Published:Updated:

பிக்பாஸ் 53 : கோபத்தில் வெடித்த அக்ஷரா! விட்டுக்கொடுக்காத சிபி!

பிக்பாஸ்

சரியான நேரத்தில் தயார் ஆகாததற்காக அக்ஷராவிற்கு தண்டனை வழங்க முடிவு செய்தார் சிபி.

பிக்பாஸ் 53 : கோபத்தில் வெடித்த அக்ஷரா! விட்டுக்கொடுக்காத சிபி!

சரியான நேரத்தில் தயார் ஆகாததற்காக அக்ஷராவிற்கு தண்டனை வழங்க முடிவு செய்தார் சிபி.

Published:Updated:
பிக்பாஸ்

பிக்பாஸ் என்கிற போர்டிங் ஸ்கூலில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இங்கு ஏற்பட்ட மிகப்பெரிய சர்ச்சையில் திருவள்ளுவர் என்பவரின் பெயர் பலமாக அடிபடுகிறது. மாணவி அக்ஷராவின் குரலில் நுழையாத அளவிற்கு ‘குறள்’ எழுதிய பெரிய அநீதியை அவர் நிகழ்த்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் மலேசிய நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கொன்று தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சில குறள்களை சொல்லச் சொல்லி அக்ஷராவை வற்புறுத்திய வார்டன் சிபி மற்றும் ஆசிரியர் ராஜு ஆகியோரின் மீதும் வழக்கு பாயலாம் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இருவரும் தலைமறைவாகியுள்ளனர். ‘கோக்குமாக்கு’ செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் கோயிஞ்சாமியுடன்….

எபிசோட் 53-ல் என்ன நடந்தது?

இரவு. “சாப்பிட்டு முடிச்சுட்டு டேபிள்லாம் க்ளீன் பண்ணிடுங்க” என்று வார்டன் உத்தரவுகள் போட்டுக் கொண்டிருக்க “மாஸ்டர்லாம் எந்த வேலையும் செய்ய மாட்டாங்களா.. ஸ்டூடண்ட்ஸ்தான் எல்லா வேலையும் செய்யணுமா?” என்று முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு அக்ஷரா புரட்சிக்கான விதையைப் போட “தப்பு.. தப்பு.. அதெல்லாம் நீ கேட்கக்கூடாது.. நீ ஏன் கேட்கறே?” என்று கில்லி பிரகாஷ்ராஜாக மாறினார் சிபி. “என்னை அஞ்சு நிமிஷம் ப்ரீயா இருக்க விடுங்க” என்று அதிகாரமான வேண்டுகோளை வைத்தார் அக்ஷரா. வார்டன் தொடர்ந்து வேலை தந்து கொண்டிருப்பது குறித்து அப்போதே அவருக்கு மண்டையில் நண்டு பிறாண்டத் துவங்கிவிட்டது. நாளைய பெருவெடிப்பிற்கான முன்னோட்டம் இது.

பிக் பாஸ் சிபி
பிக் பாஸ் சிபி

பாவனி இடது கையால் அலட்சியமாக எழுதித்தந்த மன்னிப்பு கடிதத்தை நிராகரித்த சிபி “என்னென்ன தப்பு செஞ்சீங்கன்னு உங்களுக்கே தெரியும். அதையெல்லாம் குறிப்பிட்டு முறையாக மன்னிப்பு கடிதம் தந்தா உங்க ரெண்டு பேரையும் உள்ளே அனுமதிப்பேன்” என்று பாவனியிடமும் பிரியங்காவிடமும் ஏறத்தாழ கெஞ்சினார் சிபி. “உள்ளே எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருக்கோம். நீங்க உள்ளே போய் படுக்க வேண்டியதுதான் பாக்கி” என்று மறுபடி மறுபடி சொல்லி ரூம் பாய் அளவிற்கு கூட இறங்கி சொல்லிப் பார்த்தார். “நான் பண்ண சேட்டைக்கெல்லாம் தண்டனை அனுபவிச்சாச்சே. அப்புறம் என்ன?’ என்கிற நிரூப் லாஜிக்கை பிரியங்காவும் இப்போது பின்பற்ற அதை சிபி ஒப்புக் கொள்ளவில்லை. “உங்களை வெளில படுக்க வெக்கணும்னு எனக்கு விருப்பமில்லை” என்று அவர் சொல்லியும் பிரியங்கா மசியவில்லை. “அந்தக் கொம்பை கீழே வெச்சுடுங்க” என்று பிரம்பு விஷயத்தையே ஆட்சேபித்துக் கொண்டிருந்தார்.

