Published:Updated:

பிக் பாஸ் 68 : பாவனி விஷயத்தில் ராஜூ பேசிய விவகாரம்; களேபரமான ஹவுஸ்!

பாவனி

வீட்டின் தலைவர் என்கிற முறையில் அனைவரையும் விரைவில் தயாராகச் சொல்வது பாவனியின் பொறுப்பு. அதைத்தான் காலையில் அவர் செய்தார்.

பிக் பாஸ் 68 : பாவனி விஷயத்தில் ராஜூ பேசிய விவகாரம்; களேபரமான ஹவுஸ்!

வீட்டின் தலைவர் என்கிற முறையில் அனைவரையும் விரைவில் தயாராகச் சொல்வது பாவனியின் பொறுப்பு. அதைத்தான் காலையில் அவர் செய்தார்.

Published:Updated:
பாவனி

சீசன் 5 வரலாற்றில் இதுவொரு நினைவில் வைக்க வேண்டிய பொன்னாள். NPP, BBMK ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்த திருநாள். கார்ட்டூனின் மீது நட்சத்திரத்தை பசை போட்டு ஒட்டி, பின்னணியில் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ‘லாலாலா’ இசையைப் போட்டு இந்த இணைப்பு திருவிழா கோலாகலமாக நடந்தது. NPP கட்சியின் தலைவர் ‘சரவெடி சஞ்சீவ்’ இதற்கு மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டாரா அல்லது இதற்கு சம்மதிக்காவிட்டால் தொணடர்கள் தன்னை ‘போட்டு தள்ளி விடுவார்கள்’ என்று பயந்து ஒப்புக் கொண்டாரா என்று தெரியவில்லை. ஆனால் எப்படியோ இது நடந்து விட்டது. ஆனால் இது நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் முன்பே தெரிந்தன.

அடுத்தது சற்று சீரியஸான மேட்டர். பாவனி –அபினய் – அமீர் விவகாரத்தை இத்தனை நீளத்திற்கு ஆராய்ந்து கொண்டிருப்பது தேவையில்லாத ஆணி. ராஜூவும் சிபியும் இமானும் இந்த விஷயத்தை விடாமல் செய்து கொண்டிருப்பதை கலாசார காலவர் பணியாகத்தான் பார்க்க வேண்டும். இது பழமைவாத மனோபாவத்தின் அடையாளம். இரு தனிப்பட்ட நபர்கள் நட்புடன் பழகுகிறார்களா அல்லது அதற்கு மேலே ஏதாவது இருக்கிறதா என்று ஆராய்வதற்குப் பெயர் வம்பு தேடும் மனநிலை மட்டுமே. இதை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும். விவாதத்திற்கு கூட இதை பொதுவில் கொண்டு வரக்கூடாது. அதுதான் நாகரிகம்.

ராஜூ
ராஜூ

பிக்பாஸ் வீட்டில் அந்தரங்கம் என்பது இல்லைதான். எல்லாமே கண்காணிக்கப்படுகின்றனதான். ஆனால் அதிலும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. போட்டியாளர்கள் சாப்பிடும் காட்சிகள், தூங்கும் காட்சிகள், உரையாடும் காட்சிகள் காட்டப்படுகின்றன. ஆனால் கழிவறையில் காமிரா கிடையாது. இதைப் போலவே சில சென்சிட்டிவ்வான விஷயங்கள் குறித்து வம்பு பேசுவது சம்பந்தப்பட்டவர்களின் மனநிலையை மட்டுமல்லாது அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களின் மனநிலையையும் பாதிக்கும். இதை வம்பு பேசும் பழைமைவாதிகள் நுண்ணுணர்வோடு புரிந்து கொள்வது நல்லது.

