Published:Updated:

பிக் பாஸ் 81 : ராஜூவின் ரணகளமான ரொமான்ஸ்; அமீரின் கதை; உணர்ச்சிவயப்பட்ட ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் ராஜூ

“நீ பண்றதைப் பார்த்து எனக்கு ரத்தக்கொதிப்பு ஏறிடுச்சுடா” என்று தன் மகனையே அவர் ஜாலியாக கலாய்த்துக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் 81 : ராஜூவின் ரணகளமான ரொமான்ஸ்; அமீரின் கதை; உணர்ச்சிவயப்பட்ட ஹவுஸ்மேட்ஸ்!

“நீ பண்றதைப் பார்த்து எனக்கு ரத்தக்கொதிப்பு ஏறிடுச்சுடா” என்று தன் மகனையே அவர் ஜாலியாக கலாய்த்துக் கொண்டிருந்தார்.

Published:Updated:
பிக் பாஸ் ராஜூ

நேற்றைய எபிசோடில் மூன்று ஹைலைட்டான விஷயங்கள் நடந்தன. ஒன்று, அமீரின் பிளாஷ்பேக். ‘என்னோடது ரொம்ப நார்மல் ஸ்டோரிதான். ஆனா அங்கங்க கொஞ்சம் அப்நார்மலா இருக்கும்’ என்று அமீர் சொன்னாலும் அவரது கதை ஏறத்தாழ செல்வராகவனின் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல் இருந்தது. அமீரின் பின்னணியில் இத்தனை சோகமா என்று மனம் கலங்கிவிட்டது. இப்போது அமீரை வேறொரு கோணத்தில் பார்க்கத் தோன்றிவிட்டது. பாவனியின் தோழமையை அவர் விரும்புவதைப் பார்க்கும்போது ‘காதல் கொண்டேன்’ தனுஷின் நினைவுதான் வருகிறது. நாம் முதலில் பார்க்கும் காட்சியின் பொருள் வேறாக இருக்கும். சில விஷயங்களை அறிந்துகொண்ட பின்பு அதே காட்சியின் பொருள் இப்போது வேறொன்றாக காட்சி தரும்.

அடுத்ததாக நிரூப்பின் தந்தையின் வருகை. மனிதர் படு கேஷூவலாக இருந்தார். “நீ பண்றதைப் பார்த்து எனக்கு ரத்தக்கொதிப்பு ஏறிடுச்சுடா” என்று தன் மகனையே அவர் ஜாலியாக கலாய்த்துக் கொண்டிருந்தார். அனைவரிடமும் இதே இயல்புடன் அவர் பேசியது சிறப்பு.

பிக் பாஸ் அமீர்
பிக் பாஸ் அமீர்

மூன்றாவது விஷயம், ராஜூவின் அம்மா மற்றும் மனைவியின் வருகை. சந்திரிகா, தாரிகா என்று ரைமிங்கில் இவர்களுக்கு பெயர் அமைந்தது அதிசயம்தான். மாமியாரும் மருமகளும் ‘கா’ விட்டுக் கொள்ளவே மாட்டார்கள் போலிருக்கிறது. “உன் அப்பாவ பார்க்கிற மாதிரியே இருந்தது” என்று ராஜூவின் அம்மா கலங்கியது நெகிழ வைத்தது. இதுவரை பிக்பாஸ் வீட்டிற்கு வரும் சிறப்பு விருந்தினர்கள், மற்ற போட்டியாளர்களை ‘வீட்டுக்கு வாங்க” என்று சம்பிரதாயமாக அழைப்பதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம்.

ஆனால் முதன்முறையாக ஒருவர் ‘பிக்பாஸ்.. எங்க வீட்டுக்கு வாங்க’ என்று அழைத்தார். அது ராஜூவின் அம்மா. எனக்கென்னமோ இது ஸ்பெஷலான தருணமாகத் தெரிந்தது. பிக்பாஸ் என்பது வெறும் குரல் என்பது நம் அடிமனதிற்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதையெல்லாம் தாண்டி அந்தக் குரலை, ஒரு உருவமாகவே நாம் பார்க்கத் துவங்கி விட்டோம் என்பதுதான் அந்த விருந்தோம்பல் அழைப்பின் மூலம் உணர முடிந்தது.