தூங்கச் செல்லும் சமயத்தில் போர்டிங் ஸ்கூல் மாணவர்களான இமான் அண்ணாச்சி, அக்ஷரா, நிரூப் ஆகியோர் தலையணைகளை பரஸ்பரம் எறிந்து விளையாடியதில், அக்ஷரா மட்டும் வார்டனின் கண்ணில் பட்டு எச்சரிக்கைக்கு ஆளானார். “போர்டிங் ஸ்கூல் பசங்க நிஜமாவே பாவம். இவ்ளோ கஷ்டமா அங்க?” என்று சமூகத்திற்காக சற்று நேரம் காமிராவைப் பார்த்து வருந்தினார் அக்ஷரா.

பிக்பாஸ்
பிக்பாஸ்

இரவுப்பூனை போல நள்ளிரவில் ஐக்கியின் குறும்புகள் அதிகரித்தன. வார்டனுக்கு எதிரான கேலிச்சித்திரங்கள், புரட்சி முழக்கங்கள் போன்றவற்றை உருவாக்கி வைத்ததோடு, ஆசிரியர்களின் முகங்களில் மையால் தேர்வு எழுதிப் பார்த்து மகிழ்ந்தார் ஐக்கி. “நிரூப்பை மட்டும் குடுமியோட விட்டுடறீங்க. என் முடியை மட்டும் கறுப்பாக்குவீங்களா?” என்பது அம்மணியின் ஆட்சேபம். போர்டிங் ஸ்கூல் மாணவர்களின் உண்மையான குறும்புகளை ஐக்கி செய்தது சிறப்பு.

விடிகாலையில் பிரியங்காவையும் பாவனியையும் எழுப்பிய சிபி, ‘உள்ளே போய் படுங்க” என்று கரிசனத்துடன் அனுப்ப “வீட்டுக்குள்ள வரவே மாட்டேன்” என்று சபதம் எடுத்திருந்த பிரியங்கா, தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட குழந்தை போல சாயந்தாடிக் கொண்டே உள்ளே சென்றார்.

பிக்பாஸ்
பிக்பாஸ்

காலை பாட்டு ஒலித்தது. டான்ஸ் மாஸ்டர் அமீர் காலையில் மட்டுமே நமக்கு தரிசனம் தருகிறார். இதர நேரங்களில் தலைமறைவாகவே இருக்கிறார்.

‘யாரோ’ செய்து வைத்திருக்கும் ஓவியக் குறும்புகள் தொடர்பாக ‘இப்போது வேண்டாம். இன்று இரவு விசாரிப்போம்’ என்று புத்திசாலித்தனமான முடிவை எடுத்தார் சிபி. இமான் அண்ணாச்சி வழக்கம்போல் வேலை செய்யாமல் டபாய்த்து விட்டார்போல. எனவே அன்றைய நாள் முழுவதற்குமான பாத்திரம் கழுவும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாட்டுப்பாடிய குற்றத்திற்காக ஐம்பது ‘சிட் அப்ஸ்’ போடும் தண்டனை அக்ஷராவிற்கு வழங்கப்பட்டது. வார்டனின் பிரம்பை பாவனி ஒளித்து வைத்தார். “அதைக் கண்டுபிடிச்சு தர்றவங்களுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும்” என்று ஆடித்தள்ளுபடி ஆஃபர் தந்தார் சிபி. அதை பாவனி பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். மாறாக அதைத் தேடுவது போல் அம்மணி செய்த நடிப்பு அபாரம். (உலக நடிப்புடா சாமி!).

