Published:Updated:

பிக் பாஸ் - 63: ரீ-என்ட்ரி கொடுத்த கமல்; தப்பித்த ராஜூ; பிரியங்கா நோக்கிப் பாய்ந்த குற்றச்சாட்டுகள்!

பிக் பாஸ் - பிரியங்கா

நிரூப் - பிரியங்கா –அபிஷேக், ராஜூ - இமான், தாமரை, அக்ஷரா – வருண், என்கிற கூட்டணிகளை காண முடிகிறது. சிபி, பாவனி, அபினய் போன்றோர்கள் நிலைமைக்கு ஏற்ப அடித்துச் செல்லப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

பிக் பாஸ் - 63: ரீ-என்ட்ரி கொடுத்த கமல்; தப்பித்த ராஜூ; பிரியங்கா நோக்கிப் பாய்ந்த குற்றச்சாட்டுகள்!

நிரூப் - பிரியங்கா –அபிஷேக், ராஜூ - இமான், தாமரை, அக்ஷரா – வருண், என்கிற கூட்டணிகளை காண முடிகிறது. சிபி, பாவனி, அபினய் போன்றோர்கள் நிலைமைக்கு ஏற்ப அடித்துச் செல்லப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

Published:Updated:
பிக் பாஸ் - பிரியங்கா

சிகிச்சை முடிந்து கமல் நலமுடன் திரும்பியது குறித்து மகிழ்ச்சி. அதிலும் இத்தனை விரைவில் அவர் திரும்பியது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ‘கடமை தவறியவன் என்கிற அவப்பெயரை நான் எப்போதும் பெற்றதில்லை’ என்பதை நிரூபித்து விட்டார். தன்னால் இயன்ற பங்களிப்பை ரம்யா கிருஷ்ணன் தந்திருந்தாலும், ‘கமல் அளவிற்கு இல்லையேப்பா’ என்று அவர் இல்லாத குறையை பலரும் உணர்ந்தார்கள்.

‘பிக்பாஸ் நிகழ்ச்சியை, கமலைத் தவிர வேறு யாராவது தொகுத்தால் நன்றாக இருக்குமோ?’ என்கிற உரையாடல்களும் கேள்விகளும் மாற்றுப் பரிந்துரைகளுக்கான பெயர்களும் முன்னர் நிகழ்ந்திருக்கின்றன. இனி அவ்வாறான கேள்விகள் எழ முடியாத அளவிற்கான நிலைமையை இந்த ஒரு வார வெற்றிடம் ஏற்படுத்தி விட்டது எனலாம். கமலையும் பிக்பாஸையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. அப்படியொரு கனகச்சித பொருத்தம். (என்னை மாதிரியே.. ஹிஹி…).

‘உங்கள் அன்பினால்.. மீண்டும் உங்கள் நான்’ என்று நெகிழ்ந்த கமல், மருத்துவ சிகிச்சையின்போது ஒரு பார்வையாளனாக விலகி நின்று பிக்பாஸ் பார்த்த அனுபவத்தை விவரித்தார். ‘கடந்த சீசன்களோடு ஒப்பிடும் போது இந்த சீசனில் அணியாக விளையாடுவது குறைந்திருக்கிறது. தனித்தனியாக ஆட ஆரம்பித்திருக்கிறார்கள்’ என்று பாராட்டிய கமலின் அந்த அவதானிப்பு சரியானதுதானா?. அது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும் இந்த சீசனிலும் குருப்பிஸம் நீடிக்கத்தான் செய்கிறது. நிரூப் - பிரியங்கா –அபிஷேக், ராஜூ - இமான், தாமரை, அக்ஷரா – வருண், என்கிற கூட்டணிகளை காண முடிகிறது. சிபி, பாவனி, அபினய் போன்றோர்கள் நிலைமைக்கு ஏற்ப அடித்துச் செல்லப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

