Published:Updated:

பிக் பாஸ் 76 : பாவனியிடம் காதலைச் சொன்ன அமீர்! குறும்புத்தனமா... கேம் ப்ளானா!

பிக் பாஸ் பாவனி

‘ஒரு பெண்ணிடம் எப்படி கவர்ச்சியாகவும் சுவாரசியமாகவும் பேசுவது?’ என்கிற விஷயம்தான் அது. இந்த விஷயத்தில் அமீர் செய்யும் குறும்புகள் டாப் கியரில் செல்கின்றன. இது தவறா என்றால் நிச்சயம் தவறுதான்.

பிக் பாஸ் 76 : பாவனியிடம் காதலைச் சொன்ன அமீர்! குறும்புத்தனமா... கேம் ப்ளானா!

‘ஒரு பெண்ணிடம் எப்படி கவர்ச்சியாகவும் சுவாரசியமாகவும் பேசுவது?’ என்கிற விஷயம்தான் அது. இந்த விஷயத்தில் அமீர் செய்யும் குறும்புகள் டாப் கியரில் செல்கின்றன. இது தவறா என்றால் நிச்சயம் தவறுதான்.

Published:Updated:
பிக் பாஸ் பாவனி

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அமீரின் காதல் முயற்சி, அதன் உச்சபட்ச வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இது உண்மையான உணர்வா அல்லது பிக்பாஸிற்காக செய்யப்படும் நாடகமா என்கிற குழப்பத்தை அமீர் திறமையாக ஏற்படுத்தினாலும் ‘இது விளையாட்டு நோக்கம்’தான் என்பது நன்றாகவே தெரிகிறது. வைல்ட் கார்டில் வந்திருக்கும் அமீர், டாஸ்க்குகளை மட்டும் சிறப்பாக செய்து விட்டு, இதர நேரங்களில் அமைதியாக இருந்தால் தான் கவனிக்கப்படாமல் விடுபடுவோம் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். எனவேதான் இப்படி இறங்கி ஆடுகிறார்.

90% சிரிப்பு + 10% சீரியஸ் என்று அமீரின் இந்த அணுகுமுறையை தொடர்ந்து மறுத்து வருகிறார் பாவனி. அவருக்குமே பிக்பாஸ் விளையாட்டில் பற்றிக் கொள்ள ஏதாவது தேவைப்படுகிறது. இல்லையென்றால் அவரையும் காமிராக்கள் புறக்கணித்து விடும். தெரிந்து செய்கிறார்களோ அல்லது தெரியாமல் செய்கிறார்களோ, இந்த காதல் நாடகம், இந்த இருவருக்குமே எதிர்விளைவை ஏற்படுத்தும் வாய்ப்பும் சேர்ந்தே இருக்கிறது. இதை இவர்களுமே உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் ``ரெண்டு பேருமே வெளியே போய்டுவோம்” என்று சிரித்துப் பேசிக் கொள்கிறார்கள்.

அமீர்
அமீர்

அமீர் செய்யும் சரசம் பெரும்பாலான பார்வையாளர்களுக்கு வெறுப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தலாம். ஏனெனில் நமது சமூகத்திற்கு ஒழுக்கமாக இருப்பது போல் பாசாங்கு செய்பவர்களைத்தான் பிடிக்கும். “போங்கடா. என் வாழ்க்கையை நான் வாழறேன்” என்கிறவர்களை வம்பு பேசி ஒதுக்கி வைக்கவே முயல்வார்கள்.

பொதுவான நோக்கில் பார்த்தால், பிக்பாஸ் வீட்டு காதல்களில் உண்மை இருக்கிறதோ, இல்லையோ.. ஆனால் அது இறுதியில் (தமிழ் சீசனில்) வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. இது பரஸ்பர ஆதாயத்திற்காக நடந்த நாடகம் என்றால் வாசல் தாண்டியவுடன் பல்லிளித்து விடும். ஏனெனில் பிக்பாஸ் வீட்டின் வேறுவழியில்லாத நெருக்கடியான சூழலில் ஏற்படும் காதலில் நிரந்தரத்தன்மை இருப்பது கடினம். ஒருவேளை உண்மையாக இருந்தால் கூட வெளியுலகத்தின் பாதிப்பு இவர்களைப் பிரித்து வைத்து விடக்கூடும். (கவின் + லாஸ்லியா)

அமீர் - பாவனி
அமீர் - பாவனி

எபிசோட் 76-ல் என்ன நடந்தது?