ஒருவர் மீது வம்பு பேசப்படும் போது அவர் ‘இல்லை’ என்று மறுத்து விடலாமே?’ என்று கேட்பதும் அபத்தமான வாதம்தான். ஊர் பேசும் வம்பு அனைத்திற்கும் ஒருவர் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. உதாரணத்திற்கு குடிப்பழக்கமே இல்லாத ஒருவரிடம்? மற்றொருவர் வந்து “நீங்க நேத்து குடிச்சிட்டு ரோட்டில் விழுந்து கிடந்தீங்களாமே?” என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் இயல்பாக ‘இல்லை’ என்றா அதற்கு பதில் சொல்ல முடியும்? ஏனெனில் அந்தக் கேள்வியின் பின்னே ஒரு கடுமையான அவமதிப்பும் உள்நோக்கமும் இருக்கிறது. இது புரிந்து கொள்ளக்கூடிய எளிமையான லாஜிக். ‘மகளிர் நலம்’ பற்றி பேசும் சிபிக்கும் இது தெரியவில்லை. இதர விஷயங்களில் புத்திசாலித்தனமாக பேசும் ராஜூவிற்கும் புரியவில்லை.

எபிசோட் 68-ல் என்ன நடந்தது?

“நாடகம்னு சொல்லாதீங்க. தாமரை அழுவுறா” என்று தாமரைக்காக பரிந்து வந்து பிரியங்காவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ராஜூ. நல்ல விஷயம்தான். ஆனால் தனக்கு வேண்டியவர்களின் பிரச்சினைகளில் மட்டுமே ராஜூ தலையிடுவார் என்று பரவலாக சொல்லப்படும் புகாரில் உண்மையிருக்கிறது. இதர சண்டைகள் நடக்கும் போது 'செட் பிராப்பர்ட்டி’ போல் சலனமில்லாத முகத்துடன் வேடிக்கை பார்ப்பதுதான் ராஜூவின் வழக்கம். “அதெல்லாம் சரி.. எனக்காக நீ இப்படி எங்காவது பேசியிருக்கிறியா? என்னைப் பிடிக்கும்னு வேற சொல்ற. இது எங்க ஸ்லோகன். நாங்க அப்படித்தான் சொல்லுவோம்’ என்று அவருக்கு கவுன்ட்டர் கொடுத்தார் பிரியங்கா.

தாமரை
தாமரை

‘நாடகம் நல்லா போடறீங்க” என்கிற பிரியங்காவின் கோஷத்திற்கும் தாமரையின் தொழிலுக்கும் தொடர்பில்லை என்றுதான் தோன்றுகிறது. பிரியங்கா அந்த நோக்கத்தில் சொல்லியிருக்க மாட்டார் என்றுதான் யூகிக்கத் தோன்றுகிறது. ‘நல்லா பண்றீங்க டிராமா’ என்று நடைமுறையில் சொல்கிற வழக்கமுண்டு. இது நாடக்கலைஞர்களை இழிவுபடுத்தும் அர்த்தத்தில் சொல்லப்படுவதில்லை. அந்தப் பின்னணியிலிருந்து வருவதால் தாமரை அப்படியாக கற்பனை செய்து கொண்டார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. என்றாலும் ராஜூவின் உரையாடல் பிரியங்காவிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். பிறகு தாமரையிடம் ‘மன்னிப்பு கேட்டார் பிரியங்கா.

சஞ்சீவ்
சஞ்சீவ்

அரசியல் விதண்டாவாத மேடை

“அரசியல் கட்சின்னு சொல்லிட்டோம். இன்னமும் ரணகளமா எதுவும் நடக்கலையே?’ என்று நினைத்த பிக்பாஸ், அடுத்த தூண்டிலை வீசினார். “இது கடைசி வாய்ப்பு. தேர்தல் விவாத மேடை நடத்தப்படும். இதில் தலைவர்கள் மேடையில் அமர்ந்து பரஸ்பரம் விவாதிப்பார்கள். எதிரணியின் குறைகளை இதில் சுட்டிக் காட்டலாம்” என்று அடுத்த டாஸ்க்கை தந்தார். “எங்க பிரெண்ட்ஷிப் பத்தி மட்டுமே பேசறாங்க.. மத்தவங்க கூட டக்குன்னு பிரெண்ட்ஸ் ஆயிட்டாங்க. அதைப் பத்தியெல்லாம் ஏன் பேச மாட்றாங்க?” என்று அபினய்யிடம் ஆதங்கப்பட்டார் பாவனி.

