Published:Updated:

பிக் பாஸ் - 31: `அட எதாவது பண்ணுங்கப்பா...' பிக் பாஸே நொந்துபோகிறாரா? `நடிகர்கள்' டாஸ்க் அலப்பறைகள்!

பிக் பாஸ் - 31

இமான் அண்ணாச்சிக்குத் தரப்பட்டது சிவாஜி பாத்திரமா, அல்லது கரகாட்டக்காரன் சண்முகசுந்தரம் பாத்திரமா என்று தெரியவில்லை. இமான் செய்த மிமிக்ரி சண்முகசுந்தரத்தின் குரல் போலத்தான் இருந்தது.

பிக் பாஸ் - 31: `அட எதாவது பண்ணுங்கப்பா...' பிக் பாஸே நொந்துபோகிறாரா? `நடிகர்கள்' டாஸ்க் அலப்பறைகள்!

இமான் அண்ணாச்சிக்குத் தரப்பட்டது சிவாஜி பாத்திரமா, அல்லது கரகாட்டக்காரன் சண்முகசுந்தரம் பாத்திரமா என்று தெரியவில்லை. இமான் செய்த மிமிக்ரி சண்முகசுந்தரத்தின் குரல் போலத்தான் இருந்தது.

Published:Updated:
பிக் பாஸ் - 31
'சென்னை - 28' திரைப்படத்தில், சின்னப்பசங்களிடம் கெத்தாக சென்று பெட்டிங் மேட்ச் ஆடி வம்பாக மாட்டிக் கொள்ளும் இளைஞர்கள் “டேய்... அவன் எப்படிப் போட்டாலும் அடிக்கறாண்டா” என்று பரிதாபமாக முனகுவார்கள். அதன் தலைகீழ் உதாரணமாக, பிக் பாஸ் தனது டாஸ்குகளை எப்படி மாற்றி மாற்றி கொடுத்தாலும் போட்டியாளர்கள் சொதப்புவதால் இந்த சீசன் மந்தமாகவே சென்று கொண்டிருக்கிறது. அதற்கான உதாரணம் நேற்றைய எபிசோடு.
பிக் பாஸ் - 31
பிக் பாஸ் - 31

இசையிடம் பவர் இருந்தபோது சுடுதண்ணீர் வைத்துத் தரக்கூட ஆள் இல்லை. ஆனால் நிரூப் இருக்கிறபோது மட்டும் காலை ஏழு மணிக்கே சுடச்சுட காபியும் ஆம்லேட்டும் அவரது படுக்கையருகே வந்து நிற்கிறது. பாவனியும் சுருதியும் ரூம்சர்வீஸ் ஆட்கள் போல ‘சார்... நிரூப் சார்...’ என்று அவரை எழுப்பித் தந்தார்கள். ‘பப்பரப்பே’ என்று படுத்திருந்த நிரூப், தனது தூக்கத்தைக் கலைத்துவிட்டார்களே என்கிற எரிச்சல் வந்தாலும், ‘இந்த ஆர்டரை போட்டது தான்தானே’ என்பதால் மெளனமாக அவற்றை வாங்கிக் கொண்டு ‘OK am impressed’ என்று இருவருக்கும் டிப்ஸ் தந்தார். இன்னொரு தருணத்தில் “பாட்டு போடறதுக்கு முன்னாடி கொண்டு வந்து தரணும். சரியா..?” என்று ஆர்டரை மாற்றினார். "சரிங்க முதலாளி. சூடு ஆறிப் போயிடுமேன்னுதான் உடனே கொண்டு வந்தோம்" என்று பணிவாகச் சொன்னார் பாவனி.