பிக்பாஸ் கமல்
பிக்பாஸ் கமல்

எந்தவொரு மனிதக்கூட்டத்திலும் நட்பு, உறவு, பாசம் போன்றவை ஏற்படுவது தவிர்க்க முடியாத விஷயம். ஆனால் அது ஆட்டத்தில் பாரபட்சமாக, வன்மமாக வெளிப்படுகிறதா என்பதுதான் முக்கியம். “எனக்கு ஒண்ணு புரியலை சார், டாஸ்க்கின்போது நாங்க சண்டை போடறோம். மத்த சமயங்கள்ல ஒண்ணா இருக்கோம். இதுல என்ன தப்பு? ஆளாளுக்கு தனியா ரோபா மாதிரி நிக்கணுமா?” என்கிற ஆதாரமான சந்தேகத்தை பிரியங்கா நேற்றைய எபிசோடில் எழுப்பினார்.

பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்கள் வெறும் டாஸ்க்குகள் மட்டுமல்ல. ஒரு கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் நிகழும் ஆட்டத்தை மட்டுமே நாம் பார்க்கிறோம். மற்றபடி டிரெஸ்ஸிங் ரூமில் ஆட்டக்காரர்கள் என்ன பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் பிக்பாஸில் போட்டியாளர்களுக்குள் நிகழும் உறவுகளும், அவர்களின் ஆசாபாசங்களும் தொடர்ந்து கவனிக்கப்படுகின்றன. அதுவுமே ஒரு போட்டியாளர்களின் இருப்பிற்கும் வெளியேற்றத்திற்கும் காரணமாக இருக்கிறது. நீண்ட வருட ஊடக அனுபவம் இருக்கும் பிரியங்கா, இதெல்லாம் தெரியாதது போல் இருக்கிறாரா, அல்லது நடிக்கிறாரா என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

எபிசோட் 63-ல் என்ன நடந்தது?

வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்

“இந்த வாரம் யார் வெளியே போவா” என்கிற உரையாடலில் “நானா?” என்று பாவனியிடம் அபிஷேக் கேட்டதற்கு “இருக்காது” என்று பாவனி மறுத்தார். ஆனால் அபிஷேக் கேட்ட அந்த நேரம் கொழுத்த ராகுகாலமாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் அபிஷேக் மீண்டும் வெளியேற்றப்பட்டார் என்கிற தகவல் கசிந்திருக்கிறது.

பிரியங்கா தான் ஒரு வளர்ந்த குழந்தை என்பதை பல சமயங்களில் நிரூபிக்கிறார். 'Chris Mom-Chris Child’ விளையாட்டில் சக போட்டியாளருக்குத் தெரியாமல் ஒரு பரிசை ஒளித்து வைக்க வேண்டும். இதில் நிரூப்பிற்காக வைக்க வேண்டிய பாதி சாக்லேட்டில் ‘அவன் அந்தளவிற்கு ஒர்த் இல்ல’ என்று பெரும்பாலானவற்றை அழுகையுடன் தின்று முடித்து விட்டு வெறும் கவரை வைத்தது சுவாரஸ்யமான காட்சி. ஆனால் பிறகு ஒரு முழு சாக்லேட்டையே நிரூப்பிற்குத் தந்தார். ‘நான் ஒரு Emotional cum Strong girl’ என்று தன்னைப் பற்றி பிறகு வர்ணித்துக் கொண்டார் பிரியங்கா. உண்மைதான்.

பிரியங்கா
பிரியங்கா

“நீங்களும் பிரியங்காவும் சேர்ந்துட்டீங்களா?” என்கிற அதிமுக்கியமான கேள்வியை பிறகு நிரூப்பிடம் அக்ஷரா விசாரிக்க “இன்னும் இல்லை. இந்த விஷயத்தில் இன்னமும் எனக்குத் தெளிவு ஏற்படவில்லை. என்னை பாதுகாப்பதும் அவதான். ஆனா பிரச்சினையை ஏற்படுத்தறதும் அவதான்” என்று நிரூப் பதிலளித்தார். அக்ஷராவிற்கு சிபி அளித்த பரிசு குறித்து வீடே ஆச்சரியப்பட்டு உற்சாகப்பட்டது. ‘படையப்பாவும் நீலாம்பரியும்’ ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்தால் கே.எஸ்.ரவிக்குமாருக்கு அடுத்த படத்திற்கு புது ஐடியா கிடைத்திருக்கலாம்.

