Published:Updated:

பிக் பாஸ் 98: மக்களால் தேர்வான ராஜூ; நெருங்கிய இறுதிக்கட்டம்; வெல்லப்போவது யார்?

பிக் பாஸ்

‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்கிற பாடலை காலையில் அலற விட்டார் பிக் பாஸ். இது நிரூப்பிற்கான குறியீடோ… என்னவோ. அந்தளவிற்கு அட்ராசிட்டி செய்த ஆசாமி அவர்.

பிக் பாஸ் 98: மக்களால் தேர்வான ராஜூ; நெருங்கிய இறுதிக்கட்டம்; வெல்லப்போவது யார்?

‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்கிற பாடலை காலையில் அலற விட்டார் பிக் பாஸ். இது நிரூப்பிற்கான குறியீடோ… என்னவோ. அந்தளவிற்கு அட்ராசிட்டி செய்த ஆசாமி அவர்.

Published:Updated:
பிக் பாஸ்

மூன்றாவது Finalist ஆக ராஜூ தேர்வானதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை. அவருக்கே அந்தத் தன்னம்பிக்கை உள்ளூற இருந்தது. ஆனால் நிரூப் தேர்வான முறைக்கும், ராஜூ தேர்வான முறைக்கும் இடையே இருக்கும் கனிசமான வித்தியாசத்தைப் பாருங்கள். சாக்லேட்டுக்கு அடம்பிடிக்கும் பிடிவாதக் குழந்தை போல அழுகுணி ஆட்டம் ஆடியாவது இறுதிக்கட்டத்திற்கு சென்று சேர்ந்தார் நிரூப். ஆனால் இயல்பான தன்மையுடன் இருந்த ராஜூவிற்கு வெற்றி அவரைத் தேடி வந்து சேர்ந்தது.

இயல்பாக இருப்பவர்களை அங்கீகாரம் தன்னால் தேடி வந்து சேரும் என்பதற்கான உதாரணம் இது. என்னவொன்று அது வருவதற்கு தாமதம் ஆகலாம். அப்படியே வராவிட்டாலும் கூட பிரச்சினையில்லை. தன்னுடைய மனச்சாட்சிக்கு திருப்தியாக வாழ்வதை விடவும் மனநிறைவைத் தருகிற விஷயம் வேறு ஒன்றில்லை.

ஒரு போட்டியில் வெற்றி என்பது முக்கியம்தான். ஆனால் எந்த வழியிலாவது அதைப் பெற்று விட வேண்டும் என்று முட்டி மோதுவது நல்ல sportsperson-க்கு அழகல்ல. சில விமர்சனங்கள் இருந்தாலும் இதுவரை நிரூப்பின் கிராஃப் ஒரு மாதிரி உயரே சென்று கொண்டிருந்தது. ஆனால் அவமானத்தை வலிய தேடிக் கொண்டாவது அவர் இறுதிப் போட்டிக்கு நகர்ந்த பிறகு அந்த வெற்றியின் பாதை ரசிக்கத்தக்கதாக இல்லை. ஆனால் தரப்பட்டிருந்த டாஸ்க் அத்தகைய தன்மையில்தான் அமைந்திருந்தது என்பதையும் கவனிக்க வேண்டும். கமல் சொன்னது போல் “நீங்கள் செய்த கடுமையான குற்றத்திற்கு உங்களை விடுதலை செய்து விடுவேன்” என்பதுதான் டாஸ்க்கின் லாஜிக்.

“என்னமோ.. பண்றான்.. சார்.. அவன்.. ஒரு மாதிரி நல்லாயிருக்கு.. ஆனா எரிச்சலாவும் இருக்கு.. அவன் இஷ்டத்திற்கு கேமை இழுத்துட்டுப் போறான்.” என்று பிரியங்கா உட்பட அனைவரும் நிரூப்பைப் பற்றி கமலிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதை அவர்கள் விமர்சனமாக சொன்னாலும் மறைமுகமாக நிரூப்பிற்கு சான்றிதழ்தான் தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார்களா என்று தெரியவில்லை. “அப்ப நீங்கல்லாம் ஸ்மார்ட்டா விளையாடலையா?” என்று கமல் நக்கலாக கேட்டதும் இதைத்தான்.

‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ன்றது உண்மையாயிடுச்சு.. வலிமையான போட்டியாளர் என்று கருதப்பட்ட சிபி, பணப்பெட்டியுடன் வெளியேறி விட்டார். இன்னமும் என்னென்ன ஆச்சரியங்கள் காத்திருக்கிறதோ?” என்கிற சுருக்கமான முன்னுரையுடன் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டினார் கமல். (டிரஸ்ஸூம் கலர் காம்பினேஷனும் செம!).

‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்கிற பாடலை காலையில் அலற விட்டார் பிக்பாஸ். இது நிரூப்பிற்கான குறியீடோ… என்னவோ. அந்தளவிற்கு அட்ராசிட்டி செய்த ஆசாமி அவர். “சிபி இருந்திருந்தா கடைசி டாஸ்க் செமயா இருந்திருக்கும். ஏன்தான் அவன் வெளியே போனானோ?” என்று பாவனியிடம் நொந்து கொண்டிருந்தார் அமீர். ஆம், சிபி இருந்திருந்தால் நிரூப்பிடம் நிச்சயம் மல்லுக் கட்டியிருப்பார். ஆனால் நம் காதுகளில்தான் எக்ஸ்ட்ரா ரத்தம் வந்திருக்கும். நிரூப் அப்படியொரு கல்லுளிமங்கர்.

நிரூப்
நிரூப்

தொடர்கிற நிரூப்பின் அட்ராசிட்டி

‘உப்பு, சர்க்கரை, வெங்காயம்’ இல்லாத சமையலைச் சாப்பிட்டு தங்களின் நாக்கு இறந்து போன கதையை, ‘எல்லோரும் கோஷம் எழுப்புங்கள்’ என்கிற பிரசங்கக் குரலில் கிண்டலடித்துக் கொண்டிருந்தார் ராஜூ. தாமரைக்கு நகைச்சுவை செய்ய வருகிறதோ, இல்லையோ, ஆனால் காமெடியை நன்கு ரசிக்கத் தெரிகிறது. ராஜூவின் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

ராஜூவின் கெஞ்சல் பிக்பாஸை அசைத்திருக்க வேண்டும். ‘ஓகே.. உப்பு, சர்க்கரை மட்டும் வேணுமா.. இல்லைன்னா.. இந்த வார லக்ஸரி பட்ஜெட் வேணுமா?’ என்பதை ‘ஹூம்.. சொல்றியா.. ஹூஹூம் சொல்றியா’ பாடல் மாதிரி அவர் கேட்க, பெரும்பாலோனோர் ‘லக்ஸரி பட்ஜெட்டிற்கு’ ஓகே சொன்னார்கள். அதிலேயே உப்பு, சர்க்கரையையும் சேர்த்து எடுக்கலாம் என்பது அவர்களின் ஸ்மார்ட்டான கணக்கு. பிரியங்காதான் இதை முன்னெடுத்தார்.

ஆனால் எல்லாவற்றிலும் குட்டையைக் குழப்பி ருசி கண்டு விட்ட நிரூப், மீண்டும் ஏழரையைக் கூட்ட ஆரம்பித்தார். “உப்பு.. சர்க்கரையே.. கேட்டுடுவோம். ஒருவேளை லக்ஸரி பட்ஜெட்ல அது இல்லைன்னா. என்ன பண்றது?” என்று அவர் வழக்கம்போல் குழப்ப ஆரம்பிக்க “உன்னை கொன்னே போடுவோம். ஒழுங்கா அமைதியா உக்காரு’ என்று ராஜூ ஜாலியாக மிரட்ட “என்னமோப்பா... இது உங்க ரிஸ்க்கு” என்று ஒப்புக் கொண்டார் நிரூப். தன்னால்தான் சர்க்கரை, உப்பு போய் விட்டது என்கிற குற்றவுணர்வுதான் அவரை இப்படிச் சொல்ல வைத்திருக்கும். “இப்படித்தான் எல்லாத்திலயும் சீன் போட்டு ஸ்கோர் பண்ணுவான்.. Bad fellow” என்று பிரியங்கா நிரூப்பை கிண்டலடிக்க “போடி.. வெங்காயக்கிண்ணம்” என்று வித்தியாசமாக திட்டினார் நிரூப்.

