Published:Updated:

பிக் பாஸ் 83 : அமீரிடம் பாவனி வைத்த கோரிக்கை; விஜயிடமிருந்து சஞ்சீவுக்கு வந்த வாழ்த்து!

பாவனி

“விஜய் உட்பட நண்பர்கள் அனைவரும் உங்கள் வெற்றிக்காக வாழ்த்தினார்கள்” என்று மனைவி சொல்ல ‘விஜய்யுமா..’ என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார் சஞ்சீவ்.

பிக் பாஸ் 83 : அமீரிடம் பாவனி வைத்த கோரிக்கை; விஜயிடமிருந்து சஞ்சீவுக்கு வந்த வாழ்த்து!

“விஜய் உட்பட நண்பர்கள் அனைவரும் உங்கள் வெற்றிக்காக வாழ்த்தினார்கள்” என்று மனைவி சொல்ல ‘விஜய்யுமா..’ என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார் சஞ்சீவ்.

Published:Updated:
பாவனி

மற்ற போட்டியாளர்களின் குடும்ப உறவினர்கள் வந்து சென்று விட்டார்கள். ஆனால் அமீரின் குடும்பம் இன்னமும் வராதது, அவரைப் போலவே நமக்கும் சோகத்தை ஏற்படுத்துகிறது. அடுத்த எபிசோடில் நிச்சயம் அது நடக்கும் என்று நம்புவோமாக!. சுற்றத்தாரின் எதிர்ப்பையும் மீறி, இன்னொரு மதத்தைச் சேர்ந்த ஓர் இளைஞனை, தங்களின் பிள்ளையாக ஏற்று அரவணைப்பதற்கு பெரிய மனது வேண்டும். அந்த பெரிய மனதுக்காரரின் குடும்பத்தை நாம் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும். இவர்களைப் போன்றவர்களால்தான் பூமி இன்னமும் சுற்றிக் கொண்டிருக்கிறது.

தாமரையும் சஞ்சீவும் தங்களின் பிள்ளைகளைக் கண்ட காட்சி நெகிழ்வு. அதிலும் தாமரையின் எபிசோடில் கூடுதல் நெகிழ்வு. கையில் மல்லிகைப் பூவுடன் சிறுவன் வந்த காட்சியும், “எவ்ள நாளாச்சு.. பூவை தலையில வெச்சு விடுங்க மாமா” என்று தாமரை தன் கணவரிடம் ரொமான்ஸ் மோடிற்கு மாறியதும் அசலான தமிழ் கலாசாரத்தின் பிரதிபலிப்பு. நீண்ட நாட்கள் கழித்து தன் பிறந்த வீட்டிற்குச் செல்லும் போதும், அவர்களின் பக்க உறவினர் திருமணங்களுக்குச் செல்லும் போதும், பெண்கள் இன்னொரு மாதிரியான படு உற்சாக ஆசாமியாக மாறி விடுவதை ஆண்கள் கவனித்திருக்கலாம். அப்படியொரு மனநிலைக்கு தாமரை நேற்று மாறி விட்டார். ‘அவுஹ வந்திருக்காஹ’ என்கிற பூரிப்பு அவரது முகமெங்கும் தெரிந்தது.

‘குத்தினா கத்துவேன்.. கத்தினா குத்துவேன்’ என்கிற விநோதமான காம்பினேஷனில் அமீர் – பாவனி விவகாரம் சென்று கொண்டிருக்கிறது. பாவனி தன் நிலைப்பாட்டில் தெளிவாகவே இருக்கிறார். ஆனால் அமீர்தான் இன்னமும் தடுமாறி சொதப்புகிறார்.

எபிசோட் 83-ல் என்ன நடந்தது?

