Published:Updated:

பிக் பாஸ் 69: பாவனியை நோக்கி எழுந்த கேள்விகள்! என்ன சொல்வார் கமல்?

பாவனி

இந்த வார விசாரணை நாளில், பிக்பாஸ் வீட்டில் உள்ள யாரையும் கமல் சங்கடப்படுத்த வேண்டாம். ஆனால் இதை ஒரு பொது விஷயமாக எடுத்துக் கொண்டு தனது கருத்துக்களை அவர் அழுத்தமாகச் சொன்னால் நன்றாக இருக்கும்.

பிக் பாஸ் 69: பாவனியை நோக்கி எழுந்த கேள்விகள்! என்ன சொல்வார் கமல்?

இந்த வார விசாரணை நாளில், பிக்பாஸ் வீட்டில் உள்ள யாரையும் கமல் சங்கடப்படுத்த வேண்டாம். ஆனால் இதை ஒரு பொது விஷயமாக எடுத்துக் கொண்டு தனது கருத்துக்களை அவர் அழுத்தமாகச் சொன்னால் நன்றாக இருக்கும்.

Published:Updated:
பாவனி

‘ஒரு பெண் நான்கு ஆண்களுடன் தூய நட்புடன் ஒரே வீட்டில் வாழ முடியும்’ என்கிற செய்தி, விக்ரமன் இயக்கிய ‘புது வசந்தம்’ என்கிற திரைப்படத்தில் மிக அழுத்தமாகச் சொல்லப்பட்டிருந்தது. ‘பெரிய பெரிய இயக்குநர்கள் கூட சொல்லாத விஷயத்தை நீ சொல்லிட்டியேப்பா’ என்று விக்ரமனை, இயக்குநர் பாலசந்தர் மனமார பாராட்டியதை எங்கோ வாசித்த நினைவிருக்கிறது. ‘புது வசந்தம்’ வெளியாகி ஏறத்தாழ முப்பது வருடங்கள் கடந்துவிட்டன. சமீபத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் கூட இது தொடர்பான விஷயம் பல மடங்கு வீரியத்துடன் சொல்லப்பட்டிருந்தது.

ஆனால் ‘ஓர் ஆணும் பெண்ணும் சிரித்து பேசிக் கொண்டிருந்தால் அது காதலாகவோ அல்லது அது தொடர்பான கசமுசவாகவோத்தான் இருக்கும்’ என்று சந்தேகப்படுவதையும் வம்பு பேசுவதையும் நமது சமூகம் நிறுத்தவில்லை. அவர்களுக்குள் அப்படியே ஏதாவது இருந்தாலும்கூட அது இரு Adults சம்பந்தப்பட்ட விஷயம். இதில் தலையிடுவதற்கு அவர்களின் நெருங்கிய உறவுகளுக்குக்கூட உரிமையில்லை. ‘பெண்கள், ஆண்களின் உடமைப் பொருள்’ என்கிற நிலவுடமை மனோபாவம் மாறினால்தான் இது போன்ற வம்புகளும் கணிசமாக குறையும்.

இந்த வார விசாரணை நாளில், பிக்பாஸ் வீட்டில் உள்ள யாரையும் கமல் சங்கடப்படுத்த வேண்டாம். ஆனால் இதை ஒரு பொது விஷயமாக எடுத்துக் கொண்டு தனது கருத்துக்களை அவர் அழுத்தமாகச் சொன்னால் நன்றாக இருக்கும். ஒரு துளி மாற்றமாவது இதனால் நிகழக்கூடும். இப்படி துளி துளியாக நகர்ந்துதான் இன்றைய நாகரிக சமூகத்திற்குள் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

பிரியங்கா
பிரியங்கா

எபிசோட் 69-ல் என்ன நடந்தது?

