Published:Updated:

பிக் பாஸ் - 74: கொளுத்திப் போட்ட ப்ரியங்கா... கொதித்த அக்ஷரா! ராஜூ செய்தது சரியா?

பிக்பாஸ் அக்ஷரா

‘மீண்டும் ஒரு அபிநய்’ வேண்டாம் என்று பாவனி உண்மையாகவே கருதுவார் எனில் அமீரை அமர வைத்து ‘இப்போதுதான் ஒரு மனஉளைச்சலில் இருந்து வெளியே வர முயன்று கொண்டிருக்கிறேன். இப்படியெல்லாம் வழியாதே. நிறுத்து’ என்று கறாராக சொல்லி விடலாம்.

பிக் பாஸ் - 74: கொளுத்திப் போட்ட ப்ரியங்கா... கொதித்த அக்ஷரா! ராஜூ செய்தது சரியா?

‘மீண்டும் ஒரு அபிநய்’ வேண்டாம் என்று பாவனி உண்மையாகவே கருதுவார் எனில் அமீரை அமர வைத்து ‘இப்போதுதான் ஒரு மனஉளைச்சலில் இருந்து வெளியே வர முயன்று கொண்டிருக்கிறேன். இப்படியெல்லாம் வழியாதே. நிறுத்து’ என்று கறாராக சொல்லி விடலாம்.

Published:Updated:
பிக்பாஸ் அக்ஷரா
என்னதான் சாமர்த்தியமாக மறைத்தாலும் ஒருவரின் அசலான தன்மையை பிக் பாஸ் வீடு எப்படியும் வெளியே கொண்டு வந்து விடும். அவர்களை அவர்களே பார்த்துக் கொள்வதற்கான அரிய சந்தர்ப்பம் இது. திருத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் கூட. ராஜூவின் கோபம் இப்போது அடுத்த டிகிரியைத் தொட்டிருக்கிறது என்றாலும் அவர் மிகுந்த கட்டுப்பாடுடன் அதைக் கையாண்டது பாராட்டத்தக்கது.

“யாராவது கத்தினா எனக்குப் பிடிக்காது” என்று வந்த புதிதில் சொன்ன அக்ஷரா, இப்போதெல்லாம் பிரியங்காவையும் தாண்டி ஹைடெஸிபலில் கத்துகிறார். அது சந்தோஷமாக இருந்தாலும் சரி; கோபமாக இருந்தாலும் சரி. அவரின் கூச்சல் காதைக் கிழிக்கிறது. நம் வீட்டின் தொலைக்காட்சி ஸ்பீக்கர்கள் இம்சையை அனுபவிக்கின்றன. நேற்றைய எபிசோடில் அவரின் உச்சபட்ச கோபம் வெளிப்பட்டது.

நன்றாகக் கவனித்தால், அவரின் கொலைவெறி கோபம் ராஜூவின் மீதல்ல. ராஜூ ஒரு மீடியம்தான். அக்ஷராவின் நேரடி கோபம் பிரியங்காவின் மீதுதான் என்பது வெளிப்படை. ஒரு பெண், ஓர் ஆணின் மீதுள்ள கோபத்தைக்கூட எளிதில் மன்னித்து விடுவார். ஆனால் இன்னொரு பெண்ணின்மீது ஏற்படும் பகைமையின் சூடு அடங்குவது வெகு கடினம்.

அக்ஷரா
அக்ஷரா

அக்ஷரா இதுவரையான வாழ்க்கையில் எந்தவொரு எதிர்ப்பையும் சிரமத்தையும் சந்தித்திராத செளகரியமான சூழலில் வாழ்ந்தவர் என்பதாகத் தெரிகிறது. பிக் பாஸ் வீடு அவருக்கு பல விஷயங்களைக் கற்றுத்தருகிறது. கோடி ரூபாய் தந்தாலும் கிடைக்காத அனுபவத்தை அவர் சம்பளம் வாங்கிக் கொண்டு பெறுகிறார்.

