Published:Updated:

பிக் பாஸ் - 62: உடைகிறதா பிரியங்கா - நிரூப் கூட்டணி? ஆரம்பமாகும் அதிரடி!

பிக் பாஸ் பிரியங்கா

ஆனால் வேறு சிலரை பழிவாங்குவதற்காக தாமரையின்மீது அனுதாப நாடகம் நடத்துகிறார்கள் என்றால் அது அவலமான விஷயம்.

பிக் பாஸ் - 62: உடைகிறதா பிரியங்கா - நிரூப் கூட்டணி? ஆரம்பமாகும் அதிரடி!

ஆனால் வேறு சிலரை பழிவாங்குவதற்காக தாமரையின்மீது அனுதாப நாடகம் நடத்துகிறார்கள் என்றால் அது அவலமான விஷயம்.

Published:Updated:
பிக் பாஸ் பிரியங்கா
‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்பது திருமந்திரம். இறைவனைப் பார்த்தவர்கள் பேசுவதில்லை; பேசுவர்கள் பார்த்ததில்லை என்பது அதன் பொருள். இது போல பிக்பாஸ் சீசன் 5-ல் எழும் பிரம்மாண்டமான கேள்வி என்னவெனில், பிரியங்கா – நிரூப் நட்பும் சண்டையும் உண்மையானதா, ஷோவிற்காக ஆடப்படும் நாடகமா என்பதே. சந்திரமுகி பாணியில் சொன்னால் “முருகேஷா.. பேய் இருக்கா.. இல்லையா?’

ஏற்கெனவே இந்தக் கேள்வி குழப்பமாக இருக்கும்போது இந்த நாடகத்தில் பல ட்விஸ்ட்களை இடையில் புகுந்து தூவுகிறார் அபிஷேக். “என்னைக் கொளுத்திக்கிட்டு வெளிச்சம் கொடுப்பேண்டா” என்று அவர் முன்னர் சொன்ன காரணத்தினாலோ, என்னவோ.. அதன் முன்னோட்டமாக நேற்று தலையில் சுடுநீரை ஊற்றிக் கொண்டார் போலிருக்கிறது. கூத்தின் இடையில் கோமாளி போல இவர் ஆடும் ஆட்டம் இருக்கிறதே?!.. முடியல.

‘All Roads Lead to Rome’ என்றொரு சொற்றொடர் இருக்கிறது. அதுபோல, தெரிந்தோ, தெரியாமலோ பெரும்பாலான பிரச்னைகளுக்கு தாமரைதான் மையப்பொருளாக இருக்கிறார். கமல் சொன்னது மறுபடி மறுபடி நிரூபணம் ஆகிறது. நேற்று அவர் பாத்திரம் விளக்குவதில் ஆரம்பித்தது பிரச்சினை. பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொரு பாத்திரத்தையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளுமாறு அந்தச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது. பிறகு ஆரம்பித்தது அந்த நெடும் சண்டை.

ஆனால் நேற்று நடந்த இந்த ஹை-வோல்டேஜ் டிராமாவில் நிறைய உணர்வுகள் மிக அசலாக வெளிப்பட்டன. மிகச்சிறந்த நடிகராக இருந்தாலும் கூட இதை திட்டமிட்டு நடிக்க முடியாது. ‘பிக்பாஸ் ஏன் scripted show இல்லை’.. என்பதற்கான சாட்சியங்கள் இவை. ஒரு சிக்கலான சூழலுக்குள் மனிதர்களை தள்ளி விடுவதை மட்டுமே இந்த ஷோவின் டிசைன் செய்கிறது. இந்தக் காட்சிகளுக்குப் பின்னால் நமக்கான படிப்பினைகளும் இருக்கின்றன. ஒருவரின் மீதுள்ள புகைச்சலும் வன்மமும், எவ்வாறு நெருப்பாக மாறி வீடு முழுக்க பரவும் என்பதற்கான உதாரண சம்பவம் இது.

