பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் முடிவடைந்தது. ராஜு அதில் வெற்றி பெற்றார். 5 சீசன்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி, முதன் முறையாக ஒ.டி.டி தளமான ஹாட் ஸ்டாரில் மட்டும் 'பிக் பாஸ் அல்டிமேட்' என்கிற பெயரில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.
டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே ஒ.டி.டி.யிலும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.பிக் பாஸின் முந்தைய எபிசோட்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் அல்டிமேட்டிலல் பங்கேற்றனர். பலர் எலிமினேட்டும் ஆகிவிட்டனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி தொடங்கி சுமார் 20 நாட்கள் தாண்டி விட்ட சூழலில் நேற்று முன் தினம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதிலிருந்து தான் வெளியேறுவதாகவும், ஆனால், பிக் பாஸ் சீசன் 6 - ஐ தான் தொகுத்து வழங்க வருவதாகவும் கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொடர்ச்சியான சினிமா ஷூட்டிங் காரணமாக நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்குவதில் சிக்கல் எழுந்ததாலேயே இந்த முடிவு என அவரது தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

பிக் பாஸ் அல்டிமேட்டைத் தொகுத்து வழங்குவது யார் என்கிற கேள்வி எழ, முன்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என பேச்சு அடிபட்டது.
முன்பு கமலுக்கு கோவிட் வந்த போது சில எபிசோடுகள் ரம்யா தொகுத்து வழங்கியதால் இந்தப் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் ஹாட் ஸ்டார் கமல் விலகியதுமே அந்த இடத்துக்கு நடிகர் சிம்புவைக் கொண்டு வர விரும்பி, தற்போது அவர் தொகுத்து வழங்குவது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில் கமலுக்குப் பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சிக்குள் வந்தால் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை வனிதா விஜயகுமார் நிகழ்ச்சியில் நீடிப்பாரா என கேள்வி எழுந்தது. சில மாதங்களுக்கு முன் 'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியில் இருவருக்கும் கருத்து வேறுபாடு உண்டாகி நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வனிதா வெளியேறியது நினைவிருக்கலாம். கமல் தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதிலிருந்து விலகுவதாக அறிவித்தபோதே வனிதா `நான் நிகழ்ச்சிக்குள் வந்ததே கமல் சாருக்காகதான்' எனப் பேசினார். நமக்கு தற்போது கிடைத்துள்ள உறுதிப் படுத்தப்பட்ட தகவல்களின்படி வனிதா பிக் பாஸ் அல்டிமேட்டிலிருந்து இன்று (22/2/22) வெளியேறியிருக்கிறார்.

ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற முறை போல் விளையாட முடியாதவராக சக போட்டியாளர்கள் பலரும் தன்னை உதாசீனப் படுத்துவதாகக் குமுறி வந்த வனிதா , கமலுக்காக மட்டுமே எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இந்த வீட்டுக்குள் இருப்பதாக நிகழ்ச்சியிலேயே சில தினங்களுக்கு முன்பு வனிதா சொல்லியிருந்தார். தற்போது எப்படியும் ரம்யாதான் வருவார் என நினைத்தே 'என்னை அனுப்பி விடுங்கள்' எனக் கேட்டே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினாராம்.
ஆக, சிம்புதான் பிக் பாஸ் அல்டிமேட்டைத் தொகுத்து வழங்கப் போகிறார் என்பது தெரியாமலேயே பிக் பாஸ் அல்டிமேட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார் வனிதா.