தான் நடித்த ‘ஜோஸ்வா’ திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை பிக்பாஸ் போட்டதால் வருண் மகிழ்ந்தார். அவருக்கு நிச்சயம் இதுவொரு சிறப்பான தருணம். ஒரு போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நடிகருக்கு, அவர் நடித்த படத்திலிருந்தே ஒரு பாடல் ஒளிபரப்பப்படுவது பெருமிதமான உணர்வை அளிக்கும்.

அபிநய் விவகாரத்தைப் பற்றி பாவனியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பிரியங்கா. “நீ அப்போது செஞ்சதையெல்லாம் வெளிப்படையா செஞ்சிருக்கணும். நீ பாட்டுக்கு தனியா பண்ணே.. அதுதான் பிரச்சினையாயிடுச்சு. அது வெளியே வந்த போது எல்லாமே டைமிங் தப்பா ஆயிடுச்சு” என்று பிரியங்கா சொல்வது சரிதான். அபிநய்யின் முயற்சிகளை ரகசியமாக மறுத்துக் கொண்டிருக்காமல் அப்போதே பாவனி அம்பலப்படுத்தியிருந்தால் இந்த விவகாரம் இத்தனை பெரிதாக வளர்ந்திருக்காது.

அமீரின் டான்ஸ் + ரொமான்ஸ்

அமீர் பிரபுதேவாவின் தீவிர ரசிகர். பிரபுதேவாவின் நடன பாணியை சிறப்பாக பின்பற்றி ஜெயித்தவர். அமீர் இன்னொரு விஷயத்தையும் நன்றாக கற்றுக் கொண்டாரோ என்று தோன்றுகிறது. ‘ஒரு பெண்ணிடம் எப்படி கவர்ச்சியாகவும் சுவாரசியமாகவும் பேசுவது?’ என்கிற விஷயம்தான் அது. இந்த விஷயத்தில் அமீர் செய்யும் குறும்புகள் டாப் கியரில் செல்கின்றன. இது தவறா என்றால் நிச்சயம் தவறுதான். ஒரு பெண் ‘NO’ என்று மறுத்து விட்ட பிறகு விலகிச் செல்வதுதான் உண்மையான ஆண்மை. தன்னுடைய கண்ணியமான செயல்களால்தான் ஒரு பெண்ணின் மதிப்பைப் பெற வேண்டுமே ஒழிய, ‘சந்தைக்குப் போகணும். ஆத்தா வையும்.. காசு கொடு’ என்று ’16 வயதினிலே’ சப்பாணி நச்சரிப்பதைப் போல் தொடர்ந்து இம்சை செய்து பெறுவதற்குப் பெயர் காதல் அல்ல.

பாவனி
பாவனி

ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல இளைஞர்கள் நடைமுறையில் அப்படித்தான் செய்கிறார்கள். பின்னாலேயே சுற்றினால் என்றாவது ஒரு அதிர்ஷ்ட நாளில் லாட்டரி அடித்து விடும் என்று நம்புகிறார்கள். அறியாமை மற்றும் அந்த வயதுக்குகேயுரிய முதிர்ச்சியின்மை காரணமாக சிலபல பெண்களும் இதை உண்மையாக்கி விடுவதால் இளம் ஆண்களுக்கு இன்னமும் உற்சாகம் பெருகி விடுகிறது. தமிழ் சினிமாக்களும் இவ்வகையான ஆபத்தான போக்கை ஊதி வளர்க்கின்றன. ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்கிற கண்ணியமான காதலன் எல்லாம் இன்று கேலிப்பொருளாகவே பார்க்கப்படுகிறான்.