இதையெல்லாம் விடுங்கள். ரணகளத்தில் கிளுகிளுப்பு மாதிரி, நேற்றைய எபிசோடில் அமீர் – பிரியங்கா உரையாடிய காட்சியும், சிறைக்குள் பாவனி –நிரூப் உரையாடிய காட்சியும் ஒரே பிரேமில் காண்பிக்கப்பட்டதை கவனித்தீர்களா? பிக் பாஸ் டீமிற்குள் ஒரு கலைஞன் இருக்கிறான் என்பதற்கான சாட்சியம் அது.

எபிசோட் 62-ல் என்ன நடந்தது?

மற்றவர்கள் ஜாலியாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க தாமரை பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்தார். சிலருக்கு வீட்டு வேலை செய்வதென்பது ஒரு அடிக்ஷன் மாதிரி. ஜாலியாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி, ஏதாவதொரு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதை வடிகாலாக மாற்றிக் கொள்வார்கள். “நீதான் மூணு வேளையும் சமையல் பண்ணல்ல.. அப்புறம் ஏன் பாத்திரமும் சுத்தம் செய்யணும்?. அந்த டீம்ல இருக்கறவங்க வேலைதானே இது?” என்று உரத்த குரலில் பிரியங்கா ஆட்சேபிக்கிறார்.

இது பற்றி முன்பே பார்த்திருக்கிறோம். அந்த வீட்டின் பெரும்பான்மையான பணிகளை தாமரையே இழுத்துப் போட்டு செய்வது பற்றி பிரியங்கா பலமுறை ஆதங்கப்பட்டு சொல்லியிருக்கிறார். இது தாமரை மீதுள்ள அக்கறையா அல்லது இப்படி சுட்டுக்காட்டுவதின் மூலம் வேறு சிலரை இடித்துரைக்கும் பழிவாங்கலா என்பது குழப்பமாகத்தான் இருக்கிறது. நிரூப் சொல்வது போல தாமரைக்கே இதில் பிரச்னையில்லை என்னும்போது பிரியங்கா இதில் தலையிட முகாந்திரமில்லை. ‘இரண்டு அணிகளும் அவரவர்களின் புரிந்துணர்வுடன் வேலைகளைப் பரிமாறிக் கொள்வது அவர்களின் இஷ்டம். ஆனால் கண்ணெதிரே ஒரு உழைப்புச் சுரண்டல் நடக்கும்போது அதைத் தட்டிக் கேட்காமலும் இருக்க முடியாது. “ஒரு பெண்ணா, இன்னொரு பெண் அனுபவிக்கும் துயரத்தை நான் கேள்வி கேட்பேன்” என்று பிரியங்கா சொல்ல, ‘இது சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயம்’ என்று பாவனி இதில் கூடுதல் ஆவேசத்தை சேர்க்கிறார். இந்த உணர்வு உண்மையானது என்றால் நிச்சயம் பாராட்டப்பட்ட விஷயம்தான். ஆனால் வேறு சிலரை பழிவாங்குவதற்காக தாமரையின் மீது அனுதாப நாடகம் நடத்துகிறார்கள் என்றால் அது அவலமான விஷயம்.

தாமரை
தாமரை

தாமரையும் தனக்கு இணக்கமானவர்களுக்கு மட்டுமே கூடுதல் பணியைச் செய்வார். தனக்குப் பிடிக்காதவர்கள் என்றால் ‘செய்ய மாட்டேன்’ என்று முகத்தில் அடிப்பது போல் சொல்லி விடுவது அவரது பழக்கம். பாவனி ஆளுமையின்போது ‘என்னால் சமைக்க முடியாது’ என்று முரண்டு பிடித்தவர் இதே தாமரைதான். இசையின் ஆளுமையின் போதுகூட “நான் கிச்சன் டீம்லயே கிடையாது. கேட்டதால சமைச்சேன். இனிமே அந்தப் பக்கம் வரமாட்டேன் சாமி” என்றும் சொன்னவர்தான். ஆக, தாமரையும் முழு அப்பாவி கிடையாது. இந்தப் பணியைச் செய்ய வேண்டிய ராஜூ அசந்து தூங்கிவிட்டதால் அந்தப் பணியை தானே மேற்கொண்டார் தாமரை. இந்தப் பணி, பாவனியுடையதாக இருந்தால் இதே அனுதாபத்தை தாமரை நிச்சயம் காட்டியிருக்க மாட்டார்.

