Published:Updated:

பிக் பாஸ் 79: `அமீர் பாவனியின் அடிமை'- அக்ஷரா சொன்னது ஏன்... பிரியங்கா - நிரூப் மோதல்! நடந்தது என்ன?

அக்ஷரா

“பாவனிக்கு அமீர் அடிமையா சிக்கியிருக்கான்” என்று நாமினேஷனின் போது அக்ஷரா சொன்னது ரொம்பவும் ஸ்ட்ராங்கான ஸ்டேட்மெண்ட். இதன் மூலம் ‘வலிமையான போட்டியாளராக’ அவர் கருதும் அமீரை மட்டுமல்லாமல் வரூணையும் சேர்த்தே அவமதிக்கிறார் என்றுதான் பொருள்.

பிக் பாஸ் 79: `அமீர் பாவனியின் அடிமை'- அக்ஷரா சொன்னது ஏன்... பிரியங்கா - நிரூப் மோதல்! நடந்தது என்ன?

“பாவனிக்கு அமீர் அடிமையா சிக்கியிருக்கான்” என்று நாமினேஷனின் போது அக்ஷரா சொன்னது ரொம்பவும் ஸ்ட்ராங்கான ஸ்டேட்மெண்ட். இதன் மூலம் ‘வலிமையான போட்டியாளராக’ அவர் கருதும் அமீரை மட்டுமல்லாமல் வரூணையும் சேர்த்தே அவமதிக்கிறார் என்றுதான் பொருள்.

Published:Updated:
அக்ஷரா

கயிறு பிடிக்கும் டாஸ்க்கில் வென்று தாமரை இந்த வாரத்தின் தலைவராகி விட்டார். ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் கிளைமாக்ஸை தாமரை பிரதிபலிப்பாரோ என்று தோன்றுகிறது. ஏற்கெனவே சொன்னது போல, பிக்பாஸ் டைட்டிலை அவர் வென்றால் கூட ஆச்சரியமில்லை. சாதாரணமாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவர், இத்தனை நாட்கள் தாக்குப் பிடித்தது பெரிய விஷயம். ஒரு சமூகத்தில் பின்தங்கியிருக்கிறவருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் எப்படி அவர் அதை வலுவாகப் பற்றிக் கொண்டு முன்னகர்ந்து வருவார் என்பதற்கு தாமரை ஒரு சிறந்த உதாரணம்.

பிரியங்கா – நிரூப் என்கிற டாம் & ஜெர்ரி உறவு இன்னமும் புரிந்து கொள்ள முடியாத மர்மமான உறவாகவே இருக்கிறது. கயிறு டாஸ்க்கின் போது நிரூப்பிடம் பிரியங்கா நிகழ்த்திய வாக்குவாதத்தை ஒருவகையான உளவியல் யுத்தம் என்றே சொல்லலாம். இதில் பரிதாபமாக தோற்றுப் போன கோபத்தைத்தான் நிரூப் பிறகு வசைப்போராக பதிலுக்கு பொழிந்தார்.

தாமரைக்கு அமீர் விட்டுத்தந்தது ஒரு சிறந்த முடிவு. இதனால் அவரின் மைலேஜ் கூடும். பார்வையாளர்களின் பரிவு கிடைக்கும். இந்த தர்மம் வரும் வாரங்களில் அவரைப் பாதுகாக்கும் என்று தோன்றுகிறது. குறிப்பாக, பாவனியிடமிருந்து ஒரு வாய் சோறு ஊட்டிக் கொண்டது அமீருக்கு கிடைத்த உடனடி லாட்டரி பரிசு எனலாம்.

பாவனிக்கு அமீர் அடிமையா சிக்கியிருக்கான்” என்று நாமினேஷனின் போது அக்ஷரா சொன்னது ரொம்பவும் ஸ்ட்ராங்கான ஸ்டேட்மெண்ட். இதன் மூலம் ‘வலிமையான போட்டியாளராக’ அவர் கருதும் அமீரை மட்டுமல்லாமல் வரூணையும் சேர்த்தே அவமதிக்கிறார் என்றுதான் பொருள்.