“நீ நோ சொன்னாலும் பரவாயில்ல. ஈஸியா கிடைச்சுட்டா. அதில என்ன சுவாரசியம். இன்னமும் 25 நாள் இருக்கே… தில் இருந்தா சொல்லுன்னு சொன்னே.. சொல்லிட்டேன்” என்ற அமீர், ‘மெளனராகம் கார்த்திக்’ பாணியில் “நீ சரின்னு சொன்னியன்னா.. ஊரைக் கூட்டி என் காதலை சொல்வேன்” என்கிறார். நிச்சயம் இதெல்லாம் கிம்மிக்ஸ். சினிமாவின் பாதிப்பு. இந்த வயதின் மனநிலையில் நின்று பார்த்தால் அமீரின் சர்க்கஸ் வித்தை ஒருவகையில் ரசிக்க வைக்கவே செய்கிறது. ஆனால் விளையாட்டு வினையாகாமல் போகும் வரைக்கும் சரி.

பிக்பாஸ் வீட்டில் ஒரு காதல்கதை

அமீர் + பாவனி விவகாரத்தில் பிரியங்காவும் இணைந்து உற்சாகமாகிறார். டாஸ்க்குகளில் கூட ‘வீ வான்ட் மோர் எமோஷன்’ என்று அதிக மசாலாவைத் தேடும் குணாதிசயத்தைக் கொண்ட நபர் பிரியங்கா. ஒரு உண்மையான காதலுக்கு துணை நிற்பது வேறு. ஆனால் பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் ஏற்படும் காதலின் நிறம் சீக்கிரம் வெளுத்து விடும் என்கிற யதார்த்தம் ஊடக அனுபவம் அதிகமுள்ள பிரியங்காவிற்கு நன்றாகவே தெரியும். என்றாலும் அவர் இதற்குத் துணை போவதும், இவர்களின் போதைக்கு ஊறுகாய் ஆக தயாராக நிற்பதும் எதனால்? ‘காதலுக்கு துணை போன’ நல்ல பாத்திரத்தின் வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கிறாரா?..

பலவீனமாகச் சொன்னாலும் தன்னுடைய மறுப்பை பாவனி தொடர்ந்து பதிவு செய்து கொண்டே வருகிறார். “என் வயசு என்ன தெரியுமா?” என்பது முதற்கொண்டு ‘செருப்பு பறக்கும்’ என்பது வரை தன் ஆட்சேபங்களை விதம் விதமாக அவர் பதிவு செய்கிறார். ஆனாலும் இன்னொருபக்கம் அமீரின் குறும்புகளை உள்ளே ரசிக்கிறார் என்பது தெரிகிறது. தன்னுடைய அழகு அங்கீகரிக்கப்படும் போது ஒரு பெண் உள்ளார்ந்த பெருமிதத்தை அடைவது தவிர்க்க முடியாத விஷயம். அமீர் உண்மையிலேயே பாவனியின் நலனை விரும்புபவர் என்றால், தன்னுடைய இந்த அத்துமீறல்களை நிறுத்தி விட்டு ஒரு ‘நண்பனாக’ இருப்பது மட்டுமே சரியானது. மற்ற விஷயங்களை அவர் வெளியில் சென்று தொடரலாம். “ஆயிரம் இருந்தாலும் நீதான் ஒதுங்கியிருக்கணும்” என்று இறுதியில் பெண்ணின் மீது மட்டுமே தீர்ப்பு எழுதுவார்கள். இந்த விஷயத்தை அமீர் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிரியங்கா
பிரியங்கா

“நான் பிரியங்கா கூட பேசறது தாமரைக்குப் பிடிக்கலை” என்பதை உரத்த குரலில் தெரிவிக்கிறார் ராஜூ. இது உண்மைதான். இதைப் பற்றி தாமரை முன்பே அனத்தியிருக்கிறார். ஆனால் தாமரையால் இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. “நான் அப்படி சொன்னேனா.. நீ எனக்கு தம்பியா. எதிரியா?” என்று ராஜூவிடம் கோபம் கொள்கிறார். பிரியங்காவின் எதிர்ப்பை சம்பாதிக்க தாமரைக்கு விருப்பமில்லை. இப்படிப்பட்ட பாசாங்குகளால்தான் பல உறவுகள் இன்னமும் உடையாமல் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

