Published:Updated:

பிக் பாஸ் 49: அபிஷேக் 2.0; காயினை பயன்படுத்தத் தவறினார்களா போட்டியாளர்கள்?!

பிரியங்கா

தான் வைத்திருந்த நாணயத்தை பிக்பாஸிற்கு கூட காட்டாமல் அதுவரை ரகசியமாக வைத்திருந்த பாவனி, இப்போதோ அதை எடுத்து அபிஷேக்கிற்கு தாரை வார்க்க முடிவு செய்து விட்டார்.

பிக் பாஸ் 49: அபிஷேக் 2.0; காயினை பயன்படுத்தத் தவறினார்களா போட்டியாளர்கள்?!

தான் வைத்திருந்த நாணயத்தை பிக்பாஸிற்கு கூட காட்டாமல் அதுவரை ரகசியமாக வைத்திருந்த பாவனி, இப்போதோ அதை எடுத்து அபிஷேக்கிற்கு தாரை வார்க்க முடிவு செய்து விட்டார்.

Published:Updated:
பிரியங்கா

“சீசன் 5 ஆரம்பிச்சு ஐம்பது நாளாகப் போகுது. இன்னமும் கூட பந்தை உருட்டிட்டே இருக்கீங்க. பவுண்டரியும் சிக்சருமா அடிச்சு விளாச வேண்டாமா?’” என்று சூசகமாக கூட அல்லாமல் நேரடியான குறிப்பை நேற்று தந்திருக்கிறார் கமல்ஹாசன். “பாம் போட வேண்டிய நேரத்துல போய் பாசமலர் பாட்டை பாடிட்டு இருக்கலாமா?” என்பது அவரது கேள்வி. “டாஸ்க் நேரத்துலயாவது உங்க சீரியல் நடிப்பை தூக்கி எறிஞ்சிட்டு அதிரடி ஆக்ஷனை காட்டுங்க. நிரூப்பை பாருங்க. எப்படி பின்னியெடுக்கிறார்” என்று போட்டியாளர்களை உசுப்பியிருக்கிறார்.

“ஐம்பது நாளாகியும் நிகழ்ச்சி பிக்கப் ஆகலை. பார்த்து பண்ணுங்க சார்.. நல்லா அடிச்சு கேளுங்க சார்” என்று ‘உள்ளே’ சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. “கண்ணியம் வேண்டும், கடமை வேண்டும்” என்றெல்லாம் இதுவரை உபதேசம் செய்து கொண்டிருந்த கமல், “டாஸ்க் நேரத்துல கட்டுப்பாடுல்லாம் கிடையாது. இறங்கி அடிச்சு விளையாடுங்க” என்று சிக்னல் தந்திருக்கிறார்.

``அப்போ புரியல. இப்போ புரிஞ்சிடுச்சு” என்கிற டயலாக் மாதிரி “இதுவரைக்கும் எனக்குப் புரியலை. இப்ப புரிஞ்சிடுச்சு. இனிமேதான் இந்த காளியோட ஆட்டத்தை பார்க்கப் போறீங்க” என்று முடிவு செய்து கொண்டிருக்கிறார் இசை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்தான் இந்த வாரம் எலிமினேட் ஆகிறாராமே?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

எபிசோட் 49-ல் என்ன நடந்தது?

“பாதி வழி கடந்துட்டோம். மீதி வழி எப்படி இருக்கும்னு எனக்கும் தெரியலை. உங்களுக்கும் தெரியல. சீசன் 6 வரைக்கும் தாங்குவாங்கன்னு நெனச்சவங்க எல்லாம் எப்பவோ காணாமப் போயிட்டாங்க. ‘அடப்பாவமே.’ என்று நாம் அனுதாபப்பட்டவங்க எல்லாம் ‘அடப்பாவிகளாக’ மாறி இன்னமும் உள்ளே இருந்து ஆச்சரியப்படுத்தறாங்க. அவங்க கேம் ஆடறது இருக்கட்டும். மக்களாகிய நீங்க ஆடற ஆட்டம் எனக்கே கலவரமாக இருக்குது. அந்த அளவிற்கு டிவிஸ்ட் தர்றீங்க” என்று பார்வையாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “போட்டியாளர்களைப் பற்றிய உங்கள் கணிப்பு என்ன”? என்று கேட்டபோது ஒவ்வொருவராக சொல்ல ஆரம்பித்தார்கள்.