NPP-ம் BBMK-ம் இணைந்து NPMK என்கிற புதிய கட்சியாக உதயமாகி விட்ட விஷயம் பொதுவில் அறிவிக்கப்பட்டது. ‘நல்லதே பேசும் மக்கள் கட்சி’ என்று இந்தப் பெயருக்கு முட்டு கொடுக்கும் போது வருணிற்கே சிரிப்பு வந்து விட்டது. சபையில் இதை அவர் அறிவிக்கும் போது ஏறத்தாழ அனைவரும் சிரித்தார்கள். இதற்குப் பிறகு சிபி தயாரித்த ஒரு ‘முக்கிய’ கடிதத்தை சஞ்சீவ் சபையில் வாசித்து எதிர்க்கட்சி தலைவரான பிரியங்காவிடம் தந்தார். “ஆண்கள் இனிமேல் சுச்சா போய் விட்டு ஒழுங்காக தண்ணீர் ஊற்றி வருவோம்” என்பதே அந்த கோரிக்கை மனுவின் சாராம்சம். இதை அப்போதோ வாய்வார்த்தையாக உறுதி மொழி கொடுத்து விட்டுச் சென்றிருந்தால் அத்தனை நீள வாக்குவாதம் மிச்சமாகியிருக்கும்.

ஆண்கள் அளித்த மனுவை தாயுள்ளத்துடன் ஏற்றுக் கொண்டார் பிரியங்கா. ஆனால் தன் மனக்கொதிப்பு காரணமாக இவர்களுக்கு கைகொடுக்க மறுத்து விட்டார் பாவனி. பிறகு தனியாகச் சென்று காமிராவின் முன்பு “இந்த மாதிரி ஒரு பேர் எனக்கு வேண்டாம். இதையேதான் தொடர்ந்து பேசுவாங்களா… நான் வீட்டுககுப் போறேன்” என்று அவர் கண்கலங்கி அழுது கொண்டிருக்க “ஏன் அழுது ஒப்பாரி வைக்கற” என்று கேட்டபடி வந்தார் பிரியங்கா.

பிரியங்கா செய்தது உதவியா, உபத்திரவமா?

இன்னொரு பெண் ஒழுக்கரீதியாக தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தப்படுவதைக் கண்டு கொதித்தெழுந்து பிரியங்கா ஆதரவு தருவது சரியான விஷயம்தான். ஆனால் ‘தைரியம் இருந்தா இப்பவே போய் கேளு.. இல்ல. நான் கேட்கட்டுமா?” என்பதை அவர் உண்மையான அக்கறையுடன் சொன்னாரா அல்லது கொளுத்திப் போடும் நோக்கில் செய்தாரா என்று தெரியவில்லை. சந்தேகத்தின் பலனை பிரியங்காவிற்குத் தருவோம். நல்ல நோக்கமாகவே இருக்கக்கூடும். ஆனால், இப்படியொரு சென்சிட்டிவ்வான விஷயத்தை ஒரு சபையின் நடுவே உரக்க கத்தி பேசினால் அது இன்னமும் பெரிதாக மாறவே வாய்ப்புண்டு. இதை பிரியங்காவை விடவும் பாவனி முன்பே யோசித்திருக்க வேண்டும்.

ஒரு பெண், ஒரு சபையில் தன்னை நோக்கி சத்தத்துடன் கேள்வி கேட்டால் ஆணின் அகங்காரம் அதை ஒப்புக் கொள்ளாது. மூர்க்கமாக எதிர்க்கவே செய்யும். பாவனி வந்து வெடித்தவுடன் அவர் கேட்ட கேள்விகளின் பின்னுள்ள நியாயத்தை உணராமல் ராஜூவும் சிபியும் கொதித்ததின் காரணம் இதுதான். ‘சொடக்குப் போட்டு பேசினா பிடிக்காது’ என்றார் ராஜூ. ஆனால் அதே சமயத்தில் ஒரு சென்சிடிவ்வான விஷயத்தை நிதானமாக அணுக வேண்டும் என்று பாவனிக்கு நாம் அட்வைஸ் செய்யவும் முடியாது. பாதிப்பை அடைந்தவர் அவர்தான். நெடுநாள் அடக்கி வைத்திருந்த கொதிப்பு எந்தக் கணத்தில் வெடிக்கும் என்பதை அவராலேயே கணிக்க முடியாது.

