Published:Updated:

பிக் பாஸ் - 41: கழன்றுவிழுகிறதா ராஜூவின் முகமூடி? `செட் பிராப்பர்டி’க்கு பிரியங்கா ஆடிய மிகை நாடகம்!

பிக் பாஸ் - 41

‘புல்தடுக்கி பயில்வான்’ என்கிற பட்டத்தை இசைக்கு வழங்கினார் ராஜூ. கமல் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் இசை இன்னமும் எழுந்திருக்கவில்லையாம். இதை ஏற்றுக் கொண்டார் இசை.

பிக் பாஸ் - 41: கழன்றுவிழுகிறதா ராஜூவின் முகமூடி? `செட் பிராப்பர்டி’க்கு பிரியங்கா ஆடிய மிகை நாடகம்!

‘புல்தடுக்கி பயில்வான்’ என்கிற பட்டத்தை இசைக்கு வழங்கினார் ராஜூ. கமல் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் இசை இன்னமும் எழுந்திருக்கவில்லையாம். இதை ஏற்றுக் கொண்டார் இசை.

Published:Updated:
பிக் பாஸ் - 41
ரியாலிட்டி ஷோவும் கலகமும் பிரிக்க முடியாதது. ஒருவர் என்னதான் பாதுகாப்பாக ஆட முயன்றாலும் அவரின் ஈகோவைச் சீண்டி எப்படியாவது முகமூடியைக் கழற்ற வைப்பதை சிறப்பாகச் செய்து விடுவார்கள். ‘விருது விழா’வை பிக் பாஸ் நிகழ்த்தியது இதன் நோக்கங்களில் ஒன்று.

இதன் பலனாக ராஜூவின் முகமூடி இனி அம்பலமாகும் என்று தோன்றுகிறது. தாமரையிடம் மட்டுமே தனது இன்னொரு முகத்தைக் காட்டும் ராஜூ இனி மற்றவர்களிடமும் கடுமையாக நடந்து கொள்ளக்கூடும். இதைப் போல மிக்சர் பாக்கெட்டுகளை வைத்திருப்பவர்களை உசுப்பிவிடும் வேலையையும் இது போன்ற சீண்டல்கள் செய்து விடும். கமல் குறிப்பிட்டும் கூட இதுவரை சோம்பலாக ஆடிக் கொண்டிருந்த அபினய் என்கிற சப்ஜெக்ட்டிடம் இப்போதுதான் அசைவுகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. இனி அவர் அடித்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால் என்னதான் பற்ற வைத்தாலும் பற்றிக் கொள்ளாத புஸ்வாணங்களும் இருக்கின்றன. மதுமிதா, ஐக்கி போன்றவர்களை இந்த கேட்டகிரியில் சொல்லலாம். இவர்கள் ரியாலிட்டி ஷோவிற்கு ஒத்துவராத அப்பாவிக் குழந்தைகள். ரத்தபூமியில் உலவும் தூய ஆத்மாக்கள்.

பிக் பாஸ் - 41
பிக் பாஸ் - 41

எபிசோடு 41-ல் என்ன நடந்தது?

விருது வழங்கும் விழா தொடர்ந்தது. ‘பெஸ்ட் பிளேயர்’ என்பது போன்ற பாசிட்டிவ் பிரிவில் மூன்றே அயிட்டங்களை மட்டும் வைத்திருந்த பிக் பாஸ், ஈகோவைச் சீண்டும் ரணகள கேட்டகிரியில் ஏராளமான தலைப்புகளை கொலைவெறியுடன் வைத்திருந்தார். ஒவ்வொரு போட்டியாளரும் தன்னிடம் தரப்படும் சீட்டுக்களை வாசித்து அதில் தரப்பட்டிருக்கும் ‘திரைப்பட வசனத்திற்கு’ பொருத்தமானவர் எவரோ, அவருக்கு அந்த வசனம் பிரசுரிக்கப்பட்ட Sash Ribbon-ஐ அணிவிக்க வேண்டும். இதில் நல்ல விஷயங்களும் இருந்தன. கோக்குமாக்கான வசனங்களும் இருந்தன. சிலர் சாமர்த்தியமாக பதில் சொல்லி சமாளித்தார்கள். சிலர் புன்னகையால் தங்களின் எரிச்சலை மறைத்துக் கொண்டனர். சிலர் கோபப்பட்டு அம்பலப்பட்டனர்.