பிக் பாஸ் டாஸ்க்
பிக் பாஸ் டாஸ்க்

எபிசோட் 79-ல் என்ன நடந்தது?

இந்த வாரத்தின் தலைவர் போட்டியை வித்தியாசமாக அமைத்தார் பிக்பாஸ். போட்டியாளர்கள் ஒற்றுமையாகவே இருக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் ஒரு சிறப்பான டாஸ்க்கை தந்தார். ‘அனைவரும் ஒரு கயிற்றைப் பற்றிக் கொள்ள வேண்டும். என்ன நடந்தாலும் அதிலிருந்து கைகளை எடுக்கக்கூடாது. யாரெல்லாம் கையை எடுக்கிறாரோ அவர் அவுட். இறுதியில் எஞ்சுபவர் வெற்றியாளர்’. இதுதான் போட்டி.

“ஆணியே புடுங்க வேணாம்” என்று ராஜூ இயற்றி இசையமைத்த பாடலோடு இந்த டாஸ்க் ஜாலியாகத்தான் துவங்கியது. “நீ தலைவர் போட்டியையெல்லாம் சீரியஸா செய்ய மாட்டியே?” என்று ராஜூவை கேட்பதின் மூலம் உசுப்பேற்றலை ஆரம்பித்தார் அமீர். கடந்த வாரத்தில் கமல் எச்சரித்ததின் காரணமாக இந்த டாஸ்க்கில் எல்லோருமே ஜாக்கிரதையாக இருந்தார்கள். எனவே “அதெல்லாம் பண்ணிடுவேன். முட்டை குடிக்கச் சொன்னா மட்டும்தான் முட்டை வாங்குவேன்” என்றார் ராஜூ. இந்த டாஸக்கின் ஆரம்பம் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக சுருதி இறங்கியது.

“உட்றாதீங்க யப்போவ்” – கயிறு பிடிக்கும் சவால்

இரவு நேரம். “அபிநய் இந்நேரம் தூங்கியிருப்பாரா அல்லது கோவைசரளா பாணில வீட்டில் வாங்கிக் கட்டிக்கிட்டிருப்பாரா?” என்று சிபி கிண்டலை ஆரம்பிக்க பாவனி உட்பட அனைவரும் இதற்கு விழுந்து விழுந்து சிரித்தனர். நிரூப் புகைபிடிக்க விரும்பியதால் அனைவரும் ஊர்வலமாகச் செல்ல வேண்டியிருந்தது. அடுத்ததாக பாத்ரூம் போக வேண்டியதை தாமரை தெரிவிக்கவே ஊர்வலம் அந்த இடத்திற்கு நகர்ந்தது.

தாமரை தன் வேலையை முடித்து விட்டு வந்தததும் ‘அது எப்படி கயிற்றை விடாமல் தாமரையால் முடிந்தது?’ என்கிற சந்தேகத்தை வலுவாக எழுப்பினார் நிரூப். யாரையாவது கோபப்படுத்தி டாஸ்க்கை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்கிற நிரூப்பின் உள்நோக்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது. “அதெல்லாம் கயிறை விடாமத்தான் இருந்தேன்… நம்புடா தம்பி” என்று சாந்தமாக ஆரம்பித்த தாமரை ஒரு கட்டத்தில் ஹைடெஸிபலில் மல்லுக்கட்டவே நிரூப்பின் முயற்சி தோல்வியடைந்தது. “இனிமே ஒவ்வொருத்தர் விருப்பத்துக்கும் எல்லோரும் நடக்க முடியாது. யாருக்காவது தண்ணி குடிக்கணும்னா கயித்தை விட்டுட்டுப் போங்க” என்கிற ஐடியாவை சலிப்புடன் தந்தார் அக்ஷரா.