தன் வாழ்க்கையில் துளி கூட துன்பத்தைக் காணாத முறையில் வளர்க்கப்பட்ட சித்தார்த்தன், முதன்முறையாக மரணத்தைக் கண்ட போது ஞானம் வந்து புத்தனாகிறான். மற்றவர்கள் வெறும் ‘கத்தர்’களாகிறார்கள்.

எபிசோட் 74-ல் என்ன நடந்தது?

அபிநய்யின் இடம் காலியானவுடன் அதை அடைவதற்காக அமீர் மிகவும் போராடுவதைப் போல் தெரிகிறது. 'இத்தனை பிரச்னைகள் அதில் ஏற்கெனவே நடந்துள்ளதே, இதனால் தனக்கும் பிரச்னைகள் வரக்கூடுமே?’ என்பதைப் பற்றி அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை. அவர் பாவனியிடம் அசடு வழிவதும் Flirt செய்வதும் மிக அப்பட்டமாகத் தெரிகிறது.

ஆனால் பாவனியோ ‘தம்பி’ என்கிற தடுப்பாயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். இன்னொரு ‘அபிநய்’ பிரச்னை வேண்டாம் என்று அவர் கவனமாக இருக்க முயல்வது தெரிகிறது. ஆனால் இந்த ‘தம்பி’ ஆயுதம் மிக பலவீனமாக இருக்கிறது. ‘தம்பி’ என்கிற விளிப்பு உண்மையான சகோதர உணர்வா அல்லது அட்லி படங்களில் நாயகி அழைக்கும் ரொமான்ஸான ‘தம்பி’யா என்று தெரியவில்லை. தன் பாய்பிரெண்டின் பெயரை மொபைலில் ‘அண்ணா’ என்று பாதுகாப்பாக சேமித்து வைத்திருக்கும் இளம்பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

‘மீண்டும் ஒரு அபிநய்’ வேண்டாம் என்று பாவனி உண்மையாகவே கருதுவார் எனில் அமீரை அமர வைத்து ‘இப்போதுதான் ஒரு மனஉளைச்சலில் இருந்து வெளியே வர முயன்று கொண்டிருக்கிறேன். உனக்கு உண்மையாகவே என் மீது அன்பிருந்தால் எனக்கு பிரச்னை வருவது போல் நடந்து கொள்ளாதே. இப்படியெல்லாம் வழியாதே. நிறுத்து’ என்று கறாராக சொல்லி விடலாம். ‘மூஞ்சி மேல என்னால சொல்ல முடியல’ என்கிற பழைய பாட்டை மறுபடியும் பாடக்கூடாது.

பாவனி
பாவனி

“தம்பி.. அக்கா ரோஸ்மில்க் வாங்கித் தரேண்டா”

மறுபடியும் அதேதான். இது இரு தனிநபர்கள் குறித்தான பிரச்னை. இதைப் பற்றி வம்பு, அவதூறு பேச மூன்றாம் நபருக்கு இடமில்லை. இவர்களின் விஷயம் சக போட்டியாளர்களையோ, அல்லது விளையாட்டையோ நேரடியாகப் பாதிக்காத வரை இதுவொரு ‘பிரச்னையே’ அல்ல.

உருளைக்கிழங்கும் ஐந்து நிமிடக் கணக்கும்

அடுத்த சவாலை ஆரம்பித்தார் பிக் பாஸ். பனிக்கட்டி தூளின் மீது நின்று கொண்டு உருளைக்கிழங்கு உரிக்க வேண்டும். இதே சமயத்தில் மனதில் ஐந்து நிமிடங்களை கணக்கிட வேண்டும். இந்தக் கணக்கை சரியாக முடிக்கும் போட்டியாளர் வெற்றியடைவார். இதுவொரு கவனகப்போட்டி. இரண்டு செயல்களை புறவயமாகச் செய்து கொண்டே உள்ளே இன்னொரு கணக்கை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய டாஸ்க் முடிந்ததும், உருளைக்கிழங்கை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அபிநய். இது பிரியங்கா செய்ய வேண்டிய விஷயமாயிற்றே?!

