Published:Updated:

பிக் பாஸ் 82: அமீர் குறித்த கேள்விக்கு பதிலளித்த பாவனி; நிரூப்பைக் காண வந்த யாஷிகா!

பிக் பாஸ் பாவனி

அமீர் விவகாரத்தைப் பாவனி கையாளும் முறை மிக முதிர்ச்சியானதாக இருக்கிறது. வேறு எவராவதாக இருந்தால் ‘எதற்கு வம்பு?” என்று அமீருடனான நட்பை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டிருப்பார்கள்.

பிக் பாஸ் 82: அமீர் குறித்த கேள்விக்கு பதிலளித்த பாவனி; நிரூப்பைக் காண வந்த யாஷிகா!

அமீர் விவகாரத்தைப் பாவனி கையாளும் முறை மிக முதிர்ச்சியானதாக இருக்கிறது. வேறு எவராவதாக இருந்தால் ‘எதற்கு வம்பு?” என்று அமீருடனான நட்பை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டிருப்பார்கள்.

Published:Updated:
பிக் பாஸ் பாவனி

பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள் முன்வைக்கும் துல்லியமான அவதானிப்புகளும் தரும் ஆலோசனைகளும் வியக்க வைக்கின்றன. சராசரி நபர்களே இந்த நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு இணையத்தில் ஆய்வுக்கட்டுரை எழுதும் போது சம்பந்தப்பட்ட உறவினர்கள், மீண்டும் மீண்டும் பார்த்து பல விஷயங்களை குறித்துக்கொள்வார்கள் என்று தோன்றுகிறது.

ஆனால் இதில் ஒரு விஷயம் முக்கியமானது. நமக்கு காட்டப்படுவதென்பது 24 மணி நேரத்தின் மிகச்சுருக்கப்பட்ட ஒரு மணிநேர தொகுப்புதான். நிகழ்ச்சிக்கு எது சுவாரஸ்யமோ, பரபரப்போ அதை மட்டுமே தொகுத்து ‘சமைத்து’ தருவார்கள். ஆகவே நம் மனம் அதில் மட்டுமே ஃபோகஸ் ஆகும். ஆனால் போட்டியாளர்களின் நிலையில் நின்று நோக்கும் போது அவர்கள் தினமும் பல்வேறு விஷயங்களைச் செய்தாலும் ஏன் குறிப்பிட்ட விஷயத்தையே மக்கள் திரும்பத் திரும்ப பேசுகிறார்கள் என்கிற குழப்பம் வரும். நேற்றைய எபிசோடில் அமீர் –பாவனி உரையாடலில் இதைத் தெளிவாக அறிய முடிந்தது. “ஏன் வரவங்க எல்லாம் இதையே பேசறாங்க?” என்று அமீர் சங்கடத்துடன் கேட்க “இதைத்தான் அதிகம் காட்டறாங்களோ.. என்னமோ?” என்று சரியாகச் சொன்னார் பாவனி.

பாவனி - தாமரை
பாவனி - தாமரை

அமீர் விவகாரத்தைப் பாவனி கையாளும் முறை மிக முதிர்ச்சியானதாக இருக்கிறது. வேறு எவராவதாக இருந்தால் ‘எதற்கு வம்பு?” என்று அமீருடனான நட்பை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட பாசாங்கின் மூலம் சமூகத்திற்கு ஆவேசமாக தன்னை நிரூபிக்க முயல்வார்கள். ஏனெனில் மனிதன் அடிப்படையில் ஒரு சமூக விலங்கு. அதனுடன்தான் இணைந்து வாழ்ந்தாக வேண்டும். ஆனால் பாவனியோ, தன் அக்கா வந்து சொல்லி விட்டுப் போன பிறகும் “என் மனசுல ஒண்ணுமில்ல. உன்னை இன்னமும் ஃபிரெண்டாதான் பார்க்கறேன்” என்று இயல்பாக பழக முற்படுவது பாராட்டுக்குரியது. ஓர் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையில் இயல்பான நட்பு இருக்கவே முடியாது என்று எப்படி சமூகம் தீர்மானமாக நம்புகிறது? சரி, அப்படியே அவர்களுக்குள் ‘ஏதாவது’ இருந்து விட்டுத்தான் போகட்டுமே? அதில் தலையிட சமூகத்திற்கு என்ன உரிமை இருக்கிறது?

