Published:Updated:

பிக் பாஸ் 85 : சூடுபிடிக்கும் போட்டி; கதறி அழுத தாமரை; தப்பித்த சிபி; எவிக்ஷனில் நடந்ததென்ன?

தாமரை - பாவனி

பிக் பாஸ் 85 : ஆனால் சிபி இப்படி என்னதான் தனக்குத் தானே முட்டுக் கொடுத்தாலும் ஒட்டுமொத்தமாக அவருடைய பங்களிப்பு என்ன என்று பார்க்கும் போது குறைவாகத்தான் இருக்கிறது.

பிக் பாஸ் 85 : சூடுபிடிக்கும் போட்டி; கதறி அழுத தாமரை; தப்பித்த சிபி; எவிக்ஷனில் நடந்ததென்ன?

பிக் பாஸ் 85 : ஆனால் சிபி இப்படி என்னதான் தனக்குத் தானே முட்டுக் கொடுத்தாலும் ஒட்டுமொத்தமாக அவருடைய பங்களிப்பு என்ன என்று பார்க்கும் போது குறைவாகத்தான் இருக்கிறது.

Published:Updated:
தாமரை - பாவனி

வருண் மற்றும் அக்ஷரா ஆகிய இருவரும் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இருவருமே செளகரியமான சூழலில் வளர்ந்தவர்கள். பிக்பாஸ் வீடு அவர்களுக்கு சில அடிப்படையான பாடங்களைக் கற்றுத் தந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆக.. போட்டியாளர்களின் எண்ணிக்கை எட்டாக குறைந்திருக்கிறது. ‘இனிமேல் டபுள் எவிக்ஷன் இருந்தாலும் இருக்கும்’ என்றும் சொல்லப்பட்டிருக்கிற சூழலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நேரம் இது. தகுதியானவர்தான் போட்டியில் வெல்ல வேண்டும். “பார்த்து சூதானமா வாக்களியுங்கள் மக்களே’.

பிக்பாஸில் உள்ள அனைவருக்குமே சினிமா வாய்ப்புண்டு என்று தயாரிப்பாளர் இப்போதே தெரிவித்து விட்டார். ராஜூவை ஸ்கிரிப்ட் ரைட்டராக ஏற்கெனவே அவர் முடிவு செய்து விட்டார். ஹீரோ நிச்சயம் வருண்தான். “நிரூப்பை வில்லனாகவும் தாமரையை அம்மா கேரக்ட்டரிலும் போடுங்க” என்று சிபி பரிந்துரை செய்திருக்கிறார். எனில் இதர கேரக்ட்டர்கள் யார் என்பதை யூகிக்க ஜாலியாக இருக்கிறது. ஹீரோயின் குகு பாப்பாதான். ஹீரோவிற்காக உயிரை விடும் நண்பன் பாத்திரம் சிபிக்கு. அக்கா கேரக்ட்டர் பிரியங்காவிற்கு. ஹீரோவை காதலிப்பது போல் நடிக்கும் வேடம் பாவனிக்கு. ஆனால் இவர் வில்லனின் ஆள். படத்திற்கு நடன மாஸ்டர் அமீர். இறுதியில் வரும் போலீஸ் ஆஃ.பிசர் வேடம் சஞ்சீவிற்கு. கமலையும் ஒரு cameo ரோலில் வரச் சொல்லி விடலாம். ஆனால் இந்தப் படம் ஓடுமா?

எபிசோட் 85-ல் என்ன நடந்தது?

‘சகலகலாவல்லவன்’ போன்றதொரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்து அப்படியே வந்து விட்ட தோரணையில் இருந்தார் கமல். வலுக்கட்டாயமான திணிக்கப்பட்ட இளமையை ஆடையில் வரவழைக்க முயன்றிருந்தார். “நமக்குள்ள ஒரு விஷயம். இன்னிக்கு டபுள் எவிக்ஷன் இருக்குது. கூட்டத்தைக் குறைச்சாகணும். வெளில சொல்லிடாதீங்க” என்று பார்வையாளர்களிடம் ரகசியம் பேசி விட்டு உள்ளே சென்றார்.