அமீர் - பாவனி
அமீர் - பாவனி

“யாரைக் காப்பாத்தணும்?” – பிக்பாஸ் தந்த கடைசி வாய்ப்பு

இந்த டாஸ்க் தொடரில் இன்னுமொரு கடைசி வாய்ப்பை தர பிக்பாஸ் முடிவு செய்தார். ஏற்கெனவே காப்பாற்றப்பட்ட சிபி, நிரூப், தாமரை ஆகிய மூவரையும் தவிர மற்றவர்கள் இதில் ஜோடி, ஜோடியாக கலந்து கொள்ள வேண்டும். வருண் + அக்ஷரா, அமீர் + பாவனி, ராஜூ + சஞ்சீவ், அபிநய் + பிரியங்கா என்று இந்த அணிகள் அமைந்தன. முதல் இரண்டு ஜோடிகள் அமைந்ததில் நமக்கு ஆச்சரியமில்லை. பாவம் ராஜூ, எப்போதுமே அவருக்கு ஆண் துணையாகவே அமைகிறது. கடைசி ஜோடி வேறு விதியில்லாமல் அமைந்தது.

ஓர் அணியில் உள்ள இருவரையும் தனித்தனியாக அமர வைப்பார்கள். இருவரின் புகைப்படங்களும் அவர்களிடம் தரப்படும். “நீங்கள் யாரைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள்?” என்கிற கேள்வி கேட்கப்படும். இருவரும் ஒரே புகைப்படத்தைக் காட்டினால், புகைப்படத்தில் உள்ளவர் தப்பிப்பார். இதுதான் போட்டி. ஆனால் இதன் ரகசியங்கள் போட்டியாளர்களுக்குத் தெரியாது. அந்த அளவிற்கான ஏற்பாட்டை பிக்பாஸ் கச்சிதமாக செய்து வைத்திருந்தார்.

வருண் - அக்ஷரா
வருண் - அக்ஷரா

ஒரு அணியில் உள்ளவர், இன்னொருவரைப் பற்றி எத்தனை தூரம் புரிந்து வைத்திருக்கிறார், இணக்கமாக இருக்கிறார், விட்டுத் தருகிறார் என்பதையெல்லாம் சோதிக்கும் போட்டி இது. முதலில் அழைக்கப்பட்டது பிரியங்கா மற்றும் அபிநய் அணி. இருவருமே தங்களின் சொந்த புகைப்படங்களைத்தான் காட்டினார்கள். அவரவர்களின் நோக்கில் இது சிறந்த முடிவுதான். ‘என் கேமை நான் ஆடுவேன்” என்கிற நிலைப்பாட்டில் பிரியங்கா உறுதியாக இருக்கிறார். ஏறத்தாழ இப்போது அபிநய்யும் அதே மனநிலையில் இருக்கிறார். ஒருவேளை பாவனியுடனான உறவு சுமூகமாக இருந்திருந்தால் அபிநய் அவரின் புகைப்படத்தைக் காட்டியிருப்பாரோ, என்னமோ. ஆக, இந்த அணி தோல்வியடைந்தது. பிரியங்காவின் முடிவை பிறகு அபிநய்யும் ஏற்றுக் கொண்டார். “அவ தந்த விளக்கம் சரியாகத்தான் இருந்தது” என்பது அபிநய்யின் அபிப்ராயம்.

அடுத்ததாக அழைக்கப்பட்டது அமீர் – பாவனி ஜோடி. இதில் இருவருமே அமீரின் புகைப்படத்தைக் காட்டியதால் அமீர் பிழைத்துக் கொண்டார். “ரொமான்ஸ் பண்றதெல்லாம் ஓகே. ஆனால் டாஸ்க் என்று வந்து விட்டால் தனக்காகத்தான் அமீர் விளையாடுவார்” என்பது பாவனிக்குத் தெரிந்திருந்தது. “நான் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இந்த கேமிற்குள் வந்திருக்கேன்” என்றார் அமீர். அதனால் தன் புகைப்படத்தைக் காட்டினார். பாவனியும் பெருந்தன்மையுடன் அமீரின் புகைப்படத்தைக் காட்டியதால், இந்த அணியின் நோக்கம் வெற்றியடைந்தது.