நள்ளிரவு 01:05 மணி. எல்லோரும் அப்படியே சோபாவில் சாய்ந்தனர். “நல்ல வேளை கரண்ட் கம்பியை பிடிக்கச் சொல்லாம போனாங்க. அடுத்தது அதுதான் பண்ணுவாங்க போல” என்று ராஜூ காமெடி செய்ய முயன்றார். ‘இது வேலைக்கு ஆகாது’ என்று முடிவு செய்த நிரூப், கயிற்றை இழுப்பதின் மூலம் யாராவது அதை விடுவார்களா என்று முர்க்கமாக இறங்கிப் பார்க்க முடிவு செய்தார். இதனால் நிரூப்பின் பக்கத்தில் இருந்த அமீருக்கும் நிரூப்பிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அடங்கியது. ‘கயிற்றைப் பிடித்திருப்பதுதான் போட்டி, இழுப்பது அல்ல’ என்கிற ஆட்சேபத்தைச் சொன்ன பிரியங்கா, நிரூப்பின் அழிச்சாட்டியத்தால் ஒரு கட்டத்தில் எரிச்சலாகி, கயிற்றை விட்டு விட்டுச் சென்றார். ஆக இந்த டாஸ்க்கில் பிரியங்கா முதலில் அவுட்.

தூக்கத்தில் பறிபோன வெற்றி வாய்ப்பு

சிறிது நேரத்தில் “சுச்சா வருது. ஆளை விடுங்கப்பா” என்று சஞ்சீவ் எழுந்து கொள்ள இரண்டாவது டிக்கெட்டும் அவுட். அனைவரும் உறக்கத்தில் சாயத் துவங்கினார்கள். “எப்படி எனக்கு முன்னாடியே சேவ் ஆயிட்டாங்க?” என்று வருணிடம் கடந்த எவிக்ஷன் ரகசியத்தை பேசத் துவங்கினார் அக்ஷரா. உறக்க கலக்கத்தில் பாவனி கயிற்றை விட்டு விட, மூன்றாவது டிக்கெட் அவுட். விடியற்காலை 05:35 – ஆட்டத்தில் சலித்துப் போன அக்ஷரா, அவுட் ஆக முடிவு செய்து வருணை எழுப்பி சொல்லி விட்டுச் சென்றார். நான்காவது டிக்கெட்டும் காலி.

காலை 06:20 – உறக்கத்தில் வருண் கயிற்றை விட்டு விட்டார். ஐந்தாவது டிக்கெட் கோயிந்தா. விடிந்தது. ‘அமுக்கு டுமுக்கு அமால் டுமால்’ என்கிற மாதிரியானதொரு குத்துப் பாடலைப் போட்டார் பிக்பாஸ். இந்த டாஸ்க்கில் எஞ்சியிருந்தவர்கள் ஐவர். தாமரை, ராஜூ, சிபி, அமீர் மற்றும் நிரூப்.

பாவனி, பிரியங்கா
பாவனி, பிரியங்கா

பிரியங்கா vs நிரூப் - ‘பேய்க்கும் பேய்க்கும் சண்டை.. ஊரே வேடிக்கை பார்க்குது’

தூங்கி எழுந்து ஃபிரெஷ்ஷாக வந்திருந்த பிரியங்கா, காலையிலேயே நிரூப்பிடம் ஏழரையை ஆரம்பித்தார். “நேத்து மட்டும் கயிறை இழுத்தே.. பொண்ணுங்க இருக்கறதால ஆடறதுக்கு கஷ்டமா இருக்குன்னு சொன்னே. இப்ப இழுக்க வேண்டியதுதானே. உன் இஷ்டத்திற்கு ரூல்ஸ்ஸை மாத்திப்பியா?” என்று பிரியங்கா ரணகளமாக ஆரம்பிக்க நிரூப் உஷ்ணமானார். “மாத்தி. மாத்தி பேசி உயிரை வாங்காதே. கொஞ்ச நேரம் சும்மா இரு” என்று பிரியங்காவை அடக்க முயன்றார்.