ராஜு - பாவனி
ராஜு - பாவனி

ராஜூவின் அமைதியான முகத்திற்குப் பின்னால் உள்ள ஆபத்து

“மத்தவங்க எடுத்துட்டு வந்த நியூஸ் எல்லாம் அடுத்தவங்க மேல சொல்ற புகாராவே இருந்தது. அதான் தவிர்த்துட்டேன்” என்று சொல்லும் ராஜூ, அபினய் – பாவனி விஷயம் அதைவிடவும் சென்ட்டிவ்வான புகார் என்பதை உணரவேயில்லையா என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஏன் இதை நியூஸாக்க வேண்டும்?

இதைப் போலவே விவாத மேடையில் இந்த விவகாரத்தை யார் மறுபடியும் ஆரம்பித்தது, பிரியங்காவா, ராஜூவா என்பது முக்கியமான கேள்வியல்ல. இது ஏற்கெனவே பலமாக ஆரம்பித்து விட்ட புகை. “நான் ஏதாவது பண்ணுவேன்” என்று அமீரிடம் பேசும்போது கூட ராஜூ சொன்னதிலிருந்து அவர் இன்னொரு சமயத்தில் இதை நிச்சயம் நோண்டியிருப்பார் என்று தெரிகிறது.

“என் மேல உங்களுக்கு ஏதாவது ஃபீலிங்க்ஸ் இருக்கா?” என்று ஆரம்ப வாரத்திலேயே பாவனி அபினய்யிடம் கேட்டு வைத்துக் கொண்டது நல்ல விஷயம். ஏனெனில் அபினய் காட்டிய சில அக்கறைகள், அப்படி அவரை நினைக்க வைத்திருக்கலாம். ‘இனி இந்த வீட்டில் இவருடனும் புழங்க வேண்டுமே’ என்கிற நிலைமையில் ‘இது நட்புதானே?’ என்று பாவனி உறுதிப்படுத்திக்கொண்டது சரிதான். இது பொதுவில் கசிந்திருந்தாலும் கூட இது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமே. இதைப் பற்றி பிக்பாஸ் வீட்டில் யார் கிசுகிசு பேசியிருந்தாலும், கையில் பெயரை எழுதி வம்பாக ஊதி வளர்த்திருந்தாலும் அது தவறானதே. இந்தக் கட்டுரைத் தொடரில் நான் ஏதேனும் அப்படியொரு தொனியில் எழுதியிருந்தாலும் அது தவறுதான்.

இது பாவனிக்காக மட்டும் அல்ல:

இது பிக்பாஸ் பாவனிக்காகத் தரப்படும் வியாக்கியானமாக தயவுசெய்து சுருக்கிப் பார்க்க வேண்டாம். ஊராரரின் வம்புகளாலும் வீண் சந்தேகத்தாலும் பெண்களின் ஒழுக்கம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து கேள்விக்குட்படுத்தப்படுவது குறித்த விவாதம் இது. ‘It’s None of your business’ என்பதே இந்த சர்ச்சையில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய பாடம். குறிப்பாக இது ஆண்களுக்கானது. ஒரு பெண்ணின் ஒழுக்கம் குறித்து சுவாரசியத்துடன் வம்பு பேசும் பெண்களுக்கானதும் கூட. ஆணின் ஒழுக்கம் பற்றி இதேயளவு நாம் அக்கறைப்படுகிறோமோ என்று யோசித்துப் பார்த்தாலே இது எத்தனை அபத்தம் என்பது புரிந்து விடும்.

“வர்றாங்க. கத்தறாங்க போயிடறாங்க.. ரிப்பீட்டு" என்று பாவனியின் கோபம் குறித்து ராஜூ ஆதங்கப்பட்டது சரிதான். இது நிதானமாக அமர்ந்து பேசப்பட வேண்டிய விஷயம். ஆனால் அப்படி தான் ஏற்கெனவே அப்படி அமர்ந்து பேசி விட்டதாக பாவனி தெரிவித்தார். எனில் மறுபடியும் ராஜூ இதை கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய அவசியமில்லை.

இதர சராசரி நபர்கள் இருக்கட்டும். ஒரு சினிமா இயக்குநர் ஆக வேண்டுமென்கிற விருப்பத்தை ராஜூ கொண்டிருக்கிறார். எனில் மனிதர்களின் நுட்பமான உணர்வுகளை அறியவும் அதை மதிக்கவும் செய்கிற நுண்ணுணர்வு அவருக்கு நிச்சயம் இருக்க வேண்டும். சராசரியான நபர்களைப் போலவே வம்பு பேசுவதில் உற்சாகமாக இறங்கக்கூடாது.

பாவனி
பாவனி

ராஜூவின் வாக்குத் திறமை

பாவனிக்கு மொழிப்பிரச்சினை என்பதைத் தாண்டி ராஜூவிடம் சரிக்கு சமமாக வாக்குவாதம் செய்ய முடியாது என்பது தெரியும். ஏறத்தாழ அதே பிரச்சினைதான் அபினய்க்கும். அதனால்தான் நேற்றைய விவாத மேடையில் தன் ஆட்சேபத்தை எழுப்பி விட்டபிறகு “கேள்வி அங்க இருந்து வந்தது” என்று பிரியங்காவை நோக்கி திருப்பி விட்டு விட்டார். "கவுன்ட்டர் தராம இருங்க ப்ரோ. என்னால பேச முடியல” என்று அமீர் கூட ராஜூவிடம் சரணாகதி அடைந்து விட்டார். அதனால்தான் பாவனியால் ராஜூவிடம் தொடர்ந்து பேச முடியாமல் போயிருக்கலாம்.

உரையாடலுக்கு இடம் தராமல் பாவனி கத்தி விட்டுச் சென்ற ஆதங்கம் குறித்து ராஜூ, அபினய்யிடம் பேசிய போது அபினய் தன் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்யாமல் ‘இது பற்றி அடிக்கடி பேச வேண்டாம்’ என்று பலவீனமாகவே சொன்னது ஏன் என்று தெரியவில்லை. ‘என்ன இருந்தாலும் இது பாவனியின் பிரச்சினை’ என்று நினைக்கிறாரா அல்லது பாவனியுடன் தான் தொடர்புப்படுத்தி பேசப்படுவதில் அவர் கிளுகிளுப்பு ஏதும் அடைகிறாரா என்பதும் புரியவில்லை. அவரின் மெளனம் நெருடலை உண்டாக்குகிறது.

“கண்ணு முன்னாடி ஒரு விஷயம் நடந்துச்சு” என்று மையமாக இதைப் பற்றி பேசுவதின் மூலம் “இதில் ஏதோ பெரிதாக நடந்துள்ளது" என்பது போன்ற தோற்றத்தை ராஜூ தர விரும்புகிறார். “அது என்னன்னு இப்ப சொல்லுங்க” என்று கேட்கப்பட்ட போது அவர் சொன்னது சாதாரண விளக்கமாகத்தான் இருந்தது. “இங்க சுத்தி காமிரா இருக்கு” என்று சிபி சொன்னபோது “அதனால்தான் நான் தைரியமா இருக்கேன்” என்று அபினய் சொன்ன பதில் சிறப்பு. ராஜூவைப் போலவே சிபியும் ஆணாதிக்கத்தனம் நிரம்பியவர் என்பது அம்பலப்பட்ட தருணம் இது. “இனிமேல் இதைப் பற்றி பேசமாட்டேன்" என்று ராஜூ இறுதியில் ஒப்புக் கொண்டது நன்று. ஆனால் இதில் பேச ஒன்றுமேயில்லை என்பதுதான் யதார்த்தம்.