குட்டையில் இரு மான்கள்

நீர் சிறிது மட்டுமே இருக்கும் குட்டையில் தாகம் நிறைந்த இரு மான்கள் நீரருந்த வந்ததாம். ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மான் விட்டுத்தந்ததாம். பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மான் விட்டுத் தந்ததாம். இரு மான்களுமே குடிப்பது போல் பாவனை செய்ததால் நீர் அப்படியே இருந்ததாம். அன்பில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் இந்த உணர்வை 'சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப் / பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன் / கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர் / உள்ளம் படர்ந்த நெறி’.. என்கிற சங்கப்பாடல் விளக்குகிறது.

இந்த டாஸ்க்கில் வருண் – அக்ஷராவின் நிலைமை இப்படித்தான் ஆயிற்று. ஒருவருக்கொருவர் விட்டுத்தரும் நல்லெண்ண நோக்கில் செயல்பட்டது, வீணாகப் போயிற்று. “முதல்லயே யோசிச்சிருக்கலாம். யாராவது ஒருத்தரை காப்பாத்தியிருக்கலாம்” என்று இருவரும் பிறகு ஜாலியாக தலையில் அடித்துக் கொண்டார்கள். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது? அப்படியொரு சூழலில் விட்டுத்தருபவர் யார்…என்பதை எப்படி தீர்மானிப்பது?..

ராஜூ மற்றும் சஞ்சீவின் நட்பு வேறு மாதிரியாக இருந்தது. ‘Freeze task-ல் தன் குடும்பம் வந்து விட்டுச் செல்லும் வரைக்குமாவது பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்பது சஞ்சீவின் விருப்பமாம். குறிப்பாக சஞ்சீவின் மகளுக்கு இதில் நிறைய ஆசையாம்’. இந்த விஷயத்தை ராஜூவிடம் சஞ்சீவ் எப்போதோ சொல்லியிருப்பார் போலிருக்கிறது. இதே காரணத்தை சொல்லி சஞ்சீவின் புகைப்படத்தை ராஜூ காட்டியது, ராஜூவின் நற்பண்பைக் காட்டுகிறது. டாஸ்க்குகளில் சொதப்பினாலும் இது போன்ற செயல்களால் தன் கிராஃபை ராக்கெட் வேகத்தில் உயர்த்திக் கொள்கிறார் ராஜூ. அவரின் இந்த நல்ல செயலை வீட்டில் இருந்த அனைவரும் பாராட்டினார்கள். சஞ்சீவ் நெகிழந்து கண்கலங்கி விட்டார்.

ஆக.. ஒத்திசைவுடன் செயல்பட்ட ஜோடிகளின் செயல்பாடு காரணமாக அமீரும், சஞ்சீவும் எவிக்ஷன் ஆபத்தில் இருந்து தப்பித்தார்கள். மீதமிருந்த அபிநய், பிரியங்கா, பாவனி, வருண், அக்ஷரா மற்றும் ராஜூ ஆகியோர் எவிக்ஷன் சவாலை எதிர்கொண்டாக வேண்டும்.

ராஜூ
ராஜூ

பிரியங்கா + நிரூப் = டாம் & ஜெர்ரி

“நீ அபிநய் போட்டோவை காண்பிச்சிருக்கலாம்” என்று பிரியங்காவை உசுப்பேற்றினார் நிரூப். “ஏன் இப்படி பண்றே?” என்று பிரியங்கா கடுப்பானார். சீசன் 5 முடிந்தாலும் இந்த டாம் & ஜெர்ரி சண்டை முடியாது போலிருக்கிறது. சமையலில் கூடுதலான எண்ணைய்யை சேர்க்க அக்ஷரா விரும்பிய போது “அதிகம் ஆயில் போட்டா.. சாப்பிடறவங்க ஆயுள் போயிடும்” என்று ராஜூ சொன்ன ரைமிங்கான வசனம் சிறப்பு.

“நீயா இருந்தா யாரோட போட்டோவை காண்பிச்சிருப்பே?” என்று தாமரையை விளையாட்டாக கேட்டார் அக்ஷரா. “வருண் போட்டோவைத்தான் காண்பித்திருப்பேன்” என்று தாமரை உறுதியாக கூறியதால் சிணுங்கிய அக்ஷராவிடம் “மக்கள் உன்னைக் காப்பாத்திடுவாங்க. அப்படியோரு அழகி நீ” என்று அல்வாவை கிளறினார் தாமரை. அடுத்த கணத்தில் அமீர் – பாவனி விவகாரம் பற்றி வம்பு பேசிய தாமரை “அவ என்ன பேரழகியா?” என்று பாவனியை கிண்டலடித்துப் பேச “நமக்கு வேணாம்ப்பா… இதெல்லாம்” என்று நமட்டுச் சிரிப்புடன் ஒதுங்கினார் அக்ஷரா.