“நான் உங்க பரம ரசிகன் சார்” என்கிற வாக்கியம் இல்லாமல் கேள்வி கேட்க அங்கு அனுமதியில்லைபோல. சொல்லி வைத்தது மாதிரி இதனுடன்தான் பலரும் ஆரம்பித்தார்கள். “ராஜு, பிரியங்கா…ல்லாம் வலிமையான போட்டியாளர்களா தெரியுது. இப்ப வருணும் இதில் சேர ஆரம்பிச்சிருக்கார்” என்றார் ஒருவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேள்வி கேட்டவர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேள்வி கேட்டவர்.

``நேத்தி வரைக்கும் கூட ராஜூ எனக்குப் பிடிச்ச நபரா இருந்தார். ஆனா தான் சாப்பிட்ட பாத்திரத்தைக்கூட கழுவி வைக்காம அடம்பிடிச்ச அப்புறம் அது மாறிடுச்சு. பல வீடுகளில் இப்படி நடக்குது. அவர் இப்படி செய்யறது சமூகத்தில் இன்னமும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார் ஒரு பெண். நான் நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்டதும் இதைத்தான். சமைப்பதைவிடவும் பாத்திரம் கழுவும் வேலை இம்சையானது என்பதை அனுபவஸ்தர்கள் உணர்வார்கள். இந்தச் சூழலில், தான் சாப்பிட்ட காஃபி கிளாஸைகூட அப்படியே ஒருவர் ஈ மொய்க்க விட்டால், குடும்பத் தலைவிகளுக்கு வரும் கோபம் சொல்லில் அடங்காதது.

“கழுவாத பாத்திரத்தோடு சேர்ந்து நீங்களும் பாத்திரமா மாறிட்டீங்க.. அதான் உங்களுக்கு இப்படி கோபம் வருது. மகிழ்ச்சி. ஆனா இந்த நிகழ்ச்சில இருந்து தவறுகளை பின்பற்றுவதை விடவும் அவற்றை நாம செய்யாம திருத்திக் கொள்வதுதான் நல்லது. அப்படித்தான் இதை பார்க்கணும்” என்று உபதேசித்தார் கமல்.

“சிபி, ராஜூ, வருண்-ன்னு ஆம்பளைப் பசங்கள்லாம் தெளிவா ஆடறாங்க. பொண்ணுங்கதான் எமோஷனலா ஆகி சொதப்பிடறாங்க” என்றார் ஒரு பெண்மணி. பெண்கள் தோற்றுப்போவது போல் தெரிவது ஒரு காட்சிப்பிழைதான். உண்மையில் ஜெயிப்பவர்கள் அவர்களே. இதுதான் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம்; பகுத்தறிவு; பயனுள்ள அரசியல் தத்துவம். “எனக்கு தாமரையக்கா பிடிக்கும். பொடிமாஸ் மாதிரி உள்ள போய் இப்ப அவங்களே பிக்பாஸா மாறிட்டாங்க” என்று புளகாங்கிதமடைந்தார் ஓர் இளைஞர்.

‘சென்றவர் திரும்பினார்’ என்று அபிஷேக்கைப் பற்றி குறிப்பிட்டு விட்டு ‘வாங்க… வெள்ளிக்கிழமை என்ன நடந்ததுன்னு பார்க்கலாம்’ என்று அழைத்துச் சென்றார் கமல். ஓர் அழையா விருந்தாளி, பத்து நாள் டேரா போட முடிவு செய்து விட்டாலும், வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு காஃபி போடச் செல்லும் இல்லத்தரசி போல, அபிஷேக்கின் மீள்வரவு அதிர்ச்சி ஏற்படுத்தினாலும் மகிழ்ச்சியடைவது போல் பலர் நடித்துக் கொண்டிருந்தார்கள்.