‘ரிஸ்க்கு எடுக்கறதுன்னா ரஸ்க்கு சாப்பிடற மாதிரி’ என்கிற பட்டம் ராஜூவால் நிரூப்பிற்கு வழங்கப்பட்டது. ‘சரஸ்வதியே வந்து பரீட்சை எழுதித் தந்தாலும் பெயில் ஆயிடுவான்’ என்கிற சிறப்பு பட்டத்தை பிரியங்கா, அபினய்க்கு தந்து மகிழ்ந்தார். ‘பண்றதெல்லாம் மோசம், ஆனா காட்டறது பாசம்’ என்கிற காமெடி விருதை இமானுக்கு வழங்கினார் மதுமிதா. ‘If you are bad, am your dad’ என்கிற கெத்தான விருதை பிரியங்காவிற்கு வழங்கினார் பாவனி. ‘நீ புடுங்கறதெல்லாம் தேவையில்லாத ஆணி’ என்கிற டெரர் விருதை நிகழ்ச்சி தொகுப்பாளரான ராஜூவிற்கே வழங்கி அதிர்ச்சி தந்தார் இசை. (இனிமேல் சிறப்பான ஆணிகள் பிடுங்கப்படும்’ என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார் ராஜூ).

'ஓப்பனிங்லாம் நல்லாத்தேன் இருக்கு. ஆனா உன் கிட்ட ஃபினிஷிங் சரியில்லியேப்பா’ விருதை அபினய்க்கு வழங்கினார் சிபி. நெகட்டிவ் விருதுகளை வாங்கினாலும் அதற்கு சிறப்பான பதில்களை சர்காஸ்டிக்காக வழங்கிச் சென்றார் அபினய். ‘பில்டிங் ஸ்டிராங்கு, ஃபேஸ்மெண்ட் வீக்கு’ என்கிற விருதை நிரூப்பிற்கு வழங்கினார் இமான். ‘ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே’ என்கிற காமெடி விருது மறுபடியும் அபினய்க்கு கிடைத்தது. அதை வழங்கியவர் வருண்.

பிக் பாஸ் - 41
பிக் பாஸ் - 41

‘நானும் ரவுடிதான்’ விருதை அபினய்யின் கையால் பெற்று கம்பீரமாக நடந்து சென்றார் இமான். ‘கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல’ விருதை பிரியங்காவிற்கு தந்தார் நிரூப். (பிரியங்காவிற்குச் செல்ல வேண்டிய நாணயம், கட்டம் சரியில்லாததால் செல்லவில்லையாம்). 'தூரத்துல பார்த்தா காமெடி. கிட்ட பார்த்தா டெரர்’ விருதை இமானுக்கு வழங்கி சந்தோஷப்பட்டார் தாமரை. ‘இவ்வளவு அமளி துமளி நடந்துக்கிட்டு இருக்கு... யார்ரா இங்க ஒருத்தன் டம்மியா மிக்சர் சாப்பிட்டுட்டு இருக்கான்’ என்கிற வில்லங்கமான விருதை ராஜூவிற்கு தந்தார் ஐக்கி. நீங்க சுவாரஸ்யமா சண்டை போட்டா நான் ஏன் மிக்சர் சாப்பிடப் போறேன்? மிக்சர் நல்லா இருந்தா அதைத்தான் சாப்பிடுவேன்’ என்று சாமர்த்தியமாக பதில் அளித்தார் ராஜூ. ‘சில பேர் சொல்லிட்டு செய்வாங்க. சில பேர் செஞ்சிட்டு சொல்வாங்க. சிலர் சொல்றதும் தெரியாது. செய்யறதும் தெரியாது’ என்கிற நீளமான விருதை பெருமையுடன் வழங்கினார் அக்ஷரா. வேறு யார்? வருணிற்குத்தான்.