பெயிண்டிங் டாஸ்க் முடிந்து அரைமணி நேரமாகியும் கடமை ராணியாக அக்ஷரா வண்ணம் தீட்டிக் கொண்டிருந்ததால் அவரின் கடமையுணர்ச்சியைப் பாராட்டி அவர்களின் அணிக்கும் பிக்பாஸ் பரிசளித்தார். “அண்ணாச்சி கூட எப்ப பிரச்சினை ஆரம்பமாச்சோ.. அப்போது முதல் அவரைத்தான் நான் நாமினேட் செய்யறேன். ஆட்டத்தோட சுவாரஸ்யத்தை அவர் கெடுக்கிறார். அவரோட உத்தில மத்தவங்க விழணும்னு நினைக்கிறார். ஏத்தி விடறார். அவரை எதிர்க்க நிரூப்பையெல்லாமா நான் உபயோகிப்பேன்?” என்று பாவனியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பிரியங்கா. “ஸ்பிரே அடிக்கும் போது ஒரு இடம் விடாம அண்ணாச்சி மூஞ்சி ஃபுல்லா அடிச்சேன்” என்று பிரியங்கா வர்ணிக்கும்போது குழந்தை முகம் கொடூரமாக மாறியது.

அகம்டிவி வழியே கமல்

ஒரு வார இடைவெளியில் இருந்து கமல் திரும்பியதைப் பார்த்ததும் விடுமுறையில் இருந்து திரும்பிய டீச்சரைப் பார்த்த மாணவர்கள் போல போட்டியாளர்கள் உற்சாக கூக்குரல் எழுப்பினார்கள். புதுவரவுகளான சஞ்சீவையும் அமீரையும் வரவேற்ற கமல் “தனித்தனியா விளையாடறீங்க.. பார்க்க நல்லாயிருக்கு” என்ற அடுத்த கணமே இமானின் மீது உடனடி விசாரணையை ஆரம்பித்தார். இமானிடம் உள்ள ஒரு நல்ல வழக்கம் என்னவெனில் விசாரணை நாளில் ஓரெல்லை வரை டிஃபென்ஸ் ஆட்டம் ஆடுவார். பிறகு கமலிடம் கையெடுத்து கும்பிட்டபடி சரணாகதி அடைந்து எஸ்கேப் ஆகி விடுவார். இம்மாதிரியான பாணி கமலுக்கு பிடிக்கும். சரணாகதி அடைபவர்களை அவர் வறுத்தெடுப்பதில்லை. மேலும் ‘வயதில் பெரியவர்’ என்பதாலோ, இமானிடம் கமல் அதிகம் கடுமை காட்டுவதில்லை என்று தோன்றுகிறது.

இமான்
இமான்

“புதிய தலைவரான நிரூப்பின் முன்னெடுப்புகளுக்கு நீங்கள் தடையா இருந்தீங்களோன்னு சந்தேகம் வந்தது” என்கிற கமலின் கேள்விக்கு “ஆமா.. சார். உள்ளே இருந்து ஒரு புது அண்ணாச்சி திடீர்னு கிளம்பிட்டான். இத்தனை வாரமும் ஆளுமை. நாணயம்..ன்னு உயிரை வாங்கிட்டு இருந்தாங்க. நிரூப் வந்து மீண்டும் அந்த விஷயத்தை ஆரம்பிக்கும் போது டென்ஷன் ஆகிடுச்சு” என்று இமான் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க அதற்கு திருநவேலி வழக்கில் கமல் பதில் அளிக்கும்போது ‘பாபநாசம்’ சுயம்புலிங்கம் ஒரு விநாடியில் வந்து விட்டுப் போனதை யாரெல்லாம் கவனித்தீர்கள்?

