Published:Updated:

பிக்பாஸ் 52: வார்டன் சிபியை சம்பவம் செய்த `சேட்டை’ பிரியங்கா; ஆட்டிவைப்பாரா அமீர்?! நடந்ததென்ன?

பிரியங்கா

ராஜூ தமிழ் ஆசிரியராம். மிகவும் அமைதியான குணம் கொண்ட இவர், மனைவியைப் பிரிந்திருக்கும் சோகத்தில் அடிக்கடி கொலைவெறியாகி விடுவாராம்.

பிக்பாஸ் 52: வார்டன் சிபியை சம்பவம் செய்த `சேட்டை’ பிரியங்கா; ஆட்டிவைப்பாரா அமீர்?! நடந்ததென்ன?

ராஜூ தமிழ் ஆசிரியராம். மிகவும் அமைதியான குணம் கொண்ட இவர், மனைவியைப் பிரிந்திருக்கும் சோகத்தில் அடிக்கடி கொலைவெறியாகி விடுவாராம்.

Published:Updated:
பிரியங்கா

பிக்பாஸ் வீடு இருக்கும் சாலையில், பொதுமக்களின் நலன் கருதி இப்படியொரு அறிவிப்பு பலகையை மாட்டி வைக்கலாம். ‘ஜாக்கிரதையாக நடமாடுங்கள். உங்களை வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே பிடித்துக்கொண்டு செல்ல வாய்ப்புண்டு. மாட்டிக் கொள்ளாமல் கவனமாக இருங்கள்’. ஆம், அபிஷேக்கைத் தொடர்ந்து அமீர் என்பவர் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே வந்திருக்கிறார். டான்ஸ் மாஸ்டர்.

‘திருப்பதியில் ஜாங்கிரி பிரசாதம்’ என்கிற மாதிரி, இந்த வைல்ட் கார்ட் என்ட்ரிக்கு பிக்பாஸ் சொன்ன காரணம் இருக்கிறதே?!. ‘டான்ஸ் மாரத்தான்’ என்று ஒன்றை அவர் நடத்தும் போதே மைல்டாக டவுட் வந்தது. ‘போட்டியாளர்களுக்கு நடனம் ஆடத் தெரியவில்லை’ என்கிற காரணத்தைச் சுட்டிக் காட்டி ‘உங்களுக்கு நடனம் சொல்லித்தர ஒருவர் வருவார்’ என்று அமீரை உள்ளே அழைத்து வந்து விட்டார்கள். அங்குள்ள போட்டியாளர்களுக்கு சமைக்கக் கூடத்தான் தெரியவில்லை. அதற்காக செஃப் தாமுவையோ அல்லது வெங்கடேஷ் பட்-டையோவா அடுத்து உள்ளே கொண்டு வருவார்களா?

‘கனா காணும் காலங்கள்’ என்கிற இந்த வார லக்ஸரி டாஸ்க் ஏறத்தாழ சுவாரசியமாக இருந்தது. பல இடங்களில் சிபியைப் போலவே நமக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அமீர்
அமீர்

எபிசோட் 52-ல் என்ன நடந்தது?

‘டான்ஸ் மாரத்தான்’ தொடர்ந்தது. அடுத்து வந்த வருணும் அக்ஷராவும் ‘மாச்சோ. என்னாச்சோ’ என்கிற பாடலுக்கு நன்றாகவே ஆடினார்கள். குடை ராட்டினம் போல அக்ஷராவை இழுத்து சுற்றி சுற்றி ரகளையாக ஆடினார் வருண். அடுத்ததாக சிபியும் தாமரையும் வந்து ‘சரிகமபதநி’ பாடலுக்கு ஆடினார்கள். நவீன உடையில் தாமரையை அடையாளமே தெரியவில்லை.