பல விருந்தினர்கள் வந்தாலும் ஒரு குழந்தை வரும் போதுதான் ஒரு வீட்டின் அழகு வேறு நிறத்தில் மாறி பிரகாசமாகி விடுகிறது. அந்த வகையில் பாவனியின் உறவினர்களுடன் வந்த ஷெனாயாவை பிக்பாஸ் ஆசையாக விசாரித்ததும், அக்ஷரா அந்தச் சிறுமியுடன் கண்ணாமூச்சி ஆடியதும் மிக க்யூட்டான காட்சிகள் எனலாம்.

எபிசோட் 82-ல் என்ன நடந்தது?

யாஷிகாவின் என்ட்ரி. ‘கவர்ச்சியாக நடிப்பவர்’ என்று மட்டுமே இவர் மீதிருந்த பொது அபிப்ராயத்தை பிக்பாஸில் கலந்து கொள்வதன் மூலம் பெரிதும் துடைத்தெறிந்தார். யாஷிகாவிடமிருந்த நல்ல குணங்களும் குறிப்பாக அவரிடமிருந்த தாய்மைப் பண்பும் மிகச் சிறப்பாக அந்த சீசனில் வெளிப்பட்டது. தன் தோழியான ஐஸ்வர்யாவை ஏறத்தாழ மகளாகவே இவர் போஷித்தார். இப்போது யாஷிகா சிகிச்சையிலிருந்து நலமுடன் திரும்பியது குறித்து மகிழ்ச்சி. யாஷிகாவை விசாரித்த பிக்பாஸின் குரலில் கூட கனிவு கூடியிருந்த மாதிரி ஒரு பிரமை.

ஆனால் இங்கு பொதுவாக ஒன்றைச் சொல்ல வேண்டும். குடிவிருந்தில் கலந்துகொள்ளச் செல்பவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை முன்னமே செய்துகொள்ள வேண்டும். தன் உயிருக்கு மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் அப்பாவி உயிர்களின் இழப்பிற்கும் உடல் சேதத்திற்கும் அவர்கள் காரணமாகி விடக்கூடாது. அன்று மட்டுமாவது ஒரு டிரைவரை அமர்த்திக்கொள்ளும் எளிமையான விஷயம் இது.

“இந்த வீடு எனக்கு பழைய நினைவுகளைத் தருது” என்று நெகிழ்ந்தார் யாஷிகா. உண்மையில் நமக்குமே சம்பந்தப்பட்ட சீசனில் யாஷிகா தொடர்பான காட்சிகள் நினைவு வந்திருக்கும். தானே சிகிச்சையில் இருந்து மீண்டிருந்தாலும் போட்டியாளர்களிடம் யாஷிகா உற்சாகமாகவும் நேர்மறைத்தன்மையுடனும் பேசியது சிறப்பானது. “எல்லோரும் சந்தோஷமா இருங்க. மனவலிமை இருந்தால் எதையும் கடந்து விடலாம்” என்றெல்லாம் அவர் சொன்ன உபதேசங்கள் அருமை.

யாஷிகா - நிரூப்
யாஷிகா - நிரூப்

“இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன?”

“உனக்காகத்தான் நான் வந்தேன்” என்று நிரூப்பிடம் யாஷிகா தனிமையில் சொன்னபோது முற்றிலும் புதிதான வேறு ஒரு நிரூப்பைப் பார்க்க முடிந்தது. தனக்குப் பிரியமானவளின் அருகாமையை யாசிக்கும் போதை நிரூப்பின் கண்களில் பெருகி வழிந்தது. இது முன்னாள் காதல் என்கிறார்கள். இந்த விவரம் எனக்குத் தேவையில்லை. ஆனால் “முன்னாள் காதல்’ என்றாலும் கூட தன் இணையின் மீதான அன்பை இன்னமும் தேயாமல் வைத்திருப்பதுதான் உண்மையான காதல். மாறாக வன்மத்தையோ, கோபத்தையோ வளர்த்துக் கொண்டால், அதுவரை செலுத்திய அன்பு என்பது பாசாங்காகவோ, சுயநலமாகவோ அம்பலப்பட்டு விடும். ‘காதலுக்காக காதலையே விட்டுக் கொடு’ என்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன். பிரிந்தாலும் அன்பு செலுத்துவதுதான் காதலின் அடிப்படை இலக்கணம்.