இதில் கூடுதல் கோணமும் இருக்கிறது. இமானும் சரி. ராஜூவும் சரி, அந்த வீட்டில் வேலை செய்யாமல் நிறைய டபாய்க்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு ஆரம்பம் முதலே இருக்கிறது. இதைத்தான் பிரியங்கா தொடர்ந்து சுட்டிக் காட்டுகிறார். ஆனால் இதெல்லாம் பிரதானமாக வீட்டின் தலைவர் சுட்டிக் காட்ட வேண்டிய வேலை.

‘இங்க இவ்ளோ அமளி துமளி நடந்திட்டு இருக்கு.. யார்ரா இவன் டம்மியா மிக்சர் சாப்பிட்டுட்டு இருக்கான்’ என்பது மாதிரி “இது தனக்கான ஸ்கெட்ச்’ என்பதைப் புரிந்து கொண்ட ராஜூ, தனது நிதானமான நடையில் வந்து ரகுவரன் வாய்ஸில் ‘தூங்கிட்டேன். தப்புதான்’ என்றார். இதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் இந்தச் சம்பவத்தைப் பற்றி இமானிடமும் ஆதங்கப்பட்டு சொல்லிக் கொண்டிருந்தார். “தாமரை இவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு சொல்றீங்க. ஆனா அவங்களை நீங்களே கழுவி கழுவி ஊத்தியிருக்கீங்களே?!” என்று ராஜூ பிரியங்காவிடம் முன்வைத்த கவுன்ட்டர் சிறப்பு. “நாங்க ஒருத்தரை ஒருத்தர் திட்டிப்போம். முத்தா கொடுத்து அப்புறம் கூடிப்போம். அது தனிப்பட்ட விஷயம். ஆனா இங்க சும்மா உக்காந்து போறதுக்கு நாம வரலை. எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு” என்று திருப்பியடித்தார் பிரியங்கா.

பழைமைவாத மனம் ஊறிய பெண்கள், ஆண்கள் வீட்டுப்பணிகள் செய்வதை பொதுவாக விரும்பமாட்டார்கள்; அனுமதிக்கவும் மாட்டார்கள். “இதெல்லாம் ஆம்பளை செய்யற வேலையா?” என்று பிடுங்கி தானே அந்தச் சுமையை வாங்கிக் கொள்வார்கள். ஆணாதிக்கத்தனத்தை பெண்களே நீர் ஊற்றி வளர்க்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது. பொருளாதார சுதந்திரத்தை பெண்களும் அடைந்து கொண்டு வருவதால், வீட்டுப்பணிகளை ஆண்களும் பகிர்ந்து கொள்ளும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

“எனக்கு பாத்திரம் சுத்தமா இருந்தாதான் பிடிக்கும். மத்தவங்க சரியா கழுவாட்டி மனசு ஒப்பாது. அதுல எப்படி சமைக்கறது?” என்று தாமரை கூறும் காரணம் ஒருவகையில் சரியே. ஆனால் இதுவும் பெண்ணடிமைத்தனத்தின் ஒருவகையான அடையாளமே. சம்பந்தப்பட்ட பணியைச் செய்பவரிடம் இதைச் சுட்டிக்காட்டி ‘ஒழுங்காக கழுவிக்கொடுங்கள்’ என்று சொல்வதுதான் சரியான முறை. மாறாக அதையும் தன் தலையிலேயே சுமப்பது அடிமைத்தனத்தின் அடையாளம்.