எபிசோட் 81-ல் என்ன நடந்தது?

அமீர் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். ‘மேடு பள்ளங்கள் நிறைந்த வாழ்க்கை’ என்று சம்பிரதாயமாக ஒரு வாக்கியத்தைச் சொல்வார்கள். ஆனால் அமீருக்கு இதை உண்மையாகவே பொருத்திப் பார்க்கலாம். அத்தனை திருப்பம்; அத்தனை சோகம்.

இவருக்கு அம்மா, அண்ணன் உண்டு. அப்பாவை இவர் பார்த்ததில்லை. சமயங்களில் ஒருவேளை உணவு மட்டுமே சாப்பிடக்கூடிய அளவிற்கு வறுமையான குடும்பப் பின்னணி. அம்மா மிக கண்டிப்பானவர். சிறிய தவறுக்குக்கூட அடி பின்னியெடுத்து விடுவார். தன் மகனை டான்ஸர் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது அம்மாவின் கனவு. எனவே அதைக் கற்றுக் கொள்ள வற்புறுத்துகிறார். ஆனால் அமீருக்கோ ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் ஆசை. நடனத்தில் விருப்பமில்லை.

அமீர்
அமீர்

ஒரு டான்ஸரின் கதை

லோக்கல் சானல்களில் அமீரின் நடன நிகழ்ச்சி வரத் தொடங்குகிறது. அண்ணனின் ஒரு பிரச்சினை காரணமாக, அமீரும் அம்மாவும் ஊட்டியிலிருந்து கோயம்புத்தூருக்கு இடம் பெயர்கிறார்கள். இந்த நாட்கள்தான் அமீரின் வாழ்க்கையில் மிகச் சிறந்த நாட்களாக அமைகின்றன. இருவருக்குமே சினிமா பார்ப்பதில் விருப்பமுண்டு என்பதால் அம்மாவும் பிள்ளையும் இணைந்து நிறைய சினிமா பார்க்கிறார்கள். பள்ளிச்சூழல் காரணமாக அமீர் சண்டைக்காரனாக மாறுகிறார். இதனால் அம்மாவிடமிருந்து சற்று விலகல் ஏற்படுகிறது. ஒரு அதிர்ச்சியான நாளில் அம்மா கொலை செய்யப்பட்ட தகவல் கிடைக்கிறது. கையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச பொருட்களை விற்று தாயை அடக்கம் செய்கிறார். மறுபடியும் ஊட்டி.

பிறகு ஒரு ஹோட்டலில் ரூம்பாயாக பணி. அதில் வரும் சொற்ப பணத்தைக் கொண்டு கல்லூரியில் படிக்கிறார். அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நடனம் கற்பதைத் தொடர்கிறார். கல்லூரி கலை விழாக்களில் முதல் பரிசு வாங்குகிறார். “இனிமேல் டான்ஸ்தான் தனது எதிர்காலம்" என்று முடிவு செய்து ராணுவ ஆசையைக் கைவிடுகிறார். எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத இடத்தில் ஒரு சிறிய நடனப்பள்ளியை ஆரம்பிக்கிறார்.

பிரியங்கா
பிரியங்கா

அங்கு முதன் முதலில் மாணவிகளாக வரும் இருசிறுமிகள்தான் அமீரின் வாழ்க்கையை திருப்பிப் போடப்போகிறார்கள் என்பது அவருக்கு அப்போது தெரியாது. அந்தக் குழந்தைகளின் மீது நிறைய பாசம் காட்டுகிறார். இதற்கிடையில் ‘உங்களில் யார் பிரபுதேவா’, லிம்கா விருது போன்ற உயரங்களை அடைகிறார். இந்தச் சாதனையின்போது இவர் மயக்கம் போட்டு கீழே விழுந்து விட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்தச் சமயத்தில்தான் மாணவிகளின் தந்தை இவரின் பின்னணியை விசாரித்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று ‘இனி நீ எங்களில் ஒருவன்’ என்று குடும்பத்தில் ஒருவராக அரவணைத்துக் கொள்கிறார்.

