Published:Updated:

பிக் பாஸ் 86 : "எல்லாத்தையும் ஆரம்பிச்சவனே நீதான்"அமீரிடம் கொதித்த பாவனி; குட்டையைக் குழப்பிய தாமரை!

பிக் பாஸ் பாவனி

“எல்லாக் கோட்டையும் அழிங்க. நான் லுலுவாய்க்குதான் இந்த நாமினேஷன் செய்யச் சொன்னேன்” என்ற பிக் பாஸ் அனைவரையும் எவிக்ஷன் லிஸ்ட்டில் கொண்டு வந்தார்.

பிக் பாஸ் 86 : "எல்லாத்தையும் ஆரம்பிச்சவனே நீதான்"அமீரிடம் கொதித்த பாவனி; குட்டையைக் குழப்பிய தாமரை!

“எல்லாக் கோட்டையும் அழிங்க. நான் லுலுவாய்க்குதான் இந்த நாமினேஷன் செய்யச் சொன்னேன்” என்ற பிக் பாஸ் அனைவரையும் எவிக்ஷன் லிஸ்ட்டில் கொண்டு வந்தார்.

Published:Updated:
பிக் பாஸ் பாவனி

‘இவரு.. அப்பாவியா.. இல்லைன்னா.. அடப்பாவியா?’ என்று தாமரையைப் பற்றி முதல் வாரத்தில் எழுதியிருந்தேன். எண்பத்தைந்து நாட்களைக் கடந்தும் இந்த வாக்கியத்தை என்னால் மாற்ற முடியவில்லை. அப்படியொரு குழப்பத்தின் திருவுருமாக நீடிக்கிறார் தாமரை. இதுதான் அவரது பலமும் பலவீனமும். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளாமலேயே சடார் சடார் என்று பேசி விடுவது, தனக்குப் புரியவில்லை என்பதை கோபத்தின் மூலம் மறைப்பது, ‘புரியறதுக்கு டைம் கொடுங்க” என்று சமாளிப்பது என்று பல உத்திகளை அவர் தன்னிச்சையாக செய்கிறார். திட்டமிட்டு செய்கிறார் என்று சொல்ல மாட்டேன்.

ஒரு புகழ்பெற்ற ஜென் கதை இருக்கிறது. குரு எதைச் சொல்லித் தந்தாலும் அதில் குறுக்கிட்டு அதிகப் பிரசங்கித்தனமாக எதையாவது சொல்லும் சீடன் ஒருவன் இருந்தான். அவனை ஒரு நாள் அமர வைத்த குரு, அவனுடைய கோப்பையில் தேநீரை ஊற்றத் துவங்கினாராம். கோப்பை நிரம்பிய பிறகும் தேநீர் ஊற்றுவதை குரு நிறுத்தவில்லை. தேநீர் கீழே வழிந்து ஓடுவதைக் கண்டு பதறிய சீடன் “என்ன குருவே.. இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்க “உன் மனதில் ஏற்கெனவே நிரம்பியிருக்கும் குப்பைகளை வெளியில் எறிந்து விட்டு வந்தால்தான் நான் சொல்லும் உபதேசம் அதில் நிரம்பும். இல்லாவிட்டால் இப்படித்தான் அனைத்தும் வழிந்து வீணாகும். எனவே காலிக்கோப்பையோடு வா” என்று திருப்பியனுப்பினாராம்.