ரிப்பன் கேட்டகிரி முடிந்ததும் கிரீடம் அணிவிக்கும் சடங்கு நடந்தது. ஆனால் இது பலருக்கு முள் கீரிடமாக அமைந்து சங்கடப்படுத்தியது.

‘புல்தடுக்கி பயில்வான்’ என்கிற பட்டத்தை இசைக்கு வழங்கினார் ராஜூ. கமல் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் இசை இன்னமும் எழுந்திருக்கவில்லையாம். இதை ஏற்றுக் கொண்டார் இசை.

பிக் பாஸ் - 41
பிக் பாஸ் - 41

‘செட் பிராப்பர்டி’ என்பது அடுத்த பட்டம். “அப்படின்னா என்ன?” என்று இமான் கேட்டது ஆச்சரியம். தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் இத்தனை அனுபவமுள்ளவருக்கு செட் பிராப்பர்ட்டி தெரியாதா? இமானைக் கூட விட்டு விடலாம். இந்தக் கேட்டகிரியில் பிரியங்கா நடத்திய முழுநீள நாடகம் நல்ல நகைச்சுவையுடன் அமைந்திருந்தது. அபிஷேக்குடன் கேங் அமைத்து வெறியாட்டம் ஆடிய பிரியங்கா, கமலின் அறிவுரைக்குப் பின்னர் அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டார். ரியாலிட்டி ஷோவிற்கு மக்கள் அளிக்கும் எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்பதை அனுபவ அறிவு அவருக்கு கற்றுத் தந்திருக்கும். தன்னுடைய இமேஜ் வெளியே டாமேஜ் ஆகிறது என்பதை உள்ளூற அறிந்து கொண்ட அவர், நல்ல பிள்ளையாக சேஃப் கேம் ஆடத் துவங்கியிருக்கிறார். ஆனால் இந்தப் பாவனை சமயங்களில் மிகையாக போய் விடுகிறது. இந்த ‘செட் பிராப்பர்டி’ தருணம் அவற்றில் ஒன்று.

பிக் பாஸ் - 41
பிக் பாஸ் - 41

“இதை யாருக்குமே தர முடியாதே… எல்லோருமே ஒவ்வொரு வகையில் ஆக்டிவ்வாத்தானே இருக்காங்க... இதை நான் எடுத்துக்கட்டுமா… நிரூப் நீ சொல்லேன். யாருக்கு தரலாம்? இது சரியான கேட்டகிரியா தெரியலையே... பிக் பாஸ் இதை தப்பா வெச்சிருக்காரு... இதை வெச்சிட்டு வேற எடுத்துக்கட்டுமா... ஓகேவா...” என்றெல்லாம் அவர் இழுவையாக இழுத்துக் கொண்டே போக, ஏதோ அது உலக சாதனை முயற்சி போல கீழே நேரத்தையெல்லாம் காட்டி அசத்தினார் பிக் பாஸ். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பிக் பாஸ், “பிரியங்கா. இந்த ஷோ பத்தி தெரிஞ்சுதானே வந்திருக்கீங்க?” என்று நெற்றியடியாகக் கேட்டவுடன் “என்னமோப்போ. எனக்கு ஒண்ணும் தெரியாது’ என்கிற பாவனையில் ஐக்கியை அழைத்து கொடுத்தார். ஆனால் அதை பாசிட்டிவ்வான புன்னகையுடன் வாங்கிச் சென்றார் ஐக்கி.

‘அழுமூஞ்சி’ என்கிற பட்டம் அக்ஷராவிற்குத்தான் மிகப் பொருத்தமானது. ஆனால் அவர் அதை மதுமிதாவிற்குத் தந்தார். ஐக்கியும் மதுமிதாவும் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நல்லவர்களாக இருக்கிறார்கள். ‘ஜால்ரா’ என்கிற பட்டத்தை பிரியங்காவிற்குத் தந்து ஜாலியாக பழிதீர்த்துக் கொண்டார் ஐக்கி. ‘ஜவ்வு மிட்டாய்’ என்கிற பட்டத்தை இசைக்குத் தந்தார் தாமரை. நாணயத்தைப் பயன்படுத்தி தலைவர் ஆனது குறித்து எல்லோரிடமும் இசை அனத்திக் கொண்டே இருக்கிறாராம். "அந்த ஒரு விஷயம்தான் எனக்கு கில்ட்டியா இருக்கு. மத்தபடி நான் டெரர்” என்று அநாவசிய கெத்து காட்டி அழிச்சாட்டியம் செய்தார் இசை.