சரியான நேரத்தில் தயார் ஆகாததற்காக அக்ஷராவிற்கு தண்டனை வழங்க முடிவு செய்தார் சிபி. “இதை தண்டனையா எடுத்துக்க வேண்டாம். ஐந்து குறள்களை தமிழ் ஆசிரியர் சொல்லித் தருவார். அதை அப்படியே திருப்பி சொல்லணும்” என்று சிபி செய்த விஷயம், இன்றைய நாளின் ஃபுட்டேஜ்ஜிற்கான புயல் மையமாக மாறி பிக்பாஸிற்கு பெரும் உதவியாக அமைந்தது. அக்ஷரா அப்படியொன்றும் தமிழ் பேசுவதில் தடுமாற்றம் கொண்டவர் அல்ல. ராஜூ சொல்லித் தந்த குறள்களை சற்று கவனமாக கேட்டிருந்தால் அவரால் சொல்லியிருக்க முடியும். ஆனால் குழந்தை போல் கண்ணைக் கசக்கிக் கொண்டே குறள்களைக் கேட்டது சுவாரஸ்யமான காட்சி.

பிக்பாஸ்
பிக்பாஸ்

இதன் பிறகு திருக்குறள்கள் அக்ஷரா வாயில் புகுந்து புறப்பட்டு கொத்து பரோட்டாக்களாக மாறின. ‘அடக்கம் அமரருள் உய்க்கும்னா.. அடக்கமா இருந்தா நல்லாயிருப்போம். இல்லைன்னா. உருப்பட மாட்டோம்.. அதானே அர்த்தம்?” என்று ‘உய்க்காமல்’ விளக்கம் சொன்னார் அக்ஷரா. “‘நிற்க அதற்குத் தக’ –ன்னா நேரா நிக்கணுமா?” என்று கேட்டு தமிழை மல்லாக்க படுக்க வைத்தார். “டாஸ்க் முடிஞ்சதும் நான் சில வார்த்தைகள் சொல்றேன். அதை நீங்க திருப்பிச் சொல்லுங்க பார்க்கலாம்” என்று அக்ஷரா ராஜூவிடம் குறிப்பிட்டது மலாய் மொழியாக இருக்கலாம்.

“உனக்கு உண்மையிலேயே கத்துக்கணும்னு விருப்பம் இருந்தா சீக்கிரம் முடிஞ்சுடும். இல்லைன்னா நேரம் கூடிட்டே போகும்..” என்று ராஜூ மிகப் பொறுமையாகவே அக்ஷராவை கையாண்டார். “எனக்கு எழுதினாதான் வார்த்தைகள் சொல்ல வரும்” என்று அக்ஷரா அடம்பிடிக்கவே அதற்கும் ராஜூ ஒப்புக் கொண்டார். இந்த நேரத்தில் காலையுணவு வந்தது. சிபி கண்டிப்பாக நடந்து கொண்டால் கூட அதனால் அக்ஷராவிற்கு அதிக பாதிப்பு ஏற்படாமல் தடுத்தது ராஜூவின் கனிவே. “சாப்பிட்டு எழுதறியா.. இதை முடிக்கறதுக்கு இருபது நிமிஷம் ஆகும்” என்று ராஜூ கரிசனத்துடன் சொன்னதை கவனமாக குறித்துக் கொள்ளுங்கள். “பரவாயில்ல.. எழுதிட்டே சாப்பிடறேன்’ என்று வீம்பாக அந்த சான்ஸை மறுத்து விட்டார் அக்ஷரா.

வார்டன் செய்து கொண்டிருக்கும் கொடுமைகள் குறித்து பாத்ரூம் ஏரியாவில் புழுங்கிய வருண், “மச்சான்.. என்ன நீ பாட்டுக்கு கம்முன்னு இருக்கே. எதையாவது மாஸா செய்வேன்னு பார்த்தா லூஸூ மாதிரி அப்படியே உக்காந்துக்கினு இருக்கே?” என்று இமான் ப்ரோவை ஏற்றி விட்டார். “இருக்கு.. ஒரு தரமான சம்பவம் இருக்கு. நான் யாருன்னு காட்டறேன்” என்று பாத்ரூம் ஏரியாவில் சபதம் செய்தார் இமான்.

