Published:Updated:

பிக் பாஸ் 99: “நீங்க ஜெயிச்சிருக்கணும்” – தாமரைக்கு ஆதரவு தந்த கமல்; உணர்ச்சிவசப்பட்ட ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் தாமரை

“ ‘இங்கிருந்து வெளியேறிய நபர்கள்’ உங்களுடன் பேசுவார்கள்” என்று கமல் அறிவித்ததும் போட்டியாளர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டது. முதலில் ராஜூவிற்கு அழைப்பு வந்தது. “கப்பு முக்கியம் பிகிலு” என்று ராஜூவை மகிழ்ச்சியுடன் வாழ்த்தினார் இமான் அண்ணாச்சி.

பிக் பாஸ் 99: “நீங்க ஜெயிச்சிருக்கணும்” – தாமரைக்கு ஆதரவு தந்த கமல்; உணர்ச்சிவசப்பட்ட ஹவுஸ்மேட்ஸ்!

“ ‘இங்கிருந்து வெளியேறிய நபர்கள்’ உங்களுடன் பேசுவார்கள்” என்று கமல் அறிவித்ததும் போட்டியாளர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டது. முதலில் ராஜூவிற்கு அழைப்பு வந்தது. “கப்பு முக்கியம் பிகிலு” என்று ராஜூவை மகிழ்ச்சியுடன் வாழ்த்தினார் இமான் அண்ணாச்சி.

Published:Updated:
பிக் பாஸ் தாமரை

மனிதர்கள் கூடியிருக்கும்போது அனைத்து விதமான குடுமிப்பிடிச் சண்டைகளையும் தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்வார்கள். ஆனால் அவர்களில் பலர் வெளியேறி அந்த இடம் மெல்ல மெல்ல சூன்யமாக மாறும் போதுதான் “ச்சே.. நல்ல மனுஷம்ப்பா… நாமதான் தப்பா நடந்துக்கிட்டோம்ல” என்று சுயபரிசீலனையுடன் விலகியவர்களை நினைவுகூர்வார்கள். பிக்பாஸ் வீடும் அப்படித்தான் இப்போது இருக்கிறது. இறுதியில் எஞ்சிய போட்டியாளர்கள் ஐவரும் கூடி நின்று ‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ ஆடிய காட்சியே அதற்கு உதாரணம்.

நேற்றைய எபிசோடில் உண்மையாகவே நெகிழ்வை ஏற்படுத்திய சில தருணங்கள் இருந்தன. இந்த வரிசையில் முதலாவதாக ஒன்றைச் சொல்வேன். ‘Sorry.. Thanks’ சொல்லும் டாஸ்க்கில் பிரியங்காவிடம் மண்டியிட்டு நிரூப் மன்னிப்பு கேட்ட காட்சி அது. பிரியங்காவைப் போலவே பலரும் அப்போது நெகிழ்ந்திருப்பார்கள். அத்தனை கடுமையான சண்டை அவர்களுக்குள் நடந்திருந்தது. ஆனால் அதற்குள் ஒரு மெல்லிய பாசக்கோடு மறையாமலேயே இருந்தது.

கமல்
கமல்


இரண்டாவது தாமரையின் பயண வீடியோ. கமல் குறிப்பிட்டதைப் போல் ஒரு ரசிகையாக மாறி தன்னையே வியந்து விதம் விதமான முகபாவங்களில் பார்த்துக் கொண்டிருந்தார் தாமரை. “அவர் பணத்தை எடுத்திருக்கலாமே?!” என்று என்னைப் போலவே பலரும் ஆதங்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அது முழுக்க முழுக்க தாமரையின் முடிவு. அவரே நம்புவதைப் போல ‘இதை விடவும் வெளியே அதிகம் சம்பாதிக்கலாம்’ என்கிற தன்னம்பிக்கை ஒரு காரணமாக இருக்கலாம்.

சிலரை வெளியே அனுப்பும் போதுதான் கமலின் முகத்தில் அவரையும் மீறி உண்மையான ஆதங்கமும் வருத்தமும் வெளிப்பட்டு விடும். தாமரை விஷயத்தில் அது நிகழ்ந்தது. “இது போன்ற நிகழ்ச்சியில் உங்களுக்கு கிடைக்கும் வெற்றி சாதாரணர்களின் வெற்றிக்கு உதாரணமாக அமைந்திருக்கும். அது நடந்திருக்கலாம்” என்று கமல் சொன்ன போது நாமும் பலமாக ஆமோதிக்கத் தோன்றியது. “போதும். சார்.. நான் ஜெயிச்சிட்டேன்” என்று தாமரையே அடிக்கடி சொன்னது ஒரு பின்னடைவாக மாறி விட்டதோ, என்னமோ.