தாமரை - பிரியங்கா
தாமரை - பிரியங்கா

தாமரைக்கு மட்டுமல்ல நம்மில் அனைவருக்குமே இது பொருந்தும். கற்றல் சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, அது முழுமையானதாகவும் சிறப்பானதாகவும் இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அரைகுறை அறிவை விடவும் ஆபத்து வேறில்லை. ஆனால் சிலருடைய பின்னணிகளை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் மேலே வருவதற்கான அவகாசத்தை அவர்களுக்கு அளித்துத்தான் ஆக வேண்டும். இந்த நல்லெண்ண காரணத்தினால்தான் மக்களின் ஒருபகுதியினர் தாமரையை ஆதரிக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

‘யார் போட்டியில் நீடிக்கத் தகுதியில்லாதவர்?’ என்கிற தேர்வு தொடர்பாக நேற்றைய எபிசோடில் நடந்த உரையாடல் மிக முக்கியமானது. ஒரு விஷயம் நமக்கு வேண்டும் என்று விரும்புகிற போது அதைப் பெறுவதற்கு அறிவையும் நிதானத்தையும் சமயோசிதத்தையும் பயன்படுத்த வேண்டும்.

மாறாக உணர்ச்சிவசப்பட்டால் நமக்குத் தகுதியிருந்தும் கூட தோல்வியையே பெரும்பாலும் சந்திக்க நேரிடும். இன்றைய தேதியில் IQ-ஐ விடவும் EQ (Emotional Quotient) அதிகம் தேவை. அந்தளவிற்கு, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய ஒரு பாய்லர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘ஆத்திரத்தோடு எழுந்திருக்கிறவன், நஷ்டத்தோடு அமர்வான்’ என்பது பழமொழி. ‘Hard Work’-ஐ விடவும் ‘Smart Work’-க்கிற்கே இன்று மதிப்பு அதிகம்.

எபிசோட் 86-ல் என்ன நடந்தது?

விடியற்காலையில் பாவனி ஏதோவொரு குழப்பத்தோடு இங்கும் அங்கும் உலாவிக் கொண்டிருக்கும் காட்சியோடு எபிசோட் ஆரம்பித்தது. Unseen எபிசோட் பார்க்கும் போதுதான், எடிட்டிங் என்கிற விஷயம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிகிறது. அத்தனை தேவையற்ற பிசிறுகள் அதில் நீட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதிலேயும் ஏதாவதொரு முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் ஒளிந்திருக்கலாம். ஆனால் சற்று கூர்ந்து கவனித்தால், Unseen பார்க்காமலேயே இந்த இடைவெளியை நம்மால் யூகித்து விட முடியும் என்றுதான் தோன்றுகிறது. spoon feeding செய்யக்கூடிய நிலையில் பார்வையாளர்கள் இன்று இல்லை. புரிவதற்கு சற்று சிரமமான திரைப்படங்களுக்கு கூட இணையத்தில் ஏராளமானவர்கள் கோனார் நோட்ஸ் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரியங்காவிற்குள் இருக்கிற குழந்தைத்தனம் சிலபல சமயங்களில் ரசிக்க வைக்கிறது. ஒளிந்திருந்து ராஜூவை பயமுறுத்துவதை அவர் பார்ட்-டைம் வேலையாகவே செய்து கொண்டிருக்கிறார் போல. “உங்க மனசு சங்கடப்படக்கூடாதுன்னு பயந்த மாதிரி நடிச்சேன்” என்று சமாளித்தார் ராஜூ. “நீ.. நான்.. சஞ்சீவ்.. மூணு பேரும் நல்லா விளையாடணும்” என்று அமீர் பாவனியிடம் சொல்ல “நீதான் நல்லா விளையாடறியே. அப்புறம் என்ன?” என்று பதில் அளித்தார் பாவனி. (பாவனியையும் வைல்ட் கார்ட் கேட்டகிரில சேர்த்த அந்த நல்ல மனசு இருக்கே.. அதான் சார் கடவுள்!).

பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்
பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்

பிக்பாஸ் செய்த Open Nomination விளையாட்டு

அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு அழைத்த பிக்பாஸ், ‘Open Nomination’ செய்ய உத்தரவிட்டார். பாவனி மொழியில் சொன்னால் ‘மூஞ்சி மேல சொல்லணும்’. இதில் போட்டியாளர்களுக்கு கிடைத்த வாக்குகள் பின்வருமாறு: நீரூப் (5), பாவனி (3), சஞ்சீவ் (2), அமீர் (2), சிபி, ராஜூ, தாமரை, மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு தலா ஒரு வாக்கு.

போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைவதால் இனிமேலும் சேஃப் கேம், பாசக்கணக்கு போன்றவற்றை பின்பற்ற முடியாது. பிடித்தவர்கள் என்றாலும்கூட எதிர்வாக்கு குத்தியாக வேண்டும். ராஜூகூட இதில் இனி தப்ப முடியாது. இந்த நாமினேஷனின்படி பார்த்தால் நிரூப், பாவனி, சஞ்சீவ், அமீர் ஆகிய நால்வரும் அபாயக்கட்டத்தில் இருக்கிறார்கள்.

இந்த வரிசையின் முதலில் இருப்பவர் நிரூப். இதன் காரணம் வெளிப்படையானது. இனி வரும் உடல் வலிமை சார்ந்த போட்டிகளில் நிரூப்பை வெல்வது கடினம். பிரியங்கா இதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறார். (ஆனால் அது சரியா என்பது வேறு விஷயம்). ராஜூவும் நாமினேஷனின் போது இந்தக் காரணத்தைச் சொன்னார். மற்றவர்கள் அதை ஒப்புக் கொள்ளாமல் வேறு காரணம் சொல்கிறார்கள். (சிபியைப் போல). இதற்கு இடையில் தாமரை போன்ற குழப்பவாதிகளும் நடுவில் இருக்கிறார்கள்.

“எல்லாக் கோட்டையும் அழிங்க. நான் லுலுவாய்க்குதான் இந்த நாமினேஷன் செய்யச் சொன்னேன்” என்ற பிக்பாஸ் அனைவரையும் எவிக்ஷன் லிஸ்ட்டில் கொண்டு வந்தார். இந்த மாதிரி விளையாட்டுக்களின் மூலம் போட்டியாளர்களின் மனதில் என்ன உள்ளது என்பது வெளியே வந்து விடும்.

நாமினேஷன் காரணங்கள் – புரிந்து கொள்ளாத நபர்கள்

“சஞ்சீவ் அண்ணா. நாமினேஷன்ல போய் நிரூபிச்சுட்டு வரட்டும். நாங்கள்லாம் அப்படித்தான் வந்திருக்கோம்” என்கிற காரணத்தைச் சொல்லி பிரியங்கா, சஞ்சீவை நாமினேட் செய்தார். இது வழக்கமாக நடக்கும் விஷயம்தான். தவறும் கிடையாது. ஆனால், “ஒருத்தர் அவஸ்தைப்பட வைக்கறதுல்லாம் ஒரு காரணமா?” என்று மொக்கையான கவுன்ட்டரைச் சொல்லி பிரியங்காவை பதிலுக்கு நாமினேட் செய்தார் சஞ்சீவ். மற்றவர்களின் விவகாரங்களில் புத்திசாலித்தனமாக பேசும் சஞ்சீவ், தன்னுடைய விஷயம் என்றால் மட்டும் இப்படி தடுமாறுவது ஏன்?

பாவனியை நாமினேட் செய்து பிக்பாஸ் வீட்டை அதிர வைத்தார் அமீர். இதன் மூலம் தான் விளையாட்டில் ஃபோகஸ் செய்கிறேன் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துகிறாராம். இந்தப் பாசாங்கு அவசியமற்றது. பாவனியுடனான உரையாடலைக் குறைத்துக் கொண்டு மற்றவர்களிடம் அதிகம் கலந்துரையாடி, டாஸ்க்குகளில் யாருக்கும் விட்டுத்தராமல் திறமையாக விளையாடினாலே போதும், மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இந்த விஷயத்தில் பாவனியின் நிலைப்பாடு மிகவும் முதிர்ச்சியாக இருக்கிறது. ‘அடுத்தவர்கள் பேசுவதற்காக என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்று அவர் நினைப்பதும் அப்படியே செயலாற்றுவதும் பாராட்டத்தக்கது. அமீரை நாமினேட் செய்து இந்த விஷயத்தை உலகத்திற்கு உணர்த்த அவர் விரும்பவில்லை.