ஆனால் தன்னிடமுள்ள தாழ்வுணர்ச்சி காரணமாக அத்தனை பெரிய வீட்டில் புழங்குவதற்கு அமீருக்கு கூச்சமாக இருக்கிறது. தன்னிடம் இத்தனை பாசம் காட்டுபவர்களுக்காக அமீர் மதம் மாறுகிறார். இந்தப் பையனை ஏற்றுக் கொண்ட காரணத்தால் சுற்றத்தாரின் பகைமையை மாணவிகளின் தந்தை சம்பாதிக்க நேர்கிறது. என்றாலும் அவர் பின்வாங்குவதில்லை. அமீரை ஆதரிப்பதில் உறுதியாக நிற்கிறார். “என் உலகமே அந்தக் குழந்தைகள்தான். டான்ஸராவதின் மூலம் என் அம்மாவின் கனவை நிறைவேற்றி விட்டேன். லோக்கல் சானலில் ஆடிக் கொண்டிருந்தவனுக்கு பிக்பாஸ் என்னும் பெரிய மேடை கிடைத்திருக்கிறது. ஆனால் இதைப் பார்க்க என் அம்மா இல்லை” என்கிற உருக்கத்தோடு அமீர் தன் பின்னணியை முடித்துக் கொண்டார். சிபி மற்றும் அக்ஷராவின் குடும்ப உறுப்பினர்கள் வந்த போது ஏக்கத்தோடு அதைப் பார்த்ததாக அமீர் சொன்னபோது அதன் பின்னுள்ள சோகத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

பிக் பாஸ் 81 : ராஜூவின் ரணகளமான ரொமான்ஸ்; அமீரின் கதை; உணர்ச்சிவயப்பட்ட ஹவுஸ்மேட்ஸ்!

அமீர் தன் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது பாவனியின் க்ளோசப் ஷாட்கள் நிறைய வந்தன. பாவனியின் முகத்தில் அத்தனை கனிவு. அமீர் பேசி முடித்த போது ஒவ்வொருவராக வந்து அணைத்துக் கொண்டார்கள். தன்முறை வரும் வரை பொறுமையாக காத்திருந்தார் பாவனி. பிரியங்கா வழக்கம் போல் வெளிப்படையாக கலங்கி அமர்ந்திருக்க, ராஜூ அதிகமாக அப்செட் ஆனது சற்று ஆச்சரியம்தான். அமீரின் பின்னணி அனைவரையும் உலுக்கி விட்டதை நம்மால் உணர முடிந்தது. தாமரையும் பிறகு வந்து அமீரிடம் பிரியம் காட்டிக் கொண்டிருந்தார்.

“நீ செய்யறதையெல்லாம் பார்த்து எனக்கு பிபி ஏறிடுச்சுடா”

பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்த விருந்தினர் வந்தார். அனைவரையும் ‘Freeze’ என்று பிக்பாஸ் சொல்ல நடுத்தர வயதில் ஒருவர் உள்ளே நுழைந்தார். “வெள்ளைதாடி, கண்ணாடி.. யாரு. யாரு?’ என்று பிரியங்கா கிசுகிசுக்க.. அது நிரூப்பின் தந்தை. நிரூப் ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள “நீ இந்த மாதிரில்லாம் கட்டிப்பிடிக்க மாட்டேன்னு நெனச்சேன்” என்று ஆரம்பத்திலேயே சிக்ஸர் அடித்தார் அவர். “சீரியல்ல பார்த்திருக்கேன்.. உங்களைப் பிடிக்கும்” என்று சஞ்சீவிற்கு பாராட்டு கிடைத்தது.

