Published:Updated:

பிக் பாஸ் - 34: இது என்ன பிக் பாஸா? Squid Game-ஆ? மாட்டை வைத்து கலவரம் செய்த போட்டியாளர்கள்!

பிக் பாஸ் - 34

ஒருவழியாக இந்த அடிதடி டாஸ்க் முடிந்தது. பாவம் அந்த மாட்டை ஐசியூவில் சேர்த்திருந்தால் கூட பிழைக்க வாய்ப்பில்லை. இரண்டு அணிகளும் தாங்கள் சேகரித்த பால் மாதிரியான வஸ்துக்களை வைத்திருந்தனர்.

பிக் பாஸ் - 34: இது என்ன பிக் பாஸா? Squid Game-ஆ? மாட்டை வைத்து கலவரம் செய்த போட்டியாளர்கள்!

ஒருவழியாக இந்த அடிதடி டாஸ்க் முடிந்தது. பாவம் அந்த மாட்டை ஐசியூவில் சேர்த்திருந்தால் கூட பிழைக்க வாய்ப்பில்லை. இரண்டு அணிகளும் தாங்கள் சேகரித்த பால் மாதிரியான வஸ்துக்களை வைத்திருந்தனர்.

Published:Updated:
பிக் பாஸ் - 34

மாட்டை வைத்து விளையாட்டு அரசியல் செய்தால் அது எத்தனை ஆபத்தில் கொண்டு போய்விடும் என்பதற்கான உதாரணம் நேற்றைய எபிசோடு. ‘மாட்டில் வரும் பாலை பிடிக்க வேண்டும்’ (அட... பொம்மை மாடுதாங்க!) என்று தரப்பட்ட டாஸ்க்கினால் பிக் பாஸ் வீடு போர்க்களமானது. மாட்டிற்கு பிரசவம் பார்க்காத குறையாக, அதை இழுத்துப் போட்டு குடல், குந்தானியையெல்லாம் மக்கள் வெளியே எடுத்துவிட்டார்கள். அத்தனை ஆவேசம்.

‘இது குழந்தைகளும் பார்க்கும் நிகழ்ச்சி. கண்ணியம் காப்பீர்’ என்று கமல் அடிக்கடி அறிவுறுத்தினாலும் இந்த எபிசோடில் அத்தனை வன்முறை. நமக்குத்தான் திகிலாக இருந்தது. இது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் ஏன் இத்தனை வன்முறையாகிறார்கள் என்பதை இன்னமும் துல்லியமாக அறிந்து கொள்ள, சமீபத்தில் ஹிட் அடித்திருக்கும் ‘Squid Game’ என்கிற கொரியன் வெப்சீரிஸை பாருங்கள்.

எபிசோட் 34-ல் நடந்தது என்ன?

பிக் பாஸ் வீட்டில் மட்டும் ஐக்கி மட்டுமே பொழுதோடு எழுந்து கார்டனில் தனியாக இருக்கிறார் என்பதை பெரும்பாலான நாள்களில் பார்க்க முடிகிறது. ‘சும்மா கிழி’ என்கிற பாடல் ஒலிக்க ஐக்கி துள்ளலாக ஆட ஆரம்பிக்க, மற்றவர்களும் வந்து இணைந்தார்கள். மாட்டைத்தான் மக்கள் இன்று ‘சும்மா கிழி கிழி’ என்று கிழிக்கப் போகிறார்கள் என்பதற்கான குறியீடாக இந்தப் பாடல் அமைந்தது.

பிக் பாஸ் - 34
பிக் பாஸ் - 34

அடுத்து ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி. சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘எம்.ஜி.ஆர் மகன்’ என்கிற திரைப்படத்தையொட்டி சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோரின் வசனங்களை சக போட்டியாளர்களுக்கு பொருத்த வேண்டுமாம். ‘குத்துனது நண்பனா இருந்தா செத்தாகூட சொல்லக்கூடாது’ என்பது போன்ற வசனங்களுக்கு இந்த விளையாட்டா? (செத்த பிறகு எப்படிய்யா சொல்ல முடியும்?!).

