Published:Updated:

சனத்தை வெளியே அனுப்புவதுதான் எதிர்பாராததை எதிர்பாருங்களா... ஓ மை ஆண்டவரே?! பிக்பாஸ் - நாள் 62

பிக்பாஸ் - நாள் 62

"இதர பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் ‘தொகுப்பாளர்கள்’ கடுமையாக நடந்து கொள்கிறார்களே... கமல் ஏன் அப்படிச் செய்வதில்லை?" என்று எழும் பல விமர்சனங்களுக்குப் பதிலடியாக கமலின் இன்றைய விளக்கம் இருந்தது. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 62

Published:Updated:

சனத்தை வெளியே அனுப்புவதுதான் எதிர்பாராததை எதிர்பாருங்களா... ஓ மை ஆண்டவரே?! பிக்பாஸ் - நாள் 62

"இதர பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் ‘தொகுப்பாளர்கள்’ கடுமையாக நடந்து கொள்கிறார்களே... கமல் ஏன் அப்படிச் செய்வதில்லை?" என்று எழும் பல விமர்சனங்களுக்குப் பதிலடியாக கமலின் இன்றைய விளக்கம் இருந்தது. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 62

பிக்பாஸ் - நாள் 62

பார்ப்பதற்கு மழைக்கோட்டு மாதிரியே தெரியும் உடையை அணிந்து வந்தார் கமல். வழக்கம் போல் ‘சட்டை மேலே எத்தனை பட்டன்’ பாணியில் அது இருந்தது. ‘இன்று உலக மண் தினம்’ என்று தன் உரையை ஆரம்பித்தவர், ‘மண் இருந்தால்தான் சோறு உண்ண முடியும். சோற்றில் மண் கலந்து இருந்தால் உண்ண முடியாது’ என்று ரைமிங்காக ‘மெசேஜ்’ சொல்லி "எவ்வளவோ சொல்லிப்பார்த்துட்டேன். ஒரு மண்ணும் புரியலை'’ என்று பிக்பாஸ் போட்டியாளர்களிடம் சென்று சற்று கோபமாக முடித்தார்.

ப்ரமோவில் ‘அந்நியனாக’ கொந்தளிக்கும் கமல், அகம் டிவி வழியாக உள்ளே சென்றவுடன் அப்படியே அம்பியாக மாறி விடுகிறார். இன்றும் அதுதான் நடந்தது. ‘அறுபது நாளைக்கு மேலே ஆயிடுச்சு. இப்போ செய்யணும்... இல்லாட்டி எப்போ? மாத்தணும்... எல்லாத்தையும் மாத்தணும்’ என்று ஆதங்கம் கொள்ளும் வகையில் கமலின் பேச்சு இருந்தது. (ஓ... இது ‘அவர்’ சொன்னதா?!).

‘என்ன செஞ்சி கிழிச்சீங்க?’ டாஸ்க்கில் பாலாஜி, அர்ச்சனா, ஆரி. ரியோ போன்றோர் என்ன சொல்லியிருப்பார்கள் என்று அறிய பார்வையாளர்கள் ஆர்வமாக இருந்திருக்கலாம். ஆனால் அதைக் காட்டாமல் ‘உள்ளே அடி வாங்கிய கதையை’ மக்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததையே மறுபடியும் காட்டினார்கள். அதிலும் இந்த சோம் உள்ளே ரத்தக்காயம் வாங்கி விட்டு வெளியே வந்து வெட்கமேயில்லாமல் சிரித்தபடி அதைச் சொல்வது பார்க்க கொடூரமாக இருக்கிறது.

பிக்பாஸ் - நாள் 62
பிக்பாஸ் - நாள் 62

சோம் எது சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிக்கிறார் கேபி. ‘மூக்கால் அழுகிறான்’ என்பதுதான் வழக்கத்தில் உள்ள சொற்பிரயோகம். ஆனால் இந்த உலகத்திலேயே மூக்கால் சிரிக்கும் ஒரே நபர் கேபியாகத்தான் இருப்பார்.

‘என்ன செஞ்சி கிழிச்சீங்க’ டாஸ்க்கிற்காக, அடுத்தது அனிதாவை அழைத்தார் பிக்பாஸ். சுற்றுலா பள்ளி மாணவி மாதிரி சென்ற அவர், ‘அய்... இங்க பாரேன்... பல்பு... இங்க கலர் கலரா எரியுது... அய்... அய்...’ என்று ரூமின் செட்டப்பை சுற்றி வேடிக்கை பார்த்தார். சிரிக்கிறேன் பேர்வழி என்று அவர் வேண்டுமென வெளியிடும் விநோதமான ஒலியானது டிஸ்கவரி சேனலின் சத்தங்களை நினைவுப்படுத்துகிறது. (சசிகுமாரின் ரசிகையோ?!).

