Published:Updated:

பிக் பாஸ் - 38: அக்ஷராவுக்கும் நிரூப்புக்கும் சண்டை… திட்டும்போது சொன்ன அந்த வார்த்தை!

பிக் பாஸ் - 38

நிரூப்பின் அடாவடி செயல் காரணமாக அடுத்த சுற்றில் ஆட்டம் சூடு பிடித்தது. அக்ஷரா ஓட முடியாதவாறு நிரூப் அழுத்திப் பிடித்துக் கொண்டாலும் அவர் எப்படியோ திமிறி உள்ளே ஓடினார்.

பிக் பாஸ் - 38: அக்ஷராவுக்கும் நிரூப்புக்கும் சண்டை… திட்டும்போது சொன்ன அந்த வார்த்தை!

நிரூப்பின் அடாவடி செயல் காரணமாக அடுத்த சுற்றில் ஆட்டம் சூடு பிடித்தது. அக்ஷரா ஓட முடியாதவாறு நிரூப் அழுத்திப் பிடித்துக் கொண்டாலும் அவர் எப்படியோ திமிறி உள்ளே ஓடினார்.

Published:Updated:
பிக் பாஸ் - 38
‘இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான், தான் விளையாட; அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன, தாம் விளையாட’ என்று புகழ்பெற்ற சினிமாப் பாட்டு உண்டு. அதுபோல பிக் பாஸ் என்னும் கடவுள், போட்டியாளர்கள் என்னும் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறபோது, அந்த பொம்மைகள் வேறு சில பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடியதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட்.

‘தள்ளுமுள்ளு’ விளையாட்டு என்பதால் வழக்கம்போல் உடல் சார்ந்த வன்முறையும் அதைவிடவும் பெரிதாக வாய்ச்சண்டையும் பீப் ஒலியில் மறைக்கப்பட்ட வசைகளும் இறைபட்டன. இந்த வார பஞ்சாயத்து நாளில் கமல் இதைக் கண்டிப்பாரா, அல்லது ‘லெஃப்ட்ல காலி பண்ணி ரைட்ல பன்ச் பண்ணே பாரு... அந்தக் காட்சி செம வாத்யாரே’ என்று 'வசூல்ராஜா'வாக மாறி பாராட்டுவாரா என்று தெரியவில்லை.

எபிசோட் 38-ல் என்ன நடந்தது?

பிக் பாஸ் - 38
பிக் பாஸ் - 38

‘ஒத்த சொல்லால..’ என்னும் ரகளையான பாடலோடு பொழுது விடிந்தது. தனுஷை நகல் எடுத்து ராஜூ ஆட முயன்றது சிறந்த முயற்சி. பிரியங்காவும் சற்று ஈடு கொடுத்தார். சக போட்டியாளர்களை அமர வைத்து இசை ஏதோ குறிப்புகள் தந்து கொண்டிருந்தார். தலைவர் என்கிற ஹோதாவில் எதையோ சொல்கிறார் என்று பார்த்தால், “தட்டை நீங்க எடுக்காதீங்க. நானே எடுக்கறேன்” என்று மிகவும் கறாராக சொல்லிக் கொண்டிருந்தார். (சிரிப்பு போலீஸ் மாதிரி காமெடி தலைவரா மாறிடாதீங்க இசை!).

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. உண்மையில் இதுவொரு சுவாரஸ்யமான போட்டி. லாஜிக்காக விளையாடினால் நன்றாகவே இருந்திருக்கும். ஆனால் அடிதடியில் முடிந்தது.

போட்டியாளர்களுக்கு தனித்தனியாக பொம்மைகள் தரப்படும். இந்தப் போட்டியின் பியூட்டி என்னவெனில், ‘ஒவ்வொருவரும் மற்றவர்களின் வெற்றிக்காக செயல்பட வேண்டும்’. ஒரு போட்டியாளர் தன்னுடைய பெயர் பொறிக்கப்பட்ட பொம்மையை எடுக்கக்கூடாது. மாறாக தனக்கு வேண்டிய போட்டியாளரின் பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடி கூடாரத்திற்குள் நுழைய வேண்டும். கடைசியாக வருபவரின் கையில் உள்ள பொம்மையில் யார் பெயர் உள்ளதோ, அவர் ஆட்டத்திலிருந்து விலக்கப்படுவார். இறுதியில் மிஞ்சுபவர் வெற்றி பெறுவார்.

