Published:Updated:

பிக் பாஸ் - 40: பாவனி கொடுத்த தண்டனை… மதிக்காத அந்நியன் நிரூப்!

பிக் பாஸ் - 40

"நைட்டு யாருக்கும் தெரியாம தருவான்” என்று அட்வான்ஸ் புக்கிங் செய்தார் பிரியங்கா. “ஒன்றரை கிலோ சிக்கனை ஒரே ஆளா திம்பியா?” என்று ஜாலியாக வயிற்றெரிச்சல் பட்டுக் கொண்டிருந்தார் ராஜூ.

பிக் பாஸ் - 40: பாவனி கொடுத்த தண்டனை… மதிக்காத அந்நியன் நிரூப்!

"நைட்டு யாருக்கும் தெரியாம தருவான்” என்று அட்வான்ஸ் புக்கிங் செய்தார் பிரியங்கா. “ஒன்றரை கிலோ சிக்கனை ஒரே ஆளா திம்பியா?” என்று ஜாலியாக வயிற்றெரிச்சல் பட்டுக் கொண்டிருந்தார் ராஜூ.

Published:Updated:
பிக் பாஸ் - 40
பிக்பாஸின் நாற்பதாவது நாளை ‘பாவனியின் நாள்’ எனலாம். அந்த அளவிற்கு அவர் தனது ஆளுமையை நிரூபிக்க சிறப்பாக மன்றாடிக் கொண்டிருந்தார். ஒரு நிறுவனத்தில் பத்து சிறந்த பணியாளர்கள் இருந்தாலும், சண்டி மாடு மாதிரி ஒரேயொரு மோசமான பணியாளர் இருந்தால் போதும்… சூழலையே கெடுத்து விடுவார். நிரூப் இதைத்தான் செய்து கொண்டிருந்தார்.

‘பெண்களின் தலைமையை இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்’ என்கிற சரியான பாயிண்ட்டை பாவனி சொன்னது நிதர்சனமான உண்மை. பாவனியாவது தன் ஆளுமையை பதிவு செய்வதற்கு தொடர்ந்து போராடுகிறார். ஆனால் பிக் பாஸ் அறிவுறுத்தியும் இசை தனது தலைவர் பதவியை சிறப்பாகப் பயன்படுத்துவது போல் தெரியவில்லை. கமல் பரிந்துரைத்த ‘அதிகாரப் பரவல்’ என்பதையெல்லாம் காற்றில் விட்டு விட்டார்கள்.

பிக் பாஸ் - 40
பிக் பாஸ் - 40

எபிசோட் 40-ல் என்ன நடந்தது?

நாள் முழுவதும் வார்த்தைப் போர் நிகழப் போகிறது என்பதை குறிக்கும் வகையில் ‘டமாலு டுமீலு’ பாடலை காலையிலேயே ஒலிக்க விட்டார் பிக் பாஸ். ‘Am waiting’ என்று பாடல் முடியும் இடத்தில் பாவனியின் சிம்மாசனத்தைக் காட்டியது நல்ல குறியீடு.

அது எந்த விதியாக இருந்தாலும் அண்ணாச்சி காற்றில் பறக்க விட்டு விடுவார். அதற்குத் தனது வயதை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். பாவனி சொன்னது போல் ‘பெண்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமா?’ என்கிற பழமைவாத மனம் அவரிடம் உறைந்திருக்கிறது. கமல் தலையிட்டும் அண்ணாச்சி மாறவில்லை. அவர் லிவ்விங் ஏரியாவில் உலவும் போது ‘பாவனி கிட்ட பர்மிஷன் வாங்கிட்டிங்களா?” என்று தாமரை கேட்க, காதில் வாங்காதது போல் அலட்டலாகச் சென்று விட்டார்.