அமீர் – பாவனி உரையாடலோடு நிகழ்ச்சி தொடங்கியது. பாவனி பொதுவாகவே ரகசிய வாய்ஸில்தான் பேசுவார். இதில் ரகசியம் வேறு பேசும்போது ஸ்பீக்கரின் வால்யூமை கன்னாபின்னாவென்று உயர்த்த வேண்டியிருக்கிறது. “நீ பண்றதெல்லாம் சீரியஸா பண்றியா?” என்று பாவனி கேட்க “நான் உன்னை ஏதாவது கட்டாயப்படுத்தினேனா... தொந்தரவு செய்தேனா... நீதான் சீரியஸா எடுத்துக்கறே. நேத்து நீ திட்டற மாதிரி இருந்தது” என்றார் அமீர். “ஸாரிடா… நான் சிரிச்சிக்கிட்டேதானே சொன்னேன்?” என்று மன்னிப்பு கோரினார் பாவனி.

அன்பு என்கிற பெயரில் இம்சை

இந்த Flirting நாடகத்தை அமீர் தனிவெளியில் நடத்தினால் அது இருவருக்குள்ளும் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய விஷயம். ஆனால் பல லட்சம் கண்கள் கவனிக்கும் தொலைக்காட்சியில் நிகழ்த்தும்போது அதனால் ஒரு பெண்ணின் ஒழுக்கம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்னும்போது அவர் நிறுத்திக்கொள்வதுதான் நல்லது. ஒருவரின் மீது உண்மையான அன்பு வைத்திருக்கிறோம் என்றால் அவருக்கு துளியும் தீங்கு நேராமல் பார்த்துக்கொள்வதுதான் அந்த அன்பின் அடையாளம். அன்பு என்கிற பெயரில் தொந்தரவு செய்வதற்குப் பெயர் இம்சை. டாஸ்க்குகளைத் தாண்டி இந்த காதல் நாடகம்தான் தனக்கு பிக்பாஸ் மைலேஜைத் தரும் என்று அமீர் நம்புகிறாரா என்று தெரியவில்லை.

அடுத்த நாள். ‘என்ன ஆடை உடுத்தலாம்?’ என்று பாவனி யோசனை செய்து கொண்டிருக்க ‘சேலை கட்டினா நல்லாயிருக்கும்’ என்கிறார் அமீர். முதலில் காதலை கெஞ்சியும் கொஞ்சியும் பெறும் இளைஞர்கள், பிறகு மெல்ல மெல்ல மிஞ்ச ஆரம்பிப்பது இப்படித்தான். பின்குறிப்பாக “நான் உன்னைக் கட்டாயப்படுத்தலை” என்கிறார் அமீர். இவருடைய குடும்பம் வரலாம் என்பதால் “பார்த்து டிரெஸ் பண்ணிக்க” என்கிறார். ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? என்றாலும் பாவனியின் ஆடை அன்று ஸ்பெஷலாகத்தான் இருந்தது.

தாமரை
தாமரை

மேகவர்ஷன் என்கிற உற்சாகப் புயல்

“ராசாவே.. உன்னை நம்பி.. இந்த தாமரை பூவு நிக்குதுங்க’’ என்கிற பாடலை தாமரை உருக்கமாகப் பாடிக் கொண்டிருக்க ராஜூவும் சஞ்சீவும் உற்சாகமாக தாளம் போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘எல்லோரும் Freeze’ என்றார் பிக்பாஸ். யாரோ வருவதற்கான சமிக்ஞை அது. பிரியங்காவின் குடும்பம் வந்து போன பிறகும் அவர் அழுவதற்கு வார்ம்-அப் ஆகிக் கொண்டிருந்தார். தாமரையின் முகத்திலும் உடலிலும் பரிதவிப்பு ஏற்பட்டது. வீடெங்கும் சுற்றி அலைமோதிக் கொண்டிருந்தார்.

“அம்மா...” என்று உற்சாகமாக கத்தியபடி ஒரு சிறுவன் உள்ளே வந்தான். “என் சாமி…” என்று கிராமத்து பாணியில் அலறியபடி தாமரை ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டது சுவாரஸ்யமான காட்சி. “அண்ணன் வரலை... எக்ஸாம் இருக்கு” என்று சொன்ன சிறுவன், “அப்பாவும் வரலை. ஊர்ல இருக்காரு” என்று பொய் சொல்ல வராமல் சிரித்து மழுப்பியது க்யூட்டான காட்சி. குழந்தைகளுக்கு பொய் சொல்ல வராது என்பதற்கான உதாரணம் இது. ஒவ்வொரு போட்டியாளரையும் தாமரையின் மகன் சரியாக அடையாளம் கண்டு அவரவர்களின் பெயர்களைச் சொன்னது ஆச்சரியம். ‘மாமா’ன்னு சேர்த்து சொல்லணும்’ என்று தாமரை திருத்தியது சூப்பர்.