பிரியங்கா
பிரியங்கா

‘அடக்கினா.. அடங்கற ஆளா நீ’ என்கிற பாடல் கபாலிக்கு மட்டுமல்ல பிரியங்காவிற்கும் பொருந்தும். எனவே நிரூப்பிடம் மறைமுக போரை ஆரம்பித்தார். இதனால் தாமரையை சாடையாக எச்சரிக்க ஆரம்பித்தார். “அவங்க கயிறு பிடிச்சு இழுப்பாங்க. உன்னால தாக்குப் பிடிக்க முடியுமா. முடியும்னா நில்லு” என்று தன் ‘உசுப்பேற்றல்’ உத்தியை சிறப்பாக ஆரம்பித்தார். மற்ற நால்வரும் இணைந்து இழுத்தால் கூட அதை தாங்கக்கூடிய வலு நிரூப்பிடம் இருந்தது. “வேற லெவல் நிரூப்பு” என்று பாராட்டினார் வருண்.

‘ஏதோ.. கமல் சார் சொன்னாரேன்னு இதுவரைக்கும் இருந்தேன்.. இதுக்கு மேல என்னால முடியாதுப்பா’ என்கிற மாதிரி ராஜூ கயிற்றை விட்டு விட ஆறாவது டிக்கெட்டும் அவுட். “ஏண்டா.. இப்படி பண்றே?” என்பது மாதிரி பதறினார் பிரியங்கா. காலை 11:40 மணி. “தாமரை நீ தலைவர் ஆகறேன்னு சொல்லு. நான் விட்டுடறேன்” என்கிற டீலை போட்ட சிபி, கயிற்றை விட்டு விட்டுச் சென்றார். ஏழாவது டிக்கெட் போயிந்தே.. It’s gone.

‘எனக்கு பயம்.. ஆனா பயம் இல்லை’ - நிரூப் அழிச்சாட்டியம்

மதியம் 12:05 – அமீர், நிரூப், தாமரை ஆகிய மூவர் மட்டும் இந்த டாஸ்க்கில் எஞ்சினார்கள். “பேசி ஏதாவது முடிவுக்கு வாங்கப்பா.. எனக்கும் பசிக்குது” என்று இரவிலிருந்து கண்விழித்து இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த எரிச்சலில் பிக்பாஸ் அறிவித்தார். “யாருக்கெல்லாம் தலைவர் ஆவதை விடவும் நாமினேஷன் பயம் அதிகமா இருக்கு?” என்கிற கேள்வியை கொளுத்திப் போட்டு விட்டு சிபி சென்று விட்டார். அது நன்றாகப் பற்றி எரிந்தது.

“ஆமாம்.. எனக்குப் பயம். நான் வீட்டுக்கு போனா உனக்கு பரவாயில்லையா?” என்கிற தன் வழக்கமான ஆயுதத்தை நிரூப் இப்போதும் எடுக்க, “இதையே நிறைய டாஸ்க்ல சொல்லி வெறுப்பேத்தற” என்று எரிச்சலானார் அமீர். பஸ் டாஸ்க்கில் இதைச் சொல்லிதான் அமீரை வெளியே அனுப்பினார் நிரூப்.

“எப்பப் பாரு.. பயம். பயம்ன்ற.. இதுதான் உன் ஸ்டராட்டஜியா?” என்கிற கேள்வியை பிரியங்கா நிரூப்பிடம் ஸ்ட்ராங்காக கேட்டு விட, நிரூப்பின் ஈகோ காயப்பட்டு விட்டது. பிறகு ஆரம்பித்தது அந்த உக்கிரமான சண்டை. “நீ கேமை விட்டு வெளியே போய்ட்ட. ஆகவே நீ பேசக்கூடாது. வந்த புதுசுல அபிநய் அவுட் ஆயிட்டப்புறம் கேம் உள்ள அவர் வந்த போது நீதான் இதைச் சொன்னே. அப்ப உனக்கும் இதுதான் பொருந்தும். நாங்க மூணு பேரும் எங்களுக்குள்ள பேசிப்போம். நீ மூக்கை நுழைக்காத” என்கிற நிரூப் தரப்பின் வாதம் சரியானதாகத்தான் இருந்தது. ஆனால் அவர் இதைச் சொன்ன விதம்தான் கொடூரம்.