“இப்பத்தான் ஆட்டமே ஆரம்பிச்சிருக்கு” என்று அபிஷேக் ரீஎன்ட்ரி தொடர்பாக பன்ச் டயலாக் பேசிக் கொண்டிருந்தார் பாவனி. ‘நான் இறங்கி ஆடினா.. ஒரு பய இங்க இருக்க முடியாது’ ன்னு சொடக்கு போட்டு சொன்னவரை அடுத்த வாரமே மக்கள் அனுப்பிச்சிட்டாங்க. இன்னமும் ஏம்மா அபிஷேக்கை உசுப்பி விடறீங்க என்றுதான் பாவனியிடம் சொல்லத் தோன்றியது. “நேத்து நைட்டுதான் சண்டை போட்டு க்ளோஸ் ஆனோம். அதுக்குள்ள குறுக்க வந்திட்டியடா?” என்று ராஜூ சர்காஸ்டிக்காக அபிஷேக்கிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அக்ஷரா பிரியாணியை எடுத்து வருதல்
அக்ஷரா பிரியாணியை எடுத்து வருதல்

விடிந்தது. ‘கருத்தவன் கலீஜாம்’ பாடலை அலற விட்டார் பிக்பாஸ். “நடனம் ஆடாத சோம்பேறிகள்” என்று பிக்பாஸ் பங்கம் செய்திருந்தாலும் கூட நிரூப்பும் சிபியும் அப்படியேதான் நின்று கொண்டிருந்தார்கள். “மீண்டும் வாய்ப்பு தந்ததற்கு தமிழக மக்களுக்கு நன்றி” என்று சொல்லிக் கொண்டிருந்தார் அபிஷேக் (எதே?!)

“திரும்பிப் போய் வந்தாலும் நீ எங்களுக்கு நியூ ஸ்டூடண்ட்தான். ராக்கிங் பண்ணாம விட மாட்டோம்” என்று முடிவு செய்த அக்ஷரா, மூடி வெச்சு மூன்று நாட்கள் கழித்து திறக்கிற பிரியாணி’யையெல்லாம் பிரிட்ஜில் எடுத்து வந்தார். “பாருங்க. இப்படில்லாம் இங்க உணவு வீணாகுது” என்று நல்லெண்ண அடிப்படையில் அவர் புகார் செய்கிறார் போல என்றுதான் முதலில் தோன்றியது. இல்லையாம். அவற்றையெல்லாம் கலந்து கட்டி அபிஷேக் தலையில் கொட்டி அவரது ரீஎன்ட்ரியை மக்கள் கொண்டாடினார்கள். ‘நான் பாட்டுக்கு செவனேன்னுதாண்டா வெளியே போனேன். கவுரவம்.. கவுரவம். சொல்லி இப்படிப் பண்ணிட்டிங்களேடா” என்பது அபிஷேக்கின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம்.

அபிஷேக் மேல் பிரியாணியைக் கொட்டுதல்
அபிஷேக் மேல் பிரியாணியைக் கொட்டுதல்

“என்னதிது.. நேத்தி திரும்பி வந்தான். ஆளாளுக்கு சாப்பாடு ஊட்டிக்கறாங்க. என்ன நடக்குதுன்னு புரியலையே.. குழந்தைப் பருவத்துக்கே போயிட்டாங்களா?” என்று அபிஷேக்கிற்கு நடக்கும் விருந்தோம்பலைப் பார்த்து ரகளையாக கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார் இமான். “உண்மையிலேயே சிலருக்கு மகிழ்ச்சி இருக்கலாம். பிரியங்கா மாதிரி” என்று ராஜூ விளக்கம் தர “அவன் போனதுலயும் எனக்கு வருத்தம் கிடையாது. வந்ததுலயும் வருத்தம் கிடையாது” என்று இடது கையால் அலட்சியமாக அபிஷேக்கை ஹாண்டில் செய்தார் அண்ணாச்சி.