இயந்திரத்தை உயிர்ப்பிக்கும் தொழிலாளி, அது ஓடி முடியும் வரை வெளியே சென்று டீ சாப்பிட்டு வருவது போல, அனிதா பேச ஆரம்பித்துமே ‘அங்கு என்ன நடக்கும்’ என்று நன்றாகத் தெரிந்த பிக்பாஸ் தானும் டீ சாப்பிடச் சென்றுவிட்டார் போல. அவர் ஏறத்தாழ ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்த போது ‘என்ன பிக்பாஸ்... இந்த விளக்கம் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என்று மூச்சு வாங்கி அனிதா அமர்ந்திருக்க, பிக்பாஸ் ஏன் வாயைத் திறக்கப் போகிறார்? திருமணத்திற்குப் பிறகு மனைவியின் ராவடியை புரிந்து கொண்ட கணவன் அப்படியே அமைதியாகி ஜென் நிலைக்கு சென்று விடுவதைப் போல பிக்பாஸூம் அனிதாவை எதிர்த்து ஒரு சொல்லும் சொல்லவில்லை.

"நாற்பது லைன் பேசிட்டு இருந்த நான் இப்ப நாலு லைன் பேசி ‘டயட்’ல இருக்கேன். மகிழ்வித்து மகிழ்-ன்றதுதான் என் பாலிஸி" என்று மகிழ்ச்சி தொடர்பான வார்த்தைகளாகவே இட்டு நிரப்பி ‘தென்னை மரத்தின்’ கட்டுரையை எழுதினார் அனிதா.

பிக்பாஸ் - நாள் 62
பிக்பாஸ் - நாள் 62

தேர்வு எழுதி விட்டு வெளியே வரும் மாணவனை மக்கு மாணவர்கள் விசாரிப்பது போல ‘'என்னாது... நடுவுல பிக்பாஸ் எதுவுமே சொல்லலையா?’' என்று ரமேஷ் ஆச்சர்யப்பட்டார். '‘அனிதாவைப் பார்த்து பிக்பாஸே பயந்துட்டார் போல'’ என்றார் ஷிவானி. நீங்க நம்பலைன்னாலும் அதுதான் நெஜம்.

"உங்களைப் போலவே எனக்கும் நிறைய கேள்விகள் இருக்குது" என்று அகம் டிவியாக உள்ளே வந்த கமல் ‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்’ என்று சொன்னது உண்மையிலேயே பழைய மொழி. தத்துவார்த்தமான அர்த்தமாகவும் அதைப் புரிந்து கொள்ளலாம். இளைய தலைமுறையினரில் எத்தனை பேருக்கு இது தெரியும் என்று தெரியவில்லை.

அருள் வந்ததுபோல பாவனை செய்யும் மருமகள் அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாமியாரைத் திட்டித் தீர்ப்பது போல் என்று ‘கால் சென்டர்’ டாஸ்க்கிற்கு உதாரணம் சொன்ன கமல் இதைச் சிறப்பாக பயன்படுத்திய அனிதாவையும் பாலாஜியையும் பாராட்டினார். ஆரிக்குப் பதில் சொல்ல சந்தர்ப்பமே அளிக்காத பாலாஜியை வழக்கம் போல் மயிலிறகால் தடவி விட்டுவிட்டார்.

இந்த கால் சென்டர் டாஸ்க்கில் ‘காப்பாற்றப்பட்ட’ எட்டு போட்டியாளர்களை எழுந்து நிற்கச் சொன்ன கமல், அதில் ரியோவை மட்டும் அமரச் சொன்னார். வழக்கம் போல் இதற்கு பயந்து நடுங்கிய ரியோவை ‘நல்ல விஷயமாகவும் இருக்கலாம்’ என்று கமல் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. சங்கடமான விஷயத்தைச் சொல்லும் போதெல்லாம் ‘அய்யா... தெரியாம செஞ்சுட்டேங்கய்யா’ என்று குரல் மாற்றி பம்முவது ரியோவின் வழக்கம். இப்போதும் அதையே செய்து ‘அப்படின்னா சரி’ என்று நிம்மதியானார்.

