Published:Updated:

பிக் பாஸ் 95 : சாணிக் குளியல்; உப்பில்லா சாப்பாடு; ‘Dare’, ‘Sacrifice’ டாஸ்க்கில் நடந்தது என்ன?

பிக் பாஸ் டாஸ்கில் பாவனி

பிக் பாஸ் அவ்வப்போது ஏலத் தொகையை கூட்டிக் கொண்டேயிருக்க, ‘கருமமே கண்ணாயினராக’ இருந்த பிரியங்கா, மூச்சுக்கு ஒருமுறை ஓடி வந்து வெளியே எட்டிப் பார்த்து மாற்றப்பட்ட தொகையை மக்களுக்கு ஹைடெஸிபலில் அறிவித்துக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் 95 : சாணிக் குளியல்; உப்பில்லா சாப்பாடு; ‘Dare’, ‘Sacrifice’ டாஸ்க்கில் நடந்தது என்ன?

பிக் பாஸ் அவ்வப்போது ஏலத் தொகையை கூட்டிக் கொண்டேயிருக்க, ‘கருமமே கண்ணாயினராக’ இருந்த பிரியங்கா, மூச்சுக்கு ஒருமுறை ஓடி வந்து வெளியே எட்டிப் பார்த்து மாற்றப்பட்ட தொகையை மக்களுக்கு ஹைடெஸிபலில் அறிவித்துக் கொண்டிருந்தார்.

Published:Updated:
பிக் பாஸ் டாஸ்கில் பாவனி

“பரவாயில்லப்பா.. இந்தத் தம்பி கொஞ்சம் திறமையா ஆடுது” என்று நாம் பொதுவாக எண்ணிக் கொண்டிருந்த நிரூப், நேற்றைய எபிசோடில் எல்கேஜி குழந்தையை விடவும் மோசமாக அழிச்சாட்டியம் செய்ததுதான் ஹைலைட். ஒரு சின்ன அறிவிப்பைகூட சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவர் மற்றவர்களைப் போட்டு படுத்தி எடுத்ததும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த ரணகள விவாதமும், Communication Skill என்பது எத்தனை முக்கியம் என்பதை உணர வைத்தது. நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருக பெருகத்தான் நமக்குள் தகவல் இடைவெளியும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்பது நான் உணர்ந்த லாஜிக். புறா காலில் கடிதம் அனுப்பிய காலத்தில்கூட மனிதன் இத்தனை குழம்பியிருக்க மாட்டான்.

நிரூப்
நிரூப்

ஒரு சாதாரண விஷயத்தை தவறாகப் புரிந்துகொண்டு எப்படி ‘கச்சாமுச்சா’வென்று கொத்துப் பரோட்டா போடக்கூடாது என்பதுதான் நேற்று நடந்த நாடகத்தின் மூலம் நாம் கற்க வேண்டிய பாடம். இது பிக்பாஸ் வீட்டு சமாச்சாரம் மட்டுமல்ல. நம் வீட்டிலோ, அலுவலகத்திலோ, நண்பர்களிடமோ கூட இது போன்ற வீண் விவாதம் நிச்சயம் நடந்திருக்கும். நம் தவறை ஒப்புக் கொள்ள ஈகோ அனுமதிக்காமல், நம் மீது அன்பு வைத்திருக்கும் அனைவரையும் போட்டு இழுத்தடிப்போம். நிரூப் செய்ததும் அதுவேதான். இதை அடுத்த வீட்டு சமாச்சாரமாகப் பார்க்கும் போது ‘என்னடா. இவன்..சொதப்பறான்..’ என்பது போல் நமக்கு எளிதாகப் புரியும். ஆனால் நமக்கும் பொருத்திப் பார்ப்பதில்தான் இதன் வெற்றி இருக்கிறது.

இந்த நகைச்சுவை நாடகத்தை ராஜூ கையாண்ட விதம் இருக்கிறதே!.. அபாரம். ராஜூ மீது சில விமர்சனங்களை வைக்க முடிந்தாலும், அசந்தர்ப்பமான சூழல்களை அவர் நிதானமாக அணுகுவதில் சில சமயங்களில் பிரமிப்பை ஏற்படுத்துகிறார். இறுதிப் போட்டிக்கு தகுதியான ஆசாமி என்பதை நிரூபிக்கிறார். நிரூப்பிடமிருந்து எதை கற்கக்கூடாது என்கிற பாடமும், ராஜூவிடமிருந்து என்ன கற்க வேண்டும் என்கிற பாடமும் நேற்றைய எபிசோடில் இருந்தது.

