Published:Updated:

பிக் பாஸ் - 27: `Hugging' கலாசாரம் தவறானதா? ராஜூ பார்வையாளர்களைத் துல்லியமாகக் கணிக்கிறாரா?

பிக் பாஸ் - 27

தாமரையை வெளியில் அழைத்து சென்று “இப்படி குத்திக் காட்டிக்கிட்டே இருக்கறதை முதல்ல நிறுத்து. இப்படியே பண்ணிட்டு இருந்தா உன்னை மக்களுக்குப் பிடிக்காம போயிடும்” என்று அவருக்கு ராஜூ தந்த அறிவுரை சிறப்பானது.

பிக் பாஸ் - 27: `Hugging' கலாசாரம் தவறானதா? ராஜூ பார்வையாளர்களைத் துல்லியமாகக் கணிக்கிறாரா?

தாமரையை வெளியில் அழைத்து சென்று “இப்படி குத்திக் காட்டிக்கிட்டே இருக்கறதை முதல்ல நிறுத்து. இப்படியே பண்ணிட்டு இருந்தா உன்னை மக்களுக்குப் பிடிக்காம போயிடும்” என்று அவருக்கு ராஜூ தந்த அறிவுரை சிறப்பானது.

Published:Updated:
பிக் பாஸ் - 27

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் அன்றைய நாளில் சுவாரஸ்யமில்லாத போட்டியாளர்களாக அபினய்யும் வருணும் தேர்ந்தெடுக்கப்பட்டது பொருத்தமான சாய்ஸ். இந்த டாஸ்க் என்றல்ல, பொதுவாகவே பிக் பாஸில் இவர்களின் தனித்தன்மை இன்னமும் சரியாக வெளிப்படவில்லை. ஆனால் பிக் பாஸ் தனது அறிவிப்பில் தந்த ‘பைனல் டச்’தான் அற்புதம். ‘தண்டனை பெறுபவர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து தீ முட்டுவதை கண்காணிக்க இசையை நியமிக்கப் போகிறார்’ என்று எல்லோரும் நினைத்தார்கள். இசை கூட தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார். இது கண்காணிக்கும் அதிகாரம் போல தெரிந்தாலும் ஒருவகையான தண்டனைதான்.

இசையின் பெயர் வரப்போவதை எண்ணி எல்லோரும் வெடித்து சிரிப்பதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் போது அதில் ஒரு சுவாரஸ்யமான டிவிஸ்ட் தந்தார் பிக்பாஸ். ‘கண்காணிப்பதற்காக இசை யாரையாவது நியமிக்கலாம்’ என்கிற அறிவிப்பைக் கேட்டதும் இசைக்கு ஆனந்த அதிர்ச்சி. தன் பங்கிற்கு இதில் கூடுதல் சுவாரஸ்யத்தைச் சேர்த்தார் இசை. இவருக்கும் இமானுக்கும் ஏற்கெனவே வாய்க்கா தகராறு இருப்பது தெரியும். என்றாலும் சிரித்துக் கொண்டே இந்த தண்டனையில் இமான் அண்ணாச்சியை இசை கோத்து விட்டது ஜாலியான பழிவாங்கல். அண்ணாச்சியும் இதை இயல்பான சிரிப்புடன் கடந்து சென்றது சிறப்பு.

பிக் பாஸ் - 27
பிக் பாஸ் - 27
‘Hugging’ என்கிற சமாச்சாரம் வீட்டில் எந்தவித இழிவான எண்ணங்களுக்கும் வழிவகுக்கவில்லை…' என்று நள்ளிரவில் இமான் கூறிக் கொண்டிருந்தார். உண்மைதான். பல்வேறு உணர்ச்சி தத்தளிப்புக்கிடையில் பிக் பாஸ் மனிதர்கள் தவிக்கும் போது, ஒருவரின் அரவணைப்பு என்பது பெரும் ஆறுதலை அவர்களுக்கு அளிக்கக்கூடியது. இந்த அரவணைப்பில் எந்த வில்லங்கமும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

விடிந்தது. வருண் வாயைப் பிளந்து தூங்கிக் கொண்டிருக்க, தூக்கக் கலக்கத்தில் ஆடிக் கொண்டிருந்தார் அபினய். கண்காணிக்க வேண்டிய அண்ணாச்சியை அங்கே காணோம். “வெளில பனி கொட்டுது... இங்க என்ன தூக்கம். உள்ளே போய் படுங்க...’ என்று தாயன்போடு இருவரையும் உள்ளே அனுப்பி வைத்தார் பிக் பாஸ்.

