Published:Updated:

பிக் பாஸ் 66 : தாமரையிடம் இமான் நடந்து கொண்ட விதம்! கமலிடம் செல்லுமா பஞ்சாயத்து?

பிக் பாஸ் டாஸ்க்

தாமரையின் பெயர் சொல்லப்பட்டதும் அக்ஷரா விழுந்து விழுந்து சிரித்தார். ‘நீதி, நேர்மை, நியாயம்’ என்பதுதான் கட்சியின் கொள்கையாம்.

பிக் பாஸ் 66 : தாமரையிடம் இமான் நடந்து கொண்ட விதம்! கமலிடம் செல்லுமா பஞ்சாயத்து?

தாமரையின் பெயர் சொல்லப்பட்டதும் அக்ஷரா விழுந்து விழுந்து சிரித்தார். ‘நீதி, நேர்மை, நியாயம்’ என்பதுதான் கட்சியின் கொள்கையாம்.

Published:Updated:
பிக் பாஸ் டாஸ்க்

பிக் பாஸ் வீட்டில் நேற்று சிலபல ருசிகரமான சம்பவங்கள் நிகழ்ந்தன. பாவனியுடன் அமீர் செய்த flirt, அதற்கு பிரியங்காவின் ஜாலியான எதிர்வினை, ‘கொடியைப் பிடுங்கி அண்ணாச்சி செய்த அழிச்சாட்டியம், கொடி காத்த குமரியாக தாமரை நின்று போராடிய வீரச் செயல், அரசியல் கோஷம் என்கிற பெயரில் நடந்த கேலிக்கூத்துகள் என்று ஒரு கலவையான வண்ணம் நேற்று கிடைத்தது.

அரசியல் தலைவர்களைப்போல் போட்டியாளர்கள் வேடமிட்டு வந்தபோது பல உண்மையான உருவங்களின் நினைவுகளை அவர்கள் எழுப்பினார்கள். ஆனால் அவற்றையெல்லாம் அப்படியே பொதுவில் எழுதினால் பிக்பாஸ் வீட்டின் பாதாள சிறைக்குப் போகவே வேண்டியதுதான்.

எபிசோட் 66-ல் என்ன நடந்தது?

தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தின் பாடலை பிக்பாஸ் காலையில் ஒலிக்க விட்ட போது அதன் பொருள் அப்போது புரியவில்லை. அரசியல் கட்சி டாஸ்க் அறிவிக்கப்பட்ட போதுதான் புரிந்தது. அந்தத் திரைப்படத்தின் பாத்திரதன்மையின்படி, பிக்பாஸ் வீட்டில் யார் தனுஷ், யார் திரிஷா என்று கற்பனை செய்தது சற்று சுவாரசியமாக இருந்தது.

பாவனி தலைவராகியிருப்பது குறித்து அக்ஷரா காண்டாகியிருப்பதை வெளிப்படையாகவே பிரதிபலிக்கிறார். ‘பெண்களின் உதவியாளர்’ என்பதுதான் பாவனிக்கு பிக்பாஸ் தந்த தண்டனை. ஆனால் அக்ஷராவோ தன் பணிகளையும் சேர்த்து – அது விளையாட்டுக்குகாகவே என்றாலும் – செய்யச் சொல்வது ஓவர். ஒரு அதிகாரி, உதவியாளர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதிகாரி தான் செய்ய வேண்டிய பணிகளைக்கூட உதவியாளரையா செய்யச் சொல்வார்? இது எளிமையான லாஜிக். ஆனால் அக்ஷராவிற்குத்தான் எதுவுமே ‘தெரியாதே’?!

ராஜூ என்கிற கலாசாரக் காவலர்

பாவனி என்கிற மையத்தைச் சுற்றி மூன்று ஆண் கிரகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. அபினய் – ராஜூ – அமீர். பாவனியுடன் ராஜூ சண்டையிடுவது போலவே தோன்றினாலும் அவருக்குள்ளும் ஒரு அபினய் இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. இல்லையென்றால் அவர் ஏன் பாவனியை தொடர்ந்து கண்காணித்து கலாசாரக் காவலர் வேலையைச் செய்ய வேண்டும்? அந்த வீட்டில் அக்ஷரா கூட இருக்கிறாரே?! அவரை ஏன் ராஜூ கண்காணிப்பதில்லை.

