Published:Updated:

பிக் பாஸ் 89: ‘Ticket to Finale’ ; பாவனி குறித்த கேள்விக்கு அமீரின் ரியாக்ஷன்!வெல்லப்போவது யார்?

பிக் பாஸ் பாவனி

பிரியங்காவிற்கும் தாமரைக்கும் இடையே மறைமுக பாசக்காட்சிகள் ஓடுகின்றன. “பழைய தமிழ்ப்படம் மாதிரி சீசன் 5ஆயிடுச்சுல்ல” என்று சிபியே இதைக் கிண்டலடிக்கிறார்.

பிக் பாஸ் 89: ‘Ticket to Finale’ ; பாவனி குறித்த கேள்விக்கு அமீரின் ரியாக்ஷன்!வெல்லப்போவது யார்?

பிரியங்காவிற்கும் தாமரைக்கும் இடையே மறைமுக பாசக்காட்சிகள் ஓடுகின்றன. “பழைய தமிழ்ப்படம் மாதிரி சீசன் 5ஆயிடுச்சுல்ல” என்று சிபியே இதைக் கிண்டலடிக்கிறார்.

Published:Updated:
பிக் பாஸ் பாவனி

‘Ticket to Finale’ டாஸ்க்கில் அமீரும் சிபியும் முன்னேறியிருப்பது ஆச்சரியம். நிரூப் இருந்திருந்தால் முடிவுகள் மாறியிருக்கக்கூடும். போட்டியின் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க, பிக்பாஸ் வீட்டின் கூட்டணிகள் அசுர வேகத்தில் மாறுகின்றன. அண்ணாச்சியின் வெளியேற்றத்திற்குப் பிறகு பிரியங்காவுடன் ராஜூ அதிகம் தென்படுகிறார். இதைப் போலவே பாவனியும் பிரியங்காவுடன் ஒட்டிக் கொண்டார். தாமரை + நிரூப் கூட்டணி வலுவாகிக் கொண்டிருக்கிறது. ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று சோக மூடில் ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் டாஸ்க்கையும் சிறப்பாக விளையாடுகிறார் அமீர். சிபி தனிக்காட்டு ராஜாவாக உலவுகிறார். கூட்டணி மாறினாலும் இன்னமும் பழைய பாசங்கள் அவ்வப்போது தலைதூக்குகின்றன. “ஆமாம்.. இவர் பெரிய தேவயானி.. நான் சரத்குமார்.. பேப்பர் வெயிட்டை தெரியாம போடற மாதிரி போட்டுட்டு ஆசிர்வாதம் வாங்கறாரு” என்று சந்தானம் கிண்டலடிப்பது போல, பிரியங்காவிற்கும் தாமரைக்கும் இடையே மறைமுக பாசக்காட்சிகள் ஓடுகின்றன. “பழைய தமிழ்ப்படம் மாதிரி சீசன் 5ஆயிடுச்சுல்ல” என்று சிபியே இதைக் கிண்டலடிக்கிறார்.

எபிசோட் 89-ல் என்ன நடந்தது?

“ஏன் சரியா விளையாடாம சொதப்பினே?” என்று பிரியங்காவிடம் கேட்ட அதே கேள்வியை ராஜூவிடமும் கேட்டு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் நிரூப். இந்த ஒரே விஷயத்தை பிரியங்காவும் ராஜூவும் வெவ்வேறு விதங்களில் எதிர்கொண்டதை கவனியுங்கள். எத்தனை வித்தியாசம்?! பிரியங்கா, நிரூப்பிடம் உக்கிரமாக வாக்குவாதம் செய்தார். ஆனால் ராஜூவோ தனது நகைச்சுவையால் அதை திறமையாக மழுப்பி விட்டார். “ஃபர்ஸ்ட் ரவுண்டுல தோத்துட்டு.. நீயெல்லாம் என்கூட பேசக்கூடாது தம்பி.. முதல் ரவுண்டு பெரிசா, மூணாவது ரவுண்டு பெரிசா..?” என்று நிரூப்பையே பதிலுக்கு அவர் கலாய்க்க, ராஜூவின் இடுப்பில் நிரூப் கிச்சுகிச்சு மூட்ட, பார்க்கவே சிரிப்பாக நடந்து முடிந்தது.

