Published:Updated:

பிக் பாஸ் - 39: மெகா சைஸ் பொம்மை பிரியங்கா... ரத்தபூமியில் ஒரு எல்.கே.ஜி குழந்தை யார் தெரியுமா?

பிக் பாஸ் - 39

அடுத்து வந்தார் ராஜூ. வீடே ஒரு பெரிய என்டர்டெயின்மென்ட்டிற்காக காத்துக் கொண்டிருந்தது. ராஜூ அவர்களை ஏமாற்றவில்லை.

பிக் பாஸ் - 39: மெகா சைஸ் பொம்மை பிரியங்கா... ரத்தபூமியில் ஒரு எல்.கே.ஜி குழந்தை யார் தெரியுமா?

அடுத்து வந்தார் ராஜூ. வீடே ஒரு பெரிய என்டர்டெயின்மென்ட்டிற்காக காத்துக் கொண்டிருந்தது. ராஜூ அவர்களை ஏமாற்றவில்லை.

Published:Updated:
பிக் பாஸ் - 39

‘பொம்மை விளையாட்டு’ நேற்றைய பிக் பாஸ் எபிசோடிலும் தொடர்ந்தது. செவ்வாய்க்கிழமை போல அடிதடி இல்லாமல், உத்திகளைக் கையாண்டு விளையாடியதுதான் நேற்றைய சுவாரஸ்யம். இதையே அன்றும் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

'யார் இந்த வீட்டில் சுயபுத்தியோடு செயல்படுவது, யார் அப்படி இல்லாமல் செயல்படுவது’ என்றொரு உள்குத்து டாஸ்க்கை பிக் பாஸ் தந்தார். இதில் ராஜூ பேசியதை மட்டும் கவனித்துப் பாருங்கள். மற்றவர்கள் பேசிய அதே விஷயத்தைத்தான் இவரும் பேசினார். சில விஷயங்களை மற்றவர்களைவிட அழுத்தமாகக்கூட பேசினார். ஆனால் மற்றவர்களுக்கு எழுந்த எதிர்ப்பு இவருக்குத் துளி கூட வரவில்லை. மாறாக மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இதுதான் நகைச்சுவை + புத்திக்கூர்மையின் வலிமை. எத்தனை கசப்பான கருத்துகளையும் நகைச்சுவை என்னும் இனிப்பு தடவி தந்து விட முடியும். ராஜூ குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் ஏறத்தாழ உண்மை. அத்தனை துல்லியமான அவதானிப்பு.

பிக் பாஸ் - 39
பிக் பாஸ் - 39

எபிசோட் 39-ல் என்ன நடந்தது?

‘மெர்சல் அரசன்’ பாட்டோடு பொழுது விடிந்தது. கார்டனில் முதல் ஆளாக துள்ளலுடன் ஆடத் துவங்கிய ஐக்கியைப் பார்த்தால் ஓவியாவின் நினைவு வருகிறது. (மறக்க மனம் கூடுதில்லையே!). ஓவியாவின் பத்து சதவீத நகலைப் போல இருக்கிறார் ஐக்கி. “ஒவ்வொண்ணுக்கும் பெல் அடிச்சுதான் சொல்லணுமா?” என்று சலித்துக் கொண்டார் இமான். பெல் அடிப்பதற்கே இவர் இப்படிச் சலித்துக் கொண்டால் பலருக்கும் சர்வ் செய்கிற இசையின் கதியை இவர் நினைத்துப் பார்க்க வேண்டாமா? இசையிடம் ஏன் இவருக்கு இத்தனை ஓரவஞ்சனை?

பிக் பாஸ் - 39
பிக் பாஸ் - 39

இசையை கன்பெஃஷன் ரூமிற்கு அழைத்த பிக்பாஸ், “பலருக்கு நீங்கள் சர்வ் செய்தது போல் தெரியவில்லை. நாணயத்தைப் பயன்படுத்தி ஒருவரின் தலைவர் பதவியைப் பறித்த நீங்கள், அதற்கான வேலை ஒழுங்காக செய்தாக வேண்டும்” என்று கடுமையான உத்தரவு போட்டார். அந்த அனல் மாறாமல் வெளியே வந்த இசை, கறார் உத்தரவுகளைப் பிறப்பித்தது சிறப்பான காட்சி. ஆனால் அவர் தனது உத்தரவுகளைச் சொல்லும்போது சற்று இனிமையைக் கலந்து கொண்டால் யாருக்கும் உறுத்தாது. மாறாக, ‘செய்யலைன்னா அவ்ளோதான்’ என்று சொல்வது மற்றவர்களுக்கு நெருடலாகத் தெரியலாம்.

பொம்மை ஆட்டம் துவங்கியது. ஐக்கியிடம் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டார் நிரூப். பஸ்ஸர் சத்தம் வர, அனைவரும் ஓடி குளறுபடியாக பொம்மைகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று விட, நால்வர் மட்டும் வெளியே நின்றனர். கடைசியாக பொம்மையை எடுத்த இசையின் கையில் இமானின் பெயர் இருந்தது. எனவே அவர் வெளியே நின்றார். அபினய்யின் பொம்மையைத் திட்டமிட்டு எடுத்துக் கொண்டார் நிரூப். அபினய்யை தோற்கடிப்பது நிரூப்பின் நோக்கம். இது மட்டுமல்லாமல் அவர் ஒப்பந்தம் செய்து கொண்ட ஐக்கியின் பொம்மை அண்ணாச்சியிடம் இருந்தது. அதனாலும் நிரூப் உள்ளே போக முடியாது. நிரூப்பிற்கு செக் வைப்பதற்காக அபினய்யும், இசையைப் பழிவாங்குவதற்காக அண்ணாச்சியும் உள்ளே செல்லவில்லை. (ஒருமாதிரி குத்துமதிப்பா புரிஞ்சுக்கங்க!).

பிக் பாஸ் - 39
பிக் பாஸ் - 39
இதற்கிடையில் அபினய் ஆம்லெட் போட்டு கூடாரத்திற்குள் எடுத்துச் செல்ல, “நான்தான் சர்வ் பண்ணணும். உங்க இஷ்டத்திற்கு பண்ணாதீங்க” என்று ஆட்சேபித்தார் இசை. “டாஸ்க்கின் போது வேலை செய்ய வேண்டாம். ஆனால் முடிஞ்சப்புறம் செய்யணும்” என்பதுதான் பிக் பாஸின் உத்தரவு. எனில் டாஸ்க் நேரத்திலும் இசை ஏன் வேலை செய்ய விரும்புகிறார் என்று தெரியவில்லை. இசையால் பிக் பாஸ் சொல்வதை சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லையா, அல்லது தன் அதிகாரத்தை அவசியமற்ற வேளையிலும் நிரூபிக்க விரும்புகிறாரா என்று தெரியவில்லை.

“பசிக்குது. சீக்கிரம் வந்து தொலைங்கப்பா” என்று கூடாரத்தில் உள்ளவர்கள் அலுத்துக் கொள்ள “நீங்க வாங்க. போகலாம்” என்று அபினய்யை அழைத்துக் கொண்டு அண்ணாச்சி கூடாரத்தின் உள்ளே செல்ல, நிரூப்பும் அவரைப் பின்தொடர்ந்தார். ஆக கடைசி வரை உள்ளே போகாத இசையின் கையில் இமானின் பொம்மை இருந்ததால் அவர் அவுட்.

பிக் பாஸ் - 39
பிக் பாஸ் - 39

இதற்கான சபை விளக்கத்தின் போது “நீதானே என் முதுகில் குத்தினே. நான் ஜெயிக்கக்கூடாதுன்னுதானே வெளில நின்னே?” என்று இமான் இசையிடம் கேட்க, இருவருக்கு இடையிலும் சிறிய முட்டல் ஏற்பட்டது. “நான் முதுகுல குத்த மாட்டேன். நேராவே குத்துவேன். அபினய் கைல என் பொம்மை இருந்ததால நான் நின்னேன்” என்றார் இசை. “உங்க ரெண்டு பேருக்கும்தான் ஆகாதுன்னு ஊருக்கே தெரியுமேப்பா” என்று பஞ்சாயத்துப் பெரியவர் மாதிரி ராஜூ இதில் தலையிட “அண்ணாச்சியை எனக்குப் பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா? ஏன் தேவையில்லாம பேசறீங்க” என்று தடுப்பாட்டம் ஆடினார் இசை. “எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் ராஜூ, நிரூப், சிபி. முதுகில் குத்தியவர்கள் அபினய் மற்றும் இசை” என்று சபை விளக்கம் அளித்து பிரச்னையைத் தீர்த்தார் அண்ணாச்சி.