எபிசோட் 95-ல் என்ன நடந்தது?

‘காசு.. பணம்.. துட்டு.. மணி.. மணி..’ என்கிற பொருத்தமான பாடலை பிக்பாஸ் போட்டார். “அந்தப் பொட்டி சூப்பரா இருக்குல்ல” என்று டைமண்ட் பெட்டி மீதே கண்ணாக இருந்தார் நிரூப். அவர் இறுதியில் ஜெயித்தால், ‘பெட்டி மட்டும் போதும்” என்று சொல்லுவார் போலிருக்கிறது.

அஞ்சாயிரம்.. பத்தாயிரம்.. பிம்பிலிக்கா பிலாப்பி…

பிக் பாஸ் அவ்வப்போது ஏலத் தொகையை கூட்டிக் கொண்டேயிருக்க, ‘கருமமே கண்ணாயினராக’ இருந்த பிரியங்கா, மூச்சுக்கு ஒருமுறை ஓடி வந்து வெளியே எட்டிப் பார்த்து மாற்றப்பட்ட தொகையை மக்களுக்கு ஹைடெஸிபலில் அறிவித்துக் கொண்டிருந்தார். ஆண்கள் பாத்திரம் விளக்காத பிரச்சினை மறுபடியும் எழவே, “நாங்க பார்த்துக்கறோம்.. ஒதுங்குங்க..” என்று ஆண்கள் அணி சமையல் ஏரியாவை கைப்பற்றியது. இந்தச் சமயத்தில் ராஜூ சொன்ன கமெண்ட் ரசிக்கத்தக்கதாக இல்லை. ஆனால் அவர் சொன்ன அதே வார்த்தையே மாலையில் தண்டனையாக மாறியதில் ஒரு நீதி உள்ளது.

அமீர்
அமீர்

“ராஜூ வேலையே பண்ணலை” என்று ஒருபக்கம் அனத்திக் கொண்டே, இன்னொரு பக்கம் தாமாக முன்வந்து வேலை செய்து தந்து, ராஜூ போன்றவர்களை செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கும் திருப்பணியை தாமரை மிகச்சிறப்பாக செய்கிறார். இது பெரும்பாலான பெண்கள் செய்யும் தவறுதான். வீட்டில் ஆண் பிள்ளைகளையும் ஆண்களையும் வேலை செய்ய விடாமல் அல்லது கற்றுத்தராமல் நாள் பூராவும் உழைத்து விட்டு பிறகு “எல்லாம் என் கிரகம்” என்று தற்பெருமையுடன் அலுத்துக் கொள்வதில் சில பெண்கள் ஏதோவொரு சுகம் காண்கிறார்களோ, என்னவோ. புதுமருமகளை கையாளும் மாமியார் டெக்னிக் இது. அறியாமை காரணமாக, பெண்களின் மீதான உழைப்புச்சுரண்டலுக்கு பெண்களில் பலரே காரணமாக இருக்கிறார்கள்.

“என்னால வேலை செய்யாம இருக்க முடியாது” என்று தாமரை சொன்னதும் உண்மை. தினமும் அலைந்து திரிந்து பழகிப் போனவர்களால் வெறுமனே அமர்ந்திருக்க முடியாது. “உன் பையனை, கணவனை இப்படித்தான் வேலை செய்ய விடாம வளர்ப்பியா?” என்று தாமரையிடம் சரியான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார் பிரியங்கா.

தாமரை
தாமரை

“ஐம்பது லட்சமா,?.. ஏம்ப்பே. நீ பார்த்தே?”

ஏலத்தொகை ஆறு லட்சமாக உயர்ந்ததும் வீடெங்கும் கத்திக் கொண்டு திரிந்தார் பிரியங்கா. பாத்ரூமில் இருந்த சிபியையும் விட்டு வைக்கவில்லை. “பணத்தை நீ எடுத்துராத… என்ன?” என்று நிரூப்பும் தாமரையும் பரஸ்பரம் பேசிக் கொண்டு ஆனால் இன்னொரு பக்கம் பணப்பெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். “உனக்குத்தான் கஷ்டம்ன்னு சொல்றேல்ல.. நீ எடுக்கலாமில்லே” என்று தாமரைக்கு ஆலோசனை சொன்னார் நிரூப். ஒருபக்கம் இது நிரூப்பின் உத்தியாக இருந்தாலும் கூட நல்ல யோசனைதான். ‘போட்டியில் ஜெயிக்க விருப்பமில்லை’ என்று சொல்லும் தாமரைக்கு, அவருடைய பின்னணியை வைத்து யோசித்துப் பார்க்கும் போது இதுவொரு நல்ல வாய்ப்புதான்.