எனவே பரஸ்பர ஒப்பந்தங்களும் துரோகங்களும் சதிகளும் திட்டமிடப்பட்டன. ராஜூ மற்றும் நிரூப்பை காப்பாற்ற இமான் முடிவு செய்தார். அபினய், இசையுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். நிரூப் மற்றும் ஐக்கிக்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்து கையெழுத்தானது.

பிக் பாஸ் - 38
பிக் பாஸ் - 38

முதல் சுற்றுக்கான ஒலி வந்தது. அனைவரும் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். அக்ஷரா திறமையான ஓட்டக்காரர். பின்னால் கிளம்பினாலும் பொம்மையை எடுத்துக் கொண்டு கூடாரத்திற்குள் முதலில் பாய்வதில் கில்லாடியாக இருக்கிறார். ஆனால் முதல் சுற்றே வெத்தாக போய் விட்டது. கடைசியாக வந்த ராஜூவிற்கு அவருடைய பெயர் கொண்ட பொம்மை மட்டுமே மிச்சமிருந்தது. “யாருடா கோக்குமாக்கா விளையாண்டது?” என்று அவர் விசாரிக்க, அந்தச் சுற்று ரத்து செய்யப்பட்டது.

அடுத்த சுற்றில் தாமரையை வேண்டுமென்றே மறித்துக் கொண்டு சென்றார் நிரூப். “யாருடா கடைசில வந்தது?” என்று கூடாரத்திலிருந்து தலையை நீட்டி வெறும் மைதானத்தைப் பார்த்து ராஜூ கேட்டது ஒரு நல்ல காமெடி. இதில் தாமரை அவுட் ஆனார். அவர் வைத்திருந்த பொம்மையில் பிரியங்காவின் பெயர் இருந்ததால் பிரியங்கா போட்டியில் இருந்து வெளியேறுவார். தாமரை இதற்காக வருத்தமடைந்து நிரூப்பிடம் சண்டை போட “அவன் அப்படித்தான் பண்ணுவான். நோ ப்ராப்ளம்” என்றார் பிரியங்கா. “தாமரையை நான் மறிச்சது உண்மைதான். ஆனா அவ கைல இருக்கிறது உன் பொம்மைன்னு எனக்குத் தெரியாது” என்று விளக்கம் தந்தார் நிரூப். இந்த உரையாடலின்போது ‘கத்தாம பேசு’ என்று பிரியங்கா சொன்ன போது உலகமே ஒரு விநாடி ஸ்தம்பித்துப் போயிருக்கும்.

“உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நெஜம்மாவே சண்டையா?” என்று பிரியங்காவிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் ராஜூ. நம் மைண்ட் வாய்ஸில் உள்ள சந்தேகக் கேள்வி அது. “அவனுக்குத்தான் என்னை பிடிக்காது” என்று மழுப்பலாக பதில் சொன்னார் பிரியங்கா.
பிக் பாஸ் - 38
பிக் பாஸ் - 38

நிரூப்பின் அடாவடி செயல் காரணமாக அடுத்த சுற்றில் ஆட்டம் சூடு பிடித்தது. அக்ஷரா ஓட முடியாதவாறு நிரூப் அழுத்திப் பிடித்துக் கொண்டாலும் அவர் எப்படியோ திமிறி உள்ளே ஓடினார். அக்ஷராவிற்கும் நிரூப்பிற்கும் இடையில் F என்று துவங்கும் ஆங்கில வசவு வார்த்தைகள் இறைபட்டதைப் போல் இருந்தது. கடைசியில் வந்த ராஜூவும் இமானும் ஒருவரையொருவர் பிடித்தபடி கூடாரத்திற்குள் நுழையாமல் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த காட்சி நகைச்சுவை. இமானின் கையில் சிபியின் பெயர் கொண்டிருந்த பொம்மை இருந்தது. சிபி விட்டுத்தர முடிவு செய்ததால் பின்பக்கமாக நுழைந்தது ராஜூவின் சாமர்த்தியம். எனவே சிபி அவுட் ஆனார். “சிபி இருந்தா வேகமா ஓடுவான்ல” என்று இமான் சொன்ன போது, “இத முதல்லயே சொல்ல வேண்டியதுதானே?” என்றார் ராஜூ.