அமீர் ராஜூவிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். “நான் பாவனியுடன் பழகுவது அபினய்க்குப் பிடிக்கவில்லை. நான் பேசினால் அவரின் முகம் மாறுகிறது. அதற்காக நான் பேசாமல் இருக்க முடியுமா? என்றெல்லாம் அமீர் சொல்லிக் கொண்டிருந்தார். அபினய் – பாவனி விவகாரம் தொடர்பாக ராஜூ ஏற்கெனவே பல ஆட்சேபக் கருத்துக்களைச் சொல்லி சர்சைக்கு ஆளானவர். எனில் அவரிடமே சென்று அமீர் மேலும் ஏன் பல தரவுகளைத் தர வேண்டும்? அவர் பாவனிக்கு உண்மையாகவே நண்பர்தானா? ‘நண்பன்னா கூட இருந்து குழி பறிக்க மாட்டான்’ என்று சொன்னவர் இதே அமீர்தான். இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் பொதுவில் பேசும்போது பாவனியின் இமேஜ் தொடர்ந்து டாமேஜ் ஆகும் என்பது அமீருக்குத் தெரியாதா?

“ஆமாமாம்.. நானும் பார்த்துட்டேதான் இருக்கிறேன். இதுகுறித்து ஏதாவது செய்வேன். அது சரி. நீங்களும்தான் பாவனியிடம் அதிகம் பழகுகிறீர்கள்.. அதை நான் எப்படிப் பார்ப்பது?” என்று அமீரிடம் ராஜூ பதிலுக்கு கேட்கிறார். யார் யாரைக் காதலித்துக் கொண்டு போனால் இவருக்கு என்ன? அது அவரவர்களின் தனிப்பட்ட விஷயம் அல்லவா? இதை ஏன் ராஜூ அறிவதிலும் வம்பு பேசுவதிலும் இத்தனை ஆர்வம் காட்ட வேண்டும்? கண்காணிப்பு பணியைச் செய்ய வேண்டும்? நகைச்சுவையைத் தாண்டி ராஜூவின் சில வேறு முகங்கள் அத்தனை சிறப்பானதாக இல்லை.

 ராஜூ - அமீர்
ராஜூ - அமீர்

பிரியங்காவின் வாழ்க்கைத் தத்துவம்

பிரியங்கா பேசும் பல சமயங்களில் ஸ்பீக்கர் வால்யூமை குறைக்க வேண்டிய பிரச்னை ஒருபக்கம் இருக்கிறது. ஆனால் அதுவே பாவனி பேசும்போது அதிகப்படுத்த வேண்டியிருக்கிறது. அவர் வேண்டுமென்றே இப்படி புரியக்கூடாது என்று ஹஸ்கி வாய்ஸில் பேசுகிறாரா, அல்லது அவர் மாடுலேஷனா இப்படித்தானா என்று தெரியவில்லை. பிரியங்காவிற்கு தலை மசாஜ் செய்து கொண்டிருந்தார் பாவனி. பக்கத்தில் அமீர் டான்ஸ் சொல்லித்தர ராஜூ ஆடிக் கொண்டிருந்தார். அப்போது இமான் சொன்ன கிண்டல்களும் ராஜூ செய்த அசைவுகளும் சற்று எல்லை மீறியதாக இருந்தது. ‘கவுன்ட்டர் கொடுங்க’ என்று பார்வையாளர் சொன்னதை ராஜூ இப்படியாக ‘பாக்கியராஜ்தனமாக’ புரிந்து கொண்டாரா?

