Published:Updated:

பிக் பாஸ் 106 Grand Finale: சிவகார்த்திகேயன் என்ட்ரி; ஆரி மிஸ்ஸிங்; பைனலில் நடந்தவை ஒரு தொகுப்பு!

பிக் பாஸ்

பிக்பாஸ் போன்ற சிக்கலான விளையாட்டில் வெற்றி பெறுவதற்கான சூத்திரம் இதுதான் என்பதை சரியாக வரையறுக்கவே முடியாது.

பிக் பாஸ் 106 Grand Finale: சிவகார்த்திகேயன் என்ட்ரி; ஆரி மிஸ்ஸிங்; பைனலில் நடந்தவை ஒரு தொகுப்பு!

பிக்பாஸ் போன்ற சிக்கலான விளையாட்டில் வெற்றி பெறுவதற்கான சூத்திரம் இதுதான் என்பதை சரியாக வரையறுக்கவே முடியாது.

Published:Updated:
பிக் பாஸ்

பிக்பாஸ் சீசன் 5-ல் ராஜூ வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிய சமயத்தில் கூட ‘யார் வெற்றியாளர்’ என்பதை துல்லியமாக நாம் யூகிக்க முடியாத அளவிற்கு ஒரு நிச்சயமின்மை இருந்தது. ராஜூவின் பிம்பம் வெற்றிக்கு அருகில் இருப்பது போன்ற சித்திரம் தெரிந்தால் கூட அது மங்கலாக மட்டுமே இருந்தது. ஒவ்வொரு வாரமும் மற்ற போட்டியாளர்கள் காப்பாற்றப்படுவதற்கான வரிசை முன்பின் மாறினாலும் ராஜூவின் இடம் மட்டும் நிரந்தரமாக இருந்தது. மக்களின் செல்வாக்கில் அவர்தான் முதலிடம் என்பதை தெளிவாகவே உணர முடிந்தது. என்றாலும் அவர்தான் வெற்றி பெறுவாரா என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. கடுமையான போட்டியாக பிரியங்கா, நிரூப், தாமரை, சிபி போன்றோர்களின் பெயர்களும் கூடவே முட்டி மோதிக் கொண்டிருந்தன.

பிக்பாஸ் போன்ற சிக்கலான விளையாட்டில் வெற்றி பெறுவதற்கான சூத்திரம் இதுதான் என்பதை சரியாக வரையறுக்கவே முடியாது. எதுதான் அந்த அடிப்படை தகுதி?... டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடுவதா, பல்லைக் கடித்துக் கொண்டு முகமூடியுடன் சக போட்டியாளர்களுடன் இணக்கமாக செல்வதா, அனைத்துத் தருணங்களிலும் நேர்மையாக இருப்பதா, மக்களுக்கு பிடிக்கும் படியாக காமெடியாக பேசுவதா.. ம்ஹூம்.. சொல்லவே முடியாது. டாஸ்க்குதான் என்றால் நிரூப்போ, வருணோ, அமீரோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். நேர்மை என்றால் சிபிதான் கோப்பையை பிடித்திருக்க வேண்டும். காமெடியாக பேசுபவர் என்றால் அண்ணாச்சிக்குத்தான் ஐம்பது லட்சம் கிடைத்திருக்க வேண்டும். அனைவரிடமும் இணக்கம் என்றால் பாவனியால் டாப் 5-ல் வந்திருக்கவே முடியாது.

ராஜூ
ராஜூ

இவையெல்லாம் தாண்டி மக்களின் வாக்குகள்தான் இந்த வெற்றியைத் தீர்மானிப்பதாக சொல்கிறார்கள். (அப்படியே நம்புவோமாக!). ஒரு நபரை எப்படி மக்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது என்பது விளங்கிக் கொள்ளவே முடியாத சூத்திரம். இனிமை, நேர்மை, உண்மை, சகிப்புத்தன்மை, நுண்ணுணர்வு போன்ற குணாதிசயங்கள் இயல்பாகவே ஒருவரிடம் படிந்திருந்து, மக்களுக்கும் அவரைப் பிடித்திருந்தால் அவர் வெற்றிக் கோட்டை அடைவதற்கான சாத்தியம் அதிகம். இந்தச் சூத்திரத்தில் ராஜூவைப் பொருத்திப் பார்க்கும்போது, சில விமர்சனங்களைத் தாண்டி அவர் கச்சிதமாகப் பொருந்துகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டிற்குள் நுழைந்த சில மணி நேரங்களிலேயே தன்னுடைய நகைச்சுவையால் சக போட்டியாளர்களின் உள்ளங்களை மட்டுமல்லாமல் பார்வையாளர்களின் மனங்களையும் அவர் கொள்ளை கொண்டு விட்டார். மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில்கூட நிதானத்தை இழக்கவில்லை. பாவனி விவகாரத்தை நோண்டியது தவிர, அநாவசியமான பிரச்னைகளில் அவர் சென்றதில்லை. இதுவே அவரது ஒருபக்கம் அவரின் பலமாகவும் இன்னொரு புறம் அவரது பலவீனமாகவும் கூட சொல்லலாம். தான் செய்த சறுக்கல்களை இறுதிக்கட்டத்தில் சுயபரீசீலனையுடன் அவர் ஒப்புக் கொண்டது சிறப்பு. கூட்டிக் கழித்து பார்க்கும் போது ராஜூவின் இந்தக் குணாதிசயங்கள் மக்களைக் கவர்ந்திருக்க வேண்டும்.

இது ராஜூவின் கதை மட்டுமல்ல. நம்முடைய கதையும் கூட. ‘நம்மை மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும்’ என்று எண்ணாத நபர்களே இருக்க முடியாது. அவை நடைமுறையில் அதிகாரம், பாசாங்கு, நடிப்பு என்று பல்வேறு போலித்தனங்களால் நிகழக்கூடும். ஆனால் அவை உண்மையாக நிகழ வேண்டுமானால் அதற்கான தகுதிகளை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டியாளர்கள் சறுக்கிய இடங்கள் அனைத்திலும் அவர்களின் உருவங்களை அழித்து விட்டு நம்முடைய உருவத்தை அங்கு பொருத்திப் பார்த்தால் இதற்கான விடை கிடைக்கும். நாம் நமக்கே உண்மையாக இருந்தால், சுற்றி இருப்பவர்களின் அன்பும் ஆதரவும் தானாகவே வந்து சேரும். இது மிக எளிய சூத்திரம். இதற்காக பல உத்திகளை யோசித்து, தந்திரங்களைச் செய்து மண்டை குழம்ப வேண்டியதில்லை.