அடுத்த சுற்றிற்காக ஓடும் போது பர்த்டே பேபியான பாவனி கால் தடுக்கி கீழே விழுந்தார். (பாவனி ஆர்மியில் பலருக்கு இதயம் ஒரு கணம் நின்று பிறகு துடித்திருக்கும்!) பாவனி கையில் மதுமிதா பொம்மையை வைத்திருந்ததால் மதுமிதா அவுட் ஆனார். மதுமிதாவோ இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் “நீ நல்லா ஓடினதானே...” என்று சிரித்துக் கொண்டே இருந்தார். (ரத்தபூமியில் ஒரு எல்.கே.ஜி குழந்தை!)
பிக் பாஸ் - 39
பிக் பாஸ் - 39
“என்கிட்ட ஏண்டா எவனுமே டீல் போட மாட்றீங்க. என்னைப் பார்த்தா ஏப்பை சாப்பையா இருக்கா. நல்லா ஓடுவியா–ன்னு எதுக்கு கேக்கறீங்க?” என்று நிரூப்பிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார் தாமரை. “இதென்னடா வம்பா போச்சு. இந்த கேமிற்கு நல்லா ஓடித்தானே ஆகணும்” என்று நிரூப் கேட்க, தாமரையால் அதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. நூறு நாள் முடிந்தபிறகும் தாமரையால் இந்த விளையாட்டைப் புரிந்துகொள்ள முடியாது போலிருக்கிறது.

பொம்மைகள் வைக்கப்பட்ட இடத்தில் பிரியங்காவும் ஒரு மெகா சைஸ் பொம்மையாக வந்து அமர்ந்தது ஜாலியான குறும்பு. “உன்னையெல்லாம் தூக்கிட்டு ஓட முடியாது” என்று யாரோ சொன்னார்கள். இது பிக் பாஸ் காதில் விழாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த டாஸ்க்கில் இதையே விளையாட்டாக மாற்றி விடுவார்.

பிக் பாஸ் - 39
பிக் பாஸ் - 39

அடுத்த சுற்றில் இசை கடைசியாக வந்ததால் அபினய் அவுட் ஆனார். “போச்சா சோனா முத்தா...” என்று உற்சாகமடைந்தார் இமான். நிரூப்பின் ராஜதந்திரம் வெற்றி பெற்றது. அடுத்த சுற்றில் ஓடும்போது தாமரையை இடித்துக் கொண்டு இசை ஓடியதால் தாமரை தடுமாறி கடைசியாக கூடாரத்திற்குள் நுழைய வேண்டியிருந்தது. தாமரை கையில் பாவனியின் பொம்மை இருந்ததால் பாவனி அவுட் ஆனார். பர்த்டே பேபிக்கு பரிசளிப்பதாக போடப்பட்ட திட்டம் ‘பணால்’ ஆனது.

இதற்கான சபை விளக்கம் அளிக்கும்போது “தாமரை எனக்கு ஹெல்ப் பண்ணாங்க. ஆனா அவங்க தடுமாறி விழுந்துட்டாங்க... அதுக்கு என்ன சொல்வாங்க... முதுகுல குத்தறதா..?” என்று வார்த்தைகள் வராதது போல் தடுமாறினார் பவானி. “முதுகில் குத்துதல்" என்கிற வார்த்தைகளை வெளிப்படையாக சொல்லாமல் பாவனி தவிர்க்க முயல்கிறார் என்று புரிகிறது.

அடுத்த சுற்றிலும் மீண்டும் இசைக்கும் தாமரைக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட, தாமரை காலில் அடிபட்டு கடைசியில் வர வேண்டியதாயிற்று. ‘என்னை ஏன் ஆட்டத்துல சேத்துக்க மாட்றீங்க?’ என்று ஆதங்கப்பட்ட தாமரைக்கு இப்போதாவது புரிந்திருக்க வேண்டும். மாறாக “ஏன் பிள்ள தள்ளிட்டு ஓடின?” என்று இசையின் கையில் சுளீர் என்று அடித்தார். ஆனால் தாமரை கடைசியாக வந்ததால் அவுட் ஆனது என்னமோ இசைதான். “என்னை யாரும் முதுகில் குத்தலை” என்று சபையில் மென்று விழுங்கினார் இசை.

பிக் பாஸ் - 39
பிக் பாஸ் - 39
‘பொம்மை’ டாஸ்க்கை அந்தரத்தில் அப்படியே நிறுத்திய பிக் பாஸ், இதன் இரண்டாம் பாகத்திற்கு நகர்ந்தார். ‘இந்த வீட்டில் யார் சுயபுத்தியுடன் ஆட்டத்தை ஆடுகிறார்கள், யார் சுயபுத்தியைப் பயன்படுத்தாமல் மற்றவர்களின் கைப்பாவையாக இருக்கிறார்கள்’ என்பதை ஒவ்வொருவரும் விளக்க வேண்டுமாம். லிவ்விங் ஏரியாவில் இந்த உரையாடல் நடைபெற வேண்டுமாம். (அது அவுட்டோர் கேம். இது இன்டோர் கேம்).

முதலில் எழுந்த இமான் விளக்கம் அளிக்கத் துவங்கினார். ‘‘பிரியங்கா 75 சதவிகிதம் சுயபுத்தியுடனும் 25 சதவிகிதம் மற்றவர்களின் உதவியுடனும் ஆடுகிறார். அக்ஷராவால் பார்ட்னர் இல்லாமல் ஆடவே முடியாது. வருண், ராஜூவை சேர்த்துக் கொள்கிறார். இசை தன் சொந்த மூளையை மட்டுமே பயன்படுத்துகிறார். நிரூப் நூறு சதவீதம் தன் சொந்த மூளையை மட்டுமே பயன்படுத்தி ஆடுகிறார். ஆனால் திடீரென்று ஏதோ ஆவி அவருக்குள் புகுந்து விடுவதால் குழப்பமாகி விடுகிறது. பாவனியின் கட்டடத்தில் ஒரு செங்கல் விழுந்து விட்டது (சுருதி). அவரும் மற்றவர்களின் உதவியுடன்தான் ஆடுகிறார்” என்று கலவையாக இமான் சொன்னதில் பெரும்பாலும் உண்மை இருந்தது.

பிக் பாஸ் - 39
பிக் பாஸ் - 39
அடுத்து வந்தார் ராஜூ. வீடே ஒரு பெரிய என்டர்டெயின்மென்ட்டிற்காக காத்துக் கொண்டிருந்தது. ராஜூ அவர்களை ஏமாற்றவில்லை. ஒவ்வொரு பொம்மையையும் எடுத்துக் கொண்டு ‘‘இது எப்படி வேலை செய்யும்னா சார்..." என்று விற்பனையாளரைப் போல் அவர் அலசி ஆராய்ந்து பிரித்து மேய்ந்தது அசத்தல். ஒட்டுமொத்த வீடும் உருண்டு புரண்டு சிரித்தது.

இசை எழுந்து, “ராஜூவின் கைப்பாவையாக தாமரை இருக்கிறார்” என்று ஆரம்பித்தவுடன் சர்ச்சை எழுந்தது. ராஜூ எரிச்சலுடன் இதற்கு விளக்கம் அளிக்க ஆரம்பிக்க “அவளைப் பேச விடுங்களேன். நீங்க பேசும்போது எல்லோரும் கேட்டாங்க இல்ல” என்று இடைமறித்தார் பிரியங்கா. “நிரூப்பின் கைப்பாவையாக ஐக்கி இருக்கிறார்” என்று இசை மீண்டும் பேச ஆரம்பிக்க, “அப்ப நீ அபினய்யோட கைப்பாவையா?” என்று இடைமறித்தார் நிரூப். இதனால் அபினய்க்கும் நிரூப்பிற்கும் இடையில் வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தன. அண்ணாச்சி சொல்வது போல் நிரூப்புக்குள் அவ்வப்போது ஓர் ஆவேச ஆவி புகுந்து விடுகிறது. ஐக்கியிடம் நிரூப் டீல் போட்டுக் கொண்டது உண்மைதானே! எனில் ஏன் அவர் கோபப்பட வேண்டும்?

பிக் பாஸ் - 39
பிக் பாஸ் - 39

பிரியங்காவின் முறை வரும்போது, “இந்த வீட்டிலேயே எனக்குப் பிடிச்ச பொம்மை நிரூப்தான். அவன் என் தம்பி மாதிரி. ஆனா என்னைக் கொலை பண்ணக்கூட தயங்க மாட்டான். இருந்தாலும் நான் அவனை முழுசா நம்புவேன்” என்ற சென்டிமென்டாகப் பேசினார். “எதுவா இருந்தாலும் பணிவா சொல்லு” என்று இசைக்கு அவர் தந்த டிப்ஸ் நன்று. இப்படி வெளிப்படையாக கருத்துகளை சொல்ல வைத்து, போட்டியாளர்களுக்குள் புகைச்சலை அதிகரிக்க வைப்பதுதான் பிக் பாஸின் பிளான். இது நல்லபடியாகவே நடந்து முடிந்தது.

பிக் பாஸ் - 39
பிக் பாஸ் - 39

“தாமரையால சரியா பண்ண முடியல. நான் நிரூப்பை என் உதவியாளராக வைத்துக் கொள்ளட்டுமா?” என்று பிக் பாஸிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார் பாவனி. இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தவர்களுக்காக குச்சி ஐஸ் பரிசாக வந்தது.

‘நீயும் பொம்மை... நானும் பொம்மை... நெனச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை…’ இதுதான் பாடகர் ஜேசுதாஸ் தமிழ் சினிமாவில் பாடிய முதல் பாடல். பிக் பாஸ் வீட்டை நாம் வாழும் உலகமாகக் கற்பனை செய்து கொண்டால் இந்தப் பாடலின் பொருள் தெளிவாக விளங்கும்.