“பாப்பா.. பாப்பா..” என்று யாஷிகாவிடம் உருகிய நிரூப், ‘இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன?” என்று பாடாத குறையாக கெஞ்ச, அனைவருக்கும் முத்தங்களை பறக்க விட்டபடி யாஷிகா விடைபெற்றுச் சென்றார். “இதுவரைக்கும் பாப்பா..ன்ற வார்த்தை உன் கிட்ட வந்துச்சா?” என்று தாமரை செல்லமாக அதட்ட, மக்கள் நிரூப்பை கீழே புரட்டிப் போட்டு ஜாலியாக அடித்ததை கதவு இடைவெளி வழியாக புன்னகையுடன் பார்த்தபடி சென்ற யாஷிகா “முடிவெட்டு” என்கிற உபதேசத்தை அளித்தார். ஆம், நீளமான தலைமுடி அல்லாமல் இயல்பான சிகையலங்காரத்தில் நிரூப் பார்க்க எப்படியிருப்பார்? நமக்கே சற்று ஆவலாகத்தான் இருக்கிறது. ராஜூவின் ரொமான்ஸ், நிரூப்பின் உருக்கம் போன்றவற்றை மனதில் கொண்டு “இந்த வீட்டு பசங்க மனசுக்குள்ளே என்ன இருக்குன்னே தெரியலையே” என்று ஜாலியாக அங்கலாய்த்தார் பிரியங்கா.

ஷெனாயா என்கிற பட்டாம்பூச்சி

நள்ளிரவு 12:00 மணி. வருணின் பிறந்தநாள். மற்றவர்கள்தான் அவருக்கு சர்ப்ரைஸ் தர வேண்டும். ஆனால் அவரே தன் கேக்கை பார்வையிட “நீ ஏண்டா வந்தே?” என்று செல்லமாக கடிந்து கொண்டார் அக்ஷரா. கேக் கொண்டாட்டத்திற்குப் பிறகு வந்த வீடியோவில் வந்த வருணின் உறவினர்களோடு ஐக்கி பெர்ரி, மதுமிதா, அண்ணாச்சி போன்றவர்களும் ஆச்சரியமாகத் தோன்றி வாழ்த்தினார்கள். பிரியங்கா, ராஜூ, சிபி போன்றவர்கள் சாப்பிடும்போது மட்டும் ‘Freeze’ என்ற பிக்பாஸ், நிரூப்பிற்கு மட்டும் ‘லூப்’ என்று குறும்பு செய்ய அது நிரூப்பிற்கு மிக வசதியாகப் போயிற்று. வாய்க்கும் கைக்கும் மின்னல் வேக வேலை தந்தார்.

பாடல் ஒலிக்க, பாவனியின் அம்மா, அக்கா, ஒரு சிறுமி ஆகியோர் உள்ளே வந்தார்கள். டாஸ்க்கில் இருந்த ஒவ்வொருவரையும் தனது குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்திய பாவனி, அமீரை மட்டும் அழுத்திச் சொன்னது போல் தெரிந்தது. ஷெனாயா என்கிற பெயர் கொண்ட சிறுமியை பிக்பாஸ் வரவேற்றது சுவாரஸ்யமான காட்சி. “வா.. நாம கண்ணாமூச்சி விளையாடலாம்” என்று அக்ஷரா அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றதும் பார்க்க க்யூட் ஆக இருந்தது.

முன்னரே குறிப்பிட்டபடி வருகிற விருந்தினர்களின் ஆலோசனைகள் மிகத் துல்லியமாக இருக்கின்றன. அதன்படி பாவனியின் அக்கா சொன்னதும் சூப்பர். “நீ சரியாகத்தான் விளையாடுகிறாய். ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் ஒருவரால் மட்டும் உன் பெயர் தவறாகத் தெரிகிறது. உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்” என்று சூசகமாக சொல்ல, அது அமீரைப் பற்றியது என்பது பாவனிக்கு நன்றாகவே புரிந்தது. “நான் கடுமையாகவே அவனிடம் சொல்லி விட்டேன்” என்கிற விளக்கத்தை அவர் தர “அதெல்லாம் ஓகே. தம்பி என்றுதான் நீ கூப்பிடுகிறாய். ஆனால் அவனால்தான் குறும்பட விவகாரமெல்லாம் கிளம்பியது” என்று அக்கா புகார் சொன்னார். “ஆனால்.. அவனால்தான் அந்த விஷயம் வெளியில் தெளிவானது. அதற்கு அவன்தான் காரணம்” என்று இந்தச் சமயத்தில் நேர்மையாகச் சொன்னார் பாவனி. “அவன் இதை வெச்சு கேம் ஆடறான்னு தோணுது. இதனால் உன் விளையாட்டு பாழாகுது” என்று அக்கா சொல்லிய ஆலோசனை அவரது கோணத்தில் சரியானது.