‘நெருப்பு வாரத்தில்’ இன்றைய பாடலாக 'ஹைய்யோ... பத்திக்கிச்சு... பத்திக்கிச்சு’ ஒலித்தது. மதுமிதாவிற்கு இசைக்கும் இடையே தான் ‘பற்ற வைத்தது’ நன்றாக வொர்க்அவுட் ஆனதை பிக் பாஸ் இப்படியொரு பாடலாகப் போட்டு கொண்டாடுகிறார் போலிருக்கிறது. ('திருடா திருடா' படத்தில் வரும் 'தீ... தீ... தித்திக்கும் தீ...' பாடலை நாளைக்குப் போடுங்கள் பிக் பாஸ். நேயர் விருப்பம்.)

‘நான் மட்டும் தலைவர் இல்லையா. அப்ப நான் என்ன? தக்காளி தொக்கா’ என்றெல்லாம் ஆதங்கப்படும் மதுமிதா தன் தலைவர் பதவியை சிறப்பாக நடத்துவதைப் போல் தெரியவில்லை. "வீடு குப்பையா இருக்கே?” என்று நிரூப் கேட்டபோது "நீயே பெருக்கு” என்று விளையாட்டாகக் கூறுகிறார். க்ளீனிங் டீமை அழைத்து பிரச்னையை சரிசெய்யாமல் இவரே அதற்கு சில சாக்கு போக்குகளைச் சொல்கிறார். சிலர் அதிகாரத்திற்காக ஆசைப்படுவார்கள்; அதற்காக முட்டி மோதுவார்கள். ஆனால் அதற்கேற்ற உழைப்பை மட்டும் தரமாட்டார்கள்.

பிக் பாஸ் - 27
பிக் பாஸ் - 27

“எனக்கு எதுக்கு பொல்லாப்பு... நான் சமைக்க மாட்டேன்” என்று நேற்று வீறாப்பு பேசிக் கொண்டிருந்த தாமரை, இன்று கிச்சன் டீமில் நின்று முள்ளங்கி வெட்டிக் கொண்டிருந்தார். சமையலை சீக்கிரம் முடிப்பதற்காக கத்தி தேவைப்பட்டது. அபினய் பழம் வெட்டிக் கொண்டிருந்ததால் ‘கத்தி கொடு அபினய்’ என்று சின்னப் பொண்ணுவும் தாமரையும் கேட்டதால் ஆசாமிக்கு கோபம் வந்து விட்டது. ‘காலையில் பழம் வெட்டுவது முக்கியமா. சமையலை முடிப்பது முக்கியமா?’ இந்த சின்ன லாஜிக் கூட அபினய்க்கு புரியவில்லை. “கத்திய... கத்தி கத்தி கேட்கறீங்க?” என்று சிலேடையில் கோபப்பட்டார் அபினய்.

பிக் பாஸ் - 27
பிக் பாஸ் - 27

“வாடா.. சண்டைக்கு வாடா…" என்று வடிவேலு கூப்பிடுவது போல “என் கூட சண்டை போடணும்னு நெனக்கறீங்களா?” என்று தாமரை அபினய்யிடம் நேரடியாகவே கேட்டது சுவாரஸ்யமான காட்சி. பொதுவாக நகர மனிதர்கள் இப்படி பளிச்சென்று கேட்டுவிட மாட்டார்கள். உள்ளே புதைத்துக் கொண்டு வேறு வழிகளில் வெளிப்படுத்துவார்கள். முதலில் கோபப்பட்டாலும் பிறகு கோபம் சற்று தணிந்த அபினய், “இந்த வீட்டில் சண்டை போடற கடைசி ஆளாத்தான் நான் இருப்பேன். கொடுங்க நான் வெட்டித் தர்றேன்” என்று உதவ முன்வந்தது அருமை. மனிதர்களின் உணர்ச்சிகள் எப்படியெல்லாம் மாறி மாறிப் பயணிக்கின்றன என்பதை நாமே பார்த்துக் கொள்ள இது போன்ற காட்சிகள் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன.