பிக் பாஸ் - 41
பிக் பாஸ் - 41

‘சகுனி’ என்கிற பட்டத்தை ‘தந்திரமூளை’ என்று சாமர்த்தியமாக பெயர் மாற்றி வருணிற்குத் தந்தார் நிரூப். ‘டம்மி பீஸ்’ என்கிற பட்டம் ராஜூவிற்கு அபினய்யால் வழங்கப்பட்டது. “ஒருபக்கம் பெஸ்ட் என்டர்டெயினர் விருது கொடுக்கறீங்க. இன்னொரு பக்கம் மிக்சர்-ன்றீங்க... டம்மிங்கிறீங்க… என்ன உங்க கதை எனக்குப் புரியலையே” என்று தர்மசங்கடத்துடன் சலித்துக் கொண்டார் ராஜூ. ‘குரூப்புல டூப்பு’ பட்டம் வருணின் மூலம் பாவனிக்கு கிடைத்தது. ‘தொட்டாற்சிணுங்கி’ என்கிற அடையாளத்தை இசைக்கு இமான் வழங்க “நான் எதுவா இருந்தாலும் நேரா சொல்லுவேன்” என்று எரிச்சலாக சொல்லி கிரீடத்தை அணியாமல் சென்றார் இசை. (இதுவே தொட்டாற்சிணுங்கிக்கு அடையாளம்தான்). ‘போலி’ என்கிற பட்டம் வருணிற்கு சிபியின் மூலம் கிடைத்தது. “கமல் சார் அட்வைஸ் பண்ணினப்புறம் என்னை மாத்திக்கறேன். இதுல போலித்தனம் என்ன இருக்கு?!” என்கிற சிறப்பான விளக்கத்துடன் வாங்கிச் சென்றார் வருண்.

பிக் பாஸ் - 41
பிக் பாஸ் - 41

‘வெத்துவேட்டு’ என்கிற பட்டத்தை அண்ணாச்சிக்கு வழங்கி பழிதீர்த்தார் இசை. “நீ சொன்னா சரியாத்தாம்மா இருக்கும். கொடும்மா. வாங்கிக்கறேன்” என்று பெருந்தன்மையாக இமான் ஏற்றுக் கொண்டாலும் உள்ளுக்குள் அவர் காண்டாவது நன்றாகவே தெரிந்தது. ‘விஷபாட்டில்’ என்பது சீசன் 2-ல் ஜனனிக்குக் கிடைத்த பெயர். இந்த சீசனில் இது பாவனியால் அக்ஷராவிற்கு வழங்கப்பட்டது. ‘சிம்ப்ளி வேஸ்ட்’ பட்டத்தை நிரூப்பிற்கு வழங்கினார் மதுமிதா. பாவனி சொன்ன டாஸ்க்கில் அதிக நேரத்தை இழுத்ததால் இந்தப் பட்டமாம். இதற்கு நிரூப் விளக்கம் அளிக்க முயன்றபோது, பாவனிக்கும் இவருக்கும் சிறிய முட்டல் ஏற்பட்டது. “டாஸ்க் ஒழுங்கா சொல்லத் தெரியல. நீதான் இந்த கேம்ல வேஸ்ட்” என்றபடி இறங்கிச் சென்றார் நிரூப்.

“இத்துடன் விருது வழங்கும் விழா இனிதே நிறைவடைந்தது. பிக் பாஸ் இதுபோன்ற தரமான சம்பவங்களை அடிக்கடி செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்" என்கிற பிரியங்காவின் சர்காஸ்டிக்கான குறிப்புடன் இந்த அவார்டு விழா முடிவடைந்தது.