பாவனி
பாவனி

பாவனி என்கிற பெருந்தன்மையாளர்

அமீருக்கும் பாவனிக்கும் இடையே என்ன உறவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். அதனால் தன் பிம்பத்திலும் விளையாட்டிலும் சேதாரம் ஏற்படும் என்றால் அதைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம். ஆனால் சமூகத்திற்காக தான் நேர்மையாக நம்பும் ஒரு விஷயத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமா என்று பாவனி கருதினால் அந்தக் கோணமும்கூட சரிதான். ஆனால் இதுவொரு விளையாட்டு. வெற்றிதான் இதன் இலக்கு. ஆகவே தற்காலிகமாக சில வழிகளை பின்பற்றுவதில் தவறில்லை.

பாவனியின் அம்மா ஏனோ பேசவில்லை. இவர்கள் வெளியே வந்து மற்ற போட்டியாளர்களுடன் பேசும்போது “ஒரு அக்காவின் இடத்தில் இருந்து பாவனியை பார்த்துக் கொண்டீர்கள். எனக்கே பொறாமையாக இருந்தது” என்று தாமரையை நோக்கிச் சொன்னார் பாவனியின் அக்கா. இதன் மூலம் பாவனிக்கும் தாமரைக்கும் இணக்கம் ஏற்படும் என்பது அவரது நோக்கமாக இருக்கலாம். “கூச்சண்டி.. கூச்சண்டி” என்று இவர்களை உபசரிக்கும் விதமாக நிரூப் தெலுங்கை முயற்சி செய்தது சுவாரஸ்யம்.

ராஜூவின் நகைச்சுவைத் திறமையைப் பாராட்டிய பாவனியின் அக்கா, ‘அமீர் பத்தி ஏதாவது சொல்லுங்களேன்?” என்று யாரோ கேட்ட போது “அவர் ஒரு நல்ல டான்ஸர். அதுக்கு மேல சொல்ல ஒண்ணும் இல்ல” என்ற அக்கா, பின்குறிப்பாக ‘நான் சொல்றது புரியும்னு நெனக்கறேன்” என்று நுட்பமாக தந்த குறிப்பு இருக்கிறதே… ப்பா.. ரத்தக்காயம் வெளியில் தெரியாமல் அடிப்பதில் பெண்கள் எத்தனை வல்லவர்கள் என்பதை வலுவாக உணர்த்திய காட்சி அது. படிக்காதவன் திரைப்பட ரஜினிகாந்த் ‘யெஸ்.. யெஸ்..’ என்று புரியாமல் சொல்வது போல “அண்டர்ஸ்டான்ட்’ என்று சங்கடமாக பதில் சொன்னார் அமீர். தன் மகளுக்கு முத்தம் தந்து விடைபெற்றுச் சென்றார் பாவனியின் அம்மா. ஆனால் ஏன் பேசாமல் ஒதுங்கி இருந்தார். மொழிப் பிரச்சினையா? அல்லது மற்றவர்களுடன் அத்தனை எளிதில் பழகாதவரா?

பாவனியின் குடும்பம் சென்றபிறகு பிரியங்காவிற்கும் பாவனிக்கும் இடையே நடந்த உரையாடல் மிக முக்கியமானது. “அமீர் ஏதோ ஒரு வார்த்தை விட்டிருக்கான் போல. அக்கா சொன்னாங்க.. “பாவனி கிட்ட இருந்து தள்ளி இரு’ன்னு ராஜூ அமீர் கிட்ட சொல்லியிருக்கான். நான் தள்ளித்தான் இருக்கேன்.. ஆனா -ன்னு அமீர் பதில் சொல்லியிருக்கான்” என்பதை பாவனி பகிர்ந்து கொள்ள “அடக்கடவுளே” என்றார் பிரியங்கா. “எனக்கு இவ்வளவு விஷயம் நடந்த அப்புறம் எப்படி லவ் எல்லாம் வரும்? யாராவது அப்படி சொன்னா ‘சரிப்பா.. தம்பி’ன்னு சிரிச்சிட்டே போயிட வேண்டியதுதான்” என்று பாவனி சொன்னது முக்கியமான ஸ்டேட்மென்ட். அவரது மனநிலை இந்த உரையாடலில் கச்சிதமாக வெளிப்பட்டு விட்டது.

