Published:Updated:

பிக் பாஸ் 80: ``எனக்குத் திட்ட வரல" - குடும்பத்தினரிடம் கலங்கிய அக்ஷரா!

அக்ஷரா

இந்த டாஸ்க்கில் இதுவரை உருகித் தீர்த்த அனைத்துப் போட்டியாளர்களையும் மிஞ்சி மிரட்டும் வகையில் அக்ஷரா நேற்று நடந்து கொண்டார். எந்தவொரு சீசனிலும் காணாத அளவிற்கு இந்த உணர்ச்சிப்பிரவாகம் இருந்தது.

பிக் பாஸ் 80: ``எனக்குத் திட்ட வரல" - குடும்பத்தினரிடம் கலங்கிய அக்ஷரா!

இந்த டாஸ்க்கில் இதுவரை உருகித் தீர்த்த அனைத்துப் போட்டியாளர்களையும் மிஞ்சி மிரட்டும் வகையில் அக்ஷரா நேற்று நடந்து கொண்டார். எந்தவொரு சீசனிலும் காணாத அளவிற்கு இந்த உணர்ச்சிப்பிரவாகம் இருந்தது.

Published:Updated:
அக்ஷரா

பிக்பாஸ் போட்டியாளர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்திருந்த Freeze Task ஆரம்பமாகி விட்டது. போட்டியாளர்களின் நோக்கில் அவர்களிடம் பெருகும் உணர்ச்சித்ததும்பல்களை புரிந்து கொள்ள முடிகிறது. நீண்ட நாட்கள் கழித்து தனது குடும்ப உறவினர்களைப் பார்க்கும் போது அவர்களிடம் தன்னிச்சையாக ஏற்படும் நெகிழ்ச்சிப்பெருக்கை அந்தப் பார்வையில் இருந்துதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘எல்லையில் ராணுவ வீரர்கள்’ என்று குதர்க்கமாக ஆரம்பிக்கக்கூடாது.

போட்டியாளர்களைப் போலவே சில பார்வையாளர்களும் இந்த டாஸ்க்கிற்காக ஆவலாகக் காத்திருக்கலாம். போட்டியாளர்களின் குடும்ப உறவினர்கள் யார், யார்.. என்று பார்க்க ஆவல் காட்டலாம். அந்தச் சந்திப்பில் நிகழும் பாசப்பிணைப்புகளை நெகிழ்வோடு கண்டு ரசிக்கலாம். இது ஒரு பக்கம். இன்னொரு தரப்பு ரசிகர்கள் ‘என்னடா. இது விக்ரமன் படக்காட்சிகளை மிஞ்சும் வகையில் இருக்கிறதே?!’ என்று உள்ளூற சிரித்து மகிழலாம். இது கூட பரவாயில்லை. பென்டிரைவில் உள்ள சில டெம்ப்ளேட் பாட்டுக்களை பின்னணியில் ஓடவிட்டு சம்பந்தப்பட்ட சானலும் இந்தக் காட்சிகளின் உணர்ச்சியைக் கூட்ட முயல்வதுதான் இருப்பதிலேயே டெரரான விஷயம்.

அக்ஷரா
அக்ஷரா

இந்த டாஸ்க்கில் இதுவரை உருகித் தீர்த்த அனைத்துப் போட்டியாளர்களையும் மிஞ்சி மிரட்டும் வகையில் அக்ஷரா நேற்று நடந்து கொண்டார். எந்தவொரு சீசனிலும் காணாத அளவிற்கு இந்த உணர்ச்சிப்பிரவாகம் இருந்தது. அவருடைய பின்னணியை வைத்து யூகிக்கும் போது தனது குடும்பத்தைச் சந்திக்க அவர் மிக ஆவலாக இருப்பார் என்பது ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். ஆனால் சினிமாவில் கூட நாம் காண முடியாத அளவிற்கு அவர் உணர்ச்சிப் பேரலையாக பெருகி ஓடிய போது சற்று கலவரமாகத்தான் இருந்தது.