பிரியங்கா - பாவனி
பிரியங்கா - பாவனி

“ஒரு சரியான நபரை நான் முதலில் தவிர்த்து விடுவேன். ஆனால் பிறகு தவறான நபரிடம் சென்று சரியாக மாட்டிக் கொள்வேன்’ என்று தத்துவம் பேசிக் கொண்டிருந்தார் பிரியங்கா. “உலகமே அப்படித்தானே?” என்று பின்பாட்டு பாடினார் பாவனி. தாமரையை நம்பி பிரியங்கா ஏமாந்து விட்டாராம். (தாமரையை நம்பாதீர்கள் என்று பிரியங்கா சொல்ல வருகிறாரா?. நோ.. நோ.. இதில் அரசியல் இல்லை!). பக்கத்தில் டான்ஸ் பிராக்டிஸ் நடந்ததால் ஒரே சந்தைக்கடை இரைச்சல்.

பாவனியிடம் அசடு வழிந்த அமீர்

பவானி தற்கொலை பேரவைத் தலைவரான அமீரின் அணுகுமுறையில் இப்போது மேலும் முன்னேற்றம் தெரிகிறது. “நான் உங்க ஃபேனுங்க..” என்று பாவனியிடம் விசிற ஆரம்பித்து “அக்கா. நீ ஏதாவது பண்ணி விடுக்கா” என்று பக்கத்திலிருந்த பிரியங்காவிடம் கெஞ்சுகிறார் அமீர். விளையாட்டாக இருந்தாலும்கூட அமீரின் அப்பட்டமான வழிசல் இந்த உரையாடலில் தெரிகிறது. அபினய்யை முந்திவிட வேண்டும் என்கிற ஆவேசமும் அமீரிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பாவனியும் இந்த அணுகுமுறையை வெட்கப்பட்டு சிரித்து உற்சாகப்படுத்துகிறார். “பெண்கள்… சிலந்திகள்..” என்று சொன்ன ஆளவந்தான் ‘நந்து’வின் நினைவுதான் வருகிறது. ‘கடவுளே.. ஏன் இந்த மாதிரி கழிசடைகள் கூடல்லாம் என்னை கூட்டு சேர வைக்கறே?” என்று தலையில் அடித்துக் கொண்ட பிரியங்கா, “என் தொழிலையே மாத்திட்டீங்களேடா” என்று ஜாலியாக அனத்துகிறார். விஜய்டிவி ராமர் அங்கிருந்தால் ‘பிரூ.. நீ இப்ப பண்ணிட்டு இருக்கற காரியத்துக்கு என்ன பெயர் தெரியுமா?” என்று பங்கமாக கலாய்த்திருப்பார்.

அமீர் - பிரியங்கா
அமீர் - பிரியங்கா

அரசியல் ‘மாநாடு’ – கட்சி, கொள்கை, சண்டை ரிப்பீட்டு

இந்த வார லக்ஸரி பட்ஜெட் ‘அரசியல் மாநாடாக’ மாறியது. ‘சண்டைல கிழியாத சட்டை இருக்கா?.. அசிங்கம் இல்லாத அரசியல் இருக்கா, பொறாமையை போர்வையா போர்த்திக்குங்க.. பிரச்சினையை பிரசாரமாக மாற்றுங்க.. பிக்பாஸ் தொகுதியில் உங்கள் பிரசாரத்தை ஆரம்பியுங்கள்” என்று ரகளையாக போட்டியாளர்களை உசுப்பேற்றினார் பிக்பாஸ். இதற்காக வீடு மூன்று அரசியல் கட்சிகளாக மாற வேண்டுமாம். ஒரே கொள்கைகளை (?!) உடையவர்கள் அணி சேரலாமாம். தங்களின் கொள்கைகளை வடிவமைத்து பரப்புரை செய்யலாமாம். (என்னது..கொள்கையா?! தலை சுத்துது!).

