Published:Updated:

பிக் பாஸ் 97: ``இதெல்லாம் ஒரு வெற்றியா?” ``கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி!

பாவனி

இவர்களின் குழப்பத்தை அமீர் கிண்டலடிக்க ``டிக்கெட் கையில இருக்குன்ற ஆணவத்துல நீ ரொம்ப ஆடக்கூடாது தம்பி!” என்று ராஜூ சொல்ல அனைவருமே சிரித்தார்கள்.

பிக் பாஸ் 97: ``இதெல்லாம் ஒரு வெற்றியா?” ``கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி!

இவர்களின் குழப்பத்தை அமீர் கிண்டலடிக்க ``டிக்கெட் கையில இருக்குன்ற ஆணவத்துல நீ ரொம்ப ஆடக்கூடாது தம்பி!” என்று ராஜூ சொல்ல அனைவருமே சிரித்தார்கள்.

Published:Updated:
பாவனி
இரண்டாவது Finalist ஆக நிரூப் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். ஆனால் இதை அவர் அடைந்த விதம் இருக்கிறதே?! அது சற்று பங்கமான வழிதான். பிக்பாஸிற்கு வந்து விட்ட பிறகு ‘மானமாவது.. ரோஷமாவது..’ என்று நிரூப் நினைத்து விட்டாரோ என்னமோ! எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதுதான் துவக்கத்திலிருந்தே நிரூப்பின் திட்டம். அதற்காக சாம, தான, தண்ட, பேதம் என்று அனைத்தையுமே அவர் பின்பற்றுகிறார். "உனக்குப் பயம்" என்று சிபி உசுப்பேற்றினாலும் கூட "ஆமாம்.. எனக்குப் பயம்தான்.." என்று சொல்லியாவது ஒவ்வொரு டாஸ்க்கையும் ஒவ்வொரு விதமாக கடக்கிறார். இது அவரது உத்தி.

ஒரு வெற்றியை அடைய சில அவமானங்களை கடந்துதான் ஆக வேண்டும் என்பதுதான் நடைமுறை. ஆனால் அந்த அவமானத்தை தானே விரும்பிச் சென்று அந்த வெற்றியை அடைய வேண்டுமா? நிரூப்பின் வெற்றியில் இப்படியொரு களங்கம் இருந்தது. "நீ ஃபைனலுக்கு போன விதம் நல்லா இல்லைடா" என்று உண்மையாகவே தண்ணீரை கழுவி கழுவி ஊற்றி ஆசீர்வாதம் செய்தார் அமீர்.

எபிசோட் 97-ல் என்ன நடந்தது?

காலையிலேயே ‘Dare’ போன் அடித்தது. மணியடித்த அந்தச் சமயம் என்பது கொழுத்த ராகுகாலமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அது தொடர்பான விவாதம் மாலை வரைக்கும் இழுத்துச் சென்றது. இந்தக் களேபரத்தின் நாயகனாக விளங்கியவர் திருவாளர் நிரூப் அவர்கள்தான். எவ்வளவு செய்ய முடியுமோ…அவ்வளவு நன்றாக குழப்பினார். இதன் நடுவில் பாவனியை வேறு தேர்வு செய்து அமர வைத்து தண்ணீர் ஊற்றி, “இது செல்லாது” என்று பிக்பாஸ் பிறகு அறிவித்து பாவனியை பங்கம் செய்து.. ‘நான் பாட்டுக்கு சிவனேன்னுதாண்டா இருந்தேன். கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி" என்று அவர் நொந்தே போயிருப்பார்.

பிக் பாஸ் 97: ``இதெல்லாம் ஒரு வெற்றியா?” ``கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி!

“நான் ஒரு மொள்ளமாரி.. நான் ஒரு முடிச்சவிக்கி’..

போன் அடித்தது. எடுத்தவர் தாமரை. கடைசி Dare டாஸ்க் அது. தாமரையால் டாஸ்க்கின் வாக்கியங்களை சரியாகப் புரிந்து கொள்ள முடியாது என்று பிக்பாஸ் நினைத்தாரோ என்னவோ, பிறகு அதைப் பொதுவிலும் அறிவித்தார். அவர் சொன்னதின் சுருக்கம் இதுதான். “இந்த வீட்டில் ஒருவர் தன்னுடைய ஒரு குணாதிசயத்தை திறமையாக ஒளித்துக் கொண்டு விளையாடியிருக்கலாம். அவரின் மறுபக்கத்தை அம்பலப்படுத்தி, அவரிடம் அதை எடுத்துச் சொல்லி, சுத்தம் செய்து குளிப்பாட்டி நேரடியாக இறுதிப்போட்டிக்கு அவரை அனுப்பலாம். இந்த முடிவு கலந்துரையாடப்பட்டு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்பதுதான் இந்த Dare டாஸ்க்.