பாவனியின் ‘கட்டிப்பிடி வைத்தியத்திற்கு’ பாராட்டு

``எனக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டதற்கு நன்றி” என்று பிறகு அபினய்யை பாவனி அணைத்துக் கொண்ட தருணம் அத்தனை அழகானது. ஆனால் அபினய் இந்த நட்பிற்கு முற்றிலும் தகுதியானவரா என்று சந்தேகம் வருகிறது. இந்த விவகாரத்தில் அவரும் சம்பந்தப்பட்டிருப்பதால் தன்னுடைய ஆட்சேபத்தை சபையில் வலுவாக பதிவு செய்திருக்கலாம். “எங்களுக்குள் ஏதும் இல்லை” என்று அவர் பம்ம வேண்டாம். ‘It is none of your business’ என்று வம்பு பேசுபவர்களிடம் பலமாகவே சொல்லியிருக்கலாம்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசியபடி உணவு சாப்பிட்டார்கள். தாமரை சமைத்த அசைவ உணவு அன்று பிரமாதமாக அமைந்து விட்டது. இது போன்ற காரணங்கள் பாவனியை நெகிழ வைத்திருக்கலாம். அவர் ராஜூ உட்பட அனைவரையும் அணைத்து ‘கட்டிப்பிடி’ வைத்தியம் செய்த காட்சி அருமையானது. ‘அவ்ளதாங்க வாழ்க்கை’ என்று சுருக்கமாக அமீர் சொன்னதும் சிறப்பு. இது வாரஇறுதிக்கான நாடகமா அல்லது நாமிஷேனைத் தவிர்ப்பதற்கான முயற்சியா என்கிற ஆராய்ச்சியெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இது நடந்தது பார்க்க அத்தனை அழகாக இருந்தது. இதை பாவனி முன்னெடுக்காமல் ஆண்களில் யாராவது முன்னெடுத்து செய்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். சமூக மாற்றத்திற்கான ஒரு முன்னோட்டக் காட்சியாக பிரகாசித்திருக்கும்.

பாவனி
பாவனி

பிரியங்கா – தாமரை – மீண்டும் சமரசம்

விடிந்தது. பாவனியின் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ பிரியங்காவை சலனப்படுத்தியதா அல்லது அவரது வழக்கமான ‘முத்தா’ சடங்கை நிறைவேற்றும் நேரம் வந்து விட்டதா என்று தெரியவில்லை. அவர் தாமரையை இழுத்து அணைத்து ஒரமாக வைத்து “பேசலாமா?’ என்றார். என்னடாவென்று பார்த்தால் ‘நம்ம கட்சிக்கு வந்துடு. நீதான் அங்க தலைவி” என்று அரசியல் பேரம் பேச வந்திருக்கிறார். “வளைக்கப் பார்க்கறாங்கோ.. வரமுடியாதுன்னு தெளிவா சொல்லிடு” என்று பின்னாலிருந்து குறும்பாக சத்தம் கொடுத்தார் வருண். “தலைவி பதவியெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இதென்ன போர்டு?” என்று தன் மீது நையாண்டி செய்யப்பட்ட “ரீல் நல்லா விடறாங்க” என்ற வாசகத்தைக் காட்டினார் தாமரை. “அதெல்லாம் முதல்ல இருந்தேதான் நான் உன்னைப் பத்தி சொல்லிக்கிட்டு இருக்கேன்” என்று பிரியங்கா போகிற போக்கில் இதை இடது கையால் தட்டி விட்டது சுவாரசியமானது.

பிரியங்கா - தாமரை
பிரியங்கா - தாமரை

ராஜூவின் ‘கட்சியில் இணைதல்’ குறும்பு

எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு திடீரென்று ராஜூ வந்தது ஆச்சரியமாக இருந்தது. “மேடம் நல்லாயிருக்கீங்களா?” என்று பாவனியைப் பார்த்து கேட்டது நல்ல விஷயம். “உங்க கட்சிக் கொள்கைகளைப் பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று அமீரிடம் கேட்டார் ராஜூ. ஏனோ பிரியங்கா இந்தச் சமயத்தில் காணப்படவில்லை. “அது வந்து கொள்கைன்னா… சமத்துவம்.. சமத்துவம்னா..” என்று சொல்லும் போது அமீருக்கே சிரிப்பு வந்து விட்டது. அதைப் பார்த்து ராஜூவும் தனது ரோபோ முகத்தைக் கழற்றி வைத்து விட்டு வாய்விட்டு சிரித்த காட்சி ஒரு மாற்றமாக இருந்தது.