“புதிய தலைமை ஒரு திட்டத்தை ஆரம்பிக்கும் போது முதலில் அதை இயங்க விடுங்கள். ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போடாதீர்கள்.” என்றெல்லாம் கமல் சொன்னதில் அரசியல் உள்குத்தும் கலந்திருந்ததைப் போலவே இருந்தது. ஆனால் பிக்பாஸ் வீட்டைப் பொறுத்த வரைக்கும் அண்ணாச்சியின் ஆட்சேபம் நியாயமானதுதான். ஒரு வீட்டில் நாலைந்து தலைவர்கள் இருந்தால் அவரவர்களின் இஷ்டத்திற்கு நாட்டாமை செய்வார்கள். ஒரே களேபரமாக ஆகி விடும். அதிலும் பிரியங்கா – அபிஷேக்கிடம் அதிகாரம் சென்றால் தங்களுக்கு கூடுதல் இடைஞ்சல் என்று இமான் சந்தேகப்பட்டதில் அர்த்தம் இருக்கிறது.

இமான் – பிரியங்கா மோதல்களும் கேள்விகளும்

“நீங்கள் அதிகார துஷ்பிரயோகம் செஞ்சீங்களா?” என்று அடுத்ததாக பிரியங்காவை கூண்டில் ஏற்றினார் கமல். “இல்லை” என்று மறுத்தார் பிரியங்கா. “வேலை செய்யாமல் அண்ணாச்சி செய்யும் சால்ஜாப்பு" பற்றி கமல் இழுத்து அடுத்த கேள்வி கேட்டதும் “ஆமாம் சார்… OB அடிச்சாருன்னு சொன்னேன்” என்றார். “ஓபிக்கு என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியாது" என்று கமல் சொன்னபோதே அதன் கொச்சையான அர்த்தம் அவருக்குத் தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது. சில வில்லங்கமான வார்த்தைகள் அதன் பொருள் அறியாமலேயே புழக்கத்தில் வந்திருப்பதை சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

தாமரை பாத்திரம் விளக்கிய விவகாரத்தில் பிரியங்கா தலையிட்டது உண்மையான அக்கறையாலா அல்லது இமான்-ராஜூவின் சோம்பேறித்தனத்தை மறைமுகமாக இடித்துரைக்கவா என்கிற கேள்வி ஒருபக்கம் இருக்கட்டும். பிரியங்கா அதைச் செய்தது சரியானதுதான்.

வீடு, அலுவலகம் என்று பல நிறுவனங்களில் இதைப் பார்க்கலாம். “வேலை செய்யறவனுக்கு வேலை கொடு, வேலை செய்யாதவனுக்கு ஃபேனைப் போடு” என்று நடைமுறை பழமொழியே இருக்கிறது. அக்கறையாக வேலை செய்யும் நபருக்கு மேலும் மேலும் வேலைகள் தரப்படும். ஆனால் நைசாக ஒதுங்கிக் கொள்பவர்கள் குறித்து கேள்விகள் அதிகம் எழாது. வீடுகளிலும் சில வேலைகளை பெண்கள்தான் செய்ய வேண்டும் என்று எழுதப்படாத விதியே இருக்கிறது. ஆண்கள் அதைச் செய்யவே மாட்டார்கள். ஊறிக்கிடக்கும் தன்னிச்சையான அடிமைத்தனம் காரணமாக பல பெண்களும் அதை அனுமதிக்க மாட்டார்கள்.