தேர்தல் விவாதத்திற்காக ஒவ்வொரு கட்சியும் தீவிரமான ஆலோசனை செய்து கொண்டிருந்தது. ராஜூ ஒரு விஷயத்தை சொல்லி விட்டு “நான்தான் எடுத்துக் கொடுத்தேன்னு சொல்லி மாட்டி விட்றாதீங்க” என்று சிரித்துக் கொண்டே சொல்ல “நீ பொய் சொல்லலேல்ல. இல்லாத விஷயத்தை சொல்லைல்லே” என்று தைரியமூட்டினார் தாமரை. “இல்ல சங்கடமா இருக்கு” என்று ராஜூ பம்ம “அப்படின்னா எதுக்கு இந்த வீட்டுக்கு வரணும்?” என்று தாமரை ஒரே போடாக போட, அபூர்வசகோதரர்கள் ‘கமல்’ லுக்கை தந்தார் ராஜூ. ‘நாடகம்’ என்கிற வார்த்தை தன்னைப் புண்படுத்தி விட்டது என்று சற்று முன் அழுத தாமரை, ‘துணிச்சலாக ஆடு’ என்று மற்றவர்களை இப்போது உசுப்பேற்றுவது சுவாரசியமான முரண்.

BMMK-வை அம்பலப்படுத்திய ‘உரக்கச் சொல்’ :

BBMK செய்த முறைகேடுகளை நள்ளிரவில் அம்பலப்படுத்திக் கொண்டிருந்தது ‘உரக்கச் சொல்’ அணி. சாப்பாடு பாத்திரங்கள் கழுவப்படாமல் அப்படியே கிடந்தது, சாப்பிட்ட கோப்பையில் மொய்த்த எறும்பு, அலுவலக மேஜையில் கிடக்கும் வாழைப்பழத்தோல் என்று பல விஷயங்கள் இதில் அம்பலமாயின. பிக்பாஸ் வீடுகளில் நிகழும் இவ்வகையான ஒழுங்கீனங்களை ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து தவறாமல் பார்க்கிறோம். இதைச் செய்பவர்கள் தங்களின் வீடுகளிலும் இவ்வாறுதான் நடந்து கொள்வார்களா? அல்லது என்னதான் இருந்தாலும் பிக்பாஸ் என்பது இன்னொரு வீடு என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் வளர்ந்தவர்கள் கூட எல்கேஜி பிள்ளைகள் மாதிரி நடப்பது சகிக்க முடியாத விஷயம்.

வீடு முழுக்க தங்களின் பிரச்சார வாசகங்களை ஒட்டி பெருமிதப்பட்டது ‘உரக்கச் சொல்’. அணி. இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது பிக்பாஸ் வீடுதான். பேய்கள் உலவும் நேரத்தில் தங்களின் கொடியை ஏற்றிய ‘உரக்கச் சொல்’ அணி, தூங்கிக் கொண்டிருந்த அமீரையும் ‘உரக்கத் தட்டி’ எழுப்பி இம்சை செய்து அழைத்து வந்து பார்க்கச் சொன்னது. ‘உரக்கச் சொல், அவர்களை உறங்கச் சொல்’ என்று எதிரணியினர் போடும் கோஷம் சரிதான் போல. இப்படியா நள்ளிரவு தாண்டியும் உலாத்துவார்கள்?

பிரியங்கா
பிரியங்கா

‘டூ’ பாத்ரூம் பிரச்சினை – இரண்டானது வீடு

இத்தனை நபர்கள் புழங்கும் பிக்பாஸ் வீட்டில் இரண்டே கழிவறைகள் இருப்பது பிரச்சினைதான். இது எப்பொது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று எப்போதோ எதிர்பார்த்தேன். ஆண்கள் சிறுநீர் கழிக்கும் வழக்கத்தினால் பெண்களுக்கு நேரக்கூடிய சுகாதாரக் கேடுகளை நேற்றைய கட்டுரையில் பார்த்தோம். இதை பிரியங்கா சுட்டிக் காட்டினார். இந்த விஷயம் ஆண்களால் சரியான தொனியில் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. ஆனால் பெரும்பாலான ஆண்கள் இதை கெளவரப் பிரச்சினையாகவே எடுத்துக் கொள்வார்கள். பொதுவாக வயதில் மூத்தவர்கள் இதை அவமதிப்பாக எடுத்துக் கொள்வார்கள். “இனிமே நான் அந்தப் பக்கம் போகவே மாட்டேன்” என்று இமான் வீண்பிடிவாதம் பிடிக்க இதுதான் காரணம்.