அமீர், பிரியங்கா, பாவனி, அபினய் என்பது ஒரு அணியாக இணைந்தது. (வெளங்கிடும்!). தாமரை, நிரூப், சிபி, ராஜூ ஒரு புதிய கட்சியை ஆரம்பித்தார்கள். வருண் இருக்கும் இடத்தில்தானே அக்ஷராவும் இருப்பார்? எனவே வருண், அக்ஷரா, சஞ்சீவ், இமான் ஒரு கட்சி. ராஜூவும் இமானும் எதிரெதிர் கட்சிகளில் சேர்ந்தது நல்ல விஷயம். இதனால் சில காமெடியான ஃபுட்டேஜ்கள் பிறகு கிடைத்தன.

ராஜூ
ராஜூ

தங்கள் கட்சியின் பெயர் சின்னம், கொள்கைகள், கோட்பாடுகள், அரசியல் முழக்கங்கள், லட்சியங்கள் போன்றவற்றை ஒவ்வொரு அணியும் அமர்ந்து ஆலோசித்துக் கொண்டிருந்தன. கிளிஷேவாக இருந்தாலும், பிரியங்கா யோசித்த ‘மக்கள் குரல்’ என்ற பெயரே பரவாயில்லை. ஆனால் ‘உரக்க சொல்’ என்று பிறகு ஏனோ மாற்றி விட்டார்கள். (கட்சியில் ‘ச்’-க்கு அனுமதி கிடையாது போல). ‘உரக்கச் சொல்’ என்பது ஒரு முழக்கம்தான். அது எப்படி கட்சியின் பெயராகும்? சஞ்சீவ் இயல்பாக சொல்லி விட்டுப் போன ஒரு நகைச்சுவை கமெண்டினால் நிரூப் அநாவசியமாக காண்டானார். பிறகு இவர்கள் அணி அதைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தது.

அரசியல் கட்சிகள் அறிமுகமாகும் நேரம். முதலில் வந்த சிபி தங்கள் கட்சியின் பெயரை அறிவித்தார். ‘பிக்பாஸ் மக்கள் முன்னேற்றக் கழகம்’. BBMK’ (அடடே!). தலைவர் சிபி, கொபசெ ராஜூ, மகளிர் அணித் தலைவர் தாமரை, வியூக அமைப்பாளர் நிரூப் என்று பெயர்களைப் பட்டியலிட்டார் சிபி. தாமரையின் பெயர் சொல்லப்பட்டதும் அக்ஷரா விழுந்து விழுந்து சிரித்தார். ‘நீதி, நேர்மை, நியாயம்’ என்பதுதான் கட்சியின் கொள்கையாம். (இது நாட்டாமை படத்தோட வசனமில்ல?!). உணவு, உடை, உறையுள் என்று அனைத்தும் உறுதி செய்யப்படுமாம். கருத்துக்களை பாரபட்சமின்றி ஏற்றுக் கொள்வார்களாம். இவர்கள் வடிவமைத்த சின்னம் நன்றாகவே இருந்தது. ‘நடுநிலையான முடிவுகள் எடுக்கப்படும்” என்று சிபி சொன்ன போது ‘நடுரோட்ல எடுப்பீங்களா?” என்று மொக்கையான கவுன்ட்டரை வீசினார் இமான். ‘மகளிர் நலம்’ பேணப்பட வேண்டும் என்பதற்காக தாமரைக்கு பதவி தந்திருக்கிறார்களாம். “சூப்பர் தலீவா” என்று கத்தினார் நிரூப்.

சஞ்சீவ்
சஞ்சீவ்

“அடுத்தபடியாக, எங்கள் கட்சியின் தலைவர் ‘சரவெடி சஞ்சீவ்’ பேசுவார்” என்பதை அரசியல் மேடைகளில் ஒலிக்கும் அதே பாணியில் பேசி அசத்தினார் இமான். ஆனால் தலைவர் சஞ்சீவோ விசிலடித்தபடியே மேடை ஏறினார். “எங்கள் கட்சியில் யாருக்கும் விசிலடிக்கத் தெரியாது. எனவேதான் நான் அடிக்கிறேன்” என்று அவர் சொன்னது நல்ல காமெடி. சஞ்சீவிடம் ஒரு அமைதியான ஆனால் வலுவான ஹியூமர் சென்ஸ் இருக்கிறது. “எங்கள் கட்சியின் பெயர் NPP” என்று அறிவித்த தலைவர், அடுத்த கணமே “அதன் விரிவாக்கம் என்னன்னு நாங்க இன்னமும் முடிவு பண்ணலை” என்று சொன்னது ஒரு நல்ல அரசியல் நையாண்டி. தமிழகத்தில் அவசரம் அவசரமாக கட்சி ஆரம்பித்தவர்களின் செயலோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த நகைச்சுவையின் அழுத்தம் புரியும். “புரிஞ்சவன் புரிஞ்சுக்க” என்று லேகியம் விற்பவரைப் போல தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தார் இமான்.