பிக் பாஸ் ஒரு பெரிய இம்சை நாடகத்தை முடித்து அனுப்பினாலும் அதன் தொடர்ச்சியை கையில் எடுத்துக் கொண்டார் பாவனி. அன்று இரவு அனைவரையும் அமர வைத்து நிரூப், தாமரை ஆகியோருக்கு சுத்தம் செய்யும் தண்டனையைத் தந்தார். தண்டனையை முடித்துவிட்டு ‘லிவ்விங் ஏரியாவில்தான் தூங்கணும்’ என்பது அவரின் கூடுதல் இம்சை. “இது என்ன லாஜிக். நிரூப்கிட்ட பெட்ரூம் ஏரியா கண்ட்ரோல் இருந்தப்ப, பெட்ரூம்ல தூங்கக்கூடாது –ன்னு அவர் சொன்னதுல ஒரு நியாயம் இருக்கு. நீ இங்கதான் தூங்கணும்ன்னு சொல்றது சரியா இல்லையே?” என்று ராஜூ கேட்டது சரியானதுதான். 'தம்பி. அடிக்க மாட்டேன். கிட்ட வாயேன்...’ என்பது போலவே ராஜூவை ஹாண்டில் செய்த பாவனி, “ஏன்... உனக்கும் ஏதாவது தண்டனை வேணுமா?, இது என் சாம்ராஜ்யம்’ என்று கெத்து காட்ட, ராஜூ பம்மி அமர்ந்தார். ராஜூ ஏற்றி விட்டதால் “தண்டனையும் செஞ்சு முடிச்சுட்டு மறுநாள் எழுந்து சமைக்கவும் முடியாது. வேற யாராவது பொங்கிப் போடுங்க” என்று எரிச்சல் ஆனார் தாமரை. தண்டனை வேறு, அணி வேலை வேறு அல்லவா?

பிக் பாஸ் - 41
பிக் பாஸ் - 41

“ஆக்சுவலி விஷபாட்டில் டைட்டிலை நான் ராஜூவிற்குத்தான் கொடுத்திருக்கணும். 'டிரஸ்ஸிங் ரூம்ல நடந்ததை அதுக்குள்ள மறந்துட்டியா’ன்னு சொல்லி தாமரையை ஏத்திக் குடுக்கறான்” என்று பிறகு அபினய்யிடம் ஆதங்கப்பட்டார் பாவனி.

மறுநாள் விடிந்தது. பல போர்ஷன்களை கத்தரித்து தூக்கி எறிந்த பிக்பாஸ் டீம், நேரடியாக லக்ஸரி பட்ஜெட் அறிவிப்பிற்கு வந்தது. நிரூப்பிற்குத்தான் அத்தனை மதிப்பெண்ணும். “வேணும்கிறதை வாங்கிக்க ராஜா... எஞ்சாய்... ஆனா இதை நீ தனியாத்தான் சாப்பிடணும்” என்று அறிவித்தார் பிக் பாஸ். பொருள்களைத் தேர்வு செய்வதை நிரூப் தனியாக மேற்கொள்ள வேண்டும் என்று தெளிவாக அறிவித்திருந்தாலும் ‘சிக்கனை எடு, காஃபி பவுடர் எடு’ என்று பிரியங்கா உள்ளிட்டவர்கள் கத்திக் கொண்டிருந்தார்கள்.

இந்தச் சமயத்தில் நிரூப் புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார். தரப்பட்டிருக்கும் மதிப்பெண்களை விடவும் அதிகமாக வருவது போல் கூட்டல்போட, “உங்களுக்கு அளிக்கப்பட்ட லக்ஸரி ரத்து செய்யப்படுகிறது” என்று அறிவித்தார் பிக் பாஸ். நிரூப் எதிர்பார்த்ததும் அதைத்தான். தனக்கு மட்டுமே தரப்படும் பொருள்களை அனுபவித்தால் மற்றவர்களின் பகைமைக்கு எளிதில் ஆளாக வேண்டியிருக்கும். மட்டுமல்லாமல் மற்றவர்களை விட்டு விட்டு சாப்பிடுவது நாகரிகமும் அல்ல, ஆக ‘கூட்டிக் கழித்துப் பார்த்தால்’ நிரூப் போட்ட கணக்கு சரியே.

