Published:Updated:

பிக் பாஸ் - 77: மருத்துவ முத்தம் 2.0; அமீரை விசாரணைக்கு உட்படுத்துவாரா கமல்?!

பிக் பாஸ் பாவனி

‘பிக் பாஸ் குழந்தைகளும் பார்க்கும் நிகழ்ச்சி’ என்பதை கமலே சொல்லிய நினைவு. எனில் இந்தக் காட்சியை பிக்பாஸ் டீம் துண்டித்திருக்கலாம்.

பிக் பாஸ் - 77: மருத்துவ முத்தம் 2.0; அமீரை விசாரணைக்கு உட்படுத்துவாரா கமல்?!

‘பிக் பாஸ் குழந்தைகளும் பார்க்கும் நிகழ்ச்சி’ என்பதை கமலே சொல்லிய நினைவு. எனில் இந்தக் காட்சியை பிக்பாஸ் டீம் துண்டித்திருக்கலாம்.

Published:Updated:
பிக் பாஸ் பாவனி
கமலின் நேற்றைய விசாரணை எபிசோட் சுமாராகத்தான் இருந்தது. பாவனிக்கு தாமரை பாயசம் தராத விவகாரம், பிரியங்காவிற்கும் அக்ஷராவிற்கும் உள்ள பனிப்போர், ராஜூவின் சேஃப் கேம் போன்றவற்றை “வாக்கிங் போயிட்டு இருந்தேன். என்னமோ கூப்பிட்டாங்க. பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்” என்கிற பாணியிலேயே கமல் விசாரித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவரின் சில வழக்கமான நையாண்டி ஊசிகள் அபாரமாக இருந்தன. ‘தொடைநடுங்கி’ வளையத்தை யார் கையில் கட்டுவது என்று நிரூப் சற்று நேரம் தயங்கிக் கொண்டிருந்து விட்டு “அப்புறம் சொல்லட்டுமா சார்?” என்று கேட்டவுடன் “ஓகே. அதுவரை உங்க கைல கட்டிக்கங்க” என்று அவர் டைமிங்கில் அடித்தது ஒரு நல்ல உதாரணம். “ஓர் இடைவேளைக்குப் பிறகு” என்கிற கிளிஷே வாக்கியத்தை “குளிச்சுட்டு வந்துடறேன்” என்று ராஜூவின் பாணியில் கமல் சொல்லியது அதிரடியான சிக்ஸர்.

அப்புறம்.. வேறென்ன?.. ஆங்.. அந்த மருத்துவ முத்தம் 2.O. உண்மையைச் சொன்னால் அதில் பேச எதுவுமேயில்லை என்பதுதான் மேட்டர். இன்னமும் கூட தமிழ் சினிமாவில் ஒரு முத்தக்காட்சி வந்தால் அதிக கிளுகிளுப்பு அடைந்து கூக்குரலிடும் மனநிலையில்தான் நாம் இருக்கிறோம். முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு. அது எந்த நோக்கில் தரப்படுகிறது என்பதைப் பொறுத்து பொருள் மாறுபடும். அதை எப்போதும் காமத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் கலாசாரக் காவலர்கள் இதற்கு நிச்சயம் அதிர்ச்சியடைவார்கள். பாசாங்குடன் பேசிப் பேசி மாய்வார்கள்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

நம் பிரதேசத்தில் பெரியவர்களுக்கான சினிமா, குழந்தைகளுக்கான சினிமா என்கிற கறாரான கட்டுப்பாடு நடைமுறையில் இல்லை. நாயகன், நாயகியுடன் மரத்திற்குப் பின்னால் சரேல் என்று மறைந்து உதட்டைத் துடைத்துக் கொண்டு வருவது போன்ற காட்சிகளை விவஸ்தையின்றி குழந்தைகளுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்போம். நேரடி முத்தக்காட்சிகளை விடவும் இது போன்ற கற்பனையைத் தூண்டும் காட்சிகள்தான் அதிக ஆபத்தானவை என்று நமக்குத் தெரியாது.

‘பிக்பாஸ் குழந்தைகளும் பார்க்கும் நிகழ்ச்சி’ என்பதை கமலே சொல்லிய நினைவு. எனில் இந்தக் காட்சியை பிக்பாஸ் டீம் துண்டித்திருக்கலாம். முதல் சீசனில் ஆரவ்-ஓவியா தொடர்பான மருத்துவ முத்தம் நமக்கு காட்டப்படவில்லை. ஆனால் ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று ஐந்தாம் சீசனில் முன்னேறியிருக்கிறார்கள். மூர்க்கமான வணிகப் போட்டியும் நிகழ்ச்சியை பரபரப்பாக்குவதற்காக எதையாவது செய்யும் கொலைவெறியும் இவற்றைச் செய்ய வைக்கின்றன. அமீரை விடவும் அதிகம் குற்றம் சாட்டப்பட வேண்டியது இந்தக் காட்சியை அனுமதித்த பிக்பாஸ் டீம்தான்.

பாவனியை சூட்கேஸிற்குள் அடைத்துச் செல்லும் காட்சியை ‘இதை வீட்டில் முயலாதீர்கள்’ என்று disclaimer போட்டாவது காட்ட வேண்டிய அவசியமென்ன? அந்த எச்சரிக்கையையும் மீறி எந்தப் பிள்ளைகளாவது வீட்டில் முயன்று ஏதெனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?

எபிசோட் 77-ல் என்ன நடந்தது?

பனகல் பார்க்கில் வாக்கிங் செல்லும் பணக்கார அங்கிள் தோற்றத்தில் இருந்தாலும் கமல் அணிந்திருந்த உடையும் அதன் நிறக்கலவையும் அட்டகாசமாக இருந்தது. “போட்டியாளர்கள் சோற்றில் கூட குழம்பிற்குப் பதிலாக ஸ்ட்ராட்டஜியை பிசைந்து சாப்பிடுகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட் போல் ஆரம்பித்த போட்டி டி20 போல் பரபரப்பாகி விட்டது. ‘இருத்தலே பிரதானம்’ என்கிற தத்துவத்தை கொலைவெறியுடன் பின்பற்றுகிறார்கள்” என்று போட்டியாளர்களின் முன்னேற்றத்தை சிலாகித்த கமல் ‘வெள்ளிக் கிழமை’ நிகழ்வுகளை காட்டினார்.

‘போலாம் ரைட்’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. ‘அந்தக் காலத்துல பார்த்தீங்கன்னா..’ என்று ஆரம்பித்து அமீருடன் பிரியங்கா பேசிக் கொண்டிருந்தார். அமீர் செய்யும் ரொமான்ஸ் பிரியங்காவிற்கு பார்க்க ‘என்டர்டெயினிங்காக’ இருக்கிறதாம். ‘அந்தப் பொண்ணுக்காக இவன் தலைகீழா தொங்கறான்’ என்று நடைமுறையில் வேடிக்கையாக சொல்வார்கள். பிரியங்கா உசுப்பேற்றி விட அமீர் உண்மையாகவே தலைகீழாக நின்று வேடிக்கை காட்டினார். (நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ!). இளைஞர்கள் செய்யும் இது போன்ற கோணங்கித்தனங்களை உள்ளூற ரசித்து தன்னிச்சையாக காதலில் விழும் முதிரா இளைஞிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். காதலுக்காக முதலில் தலைகீழாக நிற்பவன், திருமணத்திற்குப் பிறகு தலைகீழாக மாறி விடக்கூடும் என்கிற யதார்த்த்தையும் அவர்கள் முன்பே உணர வேண்டும்.

சூட்கேஸிற்குள் பாவனி – விபரீத விளையாட்டு

இந்த வார எலிமினேஷனில் சூட்கேஸூடன் பாவனி வெளியேறுவாரோ என்று எதிர்பார்த்தால் ‘பாவனியையே சூட்கேஸில் போட்டு வெளியேற்றும்’ சாகசத்தை ராஜூ முயன்று கொண்டிருந்தார். இது பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் நிச்சயம் ஆபத்தான விளையாட்டு. முதலில் வேடிக்கையாகத் துவங்கும் விளையாட்டுக்கள் பிறகு வினையான சம்பவங்களாக மாறுவதை ஊடகங்களில் நிறைய பார்த்திருப்போம். பிக்பாஸ் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளில் இவ்வகையான அபத்த வேடிக்கைகள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். பிக்பாஸ் டீம் இதை எடிட் செய்திருக்கலாம். கமல் இதை நிச்சயம் வலியுறுத்துவார் என்று நம்புவோம்.

“நான் என்ன விதிமுறையைச் சொன்னாலும் அதை சரியா ஃபாலோ பண்ணாம கோக்குமாக்கா செய்யறதே உங்களுக்கு வேலையாப் போச்சு. நியாயமா பார்த்தா உங்களுக்கு பழைய சோறு கூட கிடையாது. இருந்தாலும் ஒண்ணு மண்ணா பழகிட்டோம். மனசு கேட்கலை. சரி. லக்ஸரி பட்ஜெட் தந்து தொலைக்கிறேன். எஞ்சாய்’ என்கிற குறிப்புடன் பிக்பாஸ் 2200 மதிப்பெண்களுக்கு அனுமதியளித்தார்.

புத்தகத்தைத் திறந்தவுடன் வரும் பக்கத்தில் இருக்கும் உணவு பரிசு என்கிற திட்டத்தின் கீழ் தாமரைக்கு பரிசு கிடைத்தது. மக்கள் இதில் ஏதோ கோல்மால் செய்கிறார்கள் என்கிற சந்தேகம் நீண்ட நாட்களாக எனக்கு உண்டு. ‘ஸ்வீட் வேண்டும்’ என்று கான்வென்ட் மொழியில் அக்ஷரா கொஞ்சிக் கொண்டிருக்க தாமரை பிரித்ததில் ‘Grilled chicken’ கிடைத்தது. பிரியங்கா ஏமாற்றமடைந்தவுடன் “So Sad” என்று சொல்லி அவரை ஜாலியாக வெறுப்பேற்றினார் பிக்பாஸ்.

‘இந்த வார பாயசம் உங்களுக்குத்தான் அபிநய்’

ஒரு ஜாலியான விளையாட்டு போட்டி நடந்தது. ‘கைகளை உபயோகிக்கக்கூடாது’ என்று விதி இருந்தாலும் இதில் பாவனி நிறைய போங்காட்டம் ஆடினார். என்றாலும் தடுமாறியபடி அவர் ஆடியதில் கடைசியாகத்தான் வர முடிந்தது. “முடி. முடி..” என்று நிரூப் பாவனியிடம் கத்தியபோது ‘ஆட்டத்தை சீக்கிரம் முடி’ என்று சொல்கிறார் என்று பார்த்தால் பாவனியின் தலைமுடி இடைஞ்சலாக கீழே விழுவதைத்தான் சொல்லியிருக்கிறார். இறுதியில் ராஜூ, சஞ்சீவ், தாமரை இருந்த அணி வெற்றி பெற்று விட்டது. இவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டவுடன் “ஆனி முடிஞ்சு ஆவணி பொறந்துடுச்சு. உனக்கு இனிமே நல்ல நேரம்தான். ஓஹோன்னு வரப் போற” என்று சம்பந்தமில்லாமல் தாமரையிடம் புகழ்ந்து சொல்லிக் கொண்டிருந்தார் பிரியங்கா.

லக்ஸரி பட்ஜெட்டில் சாக்லேட் வந்தவுடன் அக்ஷரா நிச்சயம் ‘வீல்’ என்று கத்திக் கொண்டு ஓடுவார் என்று யூகித்தேன். அக்ஷரம் பிசகாமல் அப்படியே நடந்தது. அக்ஷரா எடுத்துக் கொண்ட கொத்து சாக்லேட்டை பறிக்க ஒரு மினி சண்டையே ஜாலியாக நடந்தது. பிரியங்கா சொன்னது போல் எல்லோருக்கும் பகிர்ந்து அளிப்பதுதான் சரியான வழிமுறை. கிடைத்தவர்களே பறித்துக் கொள்வது சரியல்ல.

“இந்த வாரம் பாயசம் நிச்சயம் உங்களுக்குத்தான்... கன்பர்ம்” என்று அபிநய்யிடம் சொல்லிக் கொண்டிருந்தார் வருண். இவர் யூகிக்கும் விஷயங்கள் பல சமயங்களில் உண்மையாகி விடுகின்றன. ‘கள்ள ஓட்டு போட்ட கறுப்பு ஆடு நிரூப்’ என்பதை முதலில் சரியாக யூகித்தவர் வருண்தான். வருணின் ஆருடத்தை ஏற்றுக் கொண்ட அபிநய் “அவ போறதுக்கும் சான்ஸ் இருக்கு” என்று சொல்லி ஆறுதல்பட்டுக் கொண்டார். அந்த ‘அவ’ பாவனி என்பதை விளக்கத் தேவையில்லை.
பிக் பாஸ் அமீர் - பாவனி
பிக் பாஸ் அமீர் - பாவனி

மருத்துவ முத்தம் 2.O

பாவனியும் எலிமினேஷன் பயத்தில் இருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தன் உளைச்சலை அவர் அமீரிடம் பகிர்ந்து கொள்ள “நாளைக்கு நீ போக மாட்டே” என்று ஆறுதல் சொன்ன அமீர் “கிட்ட வாயேன். உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்” என்று அருகில் அழைத்தார். ஏதோ ரகசியம்தான் சொல்லப் போகிறார் என்று பார்த்தால் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டார். “நீ பயப்படாதே” என்று ஆறுதல் அளித்த முத்தமாகத்தான் அது தெரிந்தது. ஆனால் அது பார்வையாளர்களாலும் சக போட்டியாளர்களாலும் அவ்வாறுதான் பார்க்கப்படுமா என்பதை அமீர் நிச்சயம் யோசித்திருக்க வேண்டும். இதன் பின்விளைவுகளை அவர் யோசிக்கவில்லையா.. அல்லது காமிரா இருப்பதையே ஒரு கணம் மறந்து விட்டாரா என்று தெரியவில்லை.

அமீர் தந்த முத்தம் வெறும் மருத்துவ முத்தமாக மட்டும் நிச்சயம் பார்க்கப்படாது. இதற்கான வேலைகளை அமீர் ஏற்கெனவே செய்திருக்கிறார். “நான் உங்க ஃபேன்” என்று பாவனியிடம் ஆரம்பித்து திருமணப் பேச்சு வரைக்கும் அவர் முன்னேறியிருப்பதால் இது வெறும் ஆறுதல் முத்தமா அல்லது காதல் கலந்த முத்தமா என்பதை மக்கள் நிச்சயம் ஆய்வு செய்வார்கள். பிரியங்கா பாசத்துடன் தாமரைக்கு முத்தம் தருவது முதல் பிக்பாஸ் வீட்டில் ஏராளமான முத்தங்கள் தரப்படுகின்றன. அவற்றில் ஒன்றாக இதை மக்கள் நிச்சயம் பார்க்க மாட்டார்கள்.

ஆனால் இதற்கு பாவனியின் மறுப்பும் பலவீனமாகத்தான் இருந்தது. “இது எல்லாம் ஓவர். நீ பண்ணது எனக்குப் பிடிக்கலை” என்று மிருதுவாகத்தான் சொன்னார். ‘அபிநய்யின் மூஞ்சு மேல என்னால சொல்ல முடியல' என்று தன் தவறுக்கு தாமதமாக வருந்தும் பாவனி, அமீரிடமும் அதே மாதிரியான சிக்கலில் மீண்டும் விழுவது சொந்த செலவு சூன்யம் என்று தோன்றுகிறது. “நீ என்கிட்ட உன் எதிர்ப்பை இப்படி காட்டறே இல்ல. முறைக்கறே இல்ல. திட்டறே இல்ல. இதையே அபிநய் கிட்ட முன்ன பண்ணியிருந்தா பிரச்சினை வந்திருக்காது” என்று அமீர் பிறகு சொன்னதை பாவனியும் ஏற்றுக் கொண்டார்.

இந்தக் காட்சி எப்படி இருந்தது என்றால் ‘அபிநய் இப்படி முத்தமிடும் வரை கூட சென்றிருக்கலாம் என்பதை உனக்கு உணர்த்தவே நான் அப்படிச் செய்தேன்' என்று அமீர் டெமோ காட்டியது போல் ஆகி விட்டது. இந்த மருத்துவ முத்த விவகாரம் சபைக்கு வருமா அல்லது அப்படியே அடங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் மறுபடியும் அதேதான். இது போன்ற விவகாரங்களின் இறுதியில் பெண்ணிற்கு எதிராகத்தான் பெரும்பாலும் தீர்ப்பெழுதுவார்கள். அதுவே நம் மரபு.

அக்ஷரா – ராஜூ – பலூன் சண்டை

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் “எதிர்பாராதை எதிர்பாருங்கள் –ன்றது உண்மையாயிடுச்சு. இந்த வாரம் பிக்பாஸ் எல்லோரையும் நாமினேட் பண்ணிட்டாரு. இதுல என்ன ஒரு செளகரியம்னா, நாமினேஷன்-ன்ற பேர்ல யார் முதுகுலயும் குத்த வேண்டியதில்ல. போட்டி மும்முரமாயிடுச்சு. பிரமாதம்” என்று அனைவரையும் பாராட்டி விட்டு டாஸ்க் தொடரில் வென்றவர்களையும் பாராட்டி விட்டு, நீரோட்டத்தில் கலந்து விட்ட சஞ்சீவ் மற்றும் அமீரை பிரத்யேகமாக பாராட்டினார். பார்வையாளர்கள் கைத்தட்டி முடித்தவுடன் “இது அந்த இருவருக்குமான பாராட்டு மட்டும் அல்ல. அனைவருக்குமானது” என்று கமல் சொன்ன போது, இதற்காக சந்தோஷப்படுவதா, வேண்டாமா என்று சஞ்சீவும் அமீரும் சற்று குழம்பியிருப்பார்கள்.

பலூன் டாஸ்க்கில் அக்ஷரா வெளிப்படுத்திய வீரத்தைப் பாராட்டிய கமல், ராஜூ பலூன் உடைத்த விவகாரத்திற்கு வந்தார். “இந்த வீட்ல அவன் எல்லோரையும் ஈஸியா மன்னிச்சுடுவான். ஆனா என் விஷயத்துல மட்டும் ஏன் அது நடக்கலைன்னு எனக்குப் புரியல” என்றார் அக்ஷரா. இதையடுத்து ராஜூவை தட்டி எழுப்பிய கமல் “ஆட்டத்துல பாசம். பாரபட்சமெல்லாம் பார்க்கக்கூடாது. பிளாட்பார்ம்ல தங்க கடியாரத்தை வெச்சுட்டு பராக்கு பார்த்தப்புறம் காணலைன்னு சொன்னா ஒத்துக்குவாங்களா? ஆட்டத்துல வாக்குறுதி தருவாங்க .. மீறுவாங்க. அதுதானே ஆட்டம்?” என்று கமல் உபதேசம் சொல்ல சலனமில்லாத முகத்துடன் தலையாட்டினார் ராஜூ.

ராஜூவின் கோபத்திற்கு பிரியங்கா அளித்த விளக்கம் லாஜிக்கோடு இருந்தது. “நானும் அவனும்தான் முதல்ல டீல் போட்டோம். அக்ஷரா பலூனை உடைக்கலாம்னு ரெண்டு பேரும் போகும் போது அவ என்னைத் தடுத்துட்டா. ஆனா ராஜூ அக்ஷரா பலூனை உடைக்கலை. ஆனால் என் பலூனை உடைச்சுட்டாங்க. டீல் போட்டும் கூட அக்ஷரா பலூனை தான் உடைக்காதப்ப, என் பலூனை அக்ஷரா உடைச்சுட்டாளே’ன்னு ராஜூவிற்கு கோபம் வந்திருக்கும்” என்றார் பிரியங்கா. “மத்தவங்க உணர்ச்சியை எல்லாம் சரியாப் புரிஞ்சுக்கறீங்க. ஆனா உங்க விஷயத்துல கோட்டை விட்டுடறீங்களே” என்று சாக்லேட்டில் கடப்பாறையை இறக்கினார் கமல். “ஆமாம்.. சார். அதுல நான் வேஸ்ட்” என்று சிரித்தபடி ஒப்புக் கொண்டார் பிரியங்கா.

 பிக் பாஸ் ராஜூ
பிக் பாஸ் ராஜூ

“இறங்கி விளையாடுங்க ராஜூ”

“ராஜூவிற்கு கோபம் வந்து இப்பத்தான் பார்க்கறேன்” என்று கமல் சொன்னவுடன் “இது இரண்டாவது முறை சார்” என்று நினைவுப்படுத்தினார் பிரியங்கா. “இருந்தாலும் இத்தனை நாள்ல குறைவா கோபப்பட்டது பாராட்டத்தக்கதுதானே?” என்று கமல் சொன்னது முக்கியமான விஷயம். ராஜூவின் Anger Management பற்றி நானும் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். பொதுவாக நகைச்சுவையுணர்வு அதிகமுள்ளவர்களின் இன்னொரு பக்கத்தில் கோபக்காரர்களாகவும் எளதில் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். ‘எனக்கு நிறைய கோபம் வரும். முகமூடி போட்டுருக்கேன்” என்று ராஜூவும் ஒருமுறை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் இவற்றையெல்லாம் மீறி தன்னுடைய கோபத்தை அவர் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க விஷயம்தான். இது அப்படியே அவரின் நடைமுறை வாழ்க்கையிலும் பழகி விடலாம். கோபம் அதிகம் வருபவர்களுக்கான படிப்பினை இதில் உள்ளது.

“ராஜூ... பிசிக்கல் டாஸ்க்ல நீங்க நிறைய டபாக்கற மாதிரி மக்கள் பேசிக்கறாங்க... இன்னமும் நாலு வாரம்தான் இருக்கு. இறங்கி விளையாடுங்க” என்று கமல் அறிவுறுத்தியதை வழக்கம் போல் சலனமில்லாத முகத்துடன் கேட்டுக் கொண்டார் ராஜூ. (கமல் சொன்னா கூட ஒத்துக்குவாங்க. நான் நல்லதுக்கு சொன்னா கூட கமெண்ட் பாக்ஸ்ல வந்து திட்டுவாங்க. நீங்களே சொல்லுங்க!).

அக்ஷரா – பிரியங்கா – வாய்க்கா தகராறு

“அக்ஷரா… பிரியங்கா பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?” என்று அக்ஷராவை உசுப்பேற்றி விட்டார் கமல். (பிரியங்காவின் வழக்கமான உசுப்பேற்றல் ஆயுதம் அவருக்கு எதிராகவே வருகிறது!). “எல்லாத்துலயும் மூக்கை நுழைப்பாங்க சார்.. தனக்குன்னா ரத்தம். மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னி’ன்ற தத்துவத்தை சரியா பின்பற்றுவாங்க. காமிராக்கு கன்டென்ட் தரணும்றதுக்காக நான் எதையும் பண்றது கிடையாது. அன்னிக்கு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு செத்துப் போன அப்பா மேல சத்தியம் பண்ணிட்டு இருந்தேன். அப்ப வந்து.. தமிழ்ல பேசு.. லத்தீன்ல பேசு..ன்னு டார்ச்சர் பண்றாங்க” என்று அதுவரை வருணிடம் அனத்தியதையெல்லாம் சபையில் போட்டு உடைத்தார் அக்ஷரா. (“எப்பப் பாரு. நொய்யா…நொய்யா’ன்றாங்க’ என்பதை மட்டும் சொல்ல மறந்து விட்டார் போல).

“நீங்க பல விஷயங்களை தள்ளி நின்று அகலமான நோக்கில் பார்த்தால் பல தப்புக்களை செய்ய மாட்டீங்க. ரொம்ப அழுத்தமான சூழல்களை சரியா கையாள கத்துக்கணும். பார்க்கறவங்களுக்கும் இதேதான் தோணும். தங்களையும் ஒப்பீடு செஞ்சு மக்கள் பார்க்கறாங்க. அந்த நேரத்து ஈர்ப்பு விசைல போய் விழுந்துடறீங்க” என்று கமல் வகுப்பெடுக்க “இதச் சொல்லத்தான் என்னைக் கூப்பிட்டீங்களா?.. போய் பிரியங்காவை விசாரியுங்க சார்’.. என்பது மாதிரியே பார்த்தார் அக்ஷரா.

“உங்களுக்குள்ள ஏற்கெனவே வாய்க்கா வரப்பு தகராறு இருந்ததா?” என்று அடுத்த தூண்டிலை அக்ஷராவிடம் வீசினார் கமல். அதில் விலாங்கு மீனே சிக்கும் என்பது அவருக்குத் தெரியும். “ஆமாம் சார். வந்த நாள்ல இருந்தே அவங்களுக்கு என்னைப் பிடிக்கலை” என்கிற அதிரடி குற்றச்சாட்டை அக்ஷரா வீச “சின்ன வயசுல ஒரு வாத்தியாரை நமக்குப் பிடிக்காம போச்சுன்னா.. அதே முகச்சாயல்ல உள்ளவங்களை வாழ்நாள் பூராவும் பிடிக்காது” என்று கமல் உளவியல் வகுப்பு எடுக்க “முருகேஷா.. நான் இதைக் கேட்டேனா?” என்பது மாதிரி மறுபடியும் பார்த்தார் அக்ஷரா. அதை கமல் புரிந்து கொண்டாரோ, என்னவோ, வண்டியை பிரியங்காவின் பக்கம் திருப்பினார் கமல். “அய்யோ. சார். அக்ஷராவை எனக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்கும். என் செல்லாக்குட்டி அது. என்னவொன்னு தூங்கும் போது எழுப்பினாதான் அசிங்கமா திட்டும். அன்னிக்கு டாஸ்க்ல கூட நான் மெல்லமாத்தேன் சொன்னேன்” என்று பிரியங்கா சமாளிக்க “பிரியங்கா…. நீங்க சத்தமில்லாம பேசினீங்கன்னு சொன்னா பிக்பாஸ் வீட்டு குருவி கூட அதை நம்பாதே” என்கிற மாதிரி பார்த்தார் கமல்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

பாவனியும் தீராத பாயசப் பிரச்னையும்

“பாயசம்ன்னவுடனேதான் ஞாபகம் வருது. அதைப் பத்தி பேசணும். குளிச்சுட்டு வந்துடறேன்” என்று கமல் சொல்ல வீட்டில் சிரிப்பொலி கேட்டது. இந்த விவகாரத்தைப் பற்றி கமல் விசாரிக்கப் போகிறார் என்பது தெரிந்தும் கூட தாமரை அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. “இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு பேசணுமா?” என்று வருணிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதில் என்னை மாட்டி விட்டு விடாதே என்று அக்ஷரா உஷாராக எச்சரித்து விட்டார். பரிமாறிய அக்ஷராவின் மீது தவறில்லை. உபசரித்த தாமரையின் மீதுதான் தவறு இருக்கிறது.

வீட்டின் உள்ளே அலட்சியமாக பேசினாலும் சபையில் விசாரிக்கும் போது தாமரை செய்த நாடகங்களைப் பார்த்த போது ‘அப்பா. உலக நடிப்புடா சாமி’ என்றே தோன்றியது. ‘நானா சார்?” என்று அப்பாவியாக ஆரம்பித்து “எனக்கு தாய்மாமன் மேல பயம். அதுக்கப்புறம் உங்களைப் பார்த்தாதான் பயமா இருக்கு” என்று தாமரை பல்வேறு விதமாக பம்மியதைப் பார்த்து ‘பின்றியேம்மா” என்று கமலே உள்ளூற நினைத்திருப்பார். இத்தனைக்கும் “நான் எப்படி கேள்வி கேட்பேன்னு நடிச்சுக் காண்பிக்கிற அளவிற்கு தாமரை முன்னேறி இருக்காங்க” என்று சற்று முன்னர்தான் கமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

“நான் கொடுத்தா அவங்க குடிக்க மாட்டாங்க” என்கிற பழைய பாட்டையே பாடிய தாமரை “குண்டான்ல பாயசம் இருந்தது. வேணுமின்னா எடுத்து குடிக்கட்டும்னு நெனச்சேன்” என்றார். ஒருவர் தன் உபசரிப்பை மறுக்கிறார் என்றால் அது விருந்தாளியின் அநாகரிகத்தைக் காட்டுகிறது. ஆனால் விருந்தோம்பல் செய்பவர் தன் கடமையை மீறக்கூடாது என்பதுதான் நல்ல பண்பு. “எனக்கும் டெம்ப்டிங்காதான் இருந்தது. அப்புறம் சஞ்சீவ் கிட்ட இருந்து வாங்கி சாப்பிட்டேன்” என்றார் பாவனி. தாமரை செய்த அசைவ உணவை பாவனி முன்பும் சாப்பிட்டிருக்கிறார். எனவே இந்த நோக்கில் தாமரை சொல்வது முழுமையான உண்மையா என்று தெரியவில்லை.

‘நீதிடா... நியாயம்டா... சஞ்சீவ்டா...’

தக்க நேரத்தில் தலையிட்டு நியாயத்தைப் பேசும் சஞ்சீவை கமல் பாராட்டியது சிறப்பானது. இதற்கு சஞ்சீவ் முற்றிலும் தகுதியானவர் என்பதை பலமுறை அந்த வீட்டில் நிரூபித்திருக்கிறார். “பாயசத்தை ஊட்டியே விட்டுடறேன்” என்று சொல்லியிருக்கிறார் தாமரை. என்ன விபரீதம் நிகழப் போகிறதோ?!.

“ராஜூவை இந்த வீட்டில் செல்லம் கொஞ்சறீங்களாமே? அவருக்கு ஸெரலாக் வேணும்னு யாரோ பிக்பாஸ் கிட்ட கேட்டிருக்கிறீங்களாமே.. யார் அது?” என்கிற அளவிற்கு ராஜூவிற்காக காட்டப்படும் பாரபட்சம் பற்றிய கேள்வியை அடுத்ததாக முன்வைத்தார் கமல். “அவுட் ஆனப்பறம் பலூனை உடைச்சது தப்புன்னு நான் சொல்லிட்டேன் சார். ராஜூ தப்பு செஞ்சா அதை முதல்ல சுட்டிக் காட்டறது நான்தான்” என்று சஞ்சீவ் சொல்ல “அப்ப பாசம் காட்டறது.. தாமரையா?” என்று அவரின் பக்கம் வண்டியைத் திருப்பினார் கமல். “நானும் தப்புன்னா திட்டிடுவேன் சார்” என்று சொல்லி எஸ்கேப் ஆனார் தாமரை. ஆனால் பாயசம் விஷயத்தில் ராஜூ சுட்டிக் காட்டினால் மட்டும் தாமரை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

தாமரை - சிபி
தாமரை - சிபி

‘நீங்க தைரியமானவரா?.. தொடைநடுங்கியா?’

“தான் நெய்த நகைச்சுவை போர்வையை ராஜூ போர்த்திக் கொண்டிருக்கிறார். தன் கோபத்தை அவர் கட்டுக்குள் வைத்திருப்பது ஒருவகையில் பாராட்டத்தக்கது” என்று சான்றிதழ் வழங்கினார் கமல். “அடுத்தது ஒரு விளையாட்டு” என்று ஆரம்பித்தார் கமல். ஆனால் அது வில்லங்கமான விளையாட்டாக இருந்தது.

ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து ஒருவருக்கு ‘துணிச்சலானவர்’ என்கிற பட்டத்தையும் இன்னொருவருக்கு ‘தொடைநடுங்கி’ என்கிற பட்டத்தையும் அளிக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்ல. மனிதக் கூட்டத்திலுமே இந்த வழக்கம் நெடுங்காலமாக உண்டு. வரிசையில் முதல் ஆசாமி என்ன செய்கிறாரோ, அதையே பின்னால் வரும் பெரும்பாலானவர்களும் செய்வார்கள். இதுவே இந்தச் சமயத்திலும் நிகழ்ந்தது.

முதலில் எழுந்த நிரூப் ‘துணிச்சலானவர்’ என்கிற பட்டத்தை பிரியங்காவிற்கு வழங்கி விட்டு ‘தொடைநடுங்கி’ பட்டத்தை யாருக்கு அளிப்பது என்று மிகவும் தடுமாறினார். அதை யாருக்காவது அளித்தால் அது தன்னிடமே திரும்பும் என்பது அவருக்குத் தெரியும். ‘கொஞ்ச நேரம் கழிச்சு சொல்லட்டுமா” என்று அவர் தடுமாற்றத்துடன் கேட்க “அதுவரை நீங்களே கட்டிக்கங்க” என்று கமல் சொல்லியதின் உள்குத்து நிரூப்பிற்கு புரிந்ததா என்று தெரியவில்லை.

சஞ்சீவ்
சஞ்சீவ்

அடுத்து எழுந்த பாவனி ‘துணிச்சலானவர்’ பட்டத்தை நிரூப்பிற்கு தந்து விட்டு ‘தொடைநடுங்கி’ பட்டத்தை தானே வைத்துக் கொண்டார். ‘அபிநய் விவகாரத்தில் முன்பே துணிச்சலாக செயல்பட்டிருக்க வேண்டும்’ என்பது அம்மணியின் ஒப்புதல் வாக்குமூலம். இப்படிச் சொல்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். ஆனால் தற்போது அமீரிடம் இதே துணிச்சலை பாவனி வெளிப்படுத்தாமல் இருப்பது ஒரு முரண். பாவனி சுயவாக்குமூலத்துடன் ஒப்புக் கொண்டதால் பிறகு வந்த பலரும் ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான்ப்பா” என்பது மாதிரி ‘தொடை நடுங்கி’ பட்டத்தை பாவனிக்கே அளித்து மகிழ்ந்தார்கள்.

ரைட் இன்டிகேட்டர் போட்டு லெஃப்டில் வண்டியை திருப்பிய சஞ்சீவ்

‘துணிச்சலானவர்’ பட்டத்தை தானே வைத்துக் கொள்வதாக ராஜூ ஆரம்பிக்க, பின்னால் வந்தவர்களும் அதையே பின்பற்ற ‘போச்சுடா’ என்று தலையில் கைவைத்துக் கொண்டார் கமல். தன்னையே நாமினேட் செய்து கொள்ளக்கூடாது என்கிற விதியை இது போன்ற டாஸ்க்குகளில் கறாராக சொன்னால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாக மாறும். ‘தொடைநடுங்கி’ பட்டத்தை சிபிக்கு வழங்கி மகிழ்ந்தார் ராஜூ. தரவரிசை பட்டியல் டாஸ்க்கில் முதல் இடத்தைப் பிடித்துக் கொண்டு சிபி செய்த அழிச்சாட்டியம்தான் இதற்கு காரணமாம். ஆனால் சிபி அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட கமல், அதற்காக சிபியை பாராட்டினார். “இந்த ஆட்டத்தைப் புரிந்து கொண்டு ஆடுபவர் நீங்கள்தான்”.

‘தொடைநடுங்கி’ பட்டத்தை பாவனிக்கு அளித்து மகிழ்ந்தார் அபிநய். எனில் பாவனி சொல்வதை இவரே ஏற்றுக் கொள்கிறார் என்று பொருளா? ‘அப்புறம் தரட்டுமா?” என்று கேட்ட நிரூப், ‘தொடைநடுங்கி’ பட்டத்தை அபிநய்க்கு தந்த போது ‘நான் ஏற்க மாட்டேன்” என்று மறுத்து விட்டார் அபிநய். ஆனால் பிறகு அக்ஷரா தந்த போது மட்டும் ஏற்றுக் கொண்டார். “அபிநய் சில விஷயங்களை தைரியமா சொல்லியிருக்கணும். பாவம் பார்த்து விட்டுட்டாரு” என்று சபையில் சூசகமாக போட்டுக் கொடுத்தார் அக்ஷரா. பாவனியின் மீதுள்ள பகைமையை சமயம் வாய்க்கும் போதெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார் அக்ஷரா. ஆனால் பிரியங்காவின் மீது மட்டும் ஏராளமாக புகார் சொல்கிறார்.

அக்ஷரா
அக்ஷரா

‘தொடைநடுங்கி’ பட்டத்திற்கான விளக்கத்தை சஞ்சீவ் ஆரம்பித்த போது அவரும் பாவனிக்குத்தான் தரப்போகிறார் என்றே எல்லோருக்கும் தோன்றியிருக்கும். ஆனால் கடைசி வாக்கியத்தில் வண்டியை ராஜூ பக்கம் அவர் திருப்பியதில் கமலுக்கே சற்று அதிர்ச்சிதான். “ராஜூ.. எதிர்பாராததை எதிர்பாருங்கள் –ன்றது இதுதான். எப்படி அடிச்சாரு. பாருங்க” என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்னார். ராஜூ நகைச்சுவை என்கிற முகமூடியில் பல விஷயங்களை மறைத்துக் கொள்கிறார் என்பது சஞ்சீவின் குற்றச்சாட்டு. பிரியங்கா ‘தொடைநடுங்கி’ பட்டத்தை கடைசி வரைக்கும் யாருக்குமே தரவில்லை போலிருக்கிறது.

‘தொடைநடுங்கி’ பட்டம் அதிகமாக பாவனிக்கு கிடைத்தது வெளிப்படை. ‘துணிச்சலானவர்’ பட்டத்தை பலரும் தாமே வைத்துக் கொண்ட நிலையில் நிரூப்தான் அதிக எண்ணிக்கையில் பெற்றிருக்கிறார். ஆனால் இதன் முடிவுகளைப் பற்றி கமல் எதுவும் சொல்லவில்லை.

“ஓகே... ஆறு பேர் எவிக்ஷன் லிஸ்ட்ல இருக்கீங்க. ஒருத்தரை காப்பாத்தலாம்” என்ற கமல் அதிகம் சஸ்பென்ஸ் வைக்காமல் ‘ராஜூ” என்று அறிவித்தார். ஆக மக்களின் வாக்கெடுப்பில் இன்னமும் ராஜூதான் டாப் ஒன்றில் இருக்கிறார். அவர் களத்தில் இறங்கி இன்னமும் சிறப்பாக விளையாடினால் அவரது நிலை இன்னமும் வலிமையாகும்.

இந்த வாரத்தில் எலிமினேட் ஆகிறவர் யார் என்கிற தகவல் வழக்கம் போல் கசிந்து விட்டது. அதிகம் சஸ்பென்ஸ் வைக்காமல் நானும் சொல்லி விடுகிறேன் அபிநய்.