இது ஒரு சிக்கலான டாஸ்க். ஒருவரின் குறையை அம்பலப்படுத்துவது எளிது. ஆனால் அப்படி அம்பலமான ஆசாமி அதை ஒப்புக் கொள்ள வேண்டும். “ஆமாம்ப்பா. தப்பு செஞ்சுட்டேன்” என்று சொன்னபிறகுதான், ஞானஸ்தான திருவிழா நடக்கும். வெற்றிக்கான பாதையை அடைய முடியும். 'நான் ஒரு மொள்ளமாரி.. நான் ஒரு முடிச்சவிக்கி' என்று ஒரு நகைச்சுவைக் காட்சியில் கவுண்டமணியும் செந்திலும் தங்கள் மீது தாங்களே குறை சொல்லிக் கொள்வார்கள் அல்லவா? ஏறத்தாழ இந்த டாஸ்க்கும் அப்படித்தான்.

பிக் பாஸ் 97: ``இதெல்லாம் ஒரு வெற்றியா?” ``கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி!

“சரிப்பா. ஆரம்பிங்க. என் மேல என்ன வருத்தங்கள், கோபங்கள் இருக்குன்னு சொல்லிட்டு என்னை குளிப்பாட்டி விட்டு ஃபைனலுக்கு அனுப்புங்க பார்க்கலாம்!” என்று முதலில் முன்வந்தவர் ராஜூ. “அசிங்க அசிங்கமா சொல்லுவேன். பரவாயில்லையா?!” என்று ஜாலியாக கேட்டார் அமீர். “நீயெல்லாம் லிஸ்ட்லயே கிடையாதுடா” என்று ராஜூவை இடது கையால் தள்ளி விட்டார் நிரூப். 'வாய்ப்பில்லை. ராஜா.. வாய்ப்பில்லை..!' என்று மற்றவர்களும் ராஜூவை ஒதுக்கி விட்டார்கள்.

நிரூப்பின் ரணகள ஆட்டம் ஆரம்பம்

“நீ கோபத்தை மூடி வெச்சுக்கற.. ஆனா அப்படி கட்டுப்படுத்தி வெக்கறது... சரியான விஷயம்னு கமலே பாராட்டிட்டாரு. அப்புறம் அதை எப்படி மறைக்கற விஷயமா சொல்ல முடியும்?” என்றார் நிரூப். மக்கள் செல்வாக்கு இருக்கிற ராஜூ எப்படியும் இறுதிப்போட்டிக்கு தகுதியாகி விடுவார் என்பதால் அவரை அனுப்ப அங்கு யாரும் தயாராக இல்லை. “அடப்பாவிகளா. இதையே சொல்லி என்னை ஓரங்கட்டிடாதீங்க. கொஞ்சமாச்சும் என்னை கன்ஸிடர் பண்ணுங்கடா” என்று ராஜூ பாவனையாக கெஞ்சினாலும், எப்படியும் தான் இறுதிக்கு செல்வோம் என்கிற நம்பிக்கை அவருக்குள் ஆழமாகவே இருக்கிறது. எனவேதான் ‘இந்த டாஸ்க்கை எப்படியாவது முடிச்சு விடுங்கடா. சாப்பிடப் போவோம்” என்கிற போக்கிலேயே தொடர்ந்து கையாண்டார்.

பிக் பாஸ் 97: ``இதெல்லாம் ஒரு வெற்றியா?” ``கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி!
"என் கேரக்ட்டர் வெளியவும் இப்படித்தான். உள்ளயும் அப்படித்தான்" என்றார் பிரியங்கா. பாவனியின் பெயரை ராஜூ முன்மொழிய “சூப்பர்டா!” என்று மகிழ்ச்சியுடன் அசடு வழிந்தார் அமீர். "நான் சில விஷயங்கள் கேமராக்காக செஞ்சதா நீ சொல்லியிருக்கே.. என்னை என்னேமோ சொன்னியே.. என்ன வார்த்தை அது... ஆங்... vicious... அப்படின்னு கூட சொல்லியிருக்கே.. எனக்கு தண்ணி ஊத்து” என்று நிரூப்பிடம் மல்லுக்கட்டினார் பிரியங்கா. “எனக்கு அதெல்லாம் மைண்ட்ல வரலை” என்று பிரியங்காவை ரிஜக்ட் செய்தார் நிரூப்.