எபிசோட் 99-ல் என்ன நடந்தது?

விநோதமான எக்ஸ்ட்ரா பிட்டிங்குகள் கொண்ட உடைகளை கமல் அவ்வப்போது அணிவது வழக்கம். நேற்றைய உடையும் அப்படித்தான் இருந்தது. ‘கேயாஸ் தியரி.. பட்டர்ஃபிளை எபெக்ட்’ என்றெல்லாம் அவர் ஆரம்பிக்கும் போது தசாவதாரம் திரைப்படத்தைப் பற்றி நீளமான வியாக்கியானம் செய்வாரோ என்று தோன்றியது. இல்லை. நிரூப் மற்றும் ராஜூ ஆகிய இருவரும் இறுதிக்குத் தேர்வானதில் உள்ள இருமுனை வித்தியாசங்களை கேயாஸ் தியரியுடன் கொக்கி போட்டு சுருக்கமாகச் சொல்லி விட்டு நிகழ்ச்சிக்குள் சென்றார்.

“ ‘இங்கிருந்து வெளியேறிய நபர்கள்’ உங்களுடன் பேசுவார்கள்” என்று கமல் அறிவித்ததும் போட்டியாளர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டது. முதலில் ராஜூவிற்கு அழைப்பு வந்தது. “கப்பு முக்கியம் பிகிலு” என்று ராஜூவை மகிழ்ச்சியுடன் வாழ்த்தினார் இமான் அண்ணாச்சி. அடுத்ததாக பிரியங்காவை அழைத்தவர் ‘ஜில்லி’ என்று அவரால் செல்லமாக அழைக்கப்படும் அபிஷேக் ராஜா. பிரியங்கா உண்மையிலேயே அதிக உற்சாகம் அடைந்தார். “யாரு ஜெயிச்சிட்டு வந்தாலும் கட்டிங் போட்டு பிரிச்சுக்கலாம்” என்று குறும்பு செய்தார் அபிஷேக்.

நிரூப்
நிரூப்

‘இந்த சீசனில்தான் நட்புணர்ச்சி அதிகம்’

தாமரையை அழைத்தவர் ‘குகு பாப்பா’ எனப்படும் அக்ஷரா. அவரின் குரலில் உண்மையாகவே ‘அக்கா’ பாசம் தெரிந்தது. ‘செல்லக்குட்டி.. பட்டு. ஜூஜ்ஜூ-..’ என்று செல்லம் கொஞ்சினார் தாமரை. அனைவரையும் விசாரித்த அக்ஷரா, ஏனோ பாவனியை ஓரங்கட்டி விட்டார். “நீ இல்லாம இங்க Noise Pollution இல்ல” என்று அக்ஷராவை ராஜூ கிண்டலடித்தார். தன்னை சிபி அழைத்ததில் அமீருக்கு அப்படியொரு மகிழ்ச்சி. ஆனால் சிபியின் குரல் போனில் வேறு மாதிரியாக ஒலித்ததில் நமக்கே அடையாளம் தெரியவில்லை. “வைல்ட் கார்ட்ல வந்தாலும் செம கெத்தா வெளையாடறேடா” என்று அமீரை மனம் திறந்து பாராட்டினார் சிபி.

“மத்த சீசன்களை விடவும் இந்த சீசனில்தான் நட்புணர்ச்சி அதிகம் தென்படுகிறது. எவ்ள திட்டிக்கிட்டாலும் அடுத்த நிமிஷம் ஒண்ணு சேர்ந்துடறீங்க. ஒருவேளை முந்தைய சீசன்களை பார்த்துட்டு வந்த காரணமோ.. என்னமோ. இது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னேற்றத்தைக் காண்பிக்கிறது. எல்லோருமே நண்பர்களாக இருக்கீங்க” என்று இடைமறித்து அனைவரையும் பாராட்டினார் கமல்.

