Published:Updated:

பிக் பாஸ் 65: பிரியங்காவின் அழுகை நாடகமா? நாமினேஷனில் நடந்தது என்ன?

பிக் பாஸ்

தன்னுடைய நாட்டாமை வேலையை சஞ்சீவ் எடுத்துக்கொண்டதால், கிச்சன் அருகே உள்ள சோபாவில் தனியாகப் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்த பிரியங்காவைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருந்தது.

பிக் பாஸ் 65: பிரியங்காவின் அழுகை நாடகமா? நாமினேஷனில் நடந்தது என்ன?

தன்னுடைய நாட்டாமை வேலையை சஞ்சீவ் எடுத்துக்கொண்டதால், கிச்சன் அருகே உள்ள சோபாவில் தனியாகப் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்த பிரியங்காவைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருந்தது.

Published:Updated:
பிக் பாஸ்

அபிஷேக்கின் வெளியேற்றத்திற்குப் பிறகு பிக்பாஸ் வீட்டின் தட்ப வெப்பம் கணிசமாக மாறியிருக்கிறது. ‘ஒரே ஆளை ரெண்டு தடவை மக்கள் வெளிய அனுப்பறாங்கன்னா, என்னவா இருக்கும்?..’ என்று போட்டியாளர்கள் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ரசிகர்களின் கேள்விகளும் இவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

அபிஷேக் வெளியேறியது குறித்து நிரூப் உள்ளூற நிம்மதி அடைந்திருக்கிறார் என்றாலும் அவரால் முழுமையாக மகிழ்ச்சியடைய முடியவில்லை. பிரியங்காவின் சோகம் அதற்கு காரணம். எவிக்ஷனில் இருந்து தப்பிக்க அவர் சஞ்சீவிடம் ஆடிய விளையாட்டில் வேண்டுமென்றே தோற்றாரோ என்றுகூட தோன்றுகிறது. இதற்கு முன்பே அபினய்யிடம் நாணயத்தை ஒப்படைக்கவும் அவர் தயாராகிவிட்டார். ‘இம்பூட்டு நல்லவனடா நீயி?” என்று மக்கள் அனுதாபம் காட்டுவார்கள் என்பது அவரது உத்தியா?

இன்னொரு பக்கம் பார்த்தால் சளசளவென்று பேசிக் கொண்டிருந்த பிரியங்கா, அமைதியே உருவான பெண்ணாக மாறி ஆச்சரியப்படுத்துகிறார். “ஏதாவது பேசும்மா..” என்று நாமே கெஞ்சும்படி அப்படியொரு அமைதி. நிரூப்பை நாமினேட் செய்யும் போது இவர் உருகி அழுதது உண்மையா அல்லது உத்தியா? நிரூப் – பிரியங்கா நாடகத்தை நாம் புரிந்துகொள்வதற்குள் சீசனே முடிந்துவிடும் போல் இருக்கிறது.

பிக் பாஸ்
பிக் பாஸ்

எபிசோட் 65-ல் என்ன நடந்தது?

“நாம தெளிவா இருக்கோம்ன்னு நெனச்சிட்டு இருந்தா மக்கள் வேற கணக்கைப் போட்டு குழப்பறாங்களே?” என்றார் சஞ்சீவ். “கவுன்ட்டர் குறைஞ்சிடுச்சின்னு சொல்றாங்களே?” என்று ராஜூ தன் பிரச்சினையை அவரிடம் சொல்ல “அதுக்காக. நீ கேவலமா காமெடி பண்ணி கோபப்பட வைக்காதே” என்று ஜாலியாக சொன்னார் சஞ்சீவ். ராஜூவிடம் பல விமர்சனங்கள் இருந்தாலும் அவரிடம் இருக்கும் அபாரமான நகைச்சுவைத் திறமைதான் அவரை இதுவரை காப்பாற்றி வருகிறது. அந்த ஆயுதத்தையும் அவர் கூர் மழுங்க வைப்பது நல்லதல்ல.