ஒரு பக்கம் நிரூப்பை நாமினேட்டும் செய்து விட்டு அதற்காக பிறகு வருந்தவும் செய்தார் தாமரை. ‘விளையாட்டுன்னா அப்படித்தான் இருக்கும்’ என்று தாமரைக்கு ஆறுதல் சொன்னார் நிரூப். (இதில் எது ஆடு, எது பிரியாணி மாஸ்டர் என்று நமக்கே குழப்பமாகத்தான் இருக்கிறது!).

தாமரை
தாமரை

‘தாமரை அப்பாவியா.. அடப்பாவியா?’

“அனைவரும் தோட்டத்திற்கு வரவும். ஒரு பரிசு காத்திருக்கிறது’ என்று முத்து படத்தின் காமெடி மாதிரியான சீட்டை தந்தார் பிக்பாஸ். ‘சோறு’ என்றதும் ஆவலாக கூவிய பிரியங்காவிடம் “டின்னர் பார்ட்டின்னா. என்னலே..? அதான் பொழுதன்னிக்கும் தின்னுக்கிட்டே இருக்கியே?.. அப்புறம் என்ன?” என்றார் தாமரை.

“நான் எனக்காகத்தான் விளையாடப் போறேன். யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன். ஒருவர் விட்டுத் தந்து கிடைக்கும் வெற்றியில் மகிழ்ச்சியிருக்காது. எனவே உனக்காக நீ விளையாடு” என்று தாமரைக்கு உபதேசம் செய்தார் நிரூப். “அமீர் எனக்காக விட்டுத் தரலைன்னாகூட நான் கயிற்றை தொடர்ந்து பிடித்திருப்பேன்” என்று இந்தச் சமயத்தில் ஒரே போடாக போட்டார் தாமரை. “தம்பி.. அக்காவிற்காக விட்டுத் தாடா…” என்று முன்னர் அப்படி கெஞ்சி விட்டு, இப்போது இப்படிப் பேசவும் ஒரு சாமர்த்தியம் வேண்டும். அதனால்தான் ஆரம்ப வாக்கியத்திலேயே சொன்னேன். ‘தாமரை அப்பாவியா.. அடப்பாவியா?’

“நான் பிக்பாஸிற்கு வந்ததே நாடக உலகத்திற்கு கிடைத்த வெற்றிதான். அந்தப் பெருமை எனக்குப் போதும்” என்று நாடகத்தனமாகவே தாமரை பேச, “நீ இதில ஜெயிச்சாதானே அந்த விஷயம் முழுமையாகும்?” என்பதை தாமரையின் மண்டையில் ஏற்றுவதற்காக அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தார் நிரூப். (“நிரூப். நீ அப்பாவிடா..! இனிமேலாவது மூளையை உபயோகிச்சு விளையாடு” என்று அக்ஷரா விடைபெறும் போது சொன்னது நினைவிற்கு வருகிறது).