அடுத்ததாக ஒரு விளம்பரதாரர் டாஸ்க். ‘ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு உண்மையான ஸ்டேட்மெண்ட் மற்றும் பொய்யான ஸ்டேட்மெண்ட்டை சொல்ல வேண்டும். அவற்றில் எது உண்மை, எது பொய் என்பதை மற்ற போட்டியாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதிக பொய்களை திறமையாக கண்டுபிடிப்பவர் வெற்றியாளர்’ என்பதுதான் அந்தப் போட்டி. இதற்கு அபிஷேக் நடுவர். கசமுசாவென்று நடந்து முடிந்த போட்டியில் ஐக்கி, வருண், தாமரை ஆகிய மூவரும் வென்றார்கள். ஆக.. ‘சுமாரான போட்டியாளர்கள்’ என்று நம்மால் கருதப்படுகிறவர்கள்தான், அங்குள்ள சூழலை திறமையாக கணிக்கிறார்கள்.

இந்தப் போட்டியால் ஒரு சிறிய சர்ச்சை கிளம்பி பிக்பாஸிற்கு சற்று ஃபுட்டேஜ் தேறியது. “எனக்கு பாவனியை பிடிக்கும்” என்று தாமரை சொன்ன ஸ்டேட்மெண்ட் பொய்யாம். (இதைக் கூட உண்மைன்னு சிலர் அங்க நம்பியிருக்காங்க). இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு பாவனி சிலம்பம் ஆடத் துவங்கினார். “என்னைப் பிடிக்காதுன்னா. என் கிட்ட ஏன் பேசணும். பழகணும்..? அக்ஷரா கிட்ட கூட நான் பேச டிரை பண்ணேன். அவங்க மறுத்துட்டாங்க. நான் இப்ப பேசறதில்லை. பிடிக்காதவங்க கிட்ட பேசக்கூடாது.. அதான் என் பாலிசி” என்று வியாக்கியானம் சொன்ன பாவனி “நல்லா கேம் ஆடறீங்க தாமரை” என்று கிண்டலடிக்க “ஒரு வீட்ல இருக்கறவங்க கிட்ட எப்படி பேசாமயே இருக்க முடியும்? அவங்க வந்து பேசினா பதிலுக்கு பேசித்தானே ஆகணும்?” என்பது தாமரையின் தரப்பு வாதம். இது அவரவர்களின் பார்வை; தேர்வு. ஆனால் இதை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் ஜல்லியடித்தார்கள்.

தான் வைத்திருந்த நாணயத்தை பிக்பாஸிற்கு கூட காட்டாமல் அதுவரை ரகசியமாக வைத்திருந்த பாவனி, இப்போதோ அதை எடுத்து அபிஷேக்கிற்கு தாரை வார்க்க முடிவு செய்து விட்டார். இந்த வாரம் ஒருவேளை தான் வெளியேறினால் அது அபிஷேக்கிற்கு பயன்படட்டும் என்பது அம்மணியின் தீர்மானம். (இதன் மூலம் சக போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் ஒருசேர பழிவாங்கலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!).

டாஸ்க்
டாஸ்க்

“இந்த நாணயத்தை வெச்சுல்லாம் என்னைக் காப்பாத்திக்க எனக்கு விருப்பம் கிடையாது. அது எனக்கே அசிங்கம். என் கேரக்ட்டரே வேற. புரிஞ்சுக்கங்க.. ப்ளீஸ்” என்று கடந்த எலிமினேஷனின் போது கதறிய அபிஷேக், இப்போது அந்த நாணயத்தை அரைமனதாக வாங்கி “என்னமோ. சொல்ற.. வாங்கிக்கறேன்” என்று வைத்துக் கொண்டார். அதை விடவும் மனதில்லை. பெறவும் மனதில்லை. கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை.

தனது ஆப்த தோழியான பிரியங்காவிடம் இதுகுறித்து அவர் ஆலோசனை கேட்க “இப்படியொரு உதவியாலதான் நீ இங்க இருக்கணும்னா அது தேவையில்லாத ஆணி. மக்கள் திரும்பவும் வெளியே அனுப்பிச்சா. கிளம்பு” என்று நல்லதொரு அட்வைஸை பிரியங்கா தர “ஆமாமாம்.. என்னை நம்பித்தான் நான் இங்க வந்திருக்கேன்” என்று அபிஷேக்கின் ஈகோ எழுந்து கொள்ள, பாவனியிடம் நாணயத்தை திருப்பித் தந்தார். (இதுக்கு பருத்திக்கொட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்).