பிக்பாஸ் வீட்டில் மாறும் உறவுகள்; சிக்கல்கள்

“பாவனியோட கட்அவுட் மட்டும் இருந்திருந்தா.. கொலைவெறியோட.. அதுல முட்டையை வீசியிருப்பேன்” என்று பாவனியை வைத்துக்கொண்டே ராஜூ கிண்டலடிக்க, “தெரியும்டே” என்பது மாதிரி பாவனி ரசித்து சிரித்தார். பிரியங்கா vs தாமரையிடம் ஏற்படும் பாச மாறுதல்களையும் பற்றி ராஜூ கிண்டலடித்தது சிறப்பு.

“இந்த கேம் முடியற வரைக்கும் தாமரைகூட பேச மாட்டேன். இப்படியேதான் இருப்பேன். எதிர்பார்ப்பு வெச்சாதான் பிரச்சினை. அவகூட பேசறதைப் பத்தி வெளில போய் பார்த்துக்கலாம்” என்று அனத்திய பிரியங்கா, இந்த வரிசையில் பிறகு நிரூப்பையும் சேர்த்துக்கொண்டார். இந்த பிரசவ வைராக்கியம் எத்தனை நாட்களுக்குத் தாங்குகிறது என்று பார்ப்போம்.

பிரியங்கா
பிரியங்கா

“நீ வேணும்ன்ட்டே சில விஷயங்களைப் பண்றே.. தனியா உக்காந்து அழுவுறே.. ‘நான் அநாதை’ன்னு சீன் போடறே.. உன் ரசிகர்களுக்கே இதனால கோபம் வந்துடும்” என்பதுபோல் பேசி தாமரையின் நாடகத்தை அம்பலமாக்கினார் ராஜூ. ‘நான் உனக்கு உதவி செய்யாமலா இருக்கிறேன்.. நீதானே ஒதுங்கிப்போகிறாய்?’ என்று கேட்பதுதான் ராஜூவின் ஆதங்கத்தின் சாரம்.

‘விளையாடு மங்காத்தா’ என்கிற ரகளையான பாடலுடன் பொழுது விடிந்தது. “பிரியங்காவைப் பார்த்தா பாவமா இருக்குது.. எப்படி பார்க்குது பாரேன்.. ஆனா வாயில் இருந்து வர்ற வார்த்தைகள்லாம் வெஷமா இருக்கே.. என்ன கண்றாவி இது?!”.. ‘உன்னை மட்டும்தான் நம்பறேன்-ன்னு பாவனிகிட்ட சொல்றாடா.. அவ.. த்தூ.. த்தூ..ன்னு துப்புறதுல்லாம் எனக்குப் பிடிக்காதுடா தம்பி” என்று பிரியங்கா பற்றி நிரூப்பிடம் அலுத்துக் கொண்டிருந்தார் தாமரை. “நேத்து நைட்டு தாமரை ராஜூவோட பேசிட்டு இருந்தா” என்று பிரியங்காவிற்கு தகவல் சொல்லிக் கொண்டிருந்தார் பாவனி.

பாசமலர் திரைப்படத்தையும் விஞ்சும் காட்சிகள்

“சமையல்லாம் நாங்க பார்த்துக்கறோம்.. நீ கிளம்பு.. காத்து வரட்டும்” என்பது போல் பாவனியை நிரூப் விரட்ட, பாவனியின் முகம் சுண்டியது. “ஏண்டா.. அந்தப் பிள்ள கிட்ட போய் வம்பிழுக்கற?” என்று கடிந்து கொண்ட தாமரை, பாவனியை இழுத்து கன்னத்தில் முத்தம் கொடுத்ததெல்லாம் உலக அதிசய ரகம். குஷி படத்தின் விஜய், ஜோதிகா மாதிரி பிரியங்காவும் தாமரையும் எதிர் தரப்பின் பொசசிவ்னஸை கிளறி விடும் வேலையில் இருக்கிறார்கள் போல.

‘பாசமலர்’ காட்சிகள் ஆரம்பமாகின. தேங்காய் தண்ணீரை பிரியங்காவிற்கு தருவது தாமரையின் பழக்கம் போலிருக்கிறது. இப்போது அவர்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லாவிட்டாலும், தேங்காய் தண்ணீர் போலவே உள்ளுக்குள் ஈரம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. எனவே தேங்காய் நீரை, பிரியங்காவின் அருகில் வைத்து அமைதியாக சென்றுவிட்டார் தாமரை. சாப்பாடு என்று வந்துவிட்டால் நம்மாளுதான் வெக்கம், மானம், சூடு, சொரணை என்று எதையும் பார்க்க மாட்டாரே?! எனவே டாஸ்மாக்கில் கட்டிங் போடச் சென்றவன் மாதிரி, அதை எடுத்து கப்பென்று ஒரே கல்ப்பில் அடித்தார் பிரியங்கா.

தாமரை
தாமரை

பிறகு கேமரா முன்னால் வந்து “அவளா வந்து பேசட்டும். நான் பேச மாட்டேன்.. அவதான் என்னை முதல்ல தள்ளி விட்டா.. தேங்காய் தண்ணிக்கு பதிலா சாக்லேட் தருவேன்..” என்று பிரியங்கா அனத்தியது எல்கேஜி குழந்தை மாதிரி க்யூட்டாக இருந்தது. சொன்னதைப் போலவே ஒரு சாக்லேட்டை கொண்டு போய் தாமரையின் அருகில் வைத்து விட்டு வர, ‘என்னடா. இது?” என்பது நிரூப்பைப் பார்த்தார் தாமரை. “உங்க ரெண்டு பேரோட டிராமா இருக்கே.. உலக லெவல்” என்று கிண்டலடித்தார் நிரூப்.

இன்னொரு பாசமலர் காட்சியும் அரங்கேறியது. “வயிறு எரிச்சலா இருக்கு. என்னன்னு தெரியல” என்று வாழைப்பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் தாமரை. அந்த இடத்தில் ராஜூ இருந்திருந்தால், “கேம்ல நீ தோத்துட்டு மத்தவங்க ஜெயிக்கறத பார்த்தா அப்படித்தான் வயறு எரியும்” என்று கிண்டலடித்திருக்க்கூடும். “வயிறு எரிஞ்சா.. அல்சர் இருக்கலாம். தேங்காய் சாப்பிட்டா சரியாயிடும்” என்று பாசத்துடன் யாருக்கோ சொல்வது போல் பிரியங்கா மருத்துவக்குறிப்பு தர “ஆமா… இவரு பெரிய சரத்குமார்.. அவங்க தேவயானி” என்பதாக கிண்டலடித்தார் சிபி.

நிரூப் - தாமரை
நிரூப் - தாமரை

‘தாமரை உண்மையிலேயே வெள்ளந்தி?’

‘டிக்கெட் டூ பினாயில்.. ச்சே. ஃபினாலே’’ டாஸ்க் எண் நான்கு துவங்கியது. போட்டியில் நீடிக்கும் மூன்று போட்டியாளர்களோடு (சஞ்சீவ், சிபி. அமீர்) மற்றவர்களும் இதில் பங்கேற்பார்கள். ஒருவர் ஒரு கருத்தைச் சொல்ல, அது உண்மையா அல்லது பொய்யா என்பதைப் போட்டியாளர்கள் முறையே பச்சை மற்றும் சிவப்பு நிறத்தை அழுத்தி பதில் சொல்ல வேண்டும். அது பெரும்பான்மையான முடிவோடு ஒத்துப்போனால் நின்றிருக்கும் கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு அவர் தான் முன்னேறலாம். அல்லது சக போட்டியாளரைப் பின்னுக்கும் தள்ளலாம். தவறாக இருந்தால் அங்கேயே நிற்க வேண்டும்.

இப்படியே சென்று முதலில் இறுதிக்கட்டத்தை அடையும் இரண்டு நபர்கள் இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுவார்கள். பின்தங்கும் ஒருவர் தோல்வியடைவார். இதுதான் சவால். திறமையாகவும், சுவாரசியமாகவும் கேள்வி கேட்பது ஒரு கலை. இதில் மிக அரிதான கேள்விகள்தான் அப்படி இருந்தன. இதர கேள்விகள் எல்லாம் சுமார். அதிலும் தாமரை நிரம்புவும் யோசித்து, தயங்கி எதை எதையோ கேட்டார். “தாமரை உண்மையிலேயே வெள்ளந்தி” என்று சஞ்சீவ் போட்டுக் கொடுத்த கருத்திற்கு அனைவருமே ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். தாமரை மட்டுமே ‘ஆம்’ என்றார். (தாமரை தற்கொலைப்படை ரசிகர்களுக்கு இதில் ஏதாவது செய்தி இருக்கலாம்).

ரணகள கேள்வி டாஸ்க் ஆரம்பம்

ரணகள கேள்வி டாஸ்க் தொடங்கியது. முதல் கேள்வியே வில்லங்கமாக இருந்தது. சிபி குறித்து சஞ்சீவிடம் நிரூப் கேட்டது இதுதான். “கேமிற்கு உண்மையா இருக்கேன்னு சொல்லிட்டு கேம் ஆடாமயே சிபி ஜெயிச்சிடுவான்” என்று சொன்னார். “கேம் ஆடாம எப்படி ஜெயிக்க முடியும்?” என்று குழம்பினார் தாமரை. இதற்கு ‘பொய்’ என்று சிவப்பு நிறத்தைக் காட்டி பதிலளித்தார் சஞ்சீவ். இது பெரும்பான்மையான முடிவிற்கு ஒத்துப்போனது. நிரூப் மற்றும் ராஜூ “ஆம்” என்று பதில் அளித்திருக்க தாமரை, பாவனி, பிரியங்கா ஆகிய மூவரும் “இல்லை” என்று சிவப்பு நிறத்தை அழுத்தியிருந்தார்கள்.

இந்த டாஸ்க்கில் கருத்துகள் வெளிப்படையாகப் பதிவாகும் என்பதால் மனதிற்குள் அது உண்மை என்று தெரிந்திருந்தாலும் பலர் சேஃப் கேம் ஆடியதைப் போல்தான் தெரிந்தது. இந்த டாஸ்க்கில் ஏராளமாக வெளிப்பட்ட கேள்விகளில் முக்கியமான சிலதைப் பற்றிப் பார்ப்போம்.

“அபிநய் விவகாரம் தொடர்பாக பாவனியிடம் அமீர் செல்வாக்கு செலுத்துகிறார்” என்கிற கேள்வியை பாவனியே முன்வைத்தார். இந்தக் கேள்விக்கு அமீர் பதில் சொல்ல வேண்டும். “இத பத்தி பேச வேண்டாம்னு சொல்லியிருக்காங்களே?” என்று ராஜூவும் பிரியங்காவும் ஆட்சேபம் எழுப்ப, தன் கேள்வியில் உறுதியாக இருந்தார் பாவனி. இதன் மூலம் பொதுவில் சில விஷயங்களை தெளிவுப்படுத்துவது அவரின் நோக்கமாக இருக்கலாம். “தெரியலை’ன்ற பட்டன் இல்லையே!” என்கிற குழப்பத்துடன் அழுத்தினார் ராஜூ. அமீர் இதற்கு ‘பொய்’ என்கிற பதிலை அளிக்க இது மெஜாரிட்டியுடன் ஒத்துப் போனது. தாமரை மட்டுமே ‘ஆம்’ என்று சொல்லியிருந்தார்.

சிபி - அமீர்
சிபி - அமீர்

‘ராஜூ விட்டுத் தருவது தியாகமா, உத்தியா?’

“ராஜூ மத்தவங்களுக்கு விட்டுத் தர மாதிரியேதான் விளையாடறாரு” என்கிற அபிப்ராயத்தை நிரூப் சொல்ல “அது யாருக்குன்னு பேர் சொல்லுங்க” என்று மற்றவர்கள் வற்புறுத்த, அதைச் சொல்ல மறுத்து விட்டார் நிரூப். அமீர் இதற்கு பதில் சொல்லவேண்டும். அவர் சிவப்பு நிறத்தைக் காண்பிக்க, பெரும்பான்மையுடன் ஒத்துப் போகவில்லை. ஆக ‘ராஜூ விட்டுத் தருகிறார்’ என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். இதைப் பற்றி பிற்பாடு பெரிய ஆய்வுக் கட்டுரையையே விரல் விட்டு நிரூப் எழுதிக் கொண்டிருந்தார்.

“நான் அமீரை வண்டை வண்டையா கேட்கணும்” என்று ஆரம்பித்த பிரியங்கா, “வைல்ட் கார்டு என்ட்ரி என்பதால், பாவனியுடன் நெருங்கிப் பழகுவதை ஜெயிப்பதற்கான உத்தியாக அமீர் பயன்படுத்துகிறார் என்று வீட்டில் உள்ளவர்கள் நினைத்தார்கள்” என்கிற அபிப்ராயத்தை பிரியங்கா முன்வைத்தார். இதற்கு அமீர் ‘உண்மை’ என்று பச்சை நிறத்தைக் காட்ட, பெரும்பான்மை முடிவோடு அது ஒத்துப் போனது.

“டைட்டில் ஜெயிப்பதற்காக இந்த வீட்டில் அனைவரும் போலியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்கிற நேர்மையான அபிப்ராயத்தை சஞ்சீவ் முன்வைத்தார். ஆனால் யார் இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்வார்கள்? ‘பொய்’ என்று அமீர் சிவப்பு நிறத்தைக் காண்பிக்க, அது பெரும்பான்மையாக ஒத்துப் போனது. சஞ்சீவ் சொன்னது இல்லை என்பது போல் தெரிந்தது. என்னவொரு போங்காட்டம்?!

“அண்ணாச்சியை ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி மாதிரி இருக்குன்னு கிண்டல் பண்ணிட்டு, பிரியங்காவே இப்ப காமெடி பண்ணிட்டு இருக்காங்க. அவங்க ஃபேமிலி வந்துட்டுப் போனப்புறம்தான் இந்த மாற்றம்” என்று வில்லங்கமான குற்றச்சாட்டை நிரூப் முன்வைத்தார். இதற்கு அமீர் பதில் சொல்ல வேண்டும். ‘பொய்’ என்கிற சிவப்பு நிறத்தை அவர் காண்பிக்க, அமீர் ஒரு மதிப்பெண் பெற்று முன்னுக்கு நகர்ந்தார். இதை மறுத்து நிரூப்பிடம் ஜாலியாக வாக்குவாதம் செய்தார் பிரியங்கா.

செஸ் டாஸ்க்கில் வெற்றி பெற்ற சிபி மற்றும் அமீர்

“இந்த டாஸ்க்கில் இருந்து சிபி எப்படியாவது வெளியே போகணும் என்று நிரூப் விரும்புகிறார்” என்கிற கருத்தை பிரியங்கா முன்வைக்க, அமீர் இதை ஒப்புக்கொண்டது போல் பச்சை நிறத்தை அழுத்தினார். பெரும்பான்மையோர் அதைத்தான் நினைக்கிறார்கள் என்று விடை வந்தது. .

போட்டியின் கிளைமாக்ஸ் நெருங்கியது. சிபி முன்னே வந்து வெற்றி பெற்று விட்டார். அமீரும் அதற்கடுத்த நிலையில் நிற்கிறார். இப்போது சிபி ஒரு கடினமான கேள்வியைக் கேட்டால்தான் அமீரை கட்டுப்படுத்த முடியும். எனவே “78-வது நாள்ல மட்டன் சமைச்சோம்” என்கிற கோக்குமாக்கான ஒரு ஸ்டேட்மெண்டை சொல்ல “பொய்” என்கிற பட்டனை அழுத்தினார் அமீர். அது மெஜாரிட்டியுடன் ஒத்துப் போனது. “அடப்பாவிகளா.. அன்னிக்கு மட்டன்தான் சமைச்சோம்” என்று சிரித்தார் சிபி.