பிக்பாஸ் – ‘பெரிய மனுஷன்.. பெரிய மனுஷன்தான்’

“இது இந்த சீஸனின் கடைசி லக்ஸரி பட்ஜெட். சிறப்பா பங்கெடுத்துக்கிட்டீங்க” என்று பாராட்டினார் பிக்பாஸ். மக்கள் சர்க்கரை, உப்பு ஆகியவற்றை மறைத்து வைத்து விளையாடியதை அவர் கண்டிக்கவில்லை போல. 1200 மதிப்பெண்களை பரிசாக அளித்தார். மளிகைக் கடையில் கொசுறு கேட்பது போல (இந்தக் கொசுறு கலாசாரம் இன்றைய ஆன்லைன் தலைமுறைக்கு தெரியுமா?!) ‘சிபிக்கும் சேர்த்து 200 பாயின்ட் கூட கொடுங்க” என்று கேட்டுக் கொண்டிருந்தார் ராஜூ. “இதுக்கு எமோஷனல் ஆக வேண்டாம்.. ஷாக்கைக் குறைங்க” என்பது போல் ராஜூவை பிக்பாஸ் பிறகு கிண்டலடித்தது சிறப்பு. (Naughty fellow). லக்ஸரி பட்ஜெட்டோடு சர்க்கரை, உப்பையும் சேர்த்தே தந்திருந்தார் பிக்பாஸ். (பெரிய மனுஷன்.. பெரிய மனுஷன்தான்!).

புக்லெட்டை திருப்பியவுடன் வரும் உணவை பரிசளிக்கும் விஷயத்தில் மக்கள் ஏமாற்று வேலை செய்கிறார்கள் என்பதை நான் நீண்டகாலமாக சொல்லி வருகிறேன். இன்று நிரூப்பிற்கு பரிசு கிடைத்ததும், “No Cheating” என்று அவரை ஜாலியாக எச்சரித்தார் பிக்பாஸ். “அப்படின்னா என்னன்னே எனக்குத் தெரியாது. வருகிற பரிசை எனக்கு மட்டுமல்லாம எல்லோருக்கும் அனுப்புங்க பிக்பாஸ். நான் ஃபைனல் போனதுக்கு அவங்கதான் காரணம்” என்றெல்லாம் நிரூப் உருக்கமாக வசனம் பேச “ரொம்ப நல்லவன் மாதிரி வேஷம் போடாத.. தம்பி.. உனக்கு அது செட் ஆகலை” என்று மக்கள் கிண்டலடித்தார்கள். பரிசாக வந்த ஃபலூடாவை பிரியங்காவிற்கு சமர்ப்பணம் செய்தார் நிரூப். சந்தோஷத்தில் பிரியங்கா ஹைடெஸிபலில் கத்தினார் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

சிபி
சிபி

‘நேர்மைன்னா. இனிமே அது சோப்பு இல்ல. சிபி’

அகம் டிவி வழியாக உள்ளே வந்தார் கமல். ஆனால் அதற்கு முன்பாக ‘ஒன் நிமிட்.. 2 மினிட்ஸ் ப்ளீஸ்’ என்று நம்மிடம் சொல்லி விட்டு சிபியை அழைத்தார். மனிதர் 12 லட்சம் கிடைத்தும் கூட இன்னமும் முடிவெட்டிக் கொள்ளவில்லை போல. ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போன தெளிவும் மலர்ச்சியும் சிபியின் முகத்தில் தெரிந்தது. “நல்லாத்தானே போயிட்டு இருந்தது. எந்தச் சமயத்தில் உங்க மனசு மாறிச்சு?” என்கிற அதிமுக்கிய கேள்வியை கமல் கேட்க “நிரூப் உப்பு எடுத்து வைங்கன்னு கத்திட்டே வந்தான். நீ பயந்துட்டேன்னு அவன் கிட்ட சொன்னேன். ஆனா நைட்டு யோசிச்சுப் பார்க்கும்போது எனக்குள்ளயும் பயம் இருந்ததை உணர முடிஞ்சது. அதுக்கப்புறம் என்னால அங்க இருக்க முடியலை” என்று முன்னர் சொன்ன அதே காரணத்தைச் சொன்னார் சிபி.

சிபியின் நேர்மை புகழப்படுவதில் நியாயமான பல காரணங்கள் இருக்கின்றன. இதில் மறுப்பில்லை. நேற்றைய எபிசோடில் கூட கமல் இதை குறிப்பிட்டு அழுத்தமாகவே பாராட்டினார். ஆனால், சிபிக்கு பய உணர்வு வந்ததும், பண டாஸ்க் வந்ததும் ஒரே சமயத்தில் நிகழ்ந்ததுதான் ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை மணி டாஸ்க் இல்லையென்றால் கூட சிபி இதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருந்திருப்பாரா? இது ஒரு யூகம் மட்டுமே. இரண்டுமே தற்செயல் ஒற்றுமையாக நடந்திருக்கலாம்.