சுருதி தனது நாணயத்தை பத்திரமாக ஆடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டிருந்தார். அபினய்யைப் பற்றி முன்பு புகார் கூறிய பாவனி, இப்போது அவருடன் அமர்ந்து, "இந்த வீட்டில் அவரவர்களுக்கு செளகரியமான ஆட்களுடன்தான் பழகுகிறார்கள்... இல்லையா?” என்று கேட்டுக் கொண்டிருக்க “வெளியுலகிலும் அப்படித்தானே?” என்று பதிலளித்தார் அபினய். ‘இன்னிக்கு வெதர் ரொம்ப நல்லாயிருக்குல்ல’ என்று இயற்கையை ரசிப்பவர்கள் போல் இருவரும் மோன நிலையில் அமர்ந்திருந்தார்கள். (அடுத்த சண்டை எப்ப வெடிக்கப் போகுதோ?!).

பிக் பாஸ் - 27
பிக் பாஸ் - 27

'எது சிறந்தது? நகரத்து உணவா? கிராமத்து உணவா?’ என்கிற அரதப்பழசான தலைப்பில் வெட்டி மன்றம் தொடர்ந்தது. பட்டிமன்ற நகைச்சுவையாளர்களின் உடல்மொழியும் மாடுலேஷனும் ராஜூவிற்கு சிறப்பாக வருகிறது. எனவே களத்தில் இறங்கி ரகளையாக விளையாடினார். “எதுர்க்க உக்காந்திருக்க பயக பூராவும் கூழை ஊத்தி ஊத்தி குடிச்ச பயதான்” என்று ஆரம்பித்து அவர் பேசிய பேச்சை அனைவருமே ரசித்தனர். இமான் அண்ணாச்சியின் இமேஜ் டேமேஜ் ஆகும் போதெல்லாம் அவரை அரவணைத்து ஆறுதல்படுத்தினார் பிரியங்கா. அண்ணாச்சியின் மீதிருக்கும் வருத்தத்தையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு அவரை கலாய்க்கும் வேலையில் இருந்தார் இசை.

“என்னா பழைய சோறு... பச்சை மிளகாய்?! பச்சை மிளகாய்ல ஆசிட் இருக்கு தெரியுமா”? என்று பிளேட்டை தலைகீழாகக் கவிழ்த்தார் இமான். ‘மண்வாசனை’ காந்திமதி மாதிரி அதிரடியான பழமொழியுடன் ஆரம்பித்து சரவெடியாக பொங்கித் தணிந்தார் தாமரை. இதில் கிராமத்து அணி வெற்றி பெற்றது.
பிக் பாஸ் - 27
பிக் பாஸ் - 27

‘பிக்பாஸ் விளையாட்டை புரிந்து கொண்டு ஆடும் அணி எது?’ என்கிற தலைப்பில் ‘இது விளையாட்டு இல்ல… வாழ்வியல்’ என்று ராஜூ சொன்ன ‘ஒன்லைன்’ அருமை. தாமரை – சுருதி விவகாரத்தை இந்தப் பட்டிமன்றத்தில் சாமர்த்தியமாக கோத்துவிட்டு வேடிக்கை பார்த்தார் பிரியங்கா. எதிர்பார்த்தது போல் அவர் கொளுத்திப் போட்ட வெடி அருமையாக வெடித்தது. “எங்ககிட்டதான் நாலு காயின் இருக்கு” என்று பிரியங்கா ஆரம்பிக்க “ஆட்டத்தை பர்ஸனலா எடுத்துக்கக்கூடாது” என்று சுருதி வழிமொழிய, பதிலுக்கு தாமரை வெடிக்க ஆரம்பித்துவிட்டார். ராஜூ இவரை அடக்கியவுடன் "இதுக்குத்தான் கமல் சார். முன்னாடி பேசறேன்னு சொன்னேன்… அவுகதான் ஆரம்பிச்சாங்க” என்று பொங்கி அடங்கினார். “எவ்வளவு நாணயம் வெச்சிருக்கோம்ன்றது முக்கியமில்ல. ஒரு மனுஷன் நாணயத்தோட நடந்துக்கறானா –ன்றதுதான் முக்கியம். அதுதான் வெற்றியைத் தேடித் தரும்” என்கிற அருமையான பன்ச்சோடு விவாதத்தை முடித்து வைத்தார் ராஜூ.

பிறகு தாமரையை வெளியில் அழைத்து சென்று “இப்படி குத்திக் காட்டிக்கிட்டே இருக்கறதை முதல்ல நிறுத்து. இப்படியே பண்ணிட்டு இருந்தா உன்னை மக்களுக்குப் பிடிக்காம போயிடும்” என்று அவருக்கு ராஜூ தந்த அறிவுரை சிறப்பானது. நிகழ்ச்சியின் அப்போதைய போக்கு வெளியில் எவ்வாறு பார்க்கப்படும் என்பதை ராஜூவால் ஏறத்தாழ துல்லியமாக யூகிக்க முடிகிறது. தாமரை பெரும்பான்மை சதவிகித பார்வையாளர்களால் விரும்பப்படும் போட்டியாளராக ஆரம்பக்கட்டத்தில் இருந்தார். நாணயத் திருட்டு விவகாரத்தில் கூட தாமரைக்கே அதிக ஆதரவு கிடைத்தது. ஆனால் அவரின் அநாவசியமான கோபமும், உரையாடலில் குறுக்கிடுவதும், சாடை மாடையாக பேசுவதும் இப்போது பார்வையாளர்களுக்கு சற்று நெருடலை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது. இதை ராஜூ சரியாக யூகித்தது ஆச்சரியம்தான்.

பிக் பாஸ் - 27
பிக் பாஸ் - 27
தாமரை அடிப்படையில் ஒரு நகைச்சுவைக் கலைஞர். “உன்னோட அந்தப் பக்கத்தை வெளியில் கொண்டு வா... எனில் சினிமாவில் கூட சான்ஸ் கிடைக்கலாம்” என்று தக்க சமயத்தில் ராஜூ சொல்லும் அறிவுரை சிறப்பானது. பிக் பாஸ் மேடையை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அற்பமான சண்டைகளுக்கு முதல் இடம் கொடுத்து பெயரைக் கெடுத்துக் கொண்டு வெளியே செல்வது புத்திசாலித்தனமான காரியம் அல்ல.

“அந்தப் பிள்ளையும் தப்பு செஞ்சுட்டேன்னுதான் சொல்லுது” என்று தூரத்தில் நின்று கொண்டிருந்த இமான் அண்ணாச்சி சொன்னார். தாமரையை தனியாக அழைத்து அறிவுரை கூறும் நாகரிகம் இருக்கிற ராஜூ, சபையிலேயே தாமரையைச் சுட்டிக் காட்டி “இது இருக்கே... இந்த பீஸை எவ்வளவு வேணா கிண்டல் செய்யலாம்” என்று சொன்னது நெருடல். ராஜூ தாமரைக்கு கற்றுத் தருவதும் ஆலோசனை சொல்வதும் ஓகே. ஆனால் அதே சமயத்தில் தாமரை அவரது ஆட்டத்தை ஆடவும் அனுமதிக்க வேண்டும். தான் அபயம் தருகிறோம் என்கிற விஷயத்தினால் உரிமை எடுத்துக் கொண்டு ஒருவரை மட்டம்தட்ட வேண்டியதில்லை.

பிக் பாஸ் - 27
பிக் பாஸ் - 27

ஒருவழியாக ‘கிராமம் நகரம்’ டாஸ்க் முடிந்தது. அதிகப் பணத்தை வென்று நகர அணி முன்னணியில் இருந்தது. Best Entertainer – ஆக ராஜூ தேர்வானதில் ஆச்சரியமேயில்லை. இதற்கான முழு தகுதியும் அவருக்கு உண்டு. ஆனால் நகரத்து அணியினர் ‘சிபி’யை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்கிற லாஜிக் சிறிது கூட பிடிபடவில்லை. பிரியங்கா அல்லது இமானைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். சிபியும் ராஜூவும் அடுத்த வார தலைவர் போட்டிக்குத் தேர்வாகிறார்கள். மாலை மாற்றும் போது முன்னர் ஏற்பட்ட விளையாட்டுச் சதி மறுபடியும் நிகழாமல் இருந்தால் சரி.

“என்னை கன்பெஷன் ரூமிற்கு கூப்பிடுங்க பிக் பாஸ்... பேசணும்” என்று கண்கலங்க சொல்லிக் கொண்டிருந்தார் ஐக்கி. “என்னை யாரும் பொருட்டாவே மதிக்க மாட்டேங்கிறாங்க. நான் ஏதாவது சொல்ல வந்தா கூட ‘இரு... இரு...’ன்னு பின்னாடி தள்ளிடறாங்க.. ஒருத்தரை மீறி பேசற பழக்கம் எனக்கு கிடையாது” என்று அக்ஷராவிடம் பிறகு புலம்பிக் கொண்டிருந்தார் ஐக்கி. பிறகு இமான் குழுவிடம், "Hugging பற்றி கிராம மக்கள் என்ன நினைப்பார்கள் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன். தனிப்பட்ட வகையில் எனக்கு அந்தக் கலாசாரத்தின் மீது புகார் கிடையாது” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் - 27
பிக் பாஸ் - 27

ஒரு பட்டிமன்ற விவாதத்தில் பேசும்போது தலைப்பை நியாயப்படுத்துவதற்காக எப்படி வேண்டுமானாலும் பல்டியடிப்பது நம் நெடுநாள் பழக்கம். இது பிரியங்காவிற்கு நிச்சயம் தெரியும். எனில் ஐக்கி சொன்னதை அவர் ஏன் தனிப்பட்ட வகையில் எடுத்துக் கொள்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றினாலும் ஐக்கி சொன்னது சரியான விஷயமே. கிராம மக்கள் கூட ஒருபக்கம் இருக்கட்டும். நகரத்தில் இருப்பவர்களிலேயே ஒரு சிலருக்கே hugging என்பது நடைமுறையில் கலாசார அதிர்ச்சியைத் தரக்கூடிய விஷயம்தான். இதை ஐக்கி சுட்டிக் காட்டியது சரியான விஷயம்தான்.

பிக் பாஸில் முதன்முறையாக ஒரு விளம்பரதாரர் டாஸ்க் உள்ளே வந்திருக்கிறது. இனி வரிசையாக வரும். வீடு அணிகளாகப் பிரிந்து ஒரு போட்டி நடந்தது. இதற்கு சின்னப்பொண்ணு நடுவராம். பயிற்சியில்லாமல் Plank position-ல் இருப்பது சிரமமானது. கையை மடக்கி ஊன்றிக் கொண்டு நுனிக்காலின் அழுத்தத்தில் உடல் கீழே படாமல் மிதப்பது போல் இருக்கும் நிலையே Plank. இதில் உடல் மடங்காமல் நேர்க்கோடாக இருக்க வேண்டும். அவரவர்களின் இஷ்டம் போல் செய்தாலும் இந்த ஆட்டத்தில் பாவனியும் அக்ஷராவும் நெடுநேரம் தாக்குப் பிடித்து தங்கள் அணிக்கு வெற்றி தேடித் தந்தார்கள். வெற்றி பெற்ற அணிக்கு ஆளுக்கொரு மெத்தை பரிசாக கிடைத்தது.

பிக் பாஸ் - 27
பிக் பாஸ் - 27

மதுமிதா அவரது வயதுக்கேற்ற வகையில் குறும்பாகச் செயல்படுவது ஓகே. ஆனால் தலைவராக இருக்கும் வாரத்திலாவது சற்று அடக்கி வாசிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் சற்றாவது மதிப்பார்கள். "தலைவர் ஆனவுடனே பாத்தியா... மாறிட்டா” என்கிற விமர்சனங்கள் நிச்சயம் வரும். அதையெல்லாம் தாண்டித்தான் ஒரு அதிகாரத்தை நிர்வகிக்க முடியும்.

மதுமிதா விளக்குமாறுடன் நிரூப்பை துரத்திக் கொண்டு ஓட, பிரியங்காவும் நிரூப்பும் ஒருவரின் மீது ஒருவர் ஷேவிங் க்ரீமை இறைத்து விளையாடினார்கள். பிக் பாஸின் அறிவிப்பு வந்தது. முதியோர் இல்லத்தின் குழந்தைகள் மாதிரி இவர்கள் ஆடிக் கொண்டிருப்பதை பிக் பாஸ் கண்டிப்பார் என்று பார்த்தால் “மைக் மேல தண்ணி படாம விளையாடுங்க” என்பதோடு நிறுத்திவிட்டார். (ஒரு பெரிய மனுஷன் கண்டிக்கற லட்சணமா இது?!).