‘அடுத்த கொள்கை.. ஒழுக்கம்..’ என்று அமீர் சொன்னவுடன் ‘உங்க சட்டை பட்டனை ஒழுங்காப் போடுங்க' என்று ராஜூ சொன்னவுடன் அமீர் மட்டுமில்லாது பாவனியும் இந்தக் கிண்டலை ரசித்து சிரித்தார். பிறகு ஒரு கடிதத்தை ‘உரக்கச் சொல்’ கட்சியிடம் நீட்டினார் ராஜூ. அவர் கட்சியில் இணைவது போன்ற தோற்றத்தை அந்தக் காட்சி ஏற்படுத்தியது. ஒருவேளை பாவனியுடனான சமாதானத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உண்மையாகவே ராஜூ இதைச் செய்தாரோ என்று கூட முதலில் தோன்றி விட்டது.

ஆனால் அமீர் கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போது தூரத்தில் இருந்து குறும்பான முகத்துடன் ராஜூ எட்டிப் பார்த்த போதே தெரிந்து விட்டது, அந்தக் கடிதம் கிண்டலான நோக்கில் தரப்பட்டது என்று. “நீஙகள் சொல்லும் கொள்கைகளை முதலில் நீங்களே பின்பற்றுங்கள்” என்பது போன்ற தொனியில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைப் பார்த்து வாய் விட்டு சிரித்தார் அமீர். ஆனால் இந்தக் குறும்பை அபினய் ஏன் சீரியஸாக எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. என்ன இருந்தாலும் இதுவொரு ‘லுலுவாயி’ அரசியல் டாஸ்க்தானே?!

ராஜூ
ராஜூ

பாவனி – அக்ஷரா மோதல் - காரணமாக இருந்த மட்டன் குழம்பு

நேற்று பாவனி செய்த கட்டிப்பிடி வைத்தியத்தின் வரிசையில் அக்ஷராவும் இருந்தார். அவர் அரைமனதாக பாவனியைக் கட்டிப்பிடித்த போதே தெரிந்து விட்டது, அவர் பாவனியுடன் முழு நட்புடன் பழக விரும்பவில்லை என்று. இன்று தங்கள் அணியினரின் பெருமைகளைப் பற்றி ஆவேச உரை நிகழ்த்தியபோது ‘எங்கள் அணியைச் சேர்ந்த தாமரை அவர்கள் நேற்று செய்த மட்டன் குழம்பை நன்கு ருசித்து சாப்பிட்டோம். ஆகவே எங்கள் அணியை ஆதரியுங்கள்” என்பது போல் அவர் பேசிக் கொண்டிருக்க. “ஆமாமாம். அந்த மாதிரி ஒரு குழம்பை இந்த வீட்டில் நான் இதுவரை சாப்பிட்டதேயில்லை” என்று அக்ஷராவும் பாராட்ட, “அப்படின்னா. நான் செஞ்ச சமையல் என்ன தக்காளி தொக்கா?” என்பதை சர்காஸ்டிக்கான தொனியில் கேட்டார் பாவனி.

இது தொடர்பாக அக்ஷராவிற்கும் பாவனிக்கும் ஒரு சின்ன முட்டல் ஏற்பட்டது. ‘எத்தனை நெருக்கமாக இருந்தாலும் இரு பெண்களுக்குள் ஒரு மெல்லிய பகைமைக் கோடு இருந்தே தீரும்’ என்கிற என் கண்டுபிடிப்புத் தத்துவம் நிரூபணமானது. "யாரும். யாரையும் டார்கெட் பண்ண வேண்டாம்” என்று அக்ஷரா அரசியல் நாகரிகத்தை முழக்கமிட “முதல்ல நீங்க அப்படி இருக்கீங்களா?” என்று பாவனி பதிலுக்கு கவுன்டடர் தர, இன்னுமொரு பெரிய ரணகளத்திற்கான நெருப்பு ஆரம்பித்து அப்படியே அடங்கியது.

பிக் பாஸ் 69: பாவனியை நோக்கி எழுந்த கேள்விகள்! என்ன சொல்வார் கமல்?