அமீர் –பாவனி டூயட் – ஏன் இந்த கொலைவெறி?

அமீரையும் பாவனியையும் வைத்து டூயட் பாடலை இயக்க வேண்டுமென்று அடம்பிடித்தார் அறிமுக இயக்குநர் தாமரை. ராஜூ இதற்கு கேமராமேன். இவர்களின் விவகாரத்தை ஒருபக்கம் வம்பு பேசிக் கொண்டே, இன்னொரு பக்கம் இதை ஊதிப்பெருக்கும் வேலையை விளையாட்டாக செய்வது நெருடலாக இருக்கிறது. முதல் சீசனில் ஆரவ் – ஓவியாவிற்கு இடையேயான காதலை உசுப்பேற்றி விட்டதில் சக போட்டியாளர்களின் பங்கும் சிறிது இருக்கிறது. அதை அவர்கள் விளையாட்டாகத்தான் செய்கிறார்கள். என்றாலும் சில விளையாட்டுக்கள் வினையாகி விடுகின்றன.

இந்தப் படப்பிடிப்பின் இடையே தன் காதலை மீண்டும் அமீர் சொன்னார். இதுவும் கூட நெருடல்தான். தங்களின் விவகாரம் வெளியே எப்படி பேசப்படுகிறதோ என்கிற கவலையைக் கொண்டிருக்கிற அமீர், இன்னொருபக்கம் இப்படி ரொமான்ஸாக விளையாடுவதும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் இந்தச் சமயத்தில் சிரிப்புடனும் சங்கடத்துடனும் அதே சமயத்தில் மிக உறுதியாக தன் பதிலை பாவனி சொல்லிய விதம் சிறப்பு.

“நம்ம குடும்பத்தோட பேரைக் காப்பாத்திட்டே”

அனைவரையும் பிக்பாஸ் ‘Freeze’ என்றார். எனில் யாரோ ஒருவரின் குடும்பத்தினர் வரப் போகிறார்கள் என்பது தெரிந்தது. யார் வந்தாலும் அழுகையுடன் வார்ம்அப் ஆகிவிடுகிறார் பிரியங்கா. அது தனது அம்மாவாக இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்போ, என்னமோ. ஆனால் வந்தது வருணின் குடும்பத்தினர். வருணின் அம்மா மற்றும் அண்ணன் ஆகிய இருவரும் வந்தார்கள். “என்னை ரொம்ப பெருமைப்படுத்திட்டே.. நம்ம குடும்பத்தோட பேரைக் காப்பாத்திட்டே” என்று தன் மகனை உச்சி முகர்ந்தார் வருணின் அம்மா. (ஆக்சுவலி.. இந்தச் சம்பவம் எல்லாம் எப்போது நடந்தது?!). தன் மகன் காதல் விவகாரத்தில் ஏதும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதைத்தான் இப்படிச் சொல்கிறாரா?

வருண்
வருண்

“உங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற ஃப்ரெண்ட்ஷிப் உண்மையானது” என்று அக்ஷராவைப் பாராட்டினார் வருணின் அம்மா. “தாமரையும் அக்ஷராவும்தான் என்னைப் பார்த்துக்கறாங்க” என்று இந்தச் சமயத்தில் சொல்லி மகிழ்ந்தார் வருண். “இந்த சீசனின் சிறந்த கண்டுபிடிப்பு தாமரை” என்று வருணின் சகோதரர் சொன்னது உண்மையே. “வேற லெவல்” என்று தாமரையை அனைவரும் கலாய்த்தார்கள். “லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கீங்க. பாயிண்ட் எல்லாம் ரொம்ப சரியா சொல்றீங்க. நீங்க முதல் நாளே வந்திருக்கலாம்னு தோணுது” என்கிற பாராட்டு சஞ்சீவிற்கு கிடைத்தது. அது மிகப்பொருத்தமான பாராட்டுதான்.