ராஜூ
ராஜூ

பல லட்சம் பேர் பார்க்கும் பிக்பாஸ் வீடும் இந்தப் போக்கை நிச்சயம் பிரதிபலிக்கக்கூடாது. கமல் இதை அழுத்தமாக வலியுறுத்திச் சொல்லியிருக்க வேண்டும். மாறாக “அவங்களுக்குள்ள ஒரு புரிதல் இருக்குன்னா பண்ணிட்டுப் போகட்டுமே" என்று சொல்வதின் மூலம் பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலுக்கு தன்னிச்சையாக அவர் துணை போகிறார் என்றே பொருள். நட்பு என்கிற பெயரில் தாமரையை இமானும் ராஜூவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றால் அது தவறு. பிரியங்காவிற்கு ஹேர்டிரெஸ்ஸராக மதுமிதா இருந்த காட்சிகளையும் முன்னர் பார்த்தோம். இதுவும் தவறுதான். ஆண்டான் –அடிமை என்கிற நிலை தன்னிச்சையாக நிலவுவதை எந்த வடிவத்திலும் அனுமதிக்கக்கூடாது.

“பாத்திரம் கழுவுறது எனக்குப் பிடிக்காது. மத்த வேலைகளைக் கூட பண்ணிடுவேன்” என்று ராஜூ சொன்னது பல ஆண்களின் பிரதிபலிப்பு மனோபாவம். சமையல் வேலையை விடவும் பாத்திரம் சுத்தம் செய்வது மகா சள்ளை பிடித்த வேலை. அதனால்தான் உணவு வாங்கித்தரும் ஆஃப்கள் வெற்றிகரமாக இயங்குகின்றன போலும். ஆனால் பெண்கள் இந்த கடினமான வேலையை எப்படி செய்கிறார்கள்? என்பதை கரிசனத்துடன் யோசித்துப் பார்த்தால் ஆண்களாலும் அதைச் செய்ய முடியும். “சேர் போட்டு உக்காந்து செய்யுங்க. அப்ப பிரியங்கா பார்வைக்குள்ள நீங்க வந்துடுவீங்க” என்று ராஜூவிற்கு வாழைப்பழ ஊசியை கமல் ஏற்றியது சிறப்பு.

நிரூப்பின் புதிய தலைமை சிறப்பா அல்லது சலிப்பா?

‘நிரூப்பின் கேப்டன்சி எப்படியிருந்தது?’ என்கிற கேள்வியை அனைவரிடமும் எழுப்பினார் கமல். ‘எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்’ என்கிற மாதிரிதான் நிரூப் ஆயிட்டான் என்பதையே பலரும் பதிலாகச் சொன்னார்கள். ‘அனைவரையும் அரவணைத்துச் செல்லும் திறமை நிரூப்பிடம் இல்லை. என் நண்பனா அவன் இருந்தாலும் இதைத்தான் சொல்லுவேன்” என்றார் பிரியங்கா. “இந்த சீசன்லயே மிக மோசமான கேப்டன்ஸி என்னுடையதுதான்” என்பதை சுயவாக்குமூலமாக ஒப்புக் கொண்ட நிரூப், தனக்கு ஏற்பட்ட குழப்பங்களையும் அதன் பின்னால் இருந்த காரணங்களையும் பரிதாபமான முகத்துடன் விளக்கினார்.

“டிவி டாஸ்க்கில் இந்த ஐம்பது நாட்களில் நடந்த விஷயங்களைப் பற்றி பேசுங்கன்னு பிக்பாஸ் சொன்னாரு. ஆனா பெரும்பாலும் கடந்த ரெண்டு நாள்ல நடந்த விஷயங்கள் மட்டுமே பேசப்பட்டது" என்று நிரூப் சொன்னது முக்கியமான பாயிண்ட். “எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்கும். ஆனா அண்ணாச்சியை பழிவாங்கறதுக்கு பிரியங்கா என்னை உபயோகிக்கற மாதிரி தோணுது” என்று நிரூப் சொன்னபோது பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல் வந்ததை ஜெர்க் ஆகி கவனித்தார் பிரியங்கா.