பிக் பாஸ் - 40
பிக் பாஸ் - 40

அக்ஷரா விதிமீறும்போது “சிபி... அக்ஷராவிற்கு டாஸ்க் கொடு’ என்று சிபிக்கு கட்டளை போட்டது பாவனியின் அநியாய குறும்பு. இருவருக்கும் ஆகாது என்று தெரிந்தே இந்த வம்பை அவர் ஏன் செய்ய வேண்டும்? “நீ நேரடியா சொன்னா செய்வேன். அவன் சொன்னா செய்ய மாட்டேன்” என்று அக்ஷரா முரண்டு பிடித்தார். “இனிமே தாமரையைக் கேட்டுத்தான் இந்த ஏரியால காலடி எடுத்து வைக்கணும்” என்று சாமர்த்திய ஆட்டம் ஆட பாவனி முயன்றாலும் அது பெரிதும் பலிக்கவில்லை. “நீ சொல்லியே கேட்க மாட்டோம். தாமரை சொன்னா கேப்பமா?” என்கிற ரேஞ்சிற்கு மக்கள் அழும்பு செய்து கொண்டிருந்தனர்.

லிவ்விங் ஏரியாவின் விளிம்பில் நின்றபடி நிரூப், ஐக்கி, இமான் ஆகியோர் ஒருவரையொருவர் உள்ளே தள்ளிக் கொண்டு விளையாடினர். இதைப் பார்த்த வருண் “இன்னிக்கு பத்திக்கும்னு தோணுது” என்று வரப்போகிற சண்டையை சரியாக யூகித்துக் கொண்டிருந்தார். மதுமிதா விதிமீறலைச் செய்ய, “உனக்கு தண்டனை இருக்கு” என்று பாவனி சொல்ல, “அய்யோ… ரெஸ்ட் ரூம் போகணும்” என்று அவர் ஓடி விட்டார்.

பிக் பாஸ் - 40
பிக் பாஸ் - 40
நிரூப் விதிமீறலைச் செய்ய ‘40 squads எடுக்க வேண்டும்’ என்று பாவனி தண்டனை அளித்தார். ஒரு சிறிய வாக்குவாதத்திற்குப் பிறகு அதைச் செய்து முடித்தார் நிரூப் (முடித்தாரா?!). தன் தண்டனையை முடித்த பிறகு அவர் மீண்டும் ஜாலியாக அங்கு உலவ “தண்டனை முடிஞ்சப்புறம் இங்க ப்ரீயா போலாமா? அப்ப நானும் செய்யறேன்” என்று அபினய் கேட்க, கலகம் ஆரம்பமானது.
டிராஃபிக் விதிமீறல் தொடர்பாக நம் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. ஒருவர் விதியை மீறி அபராதம் கட்டி விட்டால், அந்த நாள் முழுவதும் அந்த ரசீதை வைத்தே அதகளம் செய்து கொண்டிருப்பார். ஆட்டோக்காரர்களிடம் இந்த வழக்கம் பொதுவாக உள்ளது.அதைப் போல அழிச்சாட்டியம் செய்தார் நிரூப்.
பிக் பாஸ் - 40
பிக் பாஸ் - 40

“நீங்கள் விதிமீறலை நிகழ்த்தும் ஒவ்வொரு முறையும் நான் டாஸ்க் தருவேன். தண்டனை என்பது வேறு. அது ஒட்டுமொத்த நாளில் ஒருவரின் நடவடிக்கையை வைத்து தரப்படுவது” என்று பாவனி சொன்னாலும், அது புரியாதது போலவே மல்லுக்கட்டினார் நிரூப். “இப்ப தரப்படுகிற டாஸ்க்கை செய்து விட்டால் இரவு தண்டனை கூடாது” என்று ராவடி செய்தார். ‘அட்வான்ஸ் புக்கிங்’கில் பெண்களை இழிவு செய்யும் மைனர் குஞ்சுவின் காமெடி போல நிரூப்பின் அலப்பறை இருந்தது.

பிரியங்காவின் க்ருப்பில் இருந்தபோது சாதாரணமாக ஒரு மூலையில் இருந்த நிரூப், அங்கிருந்து புத்திசாலித்தனமாக வெளியேறியதால் நாளுக்குள் நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறார். இதுதான் இவரது உத்தி போலிருக்கிறது. ஆனால் அபிஷேக் அளவிற்கு ஓவர் அநியாயம் செய்யாமல் பல சமயங்களில் நல்லவராகவும் இருக்கிறார். இமான் அண்ணாச்சி சொன்னது போல் சமயங்களில் ஏதோ ஒரு கெட்ட ஆவி புகுந்து விடும் போது மட்டும் நிரூப் அந்நியனாக மாறி விடுகிறார்.