அத்தனை அறிமுகமில்லாதவர்கள் என்றால்கூட மாமா, அத்தை என்று உறவுமுறையோடு அழைப்பது ஒரு நல்ல கலாசாரம். தாமரையின் பையன் உற்சாகப் புயல் போல வீடெங்கும் அலைந்தான். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டான். காமிராவை பிடுங்க வந்தான். கிறிஸ்துமஸ் அலங்காரங்களைக் கலைத்துப் போட்டான். துறுதுறுவென்று இருக்கும் பிள்ளைகள் செய்யும் வழக்கமான விஷயங்கள்தான் இவை. அதிலும் ஆண்பிள்ளைகள் கூடுதல் சேட்டைகள் செய்வார்கள். ஆனால் –

தாமரை
தாமரை

“நான் வளர்கிறேனே மம்மி”….

இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைப் பேசியாக வேண்டும். இது போன்ற குறும்புகளை ஓரெல்லை வரைக்கும்தான் பெரியவர்களால் ரசிக்க முடியும். எல்லை மீறினால் பதைபதைப்பாகி விடும். வீட்டிற்கு வரும் உறவினரின் பிள்ளை, எந்த நேரத்தில் எந்தப் பொருளை உடைப்பானோ என்கிற திகிலுடன் இருப்பவர்களின் பாடு திண்டாட்டம்தான். வெளியில் சிரிப்பது போல் இருந்தாலும் உள்ளுக்குள் அந்தக் குழந்தையை அவர்கள் மெலிதாக வெறுக்கவே செய்வார்கள். கடுகடு ஆசாமியாக இருந்தால் வாய் விட்டு மிரட்டவே செய்து விடுவார்.

இந்த விஷயத்தில் குழந்தைகளின் மீது தவறில்லை. இளமையில் அவர்களது உடலில் ஊறும் மிதமிஞ்சிய சக்தியை அவர்கள் செலவழித்தாக வேண்டும். ஓடி விளையாடும் ஆட்டங்களோ, மைதானங்களோ ஏறத்தாழ அற்றுப் போன நிலையில் அவர்கள் தங்கள் உடல்சக்தியை செலவழிப்பதற்கு களமோ, வழியோ இல்லை. இதுவே வீட்டின் உள்ளே குறும்புகளாகவும் சேட்டைகளாகவும் வெளிப்படுகிறது. இந்தச் சக்தியை சரியான திசையில் திசைதிருப்பி வழிகாட்டுவது பெரியவர்களின் கடமை. “எவ்ள அழகா டெக்கரேட் பண்ணியிருக்காங்க.. பார்த்தியா. அதை ரசிக்கலாமே.. தவிர.. உடைக்கலாமா?” என்று நிதானமாக கற்றுத் தந்தால் பிள்ளைகள் புரிந்து கொள்வார்கள்.

பஞ்சினால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மையின் மூக்கை தாமரையின் மகன் சேதப்படுத்த, “சூப்பர்டா.. எல்லாத்தையும் பிச்சிப் போடுடா” என்று பிரியங்கா உற்சாகமூட்டினார். ஆனால் பின்னர் பிரியங்காவையே குறும்பாக அடிக்க வந்தான் அவன். மேகவர்ஷனின் குறும்புகளைக் கண்டு பிக்பாஸே அலறி “நீ நல்ல பையன்ல. பொருட்களை உடைக்காம பாரு ராஜா” என்று கெஞ்ச வேண்டியிருந்தது. ‘நான் போ மாட்டேன்..” என்று துவக்க நாளில் தாமரை அடம் பிடித்த காட்சியை மகன் கிண்டலடித்துக் காட்டினான். போட்டியாளர்களில் ‘சிபி மாமா’வைத்தான் இவனுக்கு அதிகம் பிடிக்குமாம். (பார்றா!.. சிபிக்கு வந்த சாதனை!).