டான்ஸ் டாஸ்க் முடிந்ததும் “ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு நடனம் ஆடவே தெரியவில்லை. உங்களுக்கு ஒரு நடன ஆசிரியர் தேவை’ என்று பிக்பாஸ் அறிவித்ததும் மக்கள் உற்சாகமாக கைத்தட்டினார்கள். யாரோ ஒருவர் சும்மா நடனம் கற்றுத் தந்து விட்டு சென்று விடுவார் என்று மக்கள் நினைத்திருக்கலாம். ‘சோகாமா’ என்கிற பாடல் ஒலிக்க, முகமூடி அணிந்து கொண்டு ஒருவர் பிரபுதேவா பாணியில் நடனமாடிக் கொண்டு உள்ளே வந்தார். விஜய்டிவி தயாரிப்பு என்பதால் பிரியங்கா உடனே அவரைக் கண்டுபிடித்து விட்டார். ‘வைல்ட் கார்ட் என்ட்ரியாம்’. மக்களுக்கு உள்ளே ஜெர்க் ஆகியிருந்தாலும் புன்னகையுடன் வரவேற்றார்கள்.

“இங்க இருக்கறவங்க பேரையெல்லாம் சொல்லுங்க.. பார்க்கலாம்..” என்று அமீரை பிரியங்கா சோதிக்க, பாவனியை ‘பவானி’ என்று சொன்னதற்காகவே ஆர்மிக்காரர்கள் அவருக்கு எதிராக இரண்டு வாக்கு அளிக்கலாம்.

இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை அறிவித்தார் பிக்பாஸ். ‘கனா காணும் காலங்கள்’ என்பது அதன் தலைப்பு. பிக்பாஸ் வீடு ஒரு போர் அடிக்கிற .. மன்னிக்க.. போர்டிங் ஸ்கூலாக மாறுமாம். இதற்காக கண்டிப்பான விதிமுறைகளும் தண்டனைகளும் அறிவிக்கப்பட்டன. சிபி கண்டிப்பான வார்டன். அபிஷேக், பொது அறிவு மற்றும் பண்பு கட்டமைப்பு ஆசிரியராம். (ஞாபகமறதி கொண்ட காரெக்ட்டராக அபிஷேக் சொல்லப்பட்டாலும் அதைப் போல் ஏதும் அவர் செய்யவில்லை). ராஜூ தமிழ் ஆசிரியராம். மிகவும் அமைதியான குணம் கொண்ட இவர், மனைவியைப் பிரிந்திருக்கும் சோகத்தில் அடிக்கடி கொலைவெறியாகி விடுவாராம். அமீர், இசை மற்றும் நடன ஆசிரியர். இவருடைய காரெக்ட்டர் சினிமாப் பைத்தியம். எனவே சினிமா கதாபாத்திரங்களின் பெயர்களை வைத்து மாணவர்களை அழைக்க வேண்டும். (ஆனால் இவரும் அதைச் செய்ததது போல் தெரியவில்லை).

கான காணும் காலங்கள் டாஸ்க்
கான காணும் காலங்கள் டாஸ்க்

மற்றவர்கள் எல்லாம் பள்ளி மாணவர்களாம். ஆம், மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள், பிரியங்கா, இமான், தாமரை ஆகியோர் உட்பட மாணவர்கள். அக்ஷரா மாணவராக இருந்தாலும் உடற்பயிற்சி கண்காணிப்பாளராகவும் செயல்படுவார். இவர்கள் வீட்டுக்கு அடங்காமல் சேட்டை செய்பவர்களாக இருந்ததால் அவர்களின் பெற்றோர்கள் இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்களாம். (பிக்பாஸ் வீட்டிற்கு பொருத்தமான கேரக்ட்டர் ஸ்கெட்ச் இது).

இந்த டாஸ்க்கின் போது நிரூப்பின் அதிரடி பாணியை பிரியங்கா கையில் எடுத்துக் கொண்டார் போலிருக்கிறது. பிக்பாஸ் வீட்டின் காமிராக்கள் முழுவதும் தன்னை நோக்கியே இருக்குமாறு ஓவர் சேட்டைகளை அவர் செய்தார். ஆனால் அதற்கான லாஜிக் அறிவிப்பில் இருந்தது அவருக்கு செளகரியமாகப் போயிற்று. அது கண்டிப்பான பள்ளியாக இருந்தாலும்கூட மாணவர்கள் இங்கு வந்தும் சேட்டைகளை நிறுத்தாத அராத்து மாணவர்களாக இருப்பார்களாம். இந்த லாஜிக்கை பிரியங்கா சரியாக உபயோகித்துக் கொண்டார்.