‘ஸ்ட்ரிக்ட் ஆபிசர்’ என்கிற ரோலை சஞ்சீவ் திறமையாக கையாள்கிறார். “மறுபடியும் தாமரையே பாத்திரம் விளக்கிட்டு இருக்காங்க.. ஏன். வேற யாரும் செய்ய மாட்டாங்களா. நீதானே தலைவரு.. நீ கூட செய்யலாமே?” என்று அவர் நிரூப்பிடம் ஆங்கிலத்தில் எகிற, “யக்கா. உன்னால நான் திட்டு வாங்கறேன்” என்று அவர் எழுந்து சென்று தாமரையிடம் செல்லமாக கோபித்துக்கொண்டார். அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்து மருமகளை குற்றவுணர்விற்கு ஆளாக்கும் மாமியார் உத்தியை தாமரை பின்பற்றுகிறாரா அல்லது உண்மையிலேயே ‘நம்ம வீடு’ என்று கருதி நிபந்தனையற்ற உழைப்பைத் தருகிறாரா? அடுத்த அணி பிரிக்கும் வரை, ஏற்கெனவே உள்ள அணி நடைமுறையில் இருப்பதுதானே மரபு? “ யாரும் இல்லை’ என்று ஏன் சொல்கிறார்கள்?

தன்னுடைய நாட்டாமை வேலையை சஞ்சீவ் எடுத்துக்கொண்டதால், கிச்சன் அருகே உள்ள சோபாவில் தனியாகப் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்த பிரியங்காவைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருந்தது. “எப்படியெல்லாம் கலகல..ன்னு பேசும்?” (கேமிற்காக நீ ஒண்ணு பண்றே தெரியுமா.. நல்லா பண்றே.. பார்க்க நல்லாயிருக்கு. ஆனா என் கிட்ட பண்ணாதே!).

‘லுலுவாய்க்கு’ நடந்த தலைவர் போட்டி

‘சுத்தி சுத்தி வந்தீக’ என்கிற தலைப்பில் இந்த வாரத்தின் தலைவர் போட்டி நடந்தது. மியூசிக்கல் சேர். இதில் யார் தோற்கிறாரோ, அவர் மற்றவர்களிடம் பேசி தனக்கான இருக்கையை சம்பாதிக்கலாம். விட்டுத் தருபவர் வெளியேறுவார். ‘எப்படியும் பாவனி தன் நாணயத்தைப் பயன்படுத்தி தலைவர் பதவியைப் பிடுங்கப் போகிறார்’ என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஏனெனில் நாணயத்தை உபயோகிப்பதற்கான கடைசி வாரம் இதுதான். அதற்கு மேல் நாணயம் செல்லுபடியாகாது.

எனவே சம்பிரதாயத்திற்காக நடந்த இந்தப் போட்டியை மக்கள் இடதுகையால் கையாண்டார்கள். “பாவனி.. தலைவர் பதவியை கொண்டு போகப் போறா..” என்பதை பாட்டாகவே பாடிய இமான், போட்டிக்காக ஓடும் போது பல குறும்பான கோணங்கித்தனங்களைச் செய்து கொண்டிருந்தார். பிக்பாஸ் வீட்டின் டாஸ்க்குகளை அண்ணாச்சி எப்போதுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாமலிருப்பது ஒரு நெருடல்தான். ஓடியபோது வருணும் பல டான்ஸ் ஸ்டெப்புகளை ஜாலியாக போட்டபடி இருந்தார். பாவனி நாணயத்தைப் பயன்படுத்துவார் என்பது தெரிந்தும் இறுதிவரை முட்டி மோதிய அக்ஷராவின் கடமையுணர்ச்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

முதலில் அவுட் ஆன தாமரைக்கு யாரும் விட்டுத்தரவில்லை. சும்மாவே ஆடுபவருக்கு எதற்கு சலங்கை கட்டி விடவேண்டும் என்று நினைத்திருக்கலாம். இரண்டாவதாக அவுட் ஆன அக்ஷராவிற்கு சிபி விட்டுக் கொடுத்தார். (பார்றா!). “என் தலைமையை நியாயமாகவும் ஜாலியாகவும் செய்வேன்” என்று வாக்கு தந்தார் அக்ஷரா. இந்தச் சமயத்தில் எழுந்திருப்பதுபோல் நடித்து தன் நாற்காலியில் உள்ள தூசைத் தட்டிய பிரியங்காவின் குறும்பு ரசிக்கத்தக்கதாக இருந்தது.