“அவுஹ வந்திருக்காஹ”

“எங்க அம்மா பேசும்போது நீங்க ஏன் ஊடால வர்றீங்க?” என்று பிரியங்காவிடம் அவன் மல்லுக்கட்டிய காட்சி சுவாரஸ்யம். “அம்மாவுக்கு சண்டையே போடத் தெரியாது.. இல்லப்பா…” என்று தாமரையும் முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு சொன்ன போது பல வீடுகளில் டிவி பெட்டியே அதிர்ச்சியாகியிருக்கும். ‘உனக்காக பொறந்தேனே எனதழகா’ என்கிற அருமையான மெல்லிசைப்பாடல் பின்னணியில் ஒலித்த போதே தெரிந்து போயிற்று. தாமரையின் ‘வூட்டுக்கார்’ வாராஹ’ என்று. வேண்டுமென்றே நீண்ட நேரம் தாமதித்து பிக்பாஸ் வரவழைத்தார் போலிருக்கிறது.

ஸ்மார்ட்டான தோற்றத்தில் இருந்த தாமரையின் கணவர், ஒவ்வொருவரின் கைகளையும் தயக்கத்துடன் பற்றினார். Hugging கலாசாரத்திற்கு இன்னமும் பழகாத மனிதர். பிக்பாஸ் வீட்டில் இரண்டு நாட்கள் இருந்தாலும் அவரும் அதற்கு மாறி விடுவார் போலிருக்கிறது. “எல்லோருக்கும் நன்றி. உங்களாலதான் அவ இத்தனை நாள் இங்க இருந்தா. ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து கத்துக் கொடுத்திருக்கீங்க” என்று அவர் சொன்னது நன்று. கற்றுக் கொடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும் குறுகிய நேரத்தில் சாமர்த்தியமாக கற்றுக் கொள்வதற்கும் ஒரு திறமை வேண்டுமல்லவா?

பிக் பாஸ் தாமரை - அவரின் கணவர்
பிக் பாஸ் தாமரை - அவரின் கணவர்

“என்ன குண்டாயிட்டே?” என்று ஒருமையில் தன் கணவரை தாமரை அழைத்தது சுவாரஸ்யம். “நம்ம ஊர்ல மட்டும் இல்ல.. யூட்யூப்ல கூட நீ பிரபலம்” என்று கணவர் சொன்னதும் “அப்படியா?” என்று மகிழ்ந்த தாமரை “பிக்பாஸ் மகராசனுக்கு குடும்பத்தோட நன்றி சொல்லணும்” என்று நெகிழ்ந்தார். தாமரையின் முகத்தில் மகிழ்ச்சியும் பரவசமும் அப்பட்டமாகத் தாண்டவம் ஆடியது. ‘அவுஹ வந்திருக்காஹ’ என்கிற உணர்வு ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.

“இந்தப் பிரியங்காதான் என்னை அப்பப்ப மண்டைல சூடு ஏத்தி விட்டுடுவா” என்று தாமரை செல்லமாக புகார் சொல்ல “பாவனி கிட்ட நீ நடந்துக்கிட்ட முறை சரியில்லை” என்று சரியான முறையில் கடிந்து கொண்டார் தாமரையின் கணவர். பாயச பிரச்சினை ஐ.நா சபை வரைக்கும் சென்றிருக்கும் போல. “அவரு சாஸ்தி பேச மாட்டாரு. என் கிட்ட மட்டும்தான் பேசுவார்” என்று தாமரை பெருமையடித்துக் கொண்டிருந்ததோடு இவர்களின் நேரம் முடிந்தது. படுக்கையின் இடுக்கில் ஒளிந்து கொண்டு அக்ஷராவைப் பயமுறுத்திய தாமரையின் மகனோடு இருவரும் விடைபெற்றுக் கொண்டார்கள்.

கலக்கத்திலும் தடுமாறாத கடமை வீரர் சஞ்சீவ்

அனைவரையும் உறக்க மோடிற்கு பிக்பாஸ் செல்ல வைத்தார். எனில் அடுத்த விருந்தினர்கள் வருகிறார்கள் என்பதற்கான அடையாளம் அது. பிரியங்கா வழக்கம் போல் அழுகையின் வார்ம்-அப் மோடிற்கு செல்ல தயாரானார். சஞ்சீவிற்கு தன் குடும்பம்தான் வரப்போகிறது என்று தெரிந்து போயிற்று.

சஞ்சீவின் க்யூட்டான மகளும் மகனும் வந்து அவரை அணைத்துக் கொண்டார்கள். ஆனால் கடமை வீரரரான சஞ்சீவ் அப்போதும் டாஸ்க்கில் இருந்து அசையாமல் கண்ணீர் சிந்தினார். இதற்காக நிச்சயம் கமலிடம் இருந்து ஒரு பாராட்டு கிடைக்கும். மற்ற எவருமே இந்த அளவிற்கு கட்டுப்பாட்டுடன் இல்லை. பின்னாலேயே சஞ்சீவின் மனைவியும் வந்தார். “ஆசைப்பட்ட மாதிரி பிக்பாஸ் வீட்டை பார்த்துட்ட இல்ல” என்று தன் மகளை சஞ்சீவ் உச்சி முகர்ந்த விஷயம் சிறப்பு. ராஜூவிற்கும் இந்தச் சமயத்தில் ஒரு சிறப்பு நன்றியைச் சொல்ல வேண்டும்.

“நாம ரெண்டு பேரும் ஒரே கட்சி. டான்ஸர்ஸ். நான் பரதநாட்டியம்” என்று அமீரை ஸ்பெஷலாக விசாரித்தார் சஞ்சீவின் மனைவி. அமீரின் வீடியோவைப் பார்த்த பிறகு பல பேரின் பார்வை மாறியிருக்கும். அதன் பிரதிபலிப்புதான் இந்த ஸ்பெஷல் விசாரணை என்று தோன்றுகிறது.

வீட்டிற்குள் குழந்தைகள் வந்தால் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை பிரியங்காவும் அக்ஷராவும் தன்னிச்சையாக ஏற்றுக் கொள்கிறார்கள். மனதிற்கு உள்ளேயும் ஒரு குழந்தை இருந்தால்தான் இது சாத்தியம். பெரியவர்கள் குழந்தைகளுடன் சட்டென்று இணக்கமாவது ஒரு கலை. அவர்களின் மொழிக்கு உடனே மாறிப் பழகு வேண்டும். சுடுமூஞ்சி ஆசாமிகளுக்கு இது சுட்டுப் போட்டாலும் வராது.

“எங்க அம்மா.. அக்கா.. பூக்காரஅம்மா.. எல்லோருமே உன்னை விசாரிக்கச் சொன்னாங்க” என்று சஞ்சீவின் மனைவி சொன்னபோது தாமரையின் முகத்தில் அப்படியொரு பெருமிதம். “நாமினேஷன் காரணத்தை இருவரும் ஒரே மாதிரி சொன்னீங்க. நல்ல sync-ல இருக்கீங்க” என்று ராஜூவையும் பாராட்டினார். பிறகு தன் கணவரை தனிமையில் சந்தித்தவர் ‘எல்லோரையும் சமமா பார்க்கறீங்க.. ரொம்ப நேர்மையா உங்க கருத்துக்களைச் சொல்றீங்க. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால்தான் உங்களை யாரும் நாமினேட் பண்ண மாட்டேங்கறாங்க” என்று பாராட்ட ‘இந்த வாரம் பண்ணிடுவாங்க’ என்று டைமிங்கில் பின்னினார் சஞ்சீவ். இவர்களின் பிள்ளைகள் எதையும் கலைத்துப் போடாமல் சமர்த்தாக இருந்தது சிறப்பு.