அக்ஷரா என்கிற தனிநபரை விட்டு விடுவோம். எந்தவொரு குழந்தையையும் இத்தனை சொகுசாகவும், சுயசார்பின்றியும், பாசத்திற்கு அடிமையாகவும் வளர்ப்பது முறையல்ல. அது பாசமே என்றாலும் திகட்டும் அளவிற்கு மிஞ்சிப் போவது ஆபத்து. பாசம் என்கிற பெயரில் ஒரு பறவையை தங்கக்கூண்டிலேயே வைத்து வளர்த்தால், அது பிறகு வெளியுலகத்தை எதிர்கொள்ள முடியாமல் திக்கித் திணறும். பறக்க நேர்ந்தால் மற்ற பறவைகளாலேயே கூட ஆபத்தை எதிர்கொள்ளலாம். ‘பறவைகளை பறக்க விடு.. பறப்பதுதான் அதன் இயல்பு’ என்று கபாலி திரைப்படத்தில் ரஜினி சொல்லும் வசனத்தை இங்கு நினைவுகூரலாம்.

ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் குழந்தைகளை போஷித்து பாதுகாப்பது அவசியமானது. இந்தக் காலக்கட்டத்திலேயே அந்தக் குழந்தை தன் சொந்தக்காலை ஊன்றி நடப்பதற்கான பயிற்சியை நாம் அளிக்க வேண்டும். சுயமாக முடிவுகளை எடுக்கும்படியான திறனை வளர்க்க வேண்டும். அந்தக் கட்டத்தைத் தாண்டியவுடன் அந்தக் குழந்தைக்கு போதுமான சுதந்திரத்தை அளித்துத்தான் ஆக வேண்டும். உணர்ச்சிரீதியான பிணைப்பை குறைத்துக் கொண்டு தாமரை இலை நீராக மாறி பெரியவர்கள் மாறி விட வேண்டும். இப்படிச் செய்தால் இரு தரப்பிலுமே பல சிக்கல்களைத் தவிர்த்து விடலாம். இல்லையென்றால் ‘அண்ணாத்தே’ ரஜினிகாந்த் மாதிரி காலம்பூராவும் தங்கச்சியைப் பாதுகாத்துக் கொண்டே திரிய வேண்டும். பாசம் என்றாலும் கூட சர்க்கரை, உப்பு போல அளவாக இருந்தால்தான் ருசி. அதிகமாகப் போனால் ஆபத்து.

எபிசோட் 80-ல் என்ன நடந்தது?

அழுகாச்சி டாஸ்க்கில் புதிதாக வந்த சஞ்சீவ் மற்றும் அமீரை மாத்திரம் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று பிக்பாஸ் யோசித்தார். விளைவு சஞ்சீவ் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். சந்தோஷமான குடும்பம். ஒரே அக்கா. ஆறாம் வகுப்பில் இருந்து ஐந்து மாணவர்கள் ஒரே செட் நண்பர்களாக அமைந்தார்கள். கல்லூரியில் நடிகர் விஜய் இணைந்த போது இந்த குழுவின் எண்ணிக்கை ஆறாக மாறியது. சினிமா பின்னணி கொண்ட குடும்பம் என்பதால் படப்பிடிப்பு சூழல் என்பது சஞ்சீவிற்குப் புதிதல்ல. தந்தையின் பணிக்கால ஓய்விற்குப் பிறகு குடும்பம் பொருளாதார ரீதியாக சற்று தள்ளாடுகிறது. சஞ்சீவின் அக்கா ‘சிந்து’ என்கிற பெயரில் நடிக்கச் செல்கிறார்.

சஞ்சீவின் கதை

நடிப்பில் தள்ளிவிடப்பட்டதால் சஞ்சீவிற்கு கல்லூரிப்படிப்பு வீணாகப் போனது. விஜய் நண்பன் என்பதால் ‘நிலாவே வா’ திரைப்படத்தில் முதன் முதலாக ஹீரோ பிரெண்ட் ரோல் கிடைத்தது. ஆனால் இதர வாய்ப்புகளும் அதே போல் தொடர்ந்து வரவும் வெறுத்துப் போய் கிரெடிட் கார்ட் விற்கும் பணிக்குச் செல்கிறார். அங்கு ஓயாத உழைப்பில் நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆனால் அக்காவின் வழியாக தொலைக்காட்சி சீரியலில் வில்லன் வாய்ப்பு கிடைக்கிறது. அதைப் பற்றிக் கொண்டு முன்னே செல்கிறார்.

