Published:Updated:

பிக் பாஸ் - 12: "யாஷிகா உதவினா என்ன இப்ப?" எனக் கேட்ட நிரூப்; கேமராவுக்காக நடிக்கிறாரா பிரியங்கா?

பிக் பாஸ் - 12

“பிக்பாஸ் வர்றதுக்கு முன்னாடியே நான் யாஷிகாவோட எக்ஸ் பிரண்ட்ன்னும் அதனாலதான் இந்த சான்ஸ் கிடைச்சதுன்னும் சொன்னாங்க. யெஸ்… ஆமாம்... அவதான் எனக்கு நெறய வழிகாட்டினா." - நிரூப்

பிக் பாஸ் - 12: "யாஷிகா உதவினா என்ன இப்ப?" எனக் கேட்ட நிரூப்; கேமராவுக்காக நடிக்கிறாரா பிரியங்கா?

“பிக்பாஸ் வர்றதுக்கு முன்னாடியே நான் யாஷிகாவோட எக்ஸ் பிரண்ட்ன்னும் அதனாலதான் இந்த சான்ஸ் கிடைச்சதுன்னும் சொன்னாங்க. யெஸ்… ஆமாம்... அவதான் எனக்கு நெறய வழிகாட்டினா." - நிரூப்

Published:Updated:
பிக் பாஸ் - 12
நேற்றைய எபிசோடின் இறுதியில் "நாளை விஜயதசமி... இந்த நாளில் எந்தவொரு விஷயத்தையும் துவங்கினால் வெற்றி" என்பதுபோல் பிக் பாஸ் அறிவித்தார். எனில் சீசன் 5-ஐ விஜயதசமியிலேயே துவங்கியிருக்கலாமே என்று நம்முடைய மைண்ட் வாய்ஸ் கோக்குமாக்காக ஓடிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி அந்த லட்சணத்தில் போய்க் கொண்டிருக்கிறது. (நான்கூட விஜயதசமி அன்றுதான் முதன்முதலில் பள்ளிக்குச் சென்றேன். பாருங்கள்! இப்போது பிக் பாஸ் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்!).

பிக் பாஸ் வீட்டில் எட்டு மணிக்கு விடிந்தது. புதிய பாடல்களுக்கான உரிமைத் தொகை தருவதற்கு டப்பு இல்லையோ, என்னமோ, பிக் பாஸ் பழைய பாடல்களாக போட்டுக் கொண்டிருந்தார். ‘மரணம்... மாஸூ மரணம்’ பாடல் அலற, மக்கள் கரணம் போடுவதுபோல் குதித்துக் கொண்டிருந்தார்கள்.

ராஜூ பாக்யராஜின் சிஷ்யர் என்பதை பெரும்பாலான சமயங்களில் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவரது கமென்ட்களில் அந்த நெடி எட்டிப் பார்க்கிறது. ‘கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பார்க்கணும்டி… கத்துக்கடி மாமன் கிட்ட அதனையும் அத்துப்படி’ என்ற பாடலுக்கு என்ன பொருள் என்பதை மதுமிதாவிடம் உடைந்து போன ஆங்கிலத்தில் வில்லங்கமாக விளக்கிக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் - 12
பிக் பாஸ் - 12

ஊடகத்துறை அனுபவம் காரணமாக பிரியங்காவிற்கு கேமரா சென்ஸ் நிறைய இருக்கிறது. எனவே அதற்கு எப்படித் தீனிபோட வேண்டும் என்பது அவருக்குத் தெரிகிறது. ‘எதுக்கெடுத்தாலும் ஏதாவது கமெண்ட் சொல்லிடறாரு’ என்று இமானைப் பற்றி இசை தன்னிடம் வந்து புலம்பியதையடுத்து இவர் இமானிடம் கவுன்ட்டர் கமெண்ட் கொடுத்தாராம். இந்தச் சாதனையை தனக்கு ஹேர் டிரையர் போட்டுக் கொண்டிருந்த மதுமிதா டீமிடம் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஸ்டூல்ல உன்னால ஏறி உக்காந்துட முடியுமா?” என்று தன் உயரம் குறித்து கிண்டல் செய்த ராஜூவிடம் “நேஷனல் டெலிவிஷன்ல என்னை கிண்டல் செய்றாங்கோ. ஆதரவு தாங்கோ” என்று ஜாலியாக அலறிக் கொண்டிருந்தார் பாவ்னி அல்லது பாவனி அல்லது பவனி.

‘கதை சொல்லட்டுமா’ டாஸ்க் மீண்டும் துவங்கியது. எழுத்தாளர் சுஜாதா சொன்னதுபோல் ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது. அதன் மையத்தை அறிவதற்கு நமக்குப் பொறுமைதான் வேண்டும். ‘நிரூப்’ தன் வாழ்க்கைப் பின்னணியை சொல்ல வந்தார்.

“பிக்பாஸ் வர்றதுக்கு முன்னாடியே நான் யாஷிகாவோட எக்ஸ் பிரண்ட்ன்னும் அதனாலதான் இந்த சான்ஸ் கிடைச்சதுன்னும் சொன்னாங்க. யெஸ்… ஆமாம்... அவதான் எனக்கு நெறய வழிகாட்டினா. அவளாலதான் எனக்கு நிறைய கான்டாக்ட்ஸ் கெடச்சது. ஏன், ஒரு பொண்ணு உதவி செஞ்சு ஒரு ஆண் முன்னுக்கு வரக்கூடாதா?" என்றெல்லாம் அவர் கேட்டது சிறப்பு.

இதைவிடவும் நிரூப் சொன்ன முன்கதையில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. “நான் சைலண்ட் ஆன பையன். அம்மாவிற்கு Schizophrenia வந்ததால படிப்புல கவனம் செலுத்த முடியல. பாலிடெக்னிக் படிக்கப் போனேன். அங்க என்னை விட பெரிய பசங்களா இருந்தாங்க. அதிகமா கெட்ட வார்த்தை பேசினாங்க. எனக்கு அது புரியல. எனவே ‘எனக்கு தமிழ் தெரியாது’ன்னு பொய் சொல்லிட்டேன். அவங்களும் நம்பிட்டாங்க. என் முன்னாடியே என்னைப் பத்தி தமிழ்ல அசிங்கம் அசிங்கமா பேசுவாங்க. மொழி புரியாத மாதிரியே நடிச்சேன். எனக்குப் புரியும்ன்றது அவங்களுக்குத் தெரியாது” என்றார் நிரூப்.

பிக் பாஸ் - 12
பிக் பாஸ் - 12

அவரின் இந்த அனுபவம் சங்கடமானதுதான் என்றாலும் இன்னொரு வகையில் பிக் பாஸ் வீட்டைச் சமாளிப்பதற்கு அந்த அனுபவம் நிறைய உதவும். இன்னொருவரிடம் புறம்பேசிவிட்டு தன்னிடம் சிரித்து பேசும் ஆட்களை அடையாளம் கண்டு கொள்வதற்கு இந்தப் பயிற்சி அவருக்கு இப்போது உதவும் என்று தோன்றுகிறது. பிக் பாஸ் வீட்டில் மட்டுமல்ல... உலகத்தில் வாழ்வதற்கே இது அவசியமான பயிற்சி. "உயரம் காரணமாக பல சினிமா ஆடிஷன்களில் விரட்டப்பட்டேன்" என்று வருத்தப்பட்ட நிரூப்பிடம் “அடுத்த அரவிந்த்சாமி, மாதவன்... நீதாண்டா" என்று அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் அண்ணாச்சி.

கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் மக்கள் எப்படி லைக் கொடுக்கிறார்கள் என்கிற லாஜிக் பிடிபடவில்லை. ஒருவர் பேசி முடிக்கும்போது கண்ணீர் விடுகிறார்கள். கைத்தட்டுகிறார்கள். அரவணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இறுதியில் ஏராளமான டிஸ்லைக் வருகிறது. லைக் ஸ்டிக்கர்களை முன்னமே வாரி இறைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. பேசி முடித்த நிரூப்பை அணைத்துக் கொள்வதற்காக சோபாவின் மீது ஏறி நின்று ‘தெய்வ திருமகள்’ சாரா மாதிரி காத்துக் கொண்டிருந்தார் பிரியங்கா. “உன் பேச்சு நல்லா ரீச் ஆவும்” என்று நிரூப்பிடம் ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தார் அபிஷேக்.

கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் அடுத்து வந்தவர் அபினய். ஜெமினி – சாவித்திரியின் பேரன். பிரபலங்களின் தொடர்ச்சி என்பது ஒருவகையில் வரம். இன்னொரு வகையில் சுமை. பிரபலத்தின் வாரிசு என்பதைச் சொல்லிக் கொள்ள சிலருக்கு சுயமரியாதை தடுக்கும். அபினய் எதிர்கொண்ட சங்கடமும் அதுவே.

தன்னிடம் கண்கலங்க உதவி கேட்டு வருபவர்களுக்கு வாரி வாரி வழங்கியவர் நடிகை சாவித்திரி. கையிலிருக்கும் தங்க வளையலை அப்படியே கழற்றி தந்து விடுவாராம். இதைப் பற்றி நிறைய வாசித்திருக்கிறேன். இதையே அபினய்யும் வழிமொழிந்தார். பாட்டி சாவித்திரியின் பொற்காலம் முடிந்து அவர் போதையில் விழுந்து கொண்டிருந்த துயரமான காலம் அது. இந்தச் சமயத்தில்தான் அபினய்யின் இளம் பிராயம் நடக்கிறது. ஒரு சாதாரணமான மிடில் கிளாஸ் வாழ்க்கை. ‘உன் இஷ்டம் போல செய்’ என்று தாத்தா ஜெமினி தந்த உபதேசமே தன் வாழ்க்கையில் இன்னொரு விதமாக விளையாடிவிட்டது என்கிறார்.

பிக் பாஸ் - 12
பிக் பாஸ் - 12

தாழ்வுணர்ச்சி கொண்ட அபினய்யின் வாழ்வில் ஒளியை ஏற்றியது அவரது காதல் மனைவிதான். “படிக்கணும்னா நீ படி. நான் வேலை செய்யறேன்” என்று அமெரிக்கா அழைத்துச் செல்கிறார். ஆனால் அபினய்க்கு கல்வியில் கவனம் செல்லவில்லை. வாழ்க்கை வெறுமையாகத் தெரிய “நீ சினிமாவில் சாதித்தவர்களின் தொடர்ச்சி. அதை ஏன் முயற்சி செய்யக்கூடாது” என்று மனைவி தந்த உத்வேகத்தின் காரணமாக மறுபடியும் சென்னை திரும்புகிறார். சினிமா வாய்ப்பு தேடுகிறார்.

ஆனால் சாவித்திரியின் பேரன் என்று சொல்லிக் கொள்ள கூச்சம். சொன்னாலும் “ஓ... அப்படியா..?” என்று காபி கொடுத்து பேசி அனுப்பிவிடுகிறார்கள். ஒரு உபயோகமும் இல்லை. தெலுங்கில் பிரபல இயக்குநரான தாசரி நாராயண ராவிடம் தன் அடையாளத்தை தயங்கியபடியே அபினய் சொல்ல, இவரை ஓங்கி அறைந்து விட்டு ‘இதை ஏன் முதல்லயே சொல்லல?” என்று கேட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றாராம். அங்கு சாவித்திரியின் பெரிய புகைப்படம் இருந்ததாம். அங்கு மட்டுமல்ல, சிரஞ்சிவீயின் வீட்டில் கூட அப்படியொரு புகைப்படம் இருந்ததாம்.

தமிழ் சினிமாவை விடவும் தெலுங்கு சினிமாவில் சாவித்திரி அடைந்த உயரமும் புகழும் மிக அதிகம். அவர் நடித்த பாத்திரங்கள் காரணமாக சாவித்தரியை தங்கள் வீட்டுப் பெண்ணாகவே ஆந்திர மக்கள் கருதினார்கள். “என் அடையாளத்தை வெளிப்படுத்தியும் சரியா சான்ஸ் கிடைக்கல. என் தாழ்வுணர்ச்சியும் ஒரு காரணம். பிக் பாஸ் வீட்டில் அது போகும் என்று நினைக்கிறேன். இது எனக்கான வெளிச்சத்தையும் தரும் என்று நம்புகிறேன்” என்று தன் பேச்சை முடித்த அபினய், திடீரென்று நினைவு வர “ராமாநுஜர் படத்துல நான் ஹீரோவா நடிக்கறதுக்கு முன்னாடி இன்னொரு பெரிய படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனா இன்னொரு பெரிய நடிகரோட பேரன் அதுல நடிச்சார். அதே டைரக்டர் என்னைக் கூப்பிட்டு படம் பண்ணணும். அதுக்காக உழைப்பேன்” என்று உத்வேகமாக பேசி அமர்ந்தார்.

“என் வளர்ச்சிக்குக் காரணம் என் மனைவிதான். அவளுக்கு வேறு யாராவது கணவனா வந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்-னு பல முறை நெனச்சிருக்கேன்” என்று அபினய் சொன்னது நெகிழ்வாக இருந்தது. “நான் ஒரு நல்ல கணவனா இல்ல. ஆனா ஒரு நல்ல தந்தையா இருக்க ஆசைப்பட்டேன். அதனால் பத்து வருடம் காத்திருந்து ஒரு மகளைப் பெற்றோம்” என்று அவர் சொன்னதும் சிறப்பான விஷயம்.
பிக் பாஸ் - 12
பிக் பாஸ் - 12

“அபினய்யின் கதையைக் கேட்டதும் என் கணவர் நினைவு வந்துச்சு. என்னால ரிலேட் பண்ண முடிஞ்சது” என்றார் நாடியா. ஆனால் அவர் கொடுத்தது என்னமோ டிஸ்லைக்தான். (ஸ்டாக் இல்லையாம். என்னப்பா பிக் பாஸ் இப்படிப் பண்றீங்களே?!).

“பிக் பாஸ் வீட்டில் மிக்சர் சாப்பிட வந்தவங்களைத்தான் நான் முதல்ல வோட் பண்ணி வெளியே அனுப்புவேன். நல்லா விளையாடறவங்கதான் எனக்கு வேணும். எனக்கு போட்டி போடணும். ஐ வான்ட் மோர் எமோஷன்” என்று இமானிடம் ஆவேசமாக பேட்டி தந்து கொண்டிருந்தார் பிரியங்கா. (இது யாருக்கான உள்குத்தோ?!).

அடுத்து பேச வந்தவர் நாடியா சங்க் (Nadia Chang). இவரின் கணவரான சங்க் என்பவர் யாரென்று நமக்குத் தெரியாது. ஆனால் நாடியா பேசி முடித்தபோது யாரென்று தெரியாத அந்த நபர் நம் மனதில் ஹீரோவாக உயர்ந்துவிட்டார். நாடியாவின் விவரிப்பு அத்தனை உருக்கமானதாக இருந்தது.

நாடியாவின் ஒரிஜினல் பெயர் அரு ஜெயலட்சுமியாம். (அடடே!). தந்தை குடிப்பழக்கம் உள்ளவராம். தாயோ போட்டு அடி அடியென அடிப்பாராம். குடும்ப வன்முறையின் உச்சத்தைச் சந்தித்தவர் நாடியா. இவர் ஹவுஸ்கீப்பிங் பணிக்குச் சென்று வரும் போது வழியில் ஒரு காதல். சங்க் என்பவர் இவரைச் சந்திக்கிறார். திருமண விருப்பத்தைச் சொல்கிறார். “வீட்ல வந்து பேசுங்க” என்று நாணத்துடன் பதில் அளிக்கிறார் நாடியா.

சங்க் பெண் கேட்க வந்த படலம் 'வடசென்னை’ படத்தில் வருவதுபோல் ஒரு அட்டகாசமான சீனாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. “ஓர் ஆணால் என் அம்மாவை அடக்கி அமர வைக்க முடியும் என்பதை அன்றுதான் கண்டேன். அதன் காரணமாகவே சங்க்கை திருமணம் செய்ய முடிவு செய்தேன்” என்று அந்தச் சம்பவத்தை விவரிக்கிறார் நாடியா. (சூப்பர்ல!) திருமணத்திற்குப் பிறகுதான் நாடியாவிற்கு சுதந்திரக் காற்று கிடைக்கிறது. விரும்பிய விஷயங்களைச் செய்கிறார். அழகிப் போட்டியில் கலந்து கொள்கிறார். வெற்றிகளைப் பெறுகிறார். “நான் இன்னிக்கு இத்தனை தூரம் வந்திருக்கேன்னா... அதுக்கு முழுக்க முழுக்க என் கணவர்தான் காரணம். அவர் பெயரை பிக் பாஸ்ல சொல்றதுல எனக்குப் பெருமை” என்று நாடியா தன் பேச்சை முடித்ததும் நெகிழ்ச்சியில் கூட்டம் கைத்தட்டியது.

பிக் பாஸ் - 12
பிக் பாஸ் - 12

நாடியாவின் உருக்கமான உரையைக் கேட்டு சோகத்தில் ஆழ்ந்திருந்த ஐக்கியிடம் “அதான் இப்ப அவுஹ... சந்தோஷமா இருக்காஹளாமே... கவலையை விடு” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் தாமரை. நாடியாவின் தாயிடம் மூர்க்க குணம் இருந்ததற்கு அவரின் கணவரின் குடிப்பழக்கமும் குடும்பத்தின் சுமையைத் தாங்க வேண்டிய உளைச்சலும் ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. “மனிதர்கள் தராத அங்கீகாரத்தை ஒரு app தான் தந்தது” என்று நாடியா சொன்னதில் ஒரு அழகான சிறுகதை ஒளிந்திருந்தது. பிரமோவில் வந்த இந்த விஷயம் ஏனோ மெயின் நிகழ்ச்சியில் வரவில்லை.

“தாமரைக்கு ரெண்டாம் கல்யாணம் நடந்ததாமே... எனக்கு கடைசிலதான் புரிஞ்சது” என்று தெலுங்கு டப்பிங் படத்தின் குரலில் சொல்லிக் கொண்டிருந்தார் பாவ்னி “நான் சரியாத்தான் பேசினேன். உனக்குத்தான் வெளங்கலை” என்று தாமரை சொன்னது சரியாக இருக்கலாம். மொழிப்பிரச்னை காரணமாக பாவ்னிக்கு புரியாமல் போயிருக்கலாம். “பத்து பவுன்ல ஒரு தாலி வாங்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை” என்று சொன்ன தாமரையிடம் “தாலி பத்தி பேசாதம்மா” என்று சோக வயலின் வாசித்தார் பாவ்னி. இவருக்கு உடனடித் தேவை ஒரு நல்ல உளவியல் மருத்துவரின் கவுன்சிலிங்.

“நாடியாவின் சங்க் போல பெண்களுக்கு கணவர் அமைய வேண்டும். அப்போதுதான் அவர்களால் மிகப்பெரிய உயரத்திற்கு செல்ல முடியும்” என்கிற மைண்ட் வாய்ஸை வேண்டுமென்றே சத்தமாக வைத்து கேட்டுக் கொண்டிருந்தார் பிரியங்கா. இது கேமராவில் பதிவாகும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். (உலக நடிப்பு சாமி. கொஞ்சம் அடக்கி வாசிங்க பிரியங்கா!).

இமானிடம் ஏதோவொரு ராணுவ ரகசியத்தை பிரியங்கா உளறிவிட்டார் போலிருக்கிறது. "நம்ம பிளான் தெரியறா மாதிரி நீ பேசியிருக்க” என்று அவரிடம் எச்சரித்துக் கொண்டிருந்தார் அபிஷேக். (ஆமாமாம். இது அமெரிக்க அதிபர் காதுக்கு போகாம பார்த்துக்கங்க!).

பிக் பாஸ் - 12
பிக் பாஸ் - 12

“நாளை விஜயதசமி. தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தார் பிக் பாஸ். தாமரை தலைமையில் நாடகமாம். நமது ஸ்கிரிப்ட் ரைட்டர் ராஜூ நாடகத்தை எழுதுவாராம். தொகுப்பாளர் பிரியங்காவாம். (கடவுளே! இங்கயுமா?!). அபிஷேக் பக்க வாத்தியமாம். (இவருக்குத்தாம்ப்பா பொருத்தமான வேலை கெடைச்சிருக்கு!).

நாடகப் பணி தொடர்பாக ராஜூ டீம் மும்முரமாக இருப்பதைப் பார்த்து ஓரமாக அமர்ந்து பொறாமையுடன் புறணி பேசிக் கொண்டிருந்தார்கள் பிரியங்காவும் அபிஷேக்கும். “லைட்டா தீயற வாசனை வருது. உன்கிட்ட இருந்தா?!” என்று பரஸ்பரம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இதுலயாவது என்னை சேர்த்துக்கங்கப்பா...” என்று இசை ஒருபக்கம் கெஞ்சிக் கொண்டிருந்தார். “சமையல் வேலை மொத்தமும் என் தலைலதான் வந்து விழுது. இந்த ராஜூப் பய நாடகம்... நாடகம்–ன்னு ஜாலியா போயிடறான்” என்று பாவ்னி இன்னொரு பக்கம் சலித்துக் கொண்டிருந்தார். “நீ ஏன் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கற?” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் அபினய்.

பிக் பாஸ் - 12
பிக் பாஸ் - 12
இரவு தாண்டியும் ராஜூ – தாமரையின் நாடக ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அதைச் சற்று வாசனை பார்த்தால் ராஜூவின் காமெடி ஒர்க்அவுட் ஆகும் போல்தான் இருக்கிறது. இந்த நாடகம் நடந்து முடிவதற்குள் பிக் பாஸ் வீட்டில் பல உள்குத்து நாடகங்கள் நடந்து விடும்போல் இருக்கிறது. பார்ப்போம்!