“வெளியே போய் உங்களுக்கு கிடைச்ச ரெஸ்பான்ஸ்லாம் பார்த்திருப்பீங்க. ‘அய்யோ. வெளியே வந்திருக்க வேணாமோ’ன்னு தோணிச்சா?” என்று அடுத்த கேள்வியை கமல் கேட்க “இல்லை. சார். எடுத்த முடிவு.. முடிவுதான்” என்று உறுதியாக சொன்னார் சிபி. “இந்த முடிவை உங்க ரசிகர்களும் ஏத்துக்கிட்டாங்க. அது நல்ல விஷயம்” என்று பாராட்டிய கமல் “ஓகே. உங்க பயண வீடியோவைப் பார்க்கலாம். உங்க நண்பர்களையும் சந்திக்கலாம். அதுக்கு முன்னாடி.. அவங்களைப் பற்றிய உங்களின் உண்மையான விமர்சனங்களை சொல்லணும். அது அவங்களோட வெற்றிக்கு உதவலாம்” என்று கமல் உத்தரவாதம் கேட்க, அதற்கு ஒப்புக் கொண்டார் சிபி.

சக போட்டியாளர்களுக்கு சிபியின் அட்வைஸ்

முதலில் பிரியங்காவைப் பற்றி சொல்ல ஆரம்பித்த சிபி “மனசுல பட்டதை அப்படியே சொல்லிடுவாங்க. ரொம்ப caring-ஆன person. மைனஸ் என்னன்னனா. சிலரை அப்படியே நம்பிடறாங்க. ஏமாந்துடறாங்க.. அதை ஒப்புக்க முடியலை. மத்தபடி நல்லாத்தான் கேம் ஆடறாங்க” என்று முடித்து விட்டு பாவனிக்கு நகர்ந்தார். “ஸ்மார்ட்டா ஆடறாங்க. நல்லா அனலைஸ் பண்றாங்க. ஆனா சொல்ல வர்ற விஷயங்களை இன்னமும் ஷார்ப்பா சொன்னா நல்லாயிருக்கும். மத்தபடி இவங்க கூட எனக்கு கூட நெறைய கனெக்ட் ஆகலை” என்று சொல்லி முடித்து அழிச்சாட்டிய நாயகனான நிரூப்பிடம் நகர்ந்தார்.

“ஃபைனலுக்கு போகணும்ன்றதுதான் இவனோட ஒரே பாயிண்ட். அதுதான் அவனோட ஃபோகஸ். அதுக்காக என்ன வேணா செய்யவான். ஆனா. அவனுக்குள்ள ஒரு நல்ல மனசும் இருக்கு. என் பாயிண்ட் என்னன்னா.. அவன் கேமிற்கு உண்மையா இருக்கான். ஆனா மனசுக்கும் உண்மையா இருக்கணும்.. கெத்தா ஆடணும். என்னால மனச்சாட்சியை மீறி செயல்பட முடியாது. ஆனா நிரூப் இந்த விஷயத்தில் தவறுகிற மாதிரி இருக்கு. அது அவனோட உத்தியாகவும் இருக்கலாம்” என்று நிரூப்பைப் பற்றி சொல்லி முடித்த சிபி, அடுத்ததாக ராஜூ பாய் பற்றி சொல்ல ஆரம்பித்தார். “எல்லாத்தையும் பொறுமையா டீல் பண்ணுவான். ரெண்டு சைடுலயும் பொறுமையா உக்காந்து பேசுவான். பிரச்சினையை சரி செய்யறதுக்கு முழு முயற்சி எடுப்பான். மைனஸ் என்னன்னா. மனசுல இருக்கறத இன்னமும் அடிச்சுப் பேசலாம்” என்று ஆலோசனை சொல்ல “இனிமே அடிச்சிட்டே பேசறேன்.. தம்பி..” என்று சிரித்தார் ராஜூ.