ஒருவனுக்கு நேரம் சரியில்லையென்றால் எங்கு சென்றாலும் துரதிர்ஷ்டம் துரத்திக் கொண்டு வரும் என்பார்கள். அதற்கு சரியான உதாரணம் வருண். நாணயத்தை உபயோகித்து தலைவராகிவிட்டாலும் பாத்ரூம் வேலை மட்டுமே அவருக்கு வாய்த்திருக்கிறது. இதைப் போலவே மைக் மாட்டாமல் வருண் தவறு செய்து விடும் போதெல்லாம் ‘தோப்புக்கரணம்’ போடச் சொல்லும் பிக் பாஸ், நிரூப் இதே தவற்றைச் செய்யும்போது கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார். ‘ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருக்கும் ஒருவனுக்கு’ இப்படித்தான் அதிர்ஷ்டம் கொட்டும் போலிருக்கிறது. அல்லது ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா. பார்க்கறியா?” என்று கன்ஃபெஷன் ரூமில் பிக் பாஸை நிரூப் மிரட்டி வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

பிக் பாஸ் - 31
பிக் பாஸ் - 31

மக்களுக்கு மூச்சுப் பயிற்சி கற்றுத் தந்து கொண்டிருந்த வருண், “இப்ப எப்படி இருக்கு... ஃப்ரெஷ்ஷா இருக்கா?” என்று கேட்க, ‘இல்லியே’ என்பது மாதிரி மக்கள் நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். "தண்ணி நல்லா குடிங்க... மோஷன் நல்லா போகும்" என்று அப்போதும் ‘பாத்ரூம்’ வாசனையுடனே பேசிக் கொண்டிருந்தார் வருண். பிறகு அக்ஷராவிடம் பேசும் உற்சாகத்தில் மைக் மாட்ட மறந்து போய் பிக் பாஸின் அறிவுறுத்தலின் படி பத்துமுறை தோப்புக்கரணம் போட்டார்.

தான் செய்த திருட்டு முயற்சிகளை பெருமிதத்துடன் வருணிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அக்ஷரா. தன் படுக்கையை யாரோ தேடிப் பார்த்திருக்கிறார்கள் என்பது பாவனிக்கு தெரிந்துவிட்டது. அது அக்ஷராவாக இருக்கலாம் என்பதைக் கூட அவர் சரியாக யூகித்திருக்கலாம். "கோபமா வருது… என்ன செய்யறது” என்று முனகியபடி தணிந்து போனார். பாவனி நிரூப்பிடம் சொன்ன இந்தத் தகவலை “யாரோ பாவனி பெட்ல தேடியிருக்காங்களாம்" என்று அக்ஷராவிடமே சென்று தாமரை சொல்ல, முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டார் அக்ஷரா.

ரொம்பவும் அராஜகமாக இல்லாவிட்டாலும் தன் தலைவர் பதவியை ஜாலியாகவும் அதே சமயத்தில் கண்டிப்புடனும் உபயோகிப்பதில் நிரூப் வல்லவராக இருக்கிறார். "இன்னும் 5 நிமிஷம்தான் இருக்கு. அதுக்குள்ள பெட்ரூமில் இருந்து நீங்க வெளியே வரணும்” என்று அவர் அவசரப்படுத்திக் கொண்டிருக்க பலரும் அவசரம் அவசரமாக தங்களின் ஒப்பனையை முடிக்க, “நீ என்னடா சொல்றது” என்பது மாதிரி அமர்ந்திருந்த பாவனி, சுருதி, மது ஆகியோர் பிறகு பாவற்காய், பச்சைமிளகாய் உண்ணும் தண்டனையைப் பெற்றார்கள். “ஆக்சுவலி. பாவக்கா சாப்பிட்டா மோஷன் ஃப்ரீயா போகும்” என்று வருண் அப்போது பக்கத்தில் இருந்தால் நிச்சயம் சொல்லியிருப்பார்.

