Published:Updated:

பிக் பாஸ் - 103: ஆளே மாறிவிட்ட தாமரை; ராஜூவுக்குப் போட்டியாக முன்வைக்கப்படுகிறாரா பிரியங்கா?

பிக் பாஸ் - 103

பாவனி அமீரை நண்பராகவே பார்க்கிறார். அவரின் இந்தத் தத்தளிப்பை புரிந்து கொள்ள முடிகிறது. பிக் பாஸ் முடிந்த பிறகாவது இதற்கொரு தீர்வு கிடைக்கட்டும். இது இரு தனிநபர்கள் சார்ந்த விஷயம். மூன்றாம் மனிதருக்கு அங்கு இடமில்லை.

பிக் பாஸ் - 103: ஆளே மாறிவிட்ட தாமரை; ராஜூவுக்குப் போட்டியாக முன்வைக்கப்படுகிறாரா பிரியங்கா?

பாவனி அமீரை நண்பராகவே பார்க்கிறார். அவரின் இந்தத் தத்தளிப்பை புரிந்து கொள்ள முடிகிறது. பிக் பாஸ் முடிந்த பிறகாவது இதற்கொரு தீர்வு கிடைக்கட்டும். இது இரு தனிநபர்கள் சார்ந்த விஷயம். மூன்றாம் மனிதருக்கு அங்கு இடமில்லை.

Published:Updated:
பிக் பாஸ் - 103
‘தாமரையின் குணாதிசயத்தை பிக் பாஸ் வீடு மாற்றி விடும்’ என்று துவக்க நாள்களில் எழுதியிருந்தேன். அது உண்மையாகிவிட்டது. தாமரையின் கிராமத்துக் களங்கமின்மையை நகர அனுபவம் மாற்றிவிட்டது. அவர் இங்கு திரும்பி வரும்போது புறத்தோற்றத்தில் மட்டுமல்லாது, அகத்திலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நன்கு உணர முடிகிறது. மிக நைச்சியமாக பதில் சொல்லக் கற்றிருக்கிறார். வெளியில் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வந்திருப்பார் போலிருக்கிறது. அதன் பிரதிபலிப்பு ஆதங்கமாக, சர்காஸ்டிக்காக அவரிடம் வெளிப்படுகிறது. பிரியங்காவும் இதைப் பற்றி குறிப்பிட்டுச் சொன்னார்.

‘எல்லாவற்றிலும் உலகசதி இருக்கிறது’ என்பதை ஒரு காலத்தில் புலனாய்வுப் பத்திரிகைகள்தான் பெரும்பாலும் சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் இன்று சமூகவலைத்தளங்களின் பெருக்கத்தால் ஒவ்வொரு சாதாரண மனிதனும் அம்மாதிரியாக மாறியிருக்கிறான். “அதுல பாருங்க. ஒரு சூட்சுமம் இருக்கு. சும்மா இல்ல...’ என்று எந்தவொரு விஷயத்தையும் அமெரிக்க அதிபர் உள்ளிட்ட பெருந்தலைகளிடம் கொண்டு போய் உலக பாலிட்டிக்ஸ்ஸில் சேர்க்கிறான். தாமரைக்கு மட்டுமல்ல, சராசரி மனிதனிடமுள்ள களங்கமின்மையையும் நவீன உலகம் கொஞ்சம் கொஞ்சமாகக் களவாடிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் - 103
பிக் பாஸ் - 103

அந்த வகையில் கோக்குமாக்காக யோசித்தால், இறுதிக்கட்டம் நெருங்கும் சமயத்தில் பிரியங்காவிற்கு திடீரென்று உடல்நலம் குன்றுவது ஏன், அனுதாப வாக்குகளுக்காகவா என்கிற சந்தேகக் கேள்வி பலருக்கு எழலாம். இதைப் போலவே ‘மனதிற்குப் பிடித்த போட்டியாளர்’ பிரிவில் ராஜூவின் தலையில்தான் அதிக ரோஜாக்கள் முளைக்கின்றன. அதற்குப் போட்டியாக பிரியங்காவை முன்வைக்கிறார்களா? இறுதிக்கட்டத்திற்கு ‘ராஜூவும் பிரியங்காவும்’தான் வருவார்கள் என்று நிரூப் முன்பே யூகித்தது உண்மையாகப் போகிறதா? - இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.