‘கலகலப்பிற்கு பிரியங்காவும் ராஜூவும் உத்தரவாதம்” என்று பாராட்டிய வருணின் சகோதரர் ‘அரசியல் டாஸ்க்கில் பிரியங்காவைத் தள்ளி விட்டது அபிநய்தான்’ என்கிற உண்மையை சபையில் போட்டு உடைக்க, வருண் இதற்கு ஜாலியாக பிரியங்காவை கோபித்துக் கொண்டது சுவாரஸ்யம். பிறகு மகனை தனியாக சந்தித்த அம்மா “டாஸ்க் எல்லாம் நல்லா பண்றே.. ஒரு பிரச்சினைன்னு வந்தா குரல் தர்றே..” என்று பாராட்ட “அக்ஷராவையும் ராஜூவையும் சேர்த்து வெச்ச காட்சி மாஸா இருந்தது’ என்று குதூகலமடைந்தார் அண்ணன்.

“என்னாலதான் உன் பெயர் கெடுதோ?”

வருணின் குடும்பம் விடைபெற்றுச் சென்றதும் அமீரும் பாவனியும் பேசிக் கொண்டார்கள். “என்னால உன் பெயர் கெடுதோன்னு தோணுது. வர்றவங்க எல்லாம் இந்த டாப்பிக் மட்டுமே பேசறாங்க” என்று அமீர் கவலைப்பட “என்னைப் பத்தி எனக்குத் தெரியும். அதுக்காக உன் கிட்ட கோச்சுக்கற மாதிரி நடிக்கற முடியுமா?” என்பது போல் பாவனி சொன்ன பதில் அவரின் மனமுதிர்ச்சியைக் காட்டுகிறது.

உடல்நலம் சரியில்லாததால் அமீர் தூங்குவதற்கு தலைவர் தாமரை அனுமதித்தார். (பதவி கிட்டியதும் அமீரால்தானே?!). ஆனால் ராஜூவும் இணைந்து தூங்கியதைக் கண்டு தாமரை நச்சரித்து எழுப்ப முயல, ஒரு கட்டம் வரை சமாளித்த ராஜூ பிறகு ‘எரிச்சல் படுத்தாதே’ என்று தன்னுடைய மெல்லிய கோபத்தைக் காட்டினார். ஒரு தலைவர் என்கிற முறையில் தாமரை தன் பணியைத்தான் செய்கிறார். ஆனால் தாமரை என்பதாலேயே அவரை இடதுகையால் மக்கள் கையாள்கிறார்களோ, என்னமோ. ஆனால் மனிதர்களை கையாள்வதும் ஒரு கலை. “நீ பண்றது ரொம்ப நச்சு.. நச்சு –ன்னு இருக்குக்கா” என்று வருண் சொன்ன பாயிண்ட் கவனிக்கத்தக்கது. ராஜூவும் சிபியும் தன் பேச்சைக் கேட்காததால் அப்செட்டில் இருந்த தாமரையை காமெடி செய்து சிபி கூல் செய்த காட்சி சுவாரஸ்யம்.

“அக்கா.. ரொம்ப சத்தம் போடாதீங்க. தலைவலிக்குது” என்று சந்தடி சாக்கில் அக்ஷரா சொன்னதுதான் சுவாரஸ்யம். அந்த வீட்டின் மைக்குகளை விசாரித்தால் பிரியங்கா பற்றியும் அக்ஷரா பற்றியும் பல வேதனைக் கதைகளைச் சொல்லும்.

பிரியங்கா
பிரியங்கா

பிரியங்காவிற்குள் இருக்கும் எல்கேஜி குழந்தை

தாமரையை இன்னமும் வெறுப்பேற்றும் விதமாக “அனைவரும் Sleep Mode-க்கிற்கு செல்லுங்கள்” என்று அறிவித்தார் பிக்பாஸ். ‘அடடே.. இது வசதியா இருக்கிறதே?” என்று மக்கள் உற்சாகமாக தூங்க ஆரம்பிக்க, யாரோ உள்ளே வருவதற்கான அறிகுறி தெரிந்தது. பிரியங்கா மறுபடியும் அழுகையைத் துவக்கி வார்ம்-அப்பில் ஈடுபட்டார். இந்த முறை வந்தது பிரியங்காவின் அம்மாவேதான்.