சஞ்சீவ்
சஞ்சீவ்

தமிழகத்தை சுனாமி தாக்கிய போது தொலைக்காட்சி நடிகர்களுக்காக நிதி சேகரிக்க ‘சின்னத்திரை நடிகர்கள் சங்கம்’ செல்கிறது. சஞ்சீவின் அக்காவான சிந்துவிற்கு ஏற்கெனவே நுரையீரல் பிரச்சினை இருக்கிறது. இந்த அலைச்சலில் அது மிகுதியாகி, எதிர்பாராத கணத்தில் மருத்துவமனையில் இறந்து போகிறார். (அக்கா மருத்துவமனையில் இருந்த நிலையையெல்லாம் சொன்னதை சஞ்சீவ் தவிர்த்திருக்கலாம்). தொலைக்காட்சி நடிப்பின் வழியாக காதல் மனைவி கிடைக்கிறார். ஆனால் டைவர்ஸி அக்காவின் மகளை வளர்க்கும் பொறுப்பும் சஞ்சீவிற்கு இருக்கிறது. அதை அவர் சிறப்பாகவே செய்கிறார்.

தன்னுடைய சொந்த குடும்பம், இரண்டு குழந்தைகள் என்று வந்த பின்னரும் கூட அக்கா மகளுக்கு திருமணச் செலவுகளை சிறப்பாக செய்ய முடிவு செய்யும் சஞ்சீவிற்கு அவரது மனைவியும் உறுதுணையாக இருந்த விஷயம்தான் இதில் மிகச் சிறப்பு. ஒரு முன்னணி நாயகியுடன் ஹீரோவாக நடிக்க வந்த வாய்ப்பு, பணமதிப்பிழப்பு காலக்கட்டம் காரணமாக பறிபோகிறது. அதற்குப் பிறகு சஞ்சீவிற்கு கிடைத்த பெரிய வாய்ப்பு என்பது ‘பிக்பாஸ்’ மேடைதான். இதற்குப் பிறகு தனக்கு பெரிய வெளிச்சம் கிடைக்கும் என்று காத்திருக்கிறார். இதுதான் சஞ்சீவின் கதை. (முன்னணி நடிகராக இருக்கும் நண்பர் உதவி செய்திருக்கலாமே என்கிற கேள்வி நமக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. அவரும் ஏதாவது செய்திருக்கலாம். ஆனால் என்ன நடந்ததோ?!).

ஆரம்பித்தது ரணகள பாசக்காட்சி டாஸ்க்

பொழுது விடிந்தது. ‘ராசாத்தி.. ராசாத்தி.. சூடேத்தி..’ என்கிற பாடலை பிக்பாஸ் அலற விட்டார். ‘சோதீக்காதீங்கடா என்னைய’ என்கிற Freeze டாஸ்க்கை பிக்பாஸ் அறிவித்தார். கதறிக் கொண்டே வரும் பாவனையுடன் இதைப் பிரியங்கா சபையில் அறிவித்தது சுவாரசியமான காமெடி. ஆனால் இதை உண்மையாகவே அவர் பிறகு செய்யப் போகிறார் என்பதை நினைக்கும் போதுதான் இப்போதே கலவரமாக இருக்கிறது. ‘Freeze, Release, Loop’ என்று இந்தச் சுற்றில் நெகிழ்ச்சிகளோடு குறும்புகளும் கலந்திருக்கும்.

இந்த டாஸ்க் பற்றிய அறிவிப்பு வந்த அடுத்த கணத்திலிருந்தே அக்ஷராவின் உடல் குளிர்சுரம் போல தடதடவென நடுங்க ஆரம்பித்து விட்டது. உணர்ச்சித் ததும்பலில் வழிந்து கொண்டிருந்த அவரை மற்றவர்கள் தொட்டு ‘எமோஷனைக் குறை’ என்று ஆறுதல்படுத்தினார்கள். ஆனாலும் ‘நான் பாசத்துல காட்டாறு.. எனக்கு அணை போட முடியாது’ என்கிற மாதிரி பொங்கி வழிந்து கொண்டே இருந்தார் அக்ஷரா. அவருக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று நமக்குத்தான் பதட்டமாக இருந்தது.