“நாம பொதுவா பெரிசா ஏதோ கிடைச்சாதான் சந்தோஷம் அடையறோம். அதுக்கு அவசியமில்லை. சின்ன பரிசுக்குக்கூட சந்தோஷம் அடையலாம். உங்களுக்கு கேஸ் ஸ்டவ் கிடைச்ச போது துள்ளிக் குதிச்சு சந்தோஷத்தை வெளிப்படுத்தியது நன்றாக இருந்தது” என்று தாமரையைப் பாராட்டினார் நிரூப்பின் தந்தை.

“ஏன் இந்த கொலைவெறி மக்களே?”

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை விளக்கமாக சொல்லியாக வேண்டும். “எங்க வீட்டில் கேஸ் ஸ்டவ் இல்லை” என்று தாமரை அப்போது மகிழ்ச்சியடைந்தையொட்டி, இணையத்தில் சிலர் ஆராய்ச்சி செய்து தாமரையின் அறிமுக வீடியோவின் வழியாக, அவரது வீட்டில் கேஸ் ஸ்டவ் ஏற்கெனவே இருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். மீம் போட்டு கிண்டலடித்தார்கள். ப்பா. என்னவொரு சாதனை?!

நிரூப்
நிரூப்

‘இது போன்ற நவீன வகை ஸ்டவ் என்னிடம் இல்லை’ என்று தாமரை சொல்ல நினைத்திருக்கலாம். அல்லது உற்சாகத்தில் அவர் மாற்றிச் சொன்னதாகவே கூட வைத்துக் கொள்வோம். என்ன இப்போ? அவருடைய பின்னணியை வைத்து இதை பரிவுடன் அணுகலாமே? இது அவர் ஜெயித்துப் பெற்ற பரிசுதானே? ஏதோ மெகா ஊழலை அம்பலப்படுத்தியது போல், பழைய வீடியோவை நோண்டியெடுத்து அதில் அம்புக்குறி போட்டு ‘இவர் செய்தது சரியா?” என்று சென்சிட்டிவ்வான தலைப்பிட்டு.. ஏன் இத்தனை வன்மம்? ஒரு போட்டியாளர் பிடிக்கவில்லையென்றால் அவர் செய்யும் அனைத்தையுமே எதிர்மறையான கோணத்தில் பார்ப்பது ஒருவகையான மனநோய். ஒருவரைப் பாராட்டுவதுதான் இன்றைய தேதியில் மிக அபூர்வமான விஷயமாக இருக்கிறது. திட்டுவதென்றால் ஏறத்தாழ பெரும்பாலான சமூகமே ஒன்றுபட்டு நிற்கிறது.

நிரூப்
நிரூப்

நிரூப்பின் தந்தையை பிக்பாஸ் வரவேற்க, அவர் ஆங்கிலத்திலேயே அதற்கு பதில் சொல்ல ‘தமிழ்.. தமிழ்ல பேசுங்க’ என்று நிரூப் குறுக்கிட்டுச் சொன்னது நல்ல குறும்பு. ‘ரொம்ப வளந்துட்டேடா’ என்று ஆச்சரியப்பட்டார் நிரூப்பின் தந்தை. இதற்கும் மேலா ஒருவர் வளர முடியுமா? பக்கத்தில் பாவனி போன்ற போட்டியாளர்கள் நிற்கும் போதுதான் நிரூப்பின் அசாதாரணமான உயரமும் ஆகிருதியும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. “நீ பண்றதையெல்லாம் பார்த்து எனக்கு பிபி ஏறிடுச்சுடா.. அபிநய் கையைப் பிடிச்சுக்கிட்டு நீ பேசினதெல்லாம் தப்பு” என்று சொந்த மகனையே பொதுவில் விமர்சனம் செய்யும் நேர்மையாளராக நிரூப்பின் தந்தை இருந்தது சிறப்பு.

“யாஷிகா எப்படியிருக்கா?”