இந்தக் காட்சியில் மனதில் உள்ளதை ஒளிக்காமல் தாமரை சொன்னதையும், அதையே வழிமொழிய விரும்பினாலும் காமிரா அல்லது நாகரிகம் கருதி அக்ஷரா மறைத்துப் பாசாங்கு செய்ததையும் கவனிக்கலாம். நம் மனதில் உள்ளதையெல்லாம் அப்படியே வெளியே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. சிலவற்றை மறைத்து பாசாங்கு செய்வது நாகரிக சமூகத்திற்கு அவசியமானது. ஒருவகையில் அது நல்லதும் கூட. ஏனெனில் நாம் தற்போது காணும் காட்சியின் கோணம் பிற்காலத்தில் மாறலாம்; அதிலிருக்கும் உண்மை தெரிய வரலாம். எனவே அவசரப்பட்டு மனதில் உள்ளவற்றையெல்லாம் வம்பாக மாற்றுவது நல்ல பண்பு அல்ல.

பிக்பாஸ் செய்த குறும்பு – “ரொம்ப மிஸ் பண்றோம் பாஸ்”

அடுத்தததாக நிகழந்தது ஒரு சமையல் போட்டி. நடுவர்களில் ஒருவரான ராஜூ “புலவ் பண்ணுங்க” என்று தன் ஆசையை ரகசியமாக போட்டியாளர்களிடம் தெரிவித்தார். “ஹப்பாடா.. இன்னிக்கு நைட்டு நல்ல சாப்பாடு சாப்பிடலாம்” என்று மகிழ்ச்சியானார் அமீர். பாவனி, பிரியங்கா, நிரூப் அமீர் ஆகிய நால்வரும் சிவப்பு நிற அணியாக ஒன்று சேர்ந்தார்கள். அக்ஷரா, சிபி, அபிநய், தாமரை ஆகியோர் நீல நிற அணியாக கூடினார்கள். ராஜூ, சஞ்சீவ், வருண் ஆகிய மூவரும் நடுவர்கள்.

நீல அணி 40 நிமிடத்தில் பல்வேறு உணவு வகைகளை செய்து அசத்தியிருந்தது. சிக்கன் 65-ஐ ராஜூ சுவாரசியமாக எடுத்து எடுத்து சாப்பிட்ட போது அதில் தலையிட்ட பிக்பாஸ் “ராஜூ.. டேஸ்ட் மட்டும் பாருங்க.. டின்னரை இங்கயே முடிச்சிடாதீங்க” என்று காமெடி செய்த குறும்பு ரசிக்க வைத்தது. நீல அணி சமையலை முடித்து உண்ட களைப்பில் ஆழ்ந்த உறக்கத்தில் செல்ல அதையும் கிண்டலடித்தார் பிக்பாஸ். இந்த பிக்பாஸைத்தான் சீசன் முழுக்க தேடிக் கொண்டிருக்கிறோம். இருக்கிற மீதமுள்ள நாட்களிலாவது இறங்கி விளையாடுங்க பிக்பாஸ்.

சிவப்பு அணி அடுத்ததாக சமையில் இறங்கிய போது போட்டிக்காக அல்லாமல், இரவு உணவிற்காகவும் சேர்த்து திட்டமிட்டு விட்டார்கள் போல. பாவனியின் ஆலோசனையின் படி அதிக அளவிற்கான உணவிற்கு இவர்கள் ஏற்பாடு செய்து விட்டதால் தந்திருக்கும் நேரத்திற்குள் சமையலை முடிக்க முடியவில்லை. எனவே சிக்கன் மட்டும் கொண்டு வந்தார்கள். நீல அணி செய்திருந்த சிக்கன் 65-ஐ விடவும் இந்த சிக்கன் தயாரிப்பு சுவையாக இருந்ததாக ராஜூ சொன்னாலும் ‘குறைந்த நேரத்தில் சமைத்து முடிப்பதுதான் டாஸ்க்கின் தலைப்பு’ என்பதால் நீல அணி வெற்றி பெற்றது. தனது அணியிடம் மன்னிப்பு கோரினார் பாவனி.

