Published:Updated:

பிக்பாஸ் 61: ஸ்கெட்ச்சில் சிக்கினாரா தாமரை? பிரியங்கா செய்வது சரியா?!

பிக்பாஸ் பிரியங்கா - தாமரை

பிக்பாஸ் 61: ‘ கொளுத்திப் போடுவதில்’ பிரியங்கா, அபிஷேக் ஆகிய இருவரும் வல்லவர்கள் என்பது இந்த ‘குறும்பு நாடகத்தின்’ மூலம் அழுத்தமாக வரலாற்றில் பதிவானது.

பிக்பாஸ் 61: ஸ்கெட்ச்சில் சிக்கினாரா தாமரை? பிரியங்கா செய்வது சரியா?!

பிக்பாஸ் 61: ‘ கொளுத்திப் போடுவதில்’ பிரியங்கா, அபிஷேக் ஆகிய இருவரும் வல்லவர்கள் என்பது இந்த ‘குறும்பு நாடகத்தின்’ மூலம் அழுத்தமாக வரலாற்றில் பதிவானது.

Published:Updated:
பிக்பாஸ் பிரியங்கா - தாமரை

தாமரையின் அசலான நிறத்தைக் கொண்டு வருவதற்காக ரெட் சானல் ஒரு Prank Show செய்ததுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். ப்ரமோவைப் பார்த்துவிட்டு ‘அது உண்மையான சண்டை’ என்று பலர் நினைத்திருக்கலாம். ஆனால் அடிப்படையான கேள்வி என்னவென்றால்… தாமரையை கோபப்படுத்த இவ்வளவெல்லாம் பிரியங்கா கஷ்டப்பட்டிருக்கவே தேவையில்லை. தீக்குச்சியிலேயே கப்பென்று பற்றிக் கொள்கிற பெட்ரோலுக்கு போய் தீப்பந்தமெல்லாம் எடுத்து வர வேண்டுமா... என்ன?

ஆனால் இந்த Prank டாஸ்க் ஒருவகையில் பிரியங்காவிற்கு எதிராகத்தான் அமைந்தது. “ஸ்கெட்ச்சு அவனுக்கு இல்ல.. குமாரு.. உனக்குத்தான்” என்கிற எதிர் கிளைமாக்ஸ் மாதிரி. ‘எப்படி தாமரை எளிதில் கோபப்படுவார் என்பது இதில் நிரூபணம் ஆனதோ, அப்படியே ‘கொளுத்திப் போடுவதில்’ பிரியங்கா, அபிஷேக் ஆகிய இருவரும் வல்லவர்கள் என்பது இந்த ‘குறும்பு நாடகத்தின்’ மூலம் அழுத்தமாக வரலாற்றில் பதிவானது.

பிக்பாஸ் என்பது உண்மைக்கும் புனைவிற்கும் இடையில் நிகழும் ஒரு சிக்கலான விளையாட்டு. இந்த அடிப்படையை புரிந்து கொண்டால் இங்கு தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் தாமரை போன்றவர்களால் எல்லாவற்றையுமே இந்தக் கோணத்தில் பார்க்க முடியாது. அவர்கள் மனமார நம்பும் ஒரு விஷயத்தை – அது விளையாட்டாகவே இருந்தாலும் கூட – அதை யாராவது கிண்டலடித்தால் கோபம் கொள்ளுவார்கள். Prank என்பதை அறிந்தும்கூட தாமரையின் சூடு இறங்காமல் போனதற்கு காரணம் இதுவே.

எபிசோட் 61-ல் என்ன நடந்தது?

‘வாடி என் தமிழ்ச்செல்வி’ பாடலை காலையில் அலறவிட்டார் பிக்பாஸ். தாமரைசெல்வி உள்ளிட்ட பலரும் இதற்கு நடனம் ஆடினார்கள். ரெட் சானலின் ஒளிபரப்பு மீண்டும் ஆரம்பித்தது. ‘பிக்பாஸ் அவ்வப்போது போட்டியாளர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி ஸ்கீரின் போட்டு விடும்’ அராஜகத்தை அபிஷேக் கிண்டலடித்தார். ஏறத்தாழ பிக்பாஸின் குரலை அபினய் மிமிக்ரியின் மூலம் கொண்டு வந்தது சிறப்பு.