நிரூப் தன்னை அழுத்திப் பிடித்துக் கொண்டது தொடர்பாக அக்ஷரா கோபப்பட்டது நியாயமே. அதே சமயத்தில் “நிரூப் என்னை தவறாகத் தொட்டார்” என்கிற வில்லங்கமான திசையில் இந்தப் பிரச்னையை அக்ஷரா கொண்டு செல்லாதது சிறப்பு. அக்ஷராவுக்காக வருண் தாமாக வந்து ஆஜர் ஆக, வருணிற்கும் நிரூப்பிற்கும் இடையில் காரசாரமான மோதல் ஏற்பட்டது. இது கைகலப்பாக ஆகி விடுமோ என்று கூட தோன்றியது.

பிக் பாஸ் - 38
பிக் பாஸ் - 38

இந்தப் பிரச்னையின் உத்தேசமான பின்னணி, ‘செண்பகமே’ டாஸ்க். அப்போது சிபிக்கும் அக்ஷராவிற்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை சிபி ஆட்சேபித்தார். “நானும் அப்படி ஆடினா என்னவாகும்?” என்று கேட்டார். பிறகு இருவரும் அமர்ந்து பேசினார்கள். “இது கேம். என்னால முடிஞ்சா உன்னைத் தூக்கிக் கூட போடுவேன். முடியாதுன்றதாலதான் பிடிச்சு இழுத்தேன்” என்று விளக்கம் அளித்தார் அக்ஷரா. “அப்ப இப்படி இழுத்துப் பிடிச்சு விளையாடறதுல உனக்குப் பிரச்னை இல்லைதானே?” என்று கேட்டு வைத்துக் கொண்டார் சிபி. தலைவர் போட்டிக்காக நின்றிருந்த அக்ஷராவின் தலையை சிபி உடைத்ததால், சிபியின் மீது சரியான கோபத்தில் அக்ஷரா இருக்கிறார். ஆச்சா..?

வருணும் அக்ஷராவும் நட்புக்கூட்டணி அமைத்திருப்பது நிரூப்பிற்கும் சிபிக்கும் கண்களை உறுத்துகிறது போல! “கேமுன்னா இழுத்துப் போட்டாக் கூட பிரச்னையில்லன்னு அக்ஷரா சொல்றா” என்று நிரூப்பிடம் சிபி சொல்லியிருக்கலாம். “அப்படின்னா அதே கேமை நாமளும் ஆடுவோம்” என்று நிரூப் திட்டமிட்டிருக்கலாம். அவரின் டார்கெட் வருண் என்பது வெளிப்படை.

பிக் பாஸ் - 38
பிக் பாஸ் - 38

எது எப்படியோ ‘ஆண்கள் அணி மிக ஒற்றுமையாக இருக்கிறது’ என்று எந்த நேரத்தில் கமல் சொன்னாரோ, அதில் திருஷ்டி பட்டு விட்டது. ஆண்களிடையே விரிசல் வந்தால் அதற்கு ஒரு பெண்தான் எப்படியோ காரணமாக இருப்பார் என்பதுதான் வரலாறு.

ஒருவரே ஒரு பொம்மையை தொடர்ந்து எடுத்தால் ஆட்டத்தின் உத்தி எதிராளிக்கு அம்பலமாகி விடும் என்பதால் இதை மாற்றிக் கொள்ள முடிவு செய்தார்கள். அக்ஷரா இதற்காக இசையிடம் கேட்க, “நான் அபினய்யோடு டீலில் இருக்கிறேனே?” என்று தயங்கினார். ‘‘அண்ணாச்சியை நான் காப்பாத்தணும்” என்று ஒப்பந்தத்திற்கு இடம் தராமல் அடம்பிடித்தார் ராஜூ.

அடுத்த சுற்றில் சூடு இன்னமும் அதிகமாகியது. நிரூப் பெயர் உள்ள பொம்மையை வருண் எடுத்துக் கொள்ள, அதை நிரூப் பிடுங்க முயன்றார். இருவரும் குரங்குப்பிடியாக நின்றார்கள். இதற்கிடையில் அக்ஷரா பொம்மை அநாதையாக கீழே கிடக்க, அதை எடுக்க இமான் முயன்றார். “எடுக்காதீங்க அண்ணாச்சி” என்று நிரூப் கத்த, அந்தப் பொம்மையையும் தானே எடுத்துக் கொண்டார் அக்ஷரா. இவர்களை சமாதானப்படுத்த இமான் செய்த முயற்சிகள் நிறைவேறவில்லை. “என்னை ஆட்டத்திலிருந்து வெளியேத்த வருண் முயற்சி பண்றான். நான் கேம்ல இருக்கணும்” என்பது நிரூப்பின் பிடிவாதம். நிரூப்பிடமிருந்த பொம்மையின் தலையைப் பிய்த்து எடுத்தார் வருண்.