ஆஜீத்தை ஏன் காப்பாற்றினேன் என்பதற்கு ‘வழவழா வெண்டைக்காய்’ விளக்கத்தை அர்ச்சனா தர ‘சரி போகட்டும்’ என்று அதை விட்டு விட்டார் கமல். ‘பண்டமாற்று சேவை போல் இருந்ததே’ என்று சோம் vs கேபி ஜோடியை அடுத்து விசாரிக்க ஆரம்பித்தார். அவர்களும் வெண்டைக்காய் பொறியலை வதக்க ஆரம்பிக்க ‘என்னமோ போங்க. டீம் டீமா வெளயாடறீங்க போல’ என்று அவர்களையும் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்.

"உங்களை மாதிரியே வேற ஒரு நிஷா இருக்காங்களா?'’ என்று சர்காஸ்டிக்காக கமல் கேட்க ஒன்றும் புரியாமல் விழித்தார் நிஷா. இன்று அவரின் ஒப்பனை வேறு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. தன் முகபாவங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தும் நிஷாவின் முகத்தில் உணர்ச்சிகள் இன்று ஓவர்டைம் செய்து விளையாடின.

பிக்பாஸ் - நாள் 62
பிக்பாஸ் - நாள் 62

"அந்த நிஷா மலேசியாவுல பேசின பேச்சைப் பார்த்தேன். ஆயிரம் பேர் இருக்கற கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வெச்சிருந்தாங்க... ஸ்விட்ச் போட்ட மாதிரி மக்கள் எமோஷனை மாத்தறாங்க... பேசாம அந்த நிஷாவை இங்க அனுப்பிச்சிருக்கலாம்" என்று கமல் தன் குறும்பைத் தொடர, இப்போதுதான் கமல் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டு சங்கடத்தில் நெளிந்தார் நிஷா.

ரியோவின் பாதுகாவலர், ரமேஷின் அடிமை, அர்ச்சனாவின் வலக்கரம் என்றுதான் நிஷாவின் வாழ்க்கை பிக்பாஸ் வீட்டில் கழிகிறது. வீட்டிற்குள் முதல் நாள் நுழையும் போது நிஷாவிடம் இருந்த நகைச்சுவையும் அலட்டலும் பிறகு மெல்ல மெல்ல குறைந்தே விட்டது. ஏதோ பிக்பாஸ் வீட்டு பணியாள் போலவே அங்கு உலவுகிறார். அவரைப் பார்க்க ஒருபக்கம் பரிதாபமாகவும் இன்னொரு பக்கம் எரிச்சலாகவும் இருக்கிறது.

‘பேச்சுத்திறமை உள்ள அந்த நிஷாவை இங்க கொண்டு வாங்க’ என்று கமல் சொன்ன அழுத்தமான அறிவுரை நிஷாவை மிகவும் சங்கடப்படுத்திவிட்டது என்பது நன்றாகவே தெரிந்தது. தலையைக் குனிந்து உம்மென்று இருந்தார். கமல் சென்றதும் தன்னையே கிண்டல் செய்து கொண்டு சிரித்து பழையபடி ஆகாமல் இருக்க வேண்டும்.

"கால் சென்டர் டாஸ்க்கிற்கு சனத்தை ஏன் யாரும் செலக்ட் பண்ணலை... கணிதமா. கலக்கமா?" என்கிற கேள்விக்கு ரமேஷூம் வெண்டைக்காயை வதக்க ஆரம்பிக்க, "ஏன் நிஷாவை தேர்ந்தெடுத்தீங்க?” என்று கிடுக்கிப்பிடி போட கமல் முயன்ற போது "அவங்களையும் நல்லாத்தானே கேட்டேன்" என்று சமாளித்தார் ரமேஷ்.

"நீங்க பண்ண சேஃப் கேமால ரவா உப்புமா சாப்பிடற நிலைமைக்கு வந்திருக்கீங்க" என்ற கமல் "நான் மக்களோட பிரதிநிதி. நான் சொல்ற டிப்ஸை எல்லாம் உன்னிப்பா கவனிக்கணும். ஆனா நீங்க எதையும் காதில் வாங்கிக்க மாட்டேங்கறீங்க” என்று ஆதங்கப்பட்டார். (இதைப் பற்றி நானும் முன்பு எழுதியிருந்தேன்).

பிக்பாஸ் - நாள் 62
பிக்பாஸ் - நாள் 62

"ஓகே.. ‘சனம் ஒரு கால்தான் பண்ணாங்க’ன்ற விமர்சனத்தை போக்கிடுவோம். அவங்களுக்கு இப்ப ஒரு வாய்ப்பு தரலாம். யாரு இதுக்கு ரெடி?" என்றபோது ஆரி மட்டும் துணிச்சலாக கைதூக்கினார். இதையே கமல் அனுமதித்திருக்கலாம் எனில் அந்த டாஸ்க் ரகளையாக அமைந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் கமலும் வெண்டைக்காயை கையில் எடுத்து ‘இப்ப நீங்க பண்ணிடுவீங்களா?’ என்று ரமேஷை அபத்தமாகத் தேர்ந்தெடுத்தார்.

கமல் சென்ற பிறகு, கவுண்டமணி கேள்வி கேட்கும் போது முகத்தை அப்பாவியாக மாற்றிக் கொள்கிற செந்தில் மாதிரி அமர்ந்திருந்தார் நிஷா. "கமல் என்ன சொல்ல வர்றார்னா..." என்று ரியோவும் ரம்யாவும் அர்ச்சனாவும் விளக்கம் அளித்த போது ‘அதெல்லாம் புரிஞ்சுடுச்சு’ என்றார் நிஷா கெத்தாக.

இது தொடர்பாக தங்கவேலு நடித்த ஒரு பிரபல நகைச்சுவைக் காட்சிதான் நினைவிற்கு வருகிறது. புது மனைவி முத்துலஷ்மியிடம் ‘பூரி’ செய்யச் சொல்வார் தங்கவேலு. ஆனால் மனைவிக்கு பூரி செய்யத் தெரியாது. தங்கவேலு உணவு செய்முறையின் விளக்கத்தை ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பிக்கும் போது ‘அதான் தெரியுமே... அதான் தெரியுமே’ என்பார் முத்துலஷ்மி. நிஷாவின் கதையும் இப்படித்தான் இருக்கிறது.

மேடைக்கு திரும்பி வந்த கமல், சனத்திற்கும் ரமேஷிற்கும் இடையே கால் சென்டர் டாஸ்க்கை தந்து ‘அஞ்சு நிமிஷம் தர்றேன்’ என்றார். ‘இப்பவாவது சீரியஸாக பண்ணுங்க’ என்று அவர் சொன்னதை ரமேஷ் புரிந்து கொண்டது போலவே தெரியவில்லை.

‘எதுக்கு பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்க?’ என்கிற சம்பிரதாயமான கேள்வியில் துவங்கி சனம் அதற்கு பதில் சொல்லி முடிப்பதற்குள் ‘அத விட்டுருவோம்... நான் ஃபர்ஸ்ட் கேள்விக்கு வர்றேன்’ என்றார் ரமேஷ். அப்ப முதல்ல கேட்டது கேள்வி இல்லையா?

அதென்னமோ சனம் இன்றைக்கு பார்க்க, ‘பாபநாசம்’ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ‘ஆஷா சரத்’ மாதிரியே இருந்தார். '‘நான் இருபத்து மூணு படங்கள்ல நடிச்சிருக்கேன்'’ என்று சனம் சொன்னது எனக்கு பயங்கர ஆச்சர்யம். இதுவரை நான் ஒன்றுகூட பார்த்ததாக நினைவில் இல்லை.

"முதல் கேள்விக்கு போயிடலாம்'’ என்று சொன்ன ரமேஷ், அடுத்ததாவது உருப்படியாக கேட்பார் என்று பார்த்தால் ‘பிக்பாஸ் வீட்டின் முதல் நாள்.. ‘சாப்பிட்டீங்களான்னு’ எல்லோரையும் கேட்ட நீங்க... நான் ரசம் சாப்பிட்டப்புறம் மோர் வேணுமான்னு கேட்க மறந்துட்டீங்க” என்பது மாதிரி மொக்கையாகவே கேட்டு, கீழடி நாகரிக காலத்தில் உருவான ‘லெமன் சர்ச்சையை’ மறுபடியும் தோண்டி எடுப்பதற்குள் பிக்பாஸே வெறுத்துப் போய் பஸ்ஸர் அடித்து டாஸ்கை முடித்தார்.

பிக்பாஸ் - நாள் 62
பிக்பாஸ் - நாள் 62

இந்த லட்சணத்தில் சனத்திற்கு நான்கு ஸ்டார்கள் வேறு. அழும் குழந்தைக்கு சாக்லேட் வாங்கித்தரும் சம்பிரதாயம் போலவே இந்த டாஸ்க் நடந்து முடிந்தது. ‘ஐந்து நிமிடம்தான்’ என்று கமல் தெளிவாக சொல்லி அனுப்பியும் ‘நேரம் பத்தலையே’ என்று அசடு வழிந்தார் ரமேஷ். "நீங்க கடகடன்னு கேள்விகளை கேட்டிருக்கலாமே?” என்கிற ஆலோசனையை ஆரி தர, "ஆமாம்... கேள்வி மட்டும் கேட்டிருக்கணும். பதில் சொல்ல வாய்ப்பே தந்திருக்கக்கூடாது" என்று சர்காஸ்டிக்காக பாலாஜி சொன்னது சுவாரஸ்யம்.

அடுத்ததாக ‘மூணு செருப்பு பாலாஜி’ விவகாரத்தை கையில் எடுத்தார் கமல். "வன்முறையின் விளம்பிற்குப் போயிட்டீங்க. பாலாஜி. எனக்கு பயமாப் போச்சு" என்று கமல் சொன்னதும் "ஆமாம் சார்... என்கிட்ட இன்னமும் மன்னிப்பு கேட்கலை" என்று சனம் வருத்தப்பட்டபோது, "அதை விடுங்க..." என்று கமல் கடந்து போனது ரசிக்கத்தக்கதாக இல்லை.

"இதை தட்டிக் கேட்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது" என்ற கமல் “என்ன அர்ச்சனா... அப்ப அன்பு மெடிக்கல் லீவ்ல போயிடுச்சா?" என்று வண்டியை அந்தப் பக்கம் திருப்ப, "அய்யோ... நான் கேட்டேன் சார்... அப்ப பொழுதே விடிஞ்சிடுச்சு. விபூதில்லாம் போட்டு அவனுக்கு மந்திரிச்சி விட்டேன்" என்று சமாளித்தார் அர்ச்சனா.

"சனத்திற்கு நிகழ்ந்த அநியாயம் பற்றி யாருமே கேட்கவில்லை. குடும்ப வன்முறை என்பது மிகக் கொடுமையானது. அதை அனுபவித்த பாலாஜி... உங்களுக்கு கூடவா அது தெரியவில்லை? Practice what you preach" என்று பாலாஜிக்கு அழுத்தமாக குட்டு வைக்க முயன்றார் கமல். “ஆரி கிட்ட மட்டும் கைய நீட்டிப் பேசாதீங்க-ன்னு சொன்ன நீங்க... அதே விஷயத்தை சனம் சொல்லும் போது மட்டும் ஏன் கோபம் வரணும்?” என்று மடக்கியது அருமையான செக் மேட்.

இந்த சீஸனில் கமலிடம் பம்மாமல் அவரையே சமாளிக்கக்கூடிய திறன் படைத்தவர்கள் இரண்டு பேர். ஒன்று சுரேஷ். இன்னொருவர் பாலாஜி. அதிலும் பாலாஜி சமயோசித உணர்வு மிக்கவர். இந்த உரையாடல் நடந்து கொண்டிருந்த போதே டெவலப் செய்து விட்டாரோ. என்னமோ... "சார்... இவங்க கிட்ட இருந்து ஒதுங்கியிருக்கணும்தான் நெனச்சேன். அது நடக்காம போச்சேன்னு.. என் மேல வருத்தப்பட்டுதான் ஷூவால அடிச்சிக்கிட்டேன். சனம் மேல வருத்தமில்லை" என்று பாலாஜி அட்டகாசமாக சமாளித்தவுடன், "ஓ... அப்படியொரு பொழிப்புரை இருக்கா?” என்று கமலும் பின்வாங்க வேண்டியிருந்தது.

பிக்பாஸ் - நாள் 62
பிக்பாஸ் - நாள் 62
இதற்கு சனம் தனது வழக்கமான பாணியில் விளக்கம் அளிக்கும் போது, "சனம். ஒண்ணு சொல்லட்டுமா... நான் உங்களுக்காகத்தான் பேசிட்டு இருக்கேன்" என்று கமல் சொன்னதும் வெட்கப்பட்டு அமர்ந்தார் சனம். "அவங்க என்னை provoke பண்ணாங்க" என்றார் பாலாஜி.

சம்பந்தப்பட்ட காட்சியை மீண்டும் பார்த்த போது எச்சரிக்கும் வகையில் பாலாஜி கை நீட்டுவது போல் தெரியவில்லை. விளக்கம் அளிக்கும் போது அவரின் கை கீழேயும் மேலேயும் இயல்பாக வந்துபோனது. இதே உடல்மொழி ஆரிக்கும் இருக்கலாம் என்னும் போது அவருக்கும் இந்தச் சந்தேகத்தின் பலனை பாலாஜி அளிக்க வேண்டும். ‘கை நீட்டி பேசாதீங்க’ என்கிற சர்ச்சை பிக்பாஸ் வீட்டில் பிரபலமாக இருப்பதால் இந்தச் சமயத்தில் பதிலுக்கு பாலாஜியை வெறுப்பேற்ற சனம் அந்த ஆயுதத்தை பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் தோன்றுகிறது.

"எதுவாக இருந்தாலும் நீங்கள் எல்லை மீறக்கூடாது. வீட்டுக்குள்ள இருக்கும் போதே சில விஷயங்களை நீங்க திருத்திக்கங்க. வெளியே போய் பார்த்துப்பேன்னு நெனக்காதீங்க... நானும் இதர பார்வையாளர்களைப் போல ஒரு பார்வையாளர்தான். மத்த பிக்பாஸ் நிகழ்ச்சிகள்ல இதைச் செய்யறாங்களான்னு எனக்குத் தெரியாது. நான் எந்தச் சூழலிலும் என்னோட politeness-ஐ இழப்பதே கிடையாது. அதே உதவியை நீங்களும் எனக்குச் செய்யுங்க!"
என்று கமல் தந்த விளக்கம் அற்புதம்.

ஆயிரம் கோபமுள்ள வசனங்களை விடவும் இது போன்ற அழுத்தமான உரையாடல்கள் ‘சுருக்’கென எதிராளியின் மனதில் தைக்கும். சம்பந்தப்பட்டவரின் மனம் மாறச் செய்யும். "இதர பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் ‘தொகுப்பாளர்கள்’ கடுமையாக நடந்து கொள்கிறார்களே... கமல் ஏன் அப்படிச் செய்வதில்லை?" என்று எழும் பல விமர்சனங்களுக்குப் பதிலடியாக கமலின் இன்றைய விளக்கம் இருந்தது. ‘அன்பே ஸ்ட்ராட்டஜி’ என்பதுதான் பிக்பாஸைப் பொறுத்தவரை கமலின் பாலிஸி. இது சிறந்த விஷயம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பிக்பாஸ் - நாள் 62
பிக்பாஸ் - நாள் 62

ஆனால் – கமல் தனது பணிவை, பெருந்தன்மையை, அன்பை இழக்க வேண்டாம். போட்டியாளர்கள் சறுக்கும்போது அதை அவர்களுக்குச் சுட்டிக் காட்டும் பணியை இன்னமும் சற்று அழுத்தமாக செய்யலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் இந்த விளையாட்டு என்பது போட்டியாளர்களும் பார்வையாளர்களும் இணைந்து விளையாடும் ஆட்டம். எனவே பார்வையாளர்களின் மனநிலையையும் ‘மக்களின் பிரதிநிதி’யாக அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் தொகுப்பாளரின் மீது பார்வையாளர்கள் நம்பிக்கை இழக்கும் விபத்து ஏற்படக்கூடும்.

கமல் சென்ற பிறகு "இப்ப கூட பாலா சாரி கேட்க முன்வரலை’' என்று வருந்திய சனம், "ஆனா ஃபீல் பண்ணாம அவர் கேட்கக்கூடாது" என்றும் அடம்பிடித்தார். தனக்கு இழைக்கப்பட்ட சம்பவத்திற்கு இதர போட்டியாளர்கள் கூட வருந்தவில்லையே என்பதும் சனத்தின் ஆதங்கம்.

மற்ற போட்டியாளர்களை சென்ட்டியாக பேசி மடக்குவது அர்ச்சனாவின் வழக்கமான ஸ்டைல். "தங்கம்... எனக்காக ஒண்ணு செய்யறியா? போய் மன்னிப்பு கேட்டுடேன்" என்று பாலாஜியை நெருக்கத் துவங்கினார் அர்ச்சனா. "எனக்கு ஃபீல் ஆகாம கேட்க முடியாது" என்று பாலாஜி மறுத்துவிட்டார்.

உண்மையில் பாலாஜியின் இந்த நேர்மையை, வெளிப்படைத்தன்மையை பாராட்டவே வேண்டியிருக்கிறது. ஏனெனில் எந்தவொரு சராசரி நபரும் இந்தச் சூழ்நிலையில் நெருக்கடி தாங்காமல் ஒரு பாவனைக்காகவாவது மன்னிப்பு கேட்டுவிடுவார்கள். ஆனால் தன் உள்ளம் சொல்லாமல் எப்படி மன்னிப்பு கேட்பது என்று வெளிப்படையாக இருக்கும் பாலாஜியை பாராட்டவே தோன்றுகிறது.

மீண்டும் மேடைக்கு வந்த கமல், “ஆரி மாத்தி மாத்தி பேசி கேப்டன்சி வாய்ப்பை தடுத்துட்டார்’ன்ற மாதிரி சொன்னீங்க இல்லையா... ஒரு குறும்படம் பார்த்துடலாமா?" என்று பாலாஜியிடம் கேட்க, ‘அப்படிப் போடு’ என்று உற்சாகமானார் ஆரி. உண்மையில் அந்தக் குறும்படம் ஒரு தேவையில்லாத ஆணி. ஏனெனில் சம்பந்தப்பட்ட நாளன்றே பாலாஜி செய்த அழும்பும் வீம்பும் பார்வையாளர்களுக்குப் புரிந்து விட்டது.

சில யூடியூப் வீடியோக்களில், ‘கொள்ளை நடந்த வீடு இதுதான்’ என்று அம்புக்குறி போட்டு பாகங்களை குறிப்பார்கள். அது போல அந்த வீடியோவில் பாலாஜி தட்டி விட்ட இதர நிற க்யூப்களும் சிவப்பு வட்டம் போட்டு காட்டப்பட்டன.

பிக்பாஸ் - நாள் 62
பிக்பாஸ் - நாள் 62
குறும்படம் முடிந்ததும், "ஆரி தனக்கு எதிராத்தான் இருப்பார்-ன்ற Mental block-ல இருக்காதீங்க... அது பச்சை பிளாக்கா. நீல பிளாக்கா–ன்றது முக்கியமில்ல" என்று சர்காஸ்டிக்காக பாலாஜியை கிண்டலடித்தார் கமல். '‘என் வழி... தனி வழின்னு இருக்காதீங்க’' என்று கமல் சொன்னது யாருக்கு? யாருக்கோ...

"பாலாஜியும் இதை திட்டம் போட்டு செய்யலை. அவரது குணாதிசயம் இது. உலகமே தனக்கு எதிரா இருப்பதாக நினைக்கக்கூடாது" என்று பாலாஜி சார்பாகவும் பேசி அவரைக் காப்பாற்றினார் கமல். "தப்பு செய்யும்போது உள்ளே ரெண்டு குரல் கேட்கும். அதில் சரியான குரலை கேட்பதுதான் நியாயமானது" என்று கமல் அளித்த விளக்கம் முற்றிலும் சரி.

கேப்டன்ஸி டாஸ்க் சர்ச்சை தொடர்பாக, தான் செய்த வாக்குவாதம் குறித்து பத்து நிமிடம் கழித்து தன் தவற்றை உணர்ந்து சிலரிடம் மன்னிப்பு கேட்டதாக பாலாஜி சொன்னார். (இது நமக்கு காட்டப்படவில்லை). எனில் இதேபோல் சனம் விஷயத்திலும் அவர் நடந்து கொண்டிருக்கலாம்.

‘மன்னிப்பு’ விஷயத்தை சபையில் சனம் மறுபடியும் எழுப்பிய போது கமல் பாலாஜியை நேரடியாக வற்புறுத்தவில்லை. சுற்றி சுற்றி வந்து ஆலோசனை சொன்னது நாகரிகத்தின் அடையாளம். ஆனால் ஒரு கட்டத்தில் சூசகமாக பாலாஜியிடம் சுட்டிக் காட்டிய போது ‘ஷோல டிராமா பண்ண வேணாம்னு நெனச்சேன்’ என்றார் பாலாஜி. ஏனெனில் முன்பு ஆரி இதே போல் சாமிடம் சபையில் மன்னிப்பு கேட்டதை பாலாஜி பல முறை காட்டமாக விமர்சித்திருக்கிறார். டிராமா என்றும் சொல்லியிருக்கிறார். எனவே அதே ஆயுதம் தன்னிடம் திரும்பக்கூடாது என்று அவர் நினைத்திருக்கலாம்.

கமல் இப்போது பெருந்தன்மையாக தானே முன்வந்து ‘சாரி சனம்’ என்று கேட்ட போது சனமும் பாலாஜியும் பதறிப் போனார்கள். இந்தச் சமயத்தில் ‘சாரி’ என்று பாலாஜி கேட்க ‘ஃபீல் பண்ணா மட்டும் சொல்லுங்க’ என்று மீண்டும் முருங்கை மரத்தில் சனம் ஏறினார். “போச்சுடா. மறுபடியுமா?’ என்று கமல் சிரிக்க ஆரம்பித்தவுடன் சனமும் வேறுவழியில்லாமல் அந்த சாரியை வாங்கிக் கொண்டார்.

பிக்பாஸ் - நாள் 62
பிக்பாஸ் - நாள் 62

அடுத்ததாக இந்த வாரம் எவிக்ஷன் நாமினேஷில் இருக்கும் விஷயத்திற்கு வந்தார் கமல். இங்கு இடைமறித்த அர்ச்சனா ‘சனத்திற்கு நிகழ்ந்த அநீதிக்காக இதர போட்டியாளர்களின் சார்பில் தான் மன்னிப்பு கேட்பதாக சொல்லி’ கணக்கை நேர் செய்து கொண்டார்.

போட்டியாளர்கள் காப்பாற்றப்படுவதை வித்தியாசமாக செய்கிறோம் என்று அவர்களை மறுபடியும் கால் சென்டர் செட்டப்பிற்குள் அழைத்துச் சென்றார்கள். யார் காப்பாற்றப்படுகிறாரோ அவர் மீது ஒளிவட்டம் விழுமாம். தேவையில்லாத ஆணி. இதை சபையிலேயே சொல்லியிருக்கலாம்.

பிக்பாஸ் - நாள் 62
பிக்பாஸ் - நாள் 62

ஆரி மற்றும் ரம்யாவின் மீது ஒளிவட்டம் விழ அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டோம். "யார் மீது லைட் வந்தது?” என்று அவர்கள் தங்களுக்குள் குழம்பிக் கொண்டார்கள். கமல் விடைபெற்றுச் சென்றவுடன் ‘நல்லவேளைடா சாமி. கமல் குறும்படம் போட்டு பாகங்களை குறிச்சிட்டாரு. கொலைப்பழில இருந்து தப்பிச்சிட்டோம்’ என்று ஆரியும் ரியோவும் நிம்மதி அடைந்தார்கள்.

"ரம்யா எப்படி ரெண்டாவதா காப்பாற்றப்பட்டாங்க... சனம் அதை விட பெட்டராச்சே?" என்று யோசித்துக் கொண்டிருந்தார் கேபி. (வெஷம்... வெஷம்...) "அவங்களை விட ரம்யா பெட்டரா பண்ணயிருக்கலாம்" என்று அக்காவிற்காக பரிந்து பேசினார் செல்லத்தம்பி ஆஜீத். ஏதோ அம்னீசியா வார்டில் இருந்து வெளியே வந்தவர் போல, "இந்த வாரம் என்ன நடந்தது?” என்று வெள்ளந்தியாக விசாரித்தார் சோம்.

பாலாஜி துணைத்தலைவர் பதவியை மறுத்தது, ‘மைக் மாட்டாமல், தூங்காமல் இருக்க தன்னால் முடியாது’ என்பதை வெளிப்படையாகவே சொன்னது உள்ளிட்ட சில விவகாரங்கள் விசாரணை சபைக்கு வரவில்லை. நாளை வருமோ... என்னவோ...
பிக்பாஸ் - நாள் 62
பிக்பாஸ் - நாள் 62

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் வெளியேற்றப் பட்டிருப்பதாக, ஏறத்தாழ உறுதியாகியிருக்கும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இது உண்மையாக இருந்தால் வழக்கம் போல் இதுவொரு சர்ச்சையான முடிவுதான். சனத்தை விடவும் பலவீனமான போட்டியாளர்களான ஷிவானி, ஆஜீத் போன்றவர்கள் இன்னமும் உள்ளே இருப்பது முடிவுகள் தொடர்பான சந்தேகத்தை தொடர்ந்து எழுப்பிக் கொண்டுதான் இருக்கும்.

‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற பிக்பாஸின் டேக்லைன் எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ‘பார்வையாளர்கள் எதையும் எதிர்பார்க்கக்கூடாது’ என்பது சற்று அராஜகம்தான். சனம் வெளியேறி விட்டால் அந்த ‘நொய்... நொய்... அனத்தலை’ நாம் மிகவும் மிஸ் செய்வோம் என்று தோன்றுகிறது.