பாவனியையே அமீர் குறுகுறுவென்று பார்க்க “வேற எங்கயாவது பாரு” என்று பாவனி சொல்ல “இனிமே அக்கான்னு கூப்பிடறேன்” என்றார் அமீர். பாவனி அதை உடனே மறுப்பார் என்று அமீர் எதிர்பார்த்தார் போல. “எனக்கு ஒன்பது ஓட்டு கொடுங்க பிக்பாஸ்” என்று குறும்பாக கேட்டார் பாவனி. “ஏன் இங்க இருக்கிற எல்லோரையும் நாமினேட் செய்யப் போறியா?” என்று அமீர் கேட்க “அண்ணாச்சியை நாமினேட் செய்ய மாட்டேன். அவரை எனக்குப் பிடிக்கும்” என்று திடீர் சர்ப்ரைஸ் தந்தார் பாவனி. “முதல்ல என் பேரை ஒழுங்கா சொல்லு.. பவானி இல்ல.. பாவனி” என்று அமீரை அவர் திருத்தியது சுவாரசியமான காட்சி.

தேர்தலைச் சந்திப்போமா?

‘உரக்கச் சொல்’ கட்சியையும் தங்களுடன் ஐக்கியமாக்கி தேர்தலைத் தவிர்க்கலாம் என்று திட்டமிட்டது NPMK. ஆனால் ‘எப்படியும் அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்” என்று இவர்களே முடிவு செய்தார்கள். தேர்தலை சந்திக்கலாம் என்பது இவர்களின் முடிவு. எப்படியும் ஜொரிட்டியில் இவர்கள்தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது நமக்கு முன்பே தெரிந்து விட்டதால் சுவாரசியம் ஏதுமில்லை. ஒருவேளை இந்தத் தேர்தல் மும்முனைப் போட்டியாக நடந்திருந்தால் பரபரப்பு நிலவியிருக்கும். ஆனால் அதையும் தாண்டிய ஒரு சுவாரசியம் பிறகு நடந்தது.

தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிகாரிகளாக நிரூப்பும் அமீரும் நியமிக்கப்பட்டார்கள். மக்கள் வரிசையாக வந்து வாக்களித்தார்கள். மையை இடது விரலுக்குப் பதிலாக வலது கையில் வைத்துக் கொண்டிருந்தார் அமீர். “நீ யாருக்குப் போட்டே?” என்று தாமரை ராஜூவை சந்தேகமாக கேட்க “அதுக்காகத்தான் கையோட எடுத்துட்டு வந்தேன்” என்று காமெடி செய்தார் ராஜூ.

வாக்கெடுப்பின் இறுதியில் NPMK கட்சிக்கு ஏழு வாக்குகளும் ‘உரக்கச் சொல்’ கட்சிக்கு 5 வாக்குகளும் கிடைத்தன. எனில் NPMK கட்சியில் ஒருவர் கட்சி மாறி வாக்களித்து வி்ட்டார் என்று பொருள். யார் அந்த கறுப்பு ஆடு? அவர் திட்டமிட்டு செய்தாரா? யாராவது அறியாமையில் செய்து விட்டார்களா? தேர்தல் அதிகாரிகளின் தில்லுமுல்லுவா?

“லெப்ட் பக்கம்தானே முத்திரை குத்தணும்?” என்று இப்போது சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார் சிபி. ஒரு கட்சியின் தலைவராக இருந்தவருக்கே இந்த நிலைமை! ‘சின்னப்புள்ளத்தனமாக’ நடந்த இந்த அரசியல் கட்சித் தேர்தலை ரொம்பவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு ‘வெற்றி பெற்ற கட்சிக்கு வாழ்த்துகள்’ என்று பிக்பாஸ் அறிவித்ததெல்லாம் நல்ல காமெடி.

நிரூப்
நிரூப்

யார் அந்த கறுப்பு ஆடு?