இந்த டாஸ்க் பற்றிய அறிவிப்பு முடிந்ததும், நள்ளிரவில் பிரியங்காவும் தாமரையும் நின்று பேசிக் கொண்டிருக்க, “பழம் விட்டுட்டீங்களா?” என்று கேட்டபடி வந்தார் நிரூப். “பழம் விடற அளவிற்கெல்லாம் இங்க சீன் நடக்கலை” என்ற பிரியங்கா, தாமரைக்கு முத்தம் தந்து நட்பைப் புதுப்பித்துக் கொண்டார். (ஆக.. அரசியல்வாதிகள் வெளிப்பார்வைக்கு அடித்துக் கொண்டாலும் அண்டர்கிரவுண்டில் டீலிங் வைத்துக் கொள்கிறார்கள் என்கிற லாஜிக்கும் பொருந்துகிறது). ‘ரெண்டு விஷயம்” என்று ஆரம்பித்து எதையோ நிரூப் சொல்ல, அதற்காக F வசை கொண்டு கடுமையாக கோபித்துக் கொண்ட பிரியங்கா, “உன் கேம் நல்லாயிருக்கு. ஆனா என் கிட்ட ஆடாத” என்றார். (இவங்க ரெண்டு பேர் கேரக்ட்டரையும் புரிஞ்சுக்கவே முடியலையேப்பா!).

விடிந்தது. ‘ஈனா. மீனா டீகா’ என்கிற துள்ளலான பாடல் ஒலிக்க, டான்ஸ் மாஸ்டர் அமீரைப் பின்பற்றி மக்கள் ஆட முயன்றார்கள். பள்ளி டாஸ்க் ஆரம்பித்தது. “அந்தப் பையன் செமயா இருக்கான்ல” என்று அமீரை நோக்கி ஐக்கி கிசுகிசுக்க, ‘எனக்கு செட் ஆக மாட்டான்” என்றார் பிரியங்கா. அக்ஷரா காலையில் உடற்பயிற்சி செய்ய சொல்லித் தரும் போதே தன் சேட்டையை ஆரம்பித்து விட்டார் பிரியங்கா. “எனக்கு முழங்கால் வலி” என்று அவர் செய்ய மறுக்க “இது கைல செய்யற பயிற்சிதானே?” என்று லாஜிக் பேசினார் அக்ஷரா. பின்னர் வார்டனிடம் இது பற்றி அவர் புகார் சொல்ல “போய் பத்து நிமிடம் மெடிடேஷன் பண்ணிட்டு வாங்க” என்கிற அதிபயங்கர தண்டனையை பிரியங்காவிற்கு தந்தார், கண்டிப்பான வார்டனான சிபி. “இதெல்லாம் ஒரு தண்டனையா? அவ போய் நல்லா தூங்கப் போறா” என்று முனகினார் அக்ஷரா. பிரியங்காவிற்கு அளிக்கப்பட்ட தண்டனையை கண்காணிக்க ஐக்கி அனுப்பப்பட்டார்.

மாணவர்களுக்கு காலையுணவு வந்தது. (ஹப்பாடா! சமைக்க வேணாம்!). ராஜூ வருகைப் பதிவேட்டை எடுக்க “ஆங்கிலத்தில் பேசாதீங்க. பேசினா தண்டனை” என்று சொன்ன சிபி, அடுத்த நிமிடமே ‘லைனா வந்து நில்லுங்க” என்றார். இமான் செய்த ஒரு சேட்டைக்காக “முட்டிக்கால் போடு” என்று ராஜூ தண்டனை கொடுக்க, “முட்டி வலி சார்” என்று அண்ணாச்சியும் பிரியங்காவின் பாணியைப் பின்ற்றினார். “பதினாறு வயசில முட்டி வலி வர்ற மாதிரி என்ன பண்ணினே?” என்று ராஜூ கேட்டது அநியாயமான குறும்பு.

