Published:Updated:

எம்.எல்.ஏ -வின் உறவினர்; முக்கியக் கட்சியின் இளைஞரணியில் பதவி; பிக் பாஸ் அசிமின் பின்னணி இதுதான்!

அசிம்

ஷிவானி - பாலாஜி முருகதாஸ் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட, அசிமை உள்ளே அனுப்பும் முடிவு கை விடப்பட்டதாகச் சொன்னார்கள்.

எம்.எல்.ஏ -வின் உறவினர்; முக்கியக் கட்சியின் இளைஞரணியில் பதவி; பிக் பாஸ் அசிமின் பின்னணி இதுதான்!

ஷிவானி - பாலாஜி முருகதாஸ் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட, அசிமை உள்ளே அனுப்பும் முடிவு கை விடப்பட்டதாகச் சொன்னார்கள்.

Published:Updated:
அசிம்
பிக் பாஸ் சீசன் 6 ல் இரண்டாவது வார எவிக்‌ஷன் பரபரப்பாக முடிந்திருக்கிறது. அசலா, அசிமா என்கிற கேள்வி வந்து கடைசியில் அசல் வெளியேற்றப்பட, அசிம் தப்பித்திருக்கிறார். பிக் பாஸ் ஆரம்பித்த முதல் சில நாட்கள் எந்த ஆரவாரமும் இல்லாமல் இருந்த அசிமுடைய பெயர் ஆயிஷாவுடனான `வாடி போடி' சண்டைக்குப் பிறகே பலராலும் கவனிக்கப்பட்டது எனச் சொல்லலாம்.

தொடர்ந்து விக்ரமன், மற்றும் அமுதவாணனுடன் அதே `வாடா போடா' வம்பு, தனலட்சுமியைத் தள்ளி விட்டது. அது தொடர்பான குறும்படத்திற்குப் பிறகு கமல் முன்னிலையில் வருத்தம் தெரிவித்தது என தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் இரண்டாவது வார எவிக்‌ஷன் முடிந்திருக்கிறது.

குரலை உயர்த்திப் பேசுகிறார், குரூப் பாலிடிக்ஸ் செய்கிறார் என்றெல்லாம் சக போட்டியாளர்கள் இவரை விமர்சித்து வருகிற நிலையில், 'யார் இந்த அசிம்' என அவரது பின்னணி குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.

அசிம்
அசிம்

``பொலிட்டிகல் சயின்ஸ் படிச்சிருக்கார், ஆனா நிகழ்ச்சியில் பாலிடிக்ஸ் செய்கிறார்ங்கிறதை ஏத்துக்க மாட்டோம். ஏன்னா ஷோவுல வெளிப்படுகிற அவரது அந்தக் கோபம், சத்தம் எல்லாமே அவருடைய இயல்பான குணம்தான். அதனாலதான் அவர் நிகழ்ச்சிக்குள் போகிறார்னதுமே வீட்டுலெல்லாம் ஆரம்பத்துல கொஞ்சம் பயந்தாங்க" என்கிறார் அசிமின் நெருங்கிய நண்பர் சதாம்.

எது எப்படியோ, இப்போதைக்கு பிக் பாஸில் கன்டென்ட் தருபவராக இருக்கும் அசிமின் பயோ டேட்டாதான் என்ன? எனக் கேட்டோம்.

சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர்.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் இவருக்கு மாமா உறவு . விஜய் டிவியில் ஒளிபரப்பான `பிரிவோம் சந்திப்போம்' தொடர் மூலம்தான் சீரியலுக்குள் என்ட்ரி ஆனார். தொடர்ந்து சன் டிவியில் `பிரியமானவள்' தொடரில் நடித்தார். பிறகு மறுபடியும் விஜய் டிவிக்கு வந்து `தெய்வம் தந்த வீடு'. `பகல் நிலவு' ஆகிய சீரியல்களில் நடித்தார்.

ஷிவானி - அசிம்
ஷிவானி - அசிம்

'பகல் நிலவு' தொடரில் இவருக்கு ஜோடியாக ஷிவானி கமிட் ஆனதும் இந்த ஜோடி சின்னத்திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த ஜோடிப் பொருத்தம் ஹிட் ஆகவே மீண்டும் இவர்களை ஜோடியாக நடிக்க வைத்து `கடைக்குட்டி சிங்கம்' என்னும் சீரியலை ஒளிபரப்பியது விஜய் டிவி. ஆனால் அந்த சீரியலின் பாதியிலேயே ஷிவானி சேனலுடன் கோபித்துக் கொண்டு தொடரிலிருந்து வெளியேறினார்.

அந்த நேரத்தில்தான் பிக் பாஸ் 4வது சீசன் தொடங்கியது. எனவே அந்த சீசனுக்குள் அசிம் -ஷிவானி இருவரையும் அனுப்பினால் கன்டென்ட் கிடைக்குமென நம்பிய சேனல் முதலில் ஷிவானியை நிகழ்ச்சிக்குள் அனுப்பியது.

அசிமை அடுத்த சில நாட்களில் அனுப்பலாமெனத் திட்டமிட்டிருந்தார்கள். அதற்காக குவாரன்டைனிலிருந்தார் அசிம். ஆனால் சேனல் நினைத்ததற்கு நேர்மாறாக பிக் பாஸ் வீட்டுக்குள் ஷிவானி - பாலாஜி முருகதாஸ் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட, அசிமை உள்ளே அனுப்பும் முடிவு கை விடப்பட்டதாக அப்போது சொன்னார்கள்.

இதனால் கடுப்பாகி குவாரன்டைனிலிருந்து வெளியேறிய அசிம், விஜய் டிவிக்கு ஒரு கும்பிடைப் போட்டு விட்டு மீண்டும் சன் டிவிக்கு வந்தார்.

கடந்தாண்டு அதாவது பிக் பாஸ் 5வது சீசனின் போது சன் டிவியில் ஒளிபரப்பான 'பூவே உனக்காக' தொடரின் ஹீரோ அசிம். இந்த முறை பிக் பாஸ் வாய்ப்பு வந்ததும் அதை உறுதி செய்வதில் கவனமாக இருந்திருக்கிறார். இதற்காக அடுத்தடுத்த சில சீரியல் வாய்ப்புகளை மறுக்கவும் செய்தாராம்.

பகல் நிலவு சீரியலில்
பகல் நிலவு சீரியலில்

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரையில் அசிமுக்கு முதலில் சோயா என்பவருடன் திருமணம் நடந்தது. ஒரு மகனும் இருக்கிறார். இந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட தற்போது மகனை மட்டும் நீதிமன்ற அனுமதியுடன் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சந்தித்து வருகிறார்.

அசிம் குறித்துக் கூடுதலான ஒரு தகவல் இது... தமிழகத்தின் முக்கியமான கட்சி ஒன்றில் மத்திய சென்னைப் பகுதியின் இளைஞரணியில் பொறுப்பில் இருந்த அசிம், மிகச் சமீபத்தில்தான் அந்தப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.