பாவனி
பாவனி

“இதைவிடவும் வெளில பல கோடிகளை அள்ளும் வாய்ப்பு காத்துக்கிட்டு இருக்கும் போது இத ஏண்டா தம்பி நான் எடுக்கணும்?.. கோடி ரூபா கொடுத்தா கூட நான் எடுக்க மாட்டேன்” என்று வெட்டியான கெளரவம் பார்த்த தாமரை, ‘இந்தில ஐம்பது லட்சம் வரைக்கும் போயிருக்காம்..” என்று நிரூப் சொன்னவுடன் “என்னடா.. தம்பி சொல்ற…அம்பது லட்சமா?” என்று வாயைப் பிளந்தார். எதற்கு இந்தப் பாசாங்கு? “எனக்கு கோடில்லாம் வேணாம்.. 15 லட்சம் வரைக்கும் வந்தா கூட எடுத்துக்குவேன்” என்று பாவனி வெளிப்படையாகச் சொன்னார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு ஒன்பது லட்சமாக ரேட்டை ஏற்றினார் பிக்பாஸ். “யாராவது எடுத்துக்குவாங்களா?” என்று அப்பாவியான முகத்துடன் தாமரை கேட்க “கடைசில யாராவது ஒருத்தர்தான் ஜெயிக்கப் போறாங்க.. மத்தவங்களுக்கு எதுவும் கிடைக்காது. இது ஒரு வாய்ப்பு. யோசிச்சு முடிவு எடுக்க வேண்டிய விஷயம். நீயும் ஸ்மார்ட்டா யோசி” என்று ஆலோசனை சொன்னார் பாவனி.

‘தில் இருந்தா ஹலோ சொல்லு.. பயம் இருந்தா தள்ளி நில்லு’

அடுத்த டாஸ்க்கிற்கான ஏற்பாடுகளில் இறங்கினார் பிக்பாஸ் ‘Dare’, ‘Sacrifice’ என்கிற தலைப்பில் இரண்டு போன்கள் இருந்தன. எதில் போன் அடிக்கிறதோ, அதற்கேற்ப டாஸ்க் இருக்கும் என்பது எல்கேஜி பிள்ளைகள் கூட புரிந்து கொள்ளக்கூடிய விஷயம். ஆனால் போட்டியாளர்களுக்கு இருந்த பதட்டத்தில் எதுவும் புரியவில்லை. “dare.. அப்படின்னா என்ன?” என்று விசாரித்துக் கொண்டிருந்தார் சிபி.