பிக் பாஸ் - 40
பிக் பாஸ் - 40
“உங்க ஆளுமை இருந்த காலத்துல எவ்வளவோ டாஸ்க் கொடுத்தீங்க. நாங்க அதைச் செஞ்சோம்” என்று பாவனி ஞாபகப்படுத்தினாலும் அது நிரூப்பின் காதுகளில் விழவில்லை. “மதுமிதாவிற்கு மட்டும் தண்டனை அப்புறம் கொடுப்பீங்க. நான் மட்டும் இப்போதே செய்யணுமா?” என்று மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.

பாவனிக்கு ஆதரவாக பிரியங்காவும் களத்தில் குதிக்க, சூழல் இன்னும் ரணகளமானது. நிரூப்பும் பிரியங்காவும் ‘அக்னி நட்சத்திரம்’ கார்த்திக் - பிரபு போல உக்கிரமாக மோதிக் கொண்டார்கள். ஆனால் கிளைமாக்ஸில் எப்படியும் ராசியாகி விடுவார்கள் என்பதை முன்பே யூகிக்க முடிகிறது. இப்போது மதுமிதா திரும்பி வந்து தனக்கான தண்டனையை சிரத்தையாக செய்து கொண்டிருந்தார்.

பிக் பாஸ் - 40
பிக் பாஸ் - 40

அக்ஷரா இப்போது விதிமீறலை நிகழ்த்தியதால் “அக்ஷரா, உங்களுக்கும் தண்டனை இருக்கு” என்று வார்னிங் நோட்டீஸ் கொடுத்தார் பாவனி. ‘‘அய்யோ… கடவுளே!” என்று தலையில் கைவைத்துக் கொண்டு பெட்ரூம் ஏரியாவிலேயே நெடுநேரம் பொழுதைக் கழித்தார் அக்ஷரா. நிதானமாக ஒப்பனை செய்துகொண்டு வந்தால், அதற்குள் பாவனி சலித்துப் போய் சென்று விடலாம் என்பது அவர் கணக்கு. ஆனால் பிடிவாதமான காவல்அதிகாரி போல அங்கேயே நின்று கொண்டிருந்தார் பாவனி.

வேறு வழியின்றி அக்ஷரா வெளியில் வர, “நான் ரூல்ஸ் பிரேக் பண்ண மாட்டேன் என்று சத்தமாகச் சொன்னபடி, காதைப் பிடித்துக் கொண்டே ஹாலை 50 முறை சுற்றி வர வேண்டும்’’ என்ற தண்டனையை பாவனி அளித்தார். தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே சுற்றி வந்தார் அக்ஷரா. ஒரு கட்டத்தில் காதையும் அவர் பிடிக்கவில்லை. “நான் என்ன சொன்னேன்... நீ என்ன செய்யறே?” என்று பாவனி கேள்வி கேட்க “ஒரு தடவை சொல்லிட்டல்ல…. சும்மா சும்மா சொல்லாத. அதோ அங்க ஒருத்தன் நீ சொல்றதை செய்யாம கலாட்டா பண்றான். அவனைச் சமாளிக்கற வழியைப் பாரு’’ என்று அக்ஷரா ஒப்பிடலைச் செய்தது முறையற்ற காரியம். ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கே கூட இன்னொரு பெண்ணின் தலைமையை ஏற்பதில் சில மனத்தடைகள் இருக்கின்றன.

பிக் பாஸ் - 40
பிக் பாஸ் - 40

நிரூப், அக்ஷரா இருவரிடமும் மல்லுக்கட்டி சோர்ந்து போன பாவனி, ‘நல்லாப் பண்றீங்கடா… சூப்பரா இருக்கு” என்று கைத்தட்டியது சிறந்த காட்சி. நமக்கே அப்படித்தான் தோன்றியது. ஆனால் “டாஸ்க் வேற. தண்டனை வேற” என்று முன்னர் தாமரைக்கு அறிவுறுத்திய பாவனி, தானும் அதைப் பின்பற்றியிருக்கலாமோ? 50 முறை ஹாலைச் சுற்றி வரச் செய்வதெல்லாம் சற்று அதிகப்படியான தண்டனை இல்லையா? மக்கள் வெறுப்பேற்றியதால் காண்டாகி விட்டாரோ, என்னவோ!