பிரியங்கா - அபிஷேக்
பிரியங்கா - அபிஷேக்

அமீரின் அதிரடி வாக்குமூலம்

“ஓகே.. இது பத்தி அமீரிடம் கேட்கலாம். பிரியங்காவிடம் சொல்ல நினைச்சத இங்க சொல்லுங்க” என்று கமல் வாய்ப்பு தர “நிரூப் கூட ஓகே சார். ஆனா அபிஷேக்தான் பிரியங்காவோட பெரிய பிரச்சினைன்னு தோணுது. ரொம்பவும் ஏத்தி விடறார். ஒரு நண்பன் பிரச்சினையை அணைக்கத்தான் பார்ப்பான். சிலர் கூட இருந்தே குழி பறிப்பாங்க” என்றெல்லாம் அமீர் அதிரடியாக சொல்ல, பிரியங்கா மற்றும் அபிஷேக்கின் முகங்கள் அதிர்ச்சியில் உறைந்தன. “மண்டையை உடைச்சுருவேன்றான். வீட்டை ரெண்டா ஆக்கிடுவேன்றான்.. இதெல்லாமா பிரெண்ட்ஷிப்?’ என்று அமீர் கேட்ட போது நமக்கே சிரிப்பு வந்தது. உணர்ச்சிப்பெருக்கில் தலையில் சுடுநீர் ஊற்றிக் கொள்ளும் நண்பர்கள் எல்லாம் ஒருவகையில் ஆபத்தானவர்கள்.

“அண்ணாச்சி என் கிட்ட பொலிட்டிக்கல் கேம் ஆடியிருக்காரு. டவுன் பண்றாருன்னு நிரூப்பே என்கிட்ட சொல்லியிருக்கான். நான்தான் அவனை உற்சாகப்படுத்தினேன்” என்று சபையில் போட்டுக் கொடுத்த பிரியங்கா “அண்ணாச்சியை அடிக்க நிரூப்பையெல்லாம் உபயோகிக்கணும்னு எனக்கு அவசியமில்லை” என்றார். “நான் சொன்னா கேக்கற பொண்ணு பிரியங்கா இல்லை” என்று தன்மீதான குற்றச்சாட்டை அபிஷேக் மறுத்தார்.

நிரூப்
நிரூப்

“24 மணி நேர நிகழ்வுகளில் இருந்து மக்கள் ஒரு மணி நேரத்தை மட்டும்தான் பார்க்கறாங்க. அபிஷேக்கின் செல்வாக்கு என்னிடமில்லை. நான் சொந்தமாகத்தான் ஆடுகிறேன். அவனுக்கும் எனக்கும் ஒரே அலைவரிசை இருக்கிறது. அதனால் சில விஷயங்களைப் பேசுகிறோம். இது தவறா?” என்று விசாரணை இடைவேளையிலும் பிரியங்காவின் பிடிவாதம் தொடர்ந்தது. பிரியங்காவின் இந்த பார்வை சரியாகவே இருக்கலாம். அபிஷேக் அவருக்கு சிறந்த நண்பனாகவே இருக்கலாம். அதில் உண்மையும் இருக்கலாம். ஆனால் இந்த விளையாட்டில் மக்களின் ஆதரவும் முக்கியம். அவர்களுக்கு இதில் ஆட்சேபம் இருக்கிறது என்பதை அவர்களின் கைத்தட்டல் தெளிவாகவே உணர்த்துகிறது. இதைக் கூடவா பிரியங்காவால் புரிந்து கொள்ள முடியாது? ஆட்டத்தில் ஜெயிப்பதை விடவும் அபிஷேக்கின் நட்பை நிரூபிப்பதுதான் அவருக்கு முக்கியமா?