பரிசுத் தொகையை எடுக்கலாம் என்கிற ஐடியா அமீருக்கு இருந்ததோ, என்னவோ, அவர் பிரியங்காவை தனியாக ஓரங்கட்டி பேச “இன்னமும் ரேட்டு ஏறட்டும்டா.. தம்பி.. நான் கூட எடுப்பேன்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணு” என்று துண்டித்துக் கொண்டு வந்தார் பிரியங்கா. முதலில் ‘Sacrifice’ போன் அடித்தது. ஓடிச்சென்று முந்திரிக்கொட்டை மாதிரி எடுத்த நிரூப், பிக்பாஸ் சொன்னதிற்கெல்லாம் மண்டையை ஆட்டி விட்டு, திடீரென்று கிச்சன் பக்கம் ஓடிக் கொண்டே “சர்க்கரை, உப்பு, வெங்காயம் மூணு அயிட்டத்தையும் எடுத்து வெச்சிடணுமாம். வாங்க. வாங்க.. க்விக்.. க்விக்..” என்று மற்றவர்களை அவசரப்படுத்த, அது யாராக இருந்தாலும் நிச்சயம் கடுப்பாகியிருப்பார்கள். போனில் பிக்பாஸ் சொன்னது இதுதான். “இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் இது. நீங்க எடுக்கற போனுக்கு ஏத்த மாதிரி டாஸ்க் இருக்கும். வெங்காயம், தக்காளி, உப்பு ஆகிய மூன்று விஷயங்களையும் தியாகம் செய்து விட்டு இந்த வாரம் முழுவதும் நீங்க சமைக்கணும்.. ஒருத்தர்தான் ஃபைனல் போயிருக்காங்க.” என்று மையமாகச் சொல்லி ‘ஆல் தி பெஸ்ட்’ என்கிற குறிப்புடன் போனை வைத்து விட்டார். நிரூப்பிற்கு ஏதாவது சந்தேகம் இருந்திருநதால் அப்போதே பிக்பாஸிடம் கேட்டுத் தெளிவுப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் பிக்பாஸ் சொன்னதை வைத்துப் பார்க்கும் போது, அது போட்டியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்படியான டாஸ்க் என்பது நன்றாகவே புரிந்தது. ஆனால் ‘தான் போனை எடுத்ததால் தனக்கு ஏதாவது ஆதாயம் இருக்கலாம்’ என்று நிரூப் தவறாகப் புரிந்து கொண்டாரோ, என்னமோ. அதுகூட பரவாயில்லை. இந்தச் சமையல் விஷயம், அனைவரையும் பாதிக்கக்கூடியது என்பதால் நிதானமாக அனைவரிடமும் அவர் கலந்தோசித்திருக்க வேண்டும். ஆனால் கடகடவென்று அவர் மற்றவர்களுக்கு உத்தரவு இடுவது போல் சொல்லியதால் மக்கள் எரிச்சல் அடைந்ததில் முழு நியாயம் இருக்கிறது. ‘என்ன டாஸ்க் இருக்குமோ” என்று ஏற்கெனவே பீதியில் இருப்பவர்களை, நிரூப்பின் முந்திரிக்கொட்டைத்தனம் இன்னமும் எரிச்சலும் கலவரமும் அடைய வைத்து விட்டது.

சர்க்கரை, உப்பு, வெங்காயம் இல்லாத சமையல்

இத்தனை நாட்கள் சற்றாவது லாஜிக்கோடு விளையாடிக் கொண்டிருந்த நிரூப், இறுதிக்கட்டத்து பரபரப்பில் சறுக்கி விழுந்தார். இதைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் இதை ஒப்புக் கொள்ள ஈகோ இடம் தராமல் அவர் ஆடிய கதகளி ஆட்டம் இருக்கிறதே?! தாங்க முடியவில்லை. இதன் மூலம் பார்வையாளர்களின் அதிருப்தியையும் நிச்சயம் அவர் சம்பாதித்துக் கொள்வார் என்றுதான் தோன்றுகிறது.

“பொறுடா. நீ முதல்ல எமோஷனைக் குறை. நிதானமா சொல்லு. இது உனக்கான டாஸ்க்கா. எல்லோருக்குமா?” என்று சிபியும் பிரியங்காவும் நிரூப்பை நிதானமாக விசாரிக்க முயன்றது சிறப்பு. “அது எனக்குப் புரியல. ஆனா எல்லோருக்கும் என்னமோ ஃபெனிபிட் இருக்கு” என்று பிக்பாஸை விடவும் நிரூப் அதிகமாக குழப்ப, இப்போது மக்களுக்கு சந்தேகம் வந்தது.

நிரூப் ஸ்ட்ராட்டஜி வைத்து விளையாடுகிறவர் என்பது ஏற்கெனவே அங்கு அழுத்தமாக நிரூபணம் ஆன விஷயம். எனவே இந்தச் சமயத்திலும் அவர் எதையோ மறைத்து, தனக்காக விளையாடுகிறாரோ என்கிற சந்தேகம் அனைவருக்கும் வந்ததில் தவறே இல்லை.

நிரூப்
நிரூப்

“உப்பு, சர்க்கரை இல்லாம எப்படிப்பா சமைக்கறது?” என்று தாமரை கேட்க, ‘ஒரு வாரம் பத்தியமா சாப்பிட முடியாதா, அந்தத் தியாகம் கூட செய்ய முடியாதா?” என்று எரிச்சலில் கத்தினார் நிரூப். பிரியங்கா பிறகு சரியாக குறிப்பிட்டது போல, நிரூப்பின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த வீட்டை வலுக்கட்டாயமாக அவர் இழுத்துச் செல்ல முயல்வது அராஜகம்.

அமீர் இறுதிப் போட்டிக்கு ஏற்கெனவே தகுதியாகி விட்டதால் அவர் இந்தச் சவால்களுக்கு உடன்பட வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால் அவரிடமும் இறங்கி வராமல் ரணகளமாக விவாதித்து இம்சை செய்தார் நிரூப். “எல்லாத்தையும் பிரிச்சு மேய்ஞ்சு அனலைஸ் செய்யற பையனுக்கு இது புரியலைன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு. புரியலைன்னா வெளிப்படையா பிக்பாஸ் கிட்டயாவது கேட்டிருக்கணும்” என்று பிரியங்கா சொல்வது சரியான பாயிண்ட். என்றாலும் “பிக்பாஸ் கிட்ட கேட்டு அவன் தெளிவா சொல்லட்டும். நிரூப்பிற்கான டாஸ்க் என்றால் நான் விட்டுத் தர தயார்.” என்று பிரியங்கா சொன்னது நல்ல விஷயம். அப்படி இறங்கி வந்தால்தான் ‘தன்னுடைய டாஸ்க்கிற்கு’ அவன் பதிலுக்கு உதவுவான் என்பது பிரியங்காவின் கணக்கோ என்னமோ?!

நிரூப்
நிரூப்

‘ஒரு புறாவிற்கு அக்கப்போரா?’

பிரியங்கா மட்டுமல்ல, ஏறத்தாழ அனைவருமே நிரூப்பிற்காக இறங்கி வர தயாராகவே இருந்தார். ஆனால் இதற்கு நிரூப் இறங்கி வரவில்லை என்பது விநோதமான முரண். “சரிடா.. முடியாதுன்னு சொல்லிட்டேங்கள்ல.. உங்க டாஸ்க் வரும் போது நான் முடியாதுன்னு ஒத்தைக்கால்ல நிப்பேன்” என்று அழிச்சாட்டியம் செய்தார் நிரூப்.

‘ஒரு புறாவிற்கு அக்கப்போரா?’ என்று நினைத்த பிக்பாஸ் “இந்த மங்குனி அமைச்சர்கள், ஒரு சாதாரண விஷயத்தை இப்படி இடியாப்பச் சிக்கலாக விவாதிக்கிறார்களே?” என்று மீண்டும் போனில் அழைத்தார். இந்த முறை பாய்ந்தோடி சென்று எடுத்தவர் சிபி. பிக்பாஸ் மீண்டும் விஷயத்தை தெளிவாகக் கூறி “இது அனைவருக்குமான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க். நீங்க எந்த போனை எடுக்கறீங்களோ, அதுக்கேத்த மாதிரிதான் டாஸ்க் வரும். ஒருத்தரைத் தவிர மத்தவங்க நாமினேஷன்ல இருக்கீங்க. மக்கள் பார்த்துட்டு இருக்காங்க” என்று சொல்ல “இதனால என்ன ஃபெனிபிட்?” என்று புத்திசாலித்தனமாக சிபி கேட்டார். “தில் இருக்கறதாலதானே போனை எடுத்தீங்க?.. அப்ப தில்லா விளையாடுங்க. தில்லுக்குத்தான் துட்டு” என்று பன்ச் டயலாக் எல்லாம் சொல்லி போனைத் துண்டித்தார் பிக்பாஸ். இந்த டாஸ்க்கை அனைவரும் சேர்ந்து செய்வதின் மூலம் இறுதியில் அதற்கான பலன் உண்டு என்பதே அவர் மறைமுகமாக சொல்ல வரும் செய்தி.

“இதாம்ப்பா விஷயம்.. கலந்து பேசி முடிவெடுக்கலாம்’னு பிக்பாஸ் சொன்னாரு” என்று மற்றவர்களிடமும் விஷயத்தைச் சொன்னார் சிபி. அனைவரும் ஒருமாதிரியாக இறங்கி வரும் நேரத்தில் “தில்லு இருந்தா பண்ணுங்கன்னு பிக்பாஸ் சொல்றாரு” என்று நிரூப் மறுபடியும் உசுப்பேற்ற “அது எப்படி எங்களுக்கு தில்லு இருக்கான்னு நீ கேட்கலாம்?” என்று அமீர் காண்டானார். “உனக்குத்தாம்பா தில்லு இருக்கு. எங்களுக்குல்லாம் வெக்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே கிடையாது” என்று பிரியங்காவும் உஷ்ணமானார். “மெஜாரிட்டியா ஒத்துக்கிட்டா நானும் ஒத்துக்கறேன்” என்று பிறகு இறங்கி வந்தார் பிரியங்கா.