“நாம ஒரு கஷ்டத்துல இருக்கும்போது ‘என்ன... ஏது’ன்னு கேட்டு நம்மளை விசாரிக்கறதில்லை” என்பது போன்ற புகாரை தாமரை மீது அபினய் வைக்க, அவ்வளவுதான் தாமரை பொங்கி வந்துவிட்டார். “நான் வந்து பேசினாலே ஒதுங்கிடுறீங்க. எனக்கும் அறிவு இருக்கு. நானும் ஒரு குடும்பத்துல இருந்துதான் வந்திருக்கேன். எனக்கும் நல்லது கெட்டது தெரியும். ஆனா யாரு என்னை மதிச்சு கேட்கறீங்க... எனக்கு என்ன தெரியும்னு நெனக்கறீங்களா?" என்றெல்லாம் அவர் பொங்கி “தப்புக்கு மட்டும்தான் இந்த தாமரை தலை வணங்குவா...” என்று சசிகுமாரின் வசனங்களையும் மிஞ்சி பன்ச் டயலாக் பேசினார்.

ரியாலிட்டி ஷோ என்பது உண்மைக்கும் புனைவிற்கும் நடுவே சமநிலையுடன் ஆட வேண்டிய ஓர் ஆட்டம். இதை படித்த நகரவாசிகளாலேயே அதிகம் புரிந்து கொள்ள இயலவில்லை என்னும் போது கிராமத்து குணாதிசயங்களைக் கொண்ட தாமரையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவருக்குச் சொல்லி புரிய வைக்க முயற்சி செய்யலாம். இந்த வேலையை ராஜூ அடிக்கடி செய்கிறார். தனக்கு வந்த வசனத்தை வைத்து "எங்கயோ மூலைல இருக்கும் ஒரு கிராமத்துல இருந்து உன்னைத் தேடி இங்க கொண்டு வந்திருக்காங்க. இங்க உனக்கு கலாசார அதிர்ச்சி, புதிய மனிதர்கள் போன்ற விஷயங்கள் அந்நியமா தெரியலாம். ஆனா இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கிட்டா நல்லது” என்பது போல் அவர் சொன்ன ஆலோசனை சரியானது.

தனக்கு வந்த சிறப்பு பரிசான ‘ஜிகினா வைத்த ஷூ’வை வைத்து பயங்கரமான அலப்பறை செய்து கொண்டிருந்தார் பிரியங்கா. எல்லோருக்கும் காலால் வணக்கம் சொல்லி ஷூவின் பெருமையை அவர் பீற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு காண்டான நிரூப், அதைத் தூக்கி உயரத்தில் வைத்தார். எல்கேஜி குழந்தை மாதிரி பின்னர் அழுது அடம்பிடித்து கொண்டிருந்தார் பிரியங்கா. பின்னர் அதை வருண் எடுத்துகொடுத்தார்.

பிக் பாஸ் - 34
பிக் பாஸ் - 34
அடுத்த வார தலைவர் போட்டியை அறிவித்தார் பிக் பாஸ். ‘செண்பகமே... செண்பகமே’ என்பது அதன் தலைப்பு. வீடு இரண்டு அணிகளாகப் பிரிந்து பால் கறந்து சேர்க்க வேண்டுமாம். இது போன்ற ஐடியாக்களையெல்லாம் யார் யோசிப்பார்கள் என்று தெரியவில்லை.

பேருந்தில் பயணிகளை ஏற்றும் கண்டக்டர் மாதிரி “இங்க ஒரு சீட் காலியா இருக்கு. சட்டுன்னு வாங்க. வண்டி கிளம்பப் போவுது” என்று தன் அணியில் ஆள் சேர்க்க சிபி மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். Physical task என்பதால் நிரூப்பும் வருணும் இருந்த அணியில் சேரவே மக்கள் ஆர்வம் காட்டினார்கள். “ரெண்டு பேரையும் ஆளுக்கொரு டீம்ல போட்டாதான் பேலன்ஸ் ஆகும்” என்று அக்ஷரா சொன்னது சரியான பாயின்ட்.

பிக் பாஸ் - 34
பிக் பாஸ் - 34

ஸ்டோர் ரூமில் இருந்து பால் பாட்டில்களை சேகரித்துக் கொள்ள வேண்டிய தருணம். முன்னணி நடிகரின் முதல் காட்சிக்கு அரங்க வாசலில் முட்டி மோதுகிறவர்களைப் போல மக்கள் ஸ்டோர் ரூமின் வாசலில் அலைமோதிக் கொண்டிருக்க, இந்த ‘தள்ளுமுள்ளு’வில் (என்ன அழகான வார்த்தை?!) அங்கிருந்த விளக்கு உடைந்தது. "பிக் பாஸ்.. இதுதான் ஆரம்பம். இனி என்னெனன்ன பொருள்லாம் உடையப் போகுதுன்னு பாருங்க" என்று எச்சரிக்கை செய்தார் சிபி. பியர் பாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து கிடக்கும் போது அதிலிருக்கும் சரக்குகளை மக்கள் அள்ளிக் கொண்டு ஓடுவதுபோல ஆளாளுக்கு பாட்டில்களை எடுக்க அலைமோதினார்கள். ஆனால் பிரியங்காவோ "சில்லி ஃபெலோஸ். சாப்பிட்டாதான் பலம்னு இவிய்ங்களுக்கு தெரியல” என்று ஓரமாக நின்று ஊறுகாய் சாதத்தை வெறி கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அடுத்து ஆரம்பித்தது அந்த ரணகளமான சண்டை. பாவமாக நின்று கொண்டிருந்த செட்டப் மாட்டைப் பார்த்தவுடனே ராஜூ சொல்லிவிட்டார். “எப்படியும் மாட்டை சாய்ச்சுப்புடுவாங்க மாப்ள” என்று. ‘ம்மா...’ என்று மாடு குரல் தந்ததும் தாய் மாட்டை நோக்கி ஓடும் கன்றுக்குட்டிகள் போல் அனைவரும் அதன் மீது பாய இத்தனை பெரிய கன்றுக்குட்டிகள் ஒரே சமயத்தில் பாய்ந்தால் அதுவும்தான் என்ன செய்யும்? பாவம்.

பிக் பாஸ் - 34
பிக் பாஸ் - 34

சிரிப்பும் கேலியுமாக துவங்கிய இந்த ஆட்டம் ஒரு கட்டத்தில் கையிலிருந்து பிடுங்கும் வன்முறையாக மாறியது. லாரி தண்ணீரை அடைக்க முயலும் வடிவேலுவை, ‘அவரிடமிருந்துதான் தண்ணீர் வருகிறது’ என்று நினைத்துக் கொண்டு மக்கள் கடத்திக் கொண்டு போவது போல, மாட்டை உடைத்து அடியில் இருந்த பைப்பை தனியாகத் தூக்கிச் சென்றார் இமான். பால் வியாபாரம் என்றால் அதில் தண்ணீர் கலக்காமலா? தாங்கள் பிடித்த பாலின் அளவை அதிகம் காட்டுவதற்கு ஐக்கி தண்ணீர் கலக்க, "இப்படிச் செய்யாதே” என்று எச்சரித்தார் சுருதி. குற்றம் செய்து கேமராவில் மாட்டினால் அது பின்னர் பிரச்னையாகும் என்கிற பாடத்தை ஏற்கெனவே படித்தவர் அவர். “அவங்களும்தான் செய்யறாங்க” என்று நியாயம் கற்பித்தார் ஐக்கி.

எதிரணியினர் செய்யும் அழிச்சாட்டியம் தாங்காமல் சிபியும் வன்முறையில் இறங்க, “உங்க டீம் இமான் அண்ணாச்சிதான் முதல்ல எடுத்தாரு” என்று இன்னொரு அணி கதறியது. ஒரு கட்டத்தில் மாடே இரண்டாக உடைந்து ‘பப்பரப்பே’ என்று சாய்ந்துவிட அப்போதும் விடாமல் கீழே சிந்தியிருந்த பாலைப் பிழிந்து சேகரித்துக் கொண்டிருந்தார்கள். இதற்கும் ஒரே அடிதடி. தன்னிடம் மல்லுக்கட்டிய சிபியிடம் பதிலுக்கு ஆவேசமானார் அக்ஷரா. வெளியே நின்று பாவமாக கண்கலங்கும் அக்ஷராவா இது என்று ஆச்சரியமாக இருந்தது.