“சரிடாப்பா.. நீ எதையாவது மறைச்சிருக்கியா.. நீயே சொல்லேன் பார்ப்போம்” என்று ராஜூ, நிரூப்பை நோக்கி கேட்க “நான் சுயநலமா இருந்ததை மறைச்சிருக்கேன்” என்று நிரூப் சொல்ல “இல்லையே.. பாசமாத்தானே பழகினே?” என்று அப்பாவித்தனமாக கேட்டு குறுக்குச் சால் ஓட்டினார் தாமரை. “ஓகே.. நிரூப்பிற்கான காரணத்தை நான் சொல்றேன். வெளியே அவன் துணிச்சலா விளையாடறதா காண்பிச்சிக்கிட்டாலும்.. உள்ளுக்குள்ள நிறைய பயம் இருக்கு” என்று சிபி முன்பு சொன்னதையே தானும் இந்தச் சமயத்தில் வழிமொழிந்தார் அமீர். இதை ஒப்புக் கொண்டார் நிரூப். ஏனெனில் டாஸ்க் அப்படி, எனவே அப்படித்தான் இந்த உருட்டை அவர் உருட்டியாக வேண்டும்.

“நீயே அதை கெடுத்துடுவே!” - பலித்த ராஜூவின் ஆருடம்

அமீர் சொன்ன காரணத்தோடு விட்டிருந்தால் கூட இந்த டாஸ்க், நிரூப்பின் பக்கமாக சாய்ந்திருக்கலாம். ஆனால், “நான் ஒண்ணு சொல்லட்டுமா?” என்று ஆரம்பித்தார் நிரூப். “நீ எதுவும் சொல்ல வேணாம்.. இருக்கறதையும் நீயே கெடுத்து வெச்சுடுவே” என்றார் ராஜூ. ஆனால் பிறகு ராஜூ சொன்னது போல்தான் ஆயிற்று. “இன்னொரு காரணம் என்னன்னா… இந்த வீட்டு வாசல்லயே நான் கழட்டி வெச்சிட்டு வந்த ஒரு விஷயம் இருக்கு. அது ‘அன்பு’ அந்த விஷயம் விளையாட்டுக்கு தடங்கலா இருக்கக்கூடாதுன்னு தீர்மானமா முடிவு பண்ணிட்டேன். எப்படியும் வெளியே போய் நாம பல வருஷங்கள் பழகப் போறோம். ஒண்ணா இருக்கப் போறோம்.. விளையாட்டுல அன்பு இருக்கக்கூடாது” என்று நிரூப் விவரித்துச் சொன்னதின் மீது ஒரே போடாக போட்டார் ராஜூ. "அமீர் சொன்ன காரணம் ஓகே மாதிரி தோணிச்சு.. ஆனா .. நீ இந்த விளக்கம் சொன்னப்புறம் அது கேன்சல்" என்று ராஜூ சொன்னது நல்ல காமெடி.

பிக் பாஸ் 97: ``இதெல்லாம் ஒரு வெற்றியா?” ``கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி!

“ஓகே. நான் பாவனியை செலக்ட் செய்யறேன்.. ஒரு பிரச்சினையை உடனே சொல்லாம காலம் தாழ்த்தறதுதான்.. அவளோட குறை” என்றார் பிரி்யங்கா. (ஆனால் டாஸ்க் விதிக்கு இந்தக் காரணம் பொருந்தாது. பாவனி அப்படியாக இருந்தார் என்பது அனைவருக்குமே தெரியும். அவரே ஒப்புக் கொண்ட விஷயம்தான் இது. இது அவர் மறைத்த விஷயம் இல்லை). “எனக்கு யார் மீதும் குறை தெரியலையே?” என்று போங்காட்டம் ஆடினார் தாமரை.

