Published:Updated:

பிக் பாஸ் 36: பிக்பாஸின் தெரசா பிரியங்கா… எலிமினேஷனில் கலங்கிய சுருதி!

பிக் பாஸ் 36

‘அடடே... ஆச்சரியக்குறி!’ என்கிற மாதிரி நாலு வரிகளைச் சொல்லி கவிதை என்று அழும்பு செய்த பிரியங்கா, அந்த வரிகளின் இடையில் எலிமினேஷன் வேண்டாம் என்கிற வேண்டுகோளை நைசாக வைத்தார்

பிக் பாஸ் 36: பிக்பாஸின் தெரசா பிரியங்கா… எலிமினேஷனில் கலங்கிய சுருதி!

‘அடடே... ஆச்சரியக்குறி!’ என்கிற மாதிரி நாலு வரிகளைச் சொல்லி கவிதை என்று அழும்பு செய்த பிரியங்கா, அந்த வரிகளின் இடையில் எலிமினேஷன் வேண்டாம் என்கிற வேண்டுகோளை நைசாக வைத்தார்

Published:Updated:
பிக் பாஸ் 36
‘கமல் பிறந்த நாள் எபிசோட் என்பதால் கேக் மட்டும்தான் கொடுப்பார், எலிமினேஷன் இருக்காது’ என்று மக்கள் ஆசையாக நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், ‘‘எலிமினேஷன் அல்வா இந்த வாரமும் உறுதியாக கிளறப்படும்’’ என நாசூக்காக அறிவித்து விட்டார் கமல்.

மக்களின் வாக்கெடுப்பில் கடைசியாக வந்த சுருதி நேற்று வெளியேற்றப்பட்டார். அவர் வைத்திருந்த நாணயத்தை இப்போது பயன்படுத்த முடியாது. ‘நாமினேஷன் பட்டியல்’ அறிவிக்கப்பட்டபோதே அவர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்க வேண்டும்; அல்லது வேறு யாரையாவது தனக்குப் பதிலாக நாமினேட் ஆக்கியிருக்க வேண்டும். இப்போது டூ லேட்.

பிக் பாஸ் 36
பிக் பாஸ் 36
எபிசோட் 36-ல் நடந்தது என்ன?

பாவனிக்கும் தாமரைக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் முட்டல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. பாலில் நீர் கலந்த விவகாரம் கமல் பஞ்சாயத்தில் விசாரிக்கப்பட்டு முடிந்த பிறகும் கூட, நிரூப் கேட்டுக் கொண்டதால் தன் விளக்கத்தை அளித்துக் கொண்டிருந்தார் பாவனி. அவர் பேச்சுக்கு வழக்கம் போல் இடையூறு செய்து கொண்டிருந்தார் தாமரை. ‘நான் பேசி முடிப்பதற்குள் தாமரை பொங்கி வார்த்தைகளை விட்டு விட்டார்’ என்பது பாவனி வாதம். தாமரை முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் வரும் வாரங்களில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

தான் வெளியேற்றப்படுவோம் என்பதை சுருதி ஒரு மாதிரியாக யூகித்து விட்டார். எனவே காலையிலேயே கண்கலங்கி, ‘நான் வெளியே போனா ஒரு பிளான் இருக்கு’ என்று நாணயம் தொடர்பாக பாவனியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அது வேஸ்ட் பிளான் என்பது பிறகுதான் தெரிய வந்தது.

கறுப்புச்சட்டை, பஞ்சகச்சம் என்று நாத்திகமும் ஆத்திகமும் கலந்த விநோதமான உடையில் வந்தார் கமல். ‘‘ஒரு நடிகனின் சராசரி ஆயுளை விடவும் என் கலையுலக ஆயுளை நீட்டித்திருப்பது மக்களின் அன்புதான். அதை அர்த்தமுள்ளதாக்கவே அரசியலுக்கு வந்தேன்” என்ற முன்னுரையுடன் பார்வையாளர்களின் பிறந்த நாள் வாழ்த்தை ஏற்றுக் கொண்டு அகம் டி.வி-க்குள் சென்றார்.

பிக் பாஸ் 36
பிக் பாஸ் 36

சோபாவின் பின்னால் நன்றாகத் தெரிவது போலவே ஒளிந்திருந்த போட்டியாளர்கள், சட்டென்று எழுந்து ‘உன்ன விட’ பாடல் மெட்டில் வரிகளைப் போட்டு கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடினார்கள். ஒரு தீவிர ரசிகனே வெட்கப்படும் அளவிற்கு கமலின் போட்டோ அச்சிடப்பட்ட கறுப்புச் சட்டையை அணிந்திருந்தார் பிரியங்கா. (உலக நாயகனிடமே உலக நடிப்பா சாமி?!).

தங்களின் ஏற்பாட்டில் பெரிய பிறந்த கேக்கை மேடைக்கு அனுப்பிய போட்டியாளர்கள், ‘கேக்கை உள்ளே அனுப்புங்க சார்... சோத்தையும் சேர்த்து அனுப்புங்க சார்’ என்று தங்களின் கோரிக்கையை பாடலாக மாற்றினார்கள். கேக்கையும் தந்து விட்டு உடனே திருப்பியும் கேட்பது என்ன நியாயம்? “சின்ன பீஸ்தான் வரும். இங்க இருக்கறவங்களும் கேக்கையே பார்த்துட்டு இருக்காங்க” என்று போகிற போக்கில் பார்வையாளர்களை ஜாலியாக பங்கப்படுத்தினார் கமல். (ஒரு பிறந்த நாள் வாழ்த்து சொன்னது குத்தமாய்யா?!).

மறுபடியும் அகம் டிவியாக கமல் உள்ளே வர, இமான் தொகுத்து வழங்கிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ‘திருமதி. ஐக்கி’ என்று உளறிய இமான், பிறகு திருத்திக் கொண்டு ஐக்கியைப் பாட அழைத்தார். ராப் இசை பாணியில் கமலை வாழ்த்திப் பாடினார் ஐக்கி. அடுத்து வந்த இசை, கானா பாடல் மூலம் வாழ்த்து சொன்னார். இமானும் தாமரையும் இணைந்து நடத்திய நாடகம் சிறப்பு. அதன் க்ளைமேக்ஸில் கூடுதல் ட்விஸ்ட்டை இணைத்த கமலின் குறும்பு ஸ்பெஷல். ‘தெனாலி’ வசனத்தை பிக்பாஸ் சூழலுக்கு மாற்றிப் பேசிய ராஜூவின் மிமிக்ரியும் அருமை. ‘வடிவா இருந்தது’ என்று இலங்கைத் தமிழிலேயே ராஜூவைப் பாராட்டிய கமல், தான் சொன்னதை உறுதி செய்ய மதுமிதாவை அழைத்தார். அவர் ஜெர்மன் தமிழில், மழலை மொழியில் ஆமோதித்தார்.

‘அடடே... ஆச்சரியக்குறி!’ என்கிற மாதிரி நாலு வரிகளைச் சொல்லி கவிதை என்று அழும்பு செய்த பிரியங்கா, அந்த வரிகளின் இடையில் எலிமினேஷன் வேண்டாம் என்கிற வேண்டுகோளை நைசாக வைத்தார். ‘மக்கள் அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்’ என்று பந்தை அந்தப் பக்கம் தள்ளி சாமர்த்தியமாக எஸ்கேப் ஆனார் கமல். ‘பிக்பாஸின் அன்னை தெரசா’ பட்டத்தை வாங்குவதற்கு பிரியங்கா மிகவும் மெனக்கிடுவதைப் போல் தோன்றுகிறது.

‘‘உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு... அதை பிக்பாஸ் சொல்லட்டும்” என்று கமல் சொன்னவுடன் ‘என்னவோ... ஏதோ...’ என்று பார்த்தால் ‘விக்ரம் 2’ படத்தின் டிரெய்லர் காட்டப்பட்டது. (இதன் மேக்கிங் அருமை. கூடவே, ‘தமிழ் படம் 2’ படத்தின் காட்சியை வைத்து இந்த டிரெய்லரை கிண்டல் செய்திருக்கும் ஒரு மீம் வீடியோவை மறக்காமல் தேடிப் பாருங்கள்).

பிக் பாஸ் 36
பிக் பாஸ் 36

‘காப்பாற்றப்பட்டவர்கள் வரிசை’யில் அடுத்து யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை பால் பாட்டில்களின் வழியாகத் தெரிவித்தார் கமல். அதன்படி சிபி, அக்ஷரா, பாவனி, மதுமிதா மற்றும் ஐக்கி ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். பெட்டி ரெடி செய்துகொண்டு எலிமினேஷனுக்குத் தயாராக இருந்த ஐக்கியால் இதை நம்பவே முடியவில்லை. எனில் பாக்கியிருப்பவர் சுருதி மற்றும் அபினய். ‘யார் வெளியே போவாங்கன்னு நெனக்கறீ்ங்க?” என்கிற கேள்விக்கு பதில் சொல்லத் தயங்கி ‘சுருதி’யின் பெயரை மென்று முழுங்கி பலரும் சொன்னார்கள். ‘சுருதி காப்பாற்றப்படலாம்’ என்றார் ராஜூ. “நான் வெளியே போவதாக இருந்தால் நாணயத்தைப் பயன்படுத்த மாட்டேன்” என்று கண்கலங்க சொல்லிக் கொண்டிருந்தார் சுருதி. அது சர்ச்சையை ஏற்படுத்திய நாணயம் என்பதால், சுருதி அதை உபயோகப்படுத்த விரும்பவில்லை போல!

மேடைக்கு திரும்பி வந்த கமல், புத்தகப் பரிந்துரை என்னும் அற்புதமான சடங்கை செய்து முடித்தார். Spartacus-ஐ 1960-ல் வெளிவந்த திரைப்படமாகத்தான் பலரும் அறிவார்கள். ஆனால் இது ஐம்பதுகளில் Howard Fast என்பவரால் நாவலாக எழுதப்பட்டது. இடதுசாரிப் போராட்டக்காரரான இவர், சிறையில் இருந்தபடி எழுதிய நாவல்தான் Spartacus. எந்தப் பதிப்பாளருமே இதைப் பிரசுரம் செய்ய முன்வராத சூழலில், தானே அதைப் பிரசுரித்தார் ஹோவர்ட். பிறகு பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி, புகழ்பெற்று திரைப்படமாகவும் ஆனது. இதன் திரைக்கதையை எழுதியவர் டால்டன் ட்ரம்போ. அடிமைகளின் புரட்சியையொட்டிய நாவல் இது.

அகம் டி.வி-க்குள் வந்த கமல் “யார் போவீங்கன்னு நெனக்கறீங்க?” என்று சுருதியைக் கேட்க ‘‘இந்த வாரம் டாஸ்க்லாம் நல்லாப் பண்ணேன். நானா இருக்கமாட்டேன்னு நெனக்கறேன்‘’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே எவிக்‌ஷன் கார்டை காட்டினார் கமல். தன் பெயரை அதில் பார்த்ததும் சுருதி கண்கலங்க, தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டார் அபினய். தான் ஒளித்து வைத்திருந்த நாணயத்தை மதுமிதாவிடம் வற்புறுத்தி வழங்கினார் சுருதி. “நாணயத்தை உபயோகப்படுத்து” என்று பாவனி உள்ளிட்ட பலரும் மன்றாடியும் சுருதி கேட்கவில்லை. பிக்பாஸ் குறுக்கிட்டு, “நாணயத்தை எடுத்துக்கிட்டு வெளியே வாங்க” என்று சொல்லி விட்டார்.

பிக் பாஸ் 36
பிக் பாஸ் 36

அனைவரிடமும் விடைபெற்ற சுருதி, மனச்சுமையை இறக்கி வைக்கும் முகபாவத்துடன் “நான் எந்த ட்ரிக்ஸூம் பண்ணலைண்ணா” என்று ராஜூவிடம் வந்து திடீரென்று சொல்ல, அது எதற்காக என்பது புரியாமல் திகைத்தார் ராஜூ. என்றாலும் பிரிவின்போது இதைப் பேச வேண்டாம் என்று ராஜூ அமைதி காத்தது நன்று. சிபியும் இதை வலியுறுத்தினார். சுருதியின் மனம் புண்படும் படி ராஜூ எதையோ சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. அது தாமரை நாணயம் தொடர்பானதாக இருக்கலாம். எனில் வீட்டில் இருந்த சமயத்திலேயே இதை சுருதி பேசியிருக்கலாம். “உங்களை ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி. இந்தச் சுமையோட வெளியே போக விரும்பலை” என்று சுருதி சொல்லியது சிறப்பு. ஆனால் அது எதைப் பற்றிய புகார் என்பதை சுருதி தெளிவுபடுத்தியிருக்கலாம்.

மேடைக்கு வந்த சுருதியிடம் “நல்லாத்தானே விளையாட்டு இருந்தீங்க. என்ன ஆச்சு?” என்று கமல் விசாரிக்க “நமக்கு நல்லதா தெரியறது மத்தவங்களுக்கு கெட்டதா தெரியலாம்” என்று கண்கலங்கியபடி கூறினார் சுருதி. “மேடைக்கு போய் நாணயத்தை உபயோகப்படுத்து” என்று மற்றவர்கள் சொல்லி அனுப்பியது வீண். “இனிமேல் இதனால் உபயோகமில்லை. நினைவுப் பரிசா வேணா வெச்சிக்கலாம்” என்றார் கமல்.

“நீங்க துணிச்சலா பேசற பொண்ணு. வீட்டில் உள்ளவர்களைப் பற்றி உங்களின் அபிப்ராயங்களை வெளிப்படையா சொல்லுங்க” என்று ஒரு வாய்ப்பு தந்தார் கமல். சுருதி வம்பு பேசியிருக்கலாம். ஆனால் சென்டிமென்ட் ட்ராக்கில் போனது சுருதியின் நற்பண்பு. “ராஜூ அண்ணா. நீங்க முகமூடியை கழட்டிட்டு விளையாடுங்க. ஃபைனல் வரை போகக்கூடிய தகுதி இருக்கு” என்று சுருதி சொன்னபோது, ‘இது பாராட்டா, குத்தலா’ என்று புரியாத குழப்பத்துடன் தலையாட்டினார் ராஜூ.

பிக் பாஸ் 36
பிக் பாஸ் 36

இந்தச் சமயத்தில் பிரியங்கா, “தாமரை சுருதியை மன்னிப்பார் என்று நம்புவோம். மக்களும் இதைப் புரிந்து கொண்டு ஆரம்பத்தில் தந்த அதே அன்பை இப்போதும் தருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று சொன்னது சிறப்பானது. பொதுவாக அவப்பெயருடன் வெளியே செல்லும் போட்டியாளரை ஆற்றுப்படுத்தி, மக்களுக்கு அறிவுரையை சொல்லும் வேலையை கமல்தான் செய்வார். இம்முறை பிரியங்கா அதைக் கையில் எடுத்துக் கொண்டது நல்ல விஷயம்.

“யாருக்கும் உங்க மேல கோபம் இல்ல. இந்தப் புகழ் உங்க பயணத்துல ஒரு பெரிய உதவியாத்தான் இருக்கும். ஆல் தி பெஸ்ட்” என்று சுருதியை வழியனுப்பி வைத்து விட்டு தானும் விடைபெற்றுச் சென்றார். 5 வாரங்களில் போட்டியாளர்களின் எண்ணிக்கை 13 நபர்களாக குறைந்திருக்கிறது.

விடைபெறும்போது சுருதி சொன்னதை நினைத்துக் குழம்பிய ராஜூவை “நீ அமைதியா இருந்ததுதான் சரியான விஷயம்” என்று ஆறுதல் சொன்னார் சிபி. “யாரும் இங்க கெட்டவங்க இல்ல. சூழல்தான் அனைத்திற்கும் காரணம்” என்று ஐக்கி சொல்லிக் கொண்டிருந்தது திருவாசகம்.
பிக் பாஸ் 36
பிக் பாஸ் 36

“சுருதி போகும்போது நாணயத்தை உன் கிட்ட கொடுத்திருக்கலாம்” என்று வருண் தாமரையிடம் சொல்லிக் கொண்டிருந்தது சரியானது. அதனால் பயன் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் சுருதி அதைச் செய்திருந்தால் அவரது கிராஃப் இன்னமும் உயர்ந்திருக்கும். ஆனால் தாமரையின் கடுஞ்சொற்களை சுருதி இன்னமும் மறக்கத் தயாராக இல்லை போல.

“என் கிட்ட மன்னிப்பு கூட கேட்கலை” என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருந்தார் தாமரை. சுருதி பேச வரும்போதெல்லாம் “பேசப் பிடிக்கலை” என்று விலகிய தாமரை, இப்போது இப்படி எதிர்பார்ப்பது முறையா?

நெருங்கிய தோழிகளுள் ஒருவரான சுருதி விலகி விட்டதால், அக்ஷராவின் நட்பைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று பாவனி நினைத்தார் போல. அக்ஷராவிடம் சென்று அவரை அணைத்துக் கொள்ள, ‘உன்னை நம்ப முடியாது’ என்கிற முகபாவத்துடன் இடதுகையால் அந்த அணைப்பை ஹாண்டில் செய்தார் அக்ஷரா.

‘தங்களுக்கு தரப்பட்டிருக்கும் சக்தியை எப்போது பயன்படுத்துவது’ என்கிற சமயோசிதத்துடன் ஆட வேண்டும் என்கிற பாடத்தை சுருதியின் வெளியேற்றம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதிகம் சென்டிமென்ட்டாக விளையாடினால் இதில் ஜெயிக்க முடியாது.

தலைவர் போட்டி, நாமினேஷன் சடங்கு, யாருடைய ஆளுமை என்பது போன்ற பல சம்பவங்களை அடுத்த வாரத்தில் எதிர்பார்க்கலாம். எதிர்பார்ப்போம்.