Published:Updated:

பிக் பாஸ் - 64 : வெளியேறிய அபிஷேக்; கமல் சொன்ன அட்வைஸ்!

பிக் பாஸ் - கமல்

டிவி டாஸ்க்கில் மைக்குடன் ரொமான்ஸ் செய்த அபிஷேக்கை பாராட்டிய கமல், "Worst performer பட்டத்தை எதிர்பார்த்த மாதிரியே பேசிட்டு இருந்தீங்களே… என்னாச்சு..?” என்று பாவனியிடம் விசாரித்தார்

பிக் பாஸ் - 64 : வெளியேறிய அபிஷேக்; கமல் சொன்ன அட்வைஸ்!

டிவி டாஸ்க்கில் மைக்குடன் ரொமான்ஸ் செய்த அபிஷேக்கை பாராட்டிய கமல், "Worst performer பட்டத்தை எதிர்பார்த்த மாதிரியே பேசிட்டு இருந்தீங்களே… என்னாச்சு..?” என்று பாவனியிடம் விசாரித்தார்

Published:Updated:
பிக் பாஸ் - கமல்

அபிஷேக் இரண்டாவது முறையாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். பிக் பாஸ் விளையாட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் அவருக்கான பாடங்கள் இதில் உள்ளன என்று தோன்றுகிறது. அவர், 'தவறாக புரிந்துகொள்ளப்பட்ட சரியான நபரா?' அல்லது 'சரியாக புரிந்து கொள்ளப்பட்ட தவறான நபரா?' என்பது ஆதாரமான கேள்வி. இணையத்தில் அவருக்கு ஏற்கனவே ஏற்பட்டிருந்த முன்வெறுப்பு இந்த விளையாட்டிலும் பிரதிபலித்ததா என்பதும் ஒரு முக்கியமான கேள்வி.

தனது இரண்டாவது வருகையில் அவர் சற்று அடக்கியே வாசிக்க முற்பட்டார் என்றாலும் தன்னுடைய ஆதாரமான குணாதிசயத்தில் இருந்து அவரால் முற்றிலும் வெளியேற முடியவில்லை. தன்னுடைய ஆட்டத்தை பிரதானமாக கவனிக்காமல் நிரூப்பிற்கு எதிராக ஏற்றி விட்டு பிரியங்காவை வழிநடத்துவதில் அவர் கணிசமான நேரம் செலவு செய்தது மக்களுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம்.

பிக் பாஸ் கமல்
பிக் பாஸ் கமல்

இந்த விளையாட்டின் மூலம் கிடைத்த அனுபவத்தை அவர் சுய பரிசீலனைக்கு உட்படுத்திக் கொண்டால் நன்று. இந்த படிப்பினை அவருக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களான நமக்கும் பொருந்தும். நமக்குள்ளும் பல அபிஷேக்குகள் இருக்கத்தான் செய்கிறார்கள். கமல் ஒரு இன்டலெக்சுவல் ஆசாமி. அப்படியாக தன்னை காட்டிக்கொள்ள விரும்புபவரும் கூட. ஆனால் அதே சமயத்தில் வெகுஜன மனோபாவத்திற்கு இணக்கமாகவும் நடந்து தன் விலகலை அவர் சமன் செய்து விடுவார். அபிஷேக் இந்தப் பாணியை பின்பற்ற முயலலாம். வெறுமனே அலட்டினால் வெறுப்புதான் மிஞ்சும்.

"சுவாரசியம் அளிப்பதற்காக மக்கள் எனக்கு பிச்சையிட்டு உள்ளே அனுப்பியிருக்கிறார்கள்" என்று அபிஷேக் சொல்வது உண்மை அல்ல. மக்களின் வாக்குகள் மூலமாக வெளியேற்றப்பட்டவரை பிக் பாஸ் தான் பின்வாசல் வழியாக மீண்டும் உள்ளே சேர்த்திருக்கிறார். 'உங்களைக் கொளுத்திக் கொள்ளும் சிரமம் வேண்டாம்' என்று மக்கள் முடிவு செய்து மீண்டும் வெளியே அனுப்பிவிட்டார்கள் போல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எபிசோட் 64-ல் என்ன நடந்தது?

