Published:Updated:

பிக் பாஸ் - 88 : `யார் பெரிய ஆளுன்னு முட்டை அடிச்சுக்காட்டுங்க'; Ticket to Finale பரிதாபங்கள்!

பிக் பாஸ் பாவனி - அமீர்

பாவனியிடம் அமீரும் ‘ஸாரி’ சொல்ல “எதுக்கு ஸாரி? நீயேதான் என்கிட்ட முதல்ல ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சே.. அப்புறம் நீயேதான் ‘ஃபோகஸா ஆடச் சொல்றாங்க’ன்னு என்னை நாமினேட் பண்ணே..

பிக் பாஸ் - 88 : `யார் பெரிய ஆளுன்னு முட்டை அடிச்சுக்காட்டுங்க'; Ticket to Finale பரிதாபங்கள்!

பாவனியிடம் அமீரும் ‘ஸாரி’ சொல்ல “எதுக்கு ஸாரி? நீயேதான் என்கிட்ட முதல்ல ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சே.. அப்புறம் நீயேதான் ‘ஃபோகஸா ஆடச் சொல்றாங்க’ன்னு என்னை நாமினேட் பண்ணே..

Published:Updated:
பிக் பாஸ் பாவனி - அமீர்

Questionnaire எனப்படும் வினாப்பட்டியல் பல்வேறு துறைகளில், பல்வேறு நோக்கங்களில் பயன்படுத்தப்படும் ஒரு சமாசாரம். இதன் மூலம் கிடைக்கும் விவரங்களைத் தொகுத்து ஆய்விற்காக பயன்படுத்த முடியும். குறிப்பாக உளவியல் போன்ற துறைகளில் இது மிகவும் நுட்பமான முறையில் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவரின் ஆழ்மனதில் உறைந்துள்ள விஷயங்களை வெளிக்கொணர்வதற்காக இந்த வினாப்பட்டியல் மிகவும் திட்டமிட்டு அமைக்கப்படுகின்றன. ‘உங்களுக்குப் பிடித்த நடிகை யார்?” என்பது முதற்கொண்டு ஒன்றுக்கொன்று நேரடியான தொடர்பில்லாத கேள்விகளாக அமைந்திருக்கலாம். ஆனால் இரண்டாவது கேள்விக்கும் பன்னிரெண்டாவது கேள்விக்கும் ஒரு தொடர்பும் கொக்கியும் இருக்கக்கூடும். இந்தப் பதில்களின் மூலம் தன்னிச்சையாக வெளிப்படும் துண்டு துண்டு உண்மைகளைத் தொகுத்துக்கொண்டு பதில் சொல்பவரின் மனதில் உள்ள சித்திரத்தைக் கைப்பற்ற முடியும். பிடித்த நடிகை இலியானாவிற்கும் பிடித்த உணவு இடியாப்பத்தையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி விட முடியும்.

நிரூப்
நிரூப்

பிக்பாஸில் நேற்று நடந்த டாஸ்க்கின் நோக்கமும் இதுவே. ஆனால் இது மிகவும் அடிப்படையான பாணியில், நேரடியான கேள்விகளுடன் அமைந்திருந்தது. இதன் மூலம் ஒரு போட்டியாளரை சக போட்டியாளருடன் கோர்த்து விட்டு பூசல்களை ஏற்படச் செய்வதுதான் அதன் பிரதான நோக்கம். அதைப் போலவே யாருக்கு யாரைப் பிடிக்காது என்பதும் அம்பலமாகும். “என்னடா விளையாடறீங்க.. இதுக்கா என்னை வெளியே அனுப்பிச்சீங்க.. நான் உள்ளே இருந்திருந்தா செமையா விளையாடியிருப்பேனே?” என்று இந்த டாஸ்க்கின் இறுதியில் நிரூப் ஆதங்கப்படுவதிலும் கோபப்படுவதிலும் நிறைய நியாயம் உள்ளது. முட்டை டாஸ்க்கில் “விளையாட மாத்தேன்.. போ…” என்று தாமரையும் பாவனியும் ஒரு பக்கம் முரண்டு பிடித்தார்கள். கட்அவுட் டாஸ்க்கில் பிரியங்காவும் ராஜூவும் சில கேள்விகளுக்கு தன்னையே நாமினேட் செய்து சேஃப் கேம் ஆடுகிறார்கள். பார்க்கும் நமக்கே நெருடல் ஏற்படும் போது நிரூப் பலமாக ஆட்சேபிப்பதில் எவ்வித தவறும் இல்லை. நிரூப்பின் கேள்வி புரியாததுபோலவே வாக்குவாதம் செய்ததன் மூலம் தானும் ‘இன்னொரு வகையான தாமரை’ என்பதை பிரியங்கா நிரூபித்தார்.