பிக் பாஸ்
பிக் பாஸ்

தாமரையைப் பற்றிய சிபியின் அபிப்ராயம் இது. “பசிக்குதாப்பா..ன்னு என்னை இந்த வீட்ல கேக்கற ஒரே ஜீவன் இவங்கதான். பெட்டியை எடுக்கறதுக்கு முன்னாடி இவங்களை கேட்டுட்டுத்தான் எடுத்தேன். ஆனா ஜெயிக்கற வெறி இவங்க கிட்ட இப்ப குறைஞ்சுடுச்சு” என்று சிபி புகார் செய்ய, வெறி என்கிற வார்த்தையை வைத்து "Very bad தாமரை” என்று குறுக்கே புகுந்து கிண்டலடித்தார் கமல். “வீட்ல இருக்கற oven, fridge மேலதான் இவங்களுக்கு கண்ணு. பிக்பாஸ் வீட்ல எக்ஸ்ட்ரா ரெண்டு வாரம் இருக்கறதுதான் இவங்க ஆசை” என்று முடித்தார் சிபி. செளகரியமான சூழலைப் பார்த்ததும் அதில் கூடுதலான நாட்களில் வாழ்வதற்கு தாமரை ஆசைப்படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பரிசுப் பணத்தில் இந்தச் செளகரியங்களை அவரே உரிமையாக்கிக் கொள்ள முடியுமே? இந்த எளிய லாஜிக் ஏன் தாமரைக்குப் புரியவில்லை?

கடைசியாக அமீர். “இவன் முதல்லயே வந்திருக்கலாம். கெத்தா பேசறான். ‘இதான் என் பாயிண்ட்டுன்னு தெளிவா சொல்றான். ஜெயிக்கற வெறி இருக்கு. நம்பிக்கையோட இருக்கான்” என்று சிபி பாராட்ட “எங்களை விட்டுட்டு போயிட்டியே. உப்பு, சர்க்கரை இல்லாம நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்.. தெரியுமா..” என்று அமீர் அங்கலாய்த்தார். (ஒருவேளை சிபி வெளியேறியதற்கு உப்பு, சர்க்கரை பிரச்சினையும் ஒரு காரணமாக இருந்திருக்குமோ?!). “நீ போனது எனக்கு வருத்தம்” என்று அமீர் சொல்ல “ஒருவேளை 12 லட்சம் போனதுதான் வருத்தமோ?” என்று இடைமறித்து நக்கலடித்தார் ராஜூ. “நீயும் நானும் ஃபைனல் போவோம்னு நெனச்சேன்” என்று சிபியிடம் வருத்தப்பட்டார் அமீர். “உப்பு போனப்பறம்தான் எங்களுக்கு சொரணையே வந்துச்சு” என்று இன்னொரு சிக்ஸரை குறுக்கே அடித்தார் ராஜூ.

“உங்களைப் பார்த்து பேசறதா.. இல்ல கமல் சாரைப் பார்க்கறதா –ன்னு எனக்கு தடுமாற்றமா இருக்கு” என்று சிபி வெட்கப்பட “சரி.. அவரை அந்தத் தத்தளிப்பிற்கு ஆளாக்க வேணாம். சீக்கிரம் பேசி அனுப்பிடலாம்” என்று கிண்டலடித்த கமல், சிபியின் நேர்மையை விதம் விதமான வார்த்தைகளில் பாராட்டினார். “இந்த நேர்மைதான் உன்னை உயர்த்தும்” என்பதுதான் அவர் சொன்னதின் சாரம். “நீயே உன்னோட விமர்சகனாகவும் இருக்கணும்-ன்னு நீங்க சொன்னது எனக்குப் பிடிச்ச வாசகம் சார். அதை ஃபாலோ பண்றேன்” என்று சிபி சொல்ல “நல்லது. வெளிய வந்து ஒருத்தர் விமர்சிச்சா நமக்கு ரத்தக்காயம் அதிகமாயிடும். அதுக்கு முன்னாடி நாம முந்திக்கணும்” என்று கமல் சொன்னது நல்ல ஆலோசனை.

நிரூப்
நிரூப்

‘நிருப்பை எப்படி தேர்வு செஞ்சீங்க மக்களே?’