ராஜூ மற்றும் இமானுக்கு மட்டும் டபுள் ஆம்லேட் தரும் அக்ஷராவின் ரகசியம், பாவனி என்கிற சுவர் அடுத்து அபினய்யை காவு வாங்கப் போகிறதா? போன்ற விஷயங்களை ஒரு வரியில் கிண்டல் செய்து விட்டு தலைப்புச் செய்திக்கு வந்தார்கள். ‘தாமரை செல்வியிடம் நிரந்தரமான அன்பு பெறுவது எப்படி?’

இதில் வருணையும் தாமரையையும் சிறப்பு விருந்தினர்களாக அரங்கத்தில் அமர வைத்து பிரியங்கா கேள்வி கேட்டார். “உலக நாயகன் உட்பட உங்க கேம் பிளானை எல்லோரும் பாராட்டறாங்க. அப்படி என்ன ரகசியம் அது?” என்று தாமரையிடம் கேட்க ஆரம்பித்தார். இதற்கு கமல் பாணியில் யாருக்கும் புரியாத மொழியில் ஒரு கவுன்ட்டர் தந்த தாமரை “எங்க அப்பா பேரு தெரியுமா. தெரியாதுல்ல. அந்த மாதிரி... தெரியாத விஷயத்தை கேட்டு தெரிஞ்சுக்கணும். நான் தெரிஞ்சுக்கிட்டேன்” என்றார் தாமரை. பிரியங்காவின் தம்பி பெயர் தாமரைக்குத் தெரியும். ஆனால் தாமரையின் அப்பா பெயர் பிரியங்காவிற்குத் தெரியவில்லை. எனில் நட்பில் யார் உண்மையானவர் என்பதை உணர்த்துவதற்காகக்கூட தாமரை இந்த எதிர்க் கேள்வியை கேட்டிருக்கலாம்.

தாமரை
தாமரை

“வருணிற்கு உங்க அப்பா பேர் தெரியுமா. தெரியுதுல்ல சிறந்த நட்பு" என்று உடனடி டைமிங்கில் இந்த விஷயத்தை பிரியங்கா காலி செய்த குறும்பு ரசிக்க வைத்தது. இந்தச் சமயத்தில் உள்ளே புகுந்த சிபி “இன்னிக்கு புளியோதரை செஞ்ச காரணம் என்ன? போனவாரம் பூண்டு ரசம் வெச்ச மர்மம் என்ன.?" என்று சம்பந்தமில்லாத கேள்விகளை தாமரையிடம் கேட்கும் போதே லைட்டாக சந்தேகம் வந்தது. என்றாலும் சுற்றி வளைத்து சிபி முக்கியமான எதையோ தொடப் போகிறார் என்றும் நினைக்க வைத்தது.

``எழுதித் தந்த கேள்விகளை கேட்காமல் சிபி சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்கிறார்"என்று ஆட்சேபித்த அபிஷேக், ஓர் விளம்பர இடைவேளைவிட, இதற்கு சிபி கோபப்பட்டு கேள்வித்தாள்களை கிழித்தெறிகிறார். உடனே ஆரம்பமாகிறது அந்த ரணகள சத்தம். ‘புகைப்பிடிக்கும் காட்சிக்கு எச்சரிக்கை போடுவதுபோல இதுபோன்ற காட்சிகள் வரும் போது டிவி வால்யூமை குறைத்து வைப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது’ என்று எச்சரிக்கை அறிவிப்பு தரலாம். அப்படியொரு சத்தம். வழக்கம் போல் பிரியங்காவின் குரல் எல்லோரையும் மிஞ்சியது.

தாமரை
தாமரை

‘எங்க கிட்டயும் சீப்பு இருக்கு. நாங்களும் சீவுவோம்’ என்பது போல் ‘சைலன்ஸ்’ என்பதை உரத்த குரலில் கத்தி கோபப்பட்டார் நடுவர். என்றாலும் அதற்கு ஒரு செகண்ட் மட்டுமே மரியாதை தந்த போட்டியாளர்கள், மீண்டும் தங்களின் சந்தை இரைச்சலை தொடர்ந்தனர். இது தனக்கான ஸ்கெட்ச் என்பதை உணராமல் தாமரை இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

சில பல நிமிடங்களுக்கு இந்த நாடகத்தை நீட்டித்து விட்டு ஒரு சரியான சமயத்தில் தீக்குச்சியை கிழித்து சர்ரென்று இலக்கின்மீது வீசினார் பிரியங்கா. “இவங்க மட்டும் தங்கப்பிள்ள. செல்லப்பிள்ளன்னு கொஞ்சுவாங்களாம். ஆனா எங்க நட்பை மட்டும் சந்தேகப்படுவாங்களாம்” என்று பிரியங்கா எய்த அம்பு மிகச்சரியாக வேலை செய்தது. பாய்ந்து வந்தார் தாமரை. மீண்டும் களேபரம். சத்தம். ஒலி மாசு..