"நான் தந்த துருப்புச் சீட்டுகள், மக்களின் கைத்தட்டல்கள் போன்றவற்றை போட்டியாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. சூழலின் அழுத்தம் காரணமாக வழக்கம் போலவே செயல்படுகிறார்கள். இது சனிக்கிழமை நிகழ்வுகளில் எதிரொலித்தது" என்கிற முன்னுரையுடன் வந்தார் கமல். வழக்கமாக ஒரே நாளில் முடிந்து விடும் எலிமினேஷன் படப்பிடிப்பு அடுத்த நாளும் தொடர்ந்ததால் இந்த விதிவிலக்கான மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். எலிமினேஷன் நிகழ்ந்தபோது வழக்கத்திற்கு மாறாக சூரிய வெளிச்சம் இருந்ததை கவனித்திருக்கலாம்.

'என் ஆட்டத்தை நான் சுயமாக ஆடுவேன். யாருடைய செல்வாக்கும் இல்லை' என்று சொல்லிக் கொண்டிருந்த பிரியங்கா சஞ்சீவின் கருத்துக்களை அறிய ஆவல் காட்டியது ஒரு முரண். "வெளியே இருந்து பார்த்ததில் தாமரையை மட்டும்தான் நான் தப்பா புரிஞ்சுகிட்டேன். ரொம்ப சண்டை போடுவாங்கன்னு தோணுச்சு. ஆனா வீட்டுக்குள்ள வந்து பார்க்கும்போது அவங்க வேற மாதிரி இருந்தாங்க" என்றார் சஞ்சீவ்.

"நீ இன்ப்ளுயன்ஸ் ஆவறதுக்கு நான் காரணமில்லை" என்பதை பிரியங்காவிடம் சொல்வதன் மூலம் மக்களுக்கும் அதை உணர்த்த அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தார் அபிஷேக். "ஆமாம். நீ இல்லாதப்பதான் அண்ணாச்சிகூட நான் சண்டை போட்டுட்டு இருந்தேன். அதுக்கு நீ எப்படி காரணமா இருப்பே?" என்று இதில் கூடுதல் லாஜிக் சேர்த்தார் பிரியங்கா. 'உலகமே உன்னை எதிர்த்தாலும் நீயா ஒப்புக்கொள்கிற வரைக்கும் அது உண்மை இல்லை' என்கிற விவேகமான தத்துவத்தை இந்த விஷயத்தில் பிடிவாதமாக பொருத்திக் கொண்டிருக்கிறார் பிரியங்கா. "என்னா.. இப்ப.. நட்புனா நிப்போம்" என்று சிம்பு குரலில் அபிஷேக் மிமிக்ரி செய்தது சிறப்பு.

பிரியங்கா - அபிஷேக்
பிரியங்கா - அபிஷேக்

"பூ மாதிரி இருந்த நீ... திடீர்னு புயல் மாதிரி மாறிட்டியே ?"...என்று அமீரை பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார் பாவனி. அடுத்த கணத்தில் "என்னை இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்றியா.. நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியா.. கேர்ள்பிரண்ட் இருக்கா.. என்றெல்லாம் கேட்டு ரூட்டை வேறு திசையில் கொண்டு சென்றார். அடுத்த பஞ்சாயத்து வரும் வரை அடங்க மாட்டார் போலிருக்கிறது. "அபினய் மேட்டர்ல ராஜூவிற்கு ஏதாவது சந்தேகம் இருந்தா என்கிட்ட நேரா பேசியிருக்கலாம். நான் தெளிவாக்கி இருப்பேன். ஏன் இதை அவர் டாஸ்க்கில் ஆராய வேண்டும்..? ஏன் பிக்பாஸ், கமல் சார்.. இதைப்பற்றி எல்லாம் கேட்கவில்லை. அவன் அப்படி என்ன பார்த்தான்?.. என்று அமீரிடம் பொருமிக் கொண்டிருந்தார் பாவனி.

தனது பொருட்களை உடைத்த சென்டிமென்ட் பற்றி அக்ஷராவிடம் வேண்டுமென்றே பிரியங்கா கலாய்த்துப் பேச அதற்கு மூசு மூசுவென்று அழுதார் அக்ஷரா. அவர் அழுவதற்கு காரணமே தேவையில்லை என்பதுதான் இதற்கு காரணம்.