சிபியை வழியனுப்பி வைத்து விட்டு அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், Second Finalist விருதை அமீரின் மூலம் நிரூப்பிற்கு வழங்கச் செய்தார். “இந்த நாமினேஷன் விவகாரத்தைப் பற்றி நாம பேசியாகணும்” என்று கமல் விசாரணையை ஆரம்பிக்க “அமீர்தான் என்னை நாமினேட் பண்ணான். ராஜூவோட முட்டையை ஏன் உடைக்கலைன்னு கேட்டு ஒரே இம்சை செய்தான்” என்று சிரித்தார் தாமரை. ராஜூ மீது முன்னர் சொன்ன காரணத்தை பாவனி இப்போது சபையிலும் சொல்ல “அவங்களுக்கு உதவி கிடைச்சாலும் ‘எனக்கென யாரும் இல்லையேன்னு பாட்டுப் பாடினா நான் என்ன சார் செய்யறது?” என்று பதில் அளித்தார் ராஜூ. “மாத்தி மாத்தி பேசறாங்கன்னு சொல்றீங்களா?” என்று வில்லங்கமாக எடுத்துக் கொடுத்தார் கமல்.

“காரணம் மறந்துட்டேன் சார்” என்று சொல்லி அதிர்ச்சி தந்தார் நிரூப். “ஆமா. மூணு.. நாலு எபிசோடிற்கு இழுத்துட்டே போனா… அப்படித்தான் ஆகும்” என்று கிண்டலடித்தார் கமல். “ஓகே.. நிரூப்பை இறுதிப்போட்டிக்கு எப்படி அனுப்பிச்சீங்க.. வந்து பேசுவோம்” என்று நமட்டுச் சிரிப்புடன் அகன்றார் கமல். நிரூப்பைத் தேர்ந்தெடுத்த விதத்தில் அவருக்கும் நிறைய கேள்விகள் இருக்கின்றன என்பதையே அவரது நக்கலான சிரிப்பு உணர்த்தியது.

ஓர் இடைவேளைக்குப் பிறகு திரும்பிய கமல், தன் கேள்வியை அழுத்தமாக முன்வைக்க, ஒவ்வொருவருமே நிரூப்பின் அட்ராசிட்டியைப் பற்றி வரிசையாக புகார் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் அது புகாராக அல்லாமல் செல்லமான கொஞ்சலாகவே இருந்தது. தன்னையும் அறியாமல் நிரூப்பை பாராட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. “என்னமோ.. பண்றான்.. சார். ஒண்ணுமே புரியலை” என்று பிரியங்கா சொன்னதெல்லாம் நிரூப்பிற்கான காம்ப்ளிமெண்ட் மட்டுமே.

பிக் பாஸ் 98: மக்களால் தேர்வான ராஜூ; நெருங்கிய இறுதிக்கட்டம்;  வெல்லப்போவது யார்?

“நிரூப்போட ஸ்ட்ராட்டஜியைப் பத்தி நானே பாராட்டியிருக்கேன். ஆனா இந்த முறை அது ஓவராயிடுச்சோ?” என்று ஆரம்பித்த கமல் “அவரு என்னதான் பண்றாருன்னு நீங்க தெளிவா உணரணும் இல்லையா? நானே ஏணி தர்றேன். நீங்க அதைப்பிடிச்சு ஏறி வராம அடம்பிடிச்சா எப்படி?” என்று பிரியங்காவை கிண்டலடித்தார். “நிரூப் பண்றது எல்லாமே தெரியுதுன்னு சொன்னா. அவர் பண்றது புரியலைன்னு எப்படி சொல்றீங்க?” என்று லாஜிக்கலாக கமல் மடக்கியது நல்ல பாயிண்ட்.

நிரூப் ஓர் அபாரமான உத்தியை முன்வைத்தால், அதை முறியடிக்க வேண்டியதுதான் மற்றவர்களின் திறமை. மாறாக அதில் மயங்கி விழுவது அல்ல. உதாரணத்திற்கு ஒன்று. “என்னை வெளியே அனுப்புங்க” என்று நிரூப் டிராமா செய்த போது ஒரு கட்டத்தில் “சரிடா. எழுந்து வா. தண்ணி ஊத்தி வெளியே அனுப்பறேன்” என்று அமீர் முன்வந்தார் அல்லவா.. அதுதான் நிரூப்பிற்கான சரியான அதிர்ச்சி வைத்தியம். இதைப் போலவே மற்றவர்களும் நிரூப்பை கறாராக கையாண்டிருந்தால் அவரின் அழிச்சாட்டியம் குறைந்திருக்கும்.

‘என்ன. கையைப் பிடிச்சு இழுத்தியா?’