பிக் பாஸ் - 31
பிக் பாஸ் - 31

‘பிரியங்கா குழந்தை மாதிரி நடந்து கொள்ள வேண்டுமாம்’ – இப்படியொரு தண்டனையை நிரூப் தந்தார். அது பிரியங்காவிற்கு தரப்பட்ட தண்டனை அல்ல. பார்வையாளர்களுக்குத் தரப்பட்ட தண்டனை. பிரியங்கா சாதாரணமாகவே எல்கேஜி குழந்தை போல்தான் பல சமயங்களில் பேசுவார், நடந்து கொள்வார். இப்போது அடுத்த லெவலுக்குச் சென்று ராஜூ அங்கிளின் சட்டையில் மூக்கைச் சிந்தி அலப்பறை செய்தார்.

"நிரூப்பிற்கு விளக்கமா சொன்ன மாதிரி உனக்குச் சொல்லலையா?” என்று இசையின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வது போல சுருதி விசாரிக்க, "படுபாவி. எங்கே சொன்னான்..?" என்று அலுத்துக் கொண்டார் இசை. "நான் கூட மெடிடேஷன் பண்ணலாம்னு சொன்னேன். ஒரு பய வரலை... இப்ப வருண் கூப்பிட்டவுடனே வர்றாங்க” என்று அவர் முனக “அவரு கட்டாயப்படுத்தினாரு. வரலைன்னா தண்டனைன்னு சொன்னாரு. நீ அப்படிச் செய்யலைதானே...” என்று மழலைத் தமிழில் சரியான பாயின்டை சொன்னார் மதுமிதா. “ஆவறேன்... நானும் தலைவர் ஆகி இவனுங்களை கதற விடுறேன்” என்று இசை சபதம் எடுத்துக் கொண்டார்.

"நானும் பாலை மாத்தி மாத்திப் போட்டு பார்க்கறேன். இவனுங்க அடிக்கவே மாட்றானுங்களே” என்று புலம்பிய பிக்பாஸ், “சினிமா... சினிமா...’ என்று அடுத்த டாஸ்க்கை இறக்கினார். சினிமா நடிகர்களைப் போல ஒப்பனை செய்து கொண்டு அவர்களைப் போலவே வீட்டில் இயங்கும் பழைய டாஸ்க்தான் இது.
பிக் பாஸ் - 31
பிக் பாஸ் - 31
பிரியங்கா (கான்ட்ராக்டர் நேசமணி), சிபி (படையப்பா ரஜினி), அக்ஷரா (நீலாம்பரி), ராஜூ (ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா), இசை (சந்திரமுகி ஜோதிகா), மது (இம்சை அரசன்), நிரூப் (அந்நியன் அம்பி), பாவனி (கஜினி சூர்யா), வருண் (எந்திரன் ரோபோ), இமான் (சிவாஜி), அபினய் (தெய்வத்திருமகள் விக்ரம்), தாமரை (கரகாட்டக்காரன் கோவை சரளா), ஐக்கி (கிழவி), சுருதி (ஜெனிலியா).

அம்பி கேரக்டருக்காக தனது மீசை, தாடியை தியாகம் செய்து கொண்டிருந்த நிரூப், சேற்றில் விளையாடிய குழந்தைக்கு முகம் கழுவப்பட்டது போல் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தார். பிரியங்கா கத்தி கதறியபடி அவரது மேக்கப் அத்தனை மோசமாக இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக முடியை தியாகம் செய்த நிரூப்பை, கமல் நிச்சயம் பாராட்டுவார்... பாருங்கள்.

பிக் பாஸ் - 31
பிக் பாஸ் - 31

இருப்பதிலேயே பொருத்தமான வேடம் அமைந்தது வருணிற்குத்தான். ஏற்கெனவே அவர் ரோபோ மாதிரிதான் சுற்றிக் கொண்டிருந்தார். அவ்வப்போது ரெட் சிப் ரோபோ மோடிற்கு மாறி கத்தினாலும் மற்றபடி சமர்த்து ரோபோவாகத்தான் ஓரமாக இருப்பார். எனவே இப்போது ரோபோ மோடிலும் அப்படியேதான் இருந்தார். ஆனால் "என்னோட பாஸ் இப்ப போயஸ் கார்டன்ல இருக்கார்” என்று தாமரையிடம் சொன்னதும், இயந்திரக் குரலில் மன்னிப்பு கேட்டு தோப்புக்கரணம் போட்டதும் சுவாரஸ்யமான காட்சிகள்.