பாவ்னி மற்றும் அபிஷேக்
பாவ்னி மற்றும் அபிஷேக்

கமல் என்ட்ரி. “வாங்க அபிஷேக்” என்று அவரை அரைமனதாக வரவேற்றார் கமல். “இப்பவாவது வெளியே போய் பிக்பாஸ் பார்த்தீங்களா.. இல்லன்னா. இப்பவும் ப்ரமோ மட்டும்தான் பார்த்தீங்களா?” என்று கேட்டிருக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக ‘அபிஷேக் ரீஎன்ட்ரியின்’ போது அண்ணாச்சியின் கண்களில் தெரிந்த பீதியை ‘குறும்பு படமாக’ போட்டுக்காட்டினார். சீசன் 5-ல் கமல் காட்டிய முதல் குறும்படம், இப்படியா சுமாராக இருக்க வேண்டும்?! ஓவியா – ஜூலி எபிசோடு மாதிரி அதிரடியாக இருந்திருக்க வேண்டாமா? அண்ணாச்சி கலவரத்தோடு ஓடியதைப் பார்த்து மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். “அஞ்சு செகண்ட்ல என்ன என்னமோ மனசுல ஓடிச்சு. திரும்பவும் வண்ட்டானேனு தோணிச்சு” என்று சபையிலும் வெளிப்படையாகவே அபிஷேக்கின் காலை இமான் வாரியது சுவாரஸ்யம்.

தாமரை
தாமரை

“எங்கு பார்த்தாலும் தாமரை. எதில் பார்த்தாலும் தாமரை. எப்படி இந்த மேஜிக் நடந்துச்சு.. ‘இதெல்லாம் ஒரு நட்பா?’ன்னு பிரியங்காவைப் பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்டீங்களே. எப்படி?,” என்று அடுத்த தூண்டிலை தாமரையின் பக்கம் வீசினார் கமல். இதற்கு பிரியங்கா ரியாக்ட் ஆவார் என்பது அவருக்கு நன்கு தெரியும். “வெளி வாழ்க்கையில் எனக்கு நண்பர்களே கிடையாது சார். உண்மையான நட்புன்னா எதை வேணா விட்டுத் தரலாம். ஆனா இங்க பார்த்தா ஒரு பக்கம் ஃபிரெண்ட்ஸ்ங்கறாங்க. இன்னொரு பக்கம் அடிச்சுக்கறாங்க. அதான் கோபம் வந்து கேட்டுட்டேன்” என்று தாமரை விளக்கம் தர “அது Show-க்காக செஞ்சது” என்று பிரியங்கா பதில் சொல்ல “அவங்களும் அதேதான் சொல்றாங்க. ஷோக்கா பண்ணீங்களேன்னு” என்று கமல் சிலேடையில் விளையாட “இதெல்லாம் ஒரு ஜோக்குன்னு தூக்கிட்டு வந்துட்டீங்களா? இதுக்கு பழைய ஜோக் தங்கதுரையே பரவாயில்ல” என்கிற முகபாவத்துடன் நின்றார் பிரியங்கா.

“கயிறு இழுக்கும் போட்டின்னா. இரண்டு பக்கமும் ஸ்டிராங்கா இழுக்கணும். அதான் போட்டி. கயிறைக் கொண்டு போய் சகல மரியாதையோட எதிர் டீம்ல கொண்டு போய் ஒப்படைச்சா.. அது போட்டியா?” என்று கமல் தெளிவாக கோனார் நோட்ஸ் எடுத்தாலும் “புரியலை சார்” என்று வெள்ளந்தியான முகபாவத்துடன் பிரியங்கா சொல்ல “இதுவும் ஒரு ஸ்ட்ராட்டஜியா?” என்று கிண்டலடித்தார் கமல்.