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

மற்றவர்களுக்கு வரும் அழைப்பையெல்லாம் மிக உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார் நிரூப். தங்களைப் பற்றி வெளியே என்ன உரையாடல் நடைபெறுகிறது என்பதை அறிவதில் அவருக்கு இருந்த துடிப்பு நன்கு தெரிந்தது. நிரூப்பை அழைத்தவர் வருண். ஆனால் அவர் அனைவரிடமும் கலகலப்பாக உரையாடினார். “டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்ல உன்னை வெளியே அனுப்பிச்சிட்டாங்களே. நான் இருந்திருந்தா அனுப்ப விட்டிருக்க மாட்டேன்” என்று நிரூப்பிடம் சொன்ன வருண் “ஆனா.. முட்டை டாஸ்க்ல உன்னைத்தான் அடிச்சிருப்பேன்” என்று உடனே சொல்லி சிரிப்பூட்டினார்.

“இசை… மது.. ஸ்ருதி.. இவர்களில் யாராவது ஒருவர் என்னை அழைக்கலாம்” என்று நினைத்திருந்த பாவனியை அழைத்தவர் ஸ்ருதி. “மூணு விஷயங்கள் சொல்றேன். நேர்மையா பேசிடு. ‘நோ. சொல்றதை அழுத்தமா சொல்லிடு (அமீர் சிரிப்பு).” என்று காலம் கடந்து புத்தி சொன்ன ஸ்ருதி, அடுத்து சொன்னதுதான் மிக முக்கியமான, அவசியமான பாயிண்ட். “நீ ஜெயிக்கறதுக்காக வந்தியோ. என்னமோ.. ஆனா உன்னை இதுவரைக்கும் கொண்டு வந்த மக்களுக்காகவாவது நல்லா விளையாடு. ஜெயிக்கப்பாரு” என்றார்.

“ஸாரி.. தாங்க்ஸ் சொல்லுங்க மக்களே”

ஓர் இடைவேளைக்குப் பின்பு திரும்பி வந்த கமல் “யாரும் இங்க சுயம்பு –ன்னு கிடையாது. யாருடைய வெற்றிக்குப் பின்னாலும் ஒருவரின் உதவி நிச்சயம் இருக்கும். நீங்க யாருக்காவது ‘நன்றி” ‘மன்னிப்பு’ சொல்லணும்னு நெனச்சா.. இப்ப அதைச் சொல்லலாம்” என்றார். இந்த டாஸ்க் மிக நெகிழ்வானதாகவும் உண்மையானதாகவும் இருந்தது. சண்டையெல்லாம் முடிந்து நீண்ட நாட்கள் கழித்துப் பார்க்கும் போது அனைத்தையும் மறந்து ஒருவரையொருவர் கட்டிக் கொள்ளும் ஆத்மார்த்த நண்பர்களைப் போல அமைந்திருந்தது.

பாவனி
பாவனி

முதலில் ஆரம்பித்தவர் அமீர் “நான் ராஜூவிற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நடனம் தாண்டி எனக்கு ஸ்கிரிப்ட் செய்ய ஆசையிருக்கு. ஆனா பயமா இருக்கும். இங்க ராஜூ கிட்ட சினிமா பத்தி நிறைய பேசியிருக்கேன். அவர் நெறைய விஷயங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்காரு. அதுக்காக நன்றி” என்றார். (அடப்பாவிகளா.. இதிலிருந்து ஒரு காட்சிகூட நமக்கு காட்டவில்லையே?!). அடுத்ததாக அமீர் சொன்ன மன்னிப்பு உண்மையிலேயே அருமை. “நான் பாவனி கிட்ட ஸாரி கேட்க விரும்பறேன். நான் பாட்டுக்கு விளையாட்டுத்தனமா என்னெ்னமோ பண்ணிட்டேன். ஆனா அதெல்லாம் வெளியே எப்படி தெரிஞ்சதுன்னு தெரியல. ஆனா பாவனி ரெண்டையும் அழகா பேலன்ஸ் பண்ணாங்க” என்று மன்னிப்பு கேட்டது அருமை. “எதுக்குடா.. இதெல்லாம்?” என்கிற மாதிரியே புன்னகையுடன் அமீரைப் பார்த்துக் கொண்டிருந்தார் பாவனி. “நீங்க சொல்றதை என்னால புரிஞ்சுக்க முடியுது. ராஜூ சொல்லிக் கொடுத்த அறிவு மாதிரியே இந்த நட்பும் உங்க கூடயே வாழ்நாள் முழுக்க வரலாம்” என்று கமல் சொன்னது அருமை.