பிக் பாஸ் - 38
பிக் பாஸ் - 38

வரூணும் நிரூப்பும் கூடாரத்திற்குள் செல்லாமல் பிடிவாதமாக வெளியே உலாவிக் கொண்டிருக்க அவர்களுக்கு இடையில் வார்த்தைகள் தடித்தன. “நீ உன் பொம்மையை பொம்பளை கிட்ட சேஃபா கொடுத்து வெச்சேல்ல…” என்று வார்த்தையை நிரூப் விட, வருண் மிக உஷ்ணமாகி விட்டார். “வார்த்தைகளை விடாதீங்க. பின்னாடி வருத்தப்படற மாதிரி ஆகிடும்” என்று பிரியங்கா அவ்வப்போது எச்சரித்துக் கொண்டிருந்தது நல்ல விஷயம். “அதெல்லாம் என்ன வேணா ஆகட்டும்” என்று கோபத்தின் உச்சியில் இருந்தார் வருண்.

“ஆட்டத்தை முடிங்கப்பா” என்று அண்ணாச்சி சலித்துக் கொண்டதால் உஷ்ணம் குறையாமல் சமாதானப் பேச்சுகள் ஆரம்பித்தன. ‘வாயை உடைச்சுடுவேன்னு சொன்னேல்ல” என்று நிரூப் கேட்க “ஆமாம். சொன்னேன்” என்று அக்ஷரா மல்லுக்கட்ட, இன்னொரு பக்கம் வருண் ஆவேசமாக கூவிக் கொண்டிருக்க, கூடாரத்திற்குள் சிபியும் வந்தார். சிபியின் வருகை இந்தச் சண்டையில் எக்ஸ்ட்ரா மசாலாவை தூவியது போல் ஆனது. வாக்குவாதத்தின் எரிச்சலில் ஏதோ தவறான வார்த்தையை சிபி சொல்ல, கோபத்தின் உச்சிக்கே சென்றார் அக்ஷரா. சமாதானப் புறாவாக மாறி அவ்வப்போது இவர்களை பிரியங்கா எச்சரித்துக் கொண்டே இருந்தது சிறப்பான தலையீடு.

பிக் பாஸ் - 38
பிக் பாஸ் - 38

முடிவேயில்லாமல் கூடாரத்திற்குள் நிகழ்ந்து கொண்டிருந்த விவாதம் பிக்பாஸிற்கே போர் அடித்ததோ என்னமோ, “எல்லோரும் வெளியே வாங்க” என்று கூப்பிட்டார். பசி பொறுக்க முடியாமல் கிச்சன் ஏரியாவிற்கு பாய்ந்தார் இசை. “யாரும் தங்களோட பொம்மையை எடுக்கக்கூடாதுன்னு சொல்லியும் அதையே செய்யறீங்க... அடுத்த முறை அப்படிச் செய்தா போட்டியில் இருந்து விலக்கப்படுவீங்க” என்று எச்சரித்த பிக்பாஸ், அடுத்து சொன்னதுதான் காமெடியான ட்விஸ்ட். ‘இந்தச் சுற்று ரத்து செய்யப்படுகிறது’. (அடப்பாவி... இதை ரெண்டு மணி நேரம் கழிச்சா சொல்றது?!).

அடுத்த சுற்று ஆரம்பித்தது. இம்முறை இரண்டு பொம்மைகளை தூக்கிக் கொண்டு வந்தார் அக்ஷரா. ஒன்றில் அவர் பெயர் போட்ட பொம்மை இருந்தது. எனவே ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதை அவர் வேண்டுமென்றே செய்தார் என்பது வெளிப்படை. நிரூப்பிடம் இனியும் மல்லுக்கட்ட வேண்டாம் என்று நினைத்தாரோ, என்னவோ.

அடுத்த சுற்றில் வேண்டுமென்றே பின்தங்கி வந்த நிரூப், இமானை திட்டமிட்டு இடித்து நிறுத்தி பின் உள்ளே சென்றார். இதனால் இமான் கடைசியில் நுழைந்த நபராக இருந்தார். அவர் கையில் இருந்தது வருண் பெயர் கொண்ட பொம்மை. சற்று அடாவடியாக ஆடினாலும் இந்த ஆட்டத்தை ராஜதந்திரத்துடன் திறமையாக ஆடினார் நிரூப். வருண் இதனால் அவுட் ஆனார்.