பிரியங்காவுடன் அபிஷேக் மீண்டும் வந்து இணைந்து கொண்டதால் அங்கு இருக்கப் பிடிக்காமல் இமான் – ராஜூ கூட்டணியில் வந்து இணைய முயல்கிறார் நிரூப். எனவேதான் பாத்திரம் விளக்கும் சம்பவத்தில் ராஜூவைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை அவருக்கு. ராஜூவிற்கு ஆதரவாகப் பேசி பிரியங்காவின் எரிச்சலை சம்பாதித்துக் கொள்கிறார். நிரூப்பிற்கு ‘திரிசங்கு சொர்க்கம்’ மாதிரியான நிலைமை. இரண்டு கூட்டணிகளிலும் அவரை நம்பாமல் துரத்தியடிக்கிறார்கள்.

ராஜூ
ராஜூ
ராஜூவை விடவும் ‘சஞ்சீவ்’ காரியக்கார கல்லுளிமங்கன் என்பதை இந்தச் சமயத்தில் நிரூபித்தார். "சஞ்சீவ் அண்ணா. நீங்க என்ன வேலை பண்ணீங்க?” என்று பிரியங்கா கேட்ட போது ‘சைலன்ஸ்’ என்று முன்னர் உரக்க கத்திய ஆசாமி, இப்போது அமைதியாக இருந்து பிரச்னையில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிவிட்டார்.

ஆனால் ராஜூவை ஒரு விஷயத்தில் பாராட்ட வேண்டும். Anger Management என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். ``எனக்கு நிறைய கோபம் வரும். ஆனா அது மேல முகமூடி போட்டுக்கிட்டு இருக்கேன்” என்று முன்னர் வாக்குமூலம் தந்தவர்தான். ஆனால் சிக்கலான சூழலிலும்கூட தன் நிதானத்தைக் கைவிடாத அந்த உடல்மொழி சிறப்பு. இதை அவர் உள்ளார்ந்த புரிதலுடன் செய்கிறாரா, அல்லது உள்ளுக்குள் இருக்கும் கொதிப்பை வலுக்கட்டாயமாக புதைத்துக் கொள்கிறாரா என்பதில்தான் விஷயம் இருக்கிறது. முன்னதாக இருந்தால் சிறப்பு. பின்னதாக இருந்தால் ஆபத்து. என்றாவது ஒருநாள் அது பயங்கரமாக வெடித்து விடும். மனஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் விஷயம் இது. "பக்கா பிளானிங்ல போயிட்டு இருக்கு. நாம அமைதியா இருப்போம்” என்று இமானும் இந்த விஷயத்தை கூலாக கையாள்கிறார். “எப்படியும் நிரூப்பை வீட்டை விட்டு துரத்திடுவாங்க” என்று பொருமுகிறார் தாமரை.

பிரியங்கா – நிரூப் விவகாரம் இப்போது இன்னொரு பரிமாணத்தை எட்டுகிறது. டிவி டாஸ்க்கின்போது தன்னை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட கேலிகள் குறித்து கடுமையான ஆட்சேபத்தை நிரூப் இப்போது முன்வைக்க, சண்டை இன்னமும் உக்கிரமாகிறது. “உன்னைக் கேட்டுக்கிட்டுதானே எல்லாத்தையும் பண்ணோம்” என்று ஆவேசமாகிறார் பிரியங்கா.