ஒரு சமூகத்தின் பொதுநன்மைக்காகத்தான் விதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றைப் பின்பற்றுவதில் நாமே பல சுணக்கங்களையும் மீறல்களையும் செய்கிறோம். மகாநதி திரைப்படத்தில் கமல் ஒரு காட்சியில் சொல்வது போல “இவ்வளவு சாக்கடையா இருக்கு. நானும் கொஞ்சம் சிறுநீர் கழித்தால் என்ன தப்பு?” என்று பலரும் நினைப்பதால் ஊரே கூவமாகி விடுகிறது.

பிக் பாஸ் - 40
பிக் பாஸ் - 40

தலைவராக நியமிக்கப்பட்டவருக்கு நிர்வாகம் சீராக செயல்படுவதற்கான விதிகளை உருவாக்குவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. இதை அவருடன் சேர்ந்து செயல்படுகிறவர்கள் உணர்ந்து, அவர் சொல்வதைப் பின்பற்றுவது அவசியம். தலைமைக்கு அடிபணிந்து செயல்படுபவனால் மட்டுமே வருங்காலத்தில் சிறந்த தலைவனாக மாற முடியும். அதே சமயத்தில் அந்தத் தலைமை நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் செயல்படுகிறதா என்பதும் முக்கியம்.

“அதாவது மேடம்... நிரூப் இப்படி முனைல இருந்து கீழே இறங்கிட்டாரு” என்று பிரியங்கா டெமோ காட்ட முயல, அவரும் தண்டனையை ஏற்க வேண்டியதாயிற்று. இவ்வளவு நேரம் பாவனிக்காக பரிந்து பேசியதால், அதை உடனே ஏற்றுக் கொண்டார் பிரியங்கா. நிரூப்பைப் போலவே பிரியங்காவிடமும் எப்போது அம்பி இருப்பார், எப்போது அந்நியன் இருப்பார் என்பதைச் சொல்ல முடியவில்லை.

பிக் பாஸ் - 40
பிக் பாஸ் - 40

‘எவ்வளவு நேரம்தான் பாவனி போடும் சண்டையை வைத்தே ஃபுட்டேஜ் தேற்றுவது?’ என்கிற சலிப்பு பிக்பாஸிற்கே வந்து விட, ‘பொம்மை டாஸ்க்கை’ தூசு தட்டி எழுப்பினார். அதற்கான பஸ்ஸர் ஒலிக்க, “டேய் இருடா… இருடா… அக்கா ஓடிக்கறேண்டா” என்று தாமரை கெஞ்சியதால் நிரூப் விட்டுத்தந்தார். கூடாரத்திற்குள் நிரூப் கடைசியாகச் செல்ல, அவர் வைத்திருந்த தாமரை பொம்மை அவுட் ஆகியது.

கடைசியாக மிஞ்சியிருந்த நிரூப்பும் ஐக்கியும் ‘யார் ஜெயிப்பது’ என்று மும்முரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருக்க, இதைக் காதில் புகையுடன் கவனித்துக் கொண்டிருந்தார் பிரியங்கா. பஸ்ஸர் ஒலித்ததும் ஐக்கி சிறப்பாக ஓடி கூடாரத்திற்குள் செல்ல, என்னதான் துரத்தியும் நிரூப் பின்தங்கினார். ஆக, ஐக்கியின் உதவியால் இந்த டாஸ்க்கில் நிரூப் வென்றார். ஐக்கி போட்டியில் வென்றாலும் அந்த வெற்றியின் பயன்கள் நிரூப்பிற்கே சென்று சேரும் என்பதுதான் கான்செப்ட்.