இந்தப் போட்டியில் 5:41 என்கிற நெருக்கமான நேரத்தில் சஞ்சீவ் வந்தார். அதிகபட்சமாக 8:16 என்கிற நீளமான நேரத்தில் வருண் வந்ததால், அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். “ஐந்து நிமிடங்களை தொடர்ச்சியாக எண்ணும்போது எந்த நிமிடத்தை முடித்தோம் என்று குழப்பம் வந்து விடும்” என்று சஞ்சீவ் சொன்ன போது “நான் ஒரு நிமிடத்திற்கு ஒரு உருளைக்கிழங்கு என்று கணக்கு வைத்துக் கொண்டேன்” என்கிற உத்தியைச் சொல்லி ஆச்சர்யப்படுத்தினார் பிரியங்கா.

பாயசம் என்னும் பெரும் பிரச்னை

தாமரை சமைத்த உணவை உண்ண மாட்டேன் என்கிற ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் பாவனி. ராஜூ சமைத்து முடித்த பின் சாப்பிடுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார். “என்ன இவ... இப்படி பண்றா?” என்று நிரூப் ஆட்சேபிக்க, “தாமரை செய்ததும் தப்புதான். இன்னமும் மன்னிப்பு கூட அவ கேட்கலை. பாவனியை சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. அவளோட விருப்பம்” என்றார் பிரியங்கா. ஒருவேளை தாமரையுடன் சுமூகமான உறவு பிரியங்காவிற்கு இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பதை யூகிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

அமீர் ரொமான்ஸாக பேச முயல, அவரை ‘தம்பி’ என்கிற விளிப்பில் பாவனி தடுத்துக் கொண்டிருந்த விளையாட்டு இன்னமும் தொடர்ந்தது. “நீயா பேசியது... என் அன்பே... நீயா பேசியது’ என்று அமீர் ‘திருமலை’யாக மாறி பாட்டுப் பாட, ‘All Indians are my brothers and sisters’ என்று பாவனி அதிரடிச் சிரிப்புடன் சொன்னபோது பாவனி ஆர்மியில் பலரும் ஒரு கணம் திடுக்கிட்டு ‘தேசம் மாறிவிடலாமா?’ என்று யோசித்திருப்பார்கள். இவர்களின் விளையாட்டிற்கு பிக்பாஸை வேறு சாட்சியாக அழைத்தார்கள். ‘ஆமாம்டா... நான் இன்னமும் பண்ணாத வேலை அது மட்டும்தான்’ என்று பிக் பாஸ் உள்ளுக்குள் காண்டாகியிருக்கக்கூடும்.

பாவனி - அமீர்
பாவனி - அமீர்

உடைந்தது பலூன்கள் மட்டுமல்ல, இதயங்களும்தான்!

உருளைக்கிழங்கைத் தொடர்ந்து பலூனைக் கையில் எடுத்தார் பிக் பாஸ். போட்டியில் கலந்துகொள்ள தகுதியுள்ளவர்களுக்கு சமமான எண்ணிக்கையில் பலூன்கள் தரப்படும். அவர்கள் அதை பாதுகாத்துக் கொள்ளும் அதே வேளையில், இன்னொரு நபரின் பலூன்களை உடைக்கலாம். இறுதியில் குறைந்த எண்ணிக்கையில் பலூன்களை வைத்திருப்பவர் போட்டியில் இருந்து வெளியேறுவார்.

ஆட்டம் ஆரம்பித்தது. யாரும் யார் பலூன்களையும் உடைக்காமல் ஜாக்கிரதையாக நின்று கொண்டிருக்க ராஜூ மட்டும் தன் நிலையை விட்டு துணிச்சலாக வெளியே வந்து சுற்றிச் சுற்றி வந்து நடனம் ஆடினார். “யாராவது ஆரம்பிங்கப்பா” என்ற சஞ்சீவ், பிரியங்காவின் ஒரு பலூனை உடைத்து பிள்ளையார் சுழி போட்டார். பிறகு ஆரம்பித்தது அந்த ரணகள ஆட்டம். தாமரை பயத்தில் அலற, சஞ்சீவின் அனைத்து பலூன்களும் உடைக்கப்பட்டன.