போட்டியாளர்கள்
போட்டியாளர்கள்

‘பாய்ஸ்’ படத்தில் வரும் ‘தப்பு.. தப்பு..’ பாடலை பிரியங்கா தலைமையில் அனைவரும் கோரஸாக பாடிக் கொண்டிருந்தார்கள். சிபி நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாததால், பிரியங்காவை ‘வெளியே போங்க” என்னும் தண்டனையை சிபி தந்தார். போகிற போக்கில் பிரியங்கா அங்கிருந்த சாக்லேட்டுக்களை தூக்கிக் கொண்டு போனார்.

நிருப், இமான், ஐக்கி, அபினய் ஆகியோர் மட்டும் சமர்த்து மாணவர்களாக உள்ளேயே இருந்தார்கள். “வார்டன். எங்களுக்கு ஸ்வீட் செஞ்சு கொடுத்தாதான் உள்ளே வருவோம்” என்று அடம்பிடித்தார் பிரியங்கா. “சினிமாப்பாடல் பாடக்கூடாது” என்று சிபி கண்டிப்பான முறையில் சொல்ல ‘பிரைவேட் ஆல்பம்’ பாடலாமா?,” என்று கேட்டு ஏழரையைக் கூட்டினார்கள். ‘ஒருவன் ஒருவன் முதலாளி..’பாடலைப் பாட ஆரம்பித்து தோப்புக்கரணம் போடும் தண்டனையைப் பெற்றார் பிரியங்கா.

சிபியை வாக்குமூல அறைக்கு கூப்பிட்ட பிக்பாஸ், “டாஸ்க்லாம் எப்படி போயிட்டிருக்கு?” என்று விசாரிக்க அதற்கு சிபி கோளாறாக பதில் சொன்ன போது “நீங்கதானே வார்டன்?” என்று கேட்டு சிபியை காண்டாக்கினார் பிக்பாஸ். “ஐக்கியும் அக்ஷராவும் தங்கள் தலைமுடியை கறுப்பாக்க வேண்டுமாம். ஸ்டைலான டை எல்லாம் இங்கு அனுமதி கிடையாதாம்”. இந்த உத்தரவைப் பெற்றுக் கொண்டு வெளியேறினார் சிபி. (அப்ப நிரூப் மட்டும் குடுமியோட சுத்தலாமா?.. ஓ.. கேன்சர் இன்ஸ்ட்டியூட்!).

ஐக்கி, அக்ஷரா
ஐக்கி, அக்ஷரா

ஐக்கியை கறுப்பு நிற முடியில் பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் இன்று நிறைவேறியது. அக்ஷராவும் கறுப்பு நிற சிகையலங்காரத்தில் நன்றாகவே இருந்தார். ஆனால் நிறம் மாறியதற்காக மூக்கைச் சிந்திக் கொண்டே வந்தார். “தலையை நல்லா படிச்சு வாருங்க” என்று வருணை வகுப்பிற்கு வெளியே அனுப்பினார் சிபி. தாடியை டிரிம் செய்து விட்டு தலைமுடியை படிய வாரி வந்த வருணை முதலில் பார்க்க காமெடியாக இருந்தாலும் பிறகு ‘சமர்த்துப்’ பிள்ளையாகவே தோன்றினார்.

பொதுஅறிவு மற்றும் பண்பு கட்டமைப்பு ஆசிரியருக்கு பல மாதங்களாக சம்பளம் தரவில்லை போலிருக்கிறது. எனவே அவர் மாணவர்களுக்கு ஆதரவாக இயங்கினார். “இந்தப் பிள்ளைகள் படும் கொடுமைகளைப் பார்க்க சகிக்கலை” என்று அவர் யூனியன் லீடர் மாதிரி பேச “ஆமாம். சார். அந்த வார்டன் வாயை எப்படியாவது அடைங்க சார். ஓவரா தண்டனை கொடுக்கறாரு. இல்லைன்னா நாங்க ஸ்ட்ரைக் பண்ணுவோம்” என்று சேட்டை மாணவர்கள் புகார் தெரிவித்தார்கள்.