அகம்டிவி வழியே அகத்திற்குள்…

டிவி டாஸ்க்கில் மைக்குடன் ரொமான்ஸ் செய்த அபிஷேக்கை பாராட்டிய கமல், "Worst performer பட்டத்தை எதிர்பார்த்த மாதிரியே பேசிட்டு இருந்தீங்களே… என்னாச்சு..?” என்று பாவனியிடம் விசாரித்தார். "எனக்கு அந்த அளவிற்கு கிரியேட்டிவிட்டி டேலண்ட் இல்லை" என்று சுயவாக்குமூலத்துடன் ஆரம்பித்த பாவனி "இதற்கு டீம் தான் பொறுப்பு" என்று முடித்தார். "நீங்க மட்டும் ஷைன் பண்ணிட்டு மத்தவங்களை இருட்டுல விட்டுட்டீர்களோ?" என்று அடுத்த பந்தை ராஜுவிடம் வீசினார் கமல்.

சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையில் இது பற்றி பார்த்திருந்தோம். ராஜு ஒரு உதவி இயக்குனர் என்கிற முறையில் அனுபவம் இல்லாத நபர்களையும் ஒருங்கிணைத்து அந்த நிகழ்ச்சியை அவர் சிறப்பாக்கியிருக்க வேண்டும். இந்தக் கருத்தையே கமலும் பிரதிபலித்தார். "பாராட்டுகளை ஏற்றுக் கொள்வது போல் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று ராஜூவை கமல் அறிவுறுத்தியது சிறப்பு.

பாவனி - அமீர்
பாவனி - அமீர்

"பாவனி அக்ஷரா ..ஆகியோரின் நடிப்பில் சிறப்பு இல்லை" என்று சஞ்சீவ் சாட்சியம் அளித்தார். "எங்களுக்கு ஒரு ஐடியா இல்லை. எந்தக் காட்சி வெளியில் காட்டப்பட்டது ..எது காட்டப்படவில்லை.. என்பது குழப்பமாக இருந்தது. மற்றவர்கள் கொண்டு வந்த ரிப்போர்ட்டில் குற்றச்சாட்டு மட்டும்தான் இருந்தது" என்று இதற்கு விளக்கம் அளித்தார் ராஜூ. "கடைசி வரைக்கும் ஏழரையாவே போயிடுச்சு" என்று காமெடியாக ஒத்து ஊதினார் அண்ணாச்சி. "ஒத்திகை எவ்வளவு முக்கியம்ன்றதை எங்க டைரக்டர் பாலசந்தர் அடிக்கடி சொல்லிட்டே இருப்பார். ஒரு சீன்ல ஒருத்தர் ஓவர்ஆக்ட் செய்து காட்சியை திருட முற்பட்டால் திட்ட ஆரம்பித்துவிடுவார்" என்று தன் அனுபவ பாடத்தை பகிர்ந்தார் கமல்.

"நான் உரத்த குரலில் பேசுவதை மற்றவர்கள் இடையூறாகப் பார்கிறார்கள்" என்று பிரியங்கா ஆதங்கப்பட்டபோது "அது உங்கள் பலமாக இருக்கலாம். உங்களின் பலத்தை ஒலிபெருக்கியாக பயன்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்துங்கள்" என்று கமல் சொன்ன ஆலோசனை சிறப்பு. அடுத்ததாக பிரேக்கிங் நியூஸ் முறையில் பிரியங்கா காப்பாற்றப்பட்டது திரையில் வந்தது. பிரியங்காவின் ஊடகப் புகழ் அவருக்கு ஒரு பலமான அஸ்திவாரமாக இருக்கிறது. அதுதான் அவரை இன்னமும் காப்பாற்றி வருகிறது. அதை இன்னும் மேம் படுத்திக் கொள்ளாமல் அந்த அஸ்திவாரத்தை சிதைக்கும் வேலையில் பிரியங்கா ஈடுபட்டிருக்கிறாரோ என்று சந்தேகம் தோன்றுகிறது.

ரசிகர்களின் வில்லங்கமான கேள்விகள்…

"நீங்கள் கடந்த சீசன்களை பார்த்துவிட்டு சிலவற்றை கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அதில் போதுமான துப்பு இல்லை" என்ற கமல் "இப்போது சில ரசிகர்கள் உங்களிடம் கேள்வி கேட்பார்கள்" என்றார்.