சற்று பிளாஷ்பேக்கிற்குச் செல்வோம். "என்னைப் பார்த்து பயந்திட்டியா?” என்று இமான் நிரூப்பை கேட்ட விஷயத்தை டாஸ்க்கில் சேர்க்கலாம் என்று பிரியங்காவும் அபிஷேக்கும் திட்டமிடுகிறார்கள். எனவே இதைப் பற்றிய ஒத்திகையை மேற்கொள்கிறார்கள். ஆனால் சிபிக்கு இது உறுத்தலாக தெரிகிறது. எனவே “நிரூப். இதில் உனக்கு உடன்பாடுதானே? அப்புறம் பிரச்சினையாகி விடக்கூடாது” என்று அப்போதே தீர்க்கதரிசனத்துடன் எச்சரிக்கிறார். நிரூப்பும் மையமாக தன்னுடைய உடன்பாட்டின்மையைக் காட்ட பிரியங்காவிற்கு கோபம் வருகிறது. “காலைல இருந்து இதைத்தான் பண்ணிட்டு இருந்தோம். அப்ப எல்லாம் சும்மாதானே இருந்தே. நீ தனியா விளையாடிக்கோ” என்று கோபமடைந்தார்.

அத்துடன் அந்தக் காட்சி முடிவடைந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட விஷயம் டாஸ்க்கில் இணைக்கப்படுவதற்கு பிறகு நிரூப் ஏன் ஒத்துழைத்தார்? தனக்குப் பிடிக்கவில்லையென்றால் வன்மையாக மறுத்து நீக்கச் சொல்லியிருக்கலாம். ஆக ‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’ என்கிற குழப்பத்தில் நிரூப் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஏதாவது ஒரு அணியில் தன்னை வலுவாக பிணைத்துக் கொள்ளாமல், ஊசலாடுகிறவர்களின் கதி எப்போதும் அதோகதிதான். “குறும்படம் போடுங்க பிக்பாஸ். அத்தோட நான் வீட்டை விட்டுப் போறேன்” என்று ஆவேசமாகிறார் பிரியங்கா. நிரூப்பின் ஒப்புதலுடன்தான் டாஸ்க் மேட்டர் நடந்தது என்பது அவரது தரப்பு.

பிரியங்கா - அபிஷேக்
பிரியங்கா - அபிஷேக்

சீதைக்கு உதவும் அனுமன் பாத்திரம் அபிஷேக்கிற்கு. பிரியங்கா எதிர்கொள்ளும் சச்சரவுகளை அவரால் தாங்க முடியவில்லையாம். இந்த மூவர் கூட்டணி பிக்பாஸ் வீட்டில் நிகழ்த்தும் ‘பிரெண்ட்ஷிப் டிராமா’வை நம்மால் தாங்க முடியவில்லை. இவர்கள் தனித்தனியாக கேம் ஆட வந்தார்களா அல்லது விக்ரமன் படத்தின் பாசக்காட்சிகளை இங்கு நிகழ்த்த வந்தார்களா என்று தெரியவில்லை. “அவளை ஏண்டா கேட்கறே. ஸ்கிரிப்ட் எழுதியது நானு. என்னைக் கேளு” என்று பிரியங்காவிற்கு கேடயமாக வந்து நின்றார் அபிஷேக். நிரூப் மீது பிரியங்கா செலுத்தும் அன்பு, அபிஷேக்கிற்கு எரிச்சலை ஊட்டுகிறது. கிட்டத்தட்ட முக்கோணக் காதல்கதை போல இது. காதல் என்பதற்குப் பதில் சகோதரப்பாசம்.

இந்த விவகாரத்தை வீட்டில் உள்ளவர்கள் அவரவர்களின் அரசியலுக்கு ஏற்ப உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். ராஜூவின் மீதுள்ள புகைச்சலையொட்டி பாவனி இந்தச் சம்பவத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ள, பிரியங்காவின் மீதுள்ள கோபங்களையொட்டி அக்ஷராவும் பயன்படுத்திக் கொள்கிறார்.