சிவப்பு அணி
சிவப்பு அணி

“நீங்க கொஞ்சமா நிறைய அயிட்டங்களைச் செஞ்சிருக்கலாம்” என்று சரியான ஆலோசனையை பிறகு சொன்னார் நடுவர் வருண். “எங்களுக்கு டேஸ்ட்தான் முக்கியம். நைட்டு பாருங்க. பிரியாணி பட்டையைக் கிளப்பப் போவுது” என்று சால்ஜாப்பு சொன்னது சிவப்பு அணி. போட்டி முடிந்ததும் மீதமுள்ள பணியை இவர்கள் தொடர்ந்தார்கள். ஆனால் இரவு உணவு சிறப்பாக அமைந்ததா, இல்லையா என்பது நமக்கு காட்டப்படவில்லை.

வெற்றி பெற்ற அணியில் இருந்த ஒவ்வொருவருக்கும் நவீன வகையிலான கேஸ் ஸ்டவ் பரிசாக வழங்கப்பட்டது. இதற்காக தனது மகிழ்ச்சியை துள்ளிக் குதித்து வெளிப்படுத்தினார் தாமரை. “எங்க வீட்ல கேஸ் ஸ்டவ் கிடையாது” என்பதே அவர் சொன்ன காரணம். மற்றவர்களுக்கு இது வெறும் பரிசாக இருக்கலாம். ஆனால் தாமரை போன்றவர்களுக்கு இது ஒரு கனவு. “வெறும் வெங்காயம் வெட்டினதுக்கு கேஸ் ஸ்டவ் பரிசா.. தெரிஞ்சிருந்தா நானும் போட்டிக்குள்ள போயிருப்பேன். எனக்கு இந்த டீஷர்ட்டையாவது கொடுங்க.. வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் இந்த சீசன் மூலமாகவே வாங்கிடுவா போலிருக்கே”.. என்று விதம் விதமாக தாமரையை கிண்டலடித்துக் கொண்டிருந்தார் ராஜூ.

"என்னைப் புரிஞ்சுக்கயேன் ராஜூண்ணா"

‘தனக்கு என்றால் மட்டும் பிரியங்கா நிறைய ஆங்கிலத்தை உபயோகிப்பது சரியா.. தனக்குன்னா ரத்தம்.. மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா?’ என்கிற நியாயத்தை நிரூப்பிடம் கேட்டுக் கொண்டிருந்தார் அக்ஷரா. ஆனால் பிரியங்காவை விட்டுத்தராமல் சமாளித்துக் கொண்டிருந்தார் நிரூப்.

நள்ளிரவு தாண்டியும் அக்ஷரா, வருண், அபிநய் கூட்டணி தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தது. “ராஜூ யாருன்னு எனக்கு முன்ன பின்ன தெரியாது. இந்த வீட்டுக்கு வந்ததிற்கு அப்புறமாத்தான் லேசா தெரியும். ஆனா அவன் மேல எனக்கு அன்பு இருக்கு. அண்ணன்ற பாசம் இருக்கு. அவன் அதைப் புரிஞ்சுக்கவே மாட்டேன்றான். மத்தவங்களுக்கு விட்டுத் தர்றான். ஆனா என் விஷயத்துல மட்டும் கடுப்பு ஆவறான். இது ஏன்னு எனக்குப் புரியல” என்று ராஜூவைப் பற்றி விதம் விதமாக அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் அக்ஷரா.

ஆக.. இந்த டாஸ்க் தொடர் முடிந்த பிறகு, எவிக்ஷன் வரிசையில் இன்னமும் இருப்பவர்கள் அபிநய், பிரியங்கா, பாவனி, வருண், அக்ஷரா மற்றும் ராஜூ. இதில் அபிநய் அல்லது பாவனிக்குத்தான் கண்டம் அதிகம் இருப்பது போல் தெரிகிறது. அமீர் எப்படியோ தப்பித்து விட்டார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார்?...