பிரியங்கா
பிரியங்கா

இதைப் போலவே இளைஞர்களான சிபி போன்றவர்களும் இதை கெளரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு ‘நாங்கள் அதை உபயோகிக்கவில்லை’ என்று சொல்வது முறையற்றது. “ஓகே. நடந்தது நடந்து விட்டது. யார் சுத்தம் பேணவில்லை என்று தெரியவில்லை. ஆண்களாகிய நாங்கள் இனிமேல் கழிவறையை சுத்தமாக பராமரிப்போம்” என்று உறுதி கூறுவது கூட ஒருவகையில் சரி. ஆனால் கடுமையான குடுமிப்பிடிச் சண்டை நடந்த பிறகுதான் நாளின் இறுதியில்தான் இந்த முடிவிற்கு சிபி வந்தார்.

வீட்டின் தலைவர் என்கிற முறையில் அனைவரையும் விரைவில் தயாராகச் சொல்வது பாவனியின் பொறுப்பு. அதைத்தான் காலையில் அவர் செய்தார். “சமையல் அறையில் இடம் இருக்கிறது. காலையுணவு தயார் செய்ய வேண்டுமென்றால் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் குளித்து தயாராகி விடுங்கள்’ என்று சொல்லப்பட்ட சாதாரண விஷயம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. “பெண்கள் பாத்ரூமிலும் வரக்கூடாதுன்னு சொல்றீங்க. இருக்கிறது ஒரு பாத்ரூம். அதுல ஆண்கள் இத்தனை பேர் உபயோகிக்கணும். நம்ம இஷ்டத்திற்கெல்லாம் பாத்ரூம் வராது” என்று ஆண்கள் அழிச்சாட்டியம் செய்தார்கள்.

நடைமுறையில் நம் வீடுகளிலும் இதைப் பார்க்கலாம். எங்காவது ஒரு விழாவிற்கு புறப்பட்டுச் செல்ல, அதிகாலையிலேயே எல்லோரும் தயாராக வேண்டும் என்கிற நிலைமையில் பெண்கள் விரைவாக குளித்து விட்டு தயாராகி, பிறகு ஆண்களை எழுப்பி தயார்ப்படுத்துவதற்காக பலமுறை மன்றாட வேண்டியிருக்கும். அப்போதுதான் ‘பேப்பரைப் படிப்பது, போனை நோண்டுவது, காஃபி போட்டு கொண்டு வா’ என்று நேரத்தை இழுத்தடித்து டென்ஷனை ஏற்றுவார்கள். ராஜூ, இமான், வருண் போன்றவர்கள் செய்ததும் இதுவே. இதில் “எத்தனை முறை கூப்பிடுவீங்க” என்று வருணிற்கு கோபம் வேறு வந்து கத்திக் கொண்டிருந்தார்.

 ராஜூ
ராஜூ

“கழிவறையை சுகாதாரமாக பயன்படுத்தாதது மட்டுமே எங்கள் பிரச்சினை. மத்தபடி நீங்க ஷவரை உபயோகப்படுத்தி குளிக்கலாம்” என்றும் பெண்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் கெளவரப் பிரச்சினையாக எடுத்துக் கொண்ட ஆண்கள் முற்றிலுமாக இதை மறுப்பது சரியானதல்ல.

“நீங்க எப்ப குளிப்பீங்க.ன்னுல்லாம் எனக்குத் தெரியாது. இத்தனை மணிக்கு தயாராகி நிக்கணும்” என்று தலைவர் உத்தரவு போடுவதொடு நின்றிருக்கலாம். இதுவே சிபி போன்ற தலைவர்களாக இருந்தால் இவர்கள் கப்சிப் என்று வேலைகளைப் பார்ப்பார்கள். பெண் தலைவரானால் ஆண்களுக்கு இளக்காரம் ஏற்படுவது பிக்பாஸ் வீட்டிலும் தொடர்கிறது. இந்த லட்சணத்தில் “இவ்வளவு பொறுமையான பசங்களை நான் எங்கயும் பார்க்கலைப்பா” என்று ஆண்களுக்கு சான்றிதழ் தருகிறார் தாமரை.

பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்
பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்

பாவனிக்கு பிரியங்கா ஆதரவு தருவது தற்போதைய சூழல் காரணமாகத்தான். நிரூப்பிடம் சண்டை என்கிற நிலைமையில் அவர் வேறு யாரையாவது நண்பராக்கிக் கொள்ள வேண்டிய நெருக்கடி. எனவே பாவனி பேச தடுமாறும் போதெல்லாம் அந்த இடத்தில் தான் நின்று ‘உரக்கச் சொல்லி’ ஆதரவு தருகிறார். ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த தாமரையும் பிரியங்காவும் இப்போது முட்டிக் கொள்வது போல, இந்தக் காட்சியும் பின்னால் மாறலாம். “எல்லா விஷயத்துலயும் பிரியங்கா முன்னாடி வந்து தலையிடறாங்க” என்று அக்ஷராவிடம் இமான் புகார் சொல்வதோடு இந்தச் சண்டை ஓய்ந்தது.

அனல் பறக்கும் பிரச்சாரம்

ஒவ்வொரு கட்சியும் பிரச்சாரத்திற்கு கிளம்பின. இமான் மிக தேர்ந்த அரசியல்வாதி மாதிரி அந்தத் தொனியின் மீட்டரை மிகச் சரியாக பிடித்தார். அவரது உச்சரிப்புத்தொனி கச்சிதமாகப் பொருந்தியது. அக்ஷரா ஒரு சராசரியான ‘பிரியாணி’ தொண்டரை சரியாகப் பிரதிபலித்தார். ‘என்ன விஷயம் என்று தெரியாமலேயே’ தலைவர் கை காட்டியவுடன் ‘போராடுவோம். போராடுவோம்” என்று கத்திக் கொண்டிருந்தார். அவரைத் தனியாக கூப்பிட்டு ‘எதற்குப் போராட்டம்?’ என்று கேட்டால் திகைத்து நின்று விடுவார்.

நையாண்டியான முறையில் பிரச்சாரம் செய்த ராஜூ, ‘உரக்கச் சொல்” குழு இருக்கிற பக்கம் வந்தவுடன் “தேவையில்லாத இடத்தில் நாங்கள் பிரச்சாரம் செய்ய மாட்டோம்” என்றபடி திரும்பிச் சென்றது நல்ல காமெடி. “தவறான இடத்தில் இருக்கும் சரியான நபர்”: என்று அமீரைக் குறிப்பிட்டு தங்கள் கட்சிக்கு இழுக்க முயன்றதும் சுவாரஸ்யமான காட்சி. “அவுங்க ஒண்ணு கூடிட்டாங்க. நிச்சயம் நம்மள Worst performer-ஆ சொல்லுவாங்க. தயாரா இருங்க” என்று உரத்த சிந்தனையோடு இப்போதே யூகித்துக் கொண்டிருந்தார் ‘உரக்கச் சொல்’ தலைவி பிரியங்கா.

பிக் பாஸ் பிரசாரம்
பிக் பாஸ் பிரசாரம்

NPP-க்கு ‘நயா பைசா ஏமாத்தாத கட்சி’ என்று புதிய விளக்கத்தை அளித்துக் கொண்டிருந்தார் வருண். ‘இடிமுழக்கம்’ இமான் என்று தன்னை பெருமையாக அழைத்துக் கொண்டார் அண்ணாச்சி. “இதுல சும்மா ஒரு கையெழுத்து போடுங்களேன்” என்று சொன்ன ராஜூ, “எதிரணியைச் சேர்ந்த தலைவர், நம்முடைய கட்சியில் கையெழுத்திட்டு இணையும் காட்சியை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று சட்டென்று அறிவித்தது நல்ல நையாண்டி.

ஆரம்பித்தது விவாத மேடை - ‘தண்ணிய குடி. தண்ணிய குடி’

விவாத மேடை ஆரம்பித்தது. மூன்று தலைவர்களும் மேடையில் வந்து நின்றவுடனேயே அந்த இடம் சந்தைக் கடையாக மாற ஆரம்பித்தது. “வீட்டை சுத்தமாக வைக்காத BBMK-க்கு ஆள்வதற்கு தகுதியில்லை” என்று பிரியங்கா அதிரடியாக ஆரம்பிக்க “கழிவறையைக் கூட விட்டுத்தர மனமில்லாதவர்களால் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்” என்று பதிலடி தந்தார் சிபி. “நம்ம அவசரத்திற்கு பாத்ரூம் வராது. அது வர்றப்பதான் போக முடியும்” என்கிற ‘முக்கிய’மான பாயிண்டை முக்கிப் பேசி மேடையை நாறடித்தார் சஞ்சீவ்.

ஆனால் ஒன்றை சொல்ல வேண்டும். பிரியங்காவையே பேச்சில் சமாளித்து அவரையும் தாண்டக்கூடிய திறமை சஞ்சீவிடம் இருக்கிறது. மற்ற நேரங்களில் அமைதியாக இருந்தாலும், அவசியமான இடத்தில் அவர் சிறப்பாகப் பேசுவதையும் செயல்படுவதையும் தொடர்ந்து பார்க்கிறோம். ‘சரவெடி’ என்கிற பட்டத்திற்கு ஏற்ப இன்று அவர் இடைவிடாமல் பாயிண்ட்டுகளை எடுத்து வைத்து எதிரணியைத் திணறடித்தார்.

பிக் பாஸ் பிரசாரம்
பிக் பாஸ் பிரசாரம்

“ஒரு சண்டை வந்தா அதை தனியா போய் பேசி தீர்க்க முயற்சிக்கணும். சபைல நின்னு சவுண்டு விட்டா இன்னமும் பெரிசாத்தான் ஆவும். அது விளம்பர உத்தி” என்று பிரியங்காவை முன்னிட்டு சஞ்சீவ் சொன்னது சரியான பாயிண்ட். “பழைய பகையை மறக்கச் சொல்” என்று அவர் கோஷமிட்டதும் சரியானதே. “அக்ஷரா காலையிலும் மதியத்திலும் சாப்பிடாமல் இரவு மட்டுமே சாப்பிடுவார்’ என்கிற அரியதகவலும் இந்த விவாதத்தின் இடையில் வெளிச்சத்திற்கு வந்தது. கேப் விடாமல் பேசிய சஞ்சீவிடம் ‘தண்ணிய குடி.. தண்ணிய குடி’ என்று சிபி எடுத்துத் தர “அது உங்களுக்குத்தான் தேவைப்படும்” என்று காட்டமாக மறுத்தார் சரவெடி.

தொடரும் ராஜூவின் அநாகரிகப் போக்கு

பாவனி மற்றும் அபினய்யிடம் மன்னிப்பு கேட்டவுடனேயே அவர்களைப் பற்றி வம்பு பேசுவதை ராஜூ நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது அமீரையும் கூடுதலாக இப்போது இணைத்துக் கொண்டிருக்கிறார். ‘இந்த விவகாரத்தை விசாரணையில் நோண்டினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சங்கடமாக இருக்கலாம்” என்று கடந்த முறை கமல் இதை விட்டிருக்கலாம். ஆனால் இது ஓயாமல் தொடரும் போது நிச்சயம் அவர் இந்த வாரத்தில் தலையிட்டாக வேண்டும். இது போன்ற அபத்தமான வம்புகள் பிக்பாஸ் வீட்டிலாவது இல்லாமல் சமூகத்திறகு ஒரு மெல்லிய முன்னுதாரணமாக அமைய வேண்டும்.

‘பாவனி விஷயத்தை டாஸ்க்கில் சேர்க்கலாமா?” என்று பிக்பாஸிடம் அனுமதி கேட்டிருக்கிறார் ராஜு. ‘பரபரப்பிற்காக எதை வேண்டுமானாலும் ரியாலிட்டி ஷோ அனுமதிக்கும்’ என்று அவருக்குத் தெரியாதா? என்றாலும் ‘அனுமதி பெற்றுதான் செய்தேன்’ என்று பிறகு தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உத்தி இது. “சம்பந்தப்பட்டவர்களிடம் இதை நேரடியாக கேட்டிருக்கலாமே?” என்று இப்போது அபினய் வாய் திறக்க “அமீர் –பாவனி விஷயத்தை டாஸ்க்கில் சேர்க்கலாம் என்றால் இதையும் நியூஸில் சேர்க்கலாமே?” என்று அவரை சாமர்த்தியமாக மடக்கினார் ராஜூ.