நிரூப்
நிரூப்

ரணகள விவாதமும் பிக்பாஸின் உற்சாகமும்

பிரியங்கா உண்மையிலேயே நிரூப்பை நண்பராக கருதினால் இந்தச் சமயத்தில் விட்டுக்கொடுத்து அமைதி காத்திருக்கலாம். தன் தரப்பை பிறகு பொறுமையாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவருக்கும் மண்டைக்குள் ‘சுர்’ ஏறியதால் நிரூப்பிடம் சரிக்கு சரியாக மல்லுக்கட்டினார். இந்த வாக்குவாதம் நிரூப்பை எரிச்சல் அடைய வைக்கவே ஒரு கட்டத்தில் கயிற்றை விட்டு ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். ஆக எட்டாவது டிக்கெட் போயிற்று. பிரியங்காவின் ஸ்டராட்டஜி வென்று விட்டது.

தான் ஆட்டத்திலிருந்து விலக காரணமாக இருந்த பிரியங்காவின் மீது நிரூப்பிற்கு ஆத்திரம் தீரவில்லை. “உள்ளே போறான்.. வெளியே வர்றான்.. திட்டறான்.. மறுபடியும் உள்ளே போறான்.. ரிப்பீட்டு’ என்கிற டைம் லூப்பில் நிரூப் செயல்பட்டார். இந்தச் சமயத்தில் நிரூப் இறைத்த வார்த்தைகள் மிகக் கடுமையானதாக இருந்தன. “நீ ஒரு Evil Person. அடுத்தவங்களை சாக்கடைல தள்ளி மண்ணை மூடி புதைச்சுடுவே.. இந்த வீட்டிலேயே நீதான் மோசமானவ.. சுயநலம் பிடிச்சவ… உன் குரலைக் கேட்டாலே எனக்கு எரிச்சலாகுது… It’s done” என்றெல்லாம் மறுபடியும் மறுபடியும் வந்து நிரூப் வசைப்போர் நிகழ்த்த பிரியங்காவும் பதிலுக்கு மல்லுக்கட்டினார்.

சஞ்சீவ் – ராஜூ – பாவனி
சஞ்சீவ் – ராஜூ – பாவனி

சஞ்சீவ் – ராஜூ – பாவனி முன்வைத்த நியாயம்

“நான் தாமரைக்குப் புரிய வைக்கறதுக்குத்தான் சொன்னேன்” என்பது பிரியங்காவின் வாதம். “ஏன் தாமரைக்குப் புரியாதா, இது எங்க மூணு பேருக்கு உள்ள நடக்க வேண்டிய விஷயம்தானே?” என்பது நிரூப்பின் வாதம். வழக்கமான இது போன்ற போர்களில் தலையிடாத ராஜூ, சத்தம் ஓய்ந்த பின் மெல்ல தலையிட்டு “தாமரைக்கும் புரியும்தானே. அது அவங்க பிரச்சினை” என்று சொன்னது நியாயமான தலையீடு.

“அது நாமினேஷன் பயமோ, ..நிரூப்போட ஸ்ட்ராட்டஜியோ. எதுவா வேணா இருக்கட்டும்.. அது அவங்க விஷயம். நாம் ஏன் தலையிடணும்?” என்று பெரும்பாலான சமயங்களில் நியாயம் பேசும் சஞ்சீவும் இப்போது தலையிட்டது சிறப்பான விஷயம். பிறகு நிரூப்பை உள்ளே சென்று சந்தித்த சஞ்சீவ் “ஏன் விட்டீங்க.. இது போன்ற அழுத்தங்களின் நடுவில்தான் விளையாடியாக வேண்டும் என்று கமல் சார் நேற்று சொன்னாரே?” என்று நிரூப்பிடம் தக்க சமயத்தில் உபதேசம் செய்த விஷயமும் நன்று.