பிறகு நிரூப்பை தனியாக சந்தித்த அவர் “நீ பண்றது மக்களுக்குப் பிடிச்சிருக்கு. அப்படியே விளையாடு” என்று உபதேசம் செய்ய “யாஷ்.. எப்படியிருக்கா?” என்று விசாரித்தார் நிரூப். அந்தக் கேள்வியை அவரின் தந்தை விரும்பவில்லையோ என்று தோன்றியது. “நான் டெல்லில இருக்கேன். எனக்கெப்படி தெரியும்?” என்றார். “இங்க உன் கேரக்ட்டர் முக்கியம். எல்லோர் கிட்டயும் ஒரே மாதிரி பழகு” என்று அவர் உபதேசிக்க “அப்படி பழகிட்டா டாஸ்க்ல கறாரா விளையாட முடியாது” என்று காரணம் சொன்னார் நிரூப். “அதெல்லாம் புரியுதுடா.. பிடிச்சவங்க தப்பு பண்ணா மட்டும் சும்மா இருக்கிறது’ன்ற மாதிரி இல்லாம யார் தப்பு பண்ணாலும் கேளு” என்று சரியான திசையில் அறிவுறுத்தினார் தந்தை.

“இங்க என் மகனை மட்டும் பார்க்க வரலை. எல்லோரையும்தான் பார்க்க வந்தேன். பிக்பாஸ் போட்டியாளர்களை ‘ஹவுஸ்மேட்ஸ்’ன்னு சொல்றாங்க. அதனால ஒத்துமையா இருங்க. அதுக்காக சண்டை வராதுன்னு சொல்ல மாட்டேன்” என்று நிரூப்பின் தந்தை ஏதோவொரு நாளைக் குறிப்பிடாமல் மறைத்துச் சொல்ல “அது என்ன தேதி.. நாளு. கிழமைன்னு நாங்க சொல்லட்டுமா?” என்று தெனாவெட்டாக கேட்டார் நிரூப். எது மறைக்கப்படுகிறதோ, அதை கொலைவெறியுடன் தேடி அறிவதே மனித இயல்பு. பிக்பாஸ் போட்டியாளர்கள் நாள், தேதியில் நம்மை விடவும் அப்டேட்டாக இருக்கிறார்கள் போல.

“அழாதே” என்று பிரியங்காவிடமும் “அழ வைக்காதே’ என்று நிரூப்பிடமும் புத்திமதி கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார் நிரூப்பின் தந்தை. “நீதான் வீட்டிலேயே உயரமா?” என்று பிறகு நிரூப்பிடம் விசாரித்தார் அக்ஷரா.

ராஜூ
ராஜூ

ராஜூவின் ரணகளமான ரொமான்ஸ்

“அனைவரும் லூப்” என்கிற உத்தரவை இட்டார் பிக்பாஸ். “என்னடி மாயாவி நீ” பாடல் ஒலிக்க ஆரம்பித்த போதே ராஜூவின் கண்கள் உருள ஆரம்பித்து விட்டன. அவரது மனைவிக்கு புது இடத்தில் நுழைகிற தயக்கமே இல்லை. அவர் பாட்டுக்கு ஐந்து சீசன்களாக கலந்து கொள்ளும் இயல்பில் சரசரவென்று உள்ளே வர, ஓடிச் சென்று அவரை அணைத்து முத்தமழை பொழிந்து விட்டார் ராஜூ. “நாங்க லூப்ல இருந்ததால உங்க ரொமான்ஸை பார்க்க முடியாமப் போச்சு” என்று பிறகு வருத்தப்பட்டார் சஞ்சீவ்.

அனைவரும் இன்னமும் லூப்பில் இருந்ததால், “ஓகே. நாங்க தனியாப் போய்ட்டு வரோம்” என்று ராஜூ சொல்ல, அந்தச் சமயத்தில் ‘எல்லோரும் ரிலீஸ்” என்று சொன்னது பிக்பாஸின் அநியாயமான குறும்பு. ராஜூவின் முகத்தில் வழிந்த அசட்டுத்தனத்தை அனைவரும் கிண்டலடித்தார்கள். “அம்மா வரலையா?” என்று ராஜூ ஏக்கமாக கேட்க “வரலை” என்று அவரது மனைவி திறமையாக நடிக்க “கன்பெஷன் ரூம்ல இருந்து வருவாங்க.. அதானே ஸ்கிரிப்ட்?” என்றார் சிபி. (முன்அனுபவம்!).