பாவனி பிரச்னைக்குப் பிறகு அபிநய்யும் அக்ஷராவும் பாசமிகு அண்ணன் - தங்கையாக மாறியிருக்கிறார்கள். எனவே அவர்கள் இந்த டாஸ்க்கில் கூட்டணி அமைத்துக் கொண்டார்கள். ‘நான் உன் பலூனை உடைக்க மாட்டேன். வா... அக்ஷராவை காலி பண்ணுவோம்’ என்று பிரியங்கா ராஜூவை அழைக்க, அக்ஷரா ஹைடெஸிபலில் அலறி ஊரைக் கூட்டினார். ரொமான்ஸ் வேறு, டாஸ்க் வேறு என்று தெள்ளத் தெளிவாக கோடு போட்டிருந்த அமீர், அபிநய்யுடன் கூட்டணி அமைத்து பாவனியின் பலூன்களை உடைத்தார். பாவனியின் பலூன்களை உடைத்தபோது அபிநய் அடைந்த ஆவேசத்தை தனியாகக் கவனிக்க வேண்டும். பதிலுக்கு பாவனி பாய்ந்து சென்று அபிநய்யின் பலூன்களை உடைக்க முயல அதை வந்து தடுத்தார் அக்ஷரா. (கதையில் என்னவொரு ட்விஸ்ட்?!). பாவனியின் அனைத்து பலூன்களும் உடைக்கப்பட்டதால் அவர் அவுட் ஆகி வெளியேற நேர்ந்தது.

பலூன் டாஸ்க்
பலூன் டாஸ்க்

அக்ஷரா செய்த அதிரடி ஆக்ஷன்

ராஜூ அகன்றிருக்கும் சமயம் பார்த்து அவரின் பெரும்பாலான பலூன்களை பிரியங்கா உள்ளிட்ட சிலர் உடைக்க ராஜூவிற்கு ஒரு பலூன்தான் கடைசியில் மிஞ்சியது. இதனால் கொலைவெறியில் இருந்த ராஜூ, அக்ஷராவை ஆவேசத்துடன் நெருங்க “நான் யார் பலூனையும் உடைக்கல. என்கிட்ட வராத” என்றார். அக்ஷரா சொல்வது உண்மைதான். இதை நம்பி அபிநய்யின் பலூன்களை உடைக்க ராஜூ சென்ற சமயம் பார்த்து, ராஜூவின் எஞ்சியிருந்த ஒரேயொரு பலூனை அக்ஷரா உடைத்தார். அவருடைய டாஸ்க் கூட்டாளியின் பலூனை ராஜூ உடைக்கச் சென்றதால் அக்ஷரா எடுத்த திடீர் ஆக்ஷன் இது.

ஆனால், அக்ஷரா செய்த இந்தக் காரியம்தான் இன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜூவின் சலனமில்லாத முகத்தில் கோபத்தை வரவழைத்தது. 'நான் எவருடைய பலூன்களையும் உடைக்கவில்லை'என்று சொல்லிவிட்டு தன் பலூனை அக்ஷரா எப்படி உடைக்கலாம் என்பது ராஜூவின் கோபம்.