“அப்ப எழுந்திரு தாயி.. தண்ணி ஊத்தி விட்டுருவோம்” என்று பாவனியை கிளப்பி ஆட்டத்தை முடிக்க ராஜூ அவசரப்படுத்த “நான் ஒத்துக்க மாட்டேன்” என்று முட்டுக்கட்டை போட்டார் நிரூப். தன் பெயரைச் சொன்னதால் பிரியங்காவிற்கு முத்தம் தந்தார் பாவனி. “நான் ஃபைனலுக்கு போறேன்” என்று நிரூப் சொல்ல, ‘நான் ஆதரவு தர மாட்டேன்” என்று பிரியங்கா இப்போது முட்டுக்கட்டை போட்டார்.

ரணகளமாக நீண்ட விவாதம்... "எப்பத்தான் முடிப்பீங்க?"

"உனக்கு இங்க யார் கூடயாவது எமோஷனல் கனெக்ட் இருக்கா?" என்று நிரூப்பை நோக்கி ராஜூ கேட்க "பிரியங்கா மேல இருக்கு. ஆனா அதை மறைச்சிருக்கேன்" என்றார் நிரூப். அப்படியாவது இவர்கள் தன்னை செலக்ட் செய்வார்களா என்பது அவரின் ஆதங்கம். "நீ அவ கூட பிளான் பண்ணி சண்டை போடலைல்ல.? அந்த நேரத்துல வந்த கோபத்துலதானே சண்டை போட்டே.. அப்ப அப்ப அது மறைச்ச விஷயம் இல்லையே" என்று லாஜிக்காக சொல்லி அந்தக் காரணத்தின் மீது ராஜூவே நீர் ஊற்றி அணைத்தார்.

பிக் பாஸ் 97: ``இதெல்லாம் ஒரு வெற்றியா?” ``கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி!
இவர்களின் குழப்பத்தை அமீர் கிண்டலடிக்க “டிக்கெட் கையில இருக்குன்ற ஆணவத்துல நீ ரொம்ப ஆடக்கூடாது தம்பி..” என்று ராஜூ சொல்ல அனைவருமே சிரித்தார்கள். இடியாப்பச் சிக்கலாக நடந்து கொண்டிருந்த இந்த வாக்குவாதத்தில் ராஜூவின் நகைச்சுவைதான் நம்மை அவ்வப்போது காப்பாற்றியது. “எதையாவது பேசி செலக்ட் ஆயிடுவான். அப்புறம் சிரிச்சுக் காட்டுவான்.. பாரேன்!” என்று நிரூப்பின் வழக்கமான உத்தியை குத்திக் காட்டினார் பிரியங்கா.

“நான் தாமரையை சப்போர்ட் பண்றேன்” என்று ஆரம்பித்தார் பாவனி. “அவங்க வெள்ளந்தி கிடையாது. இந்த கேமை எப்படி ஆடறோம்னு நல்லாவே தெரிஞ்சு ஆடறாங்க. வெள்ளந்தித்தனத்தின் மூலம் தன்னை மறைச்சுக்கறாங்க” என்பது பாவனி ‘கண்டுபிடித்து’ சொன்ன காரணம். “எனக்குத் தெரியலைன்னா கேட்டுட்டு விளையாடுவேன்" என்று தாமரை சொல்ல, அதை அப்படியே பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லி சிரிப்பூட்டினார் ராஜூ. "என்னை யாராவது கன்ஸிடர் பண்ணுங்கடா. என் பேரையே எவனும் எடுக்க மாட்டேன்றீங்க?" என்று ராஜூ அவ்வப்போது கதறும்படி ஆகியது நிலைமை. "அடப்போங்க.. தம்பி. நீங்க நல்லாப் படிக்கற புள்ள.. உங்களுக்கு எதுக்கு பிட்டு பேப்பர்" என்பது மாதிரியே அவரை ஒதுக்கி வைத்தார்கள்.