“உங்களையெல்லாம் ஆபிஸ் ரூம்ல தனித்தனியா கூப்பிட்டு பேசினேன். ரகசியம் காத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் கொடுத்தது வெறும் டிப்ஸ்தான். மக்கள்தான் வெற்றியை முடிவு செய்வாங்க” என்கிற முன்னுரையுடன் ஆரம்பித்தவர், போட்டியாளர்களை அவர் சொன்ன வரிசையில் ஜோடிகளாக அமரச் சொன்னார். “எனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? மற்றவருக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?”..என்று ஒவ்வொருவரும் பேச வேண்டும். இன்னொருத்தருக்கு வாக்களிக்கக்கூடாது –ன்னு பேச தயக்கமாக இருக்கலாம். அமெரிக்கால இப்படித்தான். நாமதான் முகதாட்சண்யம் பார்க்கிறோம்” என்று போட்டியாளர்களை கமல் வார்ம்-அப் செய்ய, ஒவ்வொருவரும் தயக்கத்துடன் ஆரம்பித்தார்கள்.

பிக் பாஸ் கமல்
பிக் பாஸ் கமல்

வெல்லப் போவது நீயா அல்லது நானா?

முதலில் நிரூப் vs சிபி ஜோடி. நிரூப் பிரசாரவுரையை ஆரம்பித்தார். “நான் இங்க என்னோட நூறு சதவீதத்தைத் தந்திருக்கேன். தனியாத்தான் ஆடிட்டு இருக்கேன். யாரோட செல்வாக்கும் எனக்கு இல்லை. அப்பப்ப கீழே போயிருக்கேன். இருந்தாலும் அடிச்சு பிடிச்சு மேல வந்திருக்கேன். சிபிக்கு ஏன் வாக்களிக்கக்கூடாதுன்னா ‘அவனுக்கு கேமே புரியலை” என்று ஒரே போடாகப் போட்டு முடித்தார் நிரூப்.

இதனால் ஈகோ காயப்பட்ட சிபி “நிரூப் கேமிற்கு உண்மையா ஆடியிருக்கிறதா சொல்றான். ஆனா நான் எனக்கு நேர்மையா ஆடியிருக்கேன். கேம் புரியலைன்னா இத்தனை நாள் நான் இருந்திருக்க முடியுமா? அப்படி என்ன இது புரியாத கேமா?” என்று கவுன்ட்டர் தந்தார். ஆனால் சிபி இப்படி என்னதான் தனக்குத் தானே முட்டுக் கொடுத்தாலும் ஒட்டுமொத்தமாக அவருடைய பங்களிப்பு என்ன என்று பார்க்கும் போது குறைவாகத்தான் இருக்கிறது.

நிரூப் - சிபி
நிரூப் - சிபி

அடுத்த ஜோடி அமீர் vs வருண். “நான் பல கஷ்டங்களைத் தாண்டி இங்க வந்திருக்கேன். எனக்கு இதுவரை எதுவுமே ஈஸியா கிடைச்சதில்லை. நான் இங்க லேட்டா வந்தாலும் ஈஸியா சிலரைத் தாண்டிட்டேன். வருண் கிட்ட நான் அத்தனை ஈடுபாட்டை பார்த்ததில்லை. ஒரு விஷயத்தை அவர் கத்தி சொல்லணும்னு அவசியமில்லை. நிதானமாகவும் சொல்லலாம்” என்று அமீர் தன் தரப்பை சொல்லி முடித்தார்.

அமீர் வைல்ட் கார்ட் என்ட்ரி என்கிற விஷயத்தை வருண் தொடுவார் என்று தெரியும். ஆனால் அதை பட்டவர்த்தனமாக அல்லாமல் உறுத்தாமல் தொட்டது நன்று. “எனக்குன்னு சில அடிப்படையான கொள்கைகள் இருக்கு. அதையொட்டிதான் நான் இங்க விளையாடியிருக்கேன். அமீருக்கு அனுதாபம் பிடிக்காதுன்னு தெரியும். அவரு லேட்டாதான் வந்தாரு. இது என்னோட ஆரம்பம்தான்… இனி போகப் போக” என்று வருண் பேசியதில் குறுக்கிட்ட கமல் “இன்னமும் ரெண்டு வாரம்தான் இருக்கு…” என்று நமட்டுச் சிரிப்போடு சொன்னார்.

கிளைமாக்ஸ் சண்டையே நெருங்கி விட்ட நிலையில் “இவர்தாங்க நம்ம படத்தோட ஹீரோ.. இவருக்கு என்ன பிரச்சினைன்னா..” என்று வாய்ஸ்ஓவர் போட்டா என்ன அர்த்தம்? என்பதே கமல் சொல்ல வந்த விஷயம். “இந்த ரெண்டு வாரத்துல என்னை முழுசா வெளிப்படுத்துவேன்” என்று வருண் சமாளிக்க “அதெல்லாம் இருக்கட்டும். டிரஸ் பண்ணும் போது பாதில வந்துட்டிங்களா, முழுசா பண்ணலையா,?” என்று வருணின் பாதி கோட்டை கிண்டலடித்தார் கமல்.

“ராஜூ கிட்ட காரணம் எதுவும் தெரியலை” – அக்ஷராவின் நேர்மை

அடுத்த ஜோடி ராஜூ vs அக்ஷரா. “லேடீஸ் ஃபர்ஸ்ட்டா?” என்று கமல் கேட்க “ஹாங்.. ஹாங்..” என்று குழந்தை போல் சிணுங்கினார் அக்ஷரா. எனவே ராஜூ பேச ஆரம்பித்தார். ``வழவழான்னு பேசாதீங்க” என்று கமல் முன்பே எச்சரித்திருந்ததால் ராஜூ உஷாராகப் பேசினார். “இந்த இடத்திற்கு வர்ற நான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். இந்த வெற்றி அக்ஷராவிற்கு எத்தனை முக்கியம்னு எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு ரொம்ப முக்கியம். என் வாழ்க்கையையே இந்த வெற்றி மாற்றும்ன்னு நம்பறேன்” என்று உருக்கமாகப் பேச “இத்தனை நாள் நான் தாக்குப் பிடிச்சதையே வெற்றியா நினைக்கறேன். நேர்மையாக விளையாடியிருக்கேன்” என்ற அக்ஷரா “ராஜூக்கு வாக்களிக்காதீங்கன்னு சொல்ல எனக்கு காரணம் எதுவும் கிடையாது” என்று நேர்மையாகச் சொன்னது சிறப்பு. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜூ ‘தெரிஞ்சிருந்தா நானும் இப்படி டிப்ளமாட்டிக்கா பேசியிருப்பனே’ என்பது மாதிரி பார்த்தார். “பரிசு வேணாம்ன்ற மாதிரியே பேசாதீங்க. மக்கள் வேற மாதிரி முடிவு பண்ணிடுவாங்க” என்று ஜாலியாக எச்சரித்தார் கமல்.

அடுத்த ஜோடி தாமரை vs பாவனி. முதலில் ஆரம்பித்த பாவனி, தாமரையின் பிளஸ் பாயிண்ட்டுகளாகவே சொல்லிக் கொண்டு போனார். “தாமரையை மக்கள் எப்படியும் காப்பாத்திடுவாங்க. அந்த அளவிற்கான ஆதரவு அவருக்கு இருக்கு” என்று பாவனி நீட்டி முழக்க “அப்ப யாருக்கு வோட்டு போடச் சொல்றீங்க?” என்று ராஜூ குழப்பத்துடன் கேட்ட கேள்வியை கமலும் வழிமொழிந்தார். “எதிராளி என்ன பேசறாங்கன்னு புரிஞ்சுக்காமயே அவங்க பேசிடுவாங்க. நான் நிதானமா பேசுவேன்.. அதனால எனக்கு ஓட்டு போடுங்க” என்று ஒருவழியாக சொல்லி முடித்தார் பாவனி. (ம்.. தேர்றது கஷ்டம்தான்).

அடுத்து எழுந்த தாமரை இறங்கி அடித்தார். “ஒரு சராசரி பெண்ணாக மட்டுமல்லாமல் நாடக உலகத்திற்கு கிடைத்த வெற்றி இது. பிக்பாஸை நான் கேமாக பார்க்கவில்லை. குடும்பமாகத்தான் பார்க்கிறேன். இங்கேயே இருந்துடலாமான்னு இருக்கு. அத்தனை சந்தோஷமா இருக்கு. இன்னமும் 2 வாரம் என்னை வாழ வைக்க மாட்டீங்களா. மக்களே..? பாவனிக்கு என் அளவிற்கு தைரியம் கிடையாது. நான் துணிச்சலா கேள்வி கேட்பேன். எனக்குப் போடுங்க. அவளுக்குப் போடாதீங்க” என்று சொல்லி முடிக்க “ப்பா. என்ன தெளிவு?!” என்று வியந்து சிரித்தார் கமல்.

பாவனி
பாவனி

சஞ்சீவ் சொன்ன ‘பச்சை கண்ணாடி’ கதை

அடுத்ததாக சஞ்சீவ் vs பிரியங்கா ஜோடி. “இது விவாத மன்றம் கிடையாது. அவங்க எனக்கு எதிரியில்ல. அதனால..” என்று நாட்டாமைக்கேயுரிய சபை நாகரிகத்துடன் சஞ்சீவ் பாவனையாக ஆரம்பிக்க “இப்ப என்ன டாஸ்க்கையே மாத்தப் போறீங்களா?” என்றார் கமல். ``ஒரு கதை சொல்லட்டுமா சார்?” என்று ஆரம்பித்து ‘பச்சைக் கண்ணாடி’ கதையைச் சொன்னார் சஞ்சீவ்.

தொடர்பிருக்கிறதோ, தொடர்பில்லையோ, அவர் சொன்ன கதையின் சாரத்தைத்தான் நான் ஒவ்வொரு சீசனின் கட்டுரைத் தொடரிலும் வலியுறுத்தி வருகிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது போட்டியாளர்களின் சறுக்கல்களைப் பற்றி உற்சாகமாக வம்பு பேசி கொண்டாடுவதோடு நிறுத்திக் கொள்ளும் விஷயம் அல்ல. இதன் மூலம் ஒருவர் தன்னுடைய தவறுகள், குறைகள், பிசிறுகள் போன்றவற்றை சுயபரிசீலனையோடு உள்நோக்கி பார்ப்பதும், அதைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும்தான் முக்கியம். இந்த நோக்கில் சஞ்சீவ் சொன்ன நீதிக்கதை பாராட்டத்தக்கது. “பிரியங்காவை விடவும் ஒரு ஓட்டு எனக்கு அதிகமா போடுங்க” என்று சஞ்சீவ் பாசிட்டிவ்வாக முடித்ததும் சிறப்பு.

சற்று சுற்றி வளைத்தாலும் பிரியங்காவின் கவுன்ட்டர் சிறப்பாகவே இருந்தது. “மேடையில் இருக்கும் ஜாலியான பிரியங்காவை மக்களுக்கு நல்லா தெரியும். ஆனால் உணர்ச்சிவயப்படுகிற, அழுகிற, சிரிக்கிற, வில்லியாக இருக்கிற பிரியங்காவை நான் இங்க வெளிப்படுத்தியிருக்கேன். நான் இங்க நானாத்தான் இருந்திருக்கேன். அசலான உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கிட்டு யாருக்கும் பாதகமில்லாம நடிக்கறதுக்கு எதுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி…?” என்று பிரியங்கா அடுக்கிக் கொண்டே செல்ல “போறபோக்குல இதை சபிச்சிட்டுப் போயிடாதீங்க” என்று ஜாலியாக இடைமறித்தார் கமல். வாக்களிக்கும் எண்ணிக்கையையொட்டி சஞ்சீவ் சொன்னதையே பிரியங்கா சற்று மாற்றிச் சொல்ல “இதை எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கே” என்று நமட்டுச்சிரிப்பு சிரித்தார் கமல்.