எபிசோட் 103-ல் என்ன நடந்தது?

வீட்டு மக்களை வித்தியாசமான முறையில் எழுப்ப முடிவு செய்தார் பிக் பாஸ். எனவே ‘மானே... மரகதமே…’ என்று பாடிக் கொண்டே உள்ளே வந்தார் தாமரை. அவரின் குரலைக் கேட்டதும் மக்கள் உற்சாகமடைந்தார்கள். ‘தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே’ என்னும் பாடல்வரி மாதிரி துள்ளி வெளியே ஓடி வந்தார் பாவனி. கடல் நீரில் கால் நனைக்க வந்த ஆசாமி போல கையில் செருப்பை தூக்கிக் கொண்டு வந்த பிரியங்கா, தாமரையை மிகவும் ஆசையாக கட்டிக் கொண்டார். "எம்பூட்டு அளகா மாறிட்டே” என்று செல்லம் கொஞ்சினார்.

மாறிவிட்ட தாமரை

“வெளியே எப்படி இருக்கு... எப்படிப் பேசிக்கறாங்க...” என்று பிரியங்கா ஆவலாகக் கேட்டபோது, "தெரியாது... தெரியாது. தெரிஞ்சாலும் சொல்ல மாட்டேன்" என்று ‘வெவ்வே’ காட்டினார் தாமரை. இது நிச்சயம் பழைய தாமரை இல்லை. பிக் பாஸ் வரவேற்றவுடன் “ரொம்ப மகிழ்ச்சிங்கய்யா... உங்க குரலைக் கேட்டு” என்று பரவசம் அடைந்தார். “இத்தனை நாள் நான் சமைச்சு போட்டேன்ல... இன்னிக்கு ஆண்கள்லாம் சேர்ந்து எனக்கு சமைச்சுப் போடுங்க...’ என்று கெத்தாக உத்தரவிட்டார். இதுவும் பழைய தாமரை இல்லை. “என்னால வேலை செய்யாம இருக்க முடியாது" என்று இழுத்துப் போட்டு வேலை செய்து ஆண்களின் சோம்பேறித்தனத்தை வளர்த்த தாமரை இன்று மாறிவிட்டது நல்ல விஷயம். தாமரையின் ஆலோசனைக்கு பெண்கள் கைத்தட்டி மகிழ்ந்தார்கள்.

பிக் பாஸ் - 103
பிக் பாஸ் - 103

“மேடைக்குப் நீ போனவுடனே மக்கள் கைத்தட்டியிருப்பாங்களே?” என்று பிரியங்கா ஆவலாகக் கேட்க அதற்கும் மையமாகவே பதிலளித்தார் தாமரை. “என் மேல கோபமில்லல?” என்று ஸ்ருதியும் தாமரையும் அணைத்துக் கொண்டது அருமையான காட்சி. இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்திற்காக பிக் பாஸ் வீடு மட்டுமல்லாமல், இணையத்திலும் நிறைய குடுமிப்பிடிச்சண்டை நடந்தது. நாணயம் திருடிய விவகாரத்தில் தவறு தாமரை பக்கமா, ஸ்ருதி பக்கமா என்று நிறைய வாதப்பிரதிவாதங்கள் ஓடின. ஆனால் இன்று யோசிக்கும்போது நமக்கு அது ஒரு விஷயமாகவே தெரியவில்லை. சற்று தொலைநோக்குப் பார்வையோடு நிதானமாக பார்த்தால் இப்படியான பல கசப்பான சம்பவங்களை நாம் முன்பே தவிர்த்துவிட முடியும் என்பதற்கான உதாரணம் இது.

“ஓகே... நீதான் கரெக்ட்டா சொல்லுவே... யார் இங்க ஸ்மார்ட் பிளேயர்?” என்று நாடியாவிடம் ரகசியமாக கேட்டார் பிரியங்கா. கிசுகிசு குரலில் நாடியா சொல்லியதில் இருந்து அப்பாவித் தோற்றத்துடன் உள்ளே நுழைந்த தாமரை சிறப்பாக விளையாடியதாகவும் சாதாரண பெண்களின் பிரதிநிதியாக இருந்தார் என்றும் குத்துமதிப்பாக புரிந்துகொள்ள முடிந்தது. “தாமரைதான் டைட்டில் ஜெயிப்பாங்கன்னு நான் நெனச்சேன். ஆனா அவ எலிமினேட்டான அன்னிக்கு எங்களுக்கு ஒரே ஷாக்" என்றார் பிரியங்கா. “உங்க ரெண்டு பேருக்கும் உள்ள ஒரு நல்ல bonding இருக்கு. சண்டை போட்டுக்கிட்டாலும் உடனே இணைஞ்சிட்டீங்க” என்று பிரியங்காவைப் பாராட்டினார் ஸ்ருதி.

“நான் இங்க நடிக்கலைப்பா... எங்க குடும்பத்தையெல்லாம் வீடியோ எடுத்து போட்டிருக்காங்க. அதையெல்லாம் பார்த்தீங்கன்னா உங்களுக்கே தெரியும்” என்று தன் ஆதங்கத்தை ராஜூவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் தாமரை. ‘இவரின் வீட்டில் ஏற்கெனவே கேஸ் ஸ்டவ் இருக்கு’ என்று ஆராய்ந்து சமூகவலைத்தளத்தில் புலனாய்வு ரிப்போர்ட் செய்தவர்களுக்கான பதில் இது. “தாமரைக்கு உலகம் தெரியாம இருக்கலாம். ஆனா நம்ம வீட்ல அம்மா, பாட்டில்லாம் சில விஷயங்களை கரெக்ட்டா சொல்லுவாங்கள்ல… அந்த மாதிரி ஒரு மூளை அவளுக்கு இருக்கு” என்று ஸ்ருதியிடம் தாமரையைப் பற்றி புகழ்ந்து கொண்டிருந்தார் பிரியங்கா. இது சரியான அவதானிப்பு. உலக அரசியல் பேசும் ஆசாமிகளுக்கு கூட தெரியாத நுட்பமான ஒரு விஷயம் வீட்டின் மூலையில் அமர்ந்திருக்கும் கல்வியறிவு இல்லாத பாட்டிக்கு நன்றாகத் தெரியும். அனுபவம் என்கிற சொத்து தந்திருக்கிற பிரத்யேக ஞானம் அது. “என்ன நடந்தாலும் உங்க இயல்பை நீங்க விட்டுத்தராம கூலா இருக்கீங்க... அது உங்க ப்ளஸ் பாயிண்ட்" என்று பிரியங்காவைப் பாராட்டினார் ஸ்ருதி.

பிக் பாஸ் - 103
பிக் பாஸ் - 103

பாத்திரம் கழுவும் ஏரியாவில் பிரியங்காவிடம் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார் அமீர். “எனக்கு நடிக்கல்லாம் தெரியாதுப்பா...ன்னு தாமரை மத்தவங்க கிட்டசொல்லிக்கிட்டிருக்காங்க. இங்க நடந்ததையெல்லாம் டிவி பார்த்திருப்பாங்க போல. நான் கூட அவங்களைப் பத்தி நெறய சொல்லியிருக்கேன். அதான் ஒரு மாதிரி ரியாக்ட் பண்றாங்க” என்பது அமீரின் அனத்தல். இந்தச் சிக்கலான விளையாட்டு மனிதர்களை அப்படித்தான் செய்யும் என்கிற அடிப்படை தாமரைக்குப் புரிந்துவிட்டால் அந்த வருத்தம் ஏற்படாது.

மட்டன் பிரியாணியில் தேங்காய் பீஸ்

தாமரையின் வேண்டுகோள் படி நிரூப் பிரியாணி செய்து கொண்டு வந்தார். பிரியாணியில் மட்டன் பீஸ், சிக்கன் பீஸ் வைத்து சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் முதன்முறையாக தேங்காய் பீஸ் வைத்த முதல் ஆசாமி நிரூப்தான். ஒருபக்கம் இதைக் கிண்டடிலத்தாலும், இன்னொரு பக்கம் "பசங்க நல்லா பண்ணியிருக்காங்க” என்று சான்றிதழ் தந்தார் தாமரை. “யார் ஃபைனல் வருவாங்கன்னு உனக்கு டென்ஷனாவே இல்லையா? எனக்கு இருக்கு” என்று பாவனியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் அமீர். “எனக்கு ஹாப்பியா இருக்கு” என்றார் பாவனி. அது சரி, படிக்கிற பசங்களுக்குத்தானே பரீட்சை பற்றிய பயம் இருக்கும்?

‘நீர் ஊற்றும் டாஸ்க்கில்’ தான் செய்த ராஜதந்திரம் பற்றி சிபியிடம் விளக்கிக் கொண்டிருந்தார் நிரூப். ‘உனக்கு வெக்கமே கிடையாதாடா’ என்கிற முகபாவத்துடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார் சிபி. தாமரை மற்றும் பாவனியை அந்த டாஸ்க்கில் இருந்து வெளியேற்றி தன்னைத் தேர்ந்தெடுக்க வைப்பதுதான் நிரூப்பின் உத்தியாக இருந்ததாம். (அடப்பாவி!).

‘அம்பி மாதிரி இருந்தே... ரெமோ மாதிரி மாறிட்டே?’

பாடல் ஒலிக்க மக்கள் ஆவலாக வாசல் பக்கம் வந்தார்கள். ஆனால் ஸ்டோர் ரூம் வழியாக வருண் – அக்ஷரா ஜோடி உள்ளே வந்தது. பிரியங்கா கத்துவதற்கு முன்னால் அவரை மாதிரியே கத்தி ரகளை செய்தார் வருண். பிரியங்காவை அடக்கி விட இதுவொரு நல்ல உத்தி. “என்னடா... அம்பி மாதிரி இருந்தே.. ரெமோ மாதிரி மாறிட்டே?” என்று நிரூப்பின் சேஞ்ச்ஓவரைப் பாராட்டினார் வருண். “என்னை செல்லக்குட்டின்னு கொஞ்சு பார்க்கலாம்” என்று ராஜூவை இம்சை செய்து கொண்டிருந்தார் தாமரை. ராஜூ அதை அரைமனதாக செய்ய “அப்போ... வருணையாவது உண்மையா கொஞ்சிக் காண்பி” என்று தாமரையின் ஜாலி இம்சை கூடிக் கொண்டிருக்க, கொஞ்சம் சங்கடமான முகபாவத்துடன் இருந்தார் ராஜூ.

பிக் பாஸ் - 103
பிக் பாஸ் - 103

“அக்ஷரா எலிமினேட் ஆனதும் எனக்கு ‘ஹப்பாடா’ன்னு நிம்மதியா இருந்தது. அதுக்கப்புறம் என் பேரையும் கூடவே சொன்னதும் அவ ஹாப்பியாயிட்டா” என்று கடந்த கால உண்மையை சபையில் ஜாலியாக உடைத்துக் கொண்டிருந்தார் வருண். ராஜூவையும் பிரியங்காவையும் வாக்குமூல அறைக்கு அழைத்த பிக் பாஸ், அன்று மாலை நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்துத் தரும் பணியைத் தந்தார்.

ஆனால் சிறிது நேரத்தில் பிரியங்கா தனியறையில் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து ராஜூ அதிர்ச்சியடைந்தார். ‘நீண்ட நாட்கள் கழித்து தொகுப்பாளர் பணி கிடைத்த ஆனந்தக் கண்ணீரோ’ என்று பார்த்தால் இல்லை. பிரியங்காவிற்கு பயங்கரமான கால்வலியாம். நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் ஜாலியான, காமெடியான முகங்களை மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால் நிகழ்ச்சி முழுவதும் நிற்க வேண்டிய அவசியம் உள்ளிட்டு பல நடைமுறை அவஸ்தைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். அதைப் பற்றி நாம் அறிய முடியாது. பிரியங்காவின் அவஸ்தையைப் பார்க்க சங்கடமாகவே இருந்தது. இதுவரை நாம் பார்க்காத கலங்கலான முகம் அது. பிக் பாஸிற்கும் இது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். பிரியங்காவை உடனே மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பியது நல்ல விஷயம்.

தமிழ் சீரியல்கள் என்னும் விநோத உலகம்

இரண்டு தொலைக்காட்சித் தொடர்களின் இரண்டாவது சீசன் ஆரம்பிக்கிறதாம். ஆங்கிலம் உள்ளிட்டு உலகமெங்கும் தொலைக்காட்சித் தொடர்களின் தரம் எங்கேயோ போய்விட்டது. அந்தளவிற்கு விதம் விதமான பின்னணிகளில் பின்னியெடுக்கிறார்கள். ஆனால் நம் ஊர் தொடர்கள், பெண்களுக்கானவை என்ற போர்வையில், அறுபதுகளின் தமிழ் சினிமாக்களை இன்னமும் அப்படியே கூசாமல் காப்பியடிக்கின்றனவோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. நேற்றைய எபிசோடில் ஒளிபரப்பான இரண்டு பிரமோ வீடியோக்களும் இதையே பிரதிபலித்தன.

பிக் பாஸ் - 103
பிக் பாஸ் - 103

இந்தத் தொலைக்காட்சித் தொடர்களின் இரண்டாவது சீசனை அறிமுகப்படுத்தும் பணியை தன்னந்தனியாக ராஜூ மேற்கொண்டார். தனது டைமிங் காமெடிகளால் ராஜூ நன்றாகவே சமாளித்தார் என்றாலும், பிரியங்கா இல்லாத குறையை நன்கு உணர முடிந்தது. அவரின் ஹைடெஸிபல் கத்தலை ஒருபக்கம் கிண்டலடித்தாலும், ஒரு சூழலை சட்டென்று உயிர்ப்பாக்க, பிரியங்கா போன்ற அனுபவமுள்ள தொகுப்பாளர்களால்தான் முடியும். இந்தக் குறையை ராஜூவிடம் பார்க்க முடிந்தது. ஒரு தொகுப்பாளரின் சைகைகளுக்கு ஏற்பதான், நிகழ்ச்சிகளின் நகர்வுகள் அமைய வேண்டும். அதாவது பார்ப்பதற்கு அப்படியான தோற்றம் வர வேண்டும். ஆனால் நிகழ்ச்சியின் போக்குடன் சரியாக ஒத்திசைய முடியாமல் ராஜூ அவஸ்தைப் பட்டதை சில இடங்களில் காண முடிந்தது. புரோமோ வீடியோக்கள் ஆரம்பமாகிவிட்ட பிறகே... “உங்களுக்காக இதோ... இதோ" என்று ஒரே மாதிரியாக கைகாண்பித்துக் கொண்டிருந்தார்.

‘உங்க சீரியல் மனைவிக்கு என்ன தகவல் சொல்லணும்?’

“போகி என்பது பழைய விஷயங்களை எரிக்கும் விஷயம். இங்கு பழைய போட்டியாளர்களைக் கூட்டி வந்து நம்மை எரித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று ஆரம்பத்திலேயே ராஜூவின் நையாண்டி களைகட்டியது. ‘ஈரமான ரோஜாவே’ என்கிற தொடரின் டீம் உள்ளே வந்தது. “டாஸ்க் சமயத்துல நல்லா அடிச்சுக்கறீங்க. அப்புறம் உடனே பிரெண்ட்ஸ் ஆயிடறீங்க. இது நல்ல விஷயம்” என்று சீரியலின் ஹீரோ பாராட்ட, "அதாங்கய்யா… எனக்கும் புரியாத மர்மமா இருக்கு” என்று அந்தப் பக்கம் சேர்ந்து கொண்டார் ராஜூ. உடன் வந்திருந்தது அந்த ‘ஈரமான ரோஜா’வின் ஹீரோயின்களில் ஒருவர்தான் போலிருக்கிறது. ஆனால், வந்ததில் இருந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.

“மதிய நேரத்துல இருந்து தூக்கி எங்க ரெண்டாவது சீசனை நைட்டு பத்து மணிக்கு பிரைம் டைம்ல மாத்தியிருக்காங்க” என்று சீரியல் ஹீரோ பெருமிதத்துடன் சொல்ல “அதாவது நீங்க சீக்கிரம் முடிச்சுத் தொலைங்க. இடத்தைக் காலி பண்ணுங்க’ன்னு எங்களைச் சொல்றீங்க.. அதானே?” என்று பிக் பாஸ் நிகழ்ச்சியையே இடக்கு செய்தார் ராஜூ. “உங்க சீரியல்ல வர்ற மாதிரியே... இங்க இருக்கற ஜோடி யாரு?” என்று ராஜூ தனது வில்லங்க நகைச்சுவையை மறுபடியும் தூசு தட்டி எடுக்க “இங்க யாரும் அப்படி இல்ல... எல்லோரும் நண்பர்கள்தான்” என்று சீரியல் ஹீரோ சமயோசிதமாக சொல்லி முடித்தது நல்ல விஷயம்.

பிக் பாஸ் - 103
பிக் பாஸ் - 103

'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ராஜூவின் பாத்திரத்தை குவைத் சிறையில் தள்ளியிருக்கிறார்களாம். “உங்க மனைவி காயத்ரிக்கு ஏதாவது தகவல் சொல்றீங்களா. என்ன பரிசு வாங்கிட்டு வருவீங்க?” என்று குறும்பான கேள்வி எழ, “அய்யா... அது சீரியல்ல வர்ற மனைவி கேரக்டர்னு சரியா சொல்லுங்கய்யா” என்று ராஜூ ஜாலியாகக் கதறினார். “என்ன தகவல் சொல்லணும்?” என்கிற கேள்விக்கு “வோட்டு போடச் சொல்லுங்க” என்று ராஜூ டைமிங்கில் அடித்தது ஜாலி பட்டாசு.

ரஞ்சித் என்கிற பண்பான மனிதர்

அடுத்ததாக உள்ளே வந்தது ‘செந்தூரப் பூவே’ சீரியல் டீம். நடிகர் ரஞ்சித் ஆன்மிக உரையாற்றும் ரேஞ்சில் பக்குவமாக பேசிக் கொண்டிருந்தார். ‘அன்பை செய்யல்லாம் முடியாதுங்க’ என்று அவர் சொன்னது உண்மை. “வரும்போது மூளையைப் பயன்படுத்தலாம்னு நெனச்சிட்டு வர்றீங்க... ஆனா போகும் போது இதயங்களைக் கொண்டு போறீங்க" என்று வசனத்திலும் ரஞ்சித் பின்னினார். சீரியலுக்கும் இவர்தான் வசனம் எழுதுகிறார் போல.

பிக் பாஸ் - 103
பிக் பாஸ் - 103

“பாராட்டறவன் பத்து பேரு இருந்தா… திட்டறவனும் பத்து பேரு இருப்பான்" என்பதை ரஞ்சித் தத்துவார்த்தமாக விளக்கிச் சொல்ல “அய்யா போதும்யா..” என்று மாதிரி அவரைத் தடுத்து நிறுத்திய ராஜூ “உள்ளே இருந்து பாருங்க. அப்பதான் எங்க நிலைமை தெரியும். யார் எது சொன்னாலும் சந்தேகமா பார்க்கற அளவிற்குக் கொலைவெறிக்கு மாறிட்டோம்... நீங்க நல்லது சொன்னாலும் கூட கெட்டதாவே தெரியும்" என்று ராஜூ காமெடியாகச் சொன்னாலும் அதுதான் உண்மை. ரஞ்சித்தின் பேச்சில் இருந்த நிதர்சனத்தை சரியாகப் புரிந்து கொண்டவர் நாடியா மட்டுமே. அவர் ரஞ்சித்தின் பேச்சிற்கு ஆதரவு தெரிவித்தார்.

‘மனம் கவர்ந்த போட்டியாளர் யார்?’

சீரியல்களின் புரோமோ வீடியோக்கள் ஒளிபரப்பாகி முடிந்ததும் ‘மனம் கவர்ந்த போட்டியாளர்’ என்கிற விளையாட்டை ஆரம்பித்து வைத்தார் ரஞ்சித். பிக் பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தன் மனம் கவர்ந்த போட்டியாளர் தலையில் ரோஜாப்பூவை அணிவிக்க வேண்டும். பிரியங்கா இல்லாத குறையை அவரது ஹேர்பேண்ட் போக்கியது. அதில் பூ வைத்து மகிழ்ந்தார்கள். சிபி, தாமரை, அக்ஷரா, வருண், நிரூப் ஆகியோர் ராஜூவைத் தேர்ந்தெடுக்க நாடியா, ஸ்ருதி, அபிநய், பாவனி ஆகியோர் பிரியங்காவைத் தேர்ந்தெடுத்தார்கள். அமீரைத் தேர்ந்தெடுத்தார் ராஜூ. பாவனியை அமீர் தேர்ந்தெடுத்தார். ரோஜாப்பூக்கள் எக்ஸ்ட்ராவாக இருந்த காரணத்தினால் ஆளுக்கு ஆள் பரிமாறிக் கொண்டார்கள். நிரூப்பிற்கு ஆறுதல் பரிசு அளித்து மகிழ்ந்தார் சிபி. ‘பிரியங்கா இருந்திருந்தால் நிச்சயம் நிரூப்பிற்குத்தான் இதை அளித்திருப்பார்” என்று பூவை அணிவித்தார் அமீர். இது மிகவும் சமயோசிதமான விஷயம். இதற்கு பின்னர் அமீர் சொன்ன காரணம் நெகிழ்வானது.

பிக் பாஸ் - 103
பிக் பாஸ் - 103

“எந்தவொரு கூட்டத்திலயும் ஒருத்தனை மட்டும் தனியா விட்டுட்டா, அவன் வெளியே காண்பிச்சுக்கலைன்னாலும் கூட உள்ளுக்குள்ள பயங்கரமா ஃபீல் பண்ணுவான். அந்த மாதிரி வலியை நான் நிறைய அனுபவிச்சிருக்கேன். அதனால்தான் நிரூப்பிற்கு பூ கொடுத்தேன்” என்று பாவனியிடம் அமீர் சொன்ன விளக்கம் அருமை. ‘தன்னை பாவனி தேர்ந்தெடுக்கவில்லையே?’ என்கிற ஆதங்கம் அமீரிடம் இருந்தது வெளிப்பட்டது. ஆனால் அமீரிடம் மிகவும் நெருங்கினால் அது தவறாகப் பார்க்கப்படுகிறதே என்கிற சங்கடம் பாவனிக்குள் இருக்கிறது. அவர் அமீரை நண்பராகவே பார்க்கிறார். பாவனியின் இந்தத் தத்தளிப்பை புரிந்து கொள்ள முடிகிறது. பிக் பாஸ் முடிந்த பிறகாவது இதற்கொரு தீர்வு கிடைக்கட்டும். இது இரு தனிநபர்கள் சார்ந்த விஷயம். மூன்றாம் மனிதருக்கு அங்கு இடமில்லை.

“உங்களுக்குப் பிடித்த சீஸன் எது?” என்கிற கேள்விக்கு பலர் கமென்ட் செய்திருந்தீர்கள். நன்றி. ஐந்தாவது சீசனின் வெற்றியாளர் யார் என்பது குத்துமதிப்பாக நன்கு தெரிந்துவிட்டாலும் கூட, “இவர்தான் வெற்றியடைய வேண்டும். அதற்குத் தகுதியானவர் இவர் மட்டுமே” என்று நீங்கள் கறாராக நினைக்கும் போட்டியாளர் யார்?
எஞ்சி நிற்கும் ஐந்து நபர்களில் ‘உங்களின்’ வெற்றியாளர் யார்? கமென்ட்டில் சொல்லுங்களேன்.