மூன்றாவதாக அவுட் ஆன சஞ்சீவ் “ஏற்கெனவே நான் வைல்ட் கார்ட்ல வந்த வெறுப்புல இருப்பீங்க. இதுல தலைவர் பதவிக்கு வேற ஆசைப்பட்டா..” என்று மக்களின் சைக்காலஜி தெரிந்து இணக்கமாகப் பேசினார். “இருந்தாலும் பாரபட்சமில்லாம, நியாயமா என் பதவியை கையாள்வேன்” என்று இவர் சொன்னதும் ராஜூ தன் நாற்காலியை விட்டுக் கொடுத்தார். தலைவர் பதவிக்கு போட்டியிடும் போதெல்லாம், இமானைப் போலவே ராஜூவும் வேண்டுமென்றே சுணக்கம் காட்டுவது போல் தெரிகிறது. தலைவராகி மற்றவர்களை அதிகாரம் செய்யும்போது பலரின் பகையைச் சம்பாதிக்க நேரிடும் என்பதால் இதிலிருந்து ராஜூ எஸ்கேப் ஆகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. “ராஜூ.. ஓட முடியலையா?” என்று கிண்டலடித்தார் அக்ஷரா.

அக்ஷரா - பாவனி
அக்ஷரா - பாவனி

அக்கா – தம்பியின் பிரிக்க முடியாத பாசப் பிணைப்பு

நான்காவதாக அவுட் ஆன பிரியங்கா “உன் கிட்டதான் காயின் இருக்குல்ல” என்று பாவனியை கேட்க “நான் ஜெயிச்சு தலைவராகணும்னு விருப்பப்படறேன்” என்றார் பாவனி. இந்தச் சமயத்தில் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. நிரூப் தன் நாற்காலியை விட்டுத்தர “பார்றா” என்று மக்கள் கோராஸாக கூக்குரல் எழுப்பினார்கள். பிரியங்காவின் சோகம் நிரூப்பைத் தாக்கியிருக்கும் போல. “நீ கொடுத்து நான் ஒண்ணும் ஜெயிக்கத் தேவையில்ல” என்பதை வார்த்தைகளால் குத்திய பிரியங்கா பிறகு நிரூப்பின் விட்டுக்கொடுத்தலை ஏற்றுக் கொண்டார்.

“நிரூப்பிற்கு அதிகாரம்னா ரொம்ப பிடிக்கும். அவனேதான் இதைச் சொல்லியிருக்கான். கேம்முன்னு வந்தா யாருக்கும் விட்டுத்தராததுதான் அவன் ஸ்டைல். அன்பை எனக்கு கொடுக்கத்தான் பிடிக்கும். வாங்கறது பிடிக்காது. ஆனா நிரூப்பே இப்படி மாறியிருக்கான்னா. எனக்கு உற்சாகமா இருக்கு” என்பது போல் சந்தோஷமானார் பிரியங்கா. நிரூப்பிடமிருந்து நாற்காலியை சம்பாதித்தாலும் ஐந்தாவது ரவுண்டில் தோற்றார் பிரியங்கா. அவரால் எளிதில் ஓட முடியவில்லை என்பது ஒரு காரணம்.

ஆறாவதாக அவுட் ஆன இமான், “போங்கடே.. உங்க தயவு ஒண்ணும் தேவையில்ல” என்று கெத்தாக நடனம் ஆடியபடியே சென்று விட்டார். ‘இந்தாளை கடைசி வரை கூட்டிட்டு போறதுக்குள்ள நான் வெளில போயிடுவேன் போலிருக்கு’ என்பது ராஜூவின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம். ஏழாவதாக அவுட் ஆன அபினய், முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு கெஞ்சினாலும் யாரும் விட்டுத்தரவில்லை.

நிரூப்பின் தியாகம் – உண்மையா அல்லது உடான்ஸா?

அபினய் தோற்றதும் அவரை தனியாக ஓரங்கட்டிய நிரூப் ஒரு காரியம் செய்தார். “என் காயினை நீ வெச்சுக்கோ. நாமினேஷன்ல வந்தா தப்பிச்சுக்கோ” என்று திடீர் சலுகை தர, குழப்பமான அபினய் “அப்புறமா பார்க்கலாம்” என்று விலகி விட்டார்.

எட்டாவதாக அவுட் ஆன அமீர், பிரபுதேவா ஸ்டைல் டான்ஸ் எல்லாம் ஆடி வேடிக்கை காண்பித்து விட்டு “நான் தலைவர் பதவியை இன்ட்ரஸ்ட்டிங்கா பண்ணுவேன். ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வைப்பேன்” என்று வாயை விட்டதும் “அப்ப நாங்க இதுவரை ஒழுக்கமா இல்லையா.. என்னா கதை?” என்று மக்கள் பாய்ந்தார்கள். ‘ஒரு பாயிண்ட் சொல்லுங்க” என்றார் சஞ்சீவ். “பிக்பாஸ் கூப்பிட்டவுடனே யாரும் உடனே வரதில்லை. தலைவரே இதை மதிக்கறதில்லை” என்று அமீர் சொல்ல, தன் நாற்காலியை விட்டுத் தந்தார் சஞ்சீவ். இதற்குப் பின்னால் இருப்பது சஞ்சீவின் தியாகமா அல்லது முதுகுவலியா என்று தெரியவில்லை. ஓடும்போதே அவர் நிறைய சிரமப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

‘ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் புரியும்’ என்பதைப் போல ஒரு வைல்ட் கார்ட், இன்னொரு வைல்ட் கார்டிற்கு செய்த உதவியா இது? பிறகு தன் முதுகுவலியை மறைத்துக் கொண்டு “தம்பி.. கையெழுத்து போடணும்னு கூப்பிட்டுச்சு. களுத. போட்டுட்டு வருவோம்னு கெளம்பிட்டேன்” என்றபடி காமிரா முன்பாக வடிவேலு ஸ்டைல் கெத்து காட்டினார் சஞ்சீவ்.

சஞ்சீவ்
சஞ்சீவ்

ஒன்பதாவதாக அவுட் ஆன அக்ஷரா, தன் பிரியமான நண்பரான வருணிடம் சென்று கேட்க பிறகு என்ன நடந்தது என்பதில் சஸ்பென்ஸே தேவையில்லை. வருண் விட்டுக் கொடுத்தார். பத்தாவதாக அவுட் ஆன பாவனி, நாற்காலிக்காக மிஞ்சியிருந்த போட்டியிலிருந்த போட்டியாளர்களிடம் கெஞ்ச “அதான் உன்கிட்ட காயின் இருக்குல்ல” என்று அவர்கள் மறுத்தார்கள். “நான் போட்டில ஜெயிச்சு பதவியை அடைய ஆசைப்படறேன்” என்றார் பாவனி. (இதெல்லாம் நம்பற மாதிரியே இல்லையே?!). “ஓகே. ஒருவேளை அக்ஷரா ஜெயிச்சா. நீ காயின் உபயோகிக்கக்கூடாது சரியா..” என்று அமீர் வில்லங்கமான டீலை போட ரிவர்ஸ்கியர் போட்டு பின்வாங்கி விட்டார் பாவனி.

கடைசி ரவுண்ட். அமீருடன் நெருக்கமாக ஓடி நெருக்கடி தர முயன்றார் அக்ஷரா. ஆனால் இசை நின்றவுடன் ஒரே பாய்ச்சலாக அமீர் சென்று பாய, நாற்காலியே இரண்டாக உடைந்து போனது. (முதல்வர், துணை முதல்வர் மாதிரி இரண்டு தலைவர்களுக்கான குறியீடு போல). அமீர் கடைசியாக வந்திருந்தாலும் விடாக்கண்டனாக அவரிடம் கெஞ்சினார் அக்ஷரா. “நான் முதன் முதலா ஜெயிச்ச போட்டி. அதைப் போய் கேட்கறியே?” என்றார் அமீர். “எப்படியும் பாவனி இதோ பிடுங்கிடப் போறாங்க. அதுக்கு இவ்ள சீனா?” என்பது அக்ஷராவின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம்.

பாவனி
பாவனி

தலைவர் போட்டியில் சுவாரசியமில்லாத டிவிஸ்ட்

“வாழ்த்துகள் அமீர்” என்று ரைட் இண்டிகேட்டரைப் போட்ட பிக்பாஸ், அடுத்து பாவனியிடம் சென்று ‘நாணயத்தைப் பயன்படுத்தப் போகிறீர்களா?” என்று லெஃப்ட் இண்டிகேட்டரைப் போட்டார். “ஆமாம்.. பிக்பாஸ்” என்று பாவனி சொனனதில் யாருக்கும் ஆச்சரியமில்லை. இந்தச் சமயத்தில் பிக்பாஸ் பாவனிக்குத் தந்த தண்டனை, ‘கருப்பன் குசும்புக்காரன்” என்று சொல்ல வைத்தது. ‘வீட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் பாவனி உதவியாளராக இருக்க வேண்டுமாம்’. ஆண்களின் உதவியாளர் என்று ஒருவேளை பிக்பாஸ் சொல்லியிருந்தால் அது பாவனிக்குத்தான் அட்வான்டேஜ். பாவனியிடம் வேலை வாங்குவதற்குப் பதிலாக அவர் சொல்லும் வேலைகளை அவர்கள் செய்து விட்டுப் போவார்கள். அப்படியே வேலை வாங்கினாலும் எளிதான வேலைகளையே வாங்குவார்கள்.