பிக் பாஸ் - 40
பிக் பாஸ் - 40
லக்ஸரி பட்ஜெட் என்பது நிரூப்பிற்கு மட்டும்தானாம். அவர் தனது வெகுமதியை எவருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாதாம். “அதெல்லாம் அவன் நல்ல பையன். நைட்டு யாருக்கும் தெரியாம தருவான்” என்று அட்வான்ஸ் புக்கிங் செய்தார் பிரியங்கா. “ஒன்றரை கிலோ சிக்கனை ஒரே ஆளா திம்பியா?” என்று ஜாலியாக வயிற்றெரிச்சல் பட்டுக் கொண்டிருந்தார் ராஜூ.

நிரூப் - ஐக்கி என்கிற புதிய வெற்றிக்கூட்டணி உருவாகியதால், பிரியங்கா பொறாமையில் இருக்கிறாராம். இதை அவர் வெளிப்படையாக கண்களை உருட்டி உருட்டி காமெடியாக சொல்லும் போதே அதில் சிறிதுதான் உண்மை இருக்கிறது என்பது புரிந்து விட்டது. உண்மையான பொறாமை என்பது வெளியில் காட்டப்படாது. “நான் இன்னிக்கு சாப்பிடப் போறதில்லை” என்று வீர சபதம் செய்த பிரியங்கா, பிறகு “கனவுலதான் சாப்பிட மாட்டேன்னு சொன்னேன்” என்றது நல்ல காமெடி.

பிக் பாஸ் - 40
பிக் பாஸ் - 40
‘Best Player’, ‘Best Entertainer’, ‘Best Dressed’ ஆகிய மூன்று பிரதான பிரிவுகளில் போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவை பிக் பாஸ் ஏற்பாடு செய்தார். இதற்காக ஆக்டிவிட்டி ஏரியாவில் ஒவ்வொருவரின் கட்அவுட் வைத்து எல்ஈடி விளக்குகள் பளீரிட ஏற்பாடுகள் பலமாக இருந்தன. இதற்காக ரகசிய வாக்கெடுப்புகளும் நடந்தன.
பிக் பாஸ் - 40
பிக் பாஸ் - 40

விருது விழாவிற்காக வார்ம் அப் துவங்கியது. ஒவ்வொரு விருந்தினரையும் வரவேற்கும் பொறுப்பு பிரியங்காவிற்கு அளிக்கப்பட்டது. ஒரு தொகுப்பாளராக பிரியங்கா நெடிய அனுபவம் பெற்றவர். சூழலை கலகலப்பாகவும் உயிர்ப்பாகவும் மாற்றும் திறமை அவருக்கு உண்டு. (அந்த Sound pollution தவிர்த்து). ஆனால் பிக் பாஸ் வீட்டிலும் இதே பிரியங்காவை நாம் பார்க்க வேண்டுமா? வேறு யாருக்காவது இந்தப் பொறுப்பை பிக் பாஸ் அளித்து, அவரிடமுள்ள திறமையை வெளிக்கொணர முயற்சி செய்யலாம்.

‘இளம் அரசியல் தலைவரான’ இமான் முதலில் வந்தார் “Best..’’ என்பதற்குப் பிறகு என்ன சொல்வதென்று தெரியாமல் “ஹெஹெஹெ..’’ என்று அவர் சிரித்து சமாளிக்க, அதையே பிரியங்காவும் நகல் செய்தது சமயோசிதமான காமெடி. பிரியங்காவுடன் இணைந்து நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்க ராஜூ வந்து இணைந்தது சிறப்பு. கறுப்பு உடை, கண்ணாடி போன்றவற்றை இரவல் வாங்கிக் கொண்டு அவரும் வந்து சேர்ந்தார். Best Player விருது நிரூப்பிற்கும் Best Entertainer விருது ராஜூவிற்கும் (வேறு யார்?!) Best Dressed விருது அக்ஷராவிற்கும் சென்றது. இவற்றைத் தவிர ஜால்ரா, டம்மி பீஸ், சகுனி போன்ற வில்லங்கமான விருதுகளும் இருக்கின்றன. கலகம் இல்லாமல் பிக்பாஸ் விட்டு விடுவாரா? இதற்கான புரொமோவோடு எபிசோட் நிறைந்தது.