விடிந்தது. எதுவுமே நடைபெறாதது போல் “அடிச்சுத் தூக்கு. அடிச்சுத் தூக்கு" எனகிற பாடலைப் போட்டது பிக்பாஸின் அநியாயமான குறும்பு. “அண்ணாச்சி கிட்ட இருந்து என்னைப் பிரிக்கணும்னு பிரியங்கா நினைக்கறா” என்று அமீரிடம் ஆதங்கப்படுகிறார் நிரூப். “பிரியங்கா தன்னோட கேரக்ட்டரை இழந்துட்டு உங்க ரெண்டு பேருக்காத்தான் எப்பவும் சண்டை போடறாங்க” என்று நிலைமையை ‘நச்’சென்று விளக்குகிறார் அமீர். ஆள் பார்க்க சைலண்ட்டாக இருந்தாலும் அமீரின் அவதானிப்புத்தன்மை பல சமயங்களில் துல்லியமாக இருக்கிறது.

‘இன்னமும் சரியாப் பத்தலையே’ என்று நினைக்கும் பிக்பாஸ், இதில் விமான பெட்ரோலை ஊற்ற நினைக்கிறார். லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் ‘Best Peformer’ என்று மூவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் அறிவிப்பு செய்கிறார்... இதில் ராஜூவின் பெயரைத் தவிர்க்கவே முடியாது என்பது வெளிப்படை. அந்த அளவிற்கு அவரது காமெடி வீட்டையே விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. ஆனால் ராஜுவின் பெயரை கவனமாகத் தவிர்த்து விட்டார் பிரியங்கா. ஆனால் ‘Best performer’ ஆக, நடுவராக இருந்த சஞ்சீவ் எப்படி வந்தார் என்று தெரியவில்லை. தனது மதிப்பீட்டை சிறப்பாக செய்த காரணமாக இருக்கும் போல. இறுதியில் ‘ராஜூ, அபிஷேக், பிரியங்கா” ஆகிய மூவரும் ‘சிறந்த பங்கேற்பாளர்களாக’ தேர்ந்தெடுக்கப்பட்டது பொருத்தமே.

நிரூப் - பாவனி
நிரூப் - பாவனி

‘Worst performer’ கேட்டகிரியில் இருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நிரூப்பிற்கும் சிறைக்கும் அப்படியொரு ராசி போல. இந்தத் தேர்வில் ‘நிரூப் மற்றும் பாவனி’ தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். “டாஸ்க்கில் எனக்கு வாய்ப்பே தரப்படவில்லை. அப்புறம் எப்படி என்னைத் தேர்ந்தெடுக்க முடியும்?” என்று பாவனி வாதாடிப் பார்த்தார். ராஜூ, இமானைத் தவிர ப்ளூ சானல் அணியில் உள்ள மற்றவர்களின் கருத்தும் இதுவே. “நீங்க எடுத்துட்டு வந்த ஸ்டோரி சரியில்ல” என்று பாவனியிடம் காரணம் சொன்னார் ராஜூ. ராஜூ சினிமாத்துறையில் உதவி இயக்குநராக இருந்தவர். ஓர் அணியை திறமையாக ஒருங்கிணைத்து அனைவரின் பங்களிப்பையும் சரியான முறையில் திருத்தி அவர் பயன்படுத்தியிருக்க வேண்டும். நினைத்திருந்தால் அவரால் இதைச் செய்திருக்க முடியும். ஆனால் இமான் – ராஜூ கூட்டணிக்கு இதில் விருப்பமில்லையா என்று தெரியவில்லை. இவர்களின் ஆதிக்கம்தான் இருந்தது. எனவே மற்றவர்களின் ஆட்சேபம் நியாயமானதுதான்.

இந்த விஷயத்தில் அக்ஷராவும் தாமரையும் கூட தங்களின் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்தனர். “இது டீமோட தோல்வி. தனிநபர் காரணம் கிடையாது” என்று அமீர் தெரிவித்தது நியாயமான காரணமாக தெரிந்தது. “எனக்கு கான்சப்டே புரியல” என்று முழு பூசணிக்காயை சட்டையில் மறைக்க அண்ணாச்சி முயல, "அப்படின்னா புரிஞ்சவங்க கிட்ட கேட்டிருக்கணும்” என்று சிறப்பாக கவுன்ட்டர் தந்தார் அமீர். “நம்ம டீம்ல ஆளு சரியில்ல” என்று முன்னர் அண்ணாச்சி மறைமுகமாக தன்னை கிண்டல் செய்ததற்கு அமீர் இப்போது சிறப்பாக பழிவாங்கி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