குட்டையைக் குழப்பும் அமீர்

தன்னை அமீர் நாமினேட் செய்தது குறித்து பாவனி மெல்லிய கோபத்தில் இருக்கிறார் என்பது வெளிப்படை. நாமினேட் காரணத்தை அமீர் சொன்னபோதே பாவனியின் முகம் மாறி விட்டது. “எல்லாத்தையும் ஆரம்பிச்சவனே நீதான். அப்புறம் இப்படியும் சொல்றே.. இதான் உன் ஸ்டராட்டஜியா?.. அவன் உன்னை வெச்சு கேம் ஆடறான்னு மத்தவங்க சொன்ன போதுகூட நான் பெரிசா எடுத்துக்கலை. உன்னை நம்பினேன். இனிமே உன்கூட பேசாம இருக்கறது பெட்டர்” என்று பாவனி எடுத்த முடிவு சரியானது. இதில் அவர் தீர்மானமாக இருப்பாரா என்று பார்க்க வேண்டும். “ஒரு விஷயத்துலதான் நான் ஃபோகஸா இருக்கறதா மத்தவங்க நெனக்கறாங்க” என்று இப்போதும் குட்டையைக் குழப்பினார் அமீர். மற்றவர்கள் குழப்பினாலும் குழம்பாத பாவனியைப் பார்த்தாவது அவர் தெரிந்து கொள்ளக்கூடாதா?

“நல்லா டிரஸ் பண்ணிட்டு காத்திருங்க. விருந்து காத்திருக்குது” என்பதால் மக்கள் டிப்டாப்பாக அமர்ந்திருந்தார்கள். இந்தச் சமயத்தில் சோற்றுக்காக ராஜூ செய்த பிரசங்கம் நல்ல காமெடி. அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

பாவனி
பாவனி

‘யாருக்குத் தகுதியில்லை? – ரணகள உரையாடல் ஆரம்பம்

‘கோ’ படத்திலிருந்து ஒரு ரகளையான பாடல் ஒலித்தது. “தம்பி மயில்வாகனம்.. கேட்டை சாத்துடா” என்கிற காமெடி மாதிரி முதலில் சோற்றை போட்டு விட்டு பிறகு ஆட்களை போட்டுத் தாக்க முடிவெடுத்தார் பிக்பாஸ். ‘இறுதிப் போட்டியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். Ticket to Finale டிக்கெட்டை பெறுவதற்கான முதல் கட்டப் போட்டி இது. இந்த விளையாட்டை தொடர யாருக்குத் தகுதியில்லை என்பதை அனைவரும் கூடிப் பேசி ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இறுதியில் அதற்கு அடையாளமாக ஒரு கறுப்பு ரோஜாவை தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு தர வேண்டும்” என்று அறிவித்தார் பிக்பாஸ்.

பிரியாணியை ஆவலாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை நிறுத்தி “ஆரம்பிக்கலாங்களா?” என்று இடைமறித்தார் சிபி. இந்த விளையாட்டை முதலில் துவங்கியவர் அவர்தான். “நடந்து முடிந்த Open நாமினேஷனில் நிரூப்தான் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே இந்த விளையாட்டைத் தொடர அவருக்குத் தகுதியில்லை” என்கிற காரணத்தை சிபி முன்வைத்தார்.

“உன் கூட என்னால் மோத முடியாது”

ராஜூவின் பெயரை பாவனி நாமினேட் செய்தார். “மக்கள் காப்பாத்திடுவாங்குன்ற நம்பிக்கை ராஜூவிற்கு இருக்கு. அவர் டாஸ்க்குகளை சரியாகச் செய்வதில்லை” என்கிற காரணம் பாவனியால் சொல்லப்பட்டது. “அப்படின்னா நீங்க போங்க” என்று பாவனியை பதிலுக்கு ராஜூ நாமினேட் செய்ய “எனக்கு விளையாடணும்னு இருக்கு. கடைசி வாரம் வரைக்கும் இருக்க ஆசைப்படுகிறேன்” என்றார் பாவனி.