"யாரையாவது வீட்டுக்காவது அனுப்பித் தொலைங்க" – பிக்பாஸ்ஸின் கோபம்

நீண்ட நேரம் இவர்கள் மல்லுக்கட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து நொந்து போன பிக்பாஸ்ஸிற்கு கோபம் வந்தது. "ஒரு ஆளை உங்களால செலக்ட் பண்ண முடியல்லைல்ல.. அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க.. ஒரு ஆளை செலக்ட் பண்ணி அவர் மேல தண்ணி தெளிச்சு வீட்டுக்காவது அனுப்பி வையுங்க” என்று அவர் வெறுப்போடு சொன்னார். அப்படியாவது இவர்களின் டாஸ்க் சூடு பிடிக்கும் என்பது அவரின் நோக்கம். ஆனால் என்ன நடந்தது தெரியுமா? “இப்ப நாம எதுக்கு தண்ணி ஊத்தணும்.. ஃபைனலுக்கா. வெளியே போறதுக்கா” என்று இவர்கள் விவாதத்தை வேறு திசையில் திருப்பிய போது பிக்பாஸ் பக்கத்தில் இருந்த சுவற்றில் தலையை வைத்து நிச்சயம் முட்டிக் கொண்டிருந்திருப்பார்.

பிக் பாஸ் 97: ``இதெல்லாம் ஒரு வெற்றியா?” ``கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி!

“இப்ப ஊத்துங்கடா, இப்ப மட்டும் சந்தோஷமா வந்து ஊத்துவீங்களே?” என்று சர்காஸ்டிக்காக ஆரம்பித்தார் நிரூப். “பைனலுக்கு ஒருத்தரை அனுப்ப முடியலைன்னாதான் வெளியே அனுப்பணும்!” என்று பிக்பாஸின் கோபத்தை சரியாகப் புரிந்து கொண்டவர் பிரியங்கா மட்டுமே. "எதுக்குத் தேவையில்லாம ஒருத்தரை வெளியே அனுப்பணும்.. அது பாவம் மை சன். ஒருத்தரை வாட்டர் வாஷ் பண்ணி .ஃபைனலுக்கு அனுப்புவோம்… அதுதான் நல்ல விஷயம்" என்று பாசிட்டிவ்வாக பேசினார் பிரியங்கா.

“யாராவது ஒருத்தரை செலக்ட் பண்ணுங்க” என்று பிரியங்கா சொல்ல “யோசிச்சு சொல்றோம்..” என்று அனைவருமே மையமாக பதில் சொன்னார்கள். (மறுபடியும் மொதல்ல இருந்தா?!) “உன்னை நீயே சொல்லிக்க கூடாதுடா” என்று அமீர் ஆட்சேபித்தாலும் நிரூப் ஏற்றுக் கொள்வதாக இல்லை. பெரும்பான்மையானவர்களின் தேர்வாக பாவனியின் பெயர் வந்தது. பாவனி தாமரைக்கு ஆதரவு தந்தார். ஆனால் 'என் வழி தனி வழி.' என்று அடம்பிடித்தார் நிரூப். ‘என் மனசுக்கு ஒத்துவராம என்னால சொல்ல முடியாது’ என்பதே அவரின் பிடிவாதம். "ரெண்டுத்துக்குமே கூட என்னை செலக்ட் பண்ணுங்க. அது ஃபைனலுக்கு போறதா இருந்தாலும் சரி. வெளியே அனுப்பறதா இருந்தாலும் சரி" என்று அழிச்சாட்டியம் செய்தார் நிரூப். 'தன்னை வெளியே அனுப்ப மாட்டார்கள்' என்கிற அசட்டுத் தைரியம்தான் காரணம்.

பிக் பாஸ் 97: ``இதெல்லாம் ஒரு வெற்றியா?” ``கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி!
"பாவனி பிரச்னையை உடனே சொல்ல மாட்டா" என்று சொல்லப்பட்ட காரணத்திற்கு விளக்கம் அளித்தார் அமீர். "அவ மத்தவங்க கிட்டதான் சொல்ல மாட்டா. அவங்களைப் புரிஞ்சுக்கிட்டவங்க கிட்ட சொல்லிடுவா" என்று சொல்லி பாவனியின் டேமேஜை குறைக்க முயன்றார்.

இறங்கி வந்த நிரூப் – முட்டுக்கட்டை போட்ட பிரியங்கா

“என்னைத் தவிர வேறு யார் மீதும் எனக்கு காரணம் தோணலை” என்று நிரூப் அடம்பிடித்தது நிச்சயம் போங்காட்டம். சாக்லேட்டுக்கு அடம்பிடிக்கும் குழந்தை போல, தன்னை அவர்கள் தேர்வு செய்தே ஆக வேண்டும் என்பதற்காக விதம் விதமாக அடம்பிடித்தார் நிரூப். இது வெளிப்படையாகவே தெரிந்தது. நிரூப் நினைத்திருந்தால் ஆயிரம் காரணங்களை உருவாக்கியிருக்க முடியும்.

"சரிடா.. நீ உன்னைத் தவிர வேறு ஒரு பெயரைத்தான் சொல்லித் தொலையேன்" என்று பிரியங்கா சொல்ல “முட்டை அடிக்கற டாஸ்க்ல நீ உன்னையேதானே நாமினேட் பண்ணே. அப்படி நான் செய்யக்கூடாதா?” என்று நிரூப் இடக்காக லாஜிக் பேச, பிரியங்காவிற்கு இன்னமும் எரிச்சல் அதிகமாகியது. "அமீர் ஒண்ணு சொன்னான்ல.. அந்த பயம்ன்றதை வெச்சு மட்டும் பேசு" என்று பிரியங்கா சொன்ன யோசனையையும் நிரூப் கேட்கவில்லை. "சுயநலத்தினால்தான் பயம் வந்தது" என்று நிரூப் விடாமல் லாஜிக் பேச, அமீர் தலை சுற்றி மயக்கம் வந்தது போல படுத்து விட்டார். "யப்பா. நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க" என்று தண்ணீர் தெளித்து விடும் அளவிற்கு நொந்து போனார் அமீர்.

பிக் பாஸ் 97: ``இதெல்லாம் ஒரு வெற்றியா?” ``கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி!

"நீயாவது என்னைப் பத்தி ஏதாவது சொல்லேண்டா" என்று ராஜூவை உசுப்பி விட்டார் பிரியங்கா.. “நீ ஒரு விஷயத்தை முதல்ல ஒத்துக்கவே மாட்டே.. அது ரணகளமாக ஆகி முடிஞ்சப்புறம்தான் ஒத்துப்பே” என்றார் ராஜூ. எதையாவது சொல்லி முடிப்போமே என்கிற நிலைமைக்கு ராஜூ வந்து விட்டார். ‘ஏதாவது வித்தியாசமா பண்ணலாம்னு பண்றியா?" என்று நிரூப் இதற்கும் முட்டுக்கட்டை போட "பிக்பாஸ் கோச்சுக்கிட்டு ரெண்டு பேரை வெளியே அனுப்பப் போறாரு.. பாரேன்" என்று எரிச்சலானார் பிரியங்கா.

பிக் பாஸ் 97: ``இதெல்லாம் ஒரு வெற்றியா?” ``கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி!

“ஓகே. என்னைத் தவிர. ராஜூ மேல வேணா தண்ணி ஊத்தி அனுப்பலாம்” என்று நிரூப் ஒருவழியாக இறங்கி வந்தார். “கோபத்தை மறைச்சிருக்கேன்னு சொன்னாலும் சில இடங்கள்ல அவன் கோபத்தைக் காட்டியிருக்கான்” என்பதே நிரூப் சொன்ன காரணம். ஆனால் பிரியங்கா இதற்கு மறுப்புத் தெரிவித்தார். "பேசாம… நிரூப்பை தண்ணி ஊத்தி வெளியே அனுப்பிடுவோம். எழுந்து வாங்க." என்று அமீர் கொலைவெறி அடையும் அளவிற்கு இந்த உரையாடல் நீண்டு கொண்டே போனது. "ராஜூ மேல தண்ணி ஊத்தலாம்" என்கிற நிரூப்பின் பரிந்துரையை பாவனியும் வழிமொழிய "என்ன.. நீ எப்பப்பாரு. அவன் போடற தாளத்திற்கு ஆடறே. இதெல்லாம் நல்லால்ல. அவன் என்ன பிக்பாஸா. அவன் சொன்னவுடனே. எல்லோரும் ஒத்துக்கணுமா?” என்று பாவனியின் மீது கோபத்தில் எகிறினார் பிரியங்கா.

“கவுரவம்.. கவுரவம்.. ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி

“பாவனி உன் பிரெண்டுதானே. அவளையாவது செலக்ட் பண்ணேன்டா” என்று பிரியங்கா கேட்டும் நிரூப் சம்மதிக்கவில்லை. “சரிடா. ராஜூவையாவது கொண்டு வருவோம்” என்று பிரியங்கா சொல்ல, முதலில் நிரூப்பின் பெயரை முன்மொழிந்த அமீர், இப்போது ராஜூவிற்கு கட்சி மாறினார். “பிரியங்கா சொன்னா அமீர் கேட்பான்” என்று நிரூப் வார்த்தையை விட “நான் என்ன முட்டாளா.. எனக்கு சொந்த புத்தி இல்லையா?” என்று அமீர் எகிறினார். “இத்தனை பேர் இருக்காங்களே… அது ஏன்டா என்னை மட்டும் நோண்டறே?” என்று நிரூப்பிடம் எரிச்சல் காட்டினார் பிரியங்கா. "ஏன்னா நீ மட்டும்தான் வாய் பேசற... மத்தவங்க இந்த அளவிற்கு பேசறதில்ல” என்று இதற்கு காரணம் சொன்னார் நிரூப்.

பிக் பாஸ் 97: ``இதெல்லாம் ஒரு வெற்றியா?” ``கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி!

‘இது வேலைக்கு ஆவறதில்ல” என்று பெரும்பான்மையோர் முடிவு செய்து பாவனியை தேர்வு செய்தார்கள். பாவனியை அமர வைத்து ஒவ்வொருவரும் புத்திமதி சொல்லி தண்ணீர் ஊற்றி ஆசிர்வாதம் செய்தார்கள். ஆனால் “என்னால கூட்டத்தோடு கோவிந்தா போட முடியாது” என்று நிரூப் வர மறுத்து விட்டார். பாவனி மீதான நீர் ஊற்றும் சடங்கு முடியும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் “இந்த முடிவு செல்லாது. இதெல்லாம் ஒரு காரணமா?” என்று அந்த முடிவை ரத்து செய்தார்.

“ஒரு போட்டியாளரை மற்ற போட்டியாளர்களே தேர்ந்தெடுத்து இறுதிப் போட்டிக்கு அனுப்பும் வாய்ப்பு என்பது இதுவரை எந்தவொரு சீசனிலும் இல்லாத விஷயம். முதன்முறையாக உங்களுக்கு கிடைத்திருக்கிறது. புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்” என்று கோபத்துடன் பிக்பாஸ் கெத்து காட்டினார். பாவனி ஃபைனலுக்கு வரக்கூடாத வகையில் பிக்பாஸ் டீம் காய்களை நகர்த்த விரும்புகிறதோ என்று தோன்றுகிறது. இதன் சூட்சுமக் கயிறு யாரிடம் இருக்கிறது?

“சரிப்பா. நிரூப்பையே செலக்ட் செஞ்சு தொலைப்போம்”

“நான் நிரூப் மேலதான் தண்ணி ஊத்துவேன்” என்று இந்தச் சமயத்தில் கறாராக அறிவித்தார் தாமரை. ‘பயம் என்பதை மறைத்துக் கொண்டு விளையாடுகிறான்’ என்பது தாமரை ‘கண்டுபிடித்துச் சொன்ன காரணம். ஆனால் நியாயப்படி பார்த்தால் இந்தக் காரணமும் செல்லாது. இது ஏற்கெனவே சிபி அம்பலப்படுத்திய விஷயம்தான். பிக்பாஸ் செய்த கண்டிப்பு காரணமாக ‘நிரூப்பிற்கே தண்ணீர் ஊற்றித் தொலைப்போம்.. எப்படியாவது ஆட்டம் முடியட்டும்” என்று நிலைமைக்கு அனைவரும் ஆளானார்கள். “இப்ப அவன் சிரிப்பான் பாரேன்..” என்று எரிச்சலாக சொன்னார் பிரியங்கா.

நிரூப்பை அமர வைத்து உண்மையிலேயே அனைவரும் கழுவி கழுவி ஊற்றினார்கள். முதலில் வந்தவர் அமீர். “நான் உன்னை என்னமோன்னு நெனச்சேன். ஆனா நீ ஒரு பயந்தாங்கொள்ளி. ரொம்ப வீக்கான பிளேயர். நீ பண்ணது அசிங்கமான ஸ்ட்ராட்டஜி. நீ ஃபைனலுக்கு போனாலும் சரி.. வெளியே போனாலும் சரி.. எப்படியாவது நாசமாப் போ’ என்பது மாதிரியான எரிச்சலுடன் நீரை ஊற்றி ஆசிர்வதித்தார் அமீர். (இப்படியொரு வெற்றி தேவைதானா?!).
பிக் பாஸ் 97: ``இதெல்லாம் ஒரு வெற்றியா?” ``கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி!

நிரூப்பை ஒருபக்கம் நாமினேட் செய்து விட்டு “நீ ஏன் உன் மேல பழி போட்டுக்கறே?” என்று இன்னொரு பக்கம் ஆதரவு தந்து நீர் ஊற்றினார் தாமரை. “எனக்கு உன் மேல முதலில் எமோஷனல் கனெக்ட் வரலை. ஆனா அண்ணாச்சி நோட் பண்ணி சொன்னப்புறம்தான் உன்னை கவனிச்சேன்.. என் சந்தோஷத்திற்காக தண்ணி ஊத்தறேன். எல்லாத்தையும் ஆராய்ஞ்சிக்கிட்டே இருக்காதே.. நல்லா வருவீங்க தம்பி..” என்று மகிழ்ச்சியும் சர்காஸ்டிக்கும் கலந்து வாழ்த்தி நீர் ஊற்றினார் ராஜூ.

“எமோஷனே கிடையாதுன்னு சொல்றே.. ஆனா அண்ணாச்சி கூட அன்பு இருக்குன்னும் சொல்றே.. வருண் – அக்ஷரா நட்பைப் பார்த்தா பொறாமையா இருக்குன்னு சொன்னே.. எமோஷன் இல்லாதவங்களுக்கு பொறாமைல்லாம் வரக்கூடாது. சரி.. என்னமோ.. ..ஃபைனலுக்கு போ.. நல்லா விளையாடு” என்று பிரியங்கா வாழ்த்தி நீர் ஊற்றினார். பிரியங்காவின் எரிச்சலுக்கு இடையே நிரூப்பின் மீதுள்ள உள்ளார்ந்த அன்பும் வெளிப்பட்டது.

பிக் பாஸ் 97: ``இதெல்லாம் ஒரு வெற்றியா?” ``கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி!
நிரூப் பயத்தை மறைத்துக் கொண்டு விளையாடுகிறார்’ என்கிற இந்தக் காரணமும் போங்காட்டம்தான். ஏனெனில் இது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம். ஆனால் பாவனியின் பரிந்துரையை நிராகரித்த பிக்பாஸ், நிரூப்பின் மீது எடுக்கப்பட்ட முடிவை மட்டும் ஆட்சேபம் இல்லாமல் ஏற்றுக் கொண்டார். இது என்ன உள்குத்தோ?

“இதெல்லாம் ஒரு வெற்றியா?”

“நீ நல்லபடியா ஃபைனலுக்கு வந்திருக்கலாம்” என்று அமீர் சொல்ல, “இல்ல.. இது எனக்குப் பிடிச்சுதான் இருக்கு” என்று தன்னை விட்டுத்தராமல் பேசினார் நிரூப். நள்ளிரவில் தனியாக அமர்ந்திருந்த நிரூப் “எப்படியோ.. ஃபைனலுக்கு உள்ள வந்துட்டேன். இந்த வெற்றி.. உனக்காகத்தான்” என்று தனக்குள் ஓர் உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அவர் தனது வெற்றியை சமர்ப்பணம் செய்த நபர் யார்?

பிக் பாஸ் 97: ``இதெல்லாம் ஒரு வெற்றியா?” ``கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி” – நொந்து போன பாவனி!
நிரூப் இறுதிப் போட்டிக்கு சென்றதை விடவும் இந்த ரணகள விவாதம் ஒருவழியாக முடிவிற்கு வந்து தொலைத்ததே’ என்றுதான் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். இதர போட்டியாளர்களுக்கு கூட அந்த ஆசுவாசம்தான் கிடைத்திருக்கும். அந்த அளவிற்கு கொடூரமான விவாதமாக இது அமைந்தது.

இன்று கமல் வரும் விசாரணை நாள். சிபியை மேடைக்கு அழைத்து வந்து விசாரிக்கும் சம்பிரதாயங்கள் உள்பட பல வழக்கமான விஷயங்கள் நடைபெறவிருக்கின்றன. அதையும் மீறி இந்த வார இறுதி எபிசோடை சுவாரசியமாக்குவது கமலின் கையில்தான் இருக்கிறது. என்ன செய்யவிருக்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.