தமிழ் ஆசிரியர் லுக்கில் ராஜூ க்யூட்டாக இருந்தார். “என்ன பிரச்சினை இங்கே?” என்றபடி அவர் வர “ஃபீஸ் வாங்கறீங்கள்ல.. ஏன் எங்களைத் திட்டறீங்க” என்று நியாயம் கேட்டுக் கொண்டிருந்தார் பிரியங்கா.

பிரியங்கா , அபிஷேக், பாவனி
பிரியங்கா , அபிஷேக், பாவனி

பிரியங்கா செய்யும் சேட்டைகளைக் கண்டு பல சமயங்களில் ராஜூவால் சிரிப்பை அடக்க முடியாமல் போக, அதைக் கண்டு வார்டனும் சிரித்துக் கொண்டிருந்தார். இதற்காக பிரியங்கா ஜோக் எதையும் சொல்லத் தேவையில்லை. ‘கபகப’வென்று சிரிக்க ஆரம்பித்து விட்டு சாதாரணமாக ஒன்றைச் சொன்னாலே போதும். “இந்தப் பையனைப் பாருங்க சார்.. ‘ஏனோ தேடுது உள்ளம்’ ன்னு காதல் வரில்லாம்’ எழுதி வெச்சிருக்கான்” என்றார் ராஜூ. அவர் ‘பையன்’ என்று குறிப்பிட்டது ஆறரை அடி உயரத்தில் இருக்கும் நிரூப்பை. (இது அடுக்குமா?!). இதைக் கேட்டு சிபியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

கதவருகில் நின்று எதையோ சொரண்டிக் கொண்ட இமானை அழைத்து “வெளியே ஒருத்தன் உக்காந்திருக்கான். பார். அவன் செவுள்ளேயே சப்புன்னு ஒரு அறை அறைஞ்சுட்டு வா” என்று ஏவி விட்டார் ராஜூ. அப்படி அமர்ந்திருந்தது அபிஷேக் என்பதை அறிந்ததும் நமக்கே அப்படி ஒரு குஷி வந்தது. இமான் அறையச் சென்ற காட்சியைப் பார்த்து தமிழ் ஆசிரியரும் வார்டனும் மறைந்திருந்து பார்த்து சிரித்தார்கள். (கண்டிப்பான ஸ்கூலாம். வெளங்கிடும்!).

பிரியங்கா
பிரியங்கா

‘ஒரு மாணவனின் மனதில் நஞ்சை விதைத்து என்னை அடிக்க அனுப்பியிருக்கிறாய்” என்று ராஜூவை நோக்கி அபிஷேக் வசனம் பேச “கொண்டே புடுவேன். இவனுங்களை மேய்க்கறதுக்குள்ள நாங்க படற பாடு என்ன. நீ பாட்டுக்கு இங்க உக்காந்திக்கிட்டு பிரியங்காவை கூப்பிடு.. நார்த்தங்காவை கூப்பிடுன்னு மாணவர்களை வேலை வாங்கிட்டு இருக்கியா. உனக்கு ஞாபக மறதி இருக்குன்றதையே நீ அடிக்கடி மறந்துடறே” என்று பதிலுக்கு அடிக்க வந்தார் ராஜூ.

தலையில் கறுப்பு நிற டையை பூசிக் கொண்டு முகத்தை சுளித்துக் கொண்டு வந்த அக்ஷராவைப் பார்த்து “யார் இந்த நியூ அட்மிஷன்?” என்று ராஜூ சைலண்ட்டாக கேட்டது ஒரு நல்ல கமெண்ட். தனது கிளாஸ்மேட்டான தாமரையைப் பார்த்து ‘தாம்ஸ்.. தாம்ஸ்’.. என்று இமான் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார். “வயலுக்கு வந்தாயா’ வசனத்தை அவர் பாடலாக பாடும் போது ‘மானங்கெட்டவனே’ என்று ராஜூவை நோக்கி அழுத்திச் சொன்னது சுவாரஸ்யம். இதற்காக அண்ணாச்சிக்கும் தாமரைக்கும் மேஜையில் ஏறி நிற்கும் தண்டனை கிடைத்தது. சோளக்காட்டு பொம்மைகள் போல நின்று கொண்டிருந்தார்கள்.

‘ஜல்சா பண்ணுங்கடா’ என்னும் பாடலை ஹோம்ஒர்க் ஆக பிரியங்கா எழுதி வைத்திருந்ததைப் பார்த்த வார்டன் சிபி ரொம்பவும் காண்டாகி, அதை கிழித்துப் போட்டு விட்டு ஒரு தண்டனையைக் கொடுத்தார். இரண்டு கைகளிலும் தேநீர்க்கோப்பையை பிடித்துக் கொண்டு கைகளை விரித்த நிலையில் இருக்க வேண்டும். சிறிது நேரம் நின்ற பிரியங்கா “இதெல்லாம் என்னால் செய்ய முடியாது” என்று பொதேர் என்று போட்டு விட்டு செல்ல, சிபிக்கு உண்மையாகவே கோபம் வந்தது. நிஜ வார்டனாக மாறி “வெளில போங்க.. உள்ளேயே வரக்கூடாது” என்று தண்டனை கொடுத்தார்.

பிறகு பிரியங்கா செய்த சேட்டைகளின் பட்டியலை அவர் வாசிக்க “நீங்களே கூப்பிட்டாலும் உள்ளே வர மாட்டேன்” என்று அழிச்சாட்டியம் செய்து வெளியே அமர்ந்து கொண்டார் பிரியங்கா. லக்ஸரி பட்ஜெட் முடிந்ததும் பிரியங்கா தன்னைக் கட்டம் கட்டி விடுவார் என்று அச்சப்பட்டாரோ. என்னவோ “நான் உங்களை மன்னிச்சுட்டேன். ஆனா நீங்க ஒரு மன்னிப்பு கடிதம் தந்துட்டு உள்ளே வாங்க” என்று சிபி பணிவாக சொல்ல “நீ மன்னிப்பு கடிதம் கொடுய்யா.” என்று பதிலுக்கு எகிறினார் மாணவி பிரியங்கா.

இமான், தாமரை
இமான், தாமரை

“குழந்தைகளை இப்படி வதைக்கலாமா?” என்று பிரியங்கா கேட்ட போது ‘யாரு குழந்தைங்க?’ என்று சிபி கேட்டது நல்ல கவுன்ட்டர். இதைப் போலவே “நீங்க கம்பு வெச்சு அதட்டறது எனக்குப் பிடிக்கலை” என்று பிரியங்கா அடம்பிடித்த போது “உன் கைல புக்கு இருக்கற மாதிரி.. எனக்கு பிரம்பு. இதை வெச்சுக்க சொல்லித்தான் கொடுத்திருக்காங்க” என்று சிபி சொன்னது நல்ல லாஜிக். டாஸ்க்கிற்கு வெளியே சென்று பிரியங்காவிடம் பேச சிபி சமயங்களில் முயன்றாலும் பிரியங்கா தனது சேட்டையை நிறுத்தவில்லை. “இவ்வாறுதான் செய்யப் போகிறேன்” என்பதை அவர் முன்பே முடிவு செய்து விட்டார் போல.

நாளின் இறுதியில் ‘சமர்த்துப் பிள்ளை’ என்கிற பேட்ஜ் அபினய்க்கு கிடைத்தது. பிரியங்காவிற்கு தண்டனை கிடைத்தது கூட ஓகே. ஆனால் பாவனியும் ஏன் வெளியே அனுப்பப்பட்டார் என்று தெரியவில்லை. சேட்டை செய்கிற முகமா அது?! அபிஷேக்கும் அமீரும் போதுமான பங்களிப்பைத் தந்தது போல் தெரியவில்லை.

மறுபடியும் பிக்பாஸ் அழைத்து “சிபி. இது கண்டிப்பான பள்ளி. நீங்கள் சரியாக செயல்படவில்லை” என்று ஒருவேளை சொன்னால் “ நீயே கட்டி மாரடி. நான் போறேன்” என்று வார்டன் தன் வேலையை ரிசைன் செய்தாலும் செய்து விடுவார் போலிருக்கிறது. பிள்ளைகளின் சேட்டை அப்படியிருக்கிறது.