“எங்கள் கட்சியின் சின்னம் நெற்றிக்கண்” என்று சஞ்சீவ் சொன்னவுடன், அக்ஷரா ஓடி எழுந்து வந்து கொடியைக் காண்பித்தார். பார்த்தால் அது ஏதோ கார்ட்டூன் உருவம் போலவே இருந்தது. இப்போது விழுந்து விழுந்து சிரித்து அக்ஷராவைப் பழிவாங்கினார் தாமரை. “எங்கள் கொள்கைகள் என்ன என்று தெரியுமா?” என்று வீர முழக்கமிட்ட சஞ்சீவ் “அஞ்சு நிமிஷம் முன்னாடிதான் எழுதினோம். மறந்துட்டேன்” என்று டைமிங்கில் பின்னினார். அவர் யாரை மனதில் வைத்து கிண்டலடிக்கிறார் என்பதை ஒருமாதிரியாக யூகிக்க முடிந்தது. (எதுக்கு வம்பு?!). “ஊக்கத்தை பிரித்தெடுப்போம், ஊத்தப்பத்தை முடித்தெடுப்போம்” என்றெல்லாம் சஞ்சீவ் முழக்கம் செய்த போது காமெடிதான் இவர்களின் பிரதானமான நோக்கம் என்பது புரிந்து போயிற்று.

அக்ஷரா
அக்ஷரா

‘உரக்க சொல்’ அரசியல் கட்சி மேடைக்கு வந்தது. இவர்களைப் பார்த்தால் படித்த இளைஞர்கள் பார்ட்டைமில் பொம்மை விற்கும் வேலையை செய்ய வந்த குழுவைப் போலவே இருந்தது. இதன் தலைவர் பிரியங்காவாம். கட்சியின் பெயர் ‘உரக்க சொல்’ (ஒற்று காணோம்!). ‘அவர்களை உறங்கச் சொல்” என்று எதிரணியில் இருந்து இமான் குரல் கொடுத்தார். பிறகு மனப்பாடப்பகுதி மாதிரி பிரியங்கா எதையோ கொள்கைகளாக சொன்னார்.

தாமரை - கொடி காத்த குமரி

அரசியல் என்றால் அதில் குடுமிப்பிடி சண்டை இல்லாமலா? எனவே அதற்கேற்ற ஏற்பாட்டைச் செய்தார் பிக்பாஸ். ‘வெற்றிக்கொடி கட்டு’ என்கிற பெயரில் ஒரு டாஸ்க். மியூசிக்கல் சேர் மாதிரி இரண்டு கொடிகளை நடுவதற்கு மூன்று பேர் போட்டியிட வேண்டும். எந்தக் கட்சி அதிக கொடிகளை நடுகிறதோ, அதுவே வெற்றியாளர். பஸ்ஸர் சத்தத்தைக் கேட்டாலே அலறி நடுங்கினார் தாமரை. இதன் பின்னுள்ள உளவியல் அச்சத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. பிக்பாஸின் குரல் கேட்டவுடனே பலர் தன்னிச்சையாக நடுங்குவதை பிக்பாஸ் வீட்டில் காணலாம்.