பிக்பாஸ்
பிக்பாஸ்

திருக்குறளின் கழுத்தை நெறித்து வதம் செய்து எழுதிக் கொண்டிருந்த அக்ஷராவை “சரி.. நீங்க போயி குளிச்சுட்டு வந்துடுங்க” என்று சிபி சொல்ல (அப்போதுதான் பாத்ரூம் காலியானது போல), எழுந்து சென்ற அக்ஷரா, ‘உடையை அயர்ன் பண்ணிக்கட்டுமா?” என்று திரும்பி வந்து கேட்க “ஓகே.. சீக்கிரம் முடிங்க. டயமாகுது” என்று சிபி சொல்லிய அந்தத் தருணம் ஏழரையாக இருந்திருக்க வேண்டும். அதுவரை அடக்கி வைத்திருந்த அக்ஷராவின் ஆத்திரப்புள்ளி வெடித்து சிதறியது. “எல்லாத்துக்கும் டைம் டைம்னுன்னா. எப்படி?” என்று அவர் வெடிக்க “அப்ப நீ அயர்ன் பண்ண வேணாம்” என்று ஈகோ உசுப்பப்பட்ட சிபி பதிலுக்கு சீற “நான் இனிமே எதையும் பண்ண மாட்டேன்” என்று கோபத்தில் விருட்டென்று சென்ற பாத்ரூம் ஏரியாவில் இருந்த பூச்செடியை ‘பொதேர்’ என்று போட்டு உடைத்தார். (மலேசிய மதிப்புல அது எவ்வளவு காசு தெரியுமா? – பிக்பாஸின் கலவர மைண்ட் வாய்ஸ்)

இதை சற்று அதிர்ச்சியுடன் பார்த்து விட்டு மறுபடியும் தன் சிகையலங்காரத்திற்கு சாவகாசமாக திரும்பிய பாவனியின் அந்த கெத்தான உடல்மொழி இருக்கிறதே?! செம இண்டரஸ்ட்டிங். ஆடைமாற்றும் அறைக்குள் கோபத்துடன் சென்ற அக்ஷராவை சமாதானப்படுத்துவதற்காக அபினய், ஐக்கி, வருண் ஆகியோர் வரிசையாக சென்றும் அம்மணியின் கோபம் குறையவில்லை. ஹிஸ்டீரியா வந்தது போல் கத்திக் கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் “எனக்குப் பசிக்குது. சாப்பிட விடலை” என்பது போல் அனுதாபத்தை தேடவும் முயன்றார். “சாப்பிட்டு எழுதறியா?” என்று ராஜூ கேட்ட போதே அந்த வாய்ப்பை பயன்படுத்தியிருக்கலாம்.

அக்‌ஷரா
அக்‌ஷரா

ஓகே.. இந்த விவகாரத்தை சற்று விரிவாகப் பார்ப்போம். ஒரு சராசரி மாணவனின் நடைமுறைச் சிரமங்கள் எதையும் அறியாமல் மிக சொகுசாக வளர்ந்த பெண்ணாக அக்ஷரா இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. “போர்டிங் ஸ்கூல்னா இவ்வளவு கஷ்டமா?” என்று அவர் காமிராவைப் பார்த்து கேட்ட போதே இதைப் பற்றி அவருக்கு ஐடியா ஏதும் இல்லையென்று தெரிகிறது. பல ஹாஸ்டல்களில், போர்டிங் ஸ்கூல்களில் இதை விடவும் அதிகமான கண்டிப்புகளும் தண்டனைகளும் இருப்பது பற்றி சிறிது கூட அவர் அறியாமலா இருப்பார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

அக்ஷரா நிஜமாகவே பள்ளி மாணவியல்ல. அந்த வயதையெல்லாம் கடந்து விட்டவர். இது பிக்பாஸ் விளையாட்டிற்காக தரப்பட்ட டாஸ்க். சிபி தன் பணியைச் சரியாக செய்யவில்லையென்றால் அதற்காக பிக்பாஸிடம் திட்டு வாங்கப் போவது சிபிதான். இவையெல்லாம் அக்ஷராவிற்கு நன்றாகவே தெரியும். தன் மீது வைக்கப்படும் சிறிய விமர்சனத்தைக் கூட தாங்க முடியாத அளவிற்கு பலவீனமானவர் அக்ஷரா என்பதற்கு ஏராளமான முன்உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவர் மட்டும் கடுமையான மொழியில் தனக்குப் பிடிக்காதவர்களை விளாசுவார்.