“என்னிடம் ஏதோவொரு விஷயம் இருப்பதால்தான் மக்கள் போன வாரம் காப்பாத்தி அனுப்பினாங்க” என்று நிரூப் சொல்ல “அப்படின்னா.. உனக்கு இந்த டிக்கெட் தேவையில்லை” என்று சொல்லி நிரூப்பை நாமினேட் செய்தார் பிரியங்கா. ஆனால் அடுத்து அவர் சொன்ன காரணம்தான் அபத்தமானது. “பிஸிக்கல் டாஸ்க்ல உன்னை என்னால ஜெயிக்க முடியாது. பயமா இருக்கு. மத்தவங்களை சமாளிச்சுடுவேன். இதைச் சொல்ல எனக்கு வெக்கம் கிடையாது” என்றார். பயம் என்கிற வார்த்தையை நிரூப் முன்னர் பயன்படுத்தியபோது பலமாக ஆட்சேபித்த பிரியங்கா, இப்போது அவரும் அதையே பயன்படுத்துவது முரண். ஒருவேளை நிரூப்பைப் போலவே இதையொரு உத்தியாக அவர் செய்கிறாரா என்று தெரியவில்லை. என்றாலும் ‘உன்னிடம் என்னால் மோத முடியாது’ என்று ஒருவர் சொல்வது சரியான காரணம் இல்லை. அது அவருடைய பலவீனத்தைத்தான் காட்டுகிறது. “என்னோட மோத முடியாதுன்னா விளையாடாதே” என்று நிரூப் வலுவாக கவுன்ட்டர் வைக்க இரண்டு பேருக்கும் வழக்கம் போல் முட்டிக் கொண்டது.

“என்னால கிரியேட்டிவ் டாஸ்க் செய்ய முடியாது” என்று நிரூப் சொன்னதை வலுவாகப் பிடித்துக் கொண்டார் பிரியங்கா. “யூ கோ மேன். ஒய் மீ” என்று பிரியங்கா சொல்ல, இந்த வாக்குவாதத்தினால் கோபம் அடைந்த நிரூப் “கதவைத் திறங்க. பிக்பாஸ்.. நான் போறேன்” என்று அழிச்சாட்டியம் செய்தார்.

நிரூப் - தாமரை
நிரூப் - தாமரை

ரணகளத்திலும் குழப்பம் செய்த தாமரை

இந்த ரணகளத்திலும் இடையில் நடந்த காமெடியாக பாவனிக்காக தாமரை சொன்ன காரணம் நகைச்சுவையாக இருந்தது. “ஏழு பேர் இருக்கற வரைக்கும் நான் இருந்தா போதும்-னு பாவனி முன்ன சொல்லியிருக்காங்க. அதனால அவங்க போகட்டும்” என்று தாமரை சொல்ல “நீ கூடத்தான் ரெண்டு வாரம் இருந்தா போதும்னு ஆரம்பத்துல சொன்னே” என்று வலுவான பிரதிவாதத்தை பாவனி முன்வைத்தார். தாமரையின் பலவீனமான காரணத்தைக் கேட்டு மற்றவர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது.

“எனக்கு இந்த வெற்றி முக்கியம். ஆனா பிரியங்காவிற்கு இது ஜாலியா வந்துட்டுப் போற இடம்தான். அவங்க பக்கெட் லிஸ்ட்ல பிக்பாஸூம் ஒண்ணு.. அவ்வளவுதான்” என்கிற காரணத்தைச் சொல்லி பிரியங்காவை நிரூப் நாமினேட் செய்ய ஆத்திரமடைந்தார் பிரியங்கா. “என்னை மக்கள் காப்பாத்துவாங்கன்னு தாமரை அடிக்கடி சொல்றாங்க. அப்படின்னா அவங்களுக்கு இந்த டிக்கெட் தேவையில்லை” என்று ஆணியில் அடித்தது போல் தெளிவான காரணத்தைச் சொன்னார் சஞ்சீவ். மற்றவர்கள் வழவழா என்று குழப்பும்போது இப்படி தெளிவாகப் பேசுபவர்களைக் கண்டால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

“எந்த தாமரை உண்மையான தாமரைன்னு கண்டுபிடிக்கறதுதான் இருக்கிற டாஸ்க்லயே ரொம்ப கஷ்டமான டாஸ்க்” என்கிற காரணத்தைச் சொல்லி தாமரையை நாமினேட் செய்தார் அமீர். “நான் எந்தக் கோபத்தையும் மனசுல வெச்சுக்க மாட்டேன். என் கிட்ட நல்லா பேசுனா.. நானும் பேசுவேன்” என்று சமாளித்தார் தாமரை. இந்த விஷயத்தில் பாயச மேட்டர் ஒன்று மட்டுமே போதும். அவருக்கு எதிரான சாட்சியம். ‘கோபத்தை மனதில் வைக்காதவர்கள் செய்யும் காரியமா அது?’.