தாமரையை தேற்றி, தைரியம் ஊட்டி களத்தில் இறக்கினார்கள். தாமரை, பாவனி, இமான் ஆகிய மூவரும் மோதிய ஒரு ஆட்டத்தில் பாவனி சாமர்த்தியமாக ஒரு கொடிக்கம்பத்தைப் பற்றி விட, இன்னொரு கம்பத்தை தாமரை பற்றிக் கொண்டார். ஆனால் அவரின் கொடி கீழே விழுந்து விட்டதால் அதை எடுக்கப் போகும் சமயத்தில் இமான் வலுக்கட்டாயமாக தாமரையுடன் மல்லுக்கட்டி கம்பத்தை பிடுங்கிய காட்சி ரசிக்கத்தகுந்ததாக இல்லை. நிச்சயமாக இது அழிச்சாட்டியம்.

தாமரை - இமான்
தாமரை - இமான்

தாமரை என்பதால் நட்பு உரிமை எடுத்துக் கொண்டு இமான் இதைச் செய்தார் என்றாலும் கூட அவர் செய்தது ஏற்க முடியாத விஷயம். அண்ணாச்சி என்பதால் தாமரை இதை இயல்பாக எடுத்துக் கொண்டார். ஆனால் “வேற யாராவதா இருந்தா செமையா சண்டை போட்டிருப்பாங்க” என்று பிறகு அக்ஷரா ஏற்றிக் கொடுத்ததால் தாமரையின் மண்டைக்குள் நண்டு வந்து ஏறியது.

“இதையெல்லாம் விளையாட்டுன்னு சொல்லாதீங்க அண்ணாச்சி” என்று இமானுடன் மல்லுக்கட்டத் துவங்கினார் தாமரை. “உன்னைக் காயப்படுத்தணும்றது என் நோக்கமில்லை” என்றெல்லாம் ஆயிரம் சால்ஜாப்புகளை இமான் சொன்னாரே ஒழிய, ஒரு நேரடி மன்னிப்பைக் கோரவில்லை. இதையே விசாரணை சபையில் கமல் கேட்டார் என்றால் அசட்டுச் சிரிப்புடன் “ஆமாம்.. சார்..’என்று கையெடுத்து கும்பிட்டு விடுவார்.

இமானின் விளக்கம்
இமானின் விளக்கம்

“இந்தச் சுற்றில் யார் ஜெயித்துதுன்னு சொல்லுங்க பாவனி” என்று பிக்பாஸ் அறிவித்தது முறையானதல்ல. பாவனியும் அந்த ஆட்டத்தில் பங்கு பெற்றிருக்கும்போது அவரால் எப்படி கவனித்திருக்க முடியும்?. அண்ணாச்சியின் அழிச்சாட்டியம் காரணமாக “நானும் தாமரையும் வெற்றி பெற்றோம்” என்று பாவனி சொன்னாலும்கூட ‘எந்தக் கொடி கடைசில இருந்தது?” என்று பிக்பாஸ் தான் எதிர்பார்த்த விடையை பாவனியின் வாயில் இருந்து பிடுங்கினார். இதற்கு பிக்பாஸே முடிவுகளை அறிவித்துத் தொலைத்திருக்கலாம்.

உரக்கப் பேசாத ‘உரக்க சொல்’ கட்சி

இமான் – தாமரை விவகாரம் வீடு முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்க ‘உரக்க சொல்’ அணி மூலையில் கமுக்கமாக அமர்ந்து அரசியல் பேனர்களை எழுதிக் கொண்டிருந்தது. கொள்கையெல்லாம் வாய்ப்பேச்சில் மட்டும்தான் போல. ஆனால் அந்த அணியில் இருந்த அமீர், தார்மீக கோபத்துடன் பொங்கியது சிறப்பு. ‘ஒரு பெண்ணிடம் அத்தனை வலுக்கட்டாயமாக பிடுங்கலாமா?” என்று அமீர் கொதித்ததில் நியாயம் இருந்தது. ஆனால் தாமரையுடன் இருந்த பகை காரணமாக பிரியங்கா இதை ஊக்குவிக்கவில்லை. என்றாலும் இமானை பிறகு தனியாக அழைத்த அமீர், தன்னுடைய கண்டனங்களை நயமான முறையில் தெரிவித்தது சிறப்பு. “ஆமாமாம். உங்கள் முகங்கள் எல்லாம் மாறினதை நான் பார்த்தேன்” என்று இமான் சொன்னாலும் ‘நான் மாறவில்லை’ என்பதை பிடிவாத செய்தியாக சொன்னார்.