பிக் பாஸ் - 31
பிக் பாஸ் - 31
இமான் அண்ணாச்சிக்குத் தரப்பட்டது சிவாஜி பாத்திரமா, அல்லது கரகாட்டக்காரன் சண்முகசுந்தரம் பாத்திரமா என்று தெரியவில்லை. இமான் செய்த மிமிக்ரி சண்முகசுந்தரத்தின் குரல் போலத்தான் இருந்தது. சிவாஜி போல் நடிக்கிறேன் என்று கைகளை வெட்டுக்கத்தி போல் மாற்றிக் கொண்டு முன்னும் பின்னும் அசைத்துக் கொண்டே இருந்தது வேடிக்கை. ஆனால் என்னவொன்று, பெரும்பாலான நேரங்களில் இமான் தனது கேரக்டரில் இருந்து வெளியே வரவில்லை. இதற்காக அவரைப் பாராட்டலாம்.

சந்திரமுகியாக மாறியிருந்த இசை மற்ற நேரங்களில் சுமாராகச் செயல்பட்டாலும் தான் நடனமாடிய சமயத்தில் பாத்திரமாகவே மாறி, தரையில் படுத்து நிமிர்ந்து பார்த்த அந்தத் தருணம் எல்லாம் உண்மையாகவே சூப்பர். சிபியும் அக்ஷராவும் ஆங்காங்கே நின்று படையப்பா வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பித்துக் கொண்டிருந்தது ரசிக்கும்படியாக இருந்தது. மதுவிற்கும் இம்சை அரசனிற்கும் நூறு கிலோ மீட்டர் தொலைவு இருந்தது. ஒட்டவேயில்லை. போலவே பிரியங்காவும். அவர் சிறப்பாக முயற்சி எடுத்தார் என்றாலும் அது சோபிக்கவில்லை.

பிக் பாஸ் - 31
பிக் பாஸ் - 31

இருப்பதிலேயே படு ஏமாற்றம் ராஜூதான். எம்.ஆர்.ராதா கேரக்டர் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. ஆனால் “பேரு அழகு சுந்தரி-ன்ற... சுந்தரிதான் இங்க இருக்கு... அழகு எங்கே?” என்று கலாய்த்த காட்சியைத் தவிர மற்ற நேரங்களில் அவரை ஆளையே காணோம். ‘முந்தி முந்தி விநாயகரே’ பாடலுக்கு மேடையில் தாமரை ஆடிய நடனம் அருமை. பாவம் பாவனி. கஜினி சூர்யா என்கிற பெயரில் நம்மைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார். ஒப்பனையும் அவருக்கு சரியாக மேட்ச் ஆகவில்லை.

அபினய் ஏற்கெனவே தெய்வத்திருமகள் விக்ரம் மாதிரிதான் பிக் பாஸ் வீட்டிற்குள் உலவிக் கொண்டிருந்தார். ‘நிலா... நிலா...’ என்று மலங்க மலங்க விழித்தபடி பாவனியின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்ததுதான் அவரது ஒரே பொழுதுபோக்காக இருந்தது. "சரி... அந்தக் கேரக்டரையாவது தந்து தொலைப்போம்” என்று தந்தால், அணைக்கப்பட்ட டியூப்லைட் மாதிரி சும்மாவே இருந்தார். இமான் இதை குசும்பாக விமர்சித்த போது அபினய்க்கு எரிச்சல் மட்டும் வந்துவிட்டது. “கோச்சுக்கிட்டீங்களா தம்பி” என்று இமான் கேட்ட போது அவரைத் தனியாக அழைத்துச் சென்று ‘ஆமாம். அண்ணாச்சி’ என்று சொல்லி பிரச்னையை சரி செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அப்போது ‘இல்லை’ என்று அலட்சியமாக சொல்லி விட்டு பிறகு பாவனியிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் - 31
பிக் பாஸ் - 31
ஐக்கியாவது கிழவி வேடத்தில் எதையாவது சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் சுருதிக்குத் தரப்பட்டது என்ன வேடம் என்று அவருக்கும் தெரியவில்லை. நமக்கும் புரியவில்லை.