பிரியங்காவை விடவும் ஹைடெஸிபலில் தாமரை கத்தியதைப் பார்த்ததும் “உங்களின் உண்மையான ரூபத்தை உலகிற்கு உணர்த்தவே யாம் இந்த திருவிளையாடலை நிகழ்த்தினோம்” என்று பிரியங்கா உலகத்திற்கு செய்தி சொல்ல முயல “நான் எப்பவுமே இப்படித்தானே இருக்கேன்” என்று இந்த Prank-ஐ ஒரே வாக்கியத்தில் உடைத்துப் போட்டார் தாமரை.

எல்லோரையும் சமாதானப்படுத்தி அமைதிப்படுத்தி அமர வைத்த ரெட் சேனல் தங்களின் நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கியது. அபிஷேக் தனது இனிய குரலில் சில திரைப்படப் பாடல்களைப் பாடுவாராம். அது யாரைக் குறிக்கிறதென்று சொல்ல வேண்டுமாம். ‘பழம் நீயப்பா..' என்ற பாடல் அக்ஷராவைக் குறிக்கிறதாம். வாழைப்பழங்களை ஒளித்து வைக்கும் காரணத்தினால். ‘சிலர் ஆசைக்கும் வசதிக்கும் வால் பிடிப்பார்’ என்கிற பாடலை சிபி பாட 'அபிஷேக்’ என்று சலனமில்லாத முகத்துடன் ராஜூ சொல்ல, புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டார் அபிஷேக். ("யாரு கிட்ட.. மாட்ட மாட்டோமில்ல..” – ராஜூவின் மைண்ட் வாய்ஸ்).

வம்பை விலைக்கு வாங்கும்.. என்கிற பாடல் பிரியங்காவை குறிக்கிறது என்று இமான் சொன்னார். ஆனால் சரியான பதில் பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தப்படுமாம். (நிரூப்?!). ‘அஞ்சலி. பாப்பா’ பாடல் அக்ஷராவைக் குறிக்கிறதா என்று பாவனி கேட்க “அந்தக் குழந்தையே நீதாம்மா” என்று சொல்லி பாவனியை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தார் அபிஷேக்.

நான் நடந்தா அதிரடி என்கிற பாடல் அமீரைக் குறிக்கிறதாம். இந்த ரகசியத்தை அக்ஷரா வெளிப்படுத்தினார். பிக்பாஸ் வீட்டில் பல பொருட்கள் உடைவதற்கு அமீர்தான் காரணமாம். (அப்ப பூ ஜாடி உடைஞ்சது?!). ‘ஒரு Breaking News. இன்று காலையில் கூட அமீர் அவர்கள் ஒரு பிளேட்டை கிச்சனில் உடைத்தார்’ என்று அபிஷேக் மொக்கை போட்டார்.

பிரியங்கா - தாமரை
பிரியங்கா - தாமரை

‘இன்னொரு சிறப்பான நிகழ்ச்சியில் உங்களைச் சந்திக்கிறோம்’ என்று விடைபெற்ற ரெட் சேனல், அது முடிந்ததும் சபையில் வந்து நின்று ‘இப்போது நடந்த சண்டை ஒரு குறும்பு நாடகம் என்பதை தெரிவித்தது. “தாமரையின் மனசு புண்பட்டிருந்தா மன்னிக்கவும். இதில் அக்ஷராவும் ஆச்சரியமா உள்ள வந்தாங்க. தளபதி ஸ்டைல்ல சஞ்சீவும் கத்தினார். ராஜூ மட்டும்தான் மாட்டலை” என்று விளக்கம் அளித்தார் அபிஷேக்.

“உங்க சேனல் இப்படித்தான் எப்பவுமே பிராடு வேலை பண்ணுமா?” என்று குத்தலான கமென்டை ஒரு பார்வையாளராக இமான் முன்வைக்க, “எல்லாம் உங்களிடம் கற்றுக்கொண்ட வேலைதான் வாத்யாரே" என்று சிறப்பாக கவுன்ட்டர் தந்தார் பிரியங்கா.