எபிசோட் 106-ல் என்ன நடந்தது?

லேசர் விளக்குகளின் நடனம், டெக்னோ இசையின் அதிரல் என்று அட்டகாசமான பின்னணியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. கமல் என்ட்ரி தந்தார். கமல் அணியும் சில விநோத உடைகளின் பெருமை, ஆடை வடிவமைப்பாளர்களுக்குத்தான் விளங்குமோ, என்னவோ. கமல்தான் எதிலும் முன்னோடியாயிற்றே?! கொரானோ டெஸ்ட் எடுக்க வருகிற மருத்துவ ஊழியரை உடை, 2025-ல் இப்படித்தான் நவீனமாக மாறி இருக்குமோ என்று எண்ண வைக்கும் வகையில் கமலின் ஆடை வடிவமைப்பு புதுமையாக இருந்தது.

“இந்த வீட்டைப் பொறுத்தவரை என்னுடைய வயது ஐந்து. இந்த சீசனில் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவெனில், பல்வேறு முரண்களைத் தாண்டி போட்டியாளர்களின் இடையில் நட்பு பிழைத்திருந்தது. இது பிக்பாஸ் வீடு மட்டுமல்ல, நாடும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். கற்றுக் கொண்டால் நன்று” என்கிற முன்னுரையுடன் வந்தார் கமல்.

பிக் பாஸ் போட்டியாளர்கள்
பிக் பாஸ் போட்டியாளர்கள்

காணாமல் போன சில போட்டியாளர்கள்

இந்த சீசனின் போட்டியாளர்கள் வண்ணமயமான உடைகளுடன் வந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களில் இமான் அண்ணாச்சி, மதுமிதா, அபிஷேக் போன்றவர்கள் ஏனோ வரவில்லை. இந்த சீசனின் புதுமையான போட்டியாளர் என்று கருதப்பட்ட நமீதா ஆரம்பத்திலேயே வெளியேறிய மர்மம் இன்னமும் விளங்கவில்லை. இந்தச் சமயத்தில் அவரையும் காணோம். போலவே கடந்த சீசனின் வெற்றியாளரான ஆரியையும் காணோம். அவர்தான் கோப்பையை கைமாற்றித் தர வேண்டும். “கோவிட் நடைமுறை காரணமாக அனைவரையும் அழைக்க முடியவில்லை" என்று பிறகு பொதுவான விளக்கத்தை அளித்தார் கமல். நாடியாவின் ஒப்பனை அடையாளமே தெரியாதபடி கவர்ச்சிகரமாக மாறியிருந்தது. இதற்கு மாறாக அக்ஷராவின் ஒப்பனை ஓவர்டோஸ் ஆகியிருந்தது. “பொதுவாக விசிறிகள் எங்களை தலையில் தூக்கி வெச்சிருக்கிறதா சொல்லுவாங்க.. ஆனா நீங்க விசிறியையே தலையில் வெச்சிருக்கீங்க” என்று ஐக்கியின் ஃபேஷன் உடையை ஜாலியாக கிண்டலடித்தார் கமல். மனிதர் இன்று உற்சாக மூடில் இருந்தார். வாயைத் திறந்தாலே கிரேசி மோகனின் வாசனை.

வெளியேறிய போட்டியாளர்களின் அனுபவங்களை விசாரித்தார் கமல். “ஆடி போயி ஆவணி வந்து ஓஹோன்னு வந்திருக்கோம்” என்பதையே வெவ்வேறு வார்த்தைகளில் அவர்கள் தெரிவித்தார்கள். பிக்பாஸ் மேடை வெளிச்சத்தை மட்டுமே ஈட்டித்தரும். அதை சரியாகவும் புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்திக் கொள்வது அவரவர்களின் சமர்த்து. “வெளியே போய் பல விஷயங்களை துணிச்சலாக எதிர்கொள்ள முடிகிறது. இந்த வயதில் எனக்கு இந்த அனுபவம் கிடைத்தது உதவியாக இருக்கிறது” என்றார் இசைவாணி. “வெளியே நிறைய லவ் கிடைச்சது” என்றார் அபிநய். (உள்ளே கிடைக்காத விஷயம் வெளியே கிடைத்திருக்கிறதோ?!).

“எவ்ள அடிச்சாலும் தாங்கறான். இவன் ரொம்ப நல்லவன்டா” என்கிற காமெடி மாதிரி “என்னை ரொம்ப நேர்மையானவன்னு சொல்லிட்டாங்க சார்” என்று குறை சொல்லும் தொனியில் சிபி சொல்ல “என்ன இதைப் போய் கம்ப்ளெயின்ட் மாதிரி சொல்றீங்க?” என்று கிண்டல் அடித்தார் கமல்.

அமீருக்காக உருவான புதிய குடும்பங்கள்

வீட்டின் உள்ளே இருந்த போட்டியாளர்கள் நம்மை உற்சாகமாக வரவேற்றார்கள். “யாருடா இதை உடைச்சது?” என்று பிள்ளைகளிடம் விசாரிக்கும்போது ஒருவரையொருவர் கைகாண்பிப்பது போல காமிரா ஒருவரை நோக்கி சென்றபோது அவர் மற்றவரை நோக்கி கைகாண்பித்தார். “வெளில எப்படி ரெஸ்பான்ஸ் இருக்கு. உங்களையெல்லாம் பாராட்டறாங்களா.. திட்டறாங்களா..?” என்று இறுதிப் போட்டியாளர்களின் குடும்பத்தினரிடம் அடுத்து விசாரித்தார் கமல். “நிறைய இளைஞர்களை அமீர் இன்ஸ்பையர் பண்ணியிருக்கான். ‘எனக்கு யாரும் இல்லை'ன்னு எங்க கிட்ட வரும் போது ஆரம்பத்துல சொன்னான். ஆனா இப்ப அவனுக்காக இத்தனை குடும்பங்கள் இருப்பதைக் காண மகிழ்ச்சி” என்று அமீரைப் போஷித்தவர் சொன்னது நெகிழ்ச்சி.