"ஒண்ணு அழகா இருக்கீங்க.. இல்லனா அழுகையா இருக்கீங்க.. எப்ப விளையாடுவீங்க..? என்று அக்க்ஷராவைக் கேள்வி கேட்டு சங்கடப்பட வைத்தார் ஒருவர். " ஹோம் சிக். ரெண்டு வாரமா டல் ஆயிட்டேன்" என்று சொல்லி சமாளித்தார் அக்ஷரா. "பிரியங்கா.. தைரியமா விளையாடுங்கள்".. என்று ஒரு ரசிகர் சொல்ல, "நான் ஸ்ட்ராங்கா இல்லைன்ற மாதிரி வெளியே தெரியலாம். நான் எமோஷனலான நபர்தான். நட்புக்கு முக்கியம் தருவேன். ஆனால் விளையாட்டும் முக்கியம் என்று எனக்கு தெரியும். இதுவரைக்கும் கரெக்டாதான் பண்ணி இருக்கேன்னு நம்பறேன்" என்று இன்னமும் சாதித்தார் பிரியங்கா.

அக்ஷரா
அக்ஷரா

"உங்களை அழைத்துக் கொண்டு போவேன் என்று ராஜு சொல்கிறாரே.. ஏன் நீங்கள் தனியாக செல்ல முடியாதா?".. என்று இமானிடம் ஒருவர் கேட்ட வில்லங்கமான கேள்விக்கு "நான்தான் அவரை கூட்டிட்டு போகணும் என்று சொல்லி சமாளித்தார் அண்ணாச்சி. "நூறு நாள் என்று சொன்னதில் சொன்னதில் உள்குத்து இருக்கிறதா?" என்று அந்த ரசிகர் மேலும் கலவரத்தை உண்டாக்க முயல '106 நாள்' என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார் ராஜு.

"விளையாட்டில் சுணக்கம் ஏற்பட்டதற்கு அபிஷேக்கின் re-entry ஒரு காரணமா? என்று நிரூப்பிடம் ஒரு ரசிகர் கேட்டது முக்கியமான கேள்வி. "அதுவும் ஒரு காரணம்" என்று நிரூப் பதில் சொல்ல, அபிஷேக் 'அடக்கடவுளே'… என்பது போல் வானத்தைப் பார்த்தார். "சில டாஸ்க்குகளையும் நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை" என்று நிரூப் சொன்னது பிரதான காரணம்.

ராஜு - இமான் அண்ணாச்சி
ராஜு - இமான் அண்ணாச்சி

"ரொம்ப பாசமா இருக்கீங்க… இன்னொரு பக்கம் கோவமா இருக்கீங்க இதை மற்றவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்களா?.. என்ற கேள்வி தாமரையிடம் கேட்கப்பட? “என்னளவில் நான் உண்மையாகத்தான் நடந்து கொள்கிறேன்” என்று சேஃப் ஆக பதில் அளித்தார் தாமரை.

“இதுவரைக்கும் ‘லைல்ட்கார்ட் என்ட்ரி’யில் வந்து யாரும் ஜெயித்தது இல்லை. நீங்கள் அந்த சாதனையை ஏற்படுத்துவீர்களா?” என்று சஞ்சீவ்விடம் ஒருவர் கேட்டபோது அவருக்கே அதில் நம்பிக்கை இல்லை. எனவே “நல்லதையே நம்புவோம்” என்று மையமாக பதில் சொல்ல ‘அடடே.. என்ன மாதிரியே பேசறானே’ என்று கமல் உள்ளூர மகிழ்ச்சி அடைந்து இருக்கலாம். என்றாலும் “எது நல்லது?” என்று அவர் இடக்காக சஞ்சீவியை மடக்கியது சுவாரசியமான குறும்பு. ‘அக்ஷராவிற்கும் தமக்கும் உள்ளது வெறும் நட்பு மட்டுமே’ என்கிற அதிமுக்கியமான விஷயத்தை சபையில் பதிவு செய்தார் வருண். “நீங்க பாரபட்சம் பார்க்கறீங்களா?.. வீட்ல பேசிக்கிறாங்க..” என்று ஒருவர் கேட்டபோது “யார் வீட்ல?.. என்று வெள்ளந்தியாக சிபி கேட்டது சபையில் சிரிப்பை வரவழைத்தது. “எனக்கு நான் உண்மையாகத்தான் இருக்கிறேன்” என்று சத்தியம் செய்தார் சிபி.