 ராஜூ
ராஜூ

“இது சென்சிட்டிவ்வான விஷயம் என்று புரியவில்லையா?” என்று பிரியங்கா கேட்ட போது “அப்படித்தானே நியூஸ் சானல்ல பண்ணுவாங்க?” என்று இடக்கு பேசினார். ஒருவேளை ராஜூவின் ஒழுக்கத்தைப் பற்றி யாராவது எல்லை மீறி வம்பு பேசினால் அதையும் இப்படித்தான் இயல்பாக எடுத்துக் கொள்வாரா?

“இந்த வீட்டில் உசுப்பேற்றுவது பிரியங்கா மட்டும்தான்” என்று தாமரை உரக்க கத்த ‘உரக்கச் சொல்’ என்று பதிலுக்கு கத்தி வெறுப்பேற்றினார் பிரியங்கா. “:உசுப்பேத்தறவங்க கிட்ட கம்முன்னு இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்” என்கிற பிரபல தத்துவத்தை சமயத்தில் நினைவுகூர்ந்து விவாத மேடையை முடித்து வைத்தார் சிபி.

அபினய் – பாவனியின் சங்கடம்

‘பாவனி சமைச்சதை நான் சாப்பிட மாட்டேன்” என்று முரண்டு பிடித்தார் தாமரை. “ஏதோ.. பார்த்தேன்னு. ஏதோ பார்த்தேன்னு. சொல்றாரே. அப்படி என்ன எழவு அது. நான் ஏதாவது தப்பாவா நடந்துக்கிட்டேன்.. சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே? என்று பிறகு பாவனி கண்கலங்கிய போது “அருவருப்பா இருக்கு” என்றார் பிரியங்கா.

“அபினய்.. இதை நீங்க இல்லைன்னு மறுக்கலாமே?” என்று எதிரணி சொல்வதையே அமீரும் இப்போது வந்த கேட்ட போது “என் மனச்சாட்சி சுத்தமா இருக்கறப்போ நான் ஏன் அதைச் செய்யணும்?” என்று அபினய் சொன்னது சரியானது. ஊர் பேசும் ஒவ்வொரு வம்பிற்கும் ஒருவர் பதில் அளித்துக் கொண்டிருந்தால், வம்புகள் பெருகிக் கொண்டேதான் இருக்கும். விளக்கம் அளித்தாலும் அது ஓயாது. ஏனெனில் அதன் நோக்கம் உண்மையை அறிவது அல்ல. வம்பு பேசுவது மட்டுமே.

அபினய்
அபினய்

“அப்படின்னா அவங்க குத்திக்கிட்டே இருந்தா தாங்கிக்கணும். அழக்கூடாது” என்று அமீர் சொன்னதும் விதாண்டாவாதம். அவப்பழியை எதிர்கொள்வதே ஒரு சுமை என்னும் போது அதற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருப்பது கூடுதலான சுமை. இதில் அதற்காக வருந்தவே கூடாது என்பதை மிகுந்த மனவலிமையுள்ளவர்கள் மட்டுமே செய்ய முடியும்.

அரசியல் கூட்டணியின் உதயம்

NPP-ம் BBMK-ம் கூட்டணி அமைக்கும் என்பது முன்பே தெரிந்து விட்டது. ‘உரக்கச் சொல்’ அணியை எதிர்ப்பதற்காக அவர்கள் வீட்டில் ஏற்கெனவே ஒன்றுகூடி விட்டார்கள். எனவே அரசியல்தளத்திலும் அது பிரபலித்தது. எதிரணியுடன் ‘இடிமுழக்கம்’ இமான் ஏற்கெனவே ரகசிய ஒப்பந்தம் போட்டு விட்டதாலும் அதையும் தாண்டி தொண்டர்கள் ‘இணைப்பு கொடியை’ ஏற்கெவே தயார் செய்து விட்டாலும் உயிரச்சம் காரணமாகவும் இணைப்பிற்கு ஒப்புக் கொண்டார் சஞ்சீவ்

இந்தக் கூட்டணியின் இந்த புதிய வியூகம் ஜெயிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.