இந்த வாரப் புத்தகப் பரிந்துரை

அடுத்ததாக, “நான் சொல்லும் வரிசையில் உட்காருங்கள்” என்று மாற்றி அமர வைத்தார் கமல். இதில் சிபி – பாவனி ஜோடியை பேசச் சொல்லி விட்டு “சரி.. எதுக்கு இந்த விளையாட்டு.. பாவனி saved” என்று தேங்காயைப் போட்டு பட்டென்று உடைக்க அம்மணி சந்தோஷமடைந்தார். “இனிமே நல்லா விளையாடுவேன்” என்று வாக்களித்திருக்கிறார். பார்ப்போம். இனியாவது ``மூஞ்சி மேல பேசுவாங்களான்னு”.

ஓர் இடைவேளைக்குப் பிறகு திரும்பி வந்த கமல் “நாலு பேர் இருக்கீங்க.. இல்லையா.. இருங்க. ஒரு வேலையை முடிச்சுட்டு வந்துடறேன்” என்று புத்தகப் பரிந்துரையை அகம் டிவி முன்னிலையில் வித்தியாசமாக செய்தது சிறப்பு. இந்த வாரம் கமல் பரிந்துரைத்த நூல், Abraham Eraly எழுதிய The Age of Wrath: A History of the Delhi Sultanate. “இன்று நாம் செய்யும் வாதப் பிரதிவாதங்களின் அடிநாதத்தை இந்த நூலில் காண முடியும். புரியும் மொழியில், மிக நேர்மையாக, எவ்வித சார்பும் இன்றி எழுதப்பட்டது. சர்வதேச அங்கீகாரத்தை அடைந்த இந்த எழுத்தாளருக்கு உள்ளூர் அங்கீகாரம் எதுவும் கிடைக்கவில்லை. நியூயார்க் நகரை மையமாகக் கொண்டு வெளியாகும் இதழைப் போல சென்னை நகரை மையமாகக் கொண்டு Aside என்னும் பத்திரிகையை நீண்ட காலம் அவர் நடத்தி வந்தார். பாரதியார் போல பொருளாதாரக் காரணங்களால் நிறுத்தி விட்டிருக்கக்கூடும். இந்த நூல் தமிழில் வந்தே தீரும். அவசியம் வாசியுங்கள்” என்று பார்வையாளர்களோடு சேர்ந்து போட்டியாளர்ளுக்கும் அறிமுகப்படுத்தினார் கமல்.

புத்தகப் பரிந்துரை
புத்தகப் பரிந்துரை

இந்த வாரம் டபுள் பட்டாசு வெடிக்கும்

மீண்டும் எவிக்ஷன் விளையாட்டிற்கு வந்த கமல் “இந்த நாலு பேர்ல யார் வெளியே போவாங்கன்னு நெனக்கறீங்க?” என்று சற்று நேரம் போக்கு காட்டினார். “வருண் போவார்” என்று நிரூப் சொல்ல “ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர்-ன்னு நாங்க பேசிட்டு இருந்தோம்” என்றார் வருண். “சரி.. ரொம்ப ஆட்டம் காட்ட வேண்டாம்” என்று பாவனையாக அலுத்துக் கொண்ட கமல் “அக்ஷரா’ என்கிற பெயரை எடுத்துக் காட்ட, அதிர்ச்சியை மறைத்துக் கொண்ட புன்னகையுடன் அக்ஷரா எழுந்தார். தாமரையின் முகம் அப்போதே அழுகையுடன் கோணியது.