“நான் ஜெயிலுக்குப் போறேன்... ஜெயிலுக்குப் போறேன்" என்று கிளம்பிய பாவனியிடம் “அதுக்கு ஏம்மா இவ்வளவு மேக்கப்?" என்று நிரூப்பும் அபினய்யும் கிண்டலடித்தார்கள். “என் மூஞ்சை நீயும், உன் மூஞ்சை நானும் சகிச்சிக்க வேணாமா” என்று லாஜிக் பேசினார் பாவனி.

‘ஒருநாள் முதல்வர் மாதிரி’ ஒரு நாள் கேப்டனாக அக்ஷராவை நியமித்து விட்டுச் சென்றார் நிரூப். (பிரியங்கா இன்னமும் காண்டாகி இருப்பார்). ‘நாம ஒரு விளையாட்டு விளையாடலாமா? என்று சூழலை இலகுவாக்க முயன்றார் புதிய கேப்டன்.
அமீர் - பாவனி
அமீர் - பாவனி

“இனிமே பழைய நிரூப்பா மாறப் போறேன். பிரியங்கா – அபிஷேக் கேம் எல்லாம் இனி கிடையாது” என்று சிறையில் நிரூப் பாவனியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “நீ ஒரு முட்டாள். நிரூப், அபிஷேக்கிற்காக விளையாடி விளையாடி உன் ஒரிஜினாலிட்டியைக் கெடுத்துக்கறே” என்று அமீர் பிரியங்காவிடம் சுட்டிக் காட்டினார். இந்த இரண்டு உரையாடல்களையும் ஒரே பிரேமில் ஜூம் அவுட் செய்து காட்டிய காட்சி அற்புதம். “அவங்க ரெண்டு பேரும் நல்லவங்க” என்று பழைய புராணத்தையே பாடிக் கொண்டிருந்தார் பிரியங்கா. “ராஜூ உன் மேல எவ்ளோ லவ் வெச்சிருக்கான் தெரியுமா?’ என்கிற குபீர் தகவலை இந்தச் சமயத்தில் வெளியிட்டார் அமீர்.

லக்ஸரி பட்ஜெட் பொருள்களை புதுமையான முறையில் விநியோகிக்க திட்டமிட்டார் பிக்பாஸ். அதன்படி இரண்டு அணியின் உறுப்பினர்களும் திரையின் நடுவே வந்து அமர வேண்டும். இரண்டு பொருட்களை பிக்பாஸ் சொல்வார். இரண்டு நபர்களும் ஒரே பொருளைத் தேர்ந்தெடுத்தால்தான் அது தரப்படும். மற்றவர்களின் உணவு ரசனைகளை போட்டியாளர்கள் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார்கள் என்கிற விஷயம் இதில் வெளிப்படும்.

‘ஊறுகாய்’ அண்ணாச்சிக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை வருண் அறிந்திருந்ததால் ஊறுகாய் கிடைத்தது. ‘தோசை – பாஸ்தா’ என்கிற தேர்வு வரும் போது நிரூப்பும் இமானும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் நோக்கில் பொருட்களை இழந்தனர். நிரூப்பும் பாவனியும் மீண்டும் சிறையில் அடைக்கப்படவேண்டிய அறிவிப்புடன் நிகழ்ச்சி முடிந்தது.

‘அது எந்தவொரு நெருக்கமான உறவாக இருந்தாலும், தாமரை இலை நீர் போல் கையாள்வதுதான் நல்லது’ என்கிற பாடத்தை நேற்றைய எபிசோடின் ஹைவோல்டேஜ் டிராமா நமக்கு கற்றுத்தந்தது எனலாம்.