பிக் பாஸ் - 34
பிக் பாஸ் - 34

பாத்ரூம் ஏரியாவில் நடந்த ஒரு உரையாடலில் "தாமரையும்தான் தப்பு செஞ்சாங்க” என்பது போல் பாவனி சொல்லி விட உக்கிரமாக ஆவேசமடைந்தார் தாமரை. “பொய் பேசாத... பொய் பேசினா எனக்கு பிடிக்காது. பொல்லா கோபக்காரியா மாறிடுவேன்” என்ற தாமரை, ஜி.பி.முத்து ஸ்டைலில் “மூஞ்சியும் மோரையும் பாரு” என்று அடிப்பதுபோல் பாவனியை நோக்கி கையை ஓங்கியது சற்று ஓவர் டோஸாகி விட்டது.

சினிமாவில் காட்டப்படும் ஸ்டன்ட் காட்சிகளை உருவாக்கும் போது அனுபவமுள்ள ஸ்டன்ட்மேன்கள், அடிப்பது போலவும் அடிவாங்குவது போலவும் திறமையாக நடிப்பார்கள். ஆனால் அனுபவமில்லாதவர்கள் இதில் நுழைந்தால் உண்மையாக அடித்துவிடுவார்கள் அல்லது அடிவாங்குவார்கள். அது தனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஆபத்தை ஏற்படுத்தலாம். உண்மைக்கும் விளையாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை தாமரையின் கிராமத்து மனதால் உணர முடியவில்லை. ‘பொய்’ என்கிற ஒரு வார்த்தை அவரை ஆவேசமாக்கி விட்டது. இதை வைத்து கிராமத்து மக்கள் பொய் பேச மாட்டார்கள் என்று ரொமான்டிசைஸ் செய்ய முடியாது. “நான் பாட்டுக்கு நாடகம் நடிச்சிட்டு செவனேன்னு கிடந்தேன். இங்க கொண்டு வந்து போட்டு... என் கெரகம்...” என்று பின்னர் அலுத்துக் கொண்டார் தாமரை. ‘பிக் பாஸ் வீடுதான் சொர்க்கம்’ என்று சொல்லிக் கொண்டிருந்த ஆரம்ப நாள்களை இப்போது மறந்து விட்டார்.

பிக் பாஸ் - 34
பிக் பாஸ் - 34

ஒருவழியாக இந்த அடிதடி டாஸ்க் முடிந்தது. பாவம் அந்த மாட்டை ஐசியூவில் சேர்த்திருந்தால் கூட பிழைக்க வாய்ப்பில்லை. இரண்டு அணிகளும் தாங்கள் சேகரித்த பால் மாதிரியான வஸ்துக்களை வைத்திருக்க, ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒரு ‘தரக்கட்டுப்பாடு அதிகாரி’யை நியமிக்க வேண்டும் என்றார் பிக் பாஸ். சிபியும் வருணும் இதற்காகத் தேர்வானார்கள். "ஒரு பாட்டிலை பாரு. பினாயில் மாதிரியே இருக்கு” என்றார் ராஜூ. “மூணு பாட்டில்தான் தேறிச்சு” என்று சிபி ஒரளவிற்காவது நியாயமாக நடக்க “ஒண்ணுமே தேறலை” என்று பாட்டிலை மொத்தமாக கவிழ்த்து மங்காத்தா ஆட்டம் ஆடினார் வருண். இதனால் அவரது அணி உற்சாகமாகச் சிரித்தது. “எங்க பாட்டிலைப் பாருங்க. ப்யூரா இருக்கு” என்று வருண் சொன்னபோது “ஓகே… உங்க டீம்ல எல்லோரும் அதைக் குடிச்சுக்காட்டுங்க.. ஒத்துக்கறோம்” என்று இவர்கள் பதிலுக்கு சொல்லியிருக்கலாம்.

பிக் பாஸ் - 34
பிக் பாஸ் - 34
விளக்கை உடைத்தது, மாட்டை வன்முறையாக்கி படுக்க வைத்தது, கேமரா இருக்கும் பயம் இல்லாமல் பாலில் தண்ணீர் கலந்தது, மக்கள் அடித்துக் கொண்டது ஆகிய எதைப் பற்றியும் கவலைப்படாமல் ‘நீல அணி’ வெற்றி பெற்றது என்று அறிவித்தார் பிக் பாஸ். இவர்கள் அனைவரும் அடுத்த வார தலைவர் போட்டியில் பங்கேற்பார்கள். எந்தவொரு சட்டசபைக் கூட்டத்திலும் நடக்காத அளவிற்கு குடுமிப்பிடிச்சண்டை நடந்தும் கூட அதைக் கண்டு கொள்ளாமலேயே இருக்கும் பிக் பாஸை சபாநாயகராக நியமிக்கலாம்.

ராஜூவும் மதுமிதாவும் தங்கள் பரிசுகளை எவ்வாறு இழந்தனர் என்பதை குறும்படமாக போட்டுக் காட்டினார் பிக்பாஸ். தான் செய்த கூட்டுச்சதிகளை எண்ணி பிரியங்கா பயங்கர உற்சாகம் அடைந்து கொண்டிருக்க, அம்மாவால் அவமதிக்கப்பட்ட 'அபூர்வ சகோதரர்கள்' கமல் மாதிரியான ‘எக்ஸ்பிரஷனை’ தந்து கொண்டிருந்தார் ராஜூ. ‘இந்தப் பச்சைப் பிள்ளையைப் போய் எப்படியெல்லாம் ஏமாத்தியிருக்கீங்கடா’ என்கிற பாவம் அவரது முகத்தில் பொங்கி வழிந்தது. ‘என்னையெல்லாம் ஏமாத்தாம இருந்தாதான் பாவம்’ என்கிற மாதிரி சிரித்துக் கொண்டிருந்தார் மதுமிதா. "அடுத்தமுறையாவது கவனமா இருங்க” என்று இருவருக்கும் அறிவுறுத்தினார் பிக் பாஸ். இனி பிக் பாஸ் வீட்டில் யாராவது சற்று இயல்புமீறி நடந்தால் கூட அது ரகசிய டாஸ்காக இருக்குமோ என்கிற சந்தேகம் மற்றவருக்கு வந்துவிடும்.

பிக் பாஸ் - 34
பிக் பாஸ் - 34

இந்த ரகசிய டாஸ்க்கை வெற்றிகரமாக கையாண்டதற்காக பிரியங்கா மற்றும் தாமரைக்கு மட்டும் பரிசு வந்தது சற்று அநியாயம். கூட்டுக்களவாணிகளுக்கும் ஏதாவது தந்திருக்கலாம். “எல்லாமே நான்வெஜ்ஜா இருக்கே” என்று புலம்பிய பிரியங்கா, ஐஸ்கீரிமைக் கொண்டு ஆறுதல் அடைந்தார்.

“என் காயினை திருடறதுக்கு அக்ஷரா பிளான் போட்டுட்டு இருக்கா” என்று மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த பாவனி, “தாமரைகிட்ட போய் நான் பேச மாட்டேன். ரொம்ப சீப்பா நடந்துக்கறா” என்று வருத்தத்துடன் சொன்னார்.

பிக் பாஸ் - 34
பிக் பாஸ் - 34

“கொலைவெறியோடு விளையாடுவதில் எனக்குப் பிரச்னையில்லை. என்ன பண்றது? அந்தச் சூழல் அப்படி. உன்னை தூக்க முடிஞ்சா தூக்கி நகர்த்தி வெச்சிடுவேன்” என்று சிபியிடம் சொல்வதின் மூலம் தன்னுள் இருக்கும் அடிதடி வீராங்கனையை அக்ஷரா ஆவேசமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அதோடு இந்த எபிசோடு நிறைவடைந்தது.

அந்த மாடு உயிர் பிழைத்ததா அல்லது அதற்கே பால் ஊற்றி விட்டார்களா என்பதை இறுதியில் காட்டியிருக்கலாம்.