சிலர் உண்மையான வருத்தத்திலும் சிலர் ‘ஹப்பாடா’ என்கிற நிம்மதியுடனும் அக்ஷராவிற்கு விடை தந்து கொண்டிருக்க “இருங்க.. இருங்க. இன்னமும் இருக்கு.. அவங்க அழுது முடிக்கட்டும்” என்று பார்வையாளர்களிடம் குறும்பாக சமிக்ஞை செய்தார் கமல். (என்னாவொரு வில்லத்தனம்?!). இருப்பதிலேயே தாமரை அதிகமாக கலங்க அவரை சமாதானம் செய்தார் அக்ஷரா. மீண்டும் தொலைக்காட்சியில் இருந்து சத்தம் வர “ஒருவேளை எலிமினேஷன் இல்லையோ?” என்கிற எதிர்பார்ப்புடன் மக்கள் ஆவலாக திரும்பி வந்தார்கள்.

நிரூப்
நிரூப்

“அப்படில்லாம் விட்டுட முடியாது. அரிசி என்னா விலை விக்குது தெரியுமா?” என்கிற பாவனையுடன் போட்டியாளர்களைப் பார்த்த கமல் “இன்னொரு எவிக்ஷனும் இருக்கு” என்று அதிர்ச்சி தந்து விட்டு ‘வருண்’ பெயரைக் காட்டினார். ஆக.. சிபியும் நிரூப்பும் காப்பாற்றப்பட்டு விட்டார்கள்.

‘ஹப்பாடா.. நாம தனியா போக வேண்டியதில்லை’ என்பது மாதிரியான ஆசுவாசம் இப்போது அக்ஷராவின் முகத்தில் தெரிந்தது. “எனக்கென்னமோ நடுவுல பூந்து சிபி அடிச்சுட்டுப் போயிடுவான்னு தோணுது” என்று சொல்லி ராஜூவின் வயிற்றில் புளியைக் கரைத்தார் வருண். தாமரையின் அழுகை இப்போது கூடுதலாகி விட்டிருக்க அக்ஷராவும் வருணும் “ஜோ.. ஜோ.. அழப்படாது” என்று அவரைச் சமாதானப்படுத்தினார்கள். “எனக்கு ஒரு பொண்ணு பொறந்தா உன்னை மாதிரி தைரியமா வளர்ப்பேன்” என்று அக்ஷராவிடம் தனிமையில் சொல்லி அதிர்ச்சியூட்டினார் பிரியங்கா. “இந்த சீசனில்தான் வருண் – அக்ஷரா என்கிற அழகான நட்பு உருவாகியிருக்கிறது” என்று சபையில் சொன்ன போது தொகுப்பாளர் பிரியங்கா திரும்பி வந்து விட்டார். விடைபெறும் போது வருண் சளசளவென்று பேச “இப்பத்தாண்டா ஜாஸ்தி பேசற” என்று அக்ஷரா அடித்தது ஜாலியான கமெண்ட்.

“எனக்கு வார்த்தைகளில் தாக்க வராது” – அக்ஷரா அதிர்ச்சி ஸ்டேட்மென்ட்

மேடையில் வந்த அக்ஷராவை வரவேற்ற கமல் “நீங்க ஏறத்தாழ சாதிச்சிட்டீங்க. உங்க கண்ல அழுகை தெரியல” என்று பாராட்ட “ஆமாம். சார்.. என் குடும்பத்தைப் பார்க்கப் போறோம்னு சந்தோஷமா இருக்கு.” என்றார் அக்ஷரா. “உங்களுக்கு ரெடிமேடா இப்ப ஆடியன்ஸ் கிடைச்சுட்டாங்க. நாங்கள்லாம் கொஞ்சம் கொஞ்சமா சேகரிச்ச விஷயம் இது. உங்களுக்கு ஈஸியா கிடைச்சிடுச்சு. நல்லபடியா பயன்படுத்திக்கங்க” என்று வாழ்த்து சொன்ன கமல், அக்ஷராவின் பயண வீடியோவைக் காட்டினார். சிரிப்பும் அழுகையுமாக அதைப் பார்த்து முடித்தார் அக்ஷரா.

“இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்குன்றதே பிரமிப்பா இருக்கு. எனக்கு வார்த்தைகளில் பேசி தாக்க வராது. அதனால உள்ளே நிறைய கஷ்டப்பட்டிருக்கேன். என்றாலும் இதுவொரு சிறப்பான அனுபவம்” என்ற அக்ஷராவிடம், பிக்பாஸ் அனுபவத்தை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கமல் கொடுத்த அட்வைஸ் மிக முக்கியமானது. அகம் டிவி வழியாக தன் நண்பர்களைச் சந்தித்த அக்ஷரா, ஒவ்வொருவருக்கும் வாழ்த்து தெரிவித்து விட்டு ``டாஸ்க்ல ரொம்ப அடிச்சுக்காதீங்க. பார்த்து விளையாடுங்க” என்று வேண்டுகோள் வைக்க “பார்த்து எப்படி hurt பண்ண முடியும்?” என்று கிண்டலடித்தார் கமல். அக்ஷரா விடைபெற்றுச் சென்றவுடன் வருண் மேடைக்கு வந்தார்.

வருண் ஹீரோவாக நடித்த படம்

“ஏறத்தாழ வெற்றியை நெருங்கிட்டீங்க.. உங்க வேலையை விட்டுட்டு இங்க வந்திருக்கீங்க” என்று கமல் வரவேற்க “என்னைப் பத்தி வீட்டுக்கு கூட அதிகம் தெரியாது. நண்பர்களுக்கு மட்டும்தான் அதிகம் தெரியும். என் கொள்கைகள்படிதான் நடந்துப்பேன். பிக்பாஸ்ல வர்றதுக்கு கூட வீட்ல அனுமதி கேட்டுத்தான் வந்தேன். ‘கெட்ட பெயர்’ கிடைக்கலாம்னு பயமுறுத்தினாங்க. கெட்ட பெயரா ஆக்கறது நம்ம கிட்டதான் இருக்கு” என்று முதிர்ச்சியாகப் பேசினார் வருண். பிறகு மேடைக்கு வந்தார் ஐசரி கணேஷ். இவர் பிரபல நகைச்சுவை நடிகர் ஐசரிவேலனின் மகன். எனவே அது சார்ந்த பழைய விஷயங்களை நினைவுகூர்ந்தார் கமல்.

வருண் ஹீரோவாக நடித்து வெளிவரவிருக்கும் ‘ஜோஷ்வா’ திரைப்படத்தின் டிரைய்லர் வெளியிடப்பட்டது. “வேற லெவல்” என்று முதல் ஷோ ரசிகர்களைப் போலவே போட்டியாளர்களும் உரக்கக் கத்தி மகிழ்ந்தார்கள். “உங்க எல்லோருக்கும் வாய்ப்பு காத்துட்டு இருக்கு” என்று உறுதி சொன்ன தயாரிப்பாளர், சந்தடி சாக்கில் தன் தயாரிப்பு நிறுவனத்திற்காக கமலிடமும் தேதி கேட்க அதற்கு மையமாக பதில் அளித்து எஸ்கேப் ஆனார் கமல். “என் நிறுவனத்தில் செய்தால் என்ன. உங்க பட நிறுவனத்தில் செய்தால் என்ன.. ரெண்டும் ஒன்றுதான்” என்றார் கமல். ஐசரி கணேஷின் வேண்டுகோள் நிஜமாகுமா என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

வருண்
வருண்

கமலும் விடைபெற்றுச் சென்ற பின்னர், வீட்டின் உள்ளே தாமரை இன்னமும் கலங்கிக் கொண்டிருந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டுச் செல்ல தாமரைக்கு மனதே வரவில்லையாம். விட்டால் அந்த வீட்டை அவரது பெயருக்கு பட்டா போட்டு தரச் சொல்லி விடுவார் போலிருக்கிறது. ‘நான் போ மாட்டேன்’ என்று ஆரம்ப நாளில் அவர் சொன்னது விளையாட்டில்லை போலிருக்கிறது. இதையே நிரந்தர வாழ்க்கையாக எப்படி எடுக்க முடியும். வெளியுலகத்தைப் பார்க்க வேண்டாமா?’ என்று ஆறுதல் கூறினார் பிரியங்கா.