அமீர் - அபிஷேக் ஈகோ மோதல்

சபையில் அமீர் தந்த வாக்குமூலம் பிரியங்காவையும் அபிஷேக்கையும் எரிச்சல்பட வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தன் கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்ட அமீர் பாராட்டத்தகுந்தவர். “உன் கருத்துக்களை நான் மரியாதையோடு ஏற்கிறேன்” என்று சகிப்புத்தன்மையின் நாயகனான அபிஷேக் நடக்க முயன்றாலும் அவரிடமிருந்த எரிச்சல் தன்னிச்சையாக வெளிப்பட்டது. “கத்திப் பேசாதே” என்று ஆட்சேபித்த அமீரிடம் "கையை இறக்கிப் பேசு” என்று அராஜகமாக பழிவாங்கினார்.

பிரியங்காவிற்கு சொன்ன அதே கருத்துதான் அபிஷேக்கிற்கும். அவர் நிரூப் –பிரியங்கா விவகாரத்தில் தன்னுடைய செல்வாக்கை செலுத்தாதவராகவே இருக்கட்டும். (ஆனால் காட்டப்பட்ட காட்சிகள் அப்படி உணர்த்தவில்லை). அப்படியாகத்தான் வெளியே தெரிகிறது என்பதை அவர் உணரும் போது அதற்கேற்ற தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்வதுதான் நல்லது. இதைச் சுட்டிக் காட்டும் அமீரிடம் எரிந்து விழுவது முதிர்ச்சியின்மை. “உங்க ஆட்டத்தை இனிமே பாருங்க” என்று அமீருக்கு கமல் உபதேசம் செய்தது நன்று.

பிக் பாஸ்
பிக் பாஸ்

இந்த வாரம் காப்பாற்றப்பட்டது யார்?

இடைவேளைக்குப் பின்னர் திரும்பி வந்த கமல் “நான் எந்தவொரு போட்டியாளரையும் டார்கெட் செய்வதில்லை. யாரையும் கிண்டல் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. நான் தருவதெல்லாம் வெளியில் இருந்து கிடைக்கும் விஷயங்கள் தொடர்பான துருப்புச் சீட்டு மட்டுமே. அதைப் பற்றிக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். மற்றபடி எனக்கு டார்கெட் நான்தான். கடந்த சீசன்களை விடவும் இந்த சீசனை எப்படி மேம்படுத்துவது என்பதுதான் என் டார்கெட்’ என்ற கமல் “இந்த வாரம் ஒருத்தரை காப்பாத்தலாம்” என்று பிரேக்கிங் நியூஸ் வழியாகவே அதை தெரிவித்தார். எதிர்பார்த்தபடியே ராஜூ காப்பாற்றப்பட்டார்.

“என்னை இந்த வீட்ல பிடிக்காதவங்க யாரும் இல்லைன்னு நெனக்கறேன். அதே அன்பு மக்கள் கிட்ட இருந்து கிடைக்குதுன்னு நம்பறேன். சந்தோஷமா இருக்கு" என்று நன்றி தெரிவித்தார் ராஜூ. “மக்களின் ஆதரவு இருந்தால் பத்தும் தேய்க்கப்படும்” என்கிற அபாரமான நையாண்டியோடு கமல் விடைபெற்றார். ராஜூவின் செயல்பாடு மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவருடைய நகைச்சுவைதான் அவரை பெரும்பாலும் காப்பாற்றி விடுகிறது.

ஆக.. இந்த வாரம் அபிஷேக் எலிமினேட் ஆனார் என்கிற தகவல் வந்திருக்கிறது.. ‘வந்தான்.. இருந்தான்.. சென்றான்..’ ரிப்பீட்டு…. மறுபடியும் வந்தான்.. முடியல தலைவரே’ என்று மக்கள் ‘மாநாடு’ கூட்டி தீர்மானித்து விட்டார்கள் போல. அபிஷேக்கின் அலட்டல்கள் பல சமயங்களில் சகிக்க முடியாதுதான் என்றாலும் அவர் இத்தனை சகித்துக் கொள்ள முடியாதவரா என்ன? என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது.