Published:Updated:

பிக் பாஸ் 67 : ``கத்தி கத்தி விளையாடுவோமா" - ஹைடெசிபலில் களேபரமான வீடு!

பிக் பாஸ்

பிக் பாஸ்: அப்படியொரு சிறப்பான நாடகத்தை அனைத்து அணிகளுமே வழங்கினார்கள்.

பிக் பாஸ் 67 : ``கத்தி கத்தி விளையாடுவோமா" - ஹைடெசிபலில் களேபரமான வீடு!

பிக் பாஸ்: அப்படியொரு சிறப்பான நாடகத்தை அனைத்து அணிகளுமே வழங்கினார்கள்.

Published:Updated:
பிக் பாஸ்

பிக்பாஸ் சீசன் 5-ன் இதுவரையான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்குகளில் மிகச் சிறப்பானது என்று இந்த ‘அரசியல் கட்சி’ டாஸ்க்கை சொல்ல முடியும். ஆண்கள் வேட்டி, சட்டையிலும் பெண்கள் சேலையிலும் அசலான அரசியல்வாதிகளின் தோற்றம் மற்றும் தோரணைகளைப் பின்பற்றியது பார்க்கவே அம்சமாக இருந்தது. பரஸ்பர கிண்டல்கள், நையாண்டிகள், குத்தல்கள், கோஷங்கள் என்பதைத்தாண்டி கொடி நடுவதில் சண்டை என்று ஒரு பக்காவான கட்சி நாடகத்தை அரங்கேற்றி விட்டார்கள்.

இந்தக் காட்சியை கமல் பார்த்துக் கொண்டிருக்கும்போது ‘அடடே! நல்லாப் பண்றாங்களே..?! நம்ம மய்யத்துலயே சேர்த்துடலாம் போலிருக்கே?” என்று கூட யோசிக்கக்கூடும். அப்படியொரு சிறப்பான நாடகத்தை அனைத்து அணிகளுமே வழங்கினார்கள்.

பிக் பாஸ் டாஸ்க்
பிக் பாஸ் டாஸ்க்

எபிசோட் 67-ல் என்ன நடந்தது?

‘புதுப்பேட்டை’ படத்திலிருந்து ‘எங்க ஏரியா உள்ள வராதே’ என்கிற பொருத்தமான பாடலை ஒலிக்கவிட்டார் பிக்பாஸ். ஆண்களும் பெண்களும் ஒரே கழிவறையை உபயோகப்படுத்தும்போது ஏற்படும் சில பிரத்யேகமான பிரச்னைகளைப் பற்றி பிரியங்கா முன்வைத்தது சிறப்பு. ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் வழக்கமுள்ளவர்கள். அப்படிச் செய்யும் போது கழிவுத்தொட்டியின் நீள்வட்ட மூடியை தூக்கி விட்டு உபயோகிக்க வேண்டும் என்பது பலருக்குத் தெரியாது. பெண்களுக்கு யூரின் இன்பெக்ஷன் வருவதற்கு இந்த அசுத்தமான பழக்கம் ஒரு காரணம்.

பிக்பாஸ் வீட்டிலுமா கலாசாரக் காவலர்கள்?

‘தாமரையிடம் வலுக்கட்டாயமாக கம்பத்தைப் பிடுங்கியது தவறு’ என்று நேற்று இமானைக் கூப்பிட்டு அமீர் சுட்டிக் காட்டிய காரணத்தினாலோ என்னவோ, அண்ணாச்சி ‘பழிக்குப்பழி, புளிக்குப் புளி’ என்று இன்று இறங்கி விட்டார் போல. அவர் அமீரைத் தனியாக அழைத்து “பாவனி கூட நீ பழகறது.. அடிச்சு பேசறதுல்லாம் ஓவரா இருக்கு. மத்தவங்களுக்கு (?!) தப்பாத் தெரியலாம்.. பார்த்துக்க.. என்ன இருந்தாலும் நம்ம பயடா நீ!” என்று அன்பாக சொல்லி விட்டுப் போனார். ‘மத்தவங்களுக்கு என்ன. எனக்கு தப்பா தெரியுது’ என்று நேராகவே சொல்லியிருக்கலாம். இதைப் பற்றி பின்னர் அண்ணாச்சியும் ராஜூவும் தனியாக அமர்ந்து ரகசியம் பேசிக் கொண்டார்கள்.

ஓர் ஆணும் பெண்ணும் அமர்ந்து பேசினால் அதில் ஏதோ தவறாகத்தான் இருக்கும் என்று பொதுச்சமூகம் நம்பும் அதே பழைமைவாத மனோபாவம் மற்றும் கண்காணிப்பு கலாசாரத்தை பிக்பாஸ் வீடும் பிரதிபலிப்பது அபத்தமானது. கமல் தனது விசாரணையில் இதுபற்றி கறாராக அறிவுறுத்த வேண்டும். கடந்த சீசனில் பாலாஜியும் ஷிவானியும் நடந்து கொண்டதையெல்லாம் ஒருவேளை பார்த்திருந்தால் இமான்-ராஜூ கூட்டணியின் இதயம் வெடித்திருக்கும்.

இங்கு அரசியல் பேரத்திற்கு அனுமதி

‘அரசியல்வாதிகளுக்கு ஓர் அறிவிப்பு’ என்று தெரிவித்த பிக்பாஸ் மற்ற அரசியல் கட்சிகளுடன் பேசி அவர்களை ஈர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். சிபியின் அலுவலகத்திற்கு வந்த இமான், ‘மக்கள்’ என்கிற வார்த்தை ஏன் பிரிஞ்சு கிடக்கு?” என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறிச் சென்றார். ‘கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தண்ணி போட்ட ஒரு ஆளு வந்தாரு’ என்று ராஜூ பிறகு சொன்னது பொருத்தமான கமெண்ட். ஒருவேளை பல அரசியல்வாதிகள் இப்படித்தான் முட்டாள்தனமாகப் பேசுவார்கள் என்பதை அண்ணாச்சி பிரதிபலித்துக் காட்டினாரோ, என்னவோ.

‘உரக்கச் சொல்’ அணிக்கு தமிழை உரக்கச் சொல்லித் தரும் ஓர் ஆசிரியர் உடனடியாக தேவை. இப்போதுதான் கட்சியின் தலைப்பில் ஒற்றெழுத்தை சேர்த்து சரிசெய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எழுதியிருந்த பேனர் ஒன்றில் ‘உங்கள் ஓட்டு உரக்கச் சொல் கட்சிகே’ என்று இங்கும் ஒற்றை விட்டு விட்டார்கள். இதை அண்ணாச்சி சுட்டிக் காட்டினார். இதற்குப் பிறகு அமீர் ஒட்டிச் சென்ற பேனரில் “உரக்கச் சொல்க்கே’ என்று எழுதியிருந்தது.

“வந்து பத்து நாளாச்சு.. ஒண்ணும் சவுண்டையே காணோமே?” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஞ்சீவின் வாயைக் கிளறினார் பிரியங்கா. ``பொறுத்தார் பூமியாள்வார்” என்று அவர் சொல்ல “அதுக்குள்ள ஷோ முடிஞ்சுடும்" என்று இடக்கான கமெண்ட்டை சொன்னார் பிரியங்கா. NPP கட்சியின் சின்னம் கார்ட்டூன் மாதிரி இருக்கிறது என்று நேற்று எழுதியிருந்தேன். இன்று ராஜூவும் அதையே குறிப்பிட்டு ‘அந்தக் கார்ட்டூன் கட்சியில ஏன் இன்னமும் இருக்கீங்க?” என்று வருண் மற்றும் அக்ஷராவிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ்
பிக்பாஸ்

‘அண்ணனுக்கு ஜுஸ் வாங்கிட்டு வா’ என்று ராஜூ, நிரூப்பை பாவ்லாவாக அனுப்பியது சுவாரஸ்யம். இது ஒரு பழைய உத்தி. ‘இந்த வியாபாரம் படியாது, வேஸ்ட்’ என்பது மாதிரியான வாடிக்கையாளர்கள் வந்தால் முதலாளிகள் ‘தம்பி காஃபி வாங்கிட்டு வாடா’ என்று சங்கேத மொழியில் சொல்லி கடைப் பையன்களை அனுப்புவார்களாம். காஃபி வாங்கப் போன பையன் அதைச் சரியாகப் புரிந்து கொண்டு, அந்த ‘சாவுகிராக்கி’ வாடிக்கையாளர் கிளம்பிச் செல்லும் வரை திரும்பி வரமாட்டான்.

தலைவர் நாற்காலியில் ராஜூ உட்கார்ந்திருந்த விஷயம் கேள்வியாக கேட்கப்பட்டதும் “எங்க கட்சில எல்லோரும் சமம்.. நீங்க கூட ரெண்டு நிமிஷம் உக்காந்துட்டு போங்க” என்று ராஜூ சொன்னது நல்ல நையாண்டி. இதைப் போலவே NPP என்பதை ‘நயா பைசாக்கு பேறாத கட்சி’ என்று அவர் நகைச்சுவையாக விளக்கம் சொன்னதும் சிறப்பு. இப்படி சைலண்ட்டாக கலர் புஸ்வாணங்களை கொளுத்துவதில் ராஜூ பின்னியெடுக்கிறார்.

அரசியல் தலைவராக சஞ்சீவ் செய்த அற்புதம்

ஒரு அரசியல் தலைவரின் தோரணையை சஞ்சீவ் சிறப்பாக வெளிப்படுத்தினார். BBMK தங்களின் கொடியேற்ற விழாவிற்கு அழைத்த போது “அங்கெல்லாம் போகணுமா.. தலைவரே?” என்று இமான் சஞ்சீவை ஆட்சேபித்தார். “நம்மள மதிச்சு கூப்பிட்டிருக்காங்க. நிச்சயம் போகணும்” என்று அரசியல் நாகரிகத்தை சஞ்சீவ் பின்பற்றியது சிறப்பு. ‘உரக்கச் சொல்’ பேனர்ல இக்கு இல்லையே’ என்று அண்ணாச்சி சுட்டிக் காட்டிய போது, “அவங்க பேசறதுல மட்டும்தான் ‘இக்கு’ வெச்சு பேசுவாங்க” என்று டைமிங்கில் அடித்து விட்டார் ராஜூ.

இந்த அரசியல் டாஸ்க்கை தனது தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காகவும் பிரியங்கா பயன்படுத்திக் கொண்டது முரண். நிரூப்பை ஊசியால் குத்துவதை நாள்பூராவும் அவர் செய்து கொண்டு “முதுகில் குத்திட்டாங்க” என்கிற பாட்டையே தொடர்ந்து பாடினார். ஒரு கட்டத்தில் நிரூப் வந்து தனியாக இதுபற்றி விசாரித்தபோது ‘காயின் எடுத்த விவகாரம்’ என்று ஆதிகாலத்து சமாச்சாரத்தை சொன்னார் பிரியங்கா. அதன் பிறகு நிறைய நாட்கள் நிரூப்புடன் சுமூகமாக பழகி விட்டு திடீரென்று இந்தக் காரணத்தை தோண்டி எடுப்பது சிறுபிள்ளைத்தனமானது.

சஞ்சீவ்
சஞ்சீவ்

“நாங்க ஒரு புகார் பெட்டி வெச்சிருக்கோம். இதுல எழுதிப் போடுங்க” என்று பிரியங்கா ஒரு டப்பாவை கொண்டு வர “நேர்பட பேசு’ன்றதுதானே உங்கள் கொள்கை?” என்று நையாண்டியாக கவுன்ட்டர் சொன்ன ராஜூ “புகார் பெட்டி வேணாம்ன்னு ஒரு புகார் எழுதி அந்தப் பெட்டில போட்டுடுவோம்” என்று நக்கலடித்தார். புகார் பெட்டி என்பது தனக்கான குண்டூசி என்பது நிரூப்பிற்குப் புரிந்தது. “எல்லோருக்கும் சாப்பாடு இருக்கான்னு பார்த்துட்டு சாப்பிடுங்க. ஒழுக்கம் முக்கியம்" என்று பிரியங்கா வலியுறுத்தியது நல்ல விஷயம்தான். ஆனால் எந்தச் சமயத்தில், யாருக்கு உபதேசிக்கிறார் என்பதும் முக்கியம்தான். “எதிரியா இருந்தா கூட சாப்பிடும் போது இப்படிச் சொல்லக்கூடாது’ என்று சிபி பேசிய பன்ச் நன்று.

கருத்து மோதல் – ஆமாவா.. இல்லையா?..

ஒவ்வொரு அரசியல்கட்சியின் தலைவரின் செயல்திறனை சோதிக்கும் டாஸ்க் நடந்தது. ஒவ்வொரு தலைவரும் வீட்டில் உள்ளவர்களைப் பற்றி ஒரு கருத்து சொல்வார். அதில் ஒப்புதல் உள்ளவர்கள் ‘YES’ என்கிற போர்டை காட்ட வேண்டும். ஒப்புதல் இல்லாதவர்கள் ‘NO’ போர்டை காட்ட வேண்டும். ஒப்புதல் அட்டை அதிகம் பெற்றால் கேள்விகளை தலைவர் தொடரலாம். அந்த அணிக்கு ஒரு மதிப்பெண் கிடைக்கும். ‘NO’ அட்டை அதிகம் வந்தால் அவர் எழுந்து கொண்டு அடுத்த தலைவருக்கு வழி விட வேண்டும். இதில் அதிக மதிப்பெண் பெறும் தலைவர் வெற்றியாளர்.

இந்த டாஸ்க்கில் சஞ்சீவ் முன்வைத்த கருத்துக்கள் சிறப்பாக இருந்தன. துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் அவர் அபிப்ராயங்களை பதிவு செய்தார். அதற்கு எதிர்ப்பு வரும் போது சமயோசிதமாக சமாளிக்கவும் செய்தார். “எனக்கு யோசிக்க டைம் கொடுங்க.. அப்பதான் பதில் சொல்ல முடியும்" என்கிற கொள்கையை எப்போதும் வலியுறுத்தும் தாமரை இங்கேயும் தயங்கி உட்கார்ந்திருக்க, பிக்பாஸ் ஒரு மதிப்பெண்ணை குறைத்தார். பாவனி விவகாரம் இங்கும் அலசப்பட்டது. இது குறித்து பின்னர் சிபியிடம் தன் ஆட்சேபணையை தெரிவித்தார் பாவனி.

பிக் பாஸ் 67 : ``கத்தி கத்தி விளையாடுவோமா" - ஹைடெசிபலில் களேபரமான வீடு!

‘அபினய் பெண்களுடன்தான் அதிகம் பழகுகிறார்’ என்கிற கருத்துக்கு அபினய்யே முன்வந்து ஒப்புதல் தெரிவித்தார். ‘நிரூப் கேப்டன் என்பதை பல சமயங்களில் மறந்து விடுகிறார்’ என்கிற கருத்துக்கு நிரூப் ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டார். இந்த டாஸ்க்கில் தங்களின் தலைவர் வெற்றி பெற்ற கொண்டாட்டத்தையொட்டி ‘சரவெடி சஞ்சீவ் வாழ்க’ என்று இமான் கோஷம் போட “இவங்க ஏதாவது ஸ்பீக்கரை முழுங்கிட்டாங்களா?” என்று பிரியங்கா எரிச்சலுடன் கமெண்ட் சொன்ன சமயத்தில் பிக்பாஸ் வீட்டின் ஸ்பீக்கர்கள் அனைத்துமே ஒருகணம் திகைத்து நின்றிருக்கும். (மேடம்.. வாய்க்குள்ள 7.1 ஸ்பீக்கரை நீங்க வெச்சுக்கிட்டு இப்படி கேட்கலாமா?!).

கும்தலக்கா.. கும்மாவா.. அரசியல்ன்னா சும்மாவா?

அமீர் ஒழுக்கம் பற்றி கட்சிப் பரப்புரை செய்து முடித்து பிறகு “பாருங்கய்யா… அதை திருக்குறள் எழுதியிருக்காருன்றாங்க” என்று இமான் தனது அனல் தெறிக்கும் பேச்சின் இடையில் கிண்டல் செய்தார். பின்னால் இருந்த பேனரில் ‘உரக்கச் சொல் – உறங்கச் செல்” என்று எழுதப்பட்டிருந்த நையாண்டி சிறப்பு. சஞ்சீவ் பேச வந்த போது பயங்கர கூட்டம் எதிரே இருப்பது போல ‘அமைதி. அமைதி’.. என்று அவர் அமைதிப்படுத்தி பாவ்லா செய்த போது எத்தனை பேருக்கு ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தின் காட்சி நினைவிற்கு வந்தது?

‘உரக்கச் சொல்’ முழக்கத்தை அவர்கள் கட்சியினர் எழுப்பிக் கொண்டிருந்த போது அந்தத் தாளத்திற்கு ஏற்ப இமான் நக்கலாக நடனமாடியது நல்ல நையாண்டி. “முதுகில் குத்திட்டாங்க” என்று பிரியங்கா தொடர்ந்து அனத்துவது நமக்கே எரிச்சல் ஊட்டும் போது நிரூப்பிற்கு ஊட்டாதா? அவர் தனியாக வந்து பிரியங்காவை விசாரிக்க “ஓ.. நம்ம பிரெண்ட்ஷிப் நீ விளையாட முடியாம கட்டிப் போட்டுச்சா?” என்று கலங்கி கண்ணீர் விட்டார் பிரியங்கா.

பாவனியின் விவகாரம் வீட்டில் சுற்றிச் சுற்றி வருவதற்கு தான் ஒரு காரணமாக இருந்ததையொட்டி அமீர் வருந்திப் பேச “நீ எனக்கு ஃபிரெண்டுதான். யார் என்ன பேசிட்டு போனா எனக்கென்ன? எனக்கு கவலையில்ல” என்று இந்த விவகாரத்தை முதிர்ச்சியாக கையாண்ட பாவனியின் அணுகுமுறை பாராட்டுக்குரியது.

அமீர் - பாவனி
அமீர் - பாவனி

BBMK பிரசாரத்துக்கு வந்தது. ‘ஸ்டார்ட்டிங் டிரபிளில்’ முதலில் தள்ளாடிய தாமரை “முத்துக்கு .. முத்துக்கு.. என்று அடுத்த வார்த்தை வராமல் திணற, சினிமாப் பாடலைப் பாடி நக்கலடித்தார் ராஜூ. பிறகு சரவெடியாக ஆரம்பித்த தாமரை, நாடகத்தின் பாணியில் பாடியது நன்று. (இதைத்தான் எதிர்பார்த்தோம்!). இரவில் தூங்க முடியாத பிரச்சினை, கழிவறை பிரச்சினை போன்றவற்றை தன்னுடைய பாடலில் அற்புதமாக இணைத்திருந்தார் தாமரை. ‘மக்களுக்கு வெளிச்சம் தருவோம்’ என்று சொல்வதை விட்டு விட்டு ‘வெளிச்சத்தை குறைப்போம்’ என்று அழிச்சாட்டியம் செய்தது BBMK. மகளிர் நலம் பற்றி சிபி பேச ஆரம்பித்த போது “தாமரையே எல்லா வேலையும் செய்வாளா?” என்று சைடு கேப்பில் குரல் தந்தார் பிரியங்கா.

“ஆணும் பெண்ணும் சமம்..” என்பதை தலைவர் சிபி “அடித்துப் பேசியதால்” அதை சஞ்சீவ் ஆட்சேபிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி கோஷம் போட்டு இவர்களின் பரப்புரையை தடுத்தது சுவாரஸ்யமான காட்சி. நிஜமான அரசியல் கூட்டத்தைப் பார்த்த எஃபெக்ட் வந்தது.

கொடிக்கம்ப மோதல், பறந்தது.. கொடியா. மானமா?

“சும்மா பேசிட்டே இருக்காதீங்க. அடிச்சுக் காண்பிங்க” என்று வடிவேலு பாணியை முன்வைக்க தீர்மானித்த பிக்பாஸ், கட்சிக்கு தலா 20 கொடிகளைத் தந்து நாற்பது கம்பங்களை வெளியில் வைத்தார். எதிர்க்கட்சியின் கொடிகளையும் பிடுங்கலாம் என்று சிறப்பு அனுமதியும் தந்தார். இந்த குடுமிச் சண்டையின் இறுதியில் எந்தக் கட்சி அதிக கொடிகளை நட்டிருக்கிறதோ அவர்களே வெற்றியாளர்.

ரணகளமான அந்தப் போட்டி ஆரம்பித்தது. முதல் சில நொடிகளில் கம்பங்களில் கொடியை நட ஆரம்பித்தவர்கள், பிறகு கம்பங்களையே கைப்பற்றி அவரவர்களின் கட்சி அலுவகத்தில் கொண்டு சென்று பதுக்கினார்கள். (இதுதாண்டா அரசியல்!). “வாடா.. பிடுங்கிட்டு வரலாம்” என்று நிரூப், வருண் ஆகியோர் கிளம்பினார்கள். (விதியில் அது அனுமதிக்கப்பட்டிருந்தது). இந்த தள்ளுமுள்ளு காரணமாக ஒரே அடிதடி, குழப்பம். “ஏண்டா. இப்படி அடிச்சுக்கறீங்க.. போய் பிள்ளை குட்டிங்களை படிக்க வைங்கடா” தாமரை பொதுவாக சொன்ன உபதேசத்தினால் “யாரு ஆரம்பிச்சாங்களோ. அவங்களைக் கேளு” என்று அபினய் எகிறிக் கொண்டு வர “என்னா சவுண்டு.. என் கிட்டேயேவா?” என்று பதிலுக்கு ஹைடெஸிபலில் கத்தினார் தாமரை. “இந்த வீட்டில் சத்தம் வரலாம். சண்டை போடலாம். ஆனா அதையெல்லாம் செய்யறது நானாத்தான் இருக்கணும்” என்கிற அற்புதமான பாலிசியைக் கொண்டவர் தாமரை.

பிக் பாஸ் 67 : ``கத்தி கத்தி விளையாடுவோமா" - ஹைடெசிபலில் களேபரமான வீடு!

“அவங்க முதல்ல வந்தா பார்த்துப்போம். நாமளா போக வேண்டாம்” என்கிற அஹிம்சை கொள்கையை ஆரம்பத்தில் கடைப்பிடித்தார் பிரியங்கா. ஏனெனில் கலாட்டா செய்ய அவர் கட்சியில் ஆள் இல்லை. இங்கு நடந்த குழப்பத்தைப் பார்த்து தலைவரே களத்தில் இறங்கி நிரூப் மற்றும் சிபியிடம் போராடி கொடி, கம்பங்களை கைப்பற்றினார். தன் அணியைச் சேர்ந்த அபினய்க்கு எதிராக தாமரை அதிகமாக சவுண்ட் விட ஆரம்பித்ததும் “நேத்து அண்ணாச்சி பிடிச்சு இழுத்தப்ப.. எங்க போச்சு இந்த சவுண்டு” என்று வெறி பிடித்தது போல் பிரியங்கா கத்த ஆரம்பித்ததைப் பார்த்து பிக்பாஸே ‘யம்மே’ என்று பக்கத்தில் இருந்தவரை பயத்தில் கட்டிக் கொண்டிருக்கலாம்.

“மூடிட்டு போ”ன்னு சொன்னது தப்பு தம்பி” என்று தாமரைக்காக பரிந்து அபினய்யிடம் பேசினார் இமான். “இவ்வளவு கேவலமாவா விளையாடுவாங்க” என்று கேள்வியெழுப்பிய அண்ணாச்சி, நேற்று இதே விஷயத்தை தானும் செய்யாமல் இருந்திருக்கலாம். “தெரில. தெரிலன்னு சொல்வீங்க. நாடகம் நல்லா போடுவீங்க” என்கிற கோஷத்தை வெறி பிடித்தது போல் கத்தினார் பிரியங்கா.

பிரியங்கா
பிரியங்கா

“நீ ரசத்தை ஊத்து அதுல பூனை கிடக்குதான்னு பார்க்கலாம்” என்று முடிவு செய்த பிக்பாஸ் “பாவனி. முடிவுகளை அறிவிங்க” என்று அறிவிக்க, அந்த சத்தத்தையும் தாண்டி தாமரை ஹைடெஸிபலின் உச்சிக்கே சென்று கொண்டிருந்தார். எந்தக் கட்சி ஜெயித்தது? என்று பிக்பாஸ் கேட்ட போது “ஏமாத்தற கட்சி” என்றார் ராஜூ. இறுதியில் ‘உரக்கச் சொல்’ இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றது.

இந்தச் சண்டையினால் வருத்தப்பட்ட தாமரையை சமாதானப்படுத்த வந்த அமீருக்கும் வருணிற்கும் மோதல் ஏற்பட்டது. “உன் கத்தலுக்கும் என் கத்தலுக்கும் சோடி.. போட்டுப் பார்ப்பமா. சோடி..” என்று இவர்களும் ஒலி மாசை அதிகப்படுத்தினார்கள். இதற்குப் பிறகு தாமரையிடம் மன்னிப்பு தெரிவித்தார் அபினய். "நாடகம் போடறீங்க” என்கிற பிரியங்காவின் குத்தலை, தன்னுடைய தொழிலுக்கான அவமதிப்பாக எடுத்துக் கொண்டு தாமரை கண்கலங்க, அவரது அணியினர் சமாதானப்படுத்தி படுக்க வைத்தார்கள்.

தன்னுடைய கட்சியின் தலைப்பை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரியங்கா இத்தனை ‘உரக்கச் சொல்லியிருக்க வேண்டாம்’. இன்னமும் கூட காது ‘நொய்ங்.’ என்கிறது.