NPMK கட்சி வெற்றி பெற்றாலும் கூட அந்த மகிழ்ச்சியை அவர்களால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. “எனக்கென்னமோ ‘இடிமுழக்கம் இமான்’ மேலதான் சந்தேகமா இருக்கு” என்று அண்ணாச்சியை ஜாலியாக போட்டுக் கொடுத்தார் ராஜூ. “உங்கள் தலைவர் யாருன்னு சொல்லுங்க” என்று பிக்பாஸ் கேட்டதும் “அஞ்சு நிமிஷம் டைம் கொடுங்க” என்று இமான் கேட்டதும் சபையில் சிரிப்பு எழுந்தது. கட்சி உறுப்பினர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் ‘சஞ்சீவை’ தலைவராக சிபி முன்மொழிந்த போது தாமரை அதை ஆட்சேபித்தது சிறப்பான விஷயம்.

உண்மையில் சஞ்சீவ்தான் இதற்கு தலைவராக இருக்க தகுதியானவர். அவரது ‘சரவெடி’ முழக்கங்கள் அதற்கான தகுதியை உருவாக்கியிருந்தன. ஆனால் தான் வைல்ட் கார்ட் என்ட்ரி என்கிற காரணத்தினாலோ, என்னவோ, “அண்ணாச்சி வயதில் பெரியவர்.. அவரே தலைவராக இருக்கட்டும்” என்று தலைவர் பதவியை ஜாக்கிரதையாக விட்டுக் கொடுத்து விட்டார் சஞ்சீவ். ஒரு அசலான பிரியாணி தொண்டரையும் மிஞ்சுமளவிற்கு ‘தலைவர்.. வாழ்க.. அண்ணாச்சி.. வாழ்க’ என்று கூவினார் அக்ஷரா. (நல்லா கூவுறீங்கம்மா!).

இமானுக்கு மாலையிட்டு தங்கள் தலைவரின் கொண்டாட்டத்தை நிகழ்த்தும் உற்சாகத்தில் அவரின் வேட்டியையே இழுத்து விட்டு அவரின் மானம் போவதற்கு யாரோ காரணமாக அமைந்து விட்டார்கள். இதைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தார், எதிர்க்கட்சித் தலைவரான பிரியங்கா. ‘யார் அந்த கறுப்பு ஆடு?” என்று ஆளுங்கட்சி மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்க, நிரூப், தாமரை, ராஜூ என்று ஒவ்வொருவரையும் வம்படியாக கட்டிப்பிடித்து பிரியங்கா நன்றி சொன்ன காட்சி சுவாரசியமான குறும்பு.

இதனால் காண்டான NPMK “எல்லோரும் வந்து சத்தியம் பண்ணுங்கடா” என்று தங்கள் கட்சிக்காரர்களை அழைத்தார்கள். பள்ளி டாஸ்க்கின் போது ‘தாய்நாட்டின் மீது சத்தியமாக’ என்கிற உத்தி நன்றாக வேலை செய்ததால் அதையே இங்கும் பின்பற்றினார்கள். ஆனால் அந்தக் கட்சியில் உள்ள ஒருவர் தவறாமல் எல்லோருமே NPMK-க்கு வாக்கு அளித்ததாக சத்தியம் செய்ததால் குழப்பம் இன்னமும் கூடியது. முதலில் காமெடி செய்த ராஜூ கூட தான் மாற்றி வாக்களிக்கவில்லை என்பதை உறுதி செய்தார்.

“எவனா இருக்கும்?” என்று சஞ்சீவ் சீரியஸாகவே கோபம் கொண்டது நல்ல காமெடி. “இப்படில்லாமா துரோகம் பண்ணுவாங்க?” என்று தாமரை உண்மையாகவே வருத்தப்பட்டு கேட்க “இது ஒரு விளையாட்டுதானே?” என்றார் அக்ஷரா. “உண்மையான அரசியல்லயும் இப்படி நடக்கறது சகஜந்தானே?” என்று நிதர்சனத்தைப் பேசி தாமரைக்கு ஆறுதல் அளித்தார் வருண்.

விசாரணை நாளில் எப்படியும் இந்த உண்மை கண்டுபிடிக்கப்படும் என்று தோன்றுகிறது. என்றாலும் ‘யார் அந்த கறுப்பு ஆடு?” கமெண்ட் பாக்ஸில் வந்து உங்களின் யூகத்தைச் சொல்லுங்களேன்.