“ஷோ டைம்" என்று அறிவித்ததும் மற்றவர்கள் உறைந்து நிற்க, அழைக்கப்பட்டவர் மட்டும் சென்று மற்றவர்களை இம்சை செய்து இரண்டு உணர்ச்சிகளை வரவழைக்க வேண்டுமாம். இதற்கான வாய்ப்பு பாவனிக்கு வந்த போது அவரால் யாரையும் சிரிக்க வைக்க முடியவில்லை. எனவே கதவைத் தாண்டி செல்பவர்களுக்கு எல்லாம் ‘ரெட் கார்ப்பெட்’ விரிக்கும் தண்டனை கிடைத்தது. ஆனால் அவர் இதைச் செய்தது போல் தெரியவில்லை. (இந்த பாவப்பட்ட வருணை மட்டும் பிக் பாஸ் டார்கெட் செய்து இம்சிக்கிறார்!).

“மைக்கை கழற்றி வைத்தால் வருணிற்கு தண்டனை தருவார்களாம்” என்று யாரோ கொளுத்திப் போட "அப்படியா?” என்று உற்சாகமான இமான், தனது வழக்கமான குசும்பை வெளிப்படுத்த “அப்படியெல்லாம் இல்லை. நீங்கதான் ரெண்டு தோப்புக்கரணம் போடணும்” என்று வரூண் வந்து சொல்ல “விவரம் தெரியாம மாட்டிக்கிட்டேனே” என்று புலம்பியபடி மெல்லிய தண்டனையை ஏற்றுக் கொண்டார் இமான். (மிஸ் பண்ணாதிய... அப்புறம் வருத்தப்படுவிய...).

பிக் பாஸ் - 31
பிக் பாஸ் - 31
நிரூப் தந்த ஐடியாவின்படி தாமரையும் மதுவும் சண்டை போடுவது போல் ஆடிய டிராமா மோசமாக முடிந்தது. மதுவை போய் சண்டை போடச் சொன்னால் எப்படி? இப்படி வெறுமனே டிராமா செய்ததற்கு பதிலாக ‘ஷோ டைம்’ சமயத்தில் செய்தாலாவது மக்கள் சற்று பதறுவதற்கு சாத்தியம் இருக்கும். இவர்களின் இம்சை தாங்காமல் “டாஸ்க் நிறுத்தப்படுகிறது” என்று நொந்து போய் அறிவித்தார் பிக் பாஸ்.

பின்பெஞ்ச் மாணவர்கள் போல பாவனியும் சுருதியும் குசுகுசுவென்று பேசிக் கொண்டு அலைய, “நாளைக்கு வெள்ளன எழுந்து எனக்கு ஆம்லேட் ரெடி பண்ண வேணாமா? போய்ப் படுங்க” என்று அவர்களை மிரட்டி அனுப்பினார் நிரூப். அக்ஷராவும் நிரூப்பும் என்ன பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்கிற அதிபயங்கர ரகசியத்தை அக்ஷராவே ராஜூவிடம் சொல்லிக் கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி முடிந்து தொலைத்தது... மன்னிக்கவும். நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

பிக் பாஸ் - 31
பிக் பாஸ் - 31
"இத்தனை நடிகர்களின் பாத்திரங்களை போட்டியாளர்களுக்கு தந்த பிக்பாஸ், கமலின் பாத்திரத்தை மட்டும் யாருக்கும் தரவில்லையே?” – இதன் ரகசியம் என்ன? கமென்ட் பாக்ஸில் வந்து சொல்லுங்களேன்.