சஞ்சீவ் அவரின் மன
சஞ்சீவ் அவரின் மன

ராஜூவிற்கு கிடைத்த அதிர்ஷ்ட தாயத்து

“விஜய் உட்பட நண்பர்கள் அனைவரும் உங்கள் வெற்றிக்காக வாழ்த்தினார்கள்” என்று மனைவி சொல்ல ‘விஜய்யுமா..’ என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார் சஞ்சீவ். தங்களின் உறவுகளைக் கண்டு சஞ்சீவ் தொடர்ந்து கண்கலங்க “இன்னொரு முறை நீங்க அழுதீங்கன்னா.. நானும் அழுவேன்” என்று செல்லமாக மிரட்டி தந்தையை அடக்கி வைத்தார் சஞ்சீவின் மகள். “நான் பரவாயில்லை. மத்தவங்கள்லாம் எண்பது நாள் எப்படி ஃபேமிலியைப் பார்க்காம இருக்காங்களோ?.. யார் ஃபேமிலியைப் பார்த்தாலும் உருக்கமா இருக்கு” என்று மற்றவர்களுக்காக சஞ்சீவ் நெகிழ்ந்தது நல்ல பண்பு.

“இது என் கணவரோட லக்கி சார்ம். உங்களுக்கு தர்றேன்” என்று ஒரு கைவளையத்தை ராஜூவின் கையில் மாட்டி விட்டார் சஞ்சீவின் மனைவி. ராஜூதான் வெற்றியாளராக வரவேண்டும் என்கிற அவரது உள்விருப்பம் இதில் வெளிப்பட்டது. என்றாலும் மற்றவர்களின் மனதும் காயப்படக்கூடாது என்பதற்காகத் திறமையாக பேசினார். தாமரையின் மகன் மாதிரி, சஞ்சீவின் பிள்ளைகள் காமிராவை உடைக்க வராமல் இருந்தது, பிக்பாஸை குஷியாக்கி இருக்க வேண்டும். அவர் சஞ்சீவின் பிள்ளைகளை விசாரித்தபோது கூடுதல் இனிமை இருந்ததைப் போல பட்டது.

ராஜூ - சஞ்சீவின் மனைவி
ராஜூ - சஞ்சீவின் மனைவி

“நான் நாடகத்துக்காக ஓடிட்டே இருப்பேன். பிள்ளைங்களை கவனிக்கக்கூட நேரமில்லை” என்று தாமரை சொன்னது, பணிக்குச் செல்லும் லட்சக்கணக்கான பெண்களின் ஆதங்கக்குரல். ‘கப்பு ஜெயிக்கறது முக்கியமில்ல. இதயங்களை வெல்வதுதான் முக்கியம்” என்று சஞ்சீவின் மனைவி ராஜூவிடம் சொன்னது திருவாசகம். “உன் கூட டான்ஸ் ஆடலாம்னு பார்த்தேன். உனக்கு கால் சரியில்லாமப் போச்சே?!” என்று அமீரைப் பார்த்து வருந்தியவர் “டான்ஸர் ஆகணும்றது உன் அம்மாவோட ஆசை. அதுல நல்லா கவனம் செலுத்து” என்று அடிக்கோடிட்டுச் சொன்னதில் ஒரு செய்தி இருந்தது. “என்னடா. இது வர்றவங்க எல்லாம் இதையே சொல்றாங்களே?!” என்று அமீர் நொந்து போயிருப்பார்.

“போன சீசன்ல யார் வெற்றியடைவாங்கன்னு ஒரு மாதிரி யூகிக்க முடிஞ்சது. ஆரியோட பேர் அப்பவே அடிபட்டுது. ஆனா இந்த சீசன்ல அப்படி யாரையும் யூகிக்க முடியலை” என்று சஞ்சீவின் மனைவி சொன்னது சரியான பார்வை. என்றாலும் ராஜூவின் பெயரை அவர் சூசகமாக மேலே வைத்து சொன்னார். பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கியிருப்பது, டாஸ்குகளை அரைமனதாக செய்வது போன்ற குறைகளை மட்டும் ராஜூ களைந்து கொண்டால் நிச்சயம் அது சாத்தியமாகி விடும் என்றுதான் தோன்றுகிறது. “பெண்கள் யாராவது ஜெயிச்சா நல்லாயிருக்கும்” என்கிற விருப்பத்தையும் சஞ்சீவின் மனைவி சொன்னது சிறப்பான விஷயம்.