கமல் தந்த பரிசுகள்

அகம்டிவி வழியாக உள்ளே சென்ற கமல், “முடி சூடும் நேரத்தில் முடியை இழந்துட்டீங்களே?” என்று நிரூப்பை செல்லமாக கிண்டலடித்து விட்டு “உங்க குடும்பத்தினர் வந்திருக்காங்க. பேசுங்க” என்றார். வந்தவரிடம்கூட “வோட்டு போட்டீங்களா?” என்று கேட்டு இம்சையைக் கூட்டினார் நிரூப். “என்னையே பேச விடாம ஒரு ப்ளோல போறாளே?” என்பது மாதிரி மனைவியைப் பார்த்து திகைத்து நின்றார் ராஜூ. அஷ்ரப் வாழ்த்தியபோது அமீர் எழுந்துகொண்டது நல்ல பண்பு. “எல்லாமே உங்களுக்காகத்தான் சார்..” என்று அஷ்ரப்பைப் பார்த்து நெகிழ்ந்த அமீர், மேடம் தன்னிடம் பேச ஆரம்பித்த போது “சார்.. அவங்க உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்னு ரொம்ப நாளா ஆசைப்படறாங்க..” என்று கமலை நோக்கி ஒரு வேண்டுகோள் வைத்தார். “அய்யோ.. இப்ப சொல்ல வரமாட்டேங்குதே” என்று தவித்த அஷ்ரப்பின் மனைவி, “என்ற கமல்ஹாசனை பார்க்க வெச்சுட்டே” என்று வெட்கமும் தவிப்புமாக அமீரிடம் சொல்லி முடித்தது சுவாரசியமான காட்சி.

பிக் பாஸ்
பிக் பாஸ்

“இங்கிருக்கும் ஐந்து பேர்களில் ஒருவருக்குத்தான் கோப்பையும் பரிசும் கிடைக்கப் போகிறது. என்றாலும் என்னைப் பொறுத்தவரை ஐவருமே வெற்றியாளர்கள்தான். என்னுடைய சார்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு” என்று அறிவித்த கமல், அமீருக்கு ஷூ, பாவனிக்கு ரிஸ்ட் வாட்ச் (டைம் சரியா வெச்சுக்கங்க!), ராஜூவிற்கு பேனா, நிரூப்பிற்கு குல்லா, பிரியங்காவிற்கு கோல்டன் மைக் ஆகியவற்றை பரிசாகத் தந்தார். கிஃப்ட் பார்சலில் என்ன இருக்கிறது என்பதை அறிய அதை ஆட்டிக் கொண்டே வந்த பிரியங்காவின் செய்கையைப் பார்த்து கமல் மட்டுமல்லாமல் கூட்டமும் புன்னகைத்தது. “நாங்க இதை யூஸ் பண்ண மாட்டோம். பொக்கிஷமா வெச்சுப்போம்” என்று பரிசளிக்கப்பட்டவர்கள் பரவசத்தோடு சொன்னார்கள்.

‘ஒருத்தருக்குத்தான் கிடைக்கும். இருந்தாலும் மத்தவங்களும் தொட்டுப் பார்த்துக்கங்க’ என்று வெற்றிக் கோப்பையை உள்ளே அனுப்பி கமல் அறிமுகப்படுத்த ஆவலாக சென்று முதலில் அதை தொட்டு எடுத்தவர் நிரூப்தான். (எமோஷனைக் குறைங்க பாஸ்!). “சார். இதுக்கு முத்தம் கொடுக்கலாமா?” என்று அமீர் கேட்க “ஆமாம்.. இதே வேலையா இரு.. இந்த விஷயத்துல என்னை மிஞ்சிடுவான் போலயே” என்பது கமலின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கலாம்.

பிரியங்கா
பிரியங்கா

நிரூப்பின் எலிமினேஷன்

“ஓகே.. ஒருத்தரை வெளியே அழைச்சிட்டு வர்ற நேரம்” என்று எவிக்ஷனை வித்தியாசமாக அறிமுகப்படுத்தினார் கமல். ஐந்து துள்ளலான நடனக்கலைஞர்கள் உள்ளே சென்று போட்டியாளர்களை வலுக்கட்டாயமாக மூலைக்கு மூலை நடனமாட வைத்து பின்பு அவர்களின் கண்களைக் கட்டி, நிரூப்பை மட்டும் வெளியே அழைத்துச் செல்ல, வாசல்படியைத் தொட்டவுடனேயே தான் எவிக்ட் ஆனோம் என்பதை உணர்ந்த நிரூப், “ஆல் தி பெஸ்ட் கைய்ஸ்” என்று கத்தி விடைபெற்றார். நிரூப் அகன்றதை பிறகு உணர்ந்த அனைவரும் விக்கித்துப் போய் அமர்ந்திருந்தனர். பிரியங்கா வாயடைத்துப் போய் நின்றிருந்தார். தான்தான் வெளியேறுவோம் என்று பாவனி நினைத்திருந்தாரோ, என்னமோ, அவரும் அதிர்ச்சியில் உறைந்தார். பாவம் நிரூப், டாப் மூன்றிலாவது வந்திருக்கலாம்.

பார்வையாளர்களின் அதிர்ச்சியைப் புரிந்து கொண்ட கமல் “இது நிகழ்ந்தே ஆக வேண்டும். தள்ளிப் போட முடியாது; தவிர்க்க முடியாது” என்று ரைமிங்கில் சொன்னார். மேடையில் வந்து கமலைச் சந்தித்த நிரூப் “வெற்றி, தோல்வியைத் தாண்டி, ‘விளையாட்டை முடித்து விட்டேன்’ என்பது நிம்மதியாக இருக்கிறது’ என்று சொன்னது சிறப்பு “உயரமான நடிகர்களில் ஒருவராக உங்களைக் காண விரும்புகிறேன்” என்று கமல் வாழ்த்தினார். இதற்குப் பிறகு வருண் – அக்ஷரா நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

அட்டகாசமான Spoof Show

பிக்பாஸ் Grand Finale எபிசோடில், நான் எப்போதுமே மிகவும் ஆவலாக எதிர்பார்க்கும் நிகழ்ச்சி அடுத்ததாக வந்தது. கடந்த சீசனிலேயே இதை நான் மிகவும் எதிர்பார்த்து ஏமாந்தேன். அதை ஈடுகட்டும் வகையில் இந்த முறை பட்டையைக் கிளப்பி விட்டார்கள். பிக்பாஸ் போட்டியாளர்களைப் போலவே நடித்து கிண்டலடிக்கும் Spoof Showதான் அது. விஜய்டிவியின் காமெடி நடிகர்கள் சிறப்பாகச் செய்து அசத்தி விட்டார்கள். குறிப்பாக தாமரை, பிரியங்கா, அபிஷேக் போன்றவர்களின் உடல்மொழியை ரணகளமாக கிண்டலடித்தார்கள். ஆட்டோ சத்தத்தை இந்த ஷோவின் ஹைலைட் எனலாம். சம்பந்தப்பட்டவர்களே இந்த நகைச்சுவையை ரசித்து சிரித்துப் பார்த்தது நன்று.

பிக்பாஸ் வீடு தந்த சீரியஸான பாடத்தைத் தாண்டி “ஓ.. நாம் இப்படியெல்லாம் செய்தோமா” என்று அவர்களுக்கு கிடைத்த கூடுதல் போனஸ் பாடம் இது. ஆனால் நகைச்சுவை வழியில் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. சீரியஸான விஷயத்தை உறுத்தாமல் உணர்த்தக்கூடிய வல்லமை நகைச்சுவைக்கு மட்டுமே இருக்கிறது. (நீங்கள் இந்த சீசனை அவ்வப்போது பார்த்திருந்தீர்கள் என்றாலும் கூட இந்தக் குறிப்பிட்ட காமெடி ஷோவை தவற விடாதீர்கள். அப்படியொரு அட்டகாசமான எண்டர்டெயின்மென்ட்).

“மறுபடியும் ஒருவரை எலிமினேட் செய்ய வேண்டிய தருணம்” என்று அகம் டிவி வழியாக உள்ளே சென்ற கமல், பிரியங்காவை மட்டும் சோபாவில் அமரச் செய்து விட்டு மற்றவர்களை வீட்டின் ஒவ்வொரு மூலைக்கும் போகச் சொன்னார். பிரியங்கா இதற்கு மிகையாக பதட்டமாக “ஏன்.. ஏன். ஷாக்கை குறைங்க.” என்கிற மாதிரியே பார்த்தார்.

அமீர்
அமீர்

அமீரின் எலிமினேஷன்

இந்த ஷோவின் ஃபார்மட்டும் முடிவும் போட்டியாளர்களுக்கு நன்கு தெரியும். அவர்களே சம்பந்தப்பட்ட ஊடக துறையில் உள்ளவர்கள்தான். எனில் ஏன் இத்தனை பதட்டப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. அடிப்படையான பதட்டத்தைத் தாண்டி, சற்று இயல்பாகவே எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை அந்தச் சூழலில் நாம் உள்ளே இருந்தால்தான் புரியுமோ என்னமோ?. ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் பதட்டத்துடன் உலவிக் கொண்டிருந்த அமீரை “வாங்க.. சார்.. கோவிட் டெஸ்ட் எடுத்துட்டு வந்துடலாம்” என்பது மாதிரியே வந்து அழைத்துச் சென்றார் ஒருவர். ஆக அடுத்த எலிமிஷேன் அமீர் என்பது தெளிவாகி விட்டது.

மேடைக்கு வந்த அமீர் “ஏமாற்றமா இருக்கு சார்..” என்று கமலிடம் வெளிப்படையாக சொன்னது நல்ல விஷயம்தான். ஆனால் வைல்ட் கார்டில் நுழைந்த ஒருவர் டாப் 4 போட்டியாளராக வந்திருப்பது பெரிய விஷயம். சிறிய வெற்றிகளிலேயே திருப்தியடைந்து விட்டால் அங்கேயே தங்கி விட வேண்டியதுதான். இந்த நோக்கில் அமீரின் கனவும் விருப்பமும் நன்றுதான். ஆனால் அதே சமயத்தில் நாம் அடைந்த சிறு சிறு வெற்றிகளையும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு கொண்டாடக் கற்றுக் கொள்ள வேண்டும். பிக்பாஸ் முன்னர் அமீருக்குச் சொன்ன அதே அட்வைஸ்தான். உச்சியை நோக்கி ஏணியில் ஏற ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு படியாகத்தான் செல்ல முடியும். ஒரே தவ்வலில் உச்சியை அடைய முடியாது. அமீர் உணர வேண்டிய பாடம் இது. அமீரை ஆதரித்து போஷித்து வளர்த்த குடும்பத்தினரின் நற்பண்பை கமல் இந்தச் சமயத்தில் ஆத்மார்த்தமாக பாராட்டியது நெகிழ்ச்சி.

நடனக்கலைஞர்களாக தங்களின் வாழ்க்கையை ஆரம்பித்து பிறகு உச்சத்திற்குச் சென்றவர்களின் வரிசையில் சார்லி சாப்ளினில் ஆரம்பித்து குருதத் வரை உதாரணம் சொன்ன கமல், தன்னையும் பிரபுதேவாவையும் அதில் இணைத்துக் கொண்டது சிறப்பு. “எந்த ஷூ கிடைச்சாலும் அதைப் போட்டுக்கிட்டு டான்ஸ் ஆடிடணும்” என்று அமீருக்கு அறிவுறுத்தியது நன்று. குரூப் டான்சர்களில் ஒருவராக ஆரம்பித்த பிரபுதேவா, பிறகு இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் நடனக்கலைஞராக ஆனதோடு நிறுத்திக் கொள்ளாமல் சிறந்த கமர்சியல் இயக்குநராகவும் ஆகி விட்டார் என்பதில் அமீருக்கான பாடம் உள்ளது.

அமீர்
அமீர்

அமீருக்கு கமல் தந்த அறிவுரை

“என்னுடைய சில படங்களைக் கூட மக்கள் காலதாமதாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் லேட் ஆனாலும் நல்ல விஷயங்களை அவங்க நிச்சயம் ஏத்துப்பாங்க” என்று கமல் சொன்னது அமீருக்கு நல்ல அறிவுரை. “லேட்டா பார்க்கறது சரி.. இதனால உங்களுக்கு கலெக்ஷன் வராதே’ன்னு சொல்லுவாங்க. இனிமே சினிமா ஒவ்வொரு மொபைலுக்கும் போய் சேரும். பைசா. பைசாவா சேர்ந்தாலும் தயாரிப்பாளருக்கு ஒரு நல்ல தொகை வரும். இனிமே அதுவும் நடக்கும்” என்று தொலைநோக்குப் பார்வையோடு ஒரு விஷயத்தை கமல் சொன்னது சிறப்பு. மிகவும் சல்லிசான கட்டணத்தில் ஒரு நல்ல திரைப்படத்தை, தரமான வடிவில் பார்க்க முடியும் என்றால் அதற்கு செலவு செய்ய மக்கள் தயங்க மாட்டார்கள் என்பதை நாமும் யூகிக்க முடிகிறது.

வீட்டினுள் சமயோசிதமாக நடந்து கொண்ட அமீர், மேடையில் ஏனோ சற்று சொதப்பினார். “ஒண்ணு கேட்கட்டுமா.. சார்” என்று பீடிகையுடன் அவர் ஆரம்பிக்க என்னமோ.. ஏதோவென்று ஆவலுடன் பார்த்தால் ‘மைக்கேல் மதன காமராஜன்ல ஒரே பிரேம்ல நாலு கமலை எப்படி வரவழைச்சீங்க?” என்று சராசரி ரசிகனைப் போல் கேட்க ஆரம்பித்து விட்டார். சினிமாத்துறையிலேயே இருக்கிற அமீர், ஒரு சிறந்த ஒளிப்பதிவாளரிடம் இதைப் பற்றி விசாரித்தால் பதில் கிடைத்து விடப் போகிறது. “மேஜிக்மேன் கிட்ட அவனோட தொழில் ரகசியம் கேட்கற மாதிரியான விஷயம் இது… நீங்களே ஒரு டெக்சினியன்தானே?!” என்று அமீரின் முந்திரிக்கொட்டைத்தனத்தை சரியாகச் சுட்டிக் காட்டிய கமல் பிறகு அதை சூசகமாக விளக்கியது சிறப்பு. முதல் வரிசை மாணவன் மாதிரி கமலின் பார்வையில் படுவதற்காக இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கப்படுவதும், “சரி. கேட்டுட்டியா..?” என்று அலுத்துக் கொள்வது போல் முதலில் கமல் பாவனை செய்தாலும் அதை தற்பெருமித்துடன் நீளமாக பதில் சொல்வதும்… தோல்வியின் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு அகம்டிவி வழியாக சக போட்டியாளர்களைப் பார்த்த அமீர் “எனக்கு ராஜூன்ற அண்ணன் கிடைச்சுட்டான்… பிரியங்கா அக்கா என் வளர்ச்சியில் எப்போதுமே உறுதுணையா இருந்திருக்காங்க. பாவனி.. என்ன சொல்றது.. ஜெயிச்சிட்டு வா” என்று வாழ்த்தினார்.

சோனி + ராஜ்கமல் + சிவகார்த்திகேயன்

‘மாடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு.. அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு’ என்றொரு சொலவடை இருக்கிறது. அதைப் போல பிக்பாஸ் மேடையை தன்னுடைய சில சொந்த விஷயங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்வது கமலின் நிரந்தர சாமர்த்தியம். அந்த வகையில் சோனி நிறுவனமும் ராஜ்கமல் நிறுவனமும் இணைந்து தயாரித்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பை கமல் இங்கு வெளியிட்டார்.

கமலுடன் இணைந்து பணிபுரிய முடியுமா என்பது சினிமாத்துறையில் உள்ள பலரின் கனவாக இருக்கும். கமலுக்கே டைரக்ஷன் தெரிந்தும் ஏன் கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குநர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்கிற கேள்வியும் பார்வையாளர்களுக்கு இருக்கும். இவற்றிற்கான மறைமுகமான பதில் இந்தச் சமயத்தில் கிடைத்தது. ஒரு சிறந்த இயக்குநருக்கான தகுதிகளை நடைமுறைக் காரணங்களோடு இணைத்து கமல் விவரித்தார். இந்தப் புதிய படத்தின் இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமியை அவர் பாராட்டிய விதத்தை கவனித்தால் இளம் இயக்குநர்களுக்கான செய்தி அதில் தெளிவாகவே உள்ளது.

“இந்தப் படம் இந்திய அளவில் பேசப்படும் படமாக இருக்கும்” என்கிற உறுதிமொழியை அளித்திருக்கிறார் கமல். எனவே நமக்கு ஆர்வம் கூடுகிறது. ‘இது என் பிரார்த்தனை அல்ல. கணிப்பு” என்று கமல் சொல்லியிருப்பதில் இருந்து கதையும் களமும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. (இதே சமயத்தில் மூன்றாம் சீசனின் போட்டியாளரான தர்ஷனுக்கு தரப்பட்ட டோக்கன் எல்லாம் என்னவாயிற்று என்கிற கேள்வியும் எழாமல் இல்லை).

பிக் பாஸ் 106 Grand Finale: சிவகார்த்திகேயன் என்ட்ரி; ஆரி மிஸ்ஸிங்; பைனலில் நடந்தவை ஒரு தொகுப்பு!

‘ஒருவரை மானசீகமாக பின்பற்றினால் அது பல அதிசயங்களை நிகழ்த்தும். நான் PG சேர்ந்து படிக்கணும்னு நெனச்சேன். ஆனால் கமல் என்னும் பல்கலைக்கழத்தில் அதை விடவும் அதிகமாக கற்றுக் கொண்டேன்..” என்று கமலை முன்னிட்டு பரவசமாக பேசினார் இயக்குநர். “ஒரு காலத்தில் கமல் நடிச்ச படங்களைப் பார்த்து கைதட்டிய ஒருவனுக்கு, அவரின் நிறுவனத்தில் ஹீரோவாக நடிப்பது நம்ப முடியாத கனவாக இருக்கிறது” என்று நெகிழ்ந்தார் சிவகார்த்திகேயன். ஒரு நகைச்சுவை ஷோவின் மூலம் மக்களின் கவனத்தில் விழுந்த எஸ்.கே,, இன்று ஒரு முன்னணி நடிகராக வளர்ந்திருப்பது மகிழ்ச்சி. ஒரு சாதாரண நபரும் ஒரு துறையின் உயரத்திற்கு செல்ல முடியும் என்பதற்கான உதாரணம் இது. இந்த அறிவிப்பின் கடைசியாக கமல் சொன்னது முக்கியமானது. “நல்ல சினிமாவைக் கொண்டு வருவதற்காக நாங்கள் மட்டும் கஷ்டப்பட்டால் போதாது. மக்களும் அதை ஆதரிப்பதற்கான ரசனை மாற்றம் நிகழ வேண்டும்” என்று சொன்னது திருவாசகம்.

‘எல்லோரும் ஓடுங்க. அது நம்மளை நோக்கித்தான் வருது..’

புதிய சினிமா பற்றிய அறிவிப்பு ஒகே. ஆனால் கமல் அடுத்து சொன்னதுதான் ‘குபீர்’ எபெக்ட்டை தந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னொரு புதிய பரிமாணத்தை அடைகிறது. ஆம், “Bigg Boss Ultimate’ என்கிற தலைப்பில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் புதிய வடிவமாக ஹாட்ஸ்டார் இணையத்தளத்தில் வரவிருக்கிறதாம். (மறுபடியும் மொதல்ல இருந்தா?!). கடந்த நான்கு சீசனில் இருந்தும் சில போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்வார்களாம். இதையும் கமல்தான் தொகுத்து வழங்கவிருக்கிறாராம். “உங்களின் அபிமான போட்டியாளர்கள் வருகிறார்கள்” என்று அதற்கான லோகோவை சிவகார்த்திகேயன் வழியாக அறிமுகப்படுத்தினார் கமல்.

“ஓகே. உள்ளே இருக்கும் மூவரில் ஒருவரை வெளியே கொண்டு வர வேண்டிய நேரம்” என்று கமல் அறிவித்தவுடன், கொள்ளைக்காரர்கள் போல் முகத்தை மறைத்துக் கொண்ட மூன்று பைக்காரர்கள் ‘டுர்.. டுர்….’ என்று பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே பைக்கை விட்டு சர்க்கஸ்காரர்கள் போல் அங்கேயே ரவுண்டு அடித்தார்கள். ‘என்ன செய்யணும்” என்று தெரியாமல் போட்டியாளர்கள் விழித்துக் கொண்டிருக்க “ஏன் முழிக்கறீங்க. பைக்ல ஏறுங்க. வீட்டுல டிராப் பண்ணிடுவாங்க” என்று பிக்பாஸ் அறிவித்தவுடன் மூவரும் உற்சாகமாக ஏறிக் கொண்டார்கள். “நான் உக்கார இடம் இருக்குமா?.. பார்த்து ஓட்டுடா தம்பி..” என்று பைக் இளைஞனிடமும் லொள்ளு செய்தார் பிரியங்கா. மீண்டும் அவர்கள் ரவுண்டு அடிக்க (நல்லா சர்க்கஸ் பண்றே மேன்..நீ!) பாவனி அமர்ந்திருந்த வண்டி மட்டும் விருட்டென்று வெளியே சென்றது. (அடப்பாவி!). நிரூப்பின் பாணியில் பாவனியும் “ஆல் தி பெஸ்டை" அவசரமாக சொல்லி விட்டுச் சென்றார். (டிவிஸ்ட் தர்றாங்களாமாம்..).

புத்தகப் பரிந்துரை

மேடைக்கு வந்த பாவனி “நான் இந்த பொஷிஷனுக்கு வந்ததே பெரிய விஷயம். இதை நான் எதிர்பார்க்கலை. பெருமையா இருக்கு. முன்பை விடவும் நான் இப்ப ஸ்ட்ராங்கா உணர்றேன். அதுக்கு பிக்பாஸ் அனுபவம்தான் காரணம்” என்று தோல்வி பற்றிய கவலை ஏதும் இல்லாமல் இயல்பாகச் சொல்ல “இனிமேல் உங்களுக்கு வெற்றிகள் சாத்தியம். மக்களால் நீங்கள் கவனிக்கப்பட்டு விட்டீர்கள். ஆனால் அந்த வெளிச்சத்தை எப்படி நீங்கள் கையாளப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம்” என்று வழக்கமான பாணியில் அறிவுறுத்தி பாவனியை வாழ்த்தி அனுப்பினார் கமல்.

Jeyamohan
Jeyamohan

இந்த சீசனின் கடைசி புத்தகப் புரிந்துரை. “கொரானோ காலக்கட்டம் பலரின் மனநிலையை மாற்றி அமைத்திருக்கும். ஆனால் கலைஞர்கள் விதிவிலக்கானவர்கள். என் நண்பரும் எழுத்தாளருமான ஜெயமோகன், இந்தச் சமயத்தில்தான் வழக்கத்தை விடவும் அதிகப் படைப்பூக்கத்துடன் இயங்கினார். முதல் லாக்டவுனில் மளமளவென்று நூறு சிறுகதைகளை வரிசையாக எழுதிக் குவித்தார். அடுத்த சீசனிலும் ஆள் அசரவில்லை. இன்னமும் நிறைய படைப்புகளை எழுதினார். அவையெல்லாம் ஐந்து தொகுதிகளாக வந்திருக்கின்றன. நிச்சயம் வாங்கிப் படியுங்கள். நீங்களும் ஜெயமோகனின் வாசகராக ஆகக்கடவது. இது வரமா, சாபமா என்பது புத்தக வாசிப்பாளர்களுக்கு மட்டுமே தெரிந்த சங்கேத பாஷை” என்று புத்தகப் பரிந்துரையை முடித்தார் கமல். (ஜெயமோகனின் படைப்புகள் சிறப்பானவை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவற்றின் தலைப்புகளே அத்தனை தனித்துவமாக இருக்கும். ஒரு தொகுப்பின் தலைப்பைக் கவனியுங்கள் - ‘தனிமையின் புனைவுக் களியாட்டம்).

பாவனியும் சென்ற பிறகு பிரியங்காவும் ராஜூவும் மட்டும் வீட்டினுள் பரிதாபமாக அமர்ந்திருந்தார்கள். “இதுதான் நான் உங்களிடம் பேசப் போகும் கடைசி தருணம்” என்று பிக்பாஸ் அவர்களிடம் பேச ஆரம்பித்ததும் நமக்கே அத்தனை உருக்கமாக இருந்தது. எந்திரன் திரைப்படத்தில் வசீகரன் ரோபோவை தனித்தனியாக கழட்டி வைக்கும் காட்சியெல்லாம் நினைவிற்கு வந்தது. பிரியங்காவையும் ராஜூவையும் இரு வெவ்வேறு துருவங்களாக வர்ணித்த பிக்பாஸ், அவர்களின் தனித்தன்மைகளைக் குறிப்பிட்டு வாழ்த்திய பேசிய பாணியும் அதிலிருந்த செய்தியும் ஆத்மார்த்தமாக இருந்தது. கடைசியில், “இந்தப் பக்கம் வந்தீங்கன்னா வீட்டுக்கு வாங்க” என்று பிக்பாஸ் சம்பிரதாயமாக அழைத்தது சுவாரசியம். (அதுவரைக்கும் செட்டு இருக்குமா பாஸ்?!).

பாவனி
பாவனி

பிக்பாஸ் வீட்டிற்குள் கமல்

கொரானோ காரணமாக வீட்டுக்குள் கமல் வருவாரா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் சந்தடியில்லாமல் வீட்டுக்குள் நுழைந்தார் கமல். காமிராவைப் பார்த்து அநாவசியமாக ‘உஷ்’ என்று சைகை காண்பித்து விட்டு அதிரடி என்ட்ரி தந்தார். அந்த நேரம் பார்த்துதானா பிரியங்கா ஆப்பிளை மொக்கிக் கொண்டிருக்க வேண்டும்? வாத்தியாரைப் பார்த்த மாணவன் மாதிரி “சார் வந்துட்டாரு” என்று ராஜூ பதறியவுடன் பிரியங்காவும் அலறியடித்துக் கொண்டு எழுந்து வாயை மூடிக் கொண்டே வரவேற்றார். “வாய் நிறைய சிரிப்புன்னு கேள்விப்பட்டிருக்கேன்” என்று டைமிங்கில் கலாய்த்தார் கமல்.

"போட்டோ எடுக்கத் தெரியுமா?” என்று கேட்டு இருவரையும் அருகில் அமர வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட கமல், “அது துணி மாதிரி உலர்த்தணும்” என்று பொலராய்ட் காமிரா பிலிமை சிரித்துக் கொண்டே ஆட்ட படம் துலக்கமாகத் துவங்கியது. "ஸ்டோர் ரூம்ல ஒரு பொருள் இருக்கும். எடுத்துட்டு வாங்க” என்று பிரியங்காவை கமல் அனுப்பினார். வீட்டுக்கு விருந்தினராக வந்திருக்கும் மாமாவின் முன்னால் தனியாக அமர கூச்சப்பட்டு, அண்ணனின் பின்னாலேயே ஓடும் தம்பி மாதிரி, ராஜூவும் பிரியங்காவின் பின்னாலேயே ஒவ்வொரு முறையும் ஓடி மறைந்தார். தனது நிறுவன தயாரிப்புகளின் வெளியீடுகளான நறுமணத் திரவியம், கதர் ஆடை போன்றவற்றை இருவருக்கும் பரிசாக வழங்கி மகிழ்ந்தார் கமல். (சாருக்கு.. சினிமா தவிர நெறைய கம்பெனி இருக்கு போல!).

“பரவாயில்ல. கொஞ்சம் ஆளுங்க இருந்தாலும் வீட்டை சுத்தமா வெச்சிருக்கீங்க…” என்று பாராட்டிய கமல் அடுத்த கணமே “என்னதிது.. குழந்தைங்க இருக்க வீடு மாதிரி எல்லா இடத்திலும் கிறுக்கி வெச்சிருக்கீங்க?” என்று கிண்டலடிக்கவும் செய்தார். ஸ்டோர் ரூமில் பிரியங்காவும் ராஜூவும் ரகசிய சந்தோஷத்துடன் ஒருவரையொருவர் ஜாலியாக அடித்துக் கொண்ட காட்சி சுவாரசியம். கமலின் திடீர் வருகை இருவரையும் ஆச்சரியப் பரவசத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். “ஓகே. கிளம்பலாமா.. நமக்கு வெளில வேலை இருக்கு” என்று கமல் கிளம்ப “அய்யோ.. கடவுளே..” என்பது மாதிரி பிரியங்கா பின்னால் சைகை காட்டியது நல்ல காமெடி. காமிராக்கள் இருப்பதையே அவர் மறந்து விட்டார் போல. யார் வெற்றி பெறுவார் என்கிற டென்ஷன் இருவரின் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது. “பொதுவா வீட்டை விட்டு வெளியே போகும் போது என்ன செய்வோம்?” என்று குழந்தைகளிடம் கேட்பது மாதிரியே கமல் இருவரிடமும் கேட்க “லைட்டெல்லாம் ஆஃப் பண்ணிடுவோம் சார்’ என்று சமர்த்தாக பதிலளித்தார் பிரியங்கா. “ஆமாம். மின்சாரம்.. வீணாக்கக்கூடாது’ என்று பொறுப்புடன் கமல் சொன்ன அடுத்த கணம், வீட்டின் விளக்குகளை அணைந்தாலும் எலெக்ட்ரிக் புஸ்வாணத்தை தாராளமாக கொளுத்தி மின்சார சேமிப்பின் அவசியத்தை நமக்கு நன்றாகவே உணர்த்தினார் பிக்பாஸ்.

ஐந்தாவது சீசனின் வெற்றியாளர்

இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு மேடைக்கு கமல் அழைத்து வர, சம்பந்தப்பட்ட சானலின் உயர் அதிகாரியும் மேடைக்கு வந்தார். “இப்படியொரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது இதை தொகுத்துத் தருவதற்கு கமல் ஒப்புக் கொள்வாரா என்கிற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. ஆனால் அவர் ‘சரி’ என்று சொன்னவுடன் எங்கள் சானலின் வளர்ச்சிப் பாதையே மாறி விட்டது” என்று பெருமிதப்பட்டார் அந்த அதிகாரி. இதை பின்பு குறிப்பிட்ட கமல் “என் கூட இருந்தவங்களே “வேணாம். சார்.. எதுக்கு இதெல்லாம்ன்னு சொன்னாங்க. அவங்க நல்ல நோக்கத்துலதான் சொல்லியிருப்பாங்க.. ஆனா இதன் பிரபலத்தைப் பார்த்ததும் என்னோட முடிவு சரின்னு அப்புறம் ஒத்துக்கிட்டாங்க” என்று பிக்பாஸ் தொகுப்பு தொடர்பாக தான் எடுத்த முடிவின் முக்கியத்துவத்தை பதிவு செய்தார்.

“ஏதாவது பேசுங்க” என்று இருவரையும் கமல் கேட்டுக் கொள்ள “கனவு மாதிரி இருக்கு சார்.. நம்பவே முடியல. உங்க பக்கத்துல நிக்கறதே எனக்கு வெற்றிதான் சார்” என்று பரவசப்பெருக்கில் பேசினார் ராஜூ. (அப்ப டிராஃபியும் காசும் வேணாமா கோப்பால்?!) “நான் இதுவரைக்கும் மற்றவங்க வெற்றிகளின் பக்கத்துல ஒரு ஆங்கராத்தான் நின்னிருக்கேன். இப்ப நானும் வெற்றியின் அருகில் நின்றிருப்பது மகிழ்ச்சியா இருக்கு” என்றார் பிரியங்கா.

இப்போதே ராஜூவின் குடும்பத்தினர் கலங்குவதற்கு தயாராக இருக்க, பிரியங்காவின் குடும்பத்தைக் காணோம். அவர் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார் என்பதால் வருவதை தவிர்த்து விட்டார்களோ, என்னமோ. “பொதுவாக கவுன்ட்டவுன் பத்து வரைக்கும் எண்ணுவாங்க. இது அஞ்சாவது சீசன்-ன்றதால அஞ்சு வரைக்கும் எண்ணலாம். வெற்றியின் முடிவு சீக்கிரமா தெரியும்” என்று விதியை மாற்றியமைத்த கமல் “என்ன.. சார். பேமெண்ட்லாம் ரெடியா?” என்று சானல் அதிகாரியை கேட்டு விட்டு "என்னோட பழக்க தோஷத்துல கேட்டுட்டேன்” என்று சட்டென்று சொன்னது நல்ல காமெடி.

பிக் பாஸ்
பிக் பாஸ்

“ஓகே.. ரெண்டு பேர் கையையும் தூக்கி பிராக்டிஸ் பண்ணிக்கறேன். டச் விட்டுப் போச்சு... ஒரு வருஷம் ஆச்சுல்ல…” என்ற கமல், இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு சற்று நேரம் விளையாட்டு காட்டினார். பிறகு கவுன்ட்டவுன் முடியும் சமயத்தில் சட்டென்று ராஜூவின் கையை மட்டும் உயர்த்த, பலரும் எதிர்பார்த்தபடியே ராஜூவே இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்பது அதிகாரபூர்வமாக உறுதியானது. டிராஃபியும் பரிசுத் தொகையான ரூ.50 லட்சத்திற்கான மெகாசைஸ் காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது.

“ஓகே. வெற்றியாளர் நீங்க.. பேசுங்க. ரெடியா இருக்கீங்களா..” என்று ராஜூவை கேட்ட கமல் “நீங்க ரெடியோ.. இல்லையோ. உங்க அம்மா கைக்குட்டையோட தயாரா வந்திருக்காங்க” என்றது சிறப்பான டைமிங் காமெடி. "ஈன்றபொழுதின் பெரிதுவக்கும்” என்கிற குறள் மாதிரி, தன் மகனைப் பார்த்து பெருமிதப் பூரிப்புடன் கலங்கி நின்றார் ராஜூவின் தாய். “நீ ஜெயிச்சுட்டு வரணும்டா” என்று அவர் முன்னர் சொன்னது உண்மையாயிற்று. ராஜூவின் மனைவியும் மகிழ்ச்சியுடன் சில வாக்கியங்களைப் பகிர்ந்தார். “அவர் முகத்தில் தெரியும் சந்தோஷத்தைப் பார்க்க எனக்கும் மகிழ்ச்சி” என்று ராஜூவின் வீட்டம்மணி சொல்ல “அப்படியா..அந்த முகத்துல ஒண்ணும் காணோமே” என்பது போல் கமல் ராஜூவின் முகத்தை உற்றுப் பார்த்தது நல்ல நகைச்சுவை.

ராஜூ குடும்பம்
ராஜூ குடும்பம்

“இந்த வெற்றியில் மற்ற போட்டியாளர்களுக்கும் பங்கு இருக்கு. முதலில் இருந்தே மக்கள் என்னை ஆதரிச்சு வந்திருக்காங்க.. அப்பல்லாம் நான் பெரிசா நன்றில்லாம் சொன்னதில்லை. இப்பவும் சொல்லப் போறதில்லை. அப்படி சொல்லி அவங்களை தூரமா வெக்க விரும்பலை” என்று சென்ட்டியாக பேசிய ராஜூ “கொஞ்சம் ஒவராத்தான் போகுதோ’ என்று உள்ளுற நினைத்தாரோ.. என்னவோ.. “அவர்களுக்கு நன்றி” என்று புன்னகையுடன் முடித்தார்.

‘கோப்பால்’ அடைந்த வெற்றியை மிக சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டார் பிரியங்கா. “ராஜூ இதற்கு முற்றிலும் தகுதியானவர். அவர் கிட்ட இருக்கற பொறுமையைத்தான் இங்க இருந்து எடுத்துப் போக வேண்டும் என்பது என் விருப்பம்” என்று பிரியங்கா சொன்னது சிறப்பானது. “இன்னொரு விஷயம் சொல்லணும் சார்.” என்று மறுபடியும் மைக்கைப் பிடித்த ராஜூ “இதே சானல்ல ஷோ தயாரிப்பாளரா உங்களுக்காக கூட நான் AV கட் பண்ணியிருக்கேன். ஆனா எனக்காக ஒரு டீம் கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்க. அவங்களுக்கு நன்றி. இருட்டில நின்று வேலை செய்யறவங்க” என்று ராஜூ நெகிழ “இந்த டிவி அவங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துடும். அதுக்கு நீங்கதான் முன்உதாரணம்” என்று கமலும் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

“ஓகே. அடுத்து விரைவில் சந்திப்போம். தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். முகக்கவசம் அணியுங்கள். கவசத்தை எடுக்காம பேசறதுதான் இனி மரியாதை. பாதுகாப்பாக இருங்கள்” என்கிற கோவிட் ஆராதனையுடன் விடைபெற்றார் கமல்

ரைட்டர்ஸ் நோட்

இந்த 106 நாட்களும் என்னுடன் பயணித்த உங்களுக்கு மிக்க நன்றி. இந்தத் தொடரில் வெளிப்பட்ட கருத்துக்களுடன் உங்களுக்கு மாற்று அபிப்ராயங்கள் இருந்திருக்கும். ஆனால் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுவதுதான் ஜனநாயகத்தின் அடையாளம். அந்த வகையில் உங்களின் எண்ணவோட்டங்களையும் நான் மனப்பூர்வமாக மதிக்கிறேன்; ஏற்றுக் கொள்கிறேன்.

மீண்டும் மீண்டும் நான் அடிக்கோடிட்டு சொல்ல விரும்புவது இதுதான். பிக்பாஸ் நிகழ்ச்சியை பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, நம்முடைய சுயபரிசீலனைக்கான வாய்ப்பாகவும் எடுத்துக் கொள்வதுதான் இதன் மீதான நேர முதலீட்டின் நிகர லாபமாக அமையும். இந்தக் கட்டுரைத் தொடரை தினமும் வாசித்து ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும், என் கால தாமதத்தை தினமும் சகித்துக் கொண்டு ஆதரவு அளித்து பிரசுரித்த விகடன் தளத்தின் தோழர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம். அதுவரை வணக்கமும் வாழ்த்தும். Take care and bye..