ராஜூ
ராஜூ

ராஜூ தன் துணிகளை ஒழுங்காக மடித்து வைத்திருந்ததைப் பாராட்டிய அவரின் மனைவி “அவர் ஹாஸ்டல்ல இருந்ததால சில விஷயங்கள் நல்லாவே வந்துடும். ஆனா..” என்று இழுத்த போதே தெரிந்து போயிற்று. தாமரையும் பாவனியும் எப்போது ராசியானார்கள் என்று தெரியவில்லை. இந்தச் சமயத்தில் பாவனியின் பின்னால் நின்று அவரின் மூக்கை கிள்ளி விளையாடினார் தாமரை. (கமல் சொன்ன மூக்கு ஊறுகாயை டிரை பண்றாரோ?!).

“சரிங்கடா. எங்களைக் கொஞ்சம் தனியா விடுங்கடா” என்று ராஜூ மைண்ட் வாய்ஸில் அலற, “ஓகே.. ஓகே.. புரிஞ்சது” என்றபடி அனைவரும் விலகினார்கள். மறுபடியும் ராஜூ தம்பதியினர் மெல்லிய ரொமான்ஸில் இறங்கியதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இந்தச் சமயத்தில் ராஜுவின் வீட்டம்மணி சொன்ன உபதேசங்கள் முக்கியமானவை. ஒருவன் மனைவியின் பேச்சை தட்டாமல் கேட்டால் நிச்சயம் உருப்பட்டு விடுவான் என்பதற்கான உதாரணக் காட்சியாக இது இருந்தது.

ராஜூ மனைவி தந்த சரியான அட்வைஸ்

“உங்க மீட்டர் சரியாத்தான் போகுது. நல்லா விளையாடறீங்க. அப்படியே கன்டினியூ பண்ணுங்க. எங்களுக்கும் சந்தோஷமா இருக்கு. ஆனா இது ஒரு விளையாட்டு. எல்லோரையும் சக போட்டியாளர்களா பாருங்க. எமோஷனல் கனெக்ட்டை குறைச்சுக்கங்க. முக்கியமா ஒண்ணு சொல்லணும். டாஸ்க்லாம் ஒழுங்கா பண்ணுங்க. உங்க பெஸ்ட்டை கொடுங்க. அரை மனசா பண்ணாதீங்க” என்று அவர் சொன்ன உபதேசம் முக்கியமானது. இதற்கு முன்னதாக “வெளில வந்தா நல்ல வாய்ப்பு வருமா?” என்று ராஜூ ஏக்கமாக கேட்டதற்கு “ஓஹோன்னு வரும்” என்று கமல் மாதிரியே பில்டப் தந்தார் ராஜூவின் மனைவி. அப்படியே அமையட்டும். மனைவியின் அன்பு, உபதேசம் போன்ற காரணங்களால் கலங்கி அழுத போது இன்னொரு ராஜூவை பார்க்க முடிந்தது.

“அண்ணாச்சி என் கிட்ட இன்னமும் பேசலை. ஆனா நீ ஜெயிக்கணும்னு அவர் ரொம்ப விரும்பறாரு.” என்று ராஜூவின் மனைவி சொல்லிக் கொண்டிருக்கும் போது பின்னால் இருந்து பிரியங்கா குறும்பாக ஒட்டுக் கேட்பது போல் பாவனை செய்தார். இந்தச் சமயத்தில் ஸ்டோர் ரூமில் இருந்து ராஜூவின் அம்மா, திடீர் வருகை தந்து ஆச்சரியப்படுத்தினார். “அவனுக்குத் தெரிய வேணாம்” என்று அவர் சைகை செய்த போது ராஜூவின் குறும்புத்தனம் எங்கேயிருந்து வந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

ராஜூ வின் அம்மா
ராஜூ வின் அம்மா

“ஆறுமாச குழந்தையா இருக்கும் போதே காமெடி பண்ணுவான்”