தன் மீதான புகார்களுக்கு நிரூப் விளக்கம் அளித்த அழகு இருக்கிறதே?! “என்ன கையைப் பிடிச்சு இழுத்தியா,..” என்று வடிவேலு ஒரு நகைச்சுவைக் காட்சியில் அழிச்சாட்டியம் செய்வார் அல்லவா? அதையே இன்னமும் திறமையாகச் செய்தார் நிரூப். கேள்விக்கு பதில் தெரியாத மாணவன், கேள்வியையே திரும்பவும் நீளமாக எழுதி வைக்கும் உத்தியைப் போல, கமல் கேட்ட கேள்விக்கு சுருக்கமாக பதில் சொல்லாமல் “பிக்பாஸ் என்ன டாஸ்க் கொடுத்தாருன்னா..” என்று ஆரம்பித்து நீட்டி முழக்கினார். நிரூப்பின் இந்த உத்தியைப் பார்க்க ஒரு பக்கம் சிரிப்பாகவும் வந்தது; இன்னொரு பக்கம் எரிச்சலாகவும் வந்தது. “இன்னமும் என்னை பைத்தியக்காரனாவே நெனச்சுட்டு இருக்கல்ல நீ” என்கிற வசனம்தான் இங்கு பொருத்தமானது.

சர்க்கரை, உப்பு டாஸ்க்கைப் பற்றி பதில் சொல்லும் விதமாக நிரூப் நீட்டி முழக்கிய போது “அவன் மத்தவங்க கிட்டயும் அதை கேட்டிருக்கணும்” என்று பிரியங்கா சொன்ன போதுதான் நமக்கு ‘ஹப்பாடா’ என்றிருந்தது. இதைப் போலவே “என்னை வெளியே அனுப்பியிருந்தாலும் ஓகே” என்று நிரூப் சீன் போட்ட போது ‘நாங்க அனுப்ப மாட்டோம்னு அவனுக்கு நல்லாத் தெரியும் சார்” என்று எல்லோருமே ஒரே குரலில் சொன்னதும் நன்று. “இப்படித்தான் இவனைப் பழக்கி கெடுத்து வெச்சிருக்காங்க” என்று அமீர் சரியான பாயிண்ட்டை சொன்னார். “அவன் நெனச்சபடி கேமை இழுத்துட்டுப் போறான்” என்பதை பிரியங்கா செல்லமான புகாராக சொல்கிறார் என்றால், அமீர் அதையே சற்று கடுமையான புகாராக சொல்வது சிறப்பு.

“எனக்கு என்ன விநோதமா இருந்ததுதன்னா. ‘Ticket to finale’ டாஸ்க்ல அவரை முதல்ல வெளியே அனுப்பிச்சது நீங்கதான். ஆனா இப்ப நீங்களே சேர்ந்து அவரை ஃபைனலுக்கு அனுப்பியிருக்கீங்க” என்று சிரித்தார் கமல். “அவன் அப்படிப் பண்ணிடறான். சார். தலையைப் பிய்ச்சுக்கலாம்னு இருக்கு” என்கிற அனத்தலை மறுபடியும் ஆரம்பித்தார் பிரியங்கா.

பிரியங்கா
பிரியங்கா

‘இது வேலைக்கு ஆகாது” என்று முடிவு செய்த கமல், அடுத்த சப்ஜெக்டிற்கு நகர்ந்தார். ‘இந்த வாரம் யார் முதலில் காப்பாற்றப்படவிருக்கிறார்’ என்பதைச் சொல்ல வேண்டிய நேரம். இதில் சஸ்பென்ஸே தேவையில்லை. அது ராஜூதான். “பயந்துட்டேன் சார்” என்று ராஜூ சொன்னது உண்மையான பயமா, அல்லது டிராமாவா என்று தெரியவில்லை. எப்படியோ, ராஜூ இறுதிப் போட்டிக்குச் சென்றது நல்ல விஷயம்.

இந்த வார எலிமினேஷன் தகவல் வெளிவந்து விட்டது. அது தாமரை என்கிறார்கள். சற்று அதிர்ச்சியான விஷயம்தான். "இன்னமும் ரெண்டு வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்தா போதும்” என்கிற விநோதமான காரணத்தைச் சொல்கிறார் தாமரை. மக்களுக்கு அதில் திருப்தியில்லாமல் போயிருக்கலாம். இல்லையென்றால் பாவனியைத்தான் வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.