“நான் பிரியங்காவோட பிம்பமா இருந்தா பட்டையைக் கிளப்பியிருப்பேன்” என்று வம்படியாக வந்து தாமரை மாட்டிக் கொண்டதும் “எங்க கிளப்புங்க பார்க்கலாம்” என்று கமல் உடனே க்ரீன் சிக்கல் தந்ததும் “திடீர்னு கேட்டா எப்படிங்க சார்.. யோசிக்க வேண்டாமா..?” என்று ரிவர்ஸ் கியர் போட்டார் தாமரை. “சரி. யோசிச்சு வையுங்க. இதோ வர்ரேன்” என்று கிளம்பிய கமல், திரும்பி வந்து “தாமரை..ரெடியா?” என்றார். திண்டுக்கல் கண்ணாடியை மறுபடியும் துடைத்த தாமரை “பார்த்து சூதானமா இரு. எல்லோரையும் ஈஸியா நம்பிடாத. இந்த உலகத்துலயே ஒரு ஆளை நீ நம்பலாம்னா. அது தாமரை மட்டும்தான்.. நீ அன்பு காட்டற அத்தனை பேரும் உன் கிட்ட காட்டறது கிடையாது. நீ காட்டற அன்பு கூட ஒரிஜினலா –ன்னு எனக்கு டவுட் வருது. நீ சரியான வில்லி.. அப்புறம் மறந்துட்டேன் சார்” என்று கமலைப் பார்த்து தாமரை மறுபடியும் சிணுங்கினார்.

பிரியங்கா, தாமரை
பிரியங்கா, தாமரை

“ஓகே. பிரியங்கா. இப்ப உங்க டர்ன். நீங்களாவது சிறப்பா பண்ணுங்க.. அதுதான் தாமரைக்கு தண்டனை” என்று கமல் எடுத்துக் கொடுக்க, போன சீசனில் இருந்து ஆரம்பித்து எதை எதையோ சொல்லி “உனக்குத் தெரியுமா. அப்ப உனக்கு அஞ்சு வயசு இருக்கும்.. குச்சி ஐஸ் வேணுமின்னு கேட்டு அடம்பிடிப்ப. அப்ப அண்ணன் கிட்ட காசு இருக்காது” என்கிற ரேஞ்சுக்கு அரை மணி நேரத்திற்கு கேப் விடாமல் சென்டியாக பிரியங்கா பேச, அவரை இடைமறித்த கமல் “என்னம்மா. ஆதித்யா சானல் வெக்கச் சொன்னா.. முரசு டிவியை போட்டு பழைய படம் காண்பிக்கறீங்க. காமெடி காட்சின்னா சிரிக்க வெக்கணும். டாஸ்க்குன்னா அழ வெக்கணும். பேட்ஜை இப்படியா பிடுங்க முடியும்?” என்று கமல் மறுபடியும் கிண்டலடிக்க “தெளிவா சொல்லுங்க சார்” என்று கமலையே பங்கம் செய்தார் பிரியங்கா. (கமல் டிவிட்களை பத்தியும் அப்படித்தான் மக்கள் ரொம்ப நாளா பேசிக்கறாங்க… - தெளிவா சொல்லுங்க சார்).

“எப்படி பேசறதுன்னு நிரூப் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கங்க” என்று சூசகமாக சொல்லியபடி கமல் அகன்றார். “செயற்கையா எப்படி சண்டை போடறது. பேட்ஜ் வாங்கறதுக்காக கோபமா பேச முடியுமா?” என்று ‘எனக்கு நடிக்கத் தெரியாதுய்யா’ சிம்புவாக மாறி அப்பாவியாக நின்றார் பிரியங்கா.

விசாரணை இடைவேளையில் “இசை கிட்ட மட்டும் அப்படி திறமையா வசை பாடின. அதே மாதிரி பிரியங்கா கிட்ட பேச முடியாதா?” என்று தாமரையிடம் ராஜூ கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். “இதுக்கு மேலயும் இது புரியலைன்னு சொன்னா. என்னை மாதிரி ஒரு முட்டாள் கிடையாது” என்பதை இசை பலமுறை அந்தச் சமயத்தில் அழுத்திச் சொல்ல “இந்த மாதிரி சாடை பேசினா எனக்குப் பிடிக்காது. எனக்கு எப்ப சண்டை போடணுமோ. அப்பத்தான் போட முடியும். அதுக்கு நான் யோசிக்கணும். தயாராகணும். நீங்க நெனக்கறப்பல்லாம் கேள்வி கேட்க முடியாது” என்று ராஜூவிடம் எரிச்சலானார் தாமரை. “நீங்க தாமரை பத்தியா அப்படி சொன்னீங்க?” என்று பிறகு வருண், இசையிடம் நேரிடையாக விசாரிக்க “இல்லை” என்று மழுப்பி விட்டார் இசை. (ஒத்துக்கறேன். இப்பத்தாம்மா நல்லா கேம் ஆட ஆரம்பிச்சிருக்கீங்க!).