பிக் பாஸ் - 38
பிக் பாஸ் - 38

சபை வாக்குமூலத்தின்போது ‘நிரூப்பின் துரோகத்தினால்தான் நாங்கள் வெளியேறினோம்’ என்று அக்ஷராவும் வருணும் சாட்சியம் சொன்னார்கள். வருண் பிறகு இயல்பாகி விட்டது நல்ல விஷயம். ஆனால் “அக்ஷராகவும் மதுமிதாவும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள்” என்று அவர் சொன்னது பிறகு பிரச்னையாயிற்று. “அது எப்படி நீ ரெண்டு பேர் பேரை சொல்லலாம்?” என்று கிச்சன் ஏரியாவில் பாத்திரத்தோடு சேர்த்து வருணின் தலையையும் அக்ஷரா உருட்ட “ரெண்டு பேர் சொல்லணும்ன்றதுதான் ரூல்” என்று பரிதாபமாக விளக்கம் தந்து கொண்டிருந்தார் வருண்.

அடுத்த சுற்று நல்ல காமெடியாக நடந்து முடிந்தது. பிக்பாஸ் வீட்டில் அதுவரை இருந்த உஷ்ணத்தையும் இறுக்கத்தையும் தனது அபாரமான நகைச்சுவையின் மூலம் தலைகீழாக்கினார் ராஜூ. இதற்கு மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அனைவரும் கூடாரத்திற்குள் ஓடி விட இமான் மட்டும் பொம்மை மாதிரியே ஆடி அசைந்து வந்தார். ஸ்டான்டில் ராஜூவின் பொம்மை மட்டும் அநாதையாகக் கிடந்தது. எனவே ராஜூ அவுட். கவுண்டமணி, செந்திலை முறைத்துப் பார்ப்பது போல் அண்ணாச்சியை பார்த்தார் ராஜூ.

பிறகு ராஜூ அளித்த சபை விளக்கத்தின் போது ஒட்டுமொத்த வீடே உருண்டு புரண்டு சிரித்தது. “ஏண்டா... என்னை எவனுமே காப்பாத்த நினைக்கலையா? பேட் ஃபெல்லோஸ்” என்று அவர் ஜாலியாக ஆதங்கப்பட “உன் பொம்மையைப் பார்த்து அண்ணாச்சி என்ன பண்ணார்?” என்கிற போர்ஷனை மட்டும் திரும்பத் திரும்ப செய்யச் சொல்லி சிரித்தார் பிரியங்கா. “நீ யாரு கூடயும் டீல் போடலை” என்கிற யதார்த்தமான காரணத்தை நிரூப் சொல்ல “டீல் போட்டாத்தானா. உங்களுக்கு பாசமே இல்லையா?” என்று கதறினார் ராஜூ. இமானின் பொம்மையை கடைசி வரை காப்பாற்றிய ராஜூ, இதனால் காண்டாகி “அடுத்த முறை அண்ணாச்சி பொம்மையை பிய்ச்சி எறியப் போறேன்” என்று சபதம் எடுக்க, “அடப்பாவியளா...” என்று சிரித்தார் இமான்.

பிக் பாஸ் - 38
பிக் பாஸ் - 38

அங்கு இருப்பதிலேயே அழகான பொம்மையான பாவனிக்கு பிறந்தநாள். (என்னாது.. அளகான பொம்மையா? என்னா தம்பி, ரூட் மாறுது?!). எனவே மக்கள் வீட்டிற்குள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். பாவனியின் வீட்டிலிருந்தும் வீடியோ வாழ்த்து வந்தது. “நல்லா விளையாடறே. உனக்காக விளையாடு” என்கிற அறிவுரையும் அந்த வாழ்த்தில் கலந்து இருந்தது. சுருதிக்கு உதவப் போய் பாவனி தனது பெயரை கெடுத்துக் கொண்டதால் வந்த அறிவுரை போல.

போட்டியாளர்கள் மட்டுமல்ல, பிக் பாஸ் என்னும் இறைவனின் விளையாட்டில் நாம் அனைவரும் பொம்மைகள்தான் என்கிற நிதர்சனத்தை உணர்ந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே!