Published:Updated:

பிக் பாஸ் - 105: ராஜூவின் நெகிழ்ச்சி, பிரியங்காவின் குழந்தைத்தனம்... பயண வீடியோக்களும், சர்ப்ரைஸும்!

பிக் பாஸ் - 105

ராஜூ தனக்காக திரையிடப்பட்ட வீடியோவைப் பார்த்து நெகிழ்ந்து, “இந்த மாதிரி சில ஹீரோக்களுக்கு AV கட் பண்ற வேலையை நான் பண்ணியிருக்கேன்... இப்ப எனக்காக ஒருத்தர் பண்ணியிருக்கார்” என்று பரவசப்பட்டு நெகிழ்ந்தார்.

பிக் பாஸ் - 105: ராஜூவின் நெகிழ்ச்சி, பிரியங்காவின் குழந்தைத்தனம்... பயண வீடியோக்களும், சர்ப்ரைஸும்!

ராஜூ தனக்காக திரையிடப்பட்ட வீடியோவைப் பார்த்து நெகிழ்ந்து, “இந்த மாதிரி சில ஹீரோக்களுக்கு AV கட் பண்ற வேலையை நான் பண்ணியிருக்கேன்... இப்ப எனக்காக ஒருத்தர் பண்ணியிருக்கார்” என்று பரவசப்பட்டு நெகிழ்ந்தார்.

Published:Updated:
பிக் பாஸ் - 105
Grand Finale எபிசோடிற்கு முன்னால் இறுதிப் போட்டியாளர்களை கமல் சந்தித்து ஏதாவது ஆறுதலாக பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தால் “அவர்களின் மனங்களில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் என்று பார்ப்போம்” என்று பிரமோவில் மட்டும் ஆறுதலாக வந்துவிட்டுச் சென்றார்.

நேற்றைய எபிசோடில் பெரிதான சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. ஆனால் ஐந்து இறுதிப் போட்டியாளர்களையும் பற்றி தனித்தனியாக திரையிடப்பட்ட அந்த வீடியோ பேக்கேஜ் செம க்யூட்டாக இருந்தது. போட்டியாளர்கள் ஒவ்வொருவருமே அதைப் பார்த்து நெகிழ்ந்து, சில விஷயங்களை ஆத்மார்த்தமாக உணர்ந்து கண்ணீர் விட்டார்கள். அவர்களின் நிறைகள், குறைகள் என்று பலவற்றை அந்த வீடியோவின் மூலம் அவர்கள் அறிய முடியும். அவர்களுடைய முழு வாழ்க்கையின் ஓர் அழகான துண்டு அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

இப்படியாக நம்முடைய வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களையும் யாராவது பதிவு செய்து, அழகாக எடிட் செய்து காட்டினால் அதன் மூலம் நாமும் கூட பலவற்றைக் கற்றுக் கொள்ள முடியும். பொதுவாக நாம் உருவாக்கும் வீடியோக்களில் இனிமையான தருணங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பதிவு செய்ய விரும்புவோம். அப்படியல்லாமல், நாம் ஆத்திரத்தில் எவரையாவது திட்டுவது, கோபத்துடன் முகத்தை வைப்பது, புறம் பேசுவது போன்றவற்றையும் இணைத்தே பதிவு செய்து பிறகு பார்த்தால், எத்தனை கீழ்மையான அம்சங்கள் நம்மிடம் உறைந்துள்ளன என்பது நமக்கே உள்ளூற புரியும்.

பிக் பாஸ் - 105
பிக் பாஸ் - 105

பிக் பாஸ் வீடியோ மாதிரி யாராவது ஒரு டெக்னிக்கல் டீம் அமர்ந்து இதற்காக ஸ்பெஷலாக தயார் செய்ய வேண்டியதில்லை. நம் மனசாட்சி என்னும் கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை நாமே சற்று ரீவைண்ட் செய்து பார்த்தாலே கூட போதும். இந்தப் பக்குவ நிலையை சற்று எட்டிவிடலாம்.

எபிசோட் 105-ல் என்ன நடந்தது?

‘டங்கா மாரி’ என்கிற ரகளையான குத்துப்பாடலுடன் மிக தாமதமாகவே காலைப் பொழுது விடிந்தது. பிரியங்கா இல்லாமல், நால்வர் மட்டுமே நடனமாடினர். கலகலவென்று இருந்த வீடு, இப்போது வெறிச்சோடிக் கிடப்பதைப் பார்க்க நமக்கே ஒரு மாதிரியாக இருக்கிறதென்றால், அங்கு வாழ்கிறவர்களின் நிலைமை பரிதாபம்தான். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் கூட்டுக்குடும்பங்கள் சிதறி, நியூக்ளியர் குடும்பங்கள் பெருகி, அதுவும் கூட உடைந்து தனிநபர் மோக வாழ்க்கைதான் இன்று பெருகியிருக்கிறது.

‘அண்ணன் என்ன... தம்பி என்ன...’

இது நிரூப் ஏற்கெனவே சொன்ன விஷயம்தான். ஓர் அற்ப காரணத்திற்காக தனது சொந்தத் தம்பியிடம் பல வருடங்களாகப் பேசாமல் இருந்தாராம் நிரூப். இது நிரூப்பிற்கு மட்டுமல்ல, நமது குடும்பங்களில் பல சகோதரர்களிடம் நடந்திருக்கக்கூடிய விஷயம்தான். சிறுவயதில் ஏதோவொரு சாதாரண விஷயத்திற்காக முட்டிக் கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் பல வருடங்கள் கடந்தாலும் கூட அந்தப் பகையை தக்க வைத்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் பேச விரும்பினாலும் கூட ஈகோ, வெட்கம், சங்கடம் உள்ளிட்டவை வந்து தடுக்கும். இந்தப் பனிச்சுவர் உடைந்து போனால் மேலதிக பாசம் வந்துவிடும். நிரூப்பிற்கு நிகழ்ந்திருப்பது இதுதான். ‘யாரென்று தெரியாத பிக் பாஸ் போட்டியாளர்களிடமே இத்தனை இணக்கம் ஏற்படுகிறது என்றால் தன் சொந்தத் தம்பியை இத்தனை ஆண்டுகள் புறக்கணித்து விட்டோமே’ என்று அவர் மனம் மாறியிருப்பது முக்கியமானது.

மறுபடியும் அதேதான். பிக் பாஸ் நிகழ்ச்சியை வெறும் வம்பு பேசும் இன்னொரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளாமல் சுயபரீசிலனையோடு அணுகினால் பல நல்ல அனுகூலங்களை நமக்குள் பெற முடியும்.

பிக் பாஸ் - 105
பிக் பாஸ் - 105

“இன்னிக்கு என்ன கிழமை?” என்று நிரூப்பிடம் கேட்க ஆரம்பித்த ராஜூ, “அஞ்சும் மூணும் கூட்டினா எட்டு.. எதிர் வீட்டு நம்பர் பாருங்க எட்டு” என்கிற மாதிரி கோக்குமாக்காக விரல்களை வைத்து கணக்குப் போட்டார். என்னமோ அதிசயம் நிகழ்த்தப் போகிறார் என்று மக்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்க “கண்டுபிடிச்சிட்டேன்... இன்னிக்கு ரெண்டாவது சனிக்கிழமை” என்று அவர் உற்சாகத்துடன் சொல்ல “ச்சை...” என்று நொந்து போனார்கள்.

"14, 15-ந்தேதின்னா... அது ரெண்டாவது வாரமாத்தானே இருக்கணும். இது சிம்பிள் மேட்டர்” என்று அமீர் சொல்ல “இங்க பாருப்பா தம்பி... அதெல்லாம் சாதாரணமா யோசிக்கறது. என்னை மாதிரி சிந்தனாவாதிகள் அப்படி ஈஸியா யோசிக்க மாட்டோம். ஐன்ஸ்டீன் என்ன செஞ்சார்ன்னு தெரியுமா?" என்று பெரிய விஞ்ஞானிகளின் பெயர்களை எல்லாம் அவர் அநாவசியமாக இழுக்க “ஓ... சனிப்பெயர்ச்சின்றது இதுதானா?” என்று தலையை தொங்கப் போட்டார் அமீர்.

கார்டன் ஏரியாவில் கலர்ஃபுல் அலங்காரம்

எந்தவொரு புது விஷயத்தை செய்வதென்றாலும் ஷட்டர் போட்டு மக்களை உள்ளே வைத்து பூட்டிவிட்டு பிறகு ‘சர்ப்ரைஸ்’ செய்வது பிக் பாஸின் வழக்கம். அது போல கார்டன் ஏரியாவில் பல அட்டகாசமான அலங்காரங்களை செய்து வைத்திருந்தார்கள். இந்த சீசனில் இதுவரை நடந்த அனைத்து டாஸ்க் சம்பந்தப்பட்ட பொருள்களும் நினைவுச்சின்னங்களாக அழகான முறையில் லைட்டிங்குடன் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இறுதிப் போட்டியாளர்களின் பெயர்கள் பொறித்த லைட் செட்டிங், அவர்களை பாராட்ட எலெக்ட்ரிக் புஸ்வாணம், நிற்கும் மேடை என்று தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார் பிக் பாஸ்.

பிக் பாஸ் - 105
பிக் பாஸ் - 105

"நிரூப்... நீங்க வாங்க...” என்று பிக் பாஸ் அழைத்தாலும் வரிசையின்படி முதலில் அழைக்கப்பட்டவர் பிரியங்காதான் போலிருக்கிறது. எடிட்டிங் மாயத்தில் இந்த வரிசையை மாற்றியிருந்தார்கள். இந்த வரிசைக்கும் இறுதிப் போட்டிகளின் முடிவுகளுக்கும் ஏதோவொரு தொடர்பிருப்பது போன்ற பிரமை.

வெளியில் வந்த நிரூப் அங்கிருந்த அலங்கார மாய்மாலங்களை பார்த்து திகைப்பும் சந்தோஷமும் அடைந்தார். ஒவ்வொரு போட்டியாளரையும் பற்றிய சுருக்கமான முன்னுரை திறமையான ஸ்கிரிப்ட் ரைட்டரால் எழுதப்பட்டிருந்தது. அதை சரியான தொனியில் வாசித்த பிக் பாஸ், பிறகு அவர்களுக்காக உருவாக்கப்பட்டிருந்த Exclusive வீடியோவைத் திரையிட்டுக் காட்டினார். ஒருவகையில் இதை அவர்களின் ‘பயண வீடியோ’வாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

“I like finishing the race"

வீடியோவைப் பார்த்து முடித்து நெகிழ்ந்த நிரூப்... “I like finishing the race’ என்று வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் சொன்ன வாக்கியம் அற்புதமானது. ‘எதிலும் ஸ்ட்ராட்டஜி எல்லாம் ஸ்ட்ராட்டஜி’ என்று நிரூப் இருந்தாலும் மற்றவர்கள் சொல்கிறபடி அவருக்குள் ஒரு நல்ல மனிதன் இருக்கிறான். ஆம். வளர்ந்த குழந்தைதான் நிரூப். “இங்க இருக்கற நினைவுப்பொருள்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் எடுத்துச் செல்லலாம்” என்று பிக் பாஸ் அறிவித்தவுடன் தன் நாணயத்தை ஆசையாக எடுத்துக் கொண்டார் நிரூப்.

பிக் பாஸ் - 105
பிக் பாஸ் - 105

அடுத்ததாக வந்தவர் அமீர். (ஆர்டரை கவனியுங்கள்). "லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டீங்க... Well played” என்று முன்னுரையில் பாராட்டிய பிக் பாஸ், வீடியோவைத் திரையிட்டார். அதில் பாவனியுடன் தான் நிகழ்த்திய ரொமான்ஸ் காட்சிகளை வெட்கமும் சங்கடமுமாக சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் அமீர். தன்னுடைய அம்மா தொடர்பான பகுதிகள் வரும் போது நிற்க முடியாமல் உடல் மடங்கி கலங்கினார். நினைவுச்சின்னமாக தன் பெயர் பொறிக்கப்பட்ட லைட்டிங் செட்டப்பையும், டாஸ்க்கில் பயன்படுத்திய கயிறையும் அவர் தேர்வு செய்தது சிறப்பு. “எனக்குள் பொறுமை என்கிற விஷயம் இருக்கிறது என்பது கயிறு பிடிக்கும் டாஸ்க்கில்தான் எனக்கே தெரிய வந்தது” என்று முன்னர் சொல்லியிருந்தார் அமீர்.

‘கீழே விழுந்தா உடனே எழுந்துடறதுதான் உங்க ஸ்பெஷல்!’

அடுத்ததாக வந்தவர் பாவனி. “எவ்ளோ நாளாச்சு... I miss this...” என்று சிம்மாசனத்தில் ஏறி ஆசையாக அமர்ந்தார். அவர் வைத்திருந்த நாணயத்தின் ஆளுமை வந்தபோது போடப்பட்ட நாற்காலி அது. நினைவுச் சின்னமாக அதைத்தான் கேட்பார் என்று தோன்றியது. "பிரியங்கா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். குழந்தை மாதிரி ஒவ்வொன்னையும் பார்ப்பாங்க” என்று பிரிவிற்காக ஏங்கியவரை பிக் பாஸ் அழைத்தார். அழகான முன்னுரைக்குப் பிறகு பாவனியின் வீடியோ திரையிடப்பட்டது.

‘ஸ்வீட் எடு. கொண்டாடு’ என்கிற உற்சாக மோடிற்கு ஆர்மிக்காரர்கள் நிச்சயம் சென்றிருப்பார்கள். வீடியோவின் ஒவ்வொரு பிரேமிலும் அத்தனை க்யூட்டாக இருந்தார் பாவனி. சிரிப்பும், நெகிழ்வும், பரவசமுமாக தான் தோன்றிய காட்சிகளை தானே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் பாவனி. வீடியோ முடிந்ததும் ‘லவ்யூ பிக் பாஸ்...’ என்று பாவனி ‘உரக்கச் சொன்னதை’ பிக் பாஸூம் வழிமொழிந்தார். “இந்தத் தைரியம் நீங்க கொடுத்தது பிக் பாஸ்” என்று நெகிழ்ந்த பாவனியிடம் “மொழி சரியா தெரியாம கூட எதிர்நீச்சல் போட்டு வந்தீங்க... கீழே விழுந்தா உடனே எழுந்துடறதுதான் உங்க ஸ்பெஷல் குணாதிசயம்" என்று பாராட்ட அதற்கு மிகவும் நெகிழ்ந்து போனார் பாவனி.

பிக் பாஸ் - 105
பிக் பாஸ் - 105

ஆம். பிக் பாஸின் குரலில் நிச்சயம் ஒரு மேஜிக் இருக்கிறது. அவர் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள், அவற்றைச் சொல்லும் முறை, தொனி போன்றவற்றில் நம்பகத்தன்மை, கம்பீரம், அரவணைப்பு, ஆறுதல், உத்வேகம் என்று பல விஷயங்கள் இருக்கின்றன. எந்தப் போட்டியாளராவது மனம் உடைந்து வாக்குமூல அறையில் உடைந்து அழும்போது அவரை பிக் பாஸ் ஆற்றுப்படுத்துவதே அத்தனை அழகாக இருக்கும். அந்த வகையில் பிக் பாஸை சிறப்பாக கவுன்சிலிங் தருபவர் எனலாம்.

“நினைவுப்பொருளா இந்த காயினை எடுத்துக்கறேன் பிக் பாஸ்” என்று பாவனி சொல்ல, “எடுத்துக்கங்க... கஷ்டப்பட்டு திருடினது” என்று பாவனியை கிண்டலடித்து பங்கம் செய்தார் பிக் பாஸ்.

‘வருங்கால சிவகார்த்திகேயன் ராஜூ?’

அடுத்ததாக வந்தவர் ராஜூ. போட்டியாளர்கள் தங்களின் தனிப்பட்ட பின்னணியை ஒரு பிரேமின் முன்னால் சொன்ன டாஸ்க்கை நினைவுகூர்ந்து “இங்கதான் முதன் முதலில் ஆரம்பிச்சது” என்று அந்த பிரேமை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார் ராஜூ. பகடைக்காய் டாஸ்க்கை நினைவுகூர்ந்து ‘அவ்வளவு கடுமையா சண்டை போட்டிருக்க வேண்டாம்’ என்று வருந்தினார்.

பிறகு, தனக்காக திரையிடப்பட்ட வீடியோவைப் பார்த்து நெகிழ்ந்து, “இந்த மாதிரி சில ஹீரோக்களுக்கு AV கட் பண்ற வேலையை நான் பண்ணியிருக்கேன்... இப்ப எனக்காக ஒருத்தர் பண்ணியிருக்கார்” என்று பரவசப்பட்டு நெகிழ்ந்த போது ஒரு ‘வருங்கால சிவகார்த்திகேயனை’ பார்க்க முடிந்தது. (அந்த மாதிரி உயரத்திற்கு வாங்க ராஜூ). பிறகு நினைவுச்சின்னமாக ‘Dare’ டாஸ்க்கில் பயன்படுத்தப்பட்ட டெலிபோனை எடுத்துச் சென்றார்.

பிக் பாஸ் - 105
பிக் பாஸ் - 105

பிரியங்காவின் என்ட்ரி. மருத்துவ சிகிச்சையை முடித்துவிட்டு பழைய உற்சாகமான பிரியங்காவாக திரும்பிவிட்டார். “என்ன சிறிசு?” என்று பிக் பாஸ் இவரை அழைக்க "என்ன பெரிசு?” என்று பிரியங்கா அழைக்க பரஸ்பரம் செல்லம் கொஞ்சிக் கொண்டார்கள். "இந்த வீட்டை ரொம்ப மிஸ் பண்ணேன். உள்ளே போகட்டுமா?” என்று ஆவலாகக் கேட்க அவரை அனுமதித்தார் பிக் பாஸ். “பிரியங்காவை இன்னமும் காணோமே?” என்று கவலையுடன் பாவனி பேசிக் கொண்டிருக்க நிரூப் உட்பட மற்றவர்களும் அந்தத் தவிப்பை எதிரொலித்தார்கள்.

“நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்று ஸ்டோர் ரூம் வழியாக உள்ளே வந்த பிரியங்காவைப் பார்த்ததும் அனைவருமே மகிழ்ச்சியடைந்தார்கள். பிறகு வெளியில் வைக்கப்பட்டிருந்த சிறப்பு பாராட்டு சடங்கிற்கு முதலில் அழைக்கப்பட்டவர் பிரியங்காதான். அப்போதுதான் கிடைத்த கதவின் இடைவெளியில் மக்கள் வெளியில் எட்டிப் பார்த்து வியந்து போனார்கள்.

‘ஹை... ஜாலி... ஜாலி... லைட்டுல்லாம் எரியுது’

‘வெல்கம் பேக்’ என்று ஆசையாக பிரியங்காவை அழைத்தார் பிக் பாஸ். “இங்கல்லாம் லைட்டு எரியும்ல... இங்கதானே புஸ்வாணம் வரும்... நான் நடுவுல நிக்கணும்ல... ஹை... ஜாலி... ஜாலி…” என்று குழந்தையாகக் குதூகலமடைந்தார் பிரியங்கா. ஏற்கெனவே சொன்னதுதான். தனக்குள் இருக்கிற குழந்தைத்தன்மையை ஒருவர் கடைசி வரைக்கும் இழக்காமல் இருப்பது முக்கியமானதுதான். ஆனால் அதே சமயம் அது அளவு மீறிவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிரியங்கா தொடர்பான வீடியோ நேரடியாக ஆரம்பமானது. அந்த வீடியோ ஒருபக்கம் இருக்கட்டும். அதற்கு விதம் விதமாக பிரியங்கா தந்த முகபாவங்களையே தனியாகத் தொகுக்கலாம். “அழகி... அழகி…" என்று தன்னையே பாராட்டிக் கொண்ட பிரியங்கா, சோகக் காட்சிக்கு அழுது, நகைச்சுவைக் காட்சிக்கு பல் தெரிய சிரிக்கும் சராசரி பார்வையாளன் மாதிரி, தன்னுடைய வீடியோவை தானே சினிமா மாதிரி அவ்வளவு ரசித்துப் பார்த்தார்.

பிக் பாஸ் - 105
பிக் பாஸ் - 105

தாமரை பலமாகத் தள்ளிவிடும் போது பிரியங்காவின் முகத்தில் ஏற்படும் அந்த அதிர்ச்சியை கவனியுங்கள். தன்னுடைய வாழ்நாளிலேயே எந்தவொரு சண்டையிலும் ஈடுபட்டிருக்காத ஒரு குழந்தையின் எதிர்பாராத அதிர்ச்சி தெரியும். என்னை மிகவும் கவர்ந்த ‘Moment’ அது. “இந்தச் சண்டையையெல்லாம் தவிர்த்திருக்கலாம்னு இப்ப தோணுது” என்றார் பிரியங்கா. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுதான் மனிதனின் பழக்கம். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் அடுத்த முறையும் இதே வகையில்தான் அவன் சூரிய நமஸ்காரம் செய்வான்.

“ஒரு பிரபலமாக இருந்தும் கூட உங்கள் இயல்பிலேயே நீங்கள் இங்கு வாழ்ந்தது முக்கியமான விஷயம்” என்று தன்னுடைய பாராட்டு உரையில் பிக் பாஸ் குறிப்பிட்டது முக்கியமான அப்சர்வேஷன். ‘மக்கள் அறிந்த பிரபலம் ஆயிற்றே’ என்று தன்னை ஒளித்து வைத்துக் கொள்ளாமல் இயல்பான பிரியங்காவை வழிந்து ஓட விட்டதற்காகவே அவரைப் பாராட்டலாம். தன் நினைவுச்சின்னமாக ‘கோல்டன் மைக்’கை பிரியங்கா எடுத்துக் கொண்டது நல்ல பொருத்தம்.

சரியான முடிவுதானா?

பிக் பாஸ் - 105
பிக் பாஸ் - 105

வேறென்ன? ஒவ்வொரு வார இறுதியிலும் முன்பே கசிந்துவிடும் எலிமினேஷன் முடிவுகளைப் போலவே இந்த சீசனின் இறுதி முடிவுகளும் முன்பே வெளியாகி விட்டன. ஒரு சஸ்பென்ஸ் நாவலின் இறுதிப் பக்கங்களை ஆரம்பத்திலேயே வாசித்துவிடுவது போன்றதொரு சங்கடமான நிலைக்கு நாம் ஆளாக வேண்டியிருக்கிறது. பிக் பாஸ் டீம் இதைக் கூடவா ரகசியமாக மூடி வைக்க முடியாது?!

இந்த முடிவுகள் இணையத்தில் ஏற்கெனவே வைரல் ஆகியிருக்கும் நிலையில், அவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்த சீசனின் டைட்டில் தகுதியானவரின் கைகளில்தான் சென்று சேர்ந்திருக்கிறதா? கமென்ட் பாக்ஸில் வந்து சொல்லுங்களேன்.