அனைவரும் ராஜூவின் அம்மாவிடம் ஆசி வாங்கினார்கள். ராஜூவிற்கு இது ஆனந்த அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அனைவரும் பில்டப் கொடுக்கும் நோக்கில் செயல்பட்டார்கள். “அங்க பாருடா. ஒரு காக்கா பறக்குது” என்று சிபி மொக்கையாக திசை திருப்ப முயல, “இப்ப என்னடா.. அங்க பார்க்கணுமா?” என்று ராஜூ சொன்ன கமெண்ட் சூப்பர். இப்போது போட்டியாளர்களுடன் கலந்து நின்றிருந்த தன் அம்மாவைப் பார்த்ததும் ஓடிச்சென்று கட்டியணைத்துக் கொண்டு அழுதார் ராஜூ. இது வழக்கமான ரோபோ அல்ல. அசலான ராஜூ.

“அவங்க அப்பா இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்” என்று கலங்கிய ராஜூவின் அம்மா “இவன் ஆறு மாச குழந்தையா இருக்கும் போதே காமெடி பண்ணுவான்” என்று சொன்னது சற்று ஓவர்தான். ஓகே. தாயன்பு அப்படித்தான் இருக்கும். பின்பு அனைவரிடம் கலந்தாடிய அவர் “உண்மையைத்தானே பேசணும்? என் பையன்தான் முதல்ல வரணும்” என்கிற தன் ஆசையை நேர்மையாக வெளிப்படுத்தினார். “யார்லாம் அவன் கூட வருவா?” என்று சந்தடி சாக்கில் நிரூப் ஒரு பிட்டைப் போட “எல்லோருமேத்தாம்ப்பா வரணும்” என்று திறமையாக சமாளித்தார் ராஜூவின் அம்மா.

விடாது பாயச பிரச்சினை

தீபாவளி டாஸ்க்கின் போது ராஜூவின் ஆடையில் கறை ஏற்படுத்திய சம்பவத்தை மெல்லிய சோகத்துடன் பகிர்ந்து கொண்டார்கள். “என் பையனுக்குப் போய் தொடைநடுங்கின்னு பட்டம் கொடுத்திட்டீங்களேப்பா. அவன் அப்படில்லாம் பயப்பட மாட்டான்” என்று தன் மகனுக்காக வக்காலத்து வாங்கினார் ராஜூவின் அம்மா. பின்பு தனிமையில் தன் மகனிடம் பேசிய அவர் “நீ டிவில பேசறதை கேட்கும் போது அப்பாவைப் பார்க்கிற மாதிரியே இருக்குப்பா” என்று நெகிழ்ந்தார். “நீதான் முதல்ல வரணும். அதுதான் அம்மாவிற்குப் பெருமை” என்று உற்சாக டானிக் தந்தார்.

தனக்கு வழங்கப்பட்ட காஃபியை அருந்தி முடித்த ராஜூவின் அம்மா பின்பு “இதை போகும் போது கழுவி வெச்சுடறேன். அவங்கங்க கப்பை அவங்க அவங்கதானே கழுவணும்?” என்று பிரியங்காவைப் பார்த்து குறும்பாக கேட்டது சுவாரஸ்யமான காட்சி. பாயச விவகாரம் பிக்பாஸ் வீட்டை விடவும் வெளியில்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போல. “என்ன இருந்தாலும் நீ பாயசம் கொடுத்திருக்கணும்மா. நம்ம குணத்துல இருந்து மாறக்கூடாதுல்ல?” என்று தாமரைக்கு அவர் அறிவுரை வழங்கிய காட்சி சிறப்பானது மட்டுமல்ல, அவசியமானதும் கூட. “அய்யோ. இந்த அளவுக்கா வெளில கேட்டுது?” என்று வெட்கப்பட்டார் தாமரை.