ஓர் இடைவேளைக்குப் பின்னர் திரும்பி வந்த கமல் “நிரூப். உங்க கிளாஸை ஆரம்பியுங்க. பசங்க கத்துக்கட்டும்” என்று எடுத்துக் கொடுக்க “பிரியங்கா செமயா கேம் ஆடறாங்கன்னு எனக்குத் தோணுது. ``எதை பேசினா சண்டை பெரிசாகும்-ன்ற சூட்சுமம் அவளுக்குத் தெரிஞ்சிருக்கு. இதை அவ மறுக்கலாம். ஆனா எனக்கு அப்படித்தான் தோணுது. அன்பைப் பகிர்தல்-ன்ற பிஸ்னஸ் எல்லாம் என் கிட்ட கிடையாது. அதனாலேயே இதெல்லாம் டிராமான்னு தோணுதோ என்னமோ. பிரியங்கா உண்மையாகவே ஜெனிலியாவாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம்” என்று நிரூப் நியுட்ரலாக பேச “இரண்டு விதமாகவும் ஒரு காரெக்ட்டர் இருக்கலாம். அல்லது பிக்பாஸிற்காக இந்த கேமை அவங்க ஆடலாம்” என்று கமல் பொழிப்புரை சொல்ல, இந்தச் சமயத்தில் பிரியங்கா தந்த எக்ஸ்பிரஷன் கவனிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

அடுத்ததாக அபினய் பக்கம் நகர்ந்த கமல் “என்னாச்சு.. பொல பொலன்னு அழுதிட்டீங்க?” என்று ஆரம்பிக்க “இங்க என்னோட முதல் பிரெண்ட் நிரூப்தான். ஆனா அவன் என்னைப் புரிஞ்சுக்கவேயில்லை. Emotionless, Fake-ன்னு அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இடி மாதிரி இருந்துச்சு. ஒருத்தர் அன்பு தந்தா நான் பத்து மடங்கு திருப்பித் தருவேன். ஒருத்தர் கிட்ட அனுசரணையா இருக்கறது எனக்குப் பிடிக்கும்.” (ஆனா அது பெண் போட்டியாளரா இருக்கணும்!) என்று நெகிழ்ந்து விளக்கம் தந்தார் அபினய். “நீங்க இப்படில்லாம் உணர்ச்சி வசப்படக்கூடாதுன்னு மக்கள் நெனக்கறாங்க. அதனாலதான் ஒவ்வொரு முறையும் நீங்க நாமினேட் ஆனாலும் ‘இன்னமும்’ இங்க இருக்கீங்க” என்று அபினய் காப்பாற்றப்பட்டதை மிக சூசகமாக சொன்னார் கமல்.

நிரூப் , அபினய்
நிரூப் , அபினய்

நிரூப்பின் பலத்தைச் சொன்ன கமல், கூடவே அவரது பலவீனத்தையும் சுட்டிக் காட்டியது சிறப்பு. “நிரூப் மத்தவங்களை காண்டாக்குவாரு. ஆனா அதே விஷயத்தை அவர் கிட்ட யாராவது பண்ணா அவரு காண்டாயிடுவாரு. அழுகை மாதிரி கோபமும் ஒரு வீக்னஸ்தான். நம்ம கஷ்டப்பட்டு சிக்ஸர் அடிச்சு ஒருத்தன் சூப்பரா கேட்ச் பிடிச்சான்னா, அந்தக் கேட்ச்சை நாம பாராட்டணும். அதுதான் உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப். உங்களுக்கு தியாகம் முக்கியம்னா. முடியைக் கொடுத்துடலாமே? என்றெல்லாம் கமல் சொன்ன விளக்கமும் உதாரணமும் உண்மையிலேயே ‘சிக்ஸர்’ ஷாட்.