அடுத்து ஆரம்பித்தவர் பிரியங்கா. இவர் மன்னிப்பு கேட்டது, ஐக்கி பெர்ரியிடம். “அவ பாட்டுக்கு காக்கா.. காமிரா கிட்டலாம் பேசிட்டு இருந்தா. அண்ணாச்சிதான் என் கிட்ட சொல்லியிருக்காரு. அவ என்னை அக்காவா பார்த்திருக்கா. ஆனா நான்தான் கவனிக்கத் தவறிட்டேன்” என்று ஐக்கிக்காக நெகிழ்ந்த பிரியங்கா, அடுத்ததாக சோறு போட்ட அன்னபூரணியான தாமரைக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். “மத்தவங்களுக்கு நான்வெஜ் சாப்பாடு வந்தாலும் தாமரை எனக்காக மட்டும் எதையாவது செஞ்சு தருவாங்க. சாப்பாடு சரியா இல்லைன்னா எனக்கு பைத்தியம் பிடிச்சுடும்” என்றது அருமை. இந்தச் சமயத்தில் அவர் ‘அக்கா.. அக்கா..’ என்று தாமரையை அழைத்தது விநோதம்.

“செலவு செய்யாம காமெடி செய்ய முடியாது’

அந்த வீட்டில் தன்னை தொடர்ந்து போஷித்த அக்ஷராவிற்கு நன்றியும் “கோவத்தைக் கிளப்பிடும். திட்டிப்புடுவேன். ஆனா இந்தப் புள்ளய எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று பிரியங்காவிற்கு மன்னிப்பும் சொன்னார் தாமரை. “எல்லோருக்கும் ஸாரி” என்று ஆரம்பித்தார் ராஜூ. “காமெடின்னு நெனச்சு நான் பாட்டுக்கு ஏதாச்சும் சொல்லிருவேன். ஆனா அது மத்தவங்களை புண்படுத்தி விடலாம்” என்ற ராஜூவை இடைமறித்து “செலவு செய்யாம காமெடி செய்ய முடியாது. அது உங்க செலவா இருக்கலாம் அல்லது மத்தவங்க செலவா இருக்கலாம்” என்று கமல் சொல்லியது அருமை. காமெடிக்கான இலக்கணங்களில் அதுவொன்று. நகைச்சுவை என்று வரும் போது தன்னையோ அல்லது மற்றவர்களோ கிண்டல் அடித்துத்தான் ஆக வேண்டும்.

“நான் தெரியாம பண்ணியிருப்பேன். அதுக்காக ஸாரி.. சின்னப் பொண்ணு கதை சொன்ன போது எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி போயி டிஸ்லைக் போட்டேன். அமீர் மேல உண்டான பிரியத்தை வெளியே சொன்னதால சிபி ஹர்ட் ஆயிட்டான்…” என்று ராஜூ தொடரும் போது பாவனி மேட்டரை சொல்வாரா, மாட்டாரா என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால் சொல்லி விட்டார். “தெரிஞ்சே அவங்களை நிறைய ஹர்ட் பண்ணியிருக்கேன். ரொம்ப கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கேன்” என்று ராஜூ வருந்த “சும்மா இருடா லூஸூ” என்கிற மாதிரியான முகபாவத்தை சிரிப்புடன் தந்தார் பாவனி.

பிரியங்கா - நிரூப்
பிரியங்கா - நிரூப்

“எல்லோருக்குமே நன்றி சொல்லணும். குறிப்பா அண்ணாச்சிக்கு.. சொல்லணும்.. தாமரைக்கு சொல்லணும்.. என்னை நிறைய முறை குறிப்பிட்டு பாராட்டியிருக்கீங்க. உங்களுக்கும் நன்றி சார்.. இதெல்லாம் எனக்கு பெரிய விஷயம்” என்று கமலுக்கும் நன்றி சொல்லி முடித்தார் ராஜு. அடுத்ததாக எழுந்து சென்ற நிரூப், மண்டியிட்டு பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட காட்சி அருமை. “உன்னை மாதிரியான ஒரு பிரெண்ட் கிடைக்கறது அபூர்வம். நான் கேமிற்காகத்தான் உன்னை திட்டினேன். அப்பவாவது என்னை விட்டு விலகிப் போவேன்னு.. அப்புறம் வெளியே போய் சமாதானப்படுத்திக்கலாம்னு நெனச்சேன்.. என்று மனமார மன்னிப்பு கேட்ட நிரூப் “இங்க நான் நானாத்தான் இருந்திருக்கேன். இது மத்தவங்களுக்குப் புரிஞ்சுதான்னு தெரியல. ஆனா நீ எனக்காக பல சமயங்கள்ல நின்னிருக்கே” என்று சொல்லி பிரியங்காவை அணைத்துக் கொண்டவுடன் “அய்யோ.. என் செல்லம் பாரேன். எவ்வளவு அறிவா பேசுது” என்று சிரிப்பும் மகிழ்ச்சியுமாக நிரூப்பை கண்கலங்க அணைத்துக் கொண்டார் பிரியங்கா. இதை கமலும் உணர்ச்சிகரமாக பாராட்டினார்.

“அபிஷேக் கூப்பிட்டுட்டான்… நிரூப் மன்னிப்பு கேட்டுட்டான்.. அடுத்த என்ன.. ஃ.பைனலுக்கு போயிடுவே.. அதானே?“ என்று சொல்லிய அமீரிடம் “ஆமாண்டா.. அக்கா. ஹாப்பியா இருக்கேண்டா” என்று குதூகலமாக அவரைக் கட்டிக் கொண்டார் பிரியங்கா.

புத்தகப் பரிந்துரை – இரண்டாம் இடம்

ஓர் இடைவேளைக்குப் பிறகு திரும்பி வந்த கமல், அவருக்கு மட்டுமல்லாமல் புத்தகப் பிரியர்களுக்கும் அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடிய பகுதிக்கு வந்தார். அது ‘நூல் பரிந்துரை’. இந்த வாரம் கமல் பரிந்துரைத்த நூல், எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய ‘ரண்டாமூழம்’ என்கிற புதினம். ஞானபீட விருது பெற்ற நூல். ‘இரண்டாம் இடம்’ என்கிற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. முதலிடத்தில் இருக்கிற அத்தனை தகுதிகளைக் கொண்டிருந்தாலும் சூழல் காரணமாக இரண்டாம் இடத்தில் இருந்த, மகாபாரத பாத்திரமான பீமனைப் பற்றிய நாவல் இது.

எம்.டி.வாசுதேவன் நாயர் மலையாளத்தின் மிக முக்கியமான எழுத்தாளர். இவர் எழுதிய நூல்கள் ஏராளமான விருதுகளைக் குவித்துள்ளன. இலக்கியம் தாண்டி சினிமாவிலும் தனது சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார். திரைக்கதைக்காக பல விருதுகளை வாங்கியுள்ளார். கமல் மலையாளத்தில் அறிமுகமான ‘கன்னியாகுமரி’ திரைப்படம் இவரது படைப்பை அடிப்படையாகக் கொண்டதுதான். திரைக்கதையைத் தாண்டி இயக்குநராகவும் பிரகாசித்துள்ளார். 1973-ல் இவர் இயக்கிய ‘நிர்மால்யம்’ தேசிய விருதைப் பெற்றது.

இரண்டாம் இடம்
இரண்டாம் இடம்

புத்தகப் பரிந்துரை முடிந்ததும் அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், அதிக சஸ்பென்ஸ் இல்லாமல் பிரியங்கா இறுதிப்போட்டிக்கு தகுதியான செய்தியைச் சொன்னதும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார் பிரியங்கா. “என் பாக்ஸ் டிக் ஆயிடுச்சு” என்று சந்தோஷப்பட்டு மக்களுக்கு நன்றி சொன்னார்.

ஆக மீதம் இருந்தவர்கள் தாமரை மற்றும் பாவனி. இதில் பாவனி வெளியேறுவார் என்றுதான் பலரும் யூகித்திருப்பார்கள். “என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்க ரெண்டு பேருமே Finalistதான். ஆனா மக்கள் முடிவு என்னவாக இருக்குதுன்னு பார்ப்போம்” என்ற கமல் எவிக்ஷன் கார்டை நீட்டிய போது அதில் அதிர்ச்சிகரமாக தாமரையின் பெயர் இருந்தது. ராஜூ உள்ளிட்டவர்களின் முகங்கள் இருண்டன. ஆனால் தனது வெளியேற்றத்தை இயல்புடன் எடுத்துக் கொண்டார் தாமரை.