ஏற்கெனவே பொங்கிக் கொண்டிருந்த அக்ஷராவிடம் இன்னமும் நன்றாக விளையாடிப் பார்க்கலாம் என்று பிக்பாஸ் முடிவு செய்து விட்டார். ‘எங்க அண்ணன்.. அன்பை அள்ளித் தருவதில் மன்னன்’ என்கிற பாடலை ஒலிக்க விட்டு உணர்ச்சிக் கலவரத்திற்கான வெடிகுண்டை அவர் வீச, அது கச்சிதமாக வேலை செய்தது. திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி வீடெங்கும் பதறி சிதறி ஓடி தேடினார் அக்ஷரா. பிறகு யாரும் வராமல் போகவே ‘சும்மாவா.. சும்மாவா?” என்று சொல்லி தனக்கே ஆறுதல் சொல்லிக் கொண்டார். அவரின் குடும்பம் உள்ளே வரும் போது என்ன உணர்ச்சிக்கலவரம் ஏற்படுமோ என்கிற பீதி இப்போதே நமக்குள் பரவ ஆரம்பித்தது. அப்படியொரு துவக்கத்தை அக்ஷரா அளித்து பயத்தை ஏற்படுத்தினார்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

அக்ஷரா என்னும் உணர்ச்சி சுனாமி

“ரஜினி அங்கிள்.. என்னைக் கண்டுபிடிங்க பார்க்கலாம்’… என்கிற பாடலின் முன்னோட்டம் மாதிரி ‘கூகூ’ என்கிற அக்ஷராவின் செல்லப்பெயர் மைக்கில் வீடெங்கும் ஒலிக்க அக்ஷராவின் உணர்ச்சி நதி வெள்ளமாக மாறி ஓட ஆரம்பித்தது. ‘நான் கேட்டேன்... எனக்கும் கேட்டுச்சு.. கூகூன்னு குரல் எங்கிருந்தோ கேட்டுச்சு” என்று பிரியங்காவும் அலறி, இந்தக் கலவரத்தின் மீது பெட்ரோலை ஊற்றினார். “இல்ல.. இது அம்மா குரல் கிடையாது.. அம்மா குரல் கிடையாது’ என்று வீடெங்கும் பதறி ஓடினார் அக்ஷரா. (முடியல).

மறுபடியும் ‘எங்க அண்ணன்’ பாடலை பிக்பாஸ் அலறவிட ‘மம்மா.. மம்மா.. இங்கதான் எங்க மம்மா இருக்காங்க…” என்று பூச்சாண்டியைப் பார்த்த குழந்தை மாதிரி அக்ஷரா அலறிய போது ஓர் இளம்பெண்ணின் உருவம் மறைந்து எல்கேஜி பாப்பாவின் உருவம் மட்டுமே மிஞ்சியது. பிறகு அக்ஷராவின் அண்ணனும் அம்மாவும் உள்ளே நுழைந்த போது அக்ஷரா பாய்ந்தோடிச் சென்று கட்டியணைத்து செய்த காட்சிகளைக் காண கண்கோடி வேண்டும். ஆனால் இந்த ரணகளத்தின் இடையேயும் தன் ஒப்பனையை முதலிலேயே சரிசெய்து கொண்ட அக்ஷராவின் திறமை வியக்க வைக்கிறது.

அக்ஷரா
அக்ஷரா

தெலுங்கு சினிமாவில் சென்டிமென்ட், சண்டை, டூயட் என்று எல்லாமே சற்று எக்ஸ்ட்ரா மசாலாத்தனத்துடன் இருப்பதை நாம் அறிவோம். இந்த விஷயத்தில் நம்மையும் அவர்கள் மிஞ்சியிருக்கிறார்கள். ஆனால் அந்த தெலுங்கு சினிமாக்களையும் மிஞ்சி விடும் வகையில் அக்ஷராவின் பாசக்காட்சிகள் இருந்தன. கட்டியணைத்தார்; துள்ளினார்; இருவரின் மடிகளிலும் தாவினார்; “நான் உங்க கூடவே வந்துடவா?” என்று தெலுங்கில் ததும்பினார். “அம்மா நல்லா இருக்காங்களா?” என்று அம்மாவை பக்கத்தில் வைத்துக் கொண்டே அண்ணனிடம் விசாரித்தார்.