சிபிக்கும் அக்ஷராவிற்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம். ஆக சிபி வார்டனாக அமைந்ததுதான் எரியும் நெருப்பில் எண்ணைய் ஊற்றியது போல் அக்ஷராவிற்கு ஆகி விட்டது. எனவேதான் சிபி சொன்னதெல்லாம் வேப்பங்காயாக கசந்து ஒரு கட்டத்தில் வெடித்து விட்டது. இதுவே வருண் வார்டனாக இருந்தால் நிலைமையே தலைகீழாகியிருக்கும். அக்ஷராதான் அந்தப் பள்ளியின் உரிமையாளராக மாறியிருப்பார்.

பிக்பாஸ்
பிக்பாஸ்

கண்டிப்பான பள்ளி நிர்வாகம் x சேட்டை மிகுந்த மாணவர்கள் என்பது தொடர்பான விதிகளை வைத்துக் கொண்டு இந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை பல விதங்களில் சுவாரசியமாக்கியிருக்கலாம். முந்தைய சீசன்களல் அப்படி பல குறும்பான கலாட்டாக்கள் நடந்துள்ளன. அக்ஷராவும் அதுபோல் சில குறும்புகளைச் செய்தவர்தான். ‘அனைத்துமே நேரத்திற்குள் நடக்க வேண்டும்’ என்பது போர்டிங் ஸ்கூல்களின் இயல்பான நடைமுறைதான். இதை மனஉளைச்சலாக பார்ப்பது அக்ஷராவின் முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது.

“நான் ஒண்ணும் அடிமை இல்ல. என்னால நாய் மாதிரி இங்க கிடக்க முடியாது. நான் கேமை விட்டு போறேன்.. இங்க எல்லோரும் சமம்தான். சிபி ரொம்ப ஓவரா பண்றான்.. ராஜூவும்தான்” என்று டாஸ்க்கில் இருந்து வெளியே வந்து கோபத்தில் கன்னாபின்னாவென்று கத்திக் கொண்டிருந்தார் அக்ஷரா. சமாதானப்படுத்த வந்த ராஜூவிற்கும் திட்டு விழுந்தது. அக்ஷராவின் மெயின் கோபம் சிபியின் மீதுதான்.

அக்‌ஷரா
அக்‌ஷரா

தேவையான புட்டேஜ் சேர்ந்ததும் “அக்ஷரா. கன்ஃபெஷன் ரூமிற்கு வாங்க” என்று அழைத்தார் பிக்பாஸ். ஆனால் அங்கு என்ன நடந்ததென்று நமக்கு காட்டப்படவில்லை. (மெயின் எபிசோடில்). தனக்கு சாதகமான சீட்டுக்களை மட்டுமே வெளியே காட்டுவது ரியாலிட்டி ஷோக்களின் வழக்கம். எனில் எதை வைத்து மக்கள் வாக்களிப்பார்கள்? சற்றாவது முழுமையான கோணங்களைக் காட்டினால்தானே புரியும்? மக்களின் ஆதரவும் வேண்டும், ஆனால் அவர்களையும் மதிக்க மாட்டேன் என்றால் எப்படி?...

மாஸ்டர் படத்தில் நடித்ததாலோ என்னவோ, சிபி தன்னை விஜய்யாக நினைத்துக் கொண்டார் போலிருக்கிறது. பிக்பாஸ் தன்னைக் கட்டாயப்படுத்தியிருந்தாலும் கூட சற்று ஓவர் கண்டிப்பை அவர் காட்டியிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. அக்ஷராவின் மீதிருந்த கடுப்பைக் காட்டிக் கொள்ள இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாரோ என்கிற சந்தேகமும் எழுகிறது. ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தனக்கு தரப்பட்ட ‘காரெக்ட்டரைத்தான்’ பெரும்பாலும் சிபி பிரதிபலித்தார். பல சமயங்களில் கனிவாகவே நடந்து கொண்டார். எனவே இந்த விவகாரத்தில் அவர் மீது குற்றம் சொல்ல முடியாது.

சிபி
சிபி

அக்ஷராவிற்கு ஆதரவாக களத்தில் இறங்குவது என்று இமான் முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது. “கொஞ்ச நேரத்துல ஐந்து குறள்களை சொல்வது எனக்கு கூட கஷ்டம்” என்று இடக்காக சொல்லி சிபியை காண்டாக்கிக் கொண்டிருந்தார். அக்ஷரா சாப்பிடாமல் இருந்ததால் “சாப்பாடு கொண்டு வரவா.. கேசரில்லாம் வெச்சிருக்காங்க.. சூப்பரா இருக்கு” என்று அதைக் கொண்டு சென்று சிபியால் தடுத்து நிறுத்தப்பட்டார். பிறகு அபிஷேக் கொண்டு போய் சாப்பாடு தந்தார்.