பாவனி - பிரியங்கா  - தாமரை
பாவனி - பிரியங்கா - தாமரை

கட்சி மாறிய நாமினேஷன் வாக்குகள்

“நான் ஒரு டாஸ்க் மட்டும்தான் சரியா விளையாடலை. இனிமே விளையாடுவேன்” என்று சொன்னதையொட்டி ராஜூவிடமிருந்து நாமினேஷனை தாமரைக்கு மாற்றினார் பாவனி. எனவே ராஜூவும் பாவனியின் மீது முன்னர் குத்தியிருந்த முத்திரையை நீக்கி விட்டு நிரூப்பின் மீது குத்தினார். “பாவமா பார்க்காதடே” என்கிற பின்குறிப்பு வேறு. “வெரி குட் மக்களே. இப்பத்தான் கேம் ஆடத் துவங்கியிருக்கீங்க” என்று சிபி இப்போது உற்சாகப்படுத்தினார். நிரூப்பிற்கு எதிராக கூட்டம் சேரவே தாமரையும் நிரூப்பிற்கு எதிராக முத்திரை குத்தினார். (ப்பா.. முடியலைடா. சாமி!).

ஆக.. நிரூப் 4 வாக்குகளும் தாமரை 4 வாக்குகளும் பெற்று சமநிலையில் இருந்தார்கள். ஒரு வாக்கு மாறினால் இறுதியை எட்டி விடலாம். ‘அக்கா. நீ ஜெயிச்சா சந்தோஷம்க்கா” என்று அடிபட்ட முகத்துடன் சொன்ன நிரூப்பைப் பார்க்கும் போது நமக்கே பாவமாக இருந்தது. மக்கள் தனியாக கூடிப் பேசினார்கள். “ஒரு வலுவான போட்டியாளர்கூட நின்று மோதுவதுதான் சரியானது” என்று நிரூப்பிற்கு ஆதரவாக சஞ்சீவ் இந்தச் சமயத்தில் சொன்னது நேர்மையான காரணம். ‘சிலர் உடல் வலிமையில் சிறந்தவர்களாக இருந்தால், சிலர் புத்திக்கூர்மையில் சிறந்தவர்களாக இருப்பார்கள். அந்தந்த போட்டிகளில் அவரவர்கள் ஜெயிப்பதற்கான வாய்ப்பு உண்டு” என்று சஞ்சீவ் சொன்னதும் நல்ல பாயிண்ட்.

ராஜூவிற்கே ரைட் இன்டிகேட்டர் போட்ட தாமரை

“வீடு மொத்தமும் எதிர்க்கும்போது நான் எப்படிக்கா விளையாடறது?. நீ விளையாடுக்கா” என்று நிரூப் தாமரையிடம் பரிதாபமாக சொல்ல “நான் இங்க வந்ததே பெருமை. அது போதும். இன்னமும் இரண்டு வாரம் பிக்பாஸ் வீட்டு சோறு சாப்பிட்டா என் ஜென்மம் சாபல்யம் அடைஞ்சுடும். நீ வளர்ற பிள்ளை.. மனசார சொல்றேன். நீ விளையாடுடா தம்பி. வருண் இருந்திருந்தா அவனுக்குத்தான் தந்திருப்பேன். இப்ப உனக்குத் தரேன்” என்று பதிலுக்கு தாமரையக்கா உருகினார். “என்னவே நடக்குது இங்க?” என்று ராஜூ அந்தப் பக்கம் வந்து கேட்க “சும்மா பேசிட்டு இருந்தோம்” என்று பாசத்துக்குரிய தம்பி ராஜூவிற்கே அல்வா தந்தார் தாமரை. (அடேங்கப்பா..!).