இது ஒருபக்கம் இருக்கட்டும். ஆட்டத்திற்குள் மறுபடியும் செல்வோம். அமீரிடம் மிஞ்சியிருந்தது ஒரு பலூன். அக்ஷராவின் பலூன்கள் அப்படியே இருந்தன. “சூப்பர். We want more action” என்று பிரியங்காவும் நிரூப்பும் இந்த இருவரையும் உசுப்பேற்றிவிட்டார்கள். அமீர் தன் ஒரு பலூனை பாதுகாக்கும் அதே வேளையில் அக்ஷராவின் பல பலூன்களை உடைக்க வேண்டும். இது சிரமமான காரியம். எனவே அக்ஷராவை பலவந்தமாக இழுத்துப் பிடித்துச் சென்று இன்னொரு கையால் அவருடைய பலூன்களை உடைக்க முயன்றார் அமீர். ஆனால் இது விடாக்கண்டன், கொடாக்கண்டன் போட்டியாக அமைந்தது. அமீருடன் சிறப்பான முறையில் மல்லுக்கட்டினார் அக்ஷரா. இவருக்கு ஏதாவது அடிபட்டு விடுமோ என்று தாமரை உள்ளிட்டவர்கள் பயந்து அலறினார்கள்.

ராஜூவின் அழிச்சாட்டியம்

இந்த மல்லுக்கட்டுதலில் பிரச்னையேதும் வந்து விடக்கூடாது என்று பாதுகாப்பாகவே விளையாடினார் அமீர். “நான் உன்னை இழுக்கப் போகிறேன்” என்பதையெல்லாம் சொல்லிவிட்டே செய்தார். அக்ஷராவும் போட்டியிட தயாராகவே இருந்தார். இவர்களின் போராட்டத்தின் நடுவே ராஜூ அமீருக்கு சப்போர்ட் செய்யும் நோக்கில் “வுட்றாத அமீரு” என்று குரல் தரவே அக்ஷராவிற்கு கெட்ட கோபம் வந்தது. “அவங்க விளையாடட்டும். யாரும் தலையிட வேண்டாம்” என்றார் நடுவர் வருண். தனது போராட்டத்தின் இடையே ராஜூவிடமும் அக்ஷரா வாக்குவாதம் செய்ய, “இப்ப நான் உன் பலூனை உடைக்கட்டுமா?” என்று கேட்ட ராஜூ, அக்ஷராவின் பலூன்களை அழிச்சாட்டியமாக உடைக்க ஆரம்பிக்க, நடுவர் வருண் வந்து “நீ அவுட் ஆயிட்ட பிறகு உடைப்பது தவறு” என்று விலக்கி அனுப்பினார்.

அமீரும் அக்ஷராவும் தொடர்ந்து போராட பஸ்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார் பிக் பாஸ். முதலில் தன் பலூன்களை இழந்த சஞ்சீவ் போட்டியில் இருந்து வெளியேறினார். பலூன் ஆட்டம் முடிந்தது. ஆனால், பிறகு ஆரம்பித்தது அந்த ரணகள வாக்குவாதம். “என்கிட்ட மட்டும்தான் உங்க வாய் திறமையை காட்டுவீங்களா ராஜூ அண்ணா... மத்தவங்க கிட்ட கேக்க மாட்டீங்களா? நான் ஒரு பலூன்தான் உடைச்சேன்” என்று ஒருபக்கம் அக்ஷரா அலற, “நீ பொய் சொல்லி ஏமாத்திட்டே” என்று அழும்பு செய்தார் ராஜூ. ஆனால் “உன் பலூனை உடைக்க மாட்டேன்” என்று முதலில் சொன்ன பிரியங்கா, பிறகு ராஜூவின் பலூன்களை உடைத்ததில் ஏன் ராஜூவிற்கு கோபம் வரவில்லை?

ராஜூ
ராஜூ
இது மட்டுமல்ல, ஆட்டத்தில் உத்தியை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். சஞ்சீவ் தோற்ற விஷயம் எப்போதோ நடந்துவிட்டது. ஆட்டத்தின் முடிவும் தெரிந்து விட்டது. எனில் மிச்சமிருக்கிற ஆட்டத்தை இவர்கள் ஜாலியாகவே ஆடியிருக்கலாம். ராஜூவின் கோபத்திலும் செய்கையிலும் நியாயமிருப்பது போல் தெரியவில்லை. இந்தப் பிரச்னையில் அக்ஷராவின் கோபம் நியாயமே. “இந்த விஷயத்தில் மட்டுமல்ல. ராஜூ பல விஷயங்களிலும் எனக்கு பாரபட்சம் பார்க்கிறார். ஆனால் அவரின் பக்கம் நான் பலமுறை நின்றிருக்கிறேன்” என்பது அக்ஷராவின் ஆதங்கம்.

எதிரிக்கு எதிரி நண்பன்

இதற்கிடையில் இன்னொரு மெளனமான சண்டையும் நடந்தது. அபிநய்யுடன் கூட்டணி அமைத்து தன் பலூன்களை அமீர் உடைத்தது தொடர்பாக பாவனிக்கு கோப்பம் வந்தது. (இது தெலுங்கு கோபம்!) “இது கேம்தானே... இதற்கு ஏன் சீரியஸ் ஆகறே?” என்று கேட்டார் அமீர். தன் பலூன்களை அபிநய் உடைக்காமல் வேறு எவராவது உடைத்திருந்தால் பாவனிக்கு இத்தனை கோபம் வந்திருக்காது. இந்த எளிய லாஜிக் அமீருக்குப் புரியவில்லை.

“இதுக்குத்தான் சொல்றது. டீம்லாம் போடக்கூடாது. அவங்க அவங்க ஆட்டத்தை தனியா ஆடுங்க” என்றார் நிரூப். வருண் தொடர்ந்து சுட்டிக்காட்டியதும் “தப்புதான். விட்ரு... போதும் உன் உபதேசம்” என்று மன்னிப்பு கேட்ட ராஜூ, வருணின் தலையீடு காரணமாக காண்டாகவும் செய்தார். அக்ஷராவிற்கு ஏதாவது பிரச்னை என்றால் மட்டும் வருணின் குரல் உயர்ந்துவிடுவது அவரை எரிச்சல்படுத்தியிருக்கலாம். டாஸ்க் சமயத்தில் அக்ஷராவுடன் விடாமல் மல்லுக்கட்டிய சாகசகத்திற்காக “உன்னை ரொம்ப பிடிச்சிருக்குடா” என்று அமீரை பாசத்துடன் கட்டிக் கொண்டார் பிரியங்கா. (எதிரிக்கு எதிரி நண்பன்).

பிரியங்கா
பிரியங்கா

“அவ ஏற்கெனவே அமீர் கிட்ட போராடிட்டு இருக்கப்ப, நீயும் அமீரை சப்போர்ட் பண்ணா அவளுக்கு கோபம் வராதா?” என்று ராஜூவிடம் சரியான நியாயத்தைப் பேசினார் சஞ்சீவ். “அவளுக்கு பிரியங்காவைப் பிடிக்காது. அதுதான் பிரச்னை” என்றார் ராஜூ.

பலூனைத் தொடர்ந்து அடுத்த சவாலை அறிவித்தார் பிக் பாஸ். வளையங்களை கொம்பில் தூக்கிப் போடும் போட்டி. இதில் அனைத்து வளையங்களையும் மொத்தமாக தூக்கிப் போட்டு உலக சாதனையை ஏற்படுத்த முயன்றார் தாமரை. இந்தப் போட்டியில் பிரியங்கா தோல்வியடைந்தார். பலூன் டாஸ்க் முடிந்து வெகுநேரமாகியும் அதன் சத்தம் வீட்டில் விடாமல் கேட்டுக் கொண்டேயிருந்தது. அது தொடர்பான விவாதங்கள், உரையாடல்கள் தொடர்ந்தன.

“நீ பத்தாங்கிளாஸ் பெயில்... நான் எட்டாங்கிளாஸ் பாஸ்”

அடுத்ததாக, டிவியில் காட்டப்படும் ஐந்து புகைப்படங்களைப் பார்த்து அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல வேண்டும் என்கிற போட்டியை பிக் பாஸ் அறிவித்தார். இதில் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லி அசத்தினார் அபிநய். (இதிலிருந்து என்ன தெரிகிறது?! அபிநய் எல்லாவற்றையும் கவனமாக நோட் செய்கிறார்!). இரண்டே மதிப்பெண்களை மட்டும் பெற்ற ராஜூ “அஞ்சும் கரெக்ட்டாவா சொன்னே? நீயெல்லாம் ஒரு மனுஷனா?” என்று அபிநய்யை கிண்டலடித்து மகிழ்ந்தார். அபிநய்க்கு ஒன்றிரண்டு பதில்கள் அதிர்ஷ்டத்தால் சரியாக அமைந்திருந்தன.

பாவனி மதிப்பெண் ஒன்று கூட பெறாமல் பரிதாபமாக போட்டியில் இருந்து வெளியேறினார். அதிர்ஷ்டவசமாக ஒரு மதிப்பெண்ணைப் பெற்று தப்பித்ததால் தாமரைக்கு ஏக குஷி. “நீ பத்தாங்கிளாஸ் பெயில்ண்ணே... நான் எட்டாங்கிளாஸ் பாஸூண்ணே” என்கிற காமெடி போல “அந்தப் புள்ளய விட எனக்கு அறிவு சாஸ்தி” என்று பாவனியை ரகசியமாகக் கலாய்த்து மகிழ்ந்தார். (இந்த எழுபது நாட்களில் தாமரையிடம்தான் எத்தனை முன்னேற்றம்?! பிக் பாஸையே மிஞ்சிவிடுவார் போல!).

பகடையாட்டம் ஆரம்பம்

போட்டியாளர்களை உருட்டிப் போடுவது போதாதென்று, அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பகடைகளை உருட்டி விளையாட திட்டமிட்டார் பிக் பாஸ். போட்டியில் வெற்றி பெற்றவர்கள், வெளியேறிவர்கள் தவிர மீதமிருந்தவர்களுக்கான போட்டி இது. இதில் வெற்றி பெறுபவர் எவிக்ஷனில் இருந்து தப்பிப்பார்.

கார்டன் ஏரியாவில் போட்டியாளர்கள் புகைப்படங்கள் உள்ள பெரிய அளவு பகடைக்காய் இருக்கும். மூன்று பஸ்ஸர்கள் முடிந்த பிறகு யாருடைய புகைப்படம் மேலே பார்த்தபடி இருக்கிறதோ, அவர் தோல்வி அடைந்ததாக பொருள். எனவே தன்னுடைய புகைப்படம் மேலே வராமல் போட்டியாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக முட்டி மோத வேண்டும்.

“டீல் போட்டுக்கலாமா?” என்றார் அமீர். “மக்களே ரணகளமா விளையாடுங்க. போட்டி சுவாரஸ்யமா அமையணும். வீ வான்ட் மோர் எமோஷன்” என்று நடுவரான பிரியங்கா உசுப்பேற்ற, அதை உற்சாகமாக வழிமொழிந்தார் நிரூப். ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் பகடையின் மீது ஏறி அமர்ந்துவிட்டார் ராஜூ. பெரும்பாலான டாஸ்க்களில் அடக்கி வாசிக்கும் ராஜூ, இப்போது இறங்கி ஆட முடிவு செய்திருப்பது நன்று. ஆனால் அக்ஷராவை எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என்பதுதான் அவரின் உற்சாகத்திற்கு காரணமா என்று தெரியவில்லை.

பகடை டாஸ்க்
பகடை டாஸ்க்

அக்ஷராவின் புரூஸ்லி அடி

“நீ ஏறி உக்காந்துட்டா எப்படித் திருப்பறது?” என்று ராஜூவிடம் அக்ஷரா ஆவேசமடைந்தார். ஒரு கட்டத்தில் அனைவரும் ராஜூவோடு சேர்த்து பகடையை திருப்ப அவர் கீழே விழும்படி ஆகிவிட்டது. “அய்யோ... அடிச்சுக்காம விளையாடுங்கப்பா” என்று வழக்கம் போல் பதறினார் தாமரை. மீண்டும் அடித்துப் பிடித்து ராஜூ மேலே ஏறி அமர “கமான் ராஜூ… சூப்பர்” என்று உற்சாகமாக குரல் தந்தார் பிரியங்கா. இது அக்ஷராவை கடுப்பேற்றியிருக்க வேண்டும்.