சிபி
சிபி

“உங்களை கொளுத்திக்கிட்டு மக்களுக்கு என்டர்டையின்மென்ட் தருவேன்னு சொல்றீங்க.. மக்கள் அதை ஏற்பார்கள் என்று நினைக்கிறீர்களா?”.. என்று மிகச் சரியான கேள்வியை முன் வைத்தார் ஒருவர். “ரொம்ப குளுருதுன்னா நெருப்பாக இருப்பதில் தவறில்லை” என்று குழப்பமான மொழியில் பதிலளித்து சமாளித்தார் அபிஷேக்.

“முயல் ஆமை கதை மாதிரி ‘ஸ்லோ அண்ட் ஸ்டெடி’ பாணில ஜெயிக்கணும்ன்றதுதான் உங்க பிளானா?” என்று ராஜுவிடம் ஒருவர் கேட்க “இது கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு.. ஆனால் என் இயல்புபடிதான் போயிட்டு இருக்கேன்” என்று வழக்கம் போல் சலனமில்லாத முகத்துடன் பதிலளித்தார் ராஜு. (யப்பா.. சாமி.. கடைசி வரை இப்படியே வண்டி ஓட்டுவீங்க போல!). “உங்க ஆரம்பகால கவுன்ட்டர் குறும்புகளை நாங்க மிஸ் பண்றோம். மறுபடியும் ஆரம்பியுங்கள்” என்று அந்த ரசிகர் சொன்னது சரியான விஷயம்.

காப்பாற்றப்பட்டவர்களின் வரிசை என்னும் சஸ்பென்ஸ்

“ஓகே நாமினேஷன்ல 8 பேர் இருக்கீங்க.. யார் யார் காப்பாற்றப்படுகிறார்கள் என்பதை பிரேக்கிங் நியூஸாவே பார்த்துடுவோம்” என்று திரையில் சஸ்பென்ஸை வைத்தார் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சி அறுபது நாட்களை தாண்டிவிட்ட நிலையில் ‘யார் முதலில் காப்பாற்றப்படுகிறார்கள் என்கிற வரிசை மிக முக்கியமானது. போட்டியாளர்கள் பீதியுடன் பார்த்துக் கொண்டிருக்க, அடுத்தடுத்து விடைகள் வந்தன. ராஜூ, பிரியங்கா ஆகியோர் முதல், இரண்டாம் இடத்தில் ஏற்கெனவே காப்பாற்றப்பட்டிருக்கிறார்.

பாவனி
பாவனி

அடுத்ததாக பாவனி, சிபி, தாமரை, இமான், அக்ஷரா என்கிற வரிசையில் விடைகள் வந்தன. இந்த வாரத்தில் அண்ணாச்சி சற்று பின்தங்கிப் போயிருக்கிறார். மர்ம ராணியாக உலவினாலும் தனியாக விளையாடுவதால் பாவனிக்கு ஆதரவு கூடியிருக்கிறது எனலாம். சிபியின் நேர்மையும் தாமரையின் துடுக்குத்தனமும் அவர்களைக் காப்பாற்றி விடுகிறது. அவ்வப்போது சோர்ந்துவிட்டாலும் தனது இருப்பைத் தொடர்ந்து காண்பிப்பதால் அக்ஷரா தொடர்ந்து சேவ் ஆகிறார் என்று தோன்றுகிறது.

