Published:Updated:

பிக் பாஸ் 37: பிரியங்கா தலையை உடைத்த அண்ணாச்சி... தலைவரான இசை!

பிக் பாஸ் 37

பிறகு என்ன நடந்திருக்கும் என்று நமக்கு நன்றாகவே தெரியும். கார்டன் ஏரியாவில் மழை பெய்து கொண்டிருந்ததால், கிச்சன் மூலைக்குச் சென்று உடனே கண்கலங்க ஆரம்பித்து விட்டார் அக்ஷரா.

Published:Updated:

பிக் பாஸ் 37: பிரியங்கா தலையை உடைத்த அண்ணாச்சி... தலைவரான இசை!

பிறகு என்ன நடந்திருக்கும் என்று நமக்கு நன்றாகவே தெரியும். கார்டன் ஏரியாவில் மழை பெய்து கொண்டிருந்ததால், கிச்சன் மூலைக்குச் சென்று உடனே கண்கலங்க ஆரம்பித்து விட்டார் அக்ஷரா.

பிக் பாஸ் 37

பஞ்சபூத ஆற்றல்களைக் குறிக்கும் திரைப்பாடல்களை ஒலிபரப்பும் நல்ல வழக்கத்தை முதல் வாரத்தில் இசைவாணிக்கு மட்டுமே பிக்பாஸ் பின்பற்றினார். பிறகு டீலில் விட்டு விட்டார். இந்த வாரம் ‘ஆகாயம்’ ஆற்றலை வைத்திருக்கும் பாவனிக்கு ஆளுமை கிடைத்தது. காலையில் ஒலித்த ‘முக்காபுலா’ பாடலில் ‘வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா’ என்றொரு வரி வருகிறது. அதையும் ஆகாயத்தையும் நாமாக லிங்க் செய்து கொள்வோம். பிரியங்கா சொன்னது போல் என்னவொரு எனர்ஜெடிக் பாட்டு?! ரஹ்மான் மேஜிக்.

பிக் பாஸ் 37
பிக் பாஸ் 37

‘சோழர் பரம்பரையில் ஒரு கவுன்சிலர்’ என்கிற ரேஞ்சிற்கு தனக்கு வழங்கப்பட்ட சிம்மாசனத்தில் டொங்கலாக அமர்ந்த பாவனிக்கு அவர் அடையவிருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. லிவிங் ஏரியாவில் அவருடைய அனுமதியில்லாமல் யாரும் பிரவேசிக்கக்கூடாது. கடந்த வாரத்தில் நிரூப்பிற்கு ‘பெண் உதவியாளர் வைத்துக் கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டுச் சொன்ன பிக்பாஸ், இம்முறை உதவியாளர் என்பதோடு நிறுத்திக் கொண்டார். இந்த அறிவிப்பை வாசித்த பிரியங்கா, ‘பச்சக்கிளிக்கு புல்லட் வாங்கித் தரவும்’ என்கிற வடிவேலு காமெடி மாதிரி ‘பிரியங்காவிற்கு முழு சலுகையை வழங்கவும்’ என்று தானாக சேர்த்துக் கொண்டது சுவாரஸ்யம்.

தனக்கு உதவியாளராக பாவனி யாரைத் தேர்ந்தெடுப்பார் என்று அனைவருமே ஆவலாக எதிர்பார்த்தனர். நிரூப்பைப் போலவே பாவனியும் செக்மேட் வைக்கும்விதமாக தாமரையை தேர்ந்தெடுத்தது அட்டகாசமான ட்விஸ்ட். “யாராவது அனுமதி கேட்காம வந்தா டாஸ்க்குகளை நீ சொல்லு” என்று தாமரையிடம் தன் அதிகாரத்தைக் கைமாற்றி விட்டதும் பாவனியின் புத்திசாலித்தனம்.
பிக் பாஸ் 37
பிக் பாஸ் 37

இசைக்கு சற்று அதிகப்படியான டாஸ்குகளை தாமரை தந்தபோது ‘இதையெல்லாம் செய்ய முடியாது’ என்று அவர் மறுத்தார். “தண்டனைதான் அப்படி தரணும். டாஸ்க்கெல்லாம் லைட்டா தந்தா போதும்” என்று பாவனி சொன்னது நல்ல விஷயம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். கெட்ட பெயர் தாமரைக்கு, நல்ல பெயர் பாவனிக்கு. “ஹய்யோ... ஹய்யோ... இவ கிட்ட எப்படி ஒரு வாரம் குப்பை கொட்டப் போறேன்னு தெரியலையே?!” என்பது போல் அலுத்துக் கொண்டார் தாமரை.