பிக்பாஸ் அழைப்பிற்குப் பிறகு சற்று கோபம் தணிந்து மூசுமூசுவென்று அழுது கொண்டிருந்த அக்ஷராவிடம் தனியாகச் சென்று பேச்சு வார்த்தை நடத்தவும் சிபி முற்பட்டார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. ‘பிக்பாஸ் விளையாட்டு என்பது இப்படித்தான் இருக்கும். இதன் சிரமமான வளைவுகளுக்குள் புகுந்து வெளியே வரும் பாதைகளை நாமாகத்தான் கண்டறிய வேண்டும்’ என்கிற எளிய புரிதல் கூட அக்ஷராவிடம் இல்லாதது வியப்பாக இருக்கிறது. அடிப்படையில் அவர் புத்திசாலிதான். ஆனால் ஆத்திரம் கண்களை மறைக்கிறது.

பிக்பாஸ் டாஸ்க்
பிக்பாஸ் டாஸ்க்

“நீங்க சொல்றதையெல்லாம் நான் பண்ணிட்டுதானே இருக்கேன்? 24 மணி நேரமும் மண்டைக்குள்ள வந்து உக்காந்தா எப்படி?” என்று வாக்குவாதம் செய்த அக்ஷரா “நீங்க சொல்றத கேக்காத பிரியங்காவைக் கூட விட்டுடுவீங்க.. சொல்றத செய்யற என்னை மட்டும் ஓட ஓட விரட்டுவீங்களா?” என்று விதண்டாவாதமும் செய்தார். “இது தனக்கு தரப்பட்ட டாஸ்க்” என்பதை சிபி நிதானமாக விளக்கியும் அக்ஷரா ஏற்கும் மனநிலையில் இல்லை.

‘விட்டால் எடுப்பேன். விடாமல் தடுப்பேன்’ என்றொரு ஜாலியான டாஸ்க் நடந்தது. மாணவர்கள் இரு அணிகளாகப் பிரிந்து எதிரெதிரே நிற்க வேண்டும். நடுவில் இருக்கும் கொடியை யார் முதலில் சாமர்த்தியமாக எடுத்து வருகிறார்களோ அவர்களுக்கு ஒரு மதிப்பெண். எதிராளி தொட்டு அவுட் ஆக்கி விட்டால் அவருக்கு ஒரு மதிப்பெண் சென்று விடும்.

இதில் அபினய், வருண் ஆகியோர் மின்னல் வேகத்தில் எடுத்து தப்பிச் சென்று ஆச்சரியப்படுத்தினார்கள். தாமரை கொடியை எடுக்க வந்த போது அவரின் கையில் துப்புவது போல் செய்து போங்காட்டம் ஆடினார் அண்ணாச்சி. வருணுடன் அக்ஷரா நெடும்நேரம் நின்ற போது ‘இருவரும் கொடியை எடுப்பதற்காக பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று ரன்னிங் கமெண்ட்ரி தந்தார் ராஜூ. இந்த விளையாட்டின் போதுதான் அக்ஷராவின் முகத்தில் சிரிப்பு திரும்பியது. இந்த விளையாட்டில் அணி B வெற்றி பெற்றது.

பிக்பாஸ்  டாஸ்க்
பிக்பாஸ் டாஸ்க்

‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க்கில் நிர்வாக தரப்பில் சிபி, ராஜூ ஆகியோரின் பங்களிப்பு சிறப்பு. அபிஷேக் அவ்வப்போது கண்ணில்பட்டார். நடன ஆசிரியர் அமீர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. ‘நேற்று பிரியங்கா, இன்று அக்ஷரா’ என்று தினம் ஒருவரிடம் மாட்டிக் கொண்டு அவர்களிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார் சிபி.

‘வார்டன்னா அடிப்போம்” என்கிற லாஜிக்கில் மாணவர்கள் சிபியை இம்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.