சிபி
சிபி

‘உன் கண்ல பயத்தைப் பார்த்துட்டேன்’

“இன்னாடா பண்ணிடுவாங்க. முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லிடுவோம். தலையையா சீவிடுவாங்க.. ஏன் பயப்படறீங்க?” என்று கேள்வி கேட்பதில் தன் தில்லை காட்டினார் சிபி. (‘சும்மா இருந்த விளக்கை ஒடிச்சி.. அய்யா மன்னிச்சிடுங்கய்யா”-ன்னு அப்ப கதறிட்டு.. இப்ப ..பேச்சைப் பாரு” என்று பிக்பாஸ் உள்ளே இருந்து நகைத்திருக்கக்கூடும்). “நிருப்.. நீ.. ஒத்துக்கோடா. உன் கண்ல நான் பயத்தைப் பார்த்துட்டேன். அதனாலதான் வேகமா உள்ளே ஓடி வந்த” என்று நிரூப்பின் ஈகோவை சிபி உசுப்ப நிரூப்பும் பதிலுக்கு ஆக்ரோஷமானார்.

“ஏண்டா கத்தறீங்க?” என்று இப்போது குறுக்கிட்ட ராஜூ, ‘தம்பி.. இங்க வந்து உக்காரு” என்று நிரூப்பை விசாரித்த விதம் சிறப்பு. ஒரு உக்கிரமான சண்டையில் ஒருவர் உடனே குறுக்கிட்டாலும் பலன் இருக்காது. இரு தரப்பும் ஆவேசமாக சாமியாடி விட்டு மூச்சு வாங்க அமர்ந்திருக்கும் நிலையில்தான் பஞ்சாயத்திற்கு இறங்க வேண்டும். அதைச் சரியான தருணத்தில் செய்தார் ராஜூ. “நீ உனக்காக கேட்டியோன்னு எல்லாம் நெனச்சிட்டாங்க. பொய் சொன்ன மாதிரி மக்களுக்கு தெரிஞ்சது.. அவ்வளவுதான் மேட்டர்” என்று ராஜூ சொல்ல “யப்பா. டேய்.. உன்னை மாதிரி என்னால நிதானமா அவனை ஹாண்டில் பண்ண முடியாது” என்ற சிபி “கடுப்பேத்தறான் மை லார்ட்” என்று கொலைவெறியானார். “தப்பா சொல்லிட்டேன்”ன்னு நிரூப் ஒத்துக்கிட்டா..நான் இந்த டாஸ்க்கிற்கு ஒத்துக்கறேன்” என்று அமீர் ஆரம்பிக்க “நான் ஏன் ஒத்துக்கணும்?” என்று அதற்கும் காண்டானார் நிரூப்.

“நிரூப் சொன்னது இங்க யாருக்கெல்லாம் புரிஞ்சது?” என்று சிபி கேட்க, பிக்பாஸ் உள்பட அனைவருமே அங்கு உதட்டைப் பிதுக்கினார்கள். “சரிடா.. முதல்ல சாப்பிட்டு முடிப்போம். அப்புறம் உப்பு போட்ட சாப்பாடு கிடைக்குதோ. இல்லையோ” என்று சிபியை ராஜூ கூல் செய்த விதம் சிறப்பு.

“காலைல என்னால டீ சாப்பிட முடியாம இருக்க முடியாது. பைத்தியமே பிடிச்சுடும். இருந்தாலும் நான் ஒத்துக்கறேன். அடுத்தடுத்து வர்ற டாஸ்குகளை எல்லோரும் மறுக்காம பண்ணணும்.. ஓகேவா.. ” என்று அமீர் புது ஒப்பந்தம் போட, “எனக்கும் உப்பில்லாம சாப்பிடறது கஷ்டம்” என்று மறுபடியும் பிரியங்கா பாயைப் பிறாண்ட ஆரம்பித்தார்.

"நிருப் என்ன குழந்தையா?”