பிரியங்கா
பிரியங்கா

குறும்பு நாடகம் முடிந்தாலும் தாமரையின் சூடு தணியவில்லை. ‘உண்மையான விஷயத்தை வைத்து கிண்டலடித்திருக்கக்கூடாது’ என்பது தாமரையின் ஆதங்கம். ``அப்ப. எங்க நட்பை மட்டும் சந்தேகப்பட்டு கேள்வி கேட்கலாமா?” என்பது பிரியங்காவின் கவுன்ட்டர் ஆதங்கம். “கத்தில குத்திட்டு டாஸ்க்குன்னு சொல்லுவீங்களா?” என்று சூப்பரான லாஜிக் கேள்வியை முன்வைத்தார் தாமரை. “இந்த அன்பையெல்லாம் அவங்க கிட்ட நிரூபிக்கணும்னு அவசியமில்ல” என்று தாமரையை சமாதானப்படுத்தினார் ‘தங்கப்புள்ளே’ வருண். “இதுக்கெல்லாம் கோபப்படக்கூடாது. அமைதியா இரு” என்று ராஜூவும் தலையிட்டார்.

“என் நேரம் வரும் போது நானும் பேசுவேன்” என்று தாமரை ஆவேசம் தணியாமல் பேச, ``அப்படின்னா. அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?” என்று அமீர் சமாதானப்படுத்தினார். “என்ன மாதிரி Prank இது?” என்று சஞ்சீவிடம் ராஜூ ஆதங்கப்பட, அவர் தாமரைக்கு எதிராகவும் ரெட் சேனலுக்கு ஆதரவாகவும் பேசினார். “இதை அவங்க டாஸ்க்காதான் பார்க்கணும். உண்மையான விஷயத்தை வெச்சுதானே prank பண்ணாங்க.. எல்லாத்துக்கும் தாமரை கோபப்படக்கூடாது” என்பது சஞ்சீவின் கருத்து.

அமீர் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் சில சமயங்களில் மிகவும் ‘நச்’சென்று பேசி விடுகிறார். யார் சொன்னாலும் சமாதானப்படாத தாமரை, அமீர் லாஜிக்கோடு விளக்கியபோது காது கொடுத்து கேட்டார். “அவங்க நட்பையும் வெச்சு நாம கேள்விகளை டாஸ்க்கில் உருவாக்கினோம்.. இல்லையா.. அப்ப நமக்கு தப்புன்னு தெரிஞ்சுச்சா. இல்லல்ல.. அதுபோல அவங்களும் இதை வெச்சு விளையாடியிருக்காங்க.. அவ்வளவுதான். பிரியங்கா தூங்காம இருக்க விஷயத்தை ராஜூ எப்படி ஹாண்டில் பண்ணான் பார்த்தீங்கள்ல. ஒரு சானல்ல TRP-க்கு இப்படியெல்லாம் பண்ணுவாங்க. இதுதான் டாஸ்க்.” என்று அமீர் விளக்கியபோது தாமரைக்கு சற்று புரிந்தது போல் தெரிந்தது. ஆவேசமான சண்டை நிகழ்ந்த அடுத்த நிமிடமே தாமரைக்கு ‘முத்தா’ கொடுத்து பிரியங்கா சமாதானப்படுத்துவது நெடுநாளைய வழக்கம். அதைப் போன்றதொரு முயற்சியில் பிரியங்கா ஈடுபட, தாமரை இன்னமும் முரண்டு பிடித்து விலகிச் சென்றார். “எனக்கு ஒரு மண்ணும் புரியல. நான் வீட்டுக்குப் போறேன். ஆளை விடுங்கப்பா” என்றும் சலித்துக் கொண்டார்.ப்ளூ சேனல் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. ‘மீட்டர் ராஜூ’ என்று இமான் அழைக்க ‘சொல்லுங்க.. ஹீட்டர் இமான்” என்று பதிலுக்கு அழைத்தார் ராஜூ. பிக்பாஸ் வீட்டில் ஒரு காதல் கதை என்று மீண்டும் வில்லங்கமான தலைப்பை எடுத்தார் ராஜூ. ஆனால் யாரையும் புண்படுத்தாமல் இதை ஜாலியாகவே எடுத்துச் சென்றது சிறப்பு. அடுத்ததாக Rapid Fire Session என்று ஆரம்பித்து ‘நீயா நானா’ ரேஞ்சிற்கு சாவகாசமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