ஆக.. சிபி, அமீர் ஆகிய இருவரும் இந்த சதுரங்க டாஸ்க்கில் ஜெயிக்க, சஞ்சீவ் தோற்றுப் போனார்.

டாஸ்க் முடித்து வெளியே வந்த அமீர் “தாமரை பயங்கரமான புத்திசாலி” என்று சர்காஸ்டிக்காக சொல்ல பிரியங்காவும் பாவனியும் அதை சிரிப்புடன் ஆமோதித்தார்கள். “நீ யாருக்காக விட்டுத் தந்து ஆடறே… எனக்காகவா?” என்று அமீர் ராஜூவிடம் கேட்க, மையமான புன்னகையுடன் “இந்த டிக்கெட் டாஸ்க் முடியட்டும்” என்று பதில் சொல்லாமல் மழுப்பினார் ராஜூ.

அமீர்
அமீர்

“எனக்காக ராஜூ விட்டுத் தந்திருக்க மாட்டான்” என்று அமீர் பிறகு தீர்மானமாகச் சொல்ல ராஜூவின் கேம் பிளானை நூறுபக்க கட்டுரையாக ஆய்வு செய்தது போல் விளக்கமாகப் பேசினார் நிரூப். “அவனுக்கு மொதல்ல என்னைத் தூக்கணும்னு பிளான். அப்புறம் அவனுக்கு வாகானவங்களை ஃபைனல் வரைக்கும் கூட்டிட்டு போய் டைட்டில் அடிக்கணும்னு நெனக்கறான்.. பிரியங்காவால தனியா விளையாட முடியாது. அவளுக்கு கூட ஆள் வேணும். அதனால்தான் ராஜூ கிட்ட ஒட்டிக்கிட்டா” என்பதை குறுக்கும் நெடுக்குமாக கணக்குப் போட்டு படம் வரைந்து விளக்கினார் நிரூப். “ராஜூ விட்டுத் தந்துதான் விளையாடறான்” என்று பாவனியும் பிறகு அடித்துக் கூறினார்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

கோல்டன் டிக்கெட்டை வெல்லப் போவது யார்?

“யார் கிட்டயும் பேச பயமா இருக்கு” என்ற பிரியங்கா, கேமரா முன்பு பேசிக் கொண்டிருந்தார். கேமராவிற்கு ‘ரமேஷ்’ என்று பெயர் வைத்திருக்கிறாராம். “ஆமாம்னா. இப்படி தலையாட்டு.. இல்லைன்னா. இப்படி தலையாட்டு.. ஆடலைன்னா கேமரால எண்ணெய் ஊத்து” என்று அந்த காமிராவைப் போட்டு படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார். ஒரு பெண் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட காமிரா என்ன அவரின் கணவரா?

“நிரூப் மத்தவங்கள கிட்டலாம் பேசறான்.. எனக்கு எதுவுமே சொல்லித் தர மாட்டேன்றான். அப்படி நான் என்ன பண்ணினேன்” என்று ஆதங்கப்பட்டார் பிரியங்கா. “ராஜூவும் பிரியங்காவும் இப்ப ஒண்ணாயிட்டாங்க. நம்மளத்தான் தப்பா காட்டறாங்களா. அவங்களைக் காட்டறதில்லயா?” என்று நிரூப்பிடம் அனத்திக் கொண்டிருந்தார் தாமரை.

ஆக.. விசு திரைப்படங்களில் வரும் உறவுச்சிக்கல்களைப் போல பிக்பாஸ் வீட்டின் மனிதர்களுக்குள் குறுக்கும் நெடுக்குமாக பல குழப்பங்கள் உலவுகின்றன. போட்டி நாள் நெருங்க நெருங்க இது இன்னமும் உக்கிரமாகும் போல் இருக்கிறது.

டிக்கெட் டாஸ்க்கில் யார் வெல்வார்கள்? சிபியா அல்லது அமீரா?