பிரியங்காவிடம் தற்போது நெருக்கமாக இருந்தாலும் பாவனியும் இந்தச் சமயத்தில் தன் தரப்பு நியாயத்தை முன்வைத்தார். “உன்னை பொதுவா ‘உசுப்பேத்தும் ஆசாமி’ன்னு சொல்லுவாங்க. நீ இப்ப செஞ்சது அதுதான். தாமரைக்கு வாதாட தெரியாதா?” என்று கேட்க “அது நிரூப்போட ஸ்ட்ராட்டஜின்னா. இது என்னோட ஸ்ட்ராட்டஜி” என்று அப்போதும் விடாமல் பிடிவாதம் பிடித்தார் பிரியங்கா. ஒரு கட்டத்தில் நிரூப்பின் கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கேட்டு பிரியங்கா கண்கலங்க மற்றவர்கள் அவரின் முகத்தில் துணியை மூடி ஆறுதல்படுத்தினார்கள்.

“எனக்கும் பசிக்குது.. சீக்கிரம் முடிங்கடா’ – பிக்பாஸ் அலுப்பு

“சீக்கிரம் பேசி முடிங்கப்பா” என்று முன்பு அலுத்துக் கொண்ட பிக்பாஸ், இப்போது நிரூப்பிற்கும் பிரியங்காவிற்கும் இடையில் நிகழும் போரை உற்சாகமாக கைப்பற்றுவதில் மும்முரமாக இருந்தார். அமீரும் தாமரையும் கயிறுகளைப் பற்றியபடி சாய்ந்து இருந்தார்கள். நிரூப் - பிரியங்கா சண்டையில் இந்த டாஸ்க் முடிவதைப் பற்றி பெரும்பாலோனோர் மறந்து போன நிலையில், சஞ்சீவ் ஒரு ஐடியா சொன்னார். “ரெண்டு பேருக்கும் ஒரு பாட்டில் சுடுதண்ணி குடிக்கச் சொல்வோம். யாரு முதல்ல எழுந்திருக்கறாங்களோ, அவங்க தோத்துடுவாங்க” என்றார். (என்னாவொரு வில்லத்தனம்?!). “பார்த்தியா… இப்ப சஞ்சீவ் கூட வெளிய இருந்து யோசனை சொல்றார்.. அப்ப இது மட்டும் என்ன?” என்று தனக்கேற்ற பாயிண்ட் கிடைத்ததில் மறுபடியும் உற்சாகமானார் பிரியங்கா.

“நானா இருக்கவே.. தோக்கணும்னு பிரியங்கா நினைக்கறா.. இதுவே அபிஷேக் விளையாடி இருந்தா ‘கமான்.. ஜில்லு.. கமான் ஜில்லு’-ன்னு கத்தியிருப்பா” என்று நிரூப் சொன்னவுடன் அவர் மனதில் உறைந்திருந்த ரகசியம் ஒன்று தன்னிச்சையாக வெளியானது. அபிஷேக்கின் மீதுள்ள எரிச்சல் இன்னமும் கூட நிரூப்பிடமிருந்து போகவில்லை. பிரியங்காவிடமும் அவருக்கு அத்தனை பொசசிவ்னஸ். “எனக்கு கேப்டனும் ஆகணும். நாமினேஷன் பிரச்சினையும் போகணும்” என்று அமீர் தெளிவாகச் சொல்ல “அப்படி தெளிவாச் சொல்லுடா. என் செல்லாக்குட்டி. ஒரு பிரெண்டாதான் நான் நிரூப்பிற்கு அட்வைஸ் பண்ணேன். எப்பப்பாரு ஏன் பயம்.. பயம்னு சொல்றேன்னு” என்று பிரியங்கா மறுபடியும் ஆரம்பிக்க இந்த டைம் லூப் சண்டை எப்போது முடியுமோ என்று நமக்கே அத்தனை சோர்வாகி விட்டது.

பிக் பாஸ்
பிக் பாஸ்

“நேத்து நைட்ல இருந்து உச்சா போகாம.. சாப்பிடாம.. கஷ்டப்பட்டு கயித்தை பிடிச்சிட்டு இருக்கேன்.. இவ தூங்கி ஃபிரெஷ்ஷா எழுந்து வந்து சண்டையை மறுபடியும் ஆரம்பிச்சா.. என்ன அர்த்தம்?” என்று நிரூப் பாவனியிடம் பிறகு அனத்தியதில் லாஜிக் இருந்தது. மதியம் 01:30 மணி – “டேய் இந்த விளையாட்டைத்தாண்டா என்னால விளையாட முடியும். கஷ்டமான ஆட்டம்னா அக்காவால விளையாட முடியாது. விட்டுக்கொடுத்துர்றா தம்பி” என்று அமீரிடம் உருக்கமான வேண்டுகோள் வைத்தார் தாமரை. “இந்த டாஸ்க்கும் கஷ்டம்தானே?” என்று அமீர் விடாக்கொண்டானாக இருந்தார்.

“நிரூப் பண்றது உனக்கு எரிச்சலா இருக்குன்னா.. நீ பண்றது மத்தவங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துது” என்று உண்மையை பிரியங்காவிடம் ‘உரக்கச் சொல்லிக்’ கொண்டிருந்தார் பாவனி. “அமீர் மாதிரி கரெக்டா விவாதிக்கணும். அதை விட்டுட்டு சும்மா கத்தினா எப்படி?” என்று தன் நிலையிலிருந்து பிரியங்கா இறங்கவில்லை. “நானும் அர்ஜெண்ட்டா உச்சா போகணும். முடியலடா. சீக்கிரம் பேசி முடிங்க” என்று இப்போது பிக்பாஸின் குரலில் விரக்தியே வந்து விட்டது. “டேய் அக்காடா” என்று தாமரை மறுபடியும் ஆரம்பிக்க, ஓர் எதிர்பாராத கணத்தில் கயிற்றை விட்டு விட்டார் அமீர்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

‘சோழர் பரம்பரையில் ஒரு புதிய எம்.எல்ஏ – தாமரை’

ஆக.. இந்த டாஸ்க்கில் தாமரை வெற்றி. அவரே இந்த வாரத்தின் தலைவர். அமீர் இப்படி விட்டுத்தந்ததில் அவருக்கு பல அனுகூலங்கள் இருந்தன. தாமரையின் ரசிகர்கள் அமீர் மீது பரிவு காட்டக்கூடும். “ஒரு பெண்ணிடம் மல்லுக்கட்டாம விட்டுத் தந்தாம்ப்பா” என்று பொதுவான வாக்குகளும் கூடலாம். இந்த மைலேஜ் அமீருக்கு வரும் நாட்களில் உதவும் என்றே தோன்றுகிறது. உடனடி ஆதாயமாக பாவனியின் வாயால் ஒரு வாய் சோறு ஊட்டப்பட்டதில் அமீர் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றிருப்பார்.

சுமார் பதினாறு மணி நேரத்திற்குப் பிறகு வெற்றியை அடைந்த தாமரையை பாவனி உட்பட அனைவரும் கட்டியணைத்து வாழ்த்தினார்கள். தான் விட்டுத் தந்ததற்கு பிரதிபலனாக “எல்லோரையும் ஒண்ணா நடத்தணும்க்கா. கோபப்படாம பேசு” என்று புதிய தலைவரான தாமரையிடம் அமீர் வேண்டுகோள் வைத்தார். இதனால் பாவனியிடமும் தாமரை இணக்கம் ஆகக்கூடும் என்பது அமீரின் கணக்காக இருக்கலாம். ஆனால் இங்கு உள்ளே புகுந்த அக்ஷரா “அதெல்லாம் தாமரை அக்காவால கோபப்படாம இருக்க முடியாது” என்று உசுப்பேற்றி விட்டார். பிறகு “அக்காவோட சோர்வை பார்த்து விட்டுத் தந்ததற்கு பாராட்டுக்கள்” என்று அமீருக்கும் பாராட்டு தெரிவித்தார் அக்ஷரா. (‘தென்னை மரத்துல ஒரு குத்து.. பனை மரத்துல ஒரு குத்து’ பாலிசி).