இமான் அண்ணாச்சி
இமான் அண்ணாச்சி

மறுபடியும் அதே டாப்பிக். “என்ன பயந்துட்டியா?,’ என்று இமான் நிரூப்பைக் கேட்ட ஆதிகாலத்து சமாச்சாரம். ஆக்டிவ்வாக இருந்த நிரூப் சமீபமாக சோர்ந்து போயிருப்பதற்கு அண்ணாச்சியும் ஒரு காரணம் என்பதை பதிவு செய்ய பிரியங்கா முயல, அதற்கு கவுன்ட்டர் தந்தார் அண்ணாச்சி. ‘ஸ்கூல் டாஸ்க்கை தவறாகப் புரிந்துகொண்டு விளையாடியது. ‘உன்னை வெளில வெச்சு செய்யறாங்க’ என்று அமீர் சொன்னது போன்ற விஷயங்கள் நிரூப்பைக் குழப்பி விட்டிருக்கின்றன. மிக முக்கியமாக அபிஷேக் திரும்பி வந்து மறுபடியும் பிரியங்காவிடம் அவ்வப்போது சதியாலோசனை செய்வதை அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவேதான் இமானின் தலைவர் பதவியைப் பறித்துக்கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றார். இந்த விஷயங்களை ‘அண்ணன்’ அண்ணாச்சி புரிந்து கொண்டிருக்க வேண்டும். ‘என்னைப் பார்த்து பயந்துட்டியா? என்று சர்காஸ்டிக்காக கேட்டிருக்கக்கூடாது. “நான் சொன்ன நல்ல விஷயங்களையெல்லாம் மறந்துடுவியா?,” என்று ஆதங்கத்துடன் நிரூப்பிடம் கேட்டார் இமான்.

“அண்ணாச்சி கூட நான் அடிக்கடி சண்டை போட்டாலும் ‘அண்ணாத்தே’ படம் மாதிரி ஒரு அண்ணன் –தங்கச்சி பாசம் எங்களுக்குள்ள ஓடுது” என்று பிரியங்காவும் ஒரு குபீர் தகவலை தெரிவித்தார். சமையல் பண்ணும்போது வீட்ல பெரியவரான இமானுக்கு அது பிடிக்குமா என்று பார்த்துதான் பிரியங்கா சமைப்பாராம். ‘இமான் செய்யற சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பெரிசு பண்ணி எதுக்கு அவர் பேரை டாமேஜ் பண்றீங்க?” என்று பிரியங்காவை கேள்விகள் கேட்பதின் மூலம் அண்ணாச்சியைக் காப்பாற்ற களத்தில் இறங்கினார் ராஜூ.

ப்ளூ சேனல் தனது ஒளிபரப்பை ஒருவழியாக முடித்துக் கொண்டதும் “உனக்கு எந்த சந்தேகம் வந்தாலும் என் கிட்ட நேரடியா கேளு. இல்ல.. பிரியங்கா மேலதான் உனக்கு முழு நம்பிக்கை இருக்குன்னா. அங்க போயிடு” என்று அண்ணாச்சி, நிரூப்பிடம் கோபித்துக் கொண்டார். “எங்க போனாலும் துரத்தறாங்க” என்று நிரூப் குறித்து முன்னர் ராஜூ சொன்ன கிண்டல் உண்மையாயிற்று. “இல்ல. பிரியங்காவும் என்னை வெச்சு கேம் ஆடறாங்கான்னு சந்தேகம் இருக்கு. கூட அபிஷேக் வேற” என்று இங்கும் ஒட்டிக் கொள்ள முயன்றார் நிரூப்.

தாமரை - அமீர்
தாமரை - அமீர்

``தன்னை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் பிரியங்கா அவங்களை டார்கெட் பண்ணிடுவாங்க. பாவனி எவ்வளவு தப்பு பண்ணியிருக்கு. அதைக் கேட்கலை” என்று பிரியங்காவின் உத்தியைப் பற்றி அக்ஷராவிடம் அனத்திக் கொண்டிருந்தார் தாமரை. “நீ பேசும்போது தெளிவாத்தான் பேசற” என்று அமீர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த பிரியங்கா, தனது வழக்கமான பாணியில் தாமரைக்கு முத்தா கொடுத்து ``சாப்பாடு நல்லாயிருந்தது” என்று சொல்லி விலக, அந்த முத்தாவை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் தாமரை குழம்பிய க்ளோசப் காட்சி சுவாரஸ்யமானது. இரண்டு அணிகளின் செயல்பாடுகளையும் மதிப்பிட்ட சஞ்சீவ், ரெட் சேனல் அதிக மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்தார். குறும்பு நாடகம் ரெட் சேனலின் ப்ளஸ் பாயிண்ட்டாம். ‘உரசாதே…’ என்று யாருக்கோ பாடலின் மூலம் பிரியங்கா செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்.