நிரூப்
நிரூப்

ஆண்களின் கதை இப்படி. ஆனால் இரண்டு பெண்களை ஒன்றாக உட்கார வைத்தாலே அதிலிருந்து நூறு ஃபுட்டேஜ்களுக்கான வீடியோவை தேற்றி விட முடியும் என்கிற சூட்சுமம் பிக்பாஸிற்கு தெரியும். எனவேதான் ‘பெண்களின் உதவியாளர்’ என்று வில்லங்கமான சட்டவிதியை அமல்படுத்தியிருக்கிறார். எதிர்பார்த்தபடியே இந்த விஷயம் உடனே வெடிக்க ஆரம்பித்தது. அக்ஷரா தன்னுடைய அணி வேலையை செய்யச் சொல்லி பாவனியிடம் கேட்க “உன்னோட பர்சனல் வேலையை மட்டும்தான் செய்யணும்னு ரூல் சொல்லுது” என்று சட்டவிதியின் இடைவெளிக்குள் தப்பிக்க முனைந்தார் பாவனி. “சும்மா கேட்டுப்பார்த்தேன். நீ செய்யறியான்னு செக் பண்ணிப் பார்த்தேன். அதுக்கே ஏன் இவ்ள சூடாவுறே?” என்று பின்வாங்கினார் அக்ஷரா. பரிசுப் பொருட்கள் வந்தன. பிரியங்காவின் குரல் கூட இப்போது சற்று ஓய்ந்து விட்டது. ஆனால் அதை ஈடுகட்டும் வகையில் அக்ஷராவின் டெஸிபல் உயர்ந்திருக்கிறது. கான்வென்ட் பெண் மாதிரி “ஹே..” என்று கத்திக் கொண்டே அவர் ஓடுகிற சமயங்களில் பல வீடுகளில் தொலைக்காட்சி விரிசல் விட்டிருக்கலாம்.

நாமினேஷன் சடங்கில் பெய்த கண்ணீர் மழை

நாமினேஷன் வைபவம் ஆரம்பித்தது. புது வரவு என்று கடந்த வாரத்தில் தப்பித்த சஞ்சீவ், அமீர் ஆகியோரின் பெயர்களும் லிஸ்டில் வந்து விட்டது. அதிலும் அமீருக்குத்தான் டேமேஜ் அதிகம். நிரூப்பின் பெயரை நாமினேட் செய்யும் போது சிவாஜிகணேசனுக்கே டஃப் பைட் தரும் அளவிற்கு கண்கலங்கினார் பிரியங்கா. “டேய்.. டேய்.. க்ளோசப் போடா” என்று எடிட்டிங் டீமில் யாரோ அலறியதில் டைட்டான க்ளோசப் காட்சிகள் நமக்கு கிடைத்தன. ஆனால் நிரூப் பிரியங்காவை நாமினேட் செய்யவில்லை.

இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இடம்பிடித்த அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் பின்வருமாறு: அபினய், (அட! முதல் இடம்!) இமான், அமீர், நிரூப், அக்ஷரா தாமரை மற்றும் சிபி. “நாணயத்தைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா?’ என்று நிரூப்பிடம் கேட்டார் பிக்பாஸ். “ஆம்” என்றார் நிரூப். எவிக்ஷன் பட்டியலில் இடம்பெறாத ஒருவரை அவர் தேர்ந்தெடுக்க வேண்டுமாம். “சஞ்சீவ்.. வெளியே போய்ட்டு வாங்களேன்.. ஜாலியா இருக்கும்” என்று “வாங்களேன். ஒரு கப் பாய்சன் சாப்பிடலாம்” என்பது போல் அழைத்த நிரூப், சஞ்சீவ் பெயரை நாமினேட் செய்தார்.

பிக் பாஸ் 65: பிரியங்காவின் அழுகை நாடகமா? நாமினேஷனில் நடந்தது என்ன?

ஆனால் அப்படி எளிதாக நாமினேட் செய்து விட முடியாதாம். பிக்பாஸ் வீட்டின் விதிகள் கோக்குமாக்கானவை. Conditions apply என்று டிஸ்கிளைய்மர் போட்டு எப்போது வேண்டுமானாலும தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வளைத்துக் கொள்வார்கள். அவர் சஞ்சீவுடன் ஒரு போட்டியில் வென்றபிறகுதான் இது சாத்தியமாம். “ஓகே” என்று ஜெர்க்குடன் ஒப்புக் கொண்டார் நிரூப். பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த சஞ்சீவிடம் “ஏன் நிரூப். உன்னை தேர்ந்தெடுத்தான் தெரியுமா.. பிரியங்கா.. வருண் கிட்டலாம் அவனுக்கு பிரச்சினையிருக்கு. அதச் சொன்னா வில்லங்கமாயிடும். நீங்கதான் நியாயஸ்தரு” என்று ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார் அக்ஷரா.

எவிக்ஷன் பட்டியலில் அமீரின் பெயர் வந்தவுடன் பாவனி குற்றவுணர்விற்கு ஆளாகி “ஸாரிடா.. உன் தலைவர் பதவியைப் பறிச்சிட்டேன். எனக்கு வேற வழியில்ல. காயின் இப்போதான் உபயோகிக்க முடியும். கஷ்டமா இருக்கா?” என்று கேட்க “உனக்காக கூரை மேலே ஏறி கூட டான்ஸ் ஆடுவேன்” என்பதுபோல் “நோ.. ப்ராப்ளம்” என்று அமீர் சொல்ல “அவ்வளவு ஸ்வீட்டாடா நீ?. கவலைப்படாத. மக்கள் காப்பாத்திடுவாங்க” என்று அமீருக்கும் மக்களுக்கும் ஒரே சமயத்தில் அல்வாவைக் கிண்டித் தந்தார் பாவனி.

சஞ்சீவ்
சஞ்சீவ்

தாமரை அப்பாவியா, அடப்பாவியா?

தாமரை முழு அப்பாவி கிடையாது என்பதற்கான சாட்சியம் இப்போது கிடைத்தது. ‘எவிக்ஷன் பட்டியலில் ஏன் பிரியங்காவின் பெயர் வரவில்லை என்கிற கேள்வி தாமரையின் மண்டையைக் குடைந்தது. எனவே அக்ஷரா, வருண் ஆகியோரை அழைத்து “நீ யாருக்குப் போட்டே?” என்று ரகசியமாக விசாரித்துக் கொண்டிருந்தார். தாமரை, அக்ஷரா ஆகிய இருவர் மட்டுமே பிரியங்காவை நாமினேட் செய்திருக்கிறார்கள். “ரெண்டு ஓட்டு போட்டா வராது போல” என்று விளக்கம் சொன்னார் வருண்.

இன்னொரு பக்கம் அபினய், பாவனி, பிரியங்காவின் உரையாடல் நடந்து கொண்டிருந்தது “நீ யாருக்குப் போட்டே?” என்று பரஸ்பரம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். நிரூப்பின் பெயர் பட்டியலில் வந்ததில் பிரியங்காவிற்கு உள்ளூற சோகம். “நாம பேசினதை வெளில யார் கிட்டயும் சொல்லாதீங்க” என்றார் பிரியங்கா. நாமினேஷன் விஷயங்களைப் பற்றி போட்டியாளர்கள் கூடி உரையாடலாமா, கூடாதா என்பதை பிக்பாஸ் கறாராக தெளிவுப்படுத்த வேண்டும்.

சஞ்சீவிற்கும் நிரூப்பிற்கும் இடையே போட்டி என்றதும் ‘என்னவோ.. ஏதோ’ என்று பார்த்தால் அது ‘ஏழுகல்’ போட்டி. சிறு வயதில் விளையாடியது. அதுவே ஒரு சாதாரண விளையாட்டு. அதை இன்னமும் சுருக்கி “யார் அடிக்கும் பந்து மூன்று முறை கற்களைக் கலைத்துப் போடுகிறதோ.. அவரே தலைவர்” என்று பிக்பாஸ் அறிவித்த போது “இதெல்லாம் ஒரு போட்டியாய்யா?” என்று கேட்கத் தோன்றியது. சஞ்சீவ் பந்தை உருட்டிப் போட்டு விட்டு போங்காட்டம் ஆடினார். உயரத்தின் காரணமாக நிரூப்பால் குனிந்து பந்தை எறிய முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவரும் உருட்டிப் போட்டார். இதில் சஞ்சீவ் வெற்றி பெற்றதால் நிரூப்பின் நாணய கோரிக்கை செல்லுபடியாகவில்லை. அவர் எவிக்ஷன் பட்டியலில் நீடிப்பார்.

பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்
பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்

அக்ஷராவிற்கு நடந்த திருக்குறள் பாடம்

“எப்பத்தாம்மா விளையாடப் போறே?” என்று ஒரு பார்வையாளர் கேட்ட கேள்வி அக்ஷராவின் மண்டையைக் குடாய்ந்தது போல. “என்னதான் பண்றது? என்று அவர் கேட்க நிரூப்பும் வருணும் அவருக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தார்கள். “நீ வந்து உன் பிரச்சினையை மட்டுமே பார்க்கற.. அழுதுட்டே இருக்க.. மத்தவங்க பிரச்சினை வரும் போது ஒதுங்கிடற” என்று பாலபாடத்தை ஆரம்பித்த நிரூப்,. “இப்ப கார்ப்பரேட் ஆஃபிஸ் இருக்குல்ல” என்று கேட்க ‘தெரியாது” என்று பதில் அளித்தார் அக்ஷரா. Dad’s little princess எங்காவது வேலைக்கு சென்றிருப்பாரா என்ன?

“இந்த வீட்டிற்கு ஏன் வந்தே.. என்ன பண்ணப் போறே.. உன் லட்சியம் என்ன..?” என்று அனைத்துக் கேள்விக்கும் ‘தெரியாது.. தெரியாது…. ‘என்றே அக்ஷரா பதில் சொல்ல “உன்னை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு எங்களுக்கும் தெரியல. போய்த் தொலை” என்று இருவரும் கைகழுவி விட்டார்கள். மற்றவர்களுக்கு எதிராக ஏற்றி விடுவதில் மட்டும் அம்மணி கில்லி. அந்த விஷயம் நன்றாகத் ‘தெரியும்’. நிரூப் அதைக் கேட்டிருக்கலாம்.

அக்ஷரா
அக்ஷரா

நிரூப்… அம்பூட்டு நல்லவனா நீயி?

ராஜூ அதிசயமாக படுக்கையறையை பெருக்கிக் கொண்டிருக்க (கமல் அட்வைஸ்?) “பரவாயில்ல.. பயபுள்ள சொன்ன பேச்சைக் கேட்கறான்” என்று பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தார் புதிய தலைவர் பாவனி. “மூணு நாளா அங்க யாருமே பெருக்கலை” என்று அபினய்யும் பிரியங்காவும் கோராஸாக குற்றம் சொன்னார்கள். “இந்த அபிஷேக் திரும்பி வந்த போது ஷாக்காயிட்டேன். இவன் கிட்ட அப்படி என்ன திறமையிருக்குன்னு திருப்பி உள்ளே கொண்டு வந்தாங்கன்னு ஆச்சரியமா இருந்தது. நல்லா இன்ப்ளுயன்ஸ் பண்ணுவான். அதுதான் அவனுக்கு நல்லா தெரியும்” என்று அபிஷேக் பற்றி பேசிக் கொண்டிருந்தார் நிரூப்.

ஒரு காலத்தில் ரவுடி பேபி மாதிரி இருந்த நிரூப், இப்போது நிஜ பேபியாக மாறியிருப்பதைக் குறித்து அபினய் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருந்தார். “கண்ணாடி டாஸ்க்ல என்னை கிழி கிழின்னு கிழிச்சான். இன்னிக்கு என்னடான்னா..திடீர்னு காயினை கொண்டு வந்து தர்றான்” என்பது அவரின் ஆச்சரியம். ‘இமானாவது பரவாயில்லை. ராஜூ வேலையே செய்வதில்லை” என்று அபினய் குற்றம் சாட்ட “என் பப்லுவை அப்படி திட்டாதீங்க. அவன் நிறைய வேலை பண்றான். நீங்கதான் பார்க்கறதில்லை” என்று சொல்லி ஷாக் கொடுத்தார் அக்ஷரா. (அடடே! கேம் ஆட தெரிஞ்சிடுச்சு போலயே?!).