ஆனால் நல்லவேளையாக அக்ஷராவின் அம்மாவும் அண்ணனும் இதேயளவிற்கு ததும்பி வழியாமல், கட்டுப்பாடாக இருந்த போது ‘ஹப்பாடா’ என்று நமக்கு ஆறுதலாக இருந்தது. அம்மா வேண்டுமானால் சற்று அதிக செல்லம் தந்திருப்பார் போலிருக்கிறது. ஆனால் அண்ணன் அன்போடு சேர்த்து சரியான உபதேசங்களையும் சொல்வபராக இருந்தது சிறப்பு. “நானும் உங்க அம்மா மாதிரிதான்” என்று பிரியங்கா, தாமரை, பாவனி ஆகியோர் உள்ளிட்டு பலரையும் அக்ஷராவின் அம்மா அணைத்துக் கொண்டது சிறப்பான காட்சி. ஹாஸ்டலில் மகளை விட்டுச் செல்பவர் மாதிரி “கொஞ்சம் பார்த்துக்கம்மா” என்று பிரியங்கா மற்றும் தாமரையிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அவர். அதுவொரு தாயின் குரல்.

“இங்க என்னைத் திட்டறாங்க” – அக்ஷரா அதிர்ச்சி ரிப்போர்ட்

பிறகு இவர்கள் தனியாக சந்தித்தார்கள். “நிகழ்ச்சி எப்படி இருக்கு.. எனக்கு கெட்ட பெயர் ஏதாவது இருக்கா?” என்று கேள்விக்கணைகளை வீசிய அக்ஷராவிடம் “மொதல்ல அழுவறதை நிறுத்து” என்று அவரது சகோதரர் கறாராக சொன்னது சிறப்பான ஆலோசனை. “அதைத்தான் காட்டறாங்களா?” என்று கேட்ட அக்ஷரா சுவிட்ச் போட்டது போல் முகத்தை மாற்றிக் கொண்டார். “இங்க சில பேர்தான் ஒரே மாதிரி இருக்காங்க. எதுவா இருந்தாலும் கடைசியில் இதுவொரு விளையாட்டு” என்று சிறப்பான உபதேசங்களைச் சொன்னார் அண்ணன்.

“இங்க எல்லோரும் திட்டறாங்க. பதிலுக்கு எனக்கு திட்ட வரலை” என்று அக்ஷரா குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன போது பிக்பாஸே உள்ளே ஒரு கணம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்திருப்பார். ‘த.. சீ பே’ என்று பிரியங்காவை அசால்ட்டாக சொன்ன கணம் நினைவில் வந்து போயிருக்கும். “குடும்பம் இல்லாமல் ஏறத்தாழ எண்பது நாட்களை நீ கடந்து விட்டாய்” என்று அக்ஷராவின் சகோதரர் சொன்னது முக்கியமான பாயிண்ட். காசு தந்திருந்தால் கூட அக்ஷராவிற்கு இப்படியொரு அனுபவம் கிடைத்திருக்காது. “எதுவா இருந்தாலும் முகத்திற்கு நேரா பேசிடு” என்ற அண்ணன் அதற்காக சஞ்சீவை உதாரணம் காட்டியதும் சிறப்பு.

அக்ஷரா செய்து கொண்டிருந்த ஹைவோல்டேஜ் டிராமாவைப் பார்த்துக் கொண்டிருந்த போது ராஜூவின் மைண்ட்வாய்ஸில் என்னவெல்லாம் ஓடியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவே நமக்கு சுவாரசியமாக இருந்தது. “அவங்க தெலுங்குல பேசறாங்களே.. உனக்குப் புரியுமா கோப்பால்?” என்று பிரியங்கா கேட்க “எனக்கு கொஞ்சம் புரியும் கோப்பால்” என்றார் ராஜூ.

அக்ஷரா
அக்ஷரா

‘ஆண்கள் கூட சண்டை போடாத’ – அநாவசிய அட்வைஸ்

“அமீர் கூட நான் சண்டை போட்டதையெல்லாம் காட்டினாங்களா?” என்று அக்ஷரா ஆர்வமாக கேட்க “நீ இங்க சிறப்பாத்தான் விளையாடறே. ஆனால் ஆண்கள் கிட்ட போட்டி போடும் போது ஜாக்கிரதையா இரு. உடம்புல ஏதாவது அடிபட்டுடுச்சுன்னா. யார் பொறுப்பு?’ என்று சகோதரர் சொன்ன பாயிண்ட் மட்டும் சரியில்லை. ஓர் ஆணோடு போட்டியிட்டு வெல்ல அக்ஷரா தயாராக இருக்கும் போது குடும்பம் அதற்கு ஆதரவாகத்தான் இருக்க வேண்டும். ‘தங்களின் குழந்தைக்கு அடிபட்டு விடப் போகிறதே” என்கிற அவர்களின் கரிசனமெல்லாம் ஓகே. ஆனால் ஒரு போட்டிக்குள் நுழைந்த பிறகு அதன் சாதக, பாதகங்களை அந்தக் குழந்தைதான் எதிர்கொள்ள வேண்டும். அங்கும் பாலின பாரபட்சங்களை நுழைக்கக்கூடாது. இந்த விஷயத்தில் அக்ஷராவின் பார்வை சரியாக இருந்தது. ஆனால் சகோதரரின் பார்வை முரணாக அமைந்தது.

“இங்க ரொம்ப உசுப்பேத்தி விடறாங்க” என்று அக்ஷரா சொன்ன புகார், பிரியங்காவைப் பற்றியதாக இருக்கும். “நீ பாயிண்ட்டை சரியா பேசு. கமல் சார் வர்ற அன்னிக்கு கூட சொல்ல முடியாம தடுமார்ற. என்ன பேசப் போறேன்னு நல்லா யோசிச்சு வெச்சிக்கோ. இந்த வீட்டில் வருண் மட்டுமே நூறு சதவீதம் உனக்கு நம்பகத்தன்மையுள்ளவர்” என்று அண்ணன் சொல்லிய போது அக்ஷராவின் முகத்தில் பல்பு எரிந்தது. பிறகு இவர்களின் உரையாடலில் மற்றவர்களும் வந்து இணைந்தார்கள். “ரொம்ப செல்லமா வளர்த்துட்டோம். இதுவரைக்கும் அவ தனியா எங்கயும் போனதில்ல. வெளியே போனா கூட பிரெண்ட்ஸ்ங்க கூடத்தான் போவா” என்றார் அம்மா. “நீதான் அவளோட அம்மா மாதிரி இருந்து பார்த்துக்கணும்” என்று ராஜூவிடம் ஒப்படைத்தார். ‘என்னடா இது தர்மசங்கடம்?! என்பது மாதிரி ராஜூ விழித்தார்.

‘நீங்க என்ன மொழிலம்மா சண்டை போடறீங்க?’

அக்ஷராவிற்கு கொண்டு வரப்பட்டிருந்த சாக்லேட்டுகள் குறித்து ‘அது எல்லோருக்கும்தானே?” என்று ஜாக்கிரதையாக கேட்டு வைத்துக் கொண்டார் பிரியங்கா. ‘பலூன் டாஸ்க்ல என் பொண்ணு எட்டு பலூன்தான் உடைச்சா. ஆனா பதிலுக்கு நீங்க..” என்று மிகத் துல்லியமான கணக்கை அக்ஷராவின் அம்மா சொன்ன போது சபை வெடித்து சிரித்தது. “அமீர். வேற டிராக்ல போறார். வந்த வேலையை சிறப்பா பண்றார்” என்று அக்ஷராவின் சகோதரர் சூட்சுமமாக சொன்ன போது, அமீர் சங்கடத்துடன் வானத்தைப் பார்த்தார். பக்கத்தில் இருந்த பாவனியிடம் சங்கடமான புன்னகை வந்தது.