“வீட்டை நல்லா பார்த்துக்கங்க”

“பெட்டியை எடுத்திருக்கலாம் லூஸூ” என்று பிரியங்கா செல்லமாக கடிந்து கொள்ள “வீட்டை நல்லா பார்த்துக்கங்க” என்று அப்போதும் வீட்டை தாமரை சுமந்து சென்றது அருமை. “நீதாண்டா எனக்கு பெரிய பையன்” என்று ராஜூவிடம் எக்ஸ்ட்ராவாக உருகிய தாமரை, அனைவரிடமும் நெகிழ்வுடன் விடைபெற்றாலும் அமீரிடம் அதிகம் பேசாததற்கு காரணம் தெரியவில்லை.

“என்னை வாழ வெச்ச வீடு இது. ஐயா போயிட்டு வரட்டுங்களா..” என்று பிக்பாஸிடமும் விடைபெற்றார் தாமரை. ‘மலரப் போகும் தாமரைக்கு வாழ்த்துகள்’ என்று பிக்பாஸூம் பதிலுக்கு பிரியம் காட்டினார். “உங்க குரலைக் கேட்காம ஒரு மாதிரியா இருக்கும் பிக்பாஸ்” என்று தாமரையும் பாசம் காட்ட “அவரோட போன் நம்பர் வாங்கிக்க.. அப்பப்ப பேசு” என்று நக்கலடித்த பிரியங்கா “எந்த சீசன்லயும் உன்னை மாதிரி பொண்ணு வந்ததில்லை. சாதாரண மக்களின் பிரதிநிதி நீ” என்று வாழ்த்தி கட்டியணைத்துக் கொண்டார். நிரூப் கேட்டுக் கொண்டதின் பேரில் “போ மாட்டேன்” என்று விளையாட்டாக தாமரை கத்திச் சென்றது சுவாரஸ்யமான காட்சி.

“பணத்தை எடுக்கறதுக்கு முன்னாடி.. சிபியும் என் கிட்ட கேட்டான்.. அக்கா. நீங்க போய் தாமரை கிட்ட பேசுங்க. இது அவங்களுக்கு உபயோகமா இருக்கும்னு சொன்னான். ஆனா “கோடி ரூபா வெச்சா கூட எடுக்கமாட்டேன்னு தாமரை மறுத்துட்டா” என்று பிரியங்கா மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். சிபியின் நல்ல பண்பு மேலும் உறுதிப்பட்ட தருணம் இது. “ஆமாம். மேல தண்ணி ஊத்தில்லாம் ஜெயிக்கணும்னு எனக்கு அவசியமில்லைன்னு சொன்னாங்க” என்று அமீரும் தாமரையின் சுயமரியாதையை நெகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்.

“நீங்க ஜெயிச்சிருக்கணும்” – தாமரைக்கு ஆதரவு தந்த கமல்

மேடையில் வந்த தாமரை, தடுத்தும் கூட கமலின் காலில் விழுந்து வணங்கினார். தாமரையின் மீதிருந்த தனிப்பட்ட பிரியம் கமலின் வாழ்த்தில் கணிசமாக வெளிப்பட்டது. “ஏதோ ஒரு கிராமத்துப் பொண்ணு.. எப்படியோ கூப்பிட்டுட்டு வந்துட்டாங்க.. ஒரு வாரம்.. ரெண்டு வாரம் இருப்பாங்க போல.’ன்னு நெனச்சவங்க கூட பின்னாடி உங்க ரசிகர்களாக மாறிட்டாங்க. இங்க நீங்க நீங்களா இருந்தீங்க. தமிழ்ப்பெண்கள் எங்க வேணா சமாளிச்சுடுவாங்க.. நான் உங்களை அடுத்த வாரம்தான் சந்திக்கறதா இருந்தேன். ஆனா அது இல்லேன்னு மக்களில் சிலர் முடிவு பண்ணிட்டாங்க. ஆனால் வெளியே போன பிறகு உங்களுக்கு கிடைக்கப் போற வெற்றிதான் அதுக்கு பதிலா இருக்கணும்” என்றெல்லாம் கமல் உணர்ச்சிகரமாகப் பேசுவது அபூர்வமான காட்சி.