“உனக்கு இது ஓகேவாப்பா ராஜூ?” என்று பிக்பாஸ் தந்த டாஸ்க்கைப் பற்றி ராஜூவிடம் விசாரித்தார் தாமரை. ஒருவழியாக அனைவரும் அரைமனதாக இதற்கு சம்மதம் சொன்னார்கள். “ஏன் செல்லாக்குட்டி இப்படியெல்லாம் பண்றே.. நல்ல பிள்ளை இல்ல” என்று பாவனி, நிரூப்பிடம் செல்லமாக கோபித்துக் கொண்டிருக்க “அவன் என்ன குழந்தையா.. மடியில வெச்சு தாலாட்டிட்டு இருக்க.. என்னை Evil-ன்னு சொன்ன பய அவன்” என்று பிரியங்கா பாவனி மீது காண்டானார். “நான் சொல்லும் போது ‘நோ’ன்னு சொன்னாய்ங்க.. சிபி கரெக்ட்டா கேட்டுட்டு வந்துட்டாராம்.. இப்ப சரின்றாய்ங்க” என்று பாவனியிடம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் நிரூப்.

சம்பந்தப்பட்ட பொருட்களை எடுத்து மக்கள் ஸ்டோர் ரூமில் வைத்து விட்டாலும் கூட அதன் கதவுகள் மூடவில்லை. ‘எவரோ திருட்டுத்தனம் செய்திருக்கிறார்கள்’ என்பதன் அடையாளம் அது. பார்த்தால் ‘வெள்ளந்தி’ தாமரை செய்த ஊழல் அது. பத்து கிலோ உப்பை எடுத்து தண்ணீரில் அவர் மறைத்து வைத்திருக்க “கடல்ல கூட இவ்வளவு உப்பு இருக்காதே..” என்று கிண்டலடித்த ராஜூ அதையும் கொண்டு போய் ஸ்டோர் ரூமில் வைத்தார். சுற்றிலும் காமிராக்கள் இருக்கும் போதே எத்தனை தைரியம்? இதனால் இவர்கள் லக்ஸரி பட்ஜெட்டை இழப்பதோடு, இறுதி வாய்ப்பிலும் மண் விழலாம்.

“ஸ்டோர் ரூம் கதவு மூடறதுக்கு முன்னாடி கொஞ்ஞூண்டு சர்க்கரை எடுத்துக்கறேண்டா” என்று அமீரின் உதவியுடன் மினிஊழல் செய்தார் பிரியங்கா.

பிரியங்கா
பிரியங்கா

பிரியங்காவின் மினி ஊழல்கள்

மீண்டும் போன் அடித்தது. இம்முறை ‘Dare’ போன் வந்தது. அதை எடுத்தவர் அமீர். பிக்பாஸ் சொன்ன சவாலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் அவர். ஏனெனில் அந்தத் தண்டனையை அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் செய்ய வேண்டும். மாட்டுச்சாணம் கலந்த நீரை எடுத்து அனைவரும் மேலே ஊற்றிக் கொள்ள வேண்டும்” என்பதுதான் டாஸ்க். “எவ்வளவோ பார்த்துட்டம். இதைப் பார்க்க மாட்டமா” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டார் பிரியங்கா.

இந்தத் திருக்காரியத்தை முதலில் சிபி ஆரம்பித்து வைக்க அனைவரும் தொடர்ந்தனர். தலையில் ஊற்றுவார்களோ என்று பார்த்தால். ஜாக்கிரதையாக கழுத்தில் இருந்து ஊற்றிக் கொண்டார்கள். பாவனியின் மீது சாண நீர் ஊற்றப்பட்ட போது அதில் இருந்த எதையோ பார்த்து முகம் சுளித்தார் பாவனி. “என்னது அது.. புல்லா.. புண்ணாக்கா” என்று ஜாலியாக ஆராய்ச்சி செய்தார் பிரியங்கா. பாதி நீரை மட்டும் தன் மீது ஊற்றிக் கொண்டு மறுபடியும் மினி ஊழலை பிரியங்கா செய்ய முயற்சிக்க, தாமரை எச்சரிக்கை செய்யவே முழு பக்கெட்டையும் காலி செய்தார்.

ஆக…. ராஜூ காலையில் நக்கலான சொன்ன சொல், அவர்களுக்கே தண்டனையாக மாலையில் திரும்பி விட்டது. முற்பகல் சாணி பிற்பகல் பெய்யும் என்பது புதுமொழி