எபிசோட் 88-ல் என்ன நடந்தது?

முட்டை டாஸ்க்கில் பாவனியை தடுத்து நிறுத்தியதற்காக ‘அடி ஏதும் படலையே?’ என்று ராஜூ விசாரித்தது ஒரு சிறப்பான செயல். இந்த சீசனின் மூலம் ஒரு முக்கியமான விஷயத்தை ஒருவர் கற்றுக் கொள்ள முடியும் என்றால் அது ராஜூவின் Anger Management தான். அவர் நடிக்கிறாரோ அல்லது உண்மையாகவே கட்டுப்பாடுடன் இருக்கிறாரோ, எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இப்படி ஒருவர் நடித்தால்கூட சில நாட்களில் அப்படியேகூட பழகிவிடும். இந்த சீசனில் ஒரு பார்வையாளர் எடுத்துக் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயமாக இதைப் பார்க்கிறேன். ஆனால் இந்தக் கட்டுப்படுத்தல் தன்மை உண்மையாக நிகழ்வதாக இருக்க வேண்டும். உள்ளுக்குள் பொங்கி வரும் அலையை, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்தின் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் போல, செயற்கையாக சிரித்துக் கட்டுப்படுத்தினால் உபயோகம் ஏதுமில்லை.

பாவனியிடம் அமீரும் ‘ஸாரி’ சொல்ல “எதுக்கு ஸாரி? நீயேதான் என்கிட்ட முதல்ல ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சே.. அப்புறம் நீயேதான் ‘ஃபோகஸா ஆடச் சொல்றாங்க’ன்னு என்னை நாமினேட் பண்ணே.. அப்ப உன்கிட்ட நான் பேசாம இருக்கறதுதானே பெட்டர்?” என்று சரியான கேள்வியை பாவனி கேட்க, “ஆமாம். சுயநலமா இருந்துட்டேன்” என்று அடிபட்ட முகத்துடன் ஒப்புக் கொண்டார் அமீர். தாமரைக்கு தேநீர் உபசரித்து நட்பை புதுப்பித்துக் கொண்ட சஞ்சீவின் செய்கையும் பாராட்டத்தக்கது. “நான் விளையாட வேணாமின்னு பார்க்கறேன்” என்று சிணுங்கிய பாவனியிடம் "கொன்டே போடுவேன்” என்று செல்லமாக மிரட்டினார் நிரூப்.

தாமரை  - நிரூப்
தாமரை - நிரூப்

‘பிரியங்காவும் தாமரையும் காய் விட்டுட்டாங்களாம்’

“தாமரை கிட்ட பேசுங்களேன்” என்று ராஜூ பிரியங்காவிடம் வேண்டுகோள் வைக்க, “இனிமே என் வாழ்க்கையிலேயே அவ கூட பேச மாட்டேன்” என்கிற அளவிற்கான எரிச்சலில் பிரியங்கா இருக்கிறார். ஆனால் அடுத்த நாளே ‘முத்தா’ கொடுத்து அவர் சமாதானம் ஆனாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. உணர்ச்சிக் கொந்தளிப்பின் இரு முனைகளில் இப்படி ஒருவர் ஊசலாடுவது முறையானதல்ல.

“பிரியங்காதான் உன் கழுத்தைப் பிடிச்சு முதல்ல தள்ளினா.. அவளுக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கறதால அவளைப் பத்தி பேச இங்க பயப்படறாங்க. பகைச்சுக்க விரும்பலை. நீ கவலைப்படாதே… உனக்கும் ஒரு ரசிகர் கூட்டம் உருவாயிடுச்சு” என்று தாமரையை பல்வேறு விதமாக உசுப்பேற்றிக் கொண்டிருந்தார் நிரூப். “ஆட்டத்துல நீயும் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும். ‘உன்னை என்ன பண்றேன் பாரு’ன்னு பிரியங்கா மிரட்டறா… வருண், அக்ஷரா போயிடறதுக்கு முன்னாடியே நானும் கேமை விட்டு போகணும்னு நெனச்சேன். இப்ப நீதான் எனக்கு இருக்கே.. இல்லைன்னா நான் அனாதைதான்” என்று நிரூப்பிற்கு உருக்கமாக பதில் அளித்தார் தாமரை. அவர் மற்றவர்களை நம்பியா இந்த ஆட்டத்திற்குள் நுழைந்தார்? அநாதை என்பதெல்லாம் அநாவசிய வார்த்தை பிரயோகம்.

அமீரை அமர வைத்து மிக நீளமாக பேசிக் கொண்டிருந்தார் நிரூப். பக்கத்தில் இருந்தவர் ராஜூ. நிரூப் பேசியதின் சாரம் இதுதான். “பாவனி அவளால முடிஞ்ச அளவிற்கு போராடினா… பிரியங்காவும் ஓகே.. ஆனா சில பேர் சேஃப் கேம் ஆடினாங்க. அவங்க முட்டை அப்படியே இருந்தது.. இப்படியா விளையாடறது?” என்று நிரூப் விமர்சித்தது சிபி மற்றும் சஞ்சீவ் குறித்தது என்பது வெளிப்படை. நிரூப் முன்வைக்கும் புகார் உண்மைதான். ‘முட்டை டாஸ்க்’ நியாயமாக நடக்கவில்லை. அதில் மறைமுக கூட்டணியும் பாரபட்சமும் நிறைந்திருந்தன.

“இது சீரியலா.. இல்ல ரியாலிட்டி ஷோவா?”

ஒருபக்கம் நிரூப்பிடம் “நீ இல்லைன்னா நான் அநாதை” என்று கூறிய தாமரை, இன்னொரு பக்கம் ராஜூவிடம் “நீயும் என்னை ஆதரிக்கவில்லையே?.. நான் அநாதை ஆயிட்டேன்" என்று ஆதங்கப்பட, “நான்தான் நிழல்ல வந்து நில்லுன்னு என் இடத்தை விட்டுக் கொடுத்தேன்… என் முட்டையை எடுத்துக்கோன்னு கடைசில சொன்னேன்.. நீ எதையும் கேட்காம.. இப்படி வண்டியை திருப்பினா நான் என்ன செய்வேன்..” என்று சமாதானப்படுத்தினார். “உனக்குத்தாம்ப்பா ஏஸி தேவை. நான்லாம் வெயில்ல நின்னு வளர்ந்தவ’ என்று இதற்கும் நொட்டு சொன்னார் தாமரை.

“எதிர்பார்ப்பு இருந்தாதான் பிரச்னை வரும். இல்லாம ஆடுங்க” என்கிற சரியான ஆலோசனையை சிபி சொல்ல அதை தாமரை ஆமோதித்தார். “என்னமோ. வர.. வர நீ வித்தியாசமா நடந்துக்கறே” என்று ராஜூ சொல்ல “உனக்குப் புரியலைன்னாநான் என்ன பண்றது?” என்று தாமரை தன் ஆதங்கத்தை இன்னமும் கைவிடவில்லை.

தனது Calm Spot- ஆன கிச்சன் மேடையின் பின்பக்கம் அமர்ந்திருந்த பிரியங்கா, “இது சீரியலா.. இல்ல ரியாலிட்டி ஷோவான்னு சந்தேகமா இருக்கு” என்று தனக்குள் பேசி அலுத்துக் கொண்டார். தாமரைக்கும் ராஜூவிற்கும் இடையில் நடந்த உரையாடல்களை எல்லாம் அவர் கேட்டுக் கொண்டிருந்தார் போலிருக்கிறது. எனில் விஜய்டிவியின் அடுத்த சீரியலில் பாசமிகு அக்காவாக தாமரையும் அருமைமிகு தம்பியாக ராஜூவும் நடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதைப் போல்தான் தெரிகிறது.

அமீர் - சிபி
அமீர் - சிபி

முட்டை டாஸ்க்கின் அடுத்த பரிமாணம்

தனது அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக்பாஸ். இதிலும் முட்டை பிரதான பங்கு வைத்தது. Ticket to Finale போட்டியில் நீடிக்கும் போட்டியாளர்களின் கட்அவுட்கள் கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருக்கும். பிக்பாஸ் சில கேள்விகளைக் கேட்பார். அந்தக் கேள்விக்கு உரிய நபர் யார் என்று தீர்மானித்து சம்பந்தப்பட்டவரின் கட்அவுட்டின் மீது முட்டையை உடைக்க வேண்டும். அதிக முட்டைகள் வீசப்படும் இரண்டு நபர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இதுதான் சவால். இதில் சிலர் நேர்மையாக ஆடினார்கள். சிலர் சேஃப் கேம் ஆடினார்கள். நேர்மையாக ஆடியவர்களே சில கேள்விகளுக்கு சேஃப் கேம் ஆடிய தலைகீழ் மாற்றமும் நிகழ்ந்தது.

முதல் கேள்வி பிக்பாஸிடமிருந்து வந்தது. “இத்தனை நாள் கழிந்தும். இவரைப் புரிஞ்சுக்கவே முடியலை.. அது யார்?” – “அமீரைப் புரிஞ்சுக்க முடியலை” என்று முதல் முட்டையை அடித்தார் சிபி. “தாமரைக்கும் பிரியங்காவிற்கும் நடக்கற சண்டை என்னன்னு புரியல” என்று பிரியங்காவைத் தேர்ந்தெடுத்தார் ராஜூ. ‘இவரின் மெளனம் புரியல’ என்று அமீரை அடித்தார் சஞ்சீவ். சிபியை பதிலுக்கு அடித்து பழிதீர்த்தார் அமீர். “உன்னைப் பார்த்தா என்னைப் பார்க்கற மாதிரியே இருக்குன்னு வந்த நாள்ல சொன்னாரு. ஆனா எனக்கும் அவருக்கும் இன்னமும் கனெக்ட் ஆகலை” என்கிற காரணத்தைச் சொல்லி சஞ்சீவின் மீது முட்டை அடித்தார் பிரியங்கா.

‘அமளி துமளி நடந்த போது கூட மிக்ஸர் சாப்பிட்டுட்டு இவ்ள தூரம் வந்துட்டாரு’.. என்று யாரைச் சொல்வீர்கள்?” என்பது மாதிரியான கேள்வியை அடுத்ததாக முன்வைத்தார் பிக்பாஸ். ராஜூ சிபியையும், சஞ்சீவ் ராஜூவையும், பிரியங்கா சிபியையும், அமீர் சஞ்சீவையும் சிபி அமீரையும் தேர்ந்தெடுத்து அடித்தார்கள்.

பலூன் மாதிரி பிரச்சினையை பெரிசா ஊதறது யாரு?

“ஒண்ணுமே இல்லாத பிரச்சினையை ஊதி ஊதி பெரிசாக்கறது யாரு?” என்பது அடுத்த கேள்வி. “இத்தூணூண்டு கிண்ணம் சார்.. அதை கடாய் அளவிற்கு பெரிசாக்கிட்டாங்க” என்று சொல்லி பிரியங்காவை அடித்தார் ராஜூ. சஞ்சீவ்வும் பிரியங்காவை தேர்ந்தெடுத்தார். “இருங்கடா. நானும் ஒரு பன்ச் டயலாக் சொல்லிக்கறேன்” என்று வசனம் சொல்லி பிரியங்காவை அடித்தார் சிபி. அமீரின் சாய்ஸூம் பிரியங்கா என்பதாகவே இருந்தது. அதே கிண்ண பிரச்சினையை சுட்டிக்காட்டி ராஜூவை அடித்தார் பிரியங்கா. ஆக இந்தச் சுற்றில் பிரியங்காவிற்கு டேமேஜ் அதிகம்.

“இந்த ஆசாமி யோசிக்காம செய்யும் காரியங்கள் பெரிய பிரச்சினையை ஏற்படுத்துது” என்று அடுத்த கேள்வியை பிக்பாஸ் தூக்கி வீச “நீங்கதான் அது” என்று பிக்பாஸையா சொல்ல முடியும்?! பிரியங்கா அமீரைத் தேர்ந்தெடுக்க, ராஜூவும் அமீரைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் இவர் வீசிய முட்டை கட்அவுட்டில் படவில்லை. இது கணக்கில் எடுக்கப்படுமா, இல்லையா என்று தெளிவில்லை. ‘Truth or dare’ டாஸ்க்கில் ராஜூ கேட்ட வில்லங்கமான கேள்வியைச் சுட்டிக்காட்டி அவர் மீது முட்டையடித்தார் சஞ்சீவ். சிபியும் அமீரும் அதே காரணத்திற்காக ராஜூவை தேர்ந்தெடுத்தார்கள்.

சஞ்சீவ்
சஞ்சீவ்

“நாமினேஷனுக்கு முன்னாடி ஒரு மாதிரி இருப்பாரு.. அப்புறம் வேற மாதிரி மாறிடுவாரு.. அவரு யாரு?” என்பது அடுத்த கேள்வி. “ஆரம்பக்காலத்துல ராஜூ கிட்ட இதைப் பார்த்தேன்.. ஸாரி கோப்பால்..” என்று அவரைத் தேர்ந்தெடுத்தார் பிரியங்கா. “நான் நாமினேட் அதிகம் ஆனதில்லை.. அப்புறம் எப்படி என்னைச் சொல்றாங்கன்னு தெரியலை” என்று பிரியங்காவிடம் விளக்கம் கேட்டார் ராஜூ. இவருக்கு சிபியின் ஆதரவும் இருந்தது. பிரியங்காவின் விளக்கம் திருப்தி தராத காரணத்தினால் தன்னுடைய கட்அவுட்டின் மீதே முட்டை அடித்துக் கொண்டார் ராஜூ. (மறுபடியும் சொதப்ப ஆரம்பிச்சிட்டீங்களே.. கோப்பால்…?!). ராஜூவைப் பார்த்து காப்பியடித்து “என்னாலயும் சொல்ல முடியல” என்று Self Nominate செய்து கொண்டார் சஞ்சீவ். அமீரின் மீது அடித்தார் சிபி.

சிபி
சிபி

அன்பே சிவம் மட்டும் இல்லை; ஆயுதமும்கூட

“அன்பை ஆயுதமாக பயன்படுத்தும் ஆசாமி யார்?” என்பது அடுத்த வில்லங்கமான கேள்வி. இதைக் கேட்டதும் மனதிற்குள் ஒரு பெயர் பெரிதாக அனைவருக்கும் வந்திருக்கும். கடந்த சீசனாக இருந்தால் சந்தேகமே இன்றி ‘அர்ச்சனாவின்’ பெயரைச் சொல்லியிருக்கலாம்.

இதிலும் தன் கட்அவுட் மீதே முட்டை அடித்து சொதப்பிய ராஜூ, “பிக்பாஸ்.. கேள்வியை தப்பா புரிஞ்சுக்கிட்டேன். மாத்தலாமா?” என்று கேட்க, இதற்கு லேட்டாக பதில் அளித்த பிக்பாஸ் “ராஜூ..நீங்க ஒண்ணும் குழந்தை கிடையாது. வீசினது வீசியதுதான். நீங்க முடிவு பண்ணிட்டா அதை நீங்களே மாத்த முடியாது” என்று பன்ச் டயலாக் பேசி ராஜூவை பங்கம் செய்ய, மற்றவர்கள் உதட்டை ‘ப்ப்ப்பர்ர்..’ செய்து சிரித்தார்கள்.

இந்தக் கேள்விக்கு அமீரை பிரியங்கா தேர்ந்தெடுத்தது ஒருவகையில் சரியானதே. ஆனால் இதை மறுத்த அமீர் “அன்பு வேற.. ஃபோகஸ் வேற” என்று பதிலுக்கு பிரியங்காவின் மீது முட்டைக்கறையை ஆவேசமாக ஏற்படுத்தினார். பாவம், இந்த டாஸ்க்கின் மூலம் பாவனியின் பெயர் ஏலம் விடப்பட்டது. பெண்களை வைத்து ஆடப்படும் பகடையாட்டம் என்றும் ஓயாது போல. “உங்க மேலயும் எனக்கு அன்பு இருக்கு. அப்படின்னா நீங்க என் மேல வெச்சிருக்கிறது பொய்யா..” என்று அமீர் கவுன்ட்டர் தர, அதை பலமாக ஆட்சேபித்தார் பிரியங்கா. சிபி, சஞ்சீவ் ஆகியோரும் பிரியங்காவைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். ஆக.. இந்த ரவுண்டிலும் பிரியங்காவிற்கு அதிக டேமேஜ் ஏற்பட்டது.

பிரியங்கா ஆடிய டிஃபென்ஸ் ஆட்டம்

“சொந்தமா யோசிக்காம.. கூட்டத்துல ஒருவராவே வாழறவர் யார்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் பிக்பாஸ். சிபி ராஜூவைத் தேர்ந்தெடுக்க, ராஜூ, அமீர், சஞ்சீவ் ஆகிய மூவரும் சிபியை தேர்ந்தெடுத்தார்கள். ஆக இந்த ரவுண்டில் சிபிக்கு டேமேஜ் அதிகம். இந்தச் சுற்றிலிருந்து பிரியங்கா டிஃபென்ஸ் ஆட்டம் ஆட ஆரம்பித்தார். மற்றவர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்கிற ஜாக்கிரதையுணர்ச்சி அவருக்குள் வர ஆரம்பித்து விட்டது போல. எனவே Self Nominate செய்தார்.

“பேசிப் பழகும் விதத்தில் போலித்தனத்தைக் காட்டுகிறவர் யார்?” என்கிற கேள்விக்கு அனைவருமே சேஃப் கேம் ஆடி தன்னையே ஒவ்வொருவரும் நாமினேட் செய்தது போங்காட்டம். இந்த மாதிரியான விஷயங்கள்தான் நிரூப்பைக் கடுப்பேற்றுகின்றன. போட்டி இறுதி நிலைக்கு வந்த பிறகும் இப்படி பாதுகாப்பாக ஆடுவது தவறாகி விடலாம்.

பிரியங்கா
பிரியங்கா

“இந்த வீட்டில் உண்மையான முகத்தைக் காட்டாமல் நடிப்பவர் யார்?” என்று கேள்வியை மாற்றிப் போட்டார் பிக்பாஸ். “அடிச்சுக்கறாங்க.. கூடிக்கறாங்க.. ரிப்பீட்டு” என்று பிரியங்காவிற்கும் தாமரைக்கும் இடையில் அடிக்கடி நிகழும் விளையாட்டை சுட்டிக் காட்டினார் ராஜூ. இதனால் பிரியங்காவை அவர் தேர்ந்தெடுக்க “நான் ஆட்டத்துலயே இல்லை. எம் பேரை ஏம்ல இழுக்கறே?” என்று ஆட்சேபித்தார் தாமரை. “பிரியங்காவை பிடிக்காதுன்னு நான் எப்பவாவது சொன்னேனா..?” என்று தாமரை ஒரே போடாக போட பிக்பாஸிற்கே ‘ஜெர்க்’ ஆகியிருக்கும். (அடடே! இது வேற லெவல் தாமரைடா யப்போவ்!). “நான் எப்ப பிரியங்காவை பிடிக்காதுன்னு சொன்னேன்.. கமல் சார் கிட்ட குறும்படம் கேட்பேன்” என்று சொல்கிற அளவிற்கு தாமரை முன்னேறியிருப்பது நல்ல விஷயம். ஆனால் ராஜூ தாமரையின் ஆட்சேபத்தை அசால்ட்டாகவே எதிர்கொண்டார்.

ராஜூவை பிரியங்கா தேர்ந்தெடுத்தது சரியான சாய்ஸ். ராஜூவே முன்னர் ஒப்புக் கொண்ட விஷயம்தான் இது. "நியாயமான விஷயத்திற்குக் கோபப்பட மாட்டேன்றார்” என்கிற காரணத்தைச் சொல்லி அமீரை தேர்ந்தெடுத்தார் சஞ்சீவ். ‘கரெக்ட்டுதான்’ என்று ஒப்புக் கொண்ட அமீர், “ஆனா..இதை சம்பந்தப்பட்ட ஆளு கிட்ட தனியா சொல்லிடுவேன்” என்று விளக்கம் அளித்தார். அமீர் ராஜூவையும் சிபி அமீரையும் தேர்ந்தெடுத்தார்கள்.

சீசன் 5-ல் யார் வெற்றி பெறக்கூடாது?

இறுதியாக வந்ததுதான் இருப்பதிலேயே அதிவில்லங்கமான கேள்வி. ஆனால் அப்படியொன்றும் அழிச்சாட்டியமானதல்ல.. “யார் வெற்றி பெறக்கூடாது என்று நினைக்கிறீர்கள்?” என்று பிக்பாஸ் கேட்டது, விருந்து டாஸ்க்கில் ‘யாருக்குத் தகுதியில்லை?” என்று கேட்டதின் இன்னொரு வடிவம்தான். ஆனால் ராஜூவும் பிரியங்காவும் இதற்கு தன்னையே நாமினேட் செய்து கொள்ள நிரூப்பிற்கு பயங்கர எரிச்சல் ஏற்பட்டது. சஞ்சீவ்வும் அமீரும் பிரியங்காவைத் தேர்ந்தெடுக்க சிபி வழக்கம் போல் அமீரைப் பழிவாங்கினார்.

“என் மேலதான் அதிகம் முட்டை விழுந்திருக்கு. எப்படியும் இந்த கேம்ல இருந்து நான் வெளியே போகப் போறேன். அப்ப எதுக்கு இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லணும்?” என்று பிரியங்கா நிரூப்பிடம் மல்லுக்கட்டினார். “இந்த டாஸ்க்கில் நீ ஜெயிக்கறே. தோக்கறே.. அது வேற விஷயம். அந்தக் கேள்விக்கு நீ உண்மையா பதில் சொல்லியிருக்கணும் இல்லையா?.. நீ சொன்ன பதில டிப்ளமேட்டிக்கா இருந்தது” என்று ஆணி அடித்தது போல் நிரூப் கேட்டது சரியான கேள்வி. இது நிச்சயம் பிரியங்காவிற்கு புரிந்திருக்கும். ஆனால் விதம் விதமாக பதில் சொல்லி தான் சொன்னதையே சாதித்தார் பிரியங்கா. மற்றவர்களை இனியும் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்பதுதான் உண்மையான காரணமாக இருந்திருக்கக்கூடும்.

அமீர் - பிரியங்கா
அமீர் - பிரியங்கா

இந்த இரண்டாவது முட்டை டாஸ்க்கின் இறுதியில் ராஜூவும் பிரியங்காவும் வெளியேற்றப்பட்டார்கள். ஆக மீதமுள்ள சஞ்சீவ், அமீர், சிபி ஆகியோருக்கு இடையே போட்டி நடக்கும்.

Ticket to Finale-வை வெல்லப்போவது யார்? பொறுத்திருந்து பார்ப்போம். இந்த முதல் கட்டப் பட்டியலில் பழையவர்கள் பின்தங்கியிருக்க, வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்த இருவர் இருப்பது என்பது சுவாரசியத்தைக் கூட்டுகிறது.