“:உங்க கிட்ட பேசிட்டு இருக்கறதே. எனக்கெல்லாம் பெரிய விஷயம் சார்.. நாடக உலகத்திற்கு வெற்றி தேடித் தந்துட்டேன்” என்ற தாமரையை இடைமறித்த கமல் “பத்து பதினைந்து வெற்றிப் படங்களில் நடிச்ச மரியாதை இப்போ உங்களுக்கு கிடைச்சிருக்கு. விட்றாதீங்க. இன்னொரு முக்கியமான விஷயம். பணப்பெட்டி வெச்சப்ப கூட எடுக்காம இருந்தீங்க இல்லையா. அதுதான் உங்க நம்பிக்கை. அது உங்களோட கஜானா சாவி.. மக்களை நம்புங்க. நானும் அப்படித்தான் இருக்கேன். எனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ‘ஒரு சாதாரண நபராலயும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் ஜெயிக்க முடியும்’ன்றது உங்க வெற்றி மூலமா நடந்திருக்கலாம். அதை மக்கள் எப்படி தவற விட்டாங்கன்னு தெரியல. நான் மக்களை எப்பவும் எதிர்த்ததில்லை. அவங்க பின்னாடி உங்களுக்கு Sorry, Thanks சொல்லுவாங்க” என்றெல்லாம் கமல் பேசியதின் முக்கியத்துவத்தை தாமரையால் உணர முடிந்ததா என்று தெரியவில்லை. “நான் ஏற்கெனவே ஜெயிச்சிட்டேன் சார்” என்று சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்.

தாமரை
தாமரை

“உங்களுக்கு ஆர்மின்னுல்லாம் தனியா கிடையாது. மக்களே பார்த்துதான் உங்களை வளர்த்திருக்காங்க.. ‘இது வரைக்கும் வந்ததே போதும்ன்னுலாம் நெனக்காதீங்க.. நீங்க இன்னமும் பெரிசா வரணும்.. இது நான் தருகிற கோப்பை” என்றெல்லாம் சொன்ன போது கமலின் கண்களே சற்று கலங்கியது போன்ற பிரமை. பிறகு தாமரையின் பயண வீடியோ வெளியிடப்பட்டது. குழந்தை போன்று விதம் விதமான முகபாவங்களுடன் அதை ரசித்துப் பார்த்தார் தாமரை. அவர் அழும் காட்சி அவருக்கே இப்போது சோகத்தை ஏற்படுத்தியது. "என்னை நானே டிவில பார்த்ததில்லை” என்று சிரிப்புடன் சொன்ன தாமரையை “சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். கஜானா சாவி பத்திரம்” என்று அன்புடன் வழியனுப்பிய கமல், பிறகு தானும் விடைபெற்றுக் கொண்டார்.

“நாமளலாம் கனவு காண்றவங்க. ஆனா அவ நெறைய பேரைக் கனவு காண வெச்சிருக்கா” என்று தாமரையை பாசத்துடன் நினைவுகூர்ந்து கொண்டிருந்தார் பிரியங்கா. விட்டத்தைப் பார்த்து சோகத்துடன் அமர்ந்து கொண்டிருந்த ராஜூவை பிரியங்கா ஜாலியாக நோண்ட ஆரம்பிக்க “இவ்வளவு திட்டிட்டு ஒருத்தன் பக்கத்துலயே உக்காந்திருக்கான். உங்களுக்கு சொரணையே வரலையா கோப்பால்?” என்று நிரூப்பை முன்னிட்டு ராஜூ காமெடி செய்ய அதற்கு பிரியங்கா விழுந்து விழுந்து சிரித்தார். “இனிமே நாம் அஞ்சு பேர்தான் இந்த வீட்டில் இருக்கப் போகிறோம். ஒண்ணு மண்ணா இருப்போம்” என்று பிரியங்கா தலைமையில் அனைவரும் கூடி நின்று நடனமாடிய காட்சியோடு எபிசோட் நிறைந்தது.

இனிமேல் டாஸ்க் ஏதும் இருக்காது என்றுதான் தோன்றுகிறது. கடைசி வாரம் கொண்டாட்டமாகவே அமையும். பழைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே வருவார்கள். வீடு கலகலப்பாக மாறும். நாஸ்டால்ஜியாவில் மூழ்கும். இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் போது சில பெயர்கள் உதிர்ந்து கடைசியில் ஒன்று மட்டுமே மிஞ்சும். அது யார்? கடைசி வாரத்தில் கூட அதை சரியாக யூகிக்க முடியாததுதான் இந்த சீசனின் வெற்றி என்று தோன்றுகிறது.