“இந்த வாரம் எப்படியும் லீடர் பதவியை நான் தூக்கிடுவேன். கடந்த முறை ஆளுமை கிடைச்சப்ப என்னால சரியா செயல்பட முடியலை” என்று சபதம் போட்டுக் கொண்டிருந்தார் இசை. ‘ஆரம்பம்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஃபினிஷிங் சரியில்லையே’ என்பது மாதிரியே உள்ளன இசையின் செயல்பாடுகள்.

‘பொம்மலாட்டம்’ என்ற தலைப்பில் இந்த வாரத்திற்கான தலைவர் போட்டி அறிவிக்கப்பட்டது. ‘செண்பகமே... செண்பகமே...’ டாஸ்க்கில் வெற்றி பெற்ற அணியில் இருந்த அனைவருமே தலைவர் போட்டிக்கு ஏற்கெனவே தகுதி பெற்று விட்டார்கள். அவர்களின் உருவம் தாங்கிய சோளக்காட்டு பொம்மைகள் கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருக்கும். பஸ்ஸர் அடித்ததும் அந்த ஏரியாவின் சாவியை யார் முதலில் எடுக்கிறாரோ, அவர் கதவைத் திறந்து அங்கே செல்லலாம். யார் தலைவராக வருவதில் தனக்கு விருப்பமில்லையோ, அவரின் பொம்மையை உடைக்கலாம். தலைவர் போட்டிக்கு நிற்பவர்கள், தங்களின் பேச்சுத் திறமை மூலம் தங்கள் தலை உடையாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். யாருடைய தலை இறுதியில் தப்புகிறதோ, அவரே தலைவர்.

‘‘வருண் தலைவரா வந்தா நல்லாயிருக்கும்’’ என்று தாமரை சொல்ல, “டாடி.. டாடி.. எனக்கு சாக்லேட் வேணும்” என்று கெஞ்சுகிற பையன் மாதிரி ராஜூவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் நிரூப். “என்னால் முடியும். நீங்க அதை நம்புங்க” என்று முழக்கம் செய்து கொண்டிருந்தார் அபினய். “என்னை பாத்ரூம் டீம்ல போடறீங்களா?” என்று அபினய்யிடம் டீல் பேசிக் கொண்டார் ஐக்கி.
பிக் பாஸ் 37
பிக் பாஸ் 37

சாவி எடுக்கும் முதல் வாய்ப்பு சிபிக்குக் கிடைத்தது. ‘பாருங்க சார்... பாருங்க சார்... வயித்துப் பாட்டுக்காகத்தான் இந்த வித்தையை நாங்க பண்ணிட்டிருக்கோம்’ என்பது மாதிரி தலைவர் வேட்பாளர்கள் அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது சுவாரஸ்யமான காட்சி. யாரிடமாவது காரியம் ஆக வேண்டுமென்றால், அப்போது மட்டும் அவருடைய பெயருடன் ‘சார்’ என்று இணைத்துக் கொள்வது பிரியங்காவின் ஜாலியான வழக்கம். இம்முறையும் ‘சிபி சார்... சிபி சார்... எனக்கொரு வாய்ப்பு கொடுங்க சார்” என்று ஓவராக சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். “ஏம்மா... வீடு உன் கன்ட்ரோல்லதான் எப்பவுமே இருக்கு. அந்தளவுக்கு உன் குரல் மட்டும்தான் முன்னாடி இருக்கு” என்று வருண் இந்தச் சமயத்தில் சொன்னது துணிச்சலான விஷயம்.

“மத்தவங்களுக்காவது சில சலுகைகள் ஏற்கெனவே இருக்கு. எனக்கு ஒண்ணுமே இல்லை” என்று அக்ஷராவும் பிரியங்காவின் சத்தத்தை மீறி பேச முயன்றார். “உன் தலை உடைஞ்சாலும் பரவாயில்ல. காயின் வெச்சு தலைவர் பதவியை வாங்கிக்கோ” என்று நிரூப்பிடம் மல்லுக் கட்டினார் பிரியங்கா. அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட சிபிச் சக்கரவர்த்தி, நேராகச் சென்று அக்ஷராவின் தலையை உடைத்தார்.

பிறகு என்ன நடந்திருக்கும் என்று நமக்கு நன்றாகவே தெரியும். கார்டன் ஏரியாவில் மழை பெய்து கொண்டிருந்ததால், கிச்சன் மூலைக்குச் சென்று உடனே கண்கலங்க ஆரம்பித்து விட்டார் அக்ஷரா. (டிவி சீரியல்ல நடிக்கப் போனா பெரிய ஆளா வருவாங்க!). “பால் கறக்கும் டாஸ்க்கில் எனக்கும் சிபிக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுச்சு. அப்புறம் அதை உட்கார்ந்து பேசி தீர்த்துக்கிட்டோம். அப்படியும் எனக்கு எதிரா ஏன் சிபி நடந்துக்கணும்?’’ என்றெல்லாம் வருணிடம் அக்ஷரா புலம்பினார்.
பிக் பாஸ் 37
பிக் பாஸ் 37

அந்தப் பக்கத்தில் அமைதியாக உலவிக் கொண்டிருந்தார் சிபி. ‘‘செண்பகமே டாஸ்க்கிற்காக ஆள் தேடும்போது ‘உங்க டீம் வீக்கா இருக்கு’ என்று சொல்லி அக்ஷரா வர மறுத்து விட்டார். எனக்கு அந்தக் காரணம்தான் ஆட்சேபமா இருந்தது. மத்தபடி இப்ப ஏதோ உள்ள பேசிட்டு இருக்கா. அதெல்லாம் காரணம் இல்லை” என்று ராஜூவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சிபி. இதை அக்ஷராவிடமே அவர் நேரடியாகப் பேசியிருக்கலாம். ஆனால் அக்ஷரா பேசத் தயாராக இருப்பாரா என்பதில் நிச்சயமில்லை.

பிக் பாஸ் 37
பிக் பாஸ் 37

சாவி எடுக்கும் அடுத்த வாய்ப்பு இசைக்குக் கிடைத்தது. “வாங்க சார்... வாங்க சார்... எந்தப் பொருள் எடுத்தாலும் பத்து ரூபா” என்கிற ரேஞ்சிற்கு பிரியங்கா கூவிக் கொண்டிருக்க, “கிச்சன் ஏரியாவையே பத்திரமா பார்த்துக்கற நான், வீட்டை பார்த்துக்க மாட்டேனா” என்று வாக்குறுதி தந்து கொண்டிருந்தார் அபினய். இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்ட இசை, வருணின் தலையை உடைக்க முயன்றார். “டேய், இருடா. பேசித் தீர்த்துக்கலாம்” என்று வருண் ஜாலியாகக் கெஞ்ச, ‘‘தீர்த்துட்டுதான் பேசுவேன்’’ என்று பானையை சிரமப்பட்டு உடைத்தார் இசை.

பிக் பாஸ் 37
பிக் பாஸ் 37

சாவியை எடுக்கும் அடுத்த வாய்ப்பு ஐக்கிக்கு கிடைத்தது. இதற்கு முன்பாக வாக்குறுதி விஷயத்தில் பிரியங்காவிற்கும் நிரூப்பிற்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம். “எல்லோரையும் காப்பாத்துவேன்னு வாக்கு தர்றது டிராமா” என்று நிரூப் சொல்ல, “ஒரு நல்ல லீடர் அப்படித்தான் செயல்படுவார்” என்று பிரியங்கா கவுன்ட்டர் கொடுக்க, நிரூப் அப்செட் ஆனார். அனைவரின் வாக்குறுதிகளையும் ஜாலியாக கேட்டுக் கொண்ட ஐக்கி, இறுதியில் பாவனியின் தலையை உடைத்தார். மூன்றாவது டிக்கெட் க்ளோஸ்.

அடுத்த வாய்ப்பு தாமரைக்குக் கிடைத்தபோது, பிரியங்காவைத் தலைவராகத் தேர்வு செய்யப்போவதை அவர் முன்கூட்டியே தீர்மானித்துவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது. பிரியங்காவை நிரூப் ஆட்சேபிக்கும்போது “அந்தப் பிள்ளைதான் வரட்டுமே” என்று சொல்லி மதுமிதாவின் மண்டையை உடைத்தார் தாமரை. “ஐயோ... என் தலை போச்சே” என்று மதுமிதா ஜாலியாக அலறியபோது அவருக்கு முத்தம் கொடுத்து சமாளித்தார் தாமரை. “நெகட்டிவ் காம்பெயின் ஏன் பண்ணணும்?” என்று சொன்ன அபினய்யிடமும் “என் பாயிண்டை வெச்சு ஏன் பேசணும்?” என்ற பிரியங்காவிடமும் நெடுநெரம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார் நிரூப்.

பிக் பாஸ் 37
பிக் பாஸ் 37
பிரியங்காவும் நிரூப்பும் சண்டை போட்டுக் கொள்வது போல் தெரிந்தாலும் அதுவொரு டிராமாவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. நாமினேஷனின் போது இதை ராஜூவும் வெளிப்படையாகச் சொல்லி விட்டார். பிரியங்காவோ, நிரூப்போ ஒருவரையொருவர் நாமினேட் செய்து கொள்ளவே இல்லை. பலத்த கருத்து வேறுபாடுகள் உண்மையிலேயே இருந்தால், நாமினேஷனில் நிச்சயம் சொல்லியிருப்பார்கள். இருவரும் இணைந்து ஒரு தனி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இது விரைவில் அம்பலமாகும். பார்ப்போம்!

சாவி எடுக்கும் அடுத்த வாய்ப்பு ராஜூவுக்குக் கிடைத்தது. அந்த நேரத்தில், “நான் ஒரு நல்ல கேப்டனா இருப்பேன்” என்றார் அபினய். கவுண்டமணி செந்திலை முறைத்துப் பார்ப்பது போல் ராஜூ பார்க்க, அபினய்யே இதற்கு சிரித்து விட்டார். “ஏன்.. கேப்டனா இல்லாம நல்ல விஷயங்களை நீ பண்ண முடியாதா?” என்று கேட்ட ராஜூ, பிறகு நிரூப்பின் தலையை உடைத்தார்.

பிக் பாஸ் 37
பிக் பாஸ் 37
அடுத்த வாய்ப்பு அண்ணாச்சிக்குக் கிடைத்தது. அந்த வீட்டில் பிரியங்கா மிகையான அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதால் அண்ணாச்சி எரிச்சலில் இருந்தார். எனவே ஆன்ட்டி கிளைமாக்ஸாக பிரியங்காவின் தலையை அவர் உடைக்க, மிஞ்சியிருந்த அபினய்யின் தலை தப்பியது. அவரே தலைவர். பிரியங்கா அதுவரை கத்திக் கத்தி செலவழித்த சக்தியெல்லாம் வீணாகப் போனது.

‘பானை உடைத்தவன் பாக்கியசாலி’ என்கிற டைட்டில் மாதிரி அபினய்தான் தலைவர் என்று பார்த்தால், அங்கே ஒரு ட்விஸ்ட். “நாணயத்தை உபயோகப்படுத்தி தலைவர் பதவிக்கு யாராவது வர விரும்புகிறீர்களா?” என்று கேட்கப்பட்ட போது நிரூப்பும் பாவனியும் அதை மறுத்தனர். இசை அரைமனதாகத் தலையாட்டினார். “நான் கேப்டன் ஆகி என்னை நிரூபிக்கப் போறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தவர், இந்தச் சமயத்தில் ஏன் குழம்புகிறார் என்று தெரியவில்லை. “உன்னை மக்கள் காப்பாத்துவாங்கன்னு நம்பிக்கை இருக்குல்ல... அப்புறம் என்ன?” என்று இமான் குட்டையைக் குழப்பினார். தடுமாறிய இசை, “ஓகே... வேணாம் பிக்பாஸ். நான் காயின் யூஸ் பண்ணலை” என்று ஏதோ ஸ்பெஷல் மசாலா தோசை ஆர்டரை கேன்சல் செய்வது போல் சொன்னார். “இறுதி முடிவா சொல்லுங்க” என்று பிக்பாஸ் அழுத்தமாகக் கேட்டவுடன் ‘பயன்படுத்தறேன்” என்று ஒருவழியாக சம்மதித்தார் இசை.

பிக் பாஸ் 37
பிக் பாஸ் 37

இசை இப்படி தலைவர் ஆகி நாமினேஷனில் இருந்து தப்பினாலும் அவருக்கு தரப்பட்ட டாஸ்க் சற்று கடுமைதான். இந்த வாரம் முழுவதும் அவர் ‘சர்வராக’ இருக்க வேண்டுமாம். ‘யார் தண்ணீர் கேட்டாலும் கொண்டு போய் தர வேண்டும்; சாப்பிட்ட தட்டை வாங்கிச் செல்ல வேண்டும்’ என்று பிக்பாஸ் தந்த தண்டனையைக் கேட்டவுடன் இசையின் முகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன. அவரின் வயது, பின்னணி போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பிக்பாஸ் சற்று எளிய டாஸ்க்கைத் தந்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அப்படி பாரபட்சமும் பார்க்க முடியாது. டெலிகேட் பொஷிஷன்.

பிக் பாஸ் 37
பிக் பாஸ் 37
மணியைத் தொடர்ந்து அடித்து இசையை ஆளாளுக்கு அழைத்து கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள். இசை இதை சகஜமாக எடுத்துக் கொள்ள முயன்றாலும், உள்ளுக்குள் அவர் காண்டாவது தெரிந்தது. இவரும் பதிலுக்கு அவமதிப்பாக சர்வ் செய்தால் அடுத்த முறை கேட்க மாட்டார்கள். இப்படியாக இந்த விளையாட்டை அவர் ஜாலியாக்க முயலலாம். “என் அனுமதியில்லாம லிவ்விங் ஏரியாவிற்கு இவங்க வர முடியாது. நீ அதைப் பயன்படுத்திக்கோ” என்று சட்டவிதிகளின் உள்ளே புகுந்து இசைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார் பாவனி.

நாமினேஷன் சடங்கு துவங்கியது. ‘மூன்று நபர்களை நாமினேட் செய்ய வேண்டும்’ என்று மரபை மீறி ஒரு டிவிஸ்ட் தந்தார் பிக்பாஸ். அவரவர்களின் விருப்பு, வெறுப்புகள் வாக்குமூல அறைக்குள் இறைபட்டன. ‘பிரியங்கா’வின் பெயரை ராஜூ சொல்லிக் கொண்டிருந்த போது மிகச்சரியாக பிரியங்காவிற்கு புரையேறிக் கொள்ள “என் பேரைத்தான் ராஜூ சொல்லிட்டு இருக்கான்” என்று அவர் சொன்னது சுவாரஸ்யமான காட்சி. பொதுவாக நாமினேஷன் சமயத்தில் வெளியில் நிகழும் உரையாடலைக் காட்ட மாட்டார்கள். இது நல்ல நகைச்சுவை என்பதால், எடிட்டிங் டீம் விதிவிலக்காக இதைச் சேர்த்து விட்டது. இந்தச் சடங்கு முடிந்து பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

பிக் பாஸ் 37
பிக் பாஸ் 37
இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இடம் பெறுபவர்கள்: ராஜூ, அக்ஷரா, இமான், சிபி, அபினய், பாவனி மற்றும் மதுமிதா. “நாணயத்தைப் பயன்படுத்தி காப்பாற்றிக் கொள்கிறீர்களா?” என்று கேட்ட போது பாவனி இதை மறுத்து விட்டார். நிரூப்பிடம் இந்தக் கேள்வியை பிக்பாஸ் கேட்கவில்லை.

“உங்களை தலைவர் பதவில இருந்து தூக்கிட்டு நான் காயின் பயன்படுத்திட்டேன்னு குற்றவுணர்ச்சியா இருக்கு” என்று அபினய்யிடம் பிறகு வருந்திக் கொண்டிருந்தார் இசை. அபினய் எத்தனை பண்பான மனிதர் என்பது இந்தச் சமயத்தில் வெளிப்பட்டது. “அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல. உனக்கு உதவி தேவைப்பட்டா சொல்லு, நான் செய்யத் தயாரா இருக்கேன்” என்று அவர் சொன்னது நல்ல விஷயம். சென்ற வாரமே அபினய் கடைசி இடத்தில் இருந்துதான் தப்பி வந்தார். இந்த வாரம் என்ன ஆவார் என்பது தெரியவில்லை.

பிக் பாஸ் 37
பிக் பாஸ் 37

ஒரு நாளின் இறுதியில் டாஸ்க்கை சரியாகச் செய்யாதவர்களுக்கு தண்டனை தர வேண்டும். ஆனால், மற்றவர்களின் பகையைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்பதில் பாவனி கவனமாக இருந்தார். எனவே “தப்பு செஞ்சவன் தானா வந்து ஒத்துக்கங்க” என்று அவர் வேண்டுகோள் வைக்க “நீயே சொல்லிடு” என்று மற்றவர்கள் வற்புறுத்தினார்கள். சிபி மற்றும் நிரூப்பை தேர்ந்தெடுத்த அவர் “இந்தத் தண்டனையை வீடு சுத்தம் செய்யும் வாய்ப்பாக மாற்றிக் கொள்ளலாம்” என்று வலிக்காமல் சொன்னது புத்திசாலித்தனம்.

பிக் பாஸ் 37
பிக் பாஸ் 37

நாணயத்தின் சக்தியைப் பயன்படுத்தி இசை தலைவராகி விட்டாலும் இந்த முறையாவது அவர் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துவாரா?

பொறுத்திருந்து பார்ப்போம்.