பிக் பாஸ் - 41
பிக் பாஸ் - 41
"இந்த சீசன் ஆரம்பித்து நாற்பது நாள்கள் கடந்து விட்டன. வாங்க இதைக் கொண்டாடுவோம்" என்று அடுத்த இம்சையைக் கூட்ட ஆரம்பித்தார் பிக்பாஸ். ‘இந்த வாரத்தில் நேர்மையாகவும், துணிச்சலாகவும், முகத்திற்கு நேராக கருத்துக்களைச் சொல்லக் கூடியவராகவும் செயல்பட்ட மூன்று நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்' என்பதுதான் டாஸ்க். நிரூப் விதிவிலக்கு.

சிலர் இந்தத் தேர்வை நேர்மையாக எழுதினார்கள். சிலர் அவர்களுக்கு வேண்டிய ஆட்களைத் தேர்வு செய்யும் அரசியலைச் செய்தார்கள். “இங்க யாரும் நேர்மை கிடையாது. இருந்தாலும் சொல்றேன்...” என்று ஆரம்பித்து தன் சாய்ஸை சொன்னார் ராஜூ. இந்த வாக்கெடுப்பின் இறுதியில் பிரியங்கா, சிபி, மற்றும் ஐக்கி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அடுத்த வார தலைவர் தேர்தலுக்கு தகுதியானார்கள். லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் வென்ற நிரூப்பும் இவர்களுடன் இணைவார்.

பிக் பாஸ் - 41
பிக் பாஸ் - 41

அடுத்த வில்லங்கமான கேட்டகிரியை ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘தைரியம் இல்லாமல், தனித்தன்மையை இழந்து, அடுத்தவர்களை ஆதரித்து செயல்படும்’ இரண்டு நபர்களுக்கான வாக்கெடுப்பு. இதில் ஒருவர் தன்னையே நாமினேட் செய்து கொள்ளலாம் என்பது பிக் பாஸின் புதிய விதி. இதன்படி தன்னையே நாமினேட் செய்து கொண்டார் மதுமிதா. இந்த ரணகள வாக்கெடுப்பின் இறுதியில் இமான் மற்றும் ராஜூவின் பெயர்கள் பெரும்பான்மையாக வந்திருந்தன. இமானாவது தன் அசல் முகத்தை ஆங்காங்கே காட்டுகிறார். ஆனால் ராஜூவோ நகைச்சுவை என்னும் முகமூடியை அணிந்து கொண்டு யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பாமல் சாமர்த்திய ஆட்டம் ஆடுவதாக, போட்டியாளர்களுக்கு மட்டுமில்லை, நமக்கும் கூட அப்படித்தான் தோன்றுகிறது.

பிக் பாஸ் - 41
பிக் பாஸ் - 41

இருவருக்கும் ‘ஐஸ் வாட்டர்’ தலையில் ஊற்றும் தண்டனை கிடைத்தது. முதலில் ராஜூ அமர வைக்கப்பட்டார். ஏதோ சடங்கு செய்வது போல இதர போட்டியாளர்கள் வரிசையாக வந்து தண்ணீர் ஊற்றியது மட்டுமல்லாமல் கூடவே அறிவுரையும் சொல்லி இம்சை செய்தார்கள். ஐக்கியும் மதுமிதாவும் ‘சாரி’ என்று சொல்லி சங்கடத்துடன் தண்ணீர் ஊற்றி விட்டு ஓடியே விட்டார்கள். இசையின் முகமும் கலக்கத்துடன் இருந்தது. தாமரை தண்ணீர் ஊற்ற வந்த போது ‘செருப்பைக் கழட்டி ஒரு அடி அடிச்சிட்டு போ’ என்று தன் கோபத்தைக் காட்டினார் ராஜூ. ஏனெனில் ராஜூவை நாமினேட் செய்தவர்களில் தாமரையும் ஒருவர்.

ஆக... ராஜூவின் அசலான முகத்தின் சில பக்கங்களை இனியாவது காண முடியும் என்று தோன்றுகிறது.