தாமரை
தாமரை

ராஜூவின் குடும்பம் விடைபெறும் நேரம். “எல்லோரும் ஃப்ரீஸ்” என்று குறும்பு செய்தார் பிக்பாஸ். என்றாலும் மக்கள் அசைந்து கொண்டே இவர்களுக்கு விடை தரவும் “நான் சொன்னதை எந்தக் காலத்துடா நீங்க ஒழுங்கா கேட்டு இருக்கீங்க?” என்று தலையில் அடித்துக் கொண்ட பிக்பாஸ், “போய்த் தொலைங்க” என்று சிக்னல் தரவும் மக்கள் பாய்ந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். ராஜூ தம்பதியினர் பரஸ்பரம் முத்தமழை தந்து கொண்டார்கள். “என் பெயரை ஒருமுறை சொல்லுங்களேன்” என்று ராஜூவின் மனைவி கேட்டது சிறப்பான தருணம். இந்தச் சமயத்தில் “பிக்பாஸ்.. எங்க வீட்டுக்கு வாங்க” என்று அவரை அழைத்து தமிழர் கலாசாரத்தை உலகிற்கு உரக்க எடுத்துரைத்தார் ராஜூவின் அம்மா.

சாக்லெட்டுக்குள் இருக்கும் சோகம்

“ஓகே.. காஃபி கப்புகளை நான் கழுவி வெச்சுடறேன்” என்றபடி வீட்டுக்குள் சென்ற பிரியங்கா, பிறகு தனிமையில் அழுதபடியே சாக்லேட் தின்ற காட்சியை ஒரு காவிய சோக தருணம் எனலாம். சிலர் மனஉளைச்சல் சமயங்களில்தான் அதிக இனிப்பு சாப்பிடுவார்களாம். பிரியங்காவிற்கு தன் குடும்ப நினைவு வந்திருக்க வேண்டும்.

“ஏன் என் அம்மா கிட்ட நீ அதிகம் பேசலை?” என்று பாவனியிடம் ராஜூ பிறகு விசாரிக்க “உன்னை விடவும் நான்தான் நெறைய பேசினேன்” என்று முகத்தில் பெருமை பொங்க சொன்னார் பாவனி. சிறப்பு விருந்தினர்கள் வரும் போதெல்லாம் பாவனி ஓரமாக நின்று மெளனமாக கவனிப்பதே வழக்கம். “ஏம்மா. தள்ளி உக்காந்திருக்கே.. முன்னாடி வந்து உக்காரு” என்று ராஜூவின் அம்மாவும் அழைத்திருந்தார்.

பிறகு பாவனியும் பிரியங்காவும் இணைந்து முகத்தில் சோகம் பொங்க அமர்ந்திருந்த காட்சி முக்கியமானது. “வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும்’ என்பது மாதிரியான பொருள் கொண்ட வரியை பிரியங்கா ஆங்கிலத்தில் பாட “அதெல்லாம் ஒரு காரணமும் இருக்காது” என்கிற விரக்தியுடன் பாவனி சொன்னது நெகிழ வைத்தது. அவர் தனது சமீபத்திய பிளாஷ்பேக்கிற்குள் சென்றிருக்கக்கூடும்.

பிரியங்கா
பிரியங்கா

“ராஜூ அம்மா என் கிட்ட சரியாவே பேசலை. ஒருவேளை நான் ஸ்கூல் டாஸ்க்ல ராஜூவை திட்டின காரணமோ என்னமோ.. சிபி மேல இருந்த கோபத்தை ராஜூ கிட்ட காட்டிட்டேன். சிபியோட அப்பாவை பார்த்த போது என் அப்பா ஞாபகத்திற்கு வந்தார். ஆனா அவர் இப்ப என் கூட இல்லையே?!” என்று சோகத்தோடு தன் பிரச்சினையை தாமரையிடம் பகிர்ந்து கொண்டார் அக்ஷரா.

பிக்பாஸ் போட்டியாளர்களை வெளியில் நின்று ஆயிரம் விமர்சனங்களும் கிண்டல்களும் நாம் செய்திருப்போம். ஆனால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எத்தனை துயரங்களும் சோகங்களும் இருக்கும்… என்பதை சம்பந்தப்பட்ட காட்சிகள் உணர்த்தின.