மரப்பசு
மரப்பசு
something happened
something happened

புத்தகப் பரிந்துரை

“தி.ஜானகிராமன் எழுதியதில் மோகமுள், அம்மா வந்தாள் நாவல்களைத்தான் பொதுவா பரவலா சொல்வாங்க. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த நாவல் ‘மரப்பசு’. இது கணையாழி இதழில் தொடராக வந்த போதே பாதி படித்திருக்கிறேன். படப்பிடிப்பு காரணமாக பிறகு தொடர முடியவில்லை. நூலாக வெளிவந்தவுடன் ஆவலாக வாங்கிப் படித்தேன். ‘பாலியல் வேட்கை என்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது’ என்னும் மரபை இந்த நாவல் உடைத்திருக்கிறது. இந்த மீறல்தன்மைதான் இந்தப் படைப்பின் அடிநாதம்”.. என்ற கமல் “Joseph Heller எழுதிய Something Happened என்னும் நாவலுக்கும் மரப்பசுவிற்கும் இருந்த சில ஒற்றுமைகளை வியந்தார். ‘நாயகிக்கு எதைப் பார்த்தெல்லாம் சிரிப்பு வந்தது’ என்கிற பட்டியலோடுதான் இரண்டு படைப்புகளும் துவங்கும்” என்கிற ஒற்றுமையை குறிப்பிட்ட கமல் “தெனாலி படத்தில் வந்த பயம்.. பயம்.. வசனத்திற்கும், இந்த நாவல் தந்த பாதிப்புதான் காரணம்” என்பதையும் கூடவே குறிப்பிட்டார்.

யார் இந்த வார எலிமிஷேன்? – அதிர்ச்சி தந்த பிரேக்கிங் நியூஸ்

“ஓகே.. பாக்கி மூணு பேரு இருக்கீங்க. அடுத்தடுத்து உட்காருங்க..” என்று கமல் சொன்னதும் வருண், அபினய், அபிஷேக் ஆகிய மூவரும் நெருங்கி அமர்ந்தனர். திரையில் படங்கள் ஓடின. அடுத்து காப்பாற்றப்படுபவரைத்தான் அறிவிப்பார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போது ‘Evicted’ என்கிற சிவப்பு முத்திரையுடன் அபிஷேக்கின் புகைப்படம் உறைந்தது. போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் இப்போது சற்று ஜெர்க் ஆகியிருப்பார்கள்.

அபிஷேக் இதை உள்ளூற எதிர்பார்த்திருப்பார்போல. ஆனால் அதையும் தாண்டிய பதைபதைப்பு முன்னர் அவரிடம் தெரிந்து கொண்டிருந்தது. சலனமில்லாத முகத்துடன் எழுந்த அபிஷேக் “யாரும் அழுது சீன் போடாதீங்க” என்று ஒவ்வொருவரையும் அரவணைத்துக் கொண்டார். அபிஷேக்கின் எலிமிஷேனில் அதிகம் கலங்கியவர்கள் பிரியங்கா மற்றும் பாவனி. ‘ஹப்பாடா!’ என்கிற ஃபீலிங்கை நிரூப் மறுபடியும் அனுபவித்திருப்பார்.

அபிஷேக்
அபிஷேக்

மேடையில் அபிஷேக்கை வரவேற்ற கமல் “நீங்க ஸ்பெஷல். இரண்டாவது எலிமினேஷன். இதில் ஒரு சேதி இருக்கிறது. உங்களுக்கு பயண வீடியோ கிடையாது. அதற்குப் பதிலா உங்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளை வீட்டிற்குப் போய் மறுபடியும் பாருங்க. நான் என்னுடைய பழைய படங்களைப் பார்ப்பதின் மூலம் பல கசப்பான பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அது உங்களுக்கும் நிகழலாம். உங்கள் அறிவை அப்படிப் பயன்படுத்துங்க. அப்பா காசை தர்மம்னு நெனச்சு பையன் செலவு பண்ணலாம். ஆனா பார்க்கறவங்களுக்கு அது திமிர்-ன்ற மாதிரி தோணும்” என்றெல்லாம் உள்குத்து பன்ச் வைத்து கமல் ஆலோசனை சொல்ல “கமல் படங்களை ரெப்ரன்ஸ் வைத்து நான் நிறைய பேசியிருக்கேன். கமல் சாரே எனக்கு ரெப்ரன்ஸ் சொல்றது சந்தோஷம்” என்று பதில் பன்ச் பேசினார் அபிஷேக்.

பிறகு அகம்டிவி வழியாக போட்டியாளர்களிடம் அபிஷேக் பேசிய போதுதான் பாவனிக்கு துர்கா என்கிற இன்னொரு பெயர் இருக்கும் அரிய விஷயம் தெரிய வந்தது. “உன் வலி எனக்குப் புரியும்” என்று அபிஷேக்கிடம் ராஜூ வருந்தியதில் அர்த்தம் இருந்தது. “உன்னால எனக்குப் பாதிப்பு இல்ல. அப்படி யாராவது நெனச்சா.. தப்பு. நீ பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி மூஞ்சியையெல்லாம் மாத்திக்க வேணாம்..(?!) உன்னைப் பத்தி தெரிஞ்சவங்களுக்குத்தான் உன்னை நல்லா புரியும்” என்று அழுகையுடன் விடை தந்தார் பிரியங்கா. அபிஷேக்கை வாழ்த்தியனுப்பிய கமல், பிறகு தானும் கிளம்பிச் சென்றார். (உடம்பைப் பார்த்துக்கங்க.!).

எலிமிஷேனக்குப் பிறகு வீட்டின் சூழல்

“பின்னால குத்தறதை மட்டும் இங்க செய்யலாமாம். ஆனா மூளைச்சலவை மட்டும் கூடாதாம்” என்று சர்காஸ்டிக்காக சொல்லிக் கொண்டிருந்தார் பிரியங்கா. அருகில் இருந்த நிரூப்பை குண்டூசியால் குத்துவதுதான் அவரது நோக்கம் என்பது தெளிவாகப் புரிந்தது. என்றாலும் நாளை காலையிலேயே நிரூப்பிற்கு முத்தா கொடுத்து சமாதானமும் ஆகி விடுவார் என்பது நமக்கு மட்டுமல்ல; நிரூப்பிற்கும் நன்கு தெரியும். எனவே கோபம் ஆகாமல் நிரூப் அடக்கி வாசித்தார். “அபிஷேக்கிற்கு இருந்த யூட்யூப் வெறுப்பு பிக்பாஸ் வரை வந்துடுச்சோ?” என்று அமீர் சந்தேகப்பட்டது சரியான பாயின்ட். ஆனால் அப்படி நிகழ்ந்திருந்தால் அது தவறு. பிக்பாஸ் விளையாட்டில் அபிஷேக் என்ன செய்தார் என்பதை மட்டுமே மதிப்பிட்டிருக்க வேண்டும்.

“அவன் வந்துதான் சில டாஸ்க்குகளை சுவாரசியம் பண்ணான்” என்று அபிஷேக்கை விட்டுத்தராமல் பேசினார் பிரியங்கா. ஸ்கூல் டாஸ்க்கில் சொதப்பினாலும் டிவி டாஸ்க் சுவாரசியமானதற்கு அபிஷேக் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. கமலும் இதை வழிமொழிந்தார். அபிஷேக்கை குற்றம் சொன்னதால் அமீரின் மீது எரிச்சலானார் பிரியங்கா.

பிக் பாஸ் பிரியங்கா
பிக் பாஸ் பிரியங்கா

“பொலிட்டிக்கல் கேம்-ன்றது ரொம்ப பெரிய வார்த்தை. இமான் அதைச் செய்யறார்னு பிரியங்கா கிட்ட நிரூப் சொல்லியிருக்கான்” என்று அண்ணாச்சியை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார் ராஜூ. நிரூப்பை இனி இமானிடம் அண்ட விடாமல் செய்ய வேண்டும் என்பது அவரின் பிளானோ, என்னவோ. பாவம். திரிசங்கு சொர்க்கம் போல எங்கும் நிரந்தர இடம் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் நிரூப். “ஆங்கிலத்தில் அப்படி ஸ்டைலா சொல்லியிருப்பான். ஆழமான அர்த்தத்துல சொல்லியிருக்க மாட்டான்” என்று நிரூப்பிற்கு ஆதரவாக சஞ்சீவ் பேசிக் கொண்டிருந்தார்.

ஒருவருக்கு அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டும் என்பார்கள். ஆனால் அபிஷேக்கிற்கு அது இரண்டாம் முறையும் தட்டியது. தனது ஓவர்ஆக்ட்டினால் அதிர்ஷ்ட தேவதையையே அபிஷேக் வெறுப்பேற்றி அனுப்பியதில் நமக்கான பாடமும் உள்ளது. மூன்றாம் முறை கதவு தட்டப்பட மாட்டாது.