“நாம ஏன் நல்ல நண்பர்களா இருக்க முடியாது?”

அமீர் – பாவனியின் ரகசிய உரையாடல் மீண்டும் தொடர்ந்தது. “உன் கிட்ட பேசணும்டா” என்று ஆரம்பித்த பாவனி “ஏன் நாம் நல்ல நண்பர்களா இருக்க முடியாதா?” என்று கேட்டது மிக மிக முக்கியமான கேள்வி. இரு ஆண்கள், இரு பெண்கள் பழகும் போது மட்டும் அந்த உறவை ‘நட்பு’ என்று வரையறுக்கும் சமூகம் ‘ஒரு ஆணும் பெண்ணும் பழகும் போது மட்டும் ‘நட்பு’ என்று நம்பாமல் அதையும் தாண்டி ஏதோவொரு கசமுசா இருப்பதாக ஏன் சந்தேகிக்கிறது? பாவனியின் கேள்வியில் இருந்த இந்த ஆதங்கமும் கோரிக்கையும எதிர்பார்ப்பும் மிக மிக சரியானது.

“நான் ஏதாவது தப்பா நடந்தேனா.. லிமிட் கிராஸ் பண்ணேனா..” என்று பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருந்தார் அமீர். ஒரு நகைச்சுவைக் காட்சியில் வடிவேலு ஒரு பெண்ணிடம் அத்துமீறி குறும்புகள் செய்து விட்டு “இப்படியெல்லாம் நான் பண்ணேனா?” என்று கேட்பார். அமீர் கேட்பதும் இப்படித்தான் இருக்கிறது. ‘நாம் நண்பர்கள் மட்டும்தான்’ என்கிற பாவனியின் கருத்து அமீரைப் புண்படுத்தி விட்டது போல. ‘நைட்டு பேசிக்கலாம்” என்று அமீர் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள அதனால் பாவனி சங்கடம் அடைந்தார்.

அமீர் - பாவனி
அமீர் - பாவனி

அக்ஷரா ஆண்கள் அணி – ராஜூ பெண்கள் அணி

அடுத்ததாக ஒரு பெயிண்ட் கம்பெனியின் டாஸ்க். அமீரும் வருணும் நடுவர்களாக இருக்க மற்றவர்கள் இரு அணிகளாகப் பிரிய வேண்டும். அவர்களை ஒரு கயிற்றால் பிணைத்து விடுவார்கள். வீடெங்கும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கார்டுகளை இந்த அணி தேடியெடுக்க வேண்டும். எந்த அணி முதலில் முடிக்கிறதோ, அவர்களே வெற்றியாளர். இதில் அக்ஷரா ஆண்கள் அணி (இப்படித்தான் பிக்பாஸ் குறிப்பிட்டார்) சிறப்பாகச் செயல்பட, ராஜூ பெண்கள் அணி பயங்கரமாகச் சொதப்பியது. “தோத்துட்டீங்க. இருந்தாலும் சரி. உங்களுக்கும் பரிசு அளிச்சு தொலைக்கிறேன்” என்று அழுது கொண்டே ராஜூ அணிக்கும் பர்கர் பரிசு அளித்தார் பிக்பாஸ்.

மற்ற அனைத்துப் போட்டியாளர்களின் வீடுகளில் இருந்தும் ஆட்கள் வந்து போய் விட்டார்கள். அமீர் மட்டும்தான் பாக்கி. இந்த நோக்கில் அவர் சோகமாக இருந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது. “நான் வெளிலதான் கொஞ்சம் சேட்டை பண்ணுவேன். இது அவங்களுக்குத் தெரியாது. ஒருவேளை இந்த நிகழ்ச்சில ஏதாவது பார்த்துட்டு வராம இருக்காங்களோன்னு தோணுது” என்று அமீர் மிகையாக கற்பனை செய்து கொண்டு சோகம் அடைய “அப்படியெல்லாம் இருக்காது. வந்துடுவாங்க” என்று பாவனி ஆறுதல் சொன்னது சிறப்பான காட்சி.