“நீ மேல ஏறினா எப்படி உருட்டறது?” என்று மறுபடியும் ராஜூவிடம் மல்லுக்கட்டத் துவங்கினார். பகடையை பலவந்தமாக கீழே உருட்ட வேண்டும் என்பதுதான் இதற்கான விடை. “என்ன பண்றதுன்னா... சும்மா இரு” என்று தத்துவார்த்தமாக ராஜூ பதிலளிக்க, “சரி... நான் சும்மா இருக்கேன்” என்றபடி மூலையில் சென்று கோபத்துடன் அமர்ந்துவிட்டார் அக்ஷரா. இப்போது பகடையில் அக்ஷராவின் புகைப்படம்தான் மேலே பார்த்தபடி இருந்தது. மூன்றாவது பஸ்ஸர் அடித்தால் அக்ஷராதான் தோல்விடைய நேரிடும். “ஆனது ஆகட்டும்” என்று பிடிவாதமாக இருந்த அக்ஷரா, ராஜூவின் அழிச்சாட்டியம் காரணமாக “வேற யாராவதா இருந்தா நிச்சயம் கீழே தள்ளி விட்டுடுவேன். என் அப்பா மீது சத்தியமா சொல்றேன். இனிமே உன்கிட்ட பேச மாட்டேன்” என்று ராஜூவை நோக்கி ஆவேசமாகக் கத்தினார்.

இந்தச் சமயத்தில் பிரியங்கா தலையிட "த... சீ போ...” என்கிற மாதிரி அக்ஷரா வெறுப்பில் கத்தி விட பிரியங்காவின் மண்டைக்குள் ‘சுர்’ ஏறியது. “நடுவரைப் பார்த்தே நீ சொல்ட்டியா... நான் கேக்கத்தான் செய்வேன் என்கிட்டல்லாம் வெச்சுக்காத. நான் யாரு தெரியுமா... நல்லவனுக்கு நல்லவன்... மரியாதை கொடுத்தா மரியாதை கிடைக்கும்” என்றெல்லாம் வீடு கட்ட ஆரம்பித்தார். இப்போது அபிநய் பகடையை உருட்ட முயல “அப்படியே இருக்கட்டும்” என்று கத்திய அக்ஷரா, பகடையின் அருகில் வந்து அதன் மேல் புரூஸ்லி பாணியில் ஒரு கராத்தே வெட்டு வெட்ட... அருகிலிருந்த தாமரை "அய்யய்யோ...” என்று கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டினார்.

அக்ஷராவின் இந்தக் கோபத்தால் வெறுப்புற்ற ராஜூ “இதெல்லாம் பண்ணாத” என்று சொல்ல கோபத்தின் உச்சிக்கே அக்ஷரா சென்ற காட்சியோடு எபிசோட் நிறைந்தது. ‘பகடையை உருட்டுங்கடான்னு அனுப்பி வெச்சா... ஆளுங்க மண்டையை உருட்டறானுங்க... ஹைய்யா. ஜாலி… ஜாலி...’ என்று பிக் பாஸ் உள்ளே உற்சாகம் அடைந்திருக்க வேண்டும்.

பின்குறிப்பு: கட்டுரைகளின் பின்னூட்டங்கள் தானியங்கி முறையில் பரிசீலனை செய்யப்படுகின்றன. ஆட்சேபகரமான வார்த்தைகள் கொண்ட பின்னூட்டங்கள் தவிர்க்கப்படுகின்றன. இந்தத் தொழில்நுட்பம் தற்போது பரிசோதனை முயற்சியில் இருக்கிறது என்பதையும் வாசகர்கள் கருத்தில் கொள்ளவும். நன்றி!