நாமினேஷன் ரணகளம் ஆரம்பம்

“கயிறு டாஸ்க் முடிஞ்சதுன்றதுக்காக.. உங்களை ஃப்ரீயா விட முடியாது. அடுத்தது நாமினேஷன் டாஸ்க் இருக்கு” என்று அடுத்த பஞ்சாயத்தை உற்சாகமாக ஆரம்பித்தார் பிக்பாஸ். தாமரை தலைவர் என்பதால் அவருக்கு வாக்களிக்க முடியாது. நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. ஆட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் சில பல திருப்பங்கள் இதில் தெரிந்தன.

முதலில் சென்ற அமீர் பிரியங்காவை நாமினேட் செய்தது சற்று ஆச்சரியம்தான். (காதல் தூதுவர் ஆயிற்றே?!). ‘அபிநய் பிரச்சினையை முன்பே சொல்லியிருக்கலாம்’ என்கிற புகாருடன் பாவனியை நாமினேட் செய்தார் சிபி. ராஜூவும் இதே காரணத்தைச் சொன்னார். நிரூப் பிரியங்காவை நாமினேட் செய்தார். ஆனால் பிரியங்காவோ “கனத்த மனதுடன் சிபியை முதன் முதலாக நாமினேட் செய்கிறேன்” என்றார்.

அக்ஷரா
அக்ஷரா

அமீர் பாவனியின் அடிமையா?

அக்ஷரா பாவனி மீது குத்துவார் என்பது எதிர்பார்த்ததுதான். “அபிநய்யிடம் அனைத்து உதவிகளையும் வாங்கிக் கொண்டு பிறகு பழிவாங்கி விட்டார்” என்பது அக்ஷராவின் புகார். யார் யாரை உபயோகப்படுத்திக் கொண்டார்கள் என்பது அவர்கள் இருவருக்குத்தான் நன்கு தெரியும். ஓகே.. இதைக் கூட அக்ஷராவின் பார்வை என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர் அடுத்த சொன்ன வாக்கியம்தான் ரசிக்கத்தக்கதாக இல்லை. “இப்ப புதுசா.. அமீர்ன்னு ஒரு அடிமை அவளுக்கு கிடைச்சிருக்கான்” என்றார் அக்ஷரா. இந்த அடிமை என்கிற வார்த்தையை அக்ஷரா முன்பே சில முறை பயன்படுத்தியிருக்கிறார். “உங்களுக்கு என்ன மாதிரி மாப்பிள்ளை வேணும்?” என்று துவக்க நாளில் பிரியங்கா கேட்ட போது “கொஞ்சம் அடிமையா இருக்கணும்” என்றார் அக்ஷரா. எனில் அவர் ஆண்களை அப்படிப்பட்ட கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறாரா? இதன் மூலம் அவர் அமீரை மட்டுமல்ல வருணின் நட்பையும் அவமதிக்கிறார் என்றே பொருள்.

நாமினேஷன் சடங்கின் இறுதியில் பட்டியல் வெளியானது. இந்த வார எவிக்ஷன் வரிசையில் இடம்பெற்றவர்கள், பிரியங்கா, சிபி, பாவனி, நிரூப், அக்ஷரா, மற்றும் வருண். அமீர் எப்படியோ எஸ்கேப் ஆகி விட்டார்.

நாளை என்ன நிகழும்? பொறுத்திருந்து பார்ப்போம்.