தாய்ப்பசுவைக் கண்ட கன்றுக்குட்டி மாதிரி ‘ம்மா.. ம்மா..’என்று அலறியடித்து ஓடி அக்ஷராவையும் அசால்ட்டாக அவுட் செய்தார் பிரியங்கா. ஆனால் இவரையும் மிஞ்சி விடும் அளவில் பிரியங்காவின் அம்மாவும் பதிலுக்கு ஓடி வந்ததுதான் ஹைலைட். ‘கடவுளே.. இவங்களை வெச்சிக்கிட்டு’ என்பது மாதிரி சங்கடமாகப் பார்த்தார் பிரியங்காவின் தம்பி. பிரியங்காவிற்குள் ஒரு எல்கேஜி பாப்பா நிரந்தரமாக இருப்பதை பல சமயங்களில் உணர முடிகிறது. அதுவே அவரது பலம் மற்றும் பலவீனம். உரக்க அழுது கதறி விட்டு அடுத்த கணமே கலகலவென்று சிரித்த பிரியங்காவைப் பார்த்த போது நமக்கே சற்று திகிலாகத்தான் இருந்தது. (அந்நியன் விக்ரம் எல்லாம் நினைவிற்கு வந்து போனார்). “இத்தனை நாள் அவ தனியா இருந்ததில்லை” என்று மற்றவர்களிடம் சமாதானம் சொன்னார் பிரியங்காவின் அம்மா. பிறகு பிரியங்காவின் அம்மாவின் மடியில் ஏறி அமர்ந்து கொள்ள “உன்னோட வெயிட் ஞாபகமிருக்கட்டும்”என்று அவர் சொன்னது சுவாரஸ்யமான கமெணட்.

``என்ன இருந்தாலும் நான்தான் உன் தம்பி”

“இந்த சீசன்தான் இருக்கறதுலயே பெஸ்ட். சண்டை போட்டுக்கறீங்க.. ஆனா அந்தப் பகையை மனசுக்குள்ளே வெச்சுக்காம உடனே தீர்த்துக்கறீங்க” என்று பாராட்டினார் பிரியங்காவின் தம்பி. பிறகு தனிமையில் அவர் அக்காவுடன் போட்ட செல்லமான சண்டை சுவாரஸ்யமானது. “என்ன இருந்தாலும் நான்தான் உன் தம்பி. நிரூப் ஒரு சக போட்டியாளர்தான்” என்று பொசசிவ்னஸைக் காட்ட “அவன் என் பிரெண்டுடா” என்று விட்டுத்தராமல் பேசினார் பிரியங்கா. பிரியங்காவின் தம்பி, ஒவ்வொரு போட்டியாளரையும் மதிப்பிட்டு சொன்ன கமெண்ட்கள் சுவாரஸ்யமானவை. இவர் ராஜூவின் நகைச்சுவைக்கு பரம ரசிகராம்.

பிரியங்காவின் அம்மா, தாமரையைப் பற்றி ஆங்கிலத்தில் எதையோ சொல்ல “அவளுக்குப் புரியாதும்மா.. தமிழ்ல சொல்லு” என்று பிரியங்கா குறுக்கிட “அதெல்லாம் புரியும்.. ஏன் புரியாது” என்று அம்மா சொன்னது நல்ல கமெண்ட். யாருக்குத் தெரியும்? விரைவில் தாமரை ஆங்கிலத்தில் பேசினாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவரது வளர்ச்சியின் வேகம் அந்த அளவில் இருக்கிறது. விருந்தினர்களின் வருகையால் தாமரையும் பாவனியும் இணக்கமாகி விட்டது நல்ல விஷயம்.

பிரியங்கா
பிரியங்கா

“எல்லோருமே நல்லா விளையாடுங்க. யாராவது முதல்ல போறா மாதிரி இருந்தா.. அதுக்காக மனம் சோர்ந்துடாதீங்க” என்கிற பொருள் வரும்படி பிரியங்காவின் தம்பி விடைபெறும் போது சொன்ன ஆலோசனை முக்கியமானது. அம்மா வரும் போது பிரியங்கா அலறியடித்துக் கொண்டு ஓடிய காட்சியை பாவனி கிண்டலடிக்க அதை பிரியங்கா இயல்பாக எடுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், “எங்க அம்மாவும் எப்படி வந்தா பார்த்தியா?” என்று கிண்டலில் சேர்ந்து கொண்டது சுவாரஸ்யம். இதையே பாவனி அக்ஷராவிடம் சொல்லியிருந்தால் ஒரு பிரளயமே நடந்திருக்கும்.