்திரை குத்தினார்கள். கடைசியாக நடந்த ஐந்தாவது சுற்றில் அபினய்க்கும் ராஜூவிற்கும் இடையில் போட்டி. இதில் ராஜூ வேண்டுமென்றே விட்டுக் கொடுத்து விட்டாரா என்று தெரியவில்லை. குறைந்த அளவு பஞ்சை மட்டுமே எடுத்து வந்தார். அபினய் கொண்டு வந்த பஞ்சின் அதிக எடை இருந்ததால் அவரே வெற்றியாளர்; இந்த வாரத்தின் தலைவர்.

அபினய்
அபினய்

“நாணயத்தின் சக்தியைப் பயன்படுத்தி யாராவது தலைவர் பதவியைப் பெற விரும்புகிறீர்களா?” என்று நிரூப் மற்றும் பாவனியை பிக்பாஸ் கேட்ட போது “அடப்பாவிகளா.. போன முறை மாதிரி பிடுங்கிடாதீங்கடா:” என்று அபினய்யின் மைண்ட் வாய்ஸ் அலறியிருக்கும். இருவருமே ‘பயன்படுத்தவில்லை’ என்று சொன்னதால் நிம்மதிப் பெருமூச்சை விட்டார் அபினய். ஆக.. எப்போதோ எலிமினேட் ஆகியிருக்க வேண்டிய அபினய், மெல்ல மெல்ல முன்னணி போட்டியாளராக நகர்ந்து கொண்டிருக்கிறார். (பெண் பார்வையாளர்களின் ஆதரவு நிறைய இருக்கும் போலிருக்கிறது. என்ன இருந்தாலும் ஜெமினி கணேசனின் பேரனாயிற்றே?!).

திங்கட்கிழமை என்பதால் நாமினேஷன் சடங்கு துவங்கியது. ‘இருவரை’ நாமினேட் செய்தால் போதும் என்று எதிர்பார்ப்பை மாற்றியமைத்தார் பிக்பாஸ். அபினய் தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. வைல்ட் கார்டு வாய்ப்பில் திரும்பிய அபிஷேக்கிற்கு இது முதல் வாரம் என்பதால் அவரையும் நாமினேட் செய்ய முடியாது. (வட போச்சே!)

தாமரை நாமினேட் செய்ய வரும் போது அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘பிரியங்கா பேசினது மனசுக்கு கஷ்டமா இருக்கு” என்பது அவரின் அழுகைக்கு காரணம். ‘இது ஒரு கேம். இதை ஆடத்தானே வந்தீங்க. உங்க மனசுக்கு தோணினதை பேசுங்க’ என்று பிக்பாஸ் ஆறுதல் அளித்த பின், கண்களைத் துடைத்துக் கொண்ட தாமரை, பாவனி மற்றும் பிரியங்காவை நாமினேட் செய்தார். (என்னா வில்லத்தனம்?!). ஆனால் பிரியங்கா தாமரையை நாமினேட் செய்யவில்லை. (பகை வெளிப்படையாக தெரிஞ்சுடக்கூடாது!).

ராஜூ
ராஜூ

நாமினேஷன் சமயத்தில் ராஜூ சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது. “பிரியங்கா என் கிட்ட அழுதுட்டாங்க. ஒருத்தர் என் கிட்ட வந்து அழுதா அவங்களை எதிர்த்து என்னால போட்டியிட முடியாது.” என்று ‘அன்பான’ காரணத்தைச் சொல்லி பிரியங்காவை அவர் நாமினேட் செய்தது, ஒரு கச்சிதமான வாழைப்பழ ஊசி.

நாமினேஷன் முடிவுகள் வெளிவந்தன. இந்த வார எவிக்ஷன் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள்: பிரியங்கா, தாமரை, நிரூப், இமான், பாவனி மற்றும் ஐக்கி.

``பாவிகளே.. மனம் திரும்புங்கள்” என்கிற தொனியில் அடுத்த அறிவிப்பை வெளியிட்டார் பிக்பாஸ். “50வது நாள் ஆகியும் வேக்அப் பாடலுக்கு நடனம் ஆடாத சோம்பேறிகள் இன்னமும் இருக்கிறார்கள். கலைத்துறையில் இருந்தும் நீங்கள் இப்படி கமுக்கமாக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும். உங்களுக்காக ஒரு டான்ஸ் மாரத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வந்து ஒழுங்காக ஆடித் தொலையுங்கள். சிறப்பாக நடனம் ஆடினால் பாட்டு தொடர்ந்து ஒலிக்கும். இல்லையென்றால் நான் கத்தி வெறுப்பேற்றுவேன்” என்று பிக்பாஸ் ஜாலியாக வெளியிட்ட அறிவிப்பைக் கேட்டதும் மக்கள் குஷியானார்கள்.

‘எனக்கு உன்மேலதான்’ என்கிற பாடலுக்கு ராஜூவும் ஐக்கியும் ஆடினார்கள். ஐக்கி சும்மாவே ஆடுவார். ராஜூ அவருக்கு நிகராக மல்லுக்கட்டினார். ‘பாக்கு வெத்தலை மாத்தி’ என்கிற பாடலுக்கு பாவனியும் இமானும் ஆடினார்கள். (என்னவொரு ஜோடி?!). பாவனி ஓரளவிற்கு சமாளித்தாலும் இமான் அண்ணாச்சி, பாக்யராஜ் ஸ்டைலில் மெல்ல அசைந்து கொண்டிருந்தார். ‘ராசாத்தி.. ராசாத்தி’ என்கிற பாடலுக்கு அபிஷேக்கும் அபினய்யும் நன்கு குத்தி ஆடி ஆச்சரியப்படுத்தினார்கள். நடனமாடுவதில் அபிஷேக்கிடம் ஒரு நல்ல ப்ளோ இருக்கிறது.

நடனம் ஆடாத சோம்பேறிகளில் நிரூப்பும் ஒருவர். எனவே அவர் நடனம் ஆட வந்தபோது திருஷ்டி பட்டு விட்டது போல. மேடையேறும் போது கால் தடுக்கி அவர் கீழே விழ, கட்டை விரலில் நல்ல அடி. இதைக் கண்டு அனைவருமே பதறி விட்டார்கள். குறிப்பாக பாவனியின் கண்களில் மழை. (பாவனி அழுவுது சார்..). மருத்துவ முதல் உதவிக்குப் பிறகு “ஆடத் தயார்” என்று நிரூப் கெத்தாக அறிவித்து பிரியங்காவுடன் இணைந்து ஆடினார். பாடல் 'எனிமி' யின் டம் டம் பாடல்.

பிக்பாஸ்
பிக்பாஸ்

ஆக.. பிரியங்கா – தாமரையின் நட்பில் விரிசல் ஏற்பட்டிருப்பது உண்மை. (இருவரின் பெயரையும் கவனியுங்கள். இந்தியாவின் இரண்டு தேசிய அரசியல் கட்சி தொடர்பான அடையாளங்கள் அதில் இருப்பது தெரியும். எனில் அவர்கள் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? பெயர் ராசி போல...).