போட்டியாளர்கள் அனைவரும் வேட்டி, சட்டை. சேலை போன்றவற்றை அணிந்து அரசியல் வேஷத்துடன் வந்தது சிறப்பான காட்சி. “ரெண்டு ஸ்கூல் பசங்க. முதியோர் இல்லத்தைச் சேர்ந்தவங்க ரெண்டு பேர்” என்று சஞ்சீவின் கட்சியை பங்கம் செய்தார் ராஜூ. இந்தச் சமயத்தில் சம்பந்தமேயில்லாமல் “போராடுவோம். பேராடுவோம்” என்று கத்திய அக்ஷராவிடம் “கத்தாம இரும்மா” என்று ராஜூ ஜாலியாக அதட்டியது சுவாரசியமான காட்சி. கோஷமிட்ட இமானை தனியாக அழைத்த ராஜூ “டேக் த ஃபைவ் ருபீஸ்” என்று தந்ததும் அதற்கு இமான் தந்த எக்ஸ்பிரஷூனும் சிரிப்பை வரவழைத்தது. NPP –க்கு இமான் அளித்த விளக்கம் ரகளை. “ஓ.. நீங்க பெயிண்ட் கம்பெனியா.. பெயிண்ட் வேலை வரும் போது சொல்லி அனுப்பறேன்” என்று ரகளையாக பங்கம் செய்தார் ராஜூ.

ராஜூ - இமான்
ராஜூ - இமான்

“நம்ம கட்சிக்கு வந்துருங்களேன். இன்னாவோ கார் தரோம், மூணு வேளை பிரியாணி போடறோம்” என்று ராஜூ இமானை அழைக்க “திறமையா பேசறீங்களே.. தம்பி. நீங்க ஏன் நம்ம கட்சிக்கு வரக்கூடாது?” என்று பதிலுக்கு பேரம் பேசினார் இமான்.

இந்த அரசியல் டாஸ்க்கில் சுவாரசியம், பொழுதுபோக்கு ஆகியவை தூக்கலாக இருக்க வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்ததை மக்கள் ஓரளவிற்கு நிறைவேற்றினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தெரிந்து செய்தார்களோ அல்லது தெரியாமல் செய்தார்களோ, இவர்களின் செயற்பாடுகளில் இருந்த கூர்மையான அரசியல் அங்கதங்கள் ரசிக்க வைத்தன.

அக்ஷரா – ஜெனிலியாவா, சந்திரமுகியா?

‘அபினய், பாவனி ஆகிய இருவரையும் பிரியங்கா இன்ப்ளுயன்ஸ் செய்கிறாராம்’. இப்படியொரு ஸ்டேட்மென்ட்டை அக்ஷரா சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல் பாவனிக்கு வந்து சேர, அவர் அபினய்யிடம் சொல்ல, அவர் பிரியங்காவிடம் சொன்னார். “அவ ஏன் என்னை நோண்டறா.? ஒண்ணு ஜெனிலியா மாதிரி தத்தக்கா. பித்தக்கான்னு கத்தி குதிக்கறா.. இல்லைன்னா. அழறா. சமயங்கள்ல சந்திரமுகியா.. குதிக்கறா.. யாருதான் இவ.? நாங்க இதுவரைக்கும் இன்ப்ளுயன்ஸ் பண்ணலை. ஆனா அதுல பிஎச்டி பண்ணியிருக்கோம். நாங்க பண்ண ஆரம்பிச்சா. வீடு தாங்காது. இது என்னோட குருநாதர் அபிஷேக் மீது ஆணை” என்று ஆவேசமாக பிரியங்கா சொன்ன காட்சியோடு எபிசோட் நிறைவடைந்தது.

‘ஹே..ஹே. …அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!’