“நிரூப். நீங்க நல்லா விளையாடறீங்க. டவுன் ஆகாதீங்க” என்று உபதேசித்த அண்ணன் “நீங்களும் நிரூப் கிட்ட சண்டை போடும் போது என்ன மொழில பேசினீங்க?” என்று பிரியங்காவை சரியாக மடக்க, பலமாக கைத்தட்டி மகிழ்ந்தார் அக்ஷரா. (எங்க அண்ணன்.. எங்க அண்ணன்’).. இதற்காக சங்கடத்துடன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் பிரியங்கா. கிளம்பும் சமயத்தில் “யார் மேலயும் வெறுப்பை வளர்த்துக்காதே” என்று சகோதரர் சொன்ன உபதேசம் சிறப்பு. “என் பொண்ணை தூக்கிப் போடாதேப்பா” என்று அமீரிடம் அக்ஷராவின் அம்மா சொன்னது சுவாரஸ்யமான காட்சி. அக்ஷரா மீண்டும் அழுது ஊரைக் கூட்டுவாரோ என்று திகிலாக இருந்தது. நல்ல வேளையாக மிதமான உணர்ச்சிப் பெருக்குடன் அது முடிந்தது பெரிய ஆறுதல்.

அக்ஷரா
அக்ஷரா

வாக்குமூல அறையில் ஓர் அன்புப் பரிசு

அசந்து உறங்கிக் கொண்டிருந்த பாவனியின் மீது பீன் பேகை எடுத்து குறும்பாக போர்த்தினார் அமீர். “சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸூடா’ என்கிற பாடல் ஒலிக்க, ‘Freeze’ல் இருந்தவர்களிடம் சலனம் ஏற்பட்டது. ரிடையர்ட் ஆபிசர் மாதிரியான தோற்றத்தில் ஒருவர் தடுமாறியபடி உள்ளே நுழைய அவரை தாங்கிப் பிடித்தார் அமீர். உள்ளே வந்தவர் சிபியின் தந்தை. பிக்பாஸ் நிகழ்ச்சியை கவனமாக பார்ப்பவர் போலிருக்கிறது. அனைத்துப் போட்டியாளர்களையும் சரியாக அடையாளம் கண்டுகொண்டார்.

அப்போதுதான் மார்க்கெட்டில் இருந்து வீடு திரும்பிய முகபாவத்துடன் ‘எப்படிப்பா இருக்கீங்க?” என்று சிபி இயல்பாக கேட்டவுடன், ஒரு மசாலா தெலுங்கு திரைப்படத்தைப் பார்த்து முடித்த கையோடு ‘அவார்ட்’ படத்தைப் பார்த்த ஆறுதல் ஏற்பட்டது. “அம்மாவால வர முடியல. உன் மனைவி பாம்பே போயிட்டா” என்று திறமையாக டிராமா ஆடினார் சிபியின் அப்பா. பிறகு அனைவரும் சூழ்ந்து அமர “வார்டன் டாஸ்க்ல உன்னைப் பார்த்து எனக்கே பயமா இருந்ததுடா” என்று அவர் சொல்ல வீடே சிரிப்பலையில் மூழ்கியது. “அவ்வளவு சத்தமாவா கேட்டுச்சு?” என்றார் சிபி.

“உனக்கு ஒரு பரிசு கொண்டு வந்தேன். கைல எடுத்துட்டு போக முடியாதுன்ட்டாங்க. கன்பெஷன் ரூம்ல நீயே போய் எடுத்துக்கணுமாம்” என்று சிபியின் தந்தை சொன்ன போது கூட சிபியால் அதை யூகிக்க முடியவில்லை. வாக்குமூல அறையில் சிபியின் அன்பு மனைவியே பரிசாக வந்து அமர்ந்திருக்க “பாம்பே போயிட்டதா சொன்னாங்க” என்று அப்போதும் தடுமாறினார் சிபி. “முதன்முறையா என்னை இவர் hug பண்ணாரு” என்று வெளியே சிபியின் மனைவி சிரிப்புடன் சொல்ல “ஹே.. நாங்களும் அதைப் பார்க்கணும்ப்பா” என்று பிரியங்கா வேண்டுகோள் வைக்க, வெட்கச் சிரிப்புடன் அந்தச் செய்கை மீண்டும் நடந்தது. “வீட்ல இவர் பயங்கர சோம்பேறி. நீங்க சமையல் கத்துக் கொடுங்க” என்று மழலைத் தமிழில் தாமரையிடம், சிபியின் மனைவி சொன்னது சுவாரஸ்யக்காட்சி.

கேஜிஎப் திரைப்பட வீரர் சிபி

தன் மனைவியை ஒரு வாரம் பார்க்கவில்லையென்றால் கூட அடுத்த சந்திப்பில் மனைவியை தொடுவதற்கு சிபி கூச்சப்படுவார் என்கிற தகவல் சபையில் வெளியானவுடன் சங்கடத்துடன் தலையில் அடித்துக் கொண்டார் சிபி. “ரேங்கிங் டாஸ்க்கில் நீ சிறப்பாக விளையாடினாய். எனக்குப் பெருமையாக இருந்தது” என்று மனைவி தனிமையில் பாராட்ட, அப்போதுதான் சிபியின் முகத்தில் புன்னகையே வந்தது. இதற்காக KGF டயலாக்கையெல்லாம் அவர் மேற்கோள் காட்டிப் பாராட்ட “அந்த டயலாக் அந்தப் படத்துல வராது” என்று திருத்தினார் சிபி. (சிபிக்கு ஏன் ரொமான்ஸ் வரவில்லை என்பது இப்போதுதான் புரிகிறது. மனைவி பாராட்டுகிறார் என்பதே ஒரு அபூர்வமான தருணம். நூற்றாண்டுக்கு ஒருமுறை நடக்கிற சமாச்சாரம். அந்தச் சமயத்திலும் அதில் கரெக்ஷன் சொன்னால் எப்படி ராஜா?!).

சிபியின் மனைவியிடமிருந்து போட்டியாளர்களுக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. ‘பார்பி டால்’ என்கிற காம்ப்ளிமெண்ட் அக்ஷராவிற்கு கிடைத்தது. ‘செம க்யூட்டா இருக்கீங்க” என்கிற பாராட்டு பாவனிக்கு கிடைத்தது. “உங்க முடி பிடிக்கும்’ என்கிற விநோதமான கமெண்ட் நிரூப்பிற்கு கிடைத்தது. “எப்படித்தான் கோபத்தைக் கண்ட்ரோல் பண்றீங்களோ?.. சிபிக்கு கொஞ்சம் கத்துத் தாங்களேன்’ என்கிற பாராட்டு ராஜூவிற்கு கிடைத்தது.

பிக் பாஸ்  சிபி
பிக் பாஸ் சிபி

“பாரபட்சமில்லாமல் நடந்து கொள்வார்’ என்கிற நல்ல பாராட்டு சஞ்சீவிற்கு கிடைத்தது. “தாமரை மாதிரியான எளிய பின்னணியில் இருக்கும் பெண்கள் பிக்பாஸ் போன்ற பெரிய மேடைகளில் நுழைவது மற்ற பெண்களுக்கு உத்வேகமாக இருக்கும்” என்று சிபியின் மனைவி சொன்னது உண்மை. ‘அனைவரையும் விட பிரியங்காவை கூடுதலாக பிடிக்கும்” என்றார் அவர். அமீரின் டான்ஸ் பிடிக்கும் என்றது கடைசி காம்ப்ளிமென்ட்.

“என்னால அவரைத் தூக்க முடியும். அவரால் என்னைத் தூக்க முடியாது” என்று சிபியின் மனைவி ஜாலியாக சவால் விட்டு அதைச் செய்து காட்டியது சுவாரஸ்யமான காட்சி. “உங்கள் அனைவருக்காகவும் என் மனைவி பிரார்த்தனை செய்கிறார்” என்று சிபியின் தந்தை சொன்ன காட்சியோடு இவர்களின் குடும்பம் இயல்பாக கிளம்பிச் சென்றது.

அடுத்தடுத்து என்னென்ன உணர்ச்சி பூகம்பங்கள் வெடிக்கவிருக்கிறதோ? குறிப்பாக பிரியங்கா என்ன செய்யப் போகிறார் என்பதை நினைத்தால் இப்போதே கண்ணைக் கட்டுகிறது.