மக்கள் சதியாலோசனை முடித்து விட்டு வந்தார்கள். “ஓகே. நான் என் வாக்கை மாத்தறேன். நிரூப்பிற்கு போடறேன்” என்றார் பாவனி. ஏதாவது ஒரு முடிவை எட்டியாக வேண்டும் என்கிற நிலைமைக்கு அனைவரும் வந்து விட்டார்கள். இந்தச் சமயத்திலாவது தாமரை வாயைத் திறந்திக்க வேண்டும். அதற்குள் காரியம் கை மீறி விட்டது. “ஓகே. நிரூப். நீதான் செலக்ட் ஆயிருக்கே” என்றபடி கறுப்பு ரோஜாவை நிரூப்பிடம் தந்தார் சஞ்சீவ். பெரும்பான்மையான முடிவு என்பதால் நிரூப் அதை வேறுவழியில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை. நிரூப்பிற்கு எதிராக ஐந்து வாக்குகளும் தாமரைக்கு எதிராக மூன்று வாக்குகளும் வந்தன.

நிரூப்பின் பரிதாபமான முகத்தைப் பார்த்ததும் தாமரைக்கு துயரம் கூடியிருக்க வேண்டும். "ஒருமனதா எடுத்த முடிவுன்னா. எல்லோரும்தானே எடுக்கணும்?” என்று குட்டையைக் குழப்ப ஆரம்பித்தார். “இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரூப் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறார். மற்றவர்கள் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறுவார்கள்” என்று பிக்பாஸ் அறிவித்தார். நியாயப்படி இத்துடன் இந்தக் காட்சி முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. தாமரையின் கேள்விகள் பிக்பாஸையே குழப்பிடியத்தன.

சஞ்சீவ் - பாவனி - பிரியங்கா
சஞ்சீவ் - பாவனி - பிரியங்கா

தாமரையக்காவின் கேள்விகளால தலைகீழான பிக்பாஸ் வீடு

“அப்ப.. நிரூப் என்ன விளையாடுவான்” என்று ஆரம்பித்து அவர் வரிசையாக கேட்க “நீ ஜெயிக்கணுமா. வேண்டாமா?” என்று பிரியங்கா மறுபடி மறுபடி கேட்க “நான் ஜெயிப்பேன்னு எப்படி எனக்குத் தெரியும்?” என்று பாயைப் பிறாண்ட ஆரம்பித்தார் தாமரை. இதனால் வழக்கமாக டென்ஷன் ஆகாத சஞ்சீவிற்கே டென்ஷன் எகிறி விட்டது. அதற்கும் தாமரை கோபித்துக் கொண்டார்.

பிரியங்கா மீண்டும் மீண்டும் கேட்க "எனக்கு ஜெயிக்க வேண்டாம்” என்று வெறுப்பில் சொன்ன தாமரை மறுபடியும் "நான் ஜெயிப்பேன்னு எப்படித் தெரியும்?” என்று ஆரம்பிக்க இப்போது நிரூப்பிற்கே டென்ஷன் ஏறியதோ, என்னமோ… அந்த ஏரியா முழுவதும் கேட்குமாறு உரத்த குரலில் கத்தி தன் உளைச்சலுக்கு வடிகாலைத் தேடிக் கொண்டார்.

"யம்மா. சாமி. உன் கிட்ட மல்லுக்கட்ட முடியாது” என்று பிரியங்கா எஸ்கேப் ஆக அடுத்ததாக சிபி வந்து விளக்கம் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய கதி என்னவாயிற்று என்பது அடுத்த எபிசோடில்தான் தெரியும்.