“என்னாச்சு சிபி.. ஈடுபாடே இல்லாம இருக்கீங்க?” என்று அந்தப் பக்கம் கமல் நகர “தலைவர் பதவிக்கு கெஞ்சறது எனக்குப் பிடிக்கலை” என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுப் போன கெத்தோடு சிபி சொல்ல, “மக்களிடம் பிரச்சாரம் செய்வது கெஞ்சுதல் அல்ல. அது உரிமையா கேட்கறது. நான் அப்படி அதட்டியே கேட்டிருக்கேன். தப்பு செய்யறவன்தான் கூழைக்கும்பிடு போடுவான்” என்றெல்லாம் சிபி பிரச்சினையோடு சேர்த்து பாலிட்டிக்ஸ் ‘கபி கபி’ பாடினார் கமல். “சரி.. சரி.. புரியது.. இதுக்கு மேலயும் புரியலைன்னு சொல்ல நான் முட்டாள் இல்ல” என்பது போல் அவசரம் அவசரமாக கமல் சொன்னதை ஒப்புக் கொண்டார் சிபி.

சிபி
சிபி

“காயின் வெச்சிருந்தும் நாமினேட் சமயத்துல ஏன் உபயோகிக்கலை?” என்று அடுத்த விசாரணையை ஆரம்பித்தார் கமல். “மக்கள் காப்பாத்திடுவாங்கன்னு நம்பிக்கையிருக்கு” என்று நிரூப் கெத்தாக சொல்ல “மக்கள் மேல நம்பிக்கையிருக்கு. போன முறையே காயின் யூஸ் பண்றதுல குழம்பிட்டேன். அதான் யோசிச்சு உபயோகிக்கலாம்னு வெச்சிருக்கேன்” என்று விளக்கம் அளித்தார் இசை. (இனிமே அதுக்கு அவசியமில்லை).

“கடைசி ரெண்டு வாரத்துல தேவைப்படும்னு வெச்சிருக்கேன்” என்று ஓவர் நம்பிக்கையாக பாவனி சொல்ல “ஓ.. அவ்ள நாளு இருப்பம்னு நம்பிக்கை இருக்கா?.. ஓகே அந்த நம்பிக்கைதான் உங்களைக் காப்பாத்தியிருக்கு போல” என்று பாவனி காப்பாற்றப்பட்டதை நேரடியாக சொன்ன கமல் “மத்தவங்க கதையை நாளைக்கு பார்க்கலாம்" என்று விடைபெற்றார்.

“நம்ம கேரக்ட்டரை இங்க எப்பவும் காட்டத் தேவையில்லை. டாஸ்க் நேரத்துல இறங்கி விளையாடணும். இனிமே கமல்சார் சொல்ற மாதிரி வெச்சிக்க மாட்டேன்” என்று நம்பிக்கையாக பேசிக் கொண்டிருந்தார் இசை. (பாவம்!). “உன் மேல இருக்கற உண்மையான அக்கறையில்தான் சொன்னேன்” என்று பிரியங்காவிடம் தன்னிலை விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் தாமரை.

பிரியங்கா , அபிஷேக்
பிரியங்கா , அபிஷேக்

“நான் எதுவும் பேசறதா இல்லை” என்று முதலில் சொல்லிக் கொண்டிருந்த அபிஷேக், பிறகு பிரியங்காவை தனியாக ஓரங்கட்டி, “நிரூப் என்ன சொன்னான் பார்த்தியா.. ‘ஒரு பிரச்சினை வந்தா வீடு முழுக்க தெரியறா மாதிரி பிரியங்கா ஊதி பிரச்சினையாக்குவா’ன்னு சொன்னான்.. உன்னைக் குத்திதான் அவன் கேம் ஆடுவான். அதுதான் அவனோட பேட்டர்ன். ஆனா அவன் உன் மேல வெச்சிருக்கிற அன்பு வேற” என்று மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார். இதை மலங்க மலங்க விழித்தபடி குரு உபதேசமாக கேட்டுக் கொண்டிருந்தார் பிரியங்கா.

